நம்பிக்கை தரும் நாயகன்
இசைக்கவி ரமணன்
கதிரவனுக்குக் கற்பூரம் காட்டுவதுபோலத்தான், கங்கையில் ஒரு குவளை நீரை விடுவதுபோலத்தான், பகவான் ரமணரைப் பற்றி இந்தச் சிறுவன் பேச முயல்வதும்! மீன் நீந்துவது நதியை அளப்பதற்காகவா? சிறுகுருவி பறந்து திரிவது வானை அளக்கவா? இல்லை! பெற்ற பெருங்கருணையைக் கொண்டாட!
அசையாத மாமலையாய், வடுவேதும் சுமக்காத வானமாய், இன்றும் வாழ்ந்து நம்மை வாழ்விக்கும் ரமணமுனியின் ஆழம் காண முடியாத மெளனத்தை, விளிம்பில் நின்று வியந்து பார்த்தும், மருண்டும் நிற்கின்றேன். புரியவில்லை; அறவே புரியாமலும் இல்லை. எது எப்படியோ, விலக முடியவில்லை! ஏதோ ஒன்று உயிரின் பிடரியைக் கவ்விக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன். நம்மை முற்றும் முடிக்கும்வரை அது ஓயாது என்றே நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் எழுந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆனந்தம். அது, உள்ளே மெளனமாகவும் வெளியே வார்த்தைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
இதுதான் என் ரமண அனுபவம்! எது தொடர்ந்து இருக்குமோ அதைத்தான் அனுபவம் என்று கொள்ளவேண்டும் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரை. எனவேதான், இதை என் அனுபவம் என்கிறேன். முதலில்,
1. நாம் எதற்காக ரமணரைப் பற்றிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்?
நாம் மனிதர்கள். அவர் மாமனிதர். ஒவ்வொரு மனிதனும் மாமனிதனாகலாம். ஆனால், அதற்கு முன்பு, அவன் முழுமையான மனிதனாக ஆகவேண்டும். மகான்களைப் பற்றிப் படிப்பது, பேசுவது, கேட்பது இவற்றின் மூலம், அவர்கள் அடைந்த நிலை நமக்குத் தெரியவரும். நாம் அடையாத நிலை நமக்குப் புரியவரும். அதை எப்படி அடைவது என்ற கேள்வி தோன்றி அதுவே பாதையை வகுக்கும்.
பொதுவாக மகான்களின் நிலை என்பது என்ன? அமைதி, ஆனந்தம், அன்பு, அறிவு, எளிமை, ஒழுக்கம், நிறைவு, தெளிவு, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அறிய அறிய நெடுகத் தொடர்ந்து வளர்வதே பெரியோர் பெருமை. சொல்லிச் சொல்லித் தீர்வதில்லை சோதியின் பெருமை. சொல்லாமல் மெளனத்திலே காண்பதே அருமை.
அறியாமை என்னும் இருட்டிலிருந்து, மலினக் குப்பைக் கூளத்திலிருந்து நம்மை மீட்டு நாம் மேன்மையுற வழிவகுப்பதே மகான்களைப் பற்றி நாம் பேசுவதாலும், கேட்பதாலும், படிப்பதாலும் விளையும் பயன்.
ஓர் ஊரைப்பற்றிய விவரங்களைக் கேட்டால் நமக்கும் அந்த ஊரைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா? அப்படித்தான் இதுவும்!
2. ரமணர் மகான். நாம் சாதாரண மனிதர்கள். அவர் ஞானி. நாம் அஞ்ஞானிகள். அவர் எங்கே நாம் எங்கே?
ரமணர் மகான் என்பதிலும் நாம் சாதாரண மனிதர்கள் என்பதிலும் அவர் ஞானி என்பதிலும் நாம் அஞ்ஞானிகள் என்பதிலும் ஐயமில்லை. உண்மைதான். ஆனால், அவர் எங்கே நாம் எங்கே என்ற கேள்விக்கு என்ன பதில் தெரியுமா? நாம் எங்கே அவர் அங்கே என்பதுதான்! நோயுற்று, உடல் இற்று, உயிர்மட்டும் மிஞ்சியிருந்த வேளையில் அவர்முன்பு நின்று, `ஐயா! எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிடாதீர்கள்!,` என்று அடியார்கள் விம்மி அழுது நின்றார்கள். அப்போது ஒரே வாக்கியத்தைத்தானே திரும்பத் திரும்பச் சொன்னார்? `நான் எங்கே போகமுடியும்?`
இங்கிருக்கும்போதே அங்குமிருக்க அறிந்தவர்கள் இங்கு, அங்கு என்னும் பேதங்கள் தீர்ந்து எங்குமுள்ள பரம்பொருளாகவே திகழ்கிறார்கள். நாம் எங்கும் இல்லை. அவர்கள் எங்கே இல்லை? ரமணர் இன்றும் இருப்பதால்தான் நாம் அவரைப் பற்றிப் பேசுகிறோம். நாம் அவரை நினைவுகூரவில்லை! அவர் சன்னிதியில்தான் நின்று நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம்!
ஆம், நாம் எங்கிருந்தாலும் நாம் அணுகி அருளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம், அவர் எங்குமிருக்கிறார். நாம் எப்படி இருந்தாலும் நமக்குப் பொருந்தும் வண்ணம் எல்லாமாகவும் இருக்கிறார். தொடர்ந்து துணையாக வரும்விதம், அவர் நம் உயிரின் உறவாக இருக்கிறார்.
ரமணர் தனது தந்தையைப் பத்து வயதில் இழக்கிறார். அந்த மரணமோ, தாய், சகோதரர்கள் இவர்களுடைய அழுகையோ அவரிடம் அச்சத்தை ஏற்படுத்தவில்லை; ஆலோசனையைத்தான் தூண்டிவிட்டது. சிதையில் தந்தை எரிந்து சாம்பலானபின், `என்னில் இருக்கும் `நான்` அப்படியே இருக்கிறது; என் தந்தையில் இருந்த `நான்` உடலை நீங்கிவிட்டது,` என்றொரு முடிவுக்கு வருகிறார். தனது 16 ஆவது வயதில் மதுரையில், அந்தத் தெற்கு வாசல் அருகிலுள்ள வீட்டின் மாடியில் தன்னை முடித்துக்கொண்டார். மரண பயத்தை முகமனாக வைத்துக்கொண்டு, அவர் அகண்ட பரிபூரண நிலை எய்தியது ஒப்பற்ற ஆச்சரியம்தான். அதன்பிறகு, அவர் அறியவேண்டிய சேதியோ, பெறவேண்டிய அனுபவமோ எதுவும் இல்லை. இதற்குப் பிறகுதான் அவர் திருவண்ணாமலை செல்கிறார். 1896 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி மதுரையில் மரண அனுபவம். வீட்டை விட்டு வெளியேறியது ஆகஸ்டு 29. அவர் திருவண்ணாமலையில் கால்வைத்தது செப்டம்பர் 1. இடையில் கடந்தது 48 நாட்கள். ஆனால், அவர் பெற்ற மகத்தான அனுபவம், யாருக்கும் தெரியவில்லை! இது ரகசியமில்லை; பணிவு! நாகரிகத்தின் உச்சம்!
இனி அடையவேண்டியது ஒன்றுமே இல்லை என்னும் பெருநிலையை அடைந்த ரமணரை, 53 வருடங்கள் திருவண்ணாமலையில் நீங்காமல் இருக்கவைத்தது, அவருடைய தேகத்திற்கான பிராரப்தமா? நாம் அனுபவிக்கும் விதியா? இல்லை! இறையின் திருவுள்ளம்! தெய்விகக் கருணையின் நிச்சயம்! எதற்கு? அவர் அடைந்த நிலையை நாமும் அடைவதன் மூலமே நமது துன்பங்கள் தீரும் என்று காட்ட. அதற்கான எளிய, நேரடியான, நாமே பயின்றுகொள்ளக் கூடிய வழிமுறையை நமக்குக் காட்ட. எல்லாம் அடைந்த பிறகும், எளியார்க்கு எளியராய், மிக மேன்மையான வாழ்வை வாழ்ந்துகாட்ட!
இது நமக்குச் சாத்தியமில்லை என்றால் ரமணரின் தேகம் மதுரையில் அவருடைய 17 ஆம் வயதிலேயே விழுந்திருக்கும். இன்று அவரைப்பற்றிப் பேச நமக்கு எந்தக் குறிப்பும் இருந்திருக்காது. தான் அடைந்த உன்னதமான நிலையை அனைவரும் அடைய முடியும் என்று முழுக்க முழுக்க நம்புவதும், அடையவேண்டும் என்று விரும்புவதும், அடைய வழிசொல்வதுமே மகானின் தலையாய குணங்களாகும்.
3. ஒரு மகான் எதை விட்டுச் செல்கிறார்?
நடக்கப் பாதை (நான் யார் விசாரணை, சரணாகதி)
நல்லுரைகள் (கதைகள், உதாரணங்கள், விளக்கங்கள், அவரவர்க்கேற்ற அறிவுரைகள்)
தவம்
தன்னுதாரணம் (எளிமை, எதற்கும் கிளர்ச்சியுறாதிருத்தல், இறுதிவரை அனைவரும் சந்திக்க ஏதுவாய் இருந்தது, ஒவ்வொரு நொடியும் ஊராரின் கண்முன்னே கழிந்தது)
4. ரமணர் யோகியா, ஞானியா, பக்தரா?
எப்படிச் சொல்ல? எல்லாம்தான். எதுவுமில்லைதான். இரண்டும் உண்மைதான்! வெட்டவெளியை வானமெனலாம், இடமெனலாம், பரப்பு எனலாம், ஆதாரம் எனலாம். வண்ணம் மேற்கொண்டால் வானம். பூமி சுழலவும் அதில் நாம் நிற்கவும் அனுமதித்தால் இடம், எங்கும் இருப்பதால் பரப்பு. சொல்லிக்கொண்டே போகலாம்; அதுவும் விரிந்துகொண்டே போகும்!
எதையும் தனக்கு அயலாக அவர் காணவில்லை
எவரிடத்திலும், எதனிடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் அவருக்கு இருந்ததில்லை
ஏற்ற இறக்கங்களோ, மாற்றங்கள் வளர்ச்சிகளோ அவரிடம் காணப்படவில்லை
அத்யாச்ரமி என்னும் துறவின் பரிபூரண நிலையை ஊரறிய அடைந்தவர் அவர்
எல்லாவற்றுக்கும் மேலாக, ஞானிக்கு, தான் ஞானி என்னும் அபிப்பிராயம் கிடையாது.
அகண்டமான பேருணர்வே தன்னுடைய இயல்பாக இருந்தார். அதே சமயம், நடைபெறுவன அனைத்தையும் அறிந்தே இருந்தார்.
பாதாள லிங்க அறையில் தேகத்தைப் பூச்சிகள் அரித்தபடி இருக்கத் தான் அசையாமல் இருந்தது
இரண்டரை வருட காலம் அசையாமல் இருந்தது
தன்னை அடித்த திருடர்களை உணவருந்திவிட்டுச் செல்லுங்கள், இன்னும் என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றது
தானாய் எந்தப் பிரசங்கமும் செய்ததில்லை. ஆனால் 30,000 ஐயப்பாடுகளுக்கு அவர் விடை பகர்ந்திருக்கிறார்
இறுதிவரை அவருடைய மெளனம் சற்றும் கலையாமலேயே எல்லாம் செய்திருக்கிறார்
அவர் யோகிதான். எதனால்?
அவருடைய மரண அனுபவமும் ஞானம் சார்ந்த யோக அனுபவம்தான். யோகம்தான் ஞானத்தைத் தொடரவேண்டும் என்னும் வாசகத்திற்கு அவர் நிதர்சனமான நிரூபணம்
திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், அவர் உட்கார்ந்தது ஓரிடம், எழுந்தது ஓரிடம் என்றிருந்திருக்கிறார். அது மிக நுண்மையான யோக அனுபவம்
ஆமைப்பாறையில் நடந்த இரண்டாவது மரண அனுபவமும் யோகம்தான்
நட்ட நடுப்பகல். மொட்டைப் பாறை. உச்சிக் கதிரவனைக் கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தபடி அவர் இருந்திருக்கிறார்
அவர் பக்தர்தான். எதனால்?
திருவண்ணாமலைப் பரதேசிகள் கடைசிப் பந்தியில் உணவருந்தவும் என்றதும், பிச்சைக்காரர்களோடு அமர்ந்துகொண்டது
கோயில் பிரசாதங்களைப் பணிவோடு ஏற்றுக்கொண்டது
சில நேரங்களில் கண் கலங்கியதும் உண்டு
அக்ஷரமணமாலை போன்ற இறையருள் இறைஞ்சும் பாடல்கள் புனைந்தார்
பக்தி இன்றேல் ஞானம் கனிவதில்லை, யோகம் வசமாவதில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய பக்தி என்பது பரிபூரண சரணாகதியே என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் எளிய மனிதராக, ஏழைப் பங்காளனாகத்தான் விளங்கினார். கீரைப்பாட்டி, எச்சம்மாள், மாடுமேய்க்கும் பூவன், கோலி விளையாடும் சின்னக் குழந்தைகள் என்று அவருக்குத்தான் எத்தனை நண்பர்கள்!
அதுபோல், எல்லா உயிர்களிடத்தும் ஒரேபோல் அன்பு செலுத்தியவர். எனக்குத் தெரிந்து குரங்குக்குப் பிரசவம் பார்த்தவரை நான் கேள்விப்பட்டதில்லை! பெற்ற குட்டியைத் தாய்க்குரங்கு வந்து காண்பித்துப் போன கதையையும் நான் வேறெங்கும் கேள்விப்பட்டதில்லை!
5. எல்லாம் சரி. ஆனால், ரமணர் நமக்கு விடையைச் சொல்லவில்லையே! கேள்வியைத்தானே நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்?
நாம் வினாக்களால் அல்லற்படுகிறோம். அவை நம்மைத் துளைத்தெடுக்கின்றன — சின்னக் குழந்தைகளின் சள்ளையைப்போல், மேலதிகாரிகளின் துரத்தல்போல், காவற்துறை விசாரணைபோல்! அந்த வினாக்களை நாம் சுமக்கிறோம். நமக்கு விடைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. கிடைக்கின்றன. அவற்றின்மூலம் புதிய வினாக்கள் கிளைக்கின்றன. இறுதியில், வினாக்களைப் போலவே விடைகளும் சுமைகளாகின்றன. அனுபவங்கள் அயர்ச்சியைத் தருகின்றனவேயன்றி, ஆனந்தம் தருவதில்லை. அறிவுரைகள் எரிச்சலூட்டுகின்றன. நெறிமுறைகளில் பிடிப்பில்லை. வழிமுறைகள் சலிப்பூட்டுகின்றன. எதிலும் ஐயங்கள் எழுகின்றன.
ஆனால், ரமணர் ஒற்றைக் கேள்வியை எழுப்பி, இதுவரை கற்றை விரித்து நம்மைக் களைப்படைய வைத்த அத்தனைக் கேள்விகளையும் அதனுள் அடக்குகிறார். அதை நம்மை, நாமே, நமக்குள் எழுப்பச் சொல்கிறார். செய்கிறார். இதுதான் அவர் நமக்குச் செய்யும் சேவை.
நான் யார் என்பதோ விடையற்ற கேள்வி. எந்த விடைகளாலும் அடங்காத கேள்வி. எந்தத் திசைதிருப்பும் முயற்சிகளுக்கும் மசியாத கேள்வி. எந்த மிரட்டல்களுக்கும் பணியாத கேள்வி. இதை நாம்தான் எழுப்புகிறோம். இது வெளியே கேட்கப்படுவதில்லை. இது மனம் என்னும் தளத்தில்தான் எழுகிறது. இந்தக் கேள்விக்கு எந்த பதிலையும் ஏற்க மறுக்கும் மனம், இறுதியில் இந்தக் கேள்வியில் ஒடுங்குகிறது. கேள்வி நம்மில் ஒடுங்குகிறது. மனமும் இன்றி, கேள்வியும் இன்றி நாம் மட்டும் மிஞ்சுகிறோம்.
இதுவே முடிவு. இதுவே இதற்குமேல் இன்னொன்றில்லாத அனுபவம். இதை நாம் பெறவேண்டும் என்னும் கருணையால்தான், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதை இந்தக் கேள்வியாக்கி அதை நம்மை நோக்கித் திருப்பிவிடுகிறார் ரமணமுனி. பண்டிதரிலிருந்து பாமரர்வரை, வெளிநாட்டவரிலிருந்து உள்நாட்டு கிராமவாசிவரை, பெரும் செல்வந்தரிலிருந்து பரம ஏழைவரை, எல்லோர்க்கும் அவர் இதையேதான் இன்றைக்கும் செய்து வருகிறார்.
அதுதான் `நான் யார்?` என்னும் கேள்வி. கேள்வி என்று சொல்வதைவிட, விசாரணை என்று சொல்வதே பொருந்தும். பதிலைத் தேடுவது கேள்வி. உண்மையைத் தேடுவது விசாரணை. வினா, விடைகளால் திசைதவறும், விசாரணையோ, நூல்பிடித்தாற்போல் விழைகின்ற உண்மையைவிட்டுக் கண்ணை எடுக்காது!
6. சரி, நான் யார் என்னும் விசாரணை எதற்கு?
`தன்னை அறியாமல் அனைத்தையும் அறியத் தலைப்படுதல் அறியாமையன்றோ! தானன்றோ (ஆன்மா) அனைத்தறிவின் மூலம்!` என்பார் ரமணர்.
துன்பம் வந்து குறுக்கிடாத இன்பத்தை, தொடர்ந்த இன்பத்தை, நிரந்தரமான இன்பத்தைத்தான் ஒவ்வொரு ஜீவராசியும் விழைகிறது. உயிரினங்கள் இன்பத்தை, அறியாமலேயே விழைகின்றன. மனிதன், அறிந்தே விரும்புகின்றான். விலங்குக்குத் தான் விலங்கு என்று தெரியாது. மனிதனுக்கு, தான் மனிதன் என்பதும், அது விலங்கு என்பதும் தெரியும். எனவேதான் அவன் மற்ற உயிரினங்களை வகைப்படுத்தியதுபோல, அனுபவங்களையும் இது இன்பம் அது துன்பம் என்று வகைபிரித்து வாழுகிறான், இன்பம் ஒன்றையே நாடுகிறான்.
எந்தச் செயலும் புரியாமல், தொடர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமுமாகும்.
7. மனிதன் ஏன் இன்பத்தை விழைகிறான்?
ஒவ்வொரு மனிதனும் தன்னை மிகவும் நேசிக்கிறான், அதனால்தான்!
8. மனிதன் ஏன் தன்னை மிகவும் நேசிக்கிறான்?
இன்பமே ஒவ்வொரு மனிதனின் இயல்பு. அதனால்தான் மனிதன் தன்னை நேசிக்கிறான்! அந்த இன்பம் அவனுள்ளேயே இருக்கிறது. அது தெரியாததால்தான் அவன் அதை வெளியே தேடுகிறான், பொருள்களில் நாடுகிறான். அனுபவங்களை வேண்டுகிறான். அந்த இன்பத்தைத் தன்னுள் தேடுபவன் தன்னில் ஒடுங்கித் தணிகிறான். வெளியே தேடுபவன் தடுமாறி விழிக்கிறான்.
“திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முதல்வனைக் கூவுகின்றாள்
வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம்-என் வாழ்க்கையைக் காக்கவிலையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே”
என்னும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இதை மிகச் சரியாகச் சித்திரிக்கின்றன.
தேடுவது இன்பம். நாடுவது வெளியே. கூடுவது துன்பம். குறையெங்கே?
9. இன்பம் என் இயல்பென்றால், அது என் உள்ளேயே இருக்கிறது என்றால், அது எனக்கெப்படித் தெரியாமல் போகும்?
தெரியாமலில்லை; புரியாமலிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னியல்பான இந்த இன்பத்தை ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் அனுபவிக்கிறான். சுகமான தூக்கத்தை விரும்பாதவர்கள் உண்டா? அதற்குத்தான் எத்தனை ஏற்பாடு என்பார் ரமணர். அதை அவர் குறையாகக் கருதவில்லை. தானறியாமலேயே தன்னுடைய சுயமான இயல்பை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க விரும்புவது தூக்கத்தில்தான். ஆனால் `தூங்கியது` `விழித்தால்தான்` புரிகிறது. ஏதோ ஒன்று, தூக்கத்தில் நாம் அறியாமல் அனுபவித்த இன்பத்தைப் பதிவுசெய்து வைக்கிறது. அதுதான், காலை எழுந்தவுடன், `சுகமாகத் தூங்கினேன்` என்று நம்மைச் சொல்லவைக்கிறது. விழித்தவுடன் அந்த சுகம் விலகிவிடுகிறது. தூக்கத்தில் ஆளைக் காணோம்; காலையில் அமைதியைக் காணோம்!
தூக்கத்தில் தான் அனுபவித்த இனம்புரியாத இன்பம், விழித்தவுடன், நினைவுறுத்திக்கொள்ள முடியாத ஞாபகமாகிறது. அதனால்தான் மனிதன், உள்ளே இருக்கும் இன்பத்தை வெளியே தேடத் தலைப்படுகிறான். ஆனால், விழிப்புற்றவர்கள், உறக்கத்தில் துலங்கும் இன்பத்தின் மர்மத்தை விழிப்பிலேயே தேடுகிறார்கள்:
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பதெக்காலம்?
நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரணடைவதெக்காலம்?
நான்நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்
நீநின்ற கோலமதில் நிரவிநிற்பதெக்காலம்?
உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக் காண்பதெக்காலம்?
பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்
சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?
என்று பாடுகிறார் பர்த்திரகிரியார்.
இந்த இன்பமானது, நமக்குள்ளேயே இருப்பதால், இதை எப்போது வேண்டுமானாலும் நாம் அனுபவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மை நிலை, அதற்காக ஏங்கும் ஏக்கம் இரண்டையும் சேர்த்து,
இன்றுவருமோ நாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவருமோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
என்று பாடுகிறார் வள்ளலார்.
கதவைத் தட்டிப் பலபேர் உரக்க அழைத்தாலும், கட்டோடு தூக்கிக்கொண்டுபோய் நையப் புடைத்தாலும், கலையாத தூக்கம் ரமணருடையது என்று அவர் வாயிலாகவே அறிகிறோம். உறக்கத்தின் சுகம், மரண பயத்தில் எழுந்த நான் யார் என்னும் விசாரணையால், விழிப்பு நிலையிலும் வியாபித்து நிலைத்துவிட்டதே ரமணரின் அனுபவம்.
10. உறக்கத்தில் இருக்கும் நிம்மதி, சுகம், அமைதி ஆகிய என்னியல்பு விழித்தவுடன் ஏன் மறைந்துபோகிறது?
தேகாத்ம பாவனையால் விளைந்த தேகாபிமானம்தான். ஆன்மா, உடலெடுக்கும்போது அங்கே அகங்காரம், அல்லது ஆணவம் என்னும் தன்னுணர்வு தோன்றி அது தேகமெங்கும் வியாபித்து, தானே தேகம் என்று கருதிக்கொள்கிறது. இதுவே அனைத்துக் குழப்பங்களுக்கும் ஆதி.
`வடிவத்தைப் (தேகம்) பற்றிக்கொண்டே வடிவமில்லாத ஆணவம் என்னும் பேய் வந்துசேர்கிறது. Spurious offshoot. வடிவத்தைப் பற்றிக்கொண்டே தொடர்கிறது. வடிவத்தைப் பற்றிக்கொண்டே அனைத்தையும் அனுபவிக்கிறது. ஒரு வடிவத்தை விட்டால் இன்னொரு வடிவத்தைப் பற்றிக்கொள்கிறது. அதை யாரென்று விசாரித்தால் ஓட்டமெடுக்கிறது,` என்று ரமணரின் உள்ளது நாற்பது சொல்லும்.
உறக்கத்தில் இருந்து விழித்தவுடன், சுகம் மறைந்து உலகமும், பொருள்களும், நினைவுத் தொடர்புகளும் அலையலையாகத் தோன்றுவதற்குக் காரணம் இந்த அகங்காரம், அதாவது நான் அல்லது நான் தேகம் என்னும் உணர்வுதான். `ஆணவம் இருந்தால் எல்லாம் இருக்கும். ஆணவம் அகன்றால் எதுவும் இருக்காது. அதை விசாரிக்க, தோற்றங்கள் நீங்கும்.` என்கிறார் பகவான்.
எனவே, உறக்கத்தில் அறியாமல் அனுபவித்த இன்பத்தை, விழிப்பில் அறிந்து அனுபவிக்கத்தானே நாம் அனைவரும் விழைகிறோம்? அது, தான் யார் என்று தெரிந்துகொள்வதன் மூலமே சாத்தியமாகும். அதற்கு, `நான் யார்?` என்னும் விசாரணையே சிறந்த வழி.
11. இந்த விசாரணையை யார் நடத்துவது, தேகமா, மனமா?
தேகத்திற்குத் தான் தேகம் என்ற உணர்வில்லை. தேகாபிமானம் என்பது மனத்தின் வேலைதான். மனம்தான், அறிவு, செயல்கள் இவற்றுக்கு அடிப்படை. மனம்தான் நாம் உலகைக் காண்பதற்கு, அதாவது எதையும் நமக்கு அயலாகப் பார்ப்பதற்குக் காரணம். மனம் தணிந்தால்தான், புற உலகம் என்று ஒன்று தனியே இயங்குகின்றது என்னும் கருத்து நீங்கும். அது விலகாமல் ஆன்மா விளங்காது. ஆன்மாவின் உண்மை விளங்கினால், உலகம் என்ற தனியான தோற்றம் நேராது.
மனம் என்பது ஆன்மாவில் விளங்கும் ஓர் அதிசய சக்தி. அதன்மூலம்தான் நமக்கு எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனைத்தையும் விலக்கிப்பார்த்தால், எண்ணமல்லால் மனம் என்று ஒன்று தனியாக இல்லை என்பது தெரியவரும்.
`நான் யார்?` விசாரணை மூலமே மனம் தணிந்து ஆன்மாவில் ஒடுங்குகிறது.
12. நான் யார் என்பது என்ன?
மந்திரமில்லை. தந்திரமில்லை. சூத்திரமில்லை. சாத்திரமில்லை. அடிப்படைக் கேள்வி! ஒருவர் நம்மிடம் வந்து நீ யார் என்று கேட்டால் பெயரைச் சொல்கிறோம்; பெற்ற பட்டத்தைச் சொல்கிறோம்; வேலையில் இருக்கும் பதவியைச் சொல்கிறோம். இந்த அடையாளங்களா நாம்? இதில் எதுவுமே நாம் பிறப்பதற்கு முன்னே இருக்கவில்லை. பிறந்த உடனேயும் தோன்றவில்லை. ஆனால் அப்போதும் நாம் இருந்தோம் அல்லவா? எனில் நாம் யார் என்பதே ரமணரின் கேள்வி.
எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்லப் போகிறேன்? இந்தப் படைப்பு ஏன்? இந்தப் பிறவி எதற்கு? என்பன போன்ற வினாக்களை அடிப்படைக் கேள்விகள் என்கிறார்கள். ஆனால் இந்தக் கேள்விகளெல்லாம் எழுவது யாருக்கு? நமக்கு! எனில் நாம் யார்? அதைத் தெரிந்துகொள்ளாமல், இந்தக் கேள்விகளுக்கு எப்படி விடைகாண முடியும்? ஆனால், நாம் யார் என்று தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளே எழாது, அதாவது அவற்றுக்குத் தேவையே இருக்காது என்பதே பகவானின் உபதேசம்.
பண்டிதர்களானாலும், பணம்படைத்தோரானாலும், பலமுள்ளோரானாலும், பதவிகள் பல வகிப்போரானாலும், பற்பல திறமைகள் கொண்டோரானாலும், பார்ப்பதற்குப் பேரழகு வாய்த்தவர்களானாலும், பண்பாளர்களேயானாலும், இந்தக் கேள்வி யாருக்கு எழவில்லையோ அவர்கள் பாமரர்களே.
இந்த அடிப்படைக் கேள்வி யாருக்கு எழுகிறதோ அவர்களே ஆன்மிக ஆர்வலர்கள். அவர்களே பாதையைக் கண்டுகொண்டவர்கள்.
இந்தக் கேள்வி யாருக்கு முழுதுமாய் எழுந்து முற்றாகத் தீர்ந்ததோ அவர்களே இறுதி இலக்கை அடைந்த ஞானிகள்.
இந்தக் கேள்வி பாமரருக்கும் கிடையாது, பகவானுக்கும் கிடையாது என்பது அவர்களிடையே இருக்கும் சம்பந்தமில்லாத ஒற்றுமை. Irrelevant similarity. நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும் என்பது போலத்தான்!
13. சரி, ஆனால் மனமே தேகாபிமானத்திற்கும், எல்லாத் தோற்றங்களுக்கும் காரணம் என்றால், இந்த மனமும் பொய்யென்றால் இந்தப் பொய்யான மனதில் எழும் நான் யார் விசாரணை எப்படி மெய்யுணர்வில் கொண்டு சேர்க்கும்?
வினையழியத் தேவை வினை; அதுபோல் பொய்மை
மனமழியத் தேவை மனம்.
தீயணைக்கத் தீவைப்பார் திக்கறிந்த நுண்ணியர்
மாயைக்கு மாயை மருந்து.
விசாரணை, மனத்தில்தான் துவங்குகிறது என்பது உண்மை. மனதின் ஒருபகுதிதான் அதற்குப் பயன்படுகிறது என்பது உண்மை. ஒரு வகுப்பறையில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை `லீடர்` என்று தேர்ந்தெடுக்கிறார்கள், அது போல. மரத்தில் ஆடும் ஊஞ்சல் மரப்பலகையில் ஆனதே! உரத்தில் வளர்ந்த செடியில் பூத்த மலர் உதிர்ந்து உரமாகிறதே!
எண்ணங்கள் என்பவை இடையறாது முளைத்துக்கொண்டே இருப்பவைதான். தியானம் என்று உட்கார்ந்தால் எப்படி ஊரிலிருக்கும் கொசுக்கள் யாவும் நம் மூக்கு நுனியை நோக்கிப் படையெடுக்குமோ, அப்படித்தான் எண்ணங்களும்! தேனடையில் கல்லெறிந்ததுபோல, புற்று அதிர்ந்து புறப்படும் ஈசற் படைகள்போல எண்ணங்கள் நில்லாமல் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. இந்த சஞ்சலத்தைத்தான், சலிப்பைத்தான், ஓயாத சலனத்தைத்தான் மனம் என்கிறோம்.
ஆன்மா, வீடு. மனம், கதவு. கதவு வீடில்லை; வீட்டிற்கு அந்நியமுமில்லை. ஆழக் கடலில் அமைதி. மேலே அலைகளின் சலனம். அலைவேறு கடல்வேறு என்று தோன்றினாலும் அலைகள் எழுவதும் விழுவதும் கடலில்தானே? விளக்கும் வெளிச்சமும் ஒன்றா வேறா? திருக்கோயிற் கதவுகள் நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன. எங்கிருந்தும் சன்னிதியை தரிசிக்கலாம். திரும்பவேண்டும். இதுவே பதஞ்சலி பேசும் சித்த விருத்தி நிரோதம். அதை அடையும் மார்க்கமே ரமணரின் நான் யார் விசாரணை.
எனவே, எண்ணங்களை இடையூறாகக் கருதாமல் நல்வாய்ப்பாகக் கொள்ளலாம். எப்படி? இடையின்றி எண்ணங்களால் பந்தாடப்படுகிறவர்கள்தானே நாம்? இன்றுதானே அவற்றைக் கவனிக்கத் துவங்கியுள்ளோம்? கவனிக்க கவனிக்க அவை வெளியே வரும். ஆம், பகவான் சொல்கிறார்: `உள்ளிருப்பதுதானே வெளியே வரும்? வெளியே வராமல் எப்படி வெட்டுவது? எண்ணங்கள் தன்னிச்சையாய் எழுவது, அவை தீர்வதற்கே! எனவே, விசாரிக்கும் மனத்திற்கு அவை வலிமையே சேர்க்கும்.`
பகவான் இதனை வெகு எளிமையாகவே சொல்லியிருக்கிறார்: `துவக்கத்தில் அறிவு என்பது புத்திபூர்வமானதே. ஆனால், இடைவிடாத தியானத்தின் மூலம், ஒருவன், தனது புத்தி என்பது ஒரு மகத்தான சக்தியால் வழிநடத்தப்படுகிறது என்று உணர்ந்துகொள்கிறான். ஆசைகள் எதுவும் இல்லாதிருப்பதே மோக்ஷம். பின்பு இருமை என்பது கிடையாது.`
14. நான் யார் விசாரணையின் சுருக்கம் என்ன?
முதலில் எண்ணம் தோன்றும்
அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைப்பற்றி அபிப்பிராயமோ அக்கறையோ கொள்ளாமல், அது எழுந்தது யாருக்கு என்று விசாரிக்க வேண்டும்
எனக்கு என்று பதில்வரும்
எனக்கு என்றால் நான் யார் என்று விசாரிக்கவேண்டும்
இந்த வழிமுறையை ஒவ்வோர் எண்ணம் தோன்றும்போதும் கடைபிடிக்கவேண்டும்
இது எண்ணங்களை திசைதிருப்பாது. மனதை உள்முகப்படுத்தும்.
இடைவிடாமல் அப்பியசித்தால், எல்லா எண்ணங்களுக்கும் மூலம், நான் என்னும் உணர்வே என்பது தெரியவரும். அந்த உணர்வில் நீங்காமல் நின்றால், அது நீங்கி நான் தானாகி, தானே அனைத்துமாகி விகசிக்கும். அதுவே முடிவு.
15. ஆனால், நான் யார் என்னும் விசாரணையிலும் நான் என்னும் உணர்வுதானே இருக்கிறது?
மனத்தைப் பற்றிச் சொன்னது இதற்கு முற்றும் பொருந்தும். ஏனெனில், மனம்தான் அந்த அகங்காரமாகிய நான். தன்மை இருந்தால், முன்னிலை, படர்க்கைகள் தோன்றத்தான் செய்யும். நான் என்று ஒன்றிருந்தால், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், அவை என்று தொடரத்தான் செய்யும். தன்மையின் (நான்) நிஜம் என்னவென்று பார்த்தால், அது தீரும். அத்துடனே முன்னிலை, படர்க்கைகள் தீரும். யாவும் ஒன்றாகச் சுடரும் என்பது பகவானின் விளக்கம். (பக்தராஜ் மஹராஜ்: து ஹைனா பகவான் இஸ்லியே மே ஹூம்!)
நான் யார் என்று விசாரிக்கும் மனம் இதயத்தை அடைகிறது. (இதயம் என்பது இடப்புறம் இருக்கும் உறுப்பு அல்ல, மனதின் மூலஸ்தானம்) மனம், தன் மூலத்தை அடையும்போது, மனம் தீர்கிறது. அதே கணம், ஆணவம் நொறுங்கிப்போகிறது. நான் – நான் என்று மனம் சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஆன்மாவே நான் – நான் என்று சுடர்கிறது.
ஆகவே, அடிப்படை நான் என்னும் உணர்வுதான். அதன்மீதுதான் எண்ணங்களாலான மனம் எழுகிறது. அந்த மனதை வைத்துக்கொண்டே நான் யார் என்ற விசாரணையை ஏற்படுத்தி, அதில் உறுதியாக ஈடுபட்டால், மனம் ஞானத் தீயில் வெந்து சாம்பலாகிறது, `பிணம் சுடு தடி போல்.`
16. இதுதான் எய்த வேண்டிய ஞானமா?
ஆம். எது அறிவுமில்லையோ, அறியாமையுமில்லையோ அதுவே ஞானம். பொருளறிவு உண்மையான அறிவாகாது. அறிவதற்கு வேறொன்றும் இல்லை என்பதாகவே ஆன்மா ஒளிவிடுகிறது. அங்கே அறிவு என்று அறியப்படவும் ஒன்றுமில்லை. அது சூனியமும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் மாமுனி.
17. எனில், தவம் என்பது என்ன?
நாயனா என்று வாஞ்சையோடும் அன்போடும் அழைக்கப்பட்ட காவ்யகண்ட கணபதி, பகவானுடைய கால்களைப் பற்றி, `படித்தும் நான் அறியாமையில் இருக்கிறேன், பலகோடிமுறை மந்திரங்களை ஜெபித்தும் அமைதியின் அனுபவமின்றி இருக்கிறேன், காத்தருள வேண்டும்,` என்று மனமுருகிக் கேட்டுக்கொண்டார். பதினொரு வருடங்களாகப் பேசாதிருந்த ரமணர் வாய்திறந்து சொன்ன வாசகம்:
நான் எனும் உணர்வு எங்கிருந்து எழுகிறது என்று மனது விசாரித்து அங்கேயே அதன் உற்பத்தி ஸ்தானத்திலேயே ஒடுங்கினால் அது தவம்
மந்திரத்தின் ஒலி எங்கிருந்து துவங்குகிறது என்று விசாரித்தால், மனது உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கிவிடும். அது தவம்
இந்த உரையாடலிலிருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடிய சில நுண்மையான சேதிகள் உள்ளன:
தன்னை அறியத் தலைப்படாமல், வேறெதனையோ நாடி, அது நிறைவேறுவதற்காக மேற்கொள்ளும் வழிகள் மனிதனை முடிவு தெரியாத நெடும்பயணத்தில் ஆழ்த்திவிடும்
எதற்கு இதை மேற்கொண்டோம் என்ற நோக்கத்தின் நினைவு பிசகிவிடுவதாலும் முடிவு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது
மனம், முற்றும் ஒடுங்குவதே தவம்
வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் அங்ஙனம் இருப்பதே தவம்
விசாரணையின் விளைவே தவம். அல்லாமல், தவத்தில் விளைவு கிடையாது. அது நட்ட விதையைச் சுட்ட தெளிவில் நிலைத்திருப்பது
`செய்கதவம் செய்கதவம் நெஞ்சே தவம்செய்தால் எய்த முடியாதன எய்தலாம்,` என்பார் பாரதியார். கூர்ந்து நோக்கினால், எய்த முடியாதது தவம். ஏனென்றால் தவம் என்பது செய்யப்படுவதில்லை. அது மனம்தாண்டிய நிலை என்னும் நிகழ்வு. தவத்தில் நிலைகள் உண்டுதான்.
ஒன்றை விழைந்து செய்யப்படுவது ஆரம்பநிலைத் தவம். தேவர்களும் அசுரர்களும் செய்த தவம் இது. ஒன்றில் இடையின்றி ஒன்றிக் கிடப்பது ஆன்ற தவம். இதுவே ரமணருக்கு இயல்பானது.
திருவள்ளுவரின் வாக்கும் ரமணரின் அனுபவமும் கச்சிதமாகப் பொருந்துகின்றன
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்தின் உரு.
தமக்குற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமையும் ஆகிய அவ்வளவினதே தவத்தின் வடிவாகும்.
ரமணர், தனக்குற்ற நோயை எப்படிப் பொறுத்துக்கொண்டார், எவ்விதமெல்லாம் எவ்வுயிரிடத்தும் கருணையோடு இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தால் இந்தக் குறளின் பொருள் விளங்கும்.
தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தனது தொழிலைச் செய்வார் என்று எவரைச் சொல்லலாம்? துறந்து தவத்தில் இருப்பவரையே! மற்றவர்கள் ஆசையில் அகப்பட்டு, கேடு வரவழைத்துக்கொள்கிறார்கள்.
ரமணர், தவமன்றி வேறேதும் செய்யவில்லை. சொல்லப்போனால் அதைக்கூட அவர் செய்யவில்லை. அது அவருடைய இயல்பு. அது இன்னும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது!
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
தன்னுயிர், தான் என்னும் முனைப்பற்றானை, மற்ற உயிர்கள் எல்லாம் தொழும்.
ஒருமையில் உயிருண்டு ஆளில்லை. அந்த ஒருவனை வணங்காத கோளில்லை.
துறவைப் பற்றிப் பேசும் குறட்பாக்களும் ரமணரைப் பார்த்து எழுதியது போலவே இருக்கின்றன:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
இந்தக் குறளின் விளக்கம்தான் ரமணரின் நான் யார் விசாரணை!
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
18. நன்று; மீண்டும் 1907, நவம்பர் 18க்குச் செல்வோம். நாயனாவுக்காக ரமணர் மெளனத்தைக் கலைத்தாரா?
இல்லவே இல்லை! நிதம்நூறு விதமாக ஒலிமேவும்போதும் பதறாது வானம் கலையாது மெளனம். வானில்லை வண்ணம் நானில்லை எண்ணம்…
ரமணரைப் பொறுத்தமட்டில், மெளனத்தில் திளைத்திருப்பதே தவம். தவத்தில் ஆழ்ந்திருப்பதே மெளனம். பேசுவதால் அந்த மெளனம் முறிவதுமில்லை எழுந்து நடப்பதால் அந்தத் தவம் கலைவதுமில்லை. சமாதி நிலைகளைக் கடந்த சகஜமே அவருடைய இயல்பு.
ஒன்றை அடைவதற்காகச் செய்யப்படுவதில்லை தவம். அனைத்துமான ஒன்றில் ஆழ்ந்திருப்பதே தவம்.
`மெளனம் என்பது ஒலியற்ற நிலையல்ல. மனமற்ற நிலை.` பேசாதிருப்பது மெளனம் அல்ல. எனினும், ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு, குறைவாகப் பேசுவது நல்லதே.
மெளனம் பருகவொரு முன்மோனம் வேண்டுவதால்
மெளனம் பழகல் முறை.
ஒரு சில நிமிடங்களே நடந்த மரண அனுபவத்தில் ஒரேயடியாக விரிந்துகொண்டது ரமணரின் அகண்ட மெளனம். எந்தப் பேச்சாலும், எதைக் கேட்பதாலும், எந்த நடவடிக்கையாலும் அது எள்ளளவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்தது. சற்றே நாம் சும்மா இருந்தால், இன்றும் நம் இதயத்தின் அடித்தளத்தைத் தொட்டு உயர்த்துகிறது. எனவே, அவர், `மெளனம் என்பது உரத்த பேச்சு,` என்றது எண்ண எண்ண இனிக்கிறது.
19. இந்த விசாரணையை எல்லோரும் கடைபிடிக்கலாமா?
நிச்சயமாக! உயிரும் உணர்வும் உடையோர் எவரும், அமைதி விழையும் எவரும். அகலாத ஆனந்தம் வேண்டும் எவரும் இதைக் கடைபிடிக்கலாம். இதில் ஆண் – பெண், ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன் என்ற பேதங்கள் எதுவும் இல்லை.
நீரில் விழுந்த பொருளை எடுக்க ஒருவன் நீரில் குதிப்பதுபோல, மூச்சையும் பேச்சையும் அடக்கித் தன்னுள் மூழ்கி நான் என்பது எங்கிருந்து துவங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
எந்த எண்ணத்திற்கும் இடம்கொடாமல், ஆன்மா என்றால் என்ன என்னும் விசாரணை தவிர வேறு எண்ணம் இல்லாதிருத்தலே பேரிறைவனிடம் சரணாகதி அடைவதாகும். அதைப்பணிந்து தஞ்சமடைய வேண்டும். எதைப்பற்றியும் எண்ணாதிருக்க வேண்டும். சுமையை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாய்ப் பயணம் செய்யவேண்டும்.
20. அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
அது கைம்மாறு வேண்டா கடப்பாட்டு மாரி! அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அதற்கு எந்தத் தேவையும் கிடையாது. ஆனால், அதுவே திருவாய் திறந்து சொன்னது: `எனக்கென்ன வேண்டும்? ஏது தேவை? வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை உணர்ந்து ஆன்மாவில் நிலைபெறுவதற்கு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்தால், நான் மிகவும் திருப்தியடைவேன்.`
அதைச்செய்யத் தோதான எல்லாவற்றையும்தான் அவர் வழங்கியிருக்கிறாரே!
ஆக, ரமணர் நமக்கு வழங்கியிருப்பவை:
நான் யார் என்னும் விசாரணை
ஒலி எங்கிருந்து எழுகிறது என்று கவனித்தல்
தவத்திற்கு விளக்கம்
பரிபூரண சரணாகதி
21. சரி, இந்த வழியில் சென்றால், எப்போது முடிவு கிடைக்கும்?
அது நம் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்தது! `விடுதலை என்பது ஒரு கணத்தில் எய்தப்படுவது. அந்தக் கணத்தில் நிகழ்முறைகள் எதுவும் இல்லை. ஆனால், அந்தக் கணத்தை எய்துவதற்கு வழிமுறைகள், நிகழ்முறைகள் தேவைப்படுகின்றன.`
ரமணர் கேட்கிறார்: `ஆனந்தம் வேண்டும், நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், ஆணவத்தை விடமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொள்கிறார்கள். அப்புறம் எவ்விதம் இது சாத்தியம்? இரண்டும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. ஆசையற்ற நிலையில் ஆழ்ந்திருப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. ஆணவமோ, ஆசைகளால் போஷிக்கப்படுகிறது. எனவே, ஆணவம் என்பது அறவே தலைதூக்காதபோதுதான் ஆன்ம விடுதலை என்பது சாத்தியமாகும். இதை அடைய சுய விசாரணையே சிறந்த வழி.`
ஆம், ஆனந்தமும் ஆணவமும் சேர்ந்திருக்க முடியாது. `ராம் இருந்தால் கபீர் இல்லை. கபீர் இருந்தால் ராம் இல்லை,` என்பார் கபீர் தாசர். மனம்தான் நான் என்னும் ஆணவம். மனமிருந்தால் ஆன்ம நிலை தெரியாது. ஆன்மா விழிப்புற்றால் மனம் இருக்காது.
ஆன்மநிலை அசையாத நிலை. அதாவது எந்தவிதமான சலனமும் அற்ற நிலை. `மேகங்கள் நகர்கின்றன. நிலவு நகர்வதுபோல் தோன்றுகிறது. புலன்களின் சலனம் ஆன்மாவின் சலனமாகத் தெரிவது அறியாமையே,` என்று பகவான் விளக்குகிறார். எனவே, `முயற்சி என்பது மனத்தை ஒரேயடியாகத் தீர்க்கவே.`
22. எதுவரை இந்தப் பயணம்?
முன்பே சொன்னதுபோல் அது முயற்சியைப் பொறுத்தது. இதில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன:
சுய முயற்சி
இறையருள்
அருள் இறங்கும் தருணம்
முயற்சியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மனம், தனது மரணத்திற்கு அஞ்சி குறுக்கே வந்து நிற்கும்! வேடங்கள் புனைந்து நம்மைத் திசைதிருப்பும்! ஆனால், முயற்சி என்பது விடாமுயற்சி ஆகிவிட்டால் பிறகு அதில் மாற்றமிருக்காது.
இறையருள் என்பது எப்போதும் இருக்கிறது. முயற்சியும் அருள்தான் என்பதை அப்பியாசி பிற்பாடு புரிந்துகொண்டு நெகிழ்கிறான். அவனருளாலே அவன் தாள்வணங்கி. அருள் என்பது எப்போதும் இருக்கிறது என்பார் பகவான். பின்பு நாம் அதை உணர்வதில்லை? ஆசைகளிலிருந்து விலக விலக, புறவுலகில் நம் பற்று நீங்க நீங்க, அருள் விகசிக்கும்.
ஆனால், முடிவு எப்போது என்ற கேள்விக்கு விடை கிடையாது. அது முழுக்க முழுக்க அந்த இறையின் சித்தமே ஆதலாம், அந்தக் கேள்வியையே எழுப்பாமல், தொடர்ந்து முயன்றிருத்தலே நமது கடமையாகிறது. `பிறகு, ஒருகரம் நீண்டு, நம் கரத்தைப் பற்றி, அப்புறத்திற்கு இழுத்துக்கொள்ளும்,` என்பார் பகவான். கண்ணை அகலத் திறந்துகொண்டு காத்திருப்பதே கடுந்தவம்! `இந்தஜார் மே மஜா ஹை!
ரமணரின் சிறப்பு அவர் அடைந்த ஒப்பற்ற நிலை மட்டுமல்ல. அந்த நிலையை நாமும் பெறலாம் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தி நம்மை அவருடைய பாதையில் இன்றும் நடத்திச் செல்வதே அவருடைய சிறப்பு. அதற்கு இன்னொரு பெயர், காரணமற்ற கருணை. அதுவே கடவுளின் இயல்பு.