இசைக்கவி ரமணன் 

எத்தனை முகமடியோ?French_mask

எத்தனை முகமூடியோ??

அத்தனையும் பாக்கணும்னா

ஆத்தாடி ஆகாதே!

பாக்காம விட்டுப்புட்டா

பானை நல்லா வேகாதே!!

பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறியாயிற்று. நீங்கள் என்னதான் முன்கூட்டியே ‘ரிசர்வ்’ செய்திருந்தாலும், செங்கல்பட்டு வரை, சீசன் டிக்கெட்டுக்காரர்கள் காட்டுகிற தயவில்தான் நீங்கள் பிழைக்கவேண்டும். அவர்களுடைய வண்டியில் நாம் ஒண்டிக்கொண்டதுபோல இருக்கும் அவர்கள் பார்வை. ‘ரிசர்வ்’ செய்து பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கீழானவர்கள் என்ற நிச்சயம் அவர்கள் பார்வையின் வெப்பத்தில் உணர முடியும். நாம் எட்டுப்பேர் என்றால் அவர்கள் பத்துப்பேர்கள் இருப்பார்கள். எப்போதும் அப்படியில்லை; சில நேரம் பன்னிரெண்டாகவும் இருக்கும்! அடுத்த குடாவில் இடமிருந்தாலும், அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன பேச்சைத் தொடரும் சாக்கில் சிலர் இங்கு வந்து தொத்திக் கொள்வார்கள். மதுரைவரை செல்பவர்கள் மெளனமாக இருப்பார்கள். எண்ணிக்கைதான் வலு! ஆனால், உள்ளே எள்ளும், கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்கும். அநத்ச் சினம், குழந்தைகள் மீது அடியாக விழும். பெட்டிகள் தேவையில்லாமல் இரைச்சலோடு இழுக்கப்பட்டு மறுபடியும் தள்ளப்படும். டிக்கெட் பரிசோதகர் வந்தால் இவர்களை ஒரு வழி செய்துவிடலாம் என்று கறுவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செங்கல்பட்டுக்காரர்களோ கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘டிக்கெட்ஸ் ப்ளீஸ்’ என்று வருபவரை இவர்கள் பார்க்கின்ற தோரணை இருக்கிறதே! அவர், தான் ஏதோ தவறுசெய்து விட்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, மதுரைப் பயணிகள் பக்கம் திரும்பி, அவர்களிடம் சற்றுச் சிடுசிடுப்போடு கேள்விகள் கேட்பாரே பார்க்கலாம்! அவர் ரொம்பத் தயங்கி மிகவும் மன்றாடினால், செங்கல்பட்டார் லேசாகச் சட்டைப் பையைத் தொட்டுக்கொள்வார்கள்; அவரைப் பார்க்கவே மாட்டார்கள்; பேச்சை விடவே மாட்டார்கள்.

செங்கல்பட்டுக்காரர் மதுரைக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் போக்கு, மொத்தமாக மாறிவிடும்! “குடும்பத்தோடு பயணம் செய்யவந்தால் இத்தனை இடைஞ்சலா? நாங்கள் நேரத்துக்குச் சாப்பிட்டுப் படுக்க வேண்டாம்?” என்றெல்லாம் நிறையைக் கேள்விகள் சூடாக எழும்!

இடம்மாறினாலே தடம்மாறி விடுகிறானே மனிதன்! மனிதன் மாறமாட்டானா என்று சிலர் ஏக்கமாய்க் கேட்கிறார்கள். அவன் மாறாதிருக்க மாட்டானா என்றல்லவா கேட்கவேண்டும்!!

அரசியல், விலைவாசி, சினிமா, வானிலை, வம்பு, அட எதைப்பற்றி வேண்டுமானாலும், பேப்பர் படிக்காமல், டி.வி. பார்க்காமல், ஓடுகின்ற ரயிலில் உட்கார்ந்தபடியே அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? செங்கல்பட்டுக்காரர்களிடம் ‘மணி என்ன?’ என்று கேளுங்கள், போதும்! ஆமாம், சீசன் டிக்கெட்காரர்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலே நண்பர்களாகி விடுவார்கள். காலையில் வீட்டை விட்டவர்கள், இரவில் திரும்பும்போதுதான் எத்தனை உற்சாகம்! பறவைகள் கூடுதிரும்பும் பரபரப்பு! சண்டை ஏதுமில்லை, சந்தடிதான், சற்றே சச்சரவோடு! கவனமாகக் கேட்ட எனக்கு வேர்க்கடலை, டீ எல்லாம் உண்டு!! நம்மைக் கொடுக்கவிட்டால்தானே! மதுரைப் பயணிகள் பக்கம் நான் திரும்பவே இல்லை!!!

ஒருமுறை…

அதிகக் கூட்டமில்லை. எனக்கு அடுத்தபடியாக ஒருமனிதர். ஆறடிக்குக் கொஞ்சம் குறைவு; கோதுமை நிறம்; முன்வழுக்கை; நீலச்சட்டை அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மடியில் வைத்துக்கொண்டிருக்கிறார்; பார்க்க இனியவராகத் தெரிகிறார். திடீரென்று, நறநறவென்று பல்லைக் கடித்துக்கொண்டு கடுமையாகத் திட்டுகிறார்:

“அறிவிருக்கறவன் செய்ற வேலயாடா இது? ஒனக்கு அவ்ளவு ஆங்காரம் இருந்தா எனக்கு எவ்ளவு இருக்கணும். ஹூம்..” என்றார்.

யாரைத் திட்டுகிறார்? யாரையோ! ஆம், எதிரே இல்லாத யாரையோ!! இதைக்கொஞ்சம் துறுவினால் என்னவென்று அவரை, ‘சார், வண்டி இன்னும் கெளம்பலியே..’ என்று முடிப்பதற்குள், என் பக்கம் திரும்பி, மிருதுவான குரலில், மிகப் பணிவாக, “தூத்துக்குடி வண்டி இன்னும் உள்ள வரல. வந்ததும் சிக்னல் கெடச்சிடும்,. ஒரு பத்து நிமிஷம்தான்,’ என்று ரயில்வே சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுபோல் பதில் சொன்னார். நான், ‘தேங்க்ஸ்’ என்றேன்.

அடுத்த கணமே, மோட்டு வளைப் பார்வையோடு, “ஏன்? இன்னிக்கு ஏங்கிட்ட ஆட்டற வாலெ அவங்கிட்ட ஆட்டிப் பாரேன்! அறுத்துச் சாக்கடெலெ எறிஞ்சிட மாட்டான்?”

கூட வந்தவர்களெல்லாம் உறைந்துபோயிருந்தார்கள். எதிரே இருந்தவர், ஒரு தைரியத்திற்காக, ‘மாம்பலத்தில் என்ன அஞ்சு நிமிஷம் நிக்குமா?’ என்று யார்மீதும் குறிவைக்காமல் கேட்டதும், நம் ஆசாமி உடனே அவர்பக்கம் திரும்பி, மிகுந்த நாகரிகமான முறையில், ‘இல்லங்க. இப்பல்லாம் மாம்பலத்தில நிக்கறதில்ல. எக்மோர் விட்டா தாம்பரம்தான். திரும்பி வரப்போ மாம்பலத்லயும் நிக்கும். சும்மாச் சும்மா மாத்தறதுனால ஜனங்களுக்கெல்லாம் பாவம் கஷ்டம்தான்,” என்றார். கேள்வி கேட்டவர் பீதியும், பிரமிப்பும் கலந்து பரிதாபமாகப் புன்னகைக்கத் துவங்கும் போது, அவர், விட்ட இடத்துக்கு அதிவிரைவில் சென்று,

“டேய்..டேய்..டேய்..எவன்கிட்டடா இதெல்லாம்? ஆங்..எத்தனை நாள் செல்லுண்டா? கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்னு கேள்விப்பட்டிருக்கியாடா?” என்று உடம்பைக் குலுக்கிக் கத்தி விட்டு, மறுபடி கைகளைக் கோத்துக்கொண்டு அடுத்த கேள்விக்குப் பதில்சொல்லத் தயாராகி விட்டார்!

செங்கல்பட்டு வரை நிற்கவே இல்லை! இறங்கும்போது மிக அமைதியாகப் பையை எடுத்துக் கொண்டார். தான் இதுவரை தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தோமே, அதுவும் பலர் முன்னிலையில், அதிலும் ஆத்திரமாக என்பதான எண்ணங்களின் சாயை கூட அவர் முகத்தில் இல்லை! சாந்தமாக இறங்கிச் சாவகாசமாக நடந்து போனார்!

இன்னொரு முறை…

எதிரே ஒரு தந்தையும், மகளும். மகள், நல்ல உயரம். கஞ்சிபோட்டுத் தேய்த்த பளிச்சென்ற ரோஜா நிறப் புடவையில், அந்தப் பெண், அழகாய், அமைதியாய் இருந்தாள். அவள் பார்வையில் சலனமில்லை. தந்தையோ ஏதோ தத்தளிப்பில் இங்குமங்கும் பார்த்த வண்ணமிருந்தார். கண்ணாடி வழியே, அவரது திராட்சைக் கண்கள் துறுதுறுவென்று துள்ளிக்கொண்டிருந்தன. அழகான மகளுடன் பயணம்செல்லும் தந்தையின் மனநிலை எனக்குப் புரியும். ஊரெங்கும் கொள்ளிக் கண்கள்; தந்தையோ, பற்றத் தயாராயிருக்கும், ஆனால் வெடிக்க முடியாத மருந்து. நேரெதிரே இருந்த என்னைப் பார்த்துச் சிரிக்க முயன்று உதடோரம் கோணிக்கொண்ட போது நான் அவரைப் புரிந்துகொண்டதாக எண்ணி அவரை சமாதானப்படுத்துவோம் என்று லேசாகப் புன்னகைத்தேன். அவரால் சிரிக்க முடியவில்லை. அவரது நெற்றியில் சூடு முத்தாய்த் துளிர்த்தது. சரி, இதைப்போய் யோசிப்பானேன் என்று ஒரு புத்தகத்தைப் பிரிக்க முயன்றேன். அப்போதுதான் அது நடந்தது.

பொம்மை மாதிரி அசையாமல் உட்கார்ந்திருந்த அந்த அழகுப் பெண் திடீரென்று அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது பற்களின் விகாரமும், காரணமற்ற அந்தச் சத்தமான சிரிப்பும் எங்களைப் பீதியில் ஆழ்த்தியது. கிளம்பத் தயாராயிருந்த வண்டியில் ஒரு மயான ரத்திரிச் சூழல் கப்பிக்கொண்டது. தந்தையோ, அவளது கையைப் பற்றிக்கொண்டு, “வேண்டாம்மா, வேண்டாம்மா, இங்கெல்லாம் சிரிக்கக் கூடாது, சத்தமே போடக் கூடாது,” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். உடைத்த எலும்புகளை உண்டியல் குலுக்கிக் கூளி சிரித்தது போலிருந்தது. பேய்ச்சிரிப்புக்கும் ஓர் அளவை உண்டு போலும்! எப்படி திடீரென்று தொடங்கியதோ, அதேபோல் எதிர்பாராமல் தடாலென்று நின்றுவிட்டது அந்தச் சிரிப்பு. எதுவுமே நடக்காததுபோல அந்த முகம் முன்பிருந்த மாதிரியே அமைதியாகி விட்டது. இந்த அழகை வியப்பதா? அந்த விகாரத்தை நினைத்து அதிர்ச்சியுறுவதா? ஒன்றும் புரியவில்லை.

அந்தத் தந்தை பட்ட பாட்டை எப்படிச் சொல்ல? மீண்டும் திடீரென அவள் சிரிக்கத் துவங்கும்போது அவர் மறுபடியும் அவள் கரத்தைப் பற்றிக் கெஞ்சுவார். நம் முகத்தைப் பரிதாபமாகப் பார்ப்பார். அவளுக்கு உணவு புரிந்தது, ருசி தெரியவில்லை; வாயில் போட்டது போட்டபடியே இருந்தது. மீண்டும் தந்தையின் கெஞ்சல். அவளுக்கு பாத்ரூம் போகவேண்டும். அதற்கும் இவர்தான் துணைசெல்ல வேண்டும். அவளுக்குப் படுக்கை போடவேண்டுமென்றால், பலகையைப் பிரிக்கவேண்டுமல்லவா? அவள் எழுந்தால்தானே? இருந்தது புரிந்தால்தானே எழுவதும் படுப்பதும்? அவளை எப்படியெல்லாமோ கெஞ்சி எதிர்ப்பக்கம் உட்காரவைத்ததும், எங்கள் உதவியுடன் அவசர அவசரமாக அவளுக்குப் படுக்கையை ஏற்பாடு செய்தார். ஏதோவொரு கனவுத் தாயின் மடியில் மிதப்பதுபோல, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.’ தந்தை விட்ட பெருமூச்சில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சோகம் இருந்தது. அவரிடம் பேச்சுக்கொடுக்க யாரும் விரும்பவில்லை. அந்த அளவுக்கு எல்லோருமே இங்கிதமாக இருந்தார்கள். அவர் கழுத்தைச் சாய்த்தபடி ஒருமுறை என்னைத் துயரத்தோடு பார்த்தார். அவரைக் கடந்துசெல்லும் சாக்கில், அவரது தோளை என் இதயத்திலிருந்து அழுத்தினேன்.

அவர், வாளி வாளியாய்க் கண்ணீரை விழுங்கினார்..

விதி இரக்கமின்றிக் கிழித்த ஒரு தேவதையின் கவிதையைப்போல் கிடந்தாள் அவள். சித்தம் என்பது நினைவுகளின் தொகுதி. ஒரு கிராமபோன் ரிகார்டு. அதில் கீறல் விழுந்திருக்கிறது. அவளது வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தை அவளால் தாண்ட முடியவில்லை. அவளுக்கு லேசில் முதுமை வராது. மனம் நின்ற தருணம் ஒரு வட்டம். அதை உடல் சுலபத்தில் மீறாது. மிகக் கொடுமையான இளமை, மிகக் கசப்பான அழகு, இருக்க முடியும் என்பதை விக்கித்த தொண்டையில் புரிந்து கொண்டேன்.

அவளது சித்தத்தின் அமைப்பு ஒருபுறம் இருக்கட்டும். அவளது தந்தையின் மனநிலை? அதில் எங்கோ ஒரு குற்ற உணர்வு அவரது நிம்மதியைப் பருந்தாய்க் கொத்திக் கிழித்துக் கொண்டிருந்திருக்கும். இவர் தந்தை, அவள் மகள், இது உறவு. அட, உறவு இதுதானா? உறவாடல்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் உறவா?

மலரைப் பறிக்கும்போது ரத்தம் கசிவதாய், மனிதனின் மனத்தில் எத்தனை முகங்கள்! அதில் எத்தனை பாவங்கள்! அவற்றில் வெளிப்படுபவை எத்தனையோ? இருட்டுத் திருட்டு முகங்கள் எத்தனையோ? தானும் காணாமல், தன்னையும் காணவிடாத குருட்டு முகங்கள் எத்தனையோ?

கண்ட பின்னும்

கண்டும் காணாதிருக்க முடியாது!

(காண்போம்)

குண(வி)சித்திரங்கள் (2)

அவரை ஊதுவத்தி மாமா என்றுதான் அழைப்போம். அவருடைய இயற்பெயர் என்னவோ தெரியாது. மாம்பலம் சிவா-விஷ்ணு கோவிலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் பஞ்சாங்கம், தோத்திரப் புத்தகங்கள் இவற்றை விற்றுக்கொண்டிருந்தாலும், அவருக்கு ஊதுவத்திதான் அடையாளம். அவர் உடலும் கூட அப்படித்தான் இருக்கும். நங்கைநல்லூரில் எங்கள் வீட்டுக்கு அருகில்தான் இருந்தார். அவர் யார், என்ன செய்கிறார் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் அவரை எதேச்சையாக வியாபாரக் கோலத்தில் கண்ட பிறகுதான் அவருக்கு மேற்படிப் பெயர் நிலைத்துவிட்டது. அவருக்கு ‘ஹிண்டு பேப்பர்’ படித்தே ஆகவேண்டும். வாங்கமுடியாது. அதனால், தினமும், காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து எல்லாப் பக்கங்களையும் அவசரமாக ஒரு புரட்டுப் புரட்டி விட்டுத்தான் செல்வார். அப்பாவுக்கு, அவர் படிப்பதற்கு முன் யாரேனும் பேப்பரைத் தொட்டால் தாங்காது. சம்மதிக்க மாட்டார். நேராகச் சொல்லியும் விடுவார். ஆனால், இவரை ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஏனாம்?

ஊதுவத்தி எப்போதும் அதிவேகமாகத்தான் வருவார். அந்த நாலுமுழ வேட்டியில் எப்படித் தடுக்காமல், அது கிழியாமல் அவர் இப்படிப் பறக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கும். நாம் நடந்துவர ஏழு நிமிடங்கள் ஆகுமென்றால், அந்தத் தொலைவை இவர் நான்கு நிமிடங்களிலேயே கடந்துவிடுவார்! அதெல்லாம் சரிதான். ஆனால், அப்படி அவசரமாய் நடந்து வரும்போது, விடாமல் பேசிக்கொண்டே வருவார். தனக்குத்தானே என்று சொல்வதற்கில்லை; ஏனென்றால், அவரைப் பொறுத்தமட்டில், எதிரே யாரோ ஆளிருந்ததாகத்தான் தோன்றியது. அந்த ஆள்மீது அவருக்கெதனால் கோபம் என்பது தெரியாது. ஆனால், கொலைவெறி! கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவர் திடீரென்று, “நா..நா..நா.ய்..ய்..யே..யே” என்று இடது கையை நீட்டிக்கொண்டு, திக்கினாலும் பெருங்குரலில் அவனைத் திட்டி, வலது கையால் எம்பி எம்பி அவன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவார்! எதிரே வரும் சிறுமி பதறிக்கொண்டு காவாயைத் தாண்டி ஓடுவது இன்னும் கண்முன் நிற்கிறது! “ஏ..ஏ..ஏன்கிட்டயா? பல்லப் பேத்துடுவேன், ஓடிப் பூடு,” என்று சொல்லிக் கொண்டே, எங்கள் கேட்டைச் சத்தமாகத் திறந்து உள்ளே நுழைந்து பேப்பரை ஏறத்தாழப் பிடுங்கும் அவரிடம் என் தந்தை என்ன சொல்லத் துணிவார் பாவம்!! பதறி எழுந்தவர், பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஜபமாலையை உருட்டிக்கொண்டிருப்பார். ஊதுவத்தி வெளியே சென்றபிறகு, கண்கள் அனிச்சையாகத் திறக்கும்! சுவாசம் சீராகும்! பேப்பர் படித்து முடித்த கணமே அம்புபோல் விருட்டென்று கிளம்பி விடுவார். சிலசமயம், அம்மாவிடம் காப்பி கேட்பார். கேட்டு முடிப்பதற்குள் சூடான காப்பி வந்துவிடும். அவள் காப்பிக்கு உலக அளவில் ரசிகர் மன்றம் இருக்கிறது. சமையலோ சொல்லவே வேண்டாம், சத்திரக் கரங்கள் வேறு! (அம்மாவுடைய சாப்பாட்டுக்கும், காப்பிக்காகவும்தான் இவனுடைய கவிதையையெல்லாம் கேட்டாக வேண்டியிருக்கிறது என்ற என் நண்பர்களின் முணுமுணுப்புகளைப் பலவருடங்களுக்குப் பிறகுதான் கேட்டேன்!) எனவே, அம்மாவின் காப்பி, ஊதுவத்தியின் நாக்கையும் தொட்டிருக்கிறது! பட்டென்று டபராவைக் கீழே வைத்துவிட்டுப் புயல்வேகத்தில் கேட்டைத் திறந்து வெளியேறி, தெருவில் கால்வைத்த மறுகணமே, ‘அந்த’ ஆளைச் சாடி அறையத் துவங்கிவிடுவார்! ஆனால், பிளாட்பாரக் கடையில் ஊதுவத்தி விற்கும்போது மட்டும் ரொம்பக் கறார்! சல்லிக் காசு குறைக்க மாட்டார். அதே சமயம், அவர் சரக்கு எவ்வளவு அற்புதமானது என்று பெருமையுடன் சொல்வார்!

***********

இன்னொருவர் இளைஞர். பெயரை மாற்றி ரகு என்று வைத்துக் கொள்வோம்! நல்ல படிப்பு; கட்டான உடல்வாகு; கராத்தே பயிற்சி: கண்ணியமான பேச்சு; புதிது புதிதாய்ப் படித்துத் தெரிந்துகொள்ள ஆவல். இதெல்லாம் சரிதான். ஆனால், ஜெயலஷ்மி தியேட்டரைத் தாண்டி, குடிசைகள் நடுவே புகுந்து, ஏரிக்கரை வழியே இறங்கி, வறண்டிருக்கும் ஏரியில் தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கும்போது குடையைப் பிரிப்பாரையா! அவ்வளவுதான்! அப்போதிலிருந்து, ஏரி முடிந்து, அவர் தெருவிளிம்பில் கால்வைக்கும் வரை ஓயாத பேச்சடா சாமி! கைமாற்றிக் குடையைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையை ஓர் அதிகாரிபோல் அசைத்து அசைத்து, அவர் அப்படி என்னதான் விசாரிப்பாரோ, யாரிடம்தான் வாதம் புரிவாரோ! ஊதுவத்தி மாதிரிப் பறக்கமாட்டார். ஏதோ, பழைய ஜமீன் பட்டணப் பிரவேசம் செல்வதுபோல்தான் இருக்கும் தோரணை. இடையிடையே நின்றுவிடுவார்; ஆமாம், நின்று ‘எதிரி’ என்ன சொல்கிறான் என்பதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு, ‘ஓ! இவ்வளவுதானா!,’ என்று ஒரு மமதைச் சிரிப்பை விடுத்து, அவனுக்குப் பதில்சொல்லிவிட்டுத்தான் மீண்டும் நடக்கத் துவங்குவார்! வெள்ளமாய் வெய்யில் கொளுத்திக் கொட்டுகிற அந்த மத்தியான நேரத்தில், தன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஒருவரோடு ரகு நடந்தபடி நடத்தும் வாதங்களைக் கண்ணிமைக்காமல் கேட்பேன்.

******

எனக்குப் பதினொரு வயதிருக்கும். அப்போது நடந்த சம்பவம் இன்றும் நினைவிருக்கிறது. எங்கள் தெருவில் ராமு என்றொருவன் இருந்தான். அந்த வயதில் இன்னொருவர் வயதை அறிவதற்கில்லை! ‘ராமு பெ..ரீ..ய்..ய ஆள்.’ அவ்வளவுதான்! ரொம்ப உயரம்; பாறையைப் பிளக்கக் கூடிய திடகாத்திரமான உடம்பு; உறுதியான கரங்கள். ஆனால், ராமு அதிர்ந்து பேசவே மாட்டான். மிகப்பெரிய பூனைக்குட்டி போலிருக்கும் அவன் பாவனை! அந்த உடம்புக்குப் பொருந்தாத மழலைச் சிரிப்பு; பணிவு. மிகுந்த கூச்ச சுபாவமுள்ளவன். ஒரு கண், ஏதோ பழுதுபட்டிருக்கும். சிறுவயதில், வில்லம்பு விளையாடும்போது அடிபட்டு அப்படி ஆனதாகப் பாண்டிபஜார் தலபுராணத்தில் காணலாம்!

ராத்திரி ஒன்பது மணியிருக்கும். வானொலியில் ஆங்கிலச் சேதி முடிந்திருக்கும். திடீரென்று தெருவில் ஒரே அமளிதுமளி. வெளியே வந்து பார்த்தால்:

“டா..ய்..இன்னா நென்ச்சுக்னுக்றீங்கோ?” என்று ஒரு பெரிய குரல்.

‘ஏய், வேணாம்பா, ராமு அல்லாம் பாக்குறாங்கப்பா,” என்று ஒரு பதில் குரல். அட! நம்ம ராமுவா!

“யார்றாவன் ராமு? நான் செண்டர் மணிடா டே.ய்..” என்று நடுத்தெருவில் தொப்பென்று விழுந்தான் ராமு. கூட இருந்தோர் உறவினர்கள் போலும்; அவர்கள் அவனைப் பலவாறாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள், “உனுக்கு இன்னா கொறப்பா? இன்னாத்துக்குத்தான் இப்டி கோராமை பண்றெ?’

“டா….ய்..மூண் ரூபா எட்தாந்து வந்தனா? கருவாட்டுக் கொளம்பு வக்கச் சொன்னனா? வச்சாளாடா அவ? வச்சாளாடா?” என்று ராமு தெருவில் புரண்டு, தார் ரோட்டை அடித்து நொறுக்க முற்பட்டான்.

மறுபடியும் அவர்கள், ‘ஏய் இன்னாப்பா, கலாட்டா பண்ணாம வூட்டுக்கு வா ராமு,’ என்றதும், மீண்டும், “டேய்! ராமு எவண்டா ராமு? எங்க்குற ஆளு அவன்? நான் செண்டர் மணிடா! செண்டர்!” என்று மார்பில் அடித்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காதது போல், ‘இன்னா ரம்ணு?’ என்று பணிவாகச் சிரித்தபடிச் செல்வான். ஆனால், வாரத்தில் மூணு ராத்திரியாவது ‘செண்ட’ராகிவிடுவான்!

இப்படிப் பலரை சந்தித்திருக்கிறேன்; தொடர்ந்து சந்தித்தும் வருகிறேன்! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாரயாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆசையில், என் நண்பன் விச்சுவைக் கேட்டேன். ‘அதெல்லாம் நூல் கேசுடா,’ என்றான். அதென்னடா நூல் என்றேன். சிகரெட்டை முழுதாக இழுத்துக்கொண்டு, மேல்வானத்தைப் பார்த்தபடியே பொறுமையாக மூச்சுவிட்டு, குதர்க்கமான சிரிப்புடன் விச்சு சொன்னான்: ‘ஒருநாள் இதே ரெஸ்டாரண்டு. எதிரே நாற்காலி காலி. ‘எக்ஸ்க்யூஸ் மி,’ என்றபடி ஓர் இளைஞன் வந்தான். ‘யாராவது வர்றாங்களா? இங்க ஒக்காரலாமா?’ என்று கேட்டான். ‘ஓ! தாராளமா,’ என்றேன். ‘லைட்டா டீ,’ என்று டேபிளைத் தட்டிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ‘நூல்,’ என்றான். எனக்குப் புரியவில்லை; என்னது? என்றேன். ஒருமாதிரிச் சிரித்தபடி டேபிளுக்குக் கீழே பார்வையைச் செலுத்தி, மறுபடி உயர்த்தி ‘நூல்’ என்றான். இதென்னடா விபரீதமாகப் போகிறதே என்று நினைத்துக்கொண்டே, என்ன வேணும்? என்று கேட்டேன். இப்போது அவன் விழியும், சிரிப்பும் சற்று விகாரமாகி கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டே குரலை உயர்த்தி மீண்டும் ‘நூ..ல்..’ என்றான். நான் எழுந்து விட்டேன். அவன் பேண்டில், தொடைப்பகுதியிலிருந்து ஒரு நூலை நீளமாகப் பிய்த்துக் கொண்டிருந்தான். ஆஹா! இன்று நமக்கு நேரம் சரியில்லையே என்று நான் எழுந்து நழுவப்பார்த்தால், அவன் ‘நூல்..நூல்.’ என்று தலையை ஆட்டிக்கொண்டே பெரிதாய்க் கூச்சல் போட்டான். நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓட்டமாக ஓடி எங்கோ ஓரத்திலிருந்து பார்க்கும்போது அவன் சட்டை கிழிந்து போயிருந்தது. ஓட்டல் சிப்பந்திகள் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.”

எனக்குக் கதிகலங்கியது. அதேசமயம், விச்சுவைப் பொறுத்தமட்டில், கண்டதும் காணவிரும்புவதும் ஒன்றுதான் என்றும் பட்டது. உடனே என் எண்ணத்தை மோப்பம் பிடித்த அவன், ‘என்ன நம்பலியா?’ என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டான். ஒருமாதிரியாக சமாளித்துக்கொண்டு அவன் ‘நூலாகி’ விடும்முன் எழுந்து வந்தேன்.

அப்பாவைக் கேட்டாலோ, வழக்கமான கிண்டல்தான் பதில், “இனம், இனத்தோடுதானேடா சேரும்?!” என்றார். முறைத்தேன்; காரணம் புரிந்து, தலையசைத்துச் சிரித்தார்.

எதையும் பற்றி எவரையும் கேட்பதைக் காட்டிலும், கவனமாகப் பார்ப்பதே நன்று. இல்லையெனில், வெகுநாட்கள் இன்னொருவரின் அனுபவத்தில் சவாரி செய்ய வேண்டியதாய்ப்போகிறது. சவாரி இலவசம்தான் என்றாலும், கால விரயம் என்பது கடுமையான விலைதானே! அதுபோல, வெளியே பார்ப்பதோடு நிறுத்தாமல், உள்ளேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், ஆ! எல்லாம் துல்லியமாகவே தெரிகிறது!

உள்ளே பார்த்ததை ஊருக்குச் சொல்லப் புகுவதும் ‘நூல்’தானோ? பிரித்துப் பார்ப்போம்!

குண(வி)சித்திரங்கள் (3)

ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்

ஒன்றில் நில்லாமல் அடுத்தடுத்துலாவுவாய்

(பாரதியார்)

ஓயாமல் சஞ்சலத்தில் இருப்பதே மனதின் இயல்பு. அசைவு, மனதின் தன்மை. எனவேதான், அதை நிறுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன. சற்றே யோசித்தால், மனம் என்பது எண்ணங்களே! வேறொன்றுமில்லை. ஆயின், எண்ணம் ஏன் நம்மை இந்தப் பாடு படுத்துகிறது? காரணங்களும் தெளிவாகத்தான் இருக்கின்றன! ஒன்று, எண்ணம் நம்வசத்தில் இல்லை. காலையில் நாயுடன் சாலையில் நடைபழகுவோரைக் கவனித்திருப்பீர்கள். வீட்டிலிருந்து இறங்கும் போது, கிரமமாய், செல்ல நாயை அழைத்துக்கொண்டுதான் இறங்குகிறார்கள். தெருவுக்கு வந்ததுமே, அது இவர்களை அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு போகிறது. கம்ப உந்துதல்கள், தெருக்காதல் இவை வேறு! நாய்படாத பாடு படுகிறார்கள்! நாம் எல்லோருமே இப்படித்தான். உறக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. அடுத்தகணம், யாரோ தேனடையில் கல்லெறிந்தது போல, எண்ணங்களின் களேபரம். பிறகென்ன, நாய் வாக்கிங்தான்!

எனவே, எண்ணங்களின் பின்னே கதியற்று நாம் செல்வது ஒரு காரணம். எண்ணங்களின் தொகை இன்னொரு காரணம்.

மாணவ, மாணவியர் சீருடை தரித்து, அப்போதுதான் பூத்த மலர்களைப் போல, இளங்காலை ஒளியில் மின்னிக்கொண்டு, இளஞ்சிரிப்புடன், அணிவகுத்து வரிசையாக நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஆசிரியரின் கட்டளைகளுக்கு ஏற்ப அசைய, இயங்கக் காத்திருக்கிறார்கள். இது ஞானியின் மனம்.

ஒரு படை திரண்டு வருகிறது; அது கோட்டையைப் பிடிக்க வேண்டுமானால் ஒரே வழிதான்; அதுவோ ஓர் ஒற்றைப்பாலம்; அங்கே ஒரு மாவீரன் நின்றுகொண்டு வெட்டிச் சாய்க்கிறான்; படை பின் வாங்குகிறது. இது யோகியின் மனம்.

ஒரு திருமண வரவேற்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள், வேலையாட்கள், எளியவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நல்லவரும் தீயவரும் கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள். வரவேற்பு வாசலில் நின்றுகொண்டிருக்கும் இளம்பெண், யார் வந்தாலும், அவர்கள் தெரியாதவர்களானாலும், அவர்கள் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும், புன்னகை மாறாமல் பன்னீர் தெளிக்கிறாள்; கற்கண்டுத் தட்டுடன் காத்திருக்கிறாள். இது, பக்தனின் மனம்.

இவையல்லாத எதுவுமே நம்ம மனம்தான்!

புற்றீசல் போலப் புறப்பட்டு வந்துயிரைப்

பற்றி வதைக்கின்ற பாழ்மனமே! வெற்றி

உனக்கென்றால் வெட்கம்! எனக்கென்றால் சொர்க்கம்!

மனமே! உனக்குண்டோ மாற்று?

மனம் என்றால் எண்ணம்தான் என்பது புரியாத வரையிலும், எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று ஆராயாத வரையிலும், இப்படி வெண்பா எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! நாம் சோரச் சோர, தன்வலிமை அதிகரிக்கும் விபரீதம்தான் மனம். ‘மனமே தளை, மனமே விடுதலை,’ என்று கண்ணன் பார்த்தனுக்குச் சொல்கிறான். எனில் என்ன பொருள்?

ஃ மனம் என்பது ஒரு சக்தியின் களம், அது ஒரு பொருள் அல்ல

ஃ எண்ணமே மனம்; இடைவிடாத எண்ணங்களல்லாமல், மனம் என்று ஒன்று தனியாக இல்லை

ஃ இயற்கையிலேயே புலன்களெல்லாம் புறம்நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. புலன்வழியே மனம் சென்று, பொருள்மீது நின்று, அதன்பின்னே நாமும் அலைந்து, போதுமடா சாமி!

ஃ மனம் அப்படியே இருக்க, நாம் சுதந்திரமாய் இருக்க முடியும். அந்த நிலை, நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது

எனவே,

எண்ணமல்லால் ஏதுமனம்? ஏறி அடக்கவோர்

திண்ணமல்லார்க் கென்றும் திரை

சரி, எங்கிருந்து வருகின்றன எண்ணங்கள்?

புறத்திலிருந்துதான்! ஆமாம், எல்லா எண்ணங்களும் பொருள்சார்ந்தவையே. பொருளே புறம். புலனே அதைத்தொடும் கரம். தொட்டதும் எழுவதே எண்ணம். அதன்பிறகு நாம் இயங்குவதில்லை, எண்ணங்கள் ஓர் இயந்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன. எனவேதான், மனம் என்பது நுண்மையான பொருளே என்றும் சொல்கிறார்கள். நாம் பொருளன்று! பொருளை ஆண்டு இயக்கும் வல்லமை பெற்றதே மானிடத்தின் சிறப்பு.

எண்ணம் வெளியிலிருந்து வந்தாலென்ன, வெளியூரிலிருந்து வந்தாலென்ன, நாம் புலிவாலைப் பற்றி மரத்தைச் சுற்றிக்கொண்டே வருகிறோமே அதற்கென்ன செய்ய என்று கேட்கிறீர்களா! எழுந்த எண்ணத்தின் பின்னே எதனால் கதியற்று அலைகிறோம்?

ஃ எண்ணங்களின் வேகம்

ஃ எண்ணங்களின் தொகை

ஃ எண்ணங்களைப் பிடித்துக்கொள்ளுதல்

ஃ வாசனை

இவற்றைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமில்லை; வருக!

அனுமனைப் பற்றிச் சொல்லும்போது, வாயு வேகத்தைவிட மனத்தின் வேகம் பெரிது. அனுமன் அதைவிட வேகமானவன் என்கிறார்கள். என்ன பொருள்? வேகத்தை விவேகம்தான் வெல்லும் என்பதே! ஒன்று, பிள்ளையாராய் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லையா, ஓடுவதைத் தாண்டி எதிர்நின்று வசக்க வேண்டும். சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் போகிறது; இளைஞன்; கொஞ்சம் போதையில் இருக்கிறான்; அவன் அன்றாடம் இரண்டு கைகளையும் விட்டுத் தலைகோதிக் கொண்டு கறுப்புக் கண்ணாடி வழியே காதல் வீசும் மகளிர் பேருந்து போய்விட்டது; அதைப் பிடிக்க வேகமாய்ச் செல்கிறான்; அங்கே 40 கி.மீ. வேகம்தான் அனுமதி; இவன் 70 கி.மீ. வேகத்தில் பறக்கிறான்; இவனைப் போக்குவரத்துப் போலீஸ்காரர் எப்படிப் பிடிப்பார்? விசில் ஊதி நிறுத்த முடியுமா? அவர் ஒரு 80 அல்லது 90 ல் பறந்து, ஒரு வளைவில் பயலை மடக்குகிறார். அனுமனுக்கு, ராமநாமம்தான் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள்.

இது சரிப்படாது என்கிறீர்களா? அப்படியானால் பிள்ளையார் வழிக்கு வாருங்கள். ஆற்றங்கரை; அரசமரம்; எதிரே ஓயாத சலனம்; மேலே ஒழிவற்ற சலசலப்பு; வெய்யில், மழை, புழுதிக்காற்று; பக்தர்களின் இடைவிடாத கோரிக்கைகள்; திருட்டு; ஆனால், ஐயா அசைவதே இல்லையே! அதுபோல், எண்ணங்களின் தொகை, அவற்றின் வேகம் எப்படி இருந்தால் நமக்கென்ன, நாம் நாமாய் இருப்போமே, என்று இருக்கலாம்.

இதுவும் ஒத்துவராது என்கிறீர்களா? என்னதான் உங்கள் பிரச்சினை? ‘எண்ணம் தோன்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஏன் விருப்பம், வெறுப்பு, ஆசை, பற்று இவையெல்லாம் தோன்றுகின்றன? இவற்றால்தானே கூச்சலும், குழப்பமும்?’ இருங்கள்! இதற்குமேல் எதுவும் நீங்கள் சொல்லவேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து பதிலைக் காண்போம்!

விருப்பு என்பது என்ன? ஒரு பொருள், அல்லது ஆள், அல்லது ஒரு சூழ்நிலை மேல் நமக்கு ஏற்படுவது; அது நமக்கு வேண்டும் என்று தோன்றுவது. அவ்வளவுதானே? சாதாரணமாகத் தோன்றி மறையும் எண்ணத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? இது, திரும்பத் திரும்பத் தோன்றும் எண்ணம்; ஒரே எண்ணம். திரைப்படத்தின் ஃப்ரேம்களைப் போல! பல ஃப்ரேம்கள் சேர்ந்ததுதானே ஒரு சின்னக் காட்சி? ஒரு பொருளின் மீது ‘தங்கி’ விடுவதால் எண்ணம் விருப்பமாகிறது. அது நமக்கு வேண்டும் என்னும்போது ஆசையாகிறது. அது நமக்கே வேண்டும் என்னும்போது பற்றாகி விடுகிறது. அதனால் அச்சமுண்டாகிறது. அதிலிருந்து இருமை என்கின்ற கவலை நேர்கிறது. ‘சொந்தம்’ என்கின்ற உணர்வு ‘பந்தம்’ என்கின்ற விளைவை ஏற்படுத்திவிடுகிறது. எதை நாம் பற்றிப் பயன்படுத்திப் பிறகு அதனிடத்தில் மீண்டும் வைத்துவிடவேண்டுமோ, அது நம் பிடரியைப் பற்றிக் கொள்கிறது. ஆழ்ந்து கவனித்தால், விருப்பே வெறுப்புக்குத் தளமாகிறது. அதன்பிறகு, சீற்றம், குழப்பம், புத்தி பேதலித்தல், பிறகு ஆளே தொலைந்து போதல் என்று தொடர்கின்றன தொல்லைகள்.

நம் எல்லோருக்கும் இதுதான் பழக்கப்பட்டுப் போய்விட்டது. ஒவ்வொரு மனிதனும் ஊமைக் கவிஞனே என்றொரு பழமொழியுண்டு. இங்கே, எந்த மனிதனும், கொஞ்சம் ‘நூல்’ கேசுதான் என்று சேர்க்க வேண்டியிருக்கிறது. எண்ணத்தின் தீவிரம், அது தோன்றும் அந்த மனிதனின் வலுவின் அளவு, இதைப் பொறுத்தே ஒருவன் தெளிவானவனா இல்லை பைத்தியக்காரனா என்பது தீர்மானமாகிறது. கண்ணாடி முன்பு நின்றுகொண்டு நாம்செய்யும் கொனஷ்டைகள், யாருமில்லாதபோது செய்யும் குரங்குச் சேட்டைகள், குளியலறையில் நமது ஆள்மாறாட்டம், படுக்கையில் நாம் தழுவுபவர் – தழுவ விரும்புபவர், அங்குள்ள ரகசிய வித்தியாசம், நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிறுகல்லை விடாப்பிடியாய்க் கடைசிவரைக் காலால் எத்திக்கொண்டே செல்லுதல், பூட்டைப் பிடித்துத் தொங்கிப்பார்த்துத் தெருவைக் கடக்குமுன் எம்பியெம்பிப் பார்த்தல், ஒரு பாட்டைக் கேட்கும்போது நாமே அந்தக் கதாநாயகனாக பாவித்தல், சாதாரணமாய் இருக்கும்நாம் காரில் ஏறியவுடனேயே தோரணை மாறுதல், கையில் சரியான டிக்கெட்டு வைத்திருந்தும் பரிசோதகர் வரும்போது பயந்து முகம்வெளிறிப்போதல் — இப்படி எத்தனை எத்தனை நம்மில் இல்லை? இவையெல்லாம் அந்த ‘நூல்’ கேசுக்கு ஆதாரமேயல்லவா?

இப்போது பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வாருங்கள். அந்தப் பெரியவர் தன்னுடனும் பேசிக்கொண்டு, நமக்கும் முறையாகப் பதில்சொல்லிக்கொண்டு வந்தாரே! அவர் மனத்தில் ஒருவரால் ஏற்பட்ட காயம்; அதை அவர் ஆறவிட்டிருந்தால் அத்தோடு போயிருக்கும். ஈயைப்போல் காயத்தின்மேல் உட்கார்ந்து உட்கார்ந்து அது கசிந்துகொண்டே இருக்கிறது. விபரீதமாகச் சிரிக்கும் அந்தப் பெண்ணை நினைவிருக்கிறதா? அவளுக்கென்ன ஆயிற்று? ஏதோவொரு சம்பவம் உள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. அவளைப் பொறுத்தமட்டில், காலம் அந்தக் கட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை. ஏனென்றால், அவள் அந்த சம்பவத்தைக் கடக்கவே இல்லை! அந்த நிகழ்ச்சி அதிர்ச்சிமயமானதாக இருக்கலாம். அதன் விளைவு, சிரிப்பாக இருக்கலாம். நெல், நாற்றாகப் படாதபாடு படுகிறது. வரும்போதே முழுதாக வந்துவிடுகிறது காளான். என்ன சொல்ல? ரகு, நம்மைப் போலத்தான். யாருமில்லாத போது, நம்மில் பலர் எப்படி இருப்போமோ அப்படித்தான் அவனும் இருந்தான். அவன், யாருமில்லை என்ற தைரியத்தில்தானே வறண்ட ஏரியில் பேசிக்கொண்டே வந்தான்? ஊதுவத்தி மாமா? அவர், சரியான ஊசிப் பட்டாசு. யாரும் அவரை எதுவும்சொல்லக் கூடாது. எளியாரை வலியார் மிதிப்பர் என்பது உலக நியதியன்றோ? அலுவலகத்தில் மேலதிகாரி இருக்கிறார். அவர்மேல் பலருக்கும் கோபம் இருக்கிறது. அது மதிய உணவு நேரத்தில் அக்கப்போராகத் துவங்கி வம்பளப்பில் முடிகிறது; வீட்டில் நம்மைத் தழுவவரும் குழந்தை மீது வெடிக்கிறது. அலுவலகத்திற்கு வெளியேயும் பல மேலதிகாரிகள் இருக்கிறார்கள். தபால்காரர், காய்கறி வியாபாரி, பூக்காரம்மா, பால்பையன், பஸ் கண்டக்டர், ஆட்டோக்காரர், சினிமா க்யூவில் முரட்டு ஆசாமிகள், இவர்கள் எல்லோருமே மேலதிகாரிகள்தான்! இவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். இவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நினைப்பை நிறுத்த முடியவில்லை. அழுத்தி வைக்கப்பட்ட கோபம், ஆளை லேசில் விடுவதில்லை. அதிகாரி, மறுபடி அழைக்கும்போது, நாம் சிரித்தபடிக் குழைவதும், அந்தக் கோபத்தின் விகாரமான, பரிதாபமான தோற்றமே! ஊதுவத்தி மாமாவுக்கு எப்போதும் கோபம்! தனிமையில் அவர்தானே ராஜா?! அதனால், தன்னைக் காயப்படுத்தியவர்களை வாய்க்கு வந்தபடி வைது, பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதீதமான சினம், அவர் தோலில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூத்திருக்கிறது. ரயிலில், நாம் முதலில் சந்தித்த பெரியவரும் அது போலவேதான்! என்ன, ஊதுவத்தி மாமா வெடி; இவர் மத்தாப்பு; ஆனால், பகிரங்கப்படுவதில் இருவரும் ஒன்றுதான். ராத்திரி ராத்திரி செண்டர் மணியாகிவிடும் ராமு? இயல்பில், அவன் மிகவும் கூச்சமுள்ளவன் என்று பார்த்தோம்; அவன் மனது மென்மையானது எனினும் தன்னைப் பற்றிய உயர்வான மதிப்பீடுகள் யாருக்குத்தான் இருக்காது? மது உள்ளே போனதும் அது வெளிப்படுகிறது!

இந்தக் குண(வி)சித்திரங்களில் ரகு ஆரம்பம்; ‘நூல்’ உச்சம். இதில் இன்னும் எத்தனை எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அவ்வப்போது அவர்கள் இங்கே தென்படக்கூடும்!

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதை இன்னும் நுணுக்கமாகப் பார்த்துவைத்துக்கொள்வோம்..

மனிதனின் அமைப்பில் ஒரு கிரமமான வரிசை உள்ளது. மிகச் சுருக்கமாகவேனும் அதை இங்கே தெரிந்து கொள்வது, அல்லது நின¨வுபடுத்திக்கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். வாருங்கள்!

1. தூல உடம்பு

அதற்கென்று ஓர் அறிவு இருக்கிறது. அது சிந்திக்கும் அறிவில்லை. ஆயினும், சிந்தனையில் வியப்பை ஏற்படுத்தக் கூடிய அறிவு. உதாரணமாக, பசிக்கிறது. பெரும்பாலும், அது உடலிலிருந்து வரும் சிக்னல். சில நேரம், அது வெறும் நினைப்பே! எப்படியோ, பசிக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சிந்தனைதான் நிச்சயிக்கிறது. எதை, எப்படி, எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்சயிக்கிறோம். கை, (சிலருக்குக் கைகள்!) சோற்றை வாய்க்குள் சேர்க்கிறது. ருசிபற்றி உள்ளே ஒரு விமர்சனம் நடக்கிறது. சாப்பாடு தொடர்கிறது. இதுவரை நம்செய்கை. பிறகு, உணவு செரிப்பது? சத்து உறிஞ்சப்பட்டு சேருமிடம் சேர்வது? வெளியேற வேண்டியவை பிரிக்கப் படுவது? இவைபோன்ற கணக்கற்ற செயல்கள் நமக்குள்ளே நடக்கின்றன. நாம் செய்வதில்லை. இதை body intelligence உடம்பின் அறிவு எனலாம்.

2. புலன்கள்

முன்பே கண்டதுபோல், புலன்கள் வெளிப்புறமாய்ப் பொருத்தப்பட்டிருக்கின்றன. புறம் என்பது, பொருள்மயமான உலகம். புலன்கள் மூலமே உலகத்தின் அனுபவம் ஆதாரப்பட்டிருக்கிறது.

3. மனம்

மனம் என்றால் எண்ணங்களே என்று பார்த்துவிட்டோம். புலன்களின் தொடர்பு மனமெனும் தளத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடர்பும், தெரிவித்தலும், இடைவிடாமல் நடக்கிறது; இரண்டுக்கும் இடையே கால இடைவெளியும் இல்லை. எனவேதான் எண்ணங்கள் ஓய்வதில்லை. கனவும் உறக்கத்தில் எழும் எண்ணக் குமிழ்களே!

4. புத்தி

மேல்மனம் எனலாம். முடிவுகள் எடுக்கப்படும் அலுவலகம். பட்டிமன்றம், விவாதம், மனசாட்சி, ரவுடிக் கட்டு உருவத்தின் ‘நல்லவனா வாய்ந்து இன்னாத்தக் கண்ட? வா ஒரு க்வாட்டரு ஏத்திகினு வெளாவரியா பேசிக்கலாம்,’ போன்ற அதிரடி ‘அறிவுரை’களை, தூய வேட்டி, துண்டு அணிந்து இன்னோர் உருவம் நீதி போதனை சொல்லி மாற்றுவது, நாம் சற்று வருத்தத்துடனே அதன்படி நடப்பது, இவையெல்லாம் புத்தி என்னும் மேடையில்தான்.

கதவு திறந்திருக்கிறது. உள்ளே ஒரு தேள் கொடுக்கைத் தூக்கியபடி நல்ல காலாகப் பார்த்துப் போடலாம் என்று வருகிறது. கண் பார்க்கிறது; மனம், காட்சியைப் பதிந்து கொள்கிறது; இது தேள்; விஷமுள்ளது; விட்டால் கொட்டிவிடும்; அகிம்சையைக் காந்திக்கு விட்டுவிட்டு ஒரேபோடாய்ப் போடு என்ற முடிவை எடுப்பது புத்தி.

குறுக்கீடு, அலசல், ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிவும் எடுக்கப்படும் தளம் புத்தி. அதற்கு ஆதாரம் எது?

5. சித்தம்

மனச வாட்டுறது ரோசனதானே?

மனுசன ஓட்டுறது வாசனதானே?

விருப்பும் வெறுப்பும் வெறும் ஞாபகம்தானே?

வேசம் மறந்துபோன வேதனதானே??

சித்தம் ஞாபகங்களின் நூலகம். அங்கே இல்லாததே கிடையாது. நாம் தொட்டதும் நம்மைத் தொட்டதும், இப்பிறப்பும், முற்பிறப்பும். நம் தொடர்பான நமது அனுபவங்கள் அனைத்தின் பாதிப்பும் பத்திரமாகப் பாதுகாக்கப்படிருக்கும் தளம். காக்காக்கடி மிட்டாயிலிருந்து கடவுள் வரை, எல்லாம், ஓஹோஹோ எல்லாம் பதிவாகி இருக்கின்றன. அந்தப் பதிவுகளுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்; அவையே குணங்களுக்கு ஊன்றுகோல். பதிவுகளுக்கு ஒரு போக்கு நேர்கிறது; அதை நிர்ணயிப்பதே வாசனைகள்; எளிதாய்ச் சொன்னால் நினைவுகள்.

பொதுவாக, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஆயிரக் கணக்கான அனுபவங்கள் சித்தத்தை ஊடுருவுவதில்லை. கடவுள் என்று ஒத்துக் கொள்வீர்களோ, இயற்கை என்று வாதாடுவீர்களோ, எதுவானாலும் இங்கே இதற்கு ஒரு கும்பிடு போடுங்கள்! ஏதோ கொஞ்சநஞ்சம் உள்ளே போவதற்கே இந்தப்பாடு படுகிறோமே, எல்லாம் உள்ளே தங்கிவிட்டால்? நிலைத்த நரகமாகிவிடாதோ வாழ்க்கை?

ஆனால், மிகவும் தீவிரமான ஆசைகள் சித்தத்தில் வேர்பிடித்துத் தங்கிவிடுகின்றன. கொலையுணர்வு, வெறித்தனமான ஆசைகள் இவை உள்ளே நுழைந்துவிட்டால் அவை வெளியே போவது மெத்தக் கடினம். அவை வேரூன்றிக் கொள்வதோடு, மற்ற எண்ணங்களை மங்கச் செய்து, தாமே பிடிவாதமாக நின்று பேயாடும். சென்ற வாரங்களில் நாம் சந்தித்தவர்கள் இந்த ரகம் இல்லை. பெரும்பாலும், அதிர்ச்சி, இயலாமை இவையே அவர்களது விசித்திரமான நடத்தைக்குக் காரணம். ஆனால், சித்த்த்தின் உள்ளே பேராசை, வெறி இவை நுழைந்துவிட்டால், அவர்கள் வெறியர்களாகி விடுகிறார்கள். அவர்களில் எல்லோருமே வெளியே அம்பலப்பட்டுவிடுவதில்லை. பலர், கைதேர்ந்த கிராதகர்களாக இருக்கிறார்கள். இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதுபோலிருக்கும் முகபாவம், பேச்சு. நடத்தை மட்டும் நரபலி கேட்கும் விதமாயிருக்கும்! மொழி, சாதி, பணம், பதவி என்று பலமுகம் பூணும் இந்த வெறியின் ஒரே நோக்கம் அழிப்பதே ஆளுமை என்பதே!

சித்தம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், கடவுளைப் பற்றிப் பேசாத சமயங்கள் கூடச் சித்த சுத்தியே முதன்மையான தேவை என்கின்றன. விளக்கங்களில் சிக்காமல் நேரே வருவோம். சித்தம் என்பது கண்ணாடி மாதிரி. தூசு படியாத கண்ணாடி கிடையாது. துணிபோட்டு மூடிவைத்திருந்தாலும், திறந்தவுடனேயே துடைக்க வேண்டியதாயிருக்கிறது!. சலித்துப்போய் விட்டுவிட்டோமென்றால் அப்புறம் கண்ணாடி பார்க்கவே முடியாது. கண்ணாடி பொய்சொல்லாது. அப்படியே உள்ளது உள்ளபடிக் காட்டிவிடும். கொஞ்சம், கருணை காட்டக் கூடாதோ?! புத்தி எடுத்த முடிவு, உபசாரத்திற்கு ஜனாதிபதி உத்தரவுக்குச் செல்வதுபோல், சித்தத்திடம் காட்டப்பட்டு, செயல் நடந்து விடுகிறது.

செயலின் விளைவு, தேகம், புலன்கள், மனம், புத்தி இவற்றுகில்லை! சித்தத்திற்கே!! எப்படி இருக்கிறது கூத்து! எனவேதான், சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மெத்த அவசியம்; சற்றுக் கடினமும் கூட. முன்பெல்லாம், பண்டாரம், காலையில் அன்னக் காவடி தூக்கிவருவார். கழியில் குலுங்கும் மணியொலி கேட்டு வீட்டிலுள்ளோர் வெளியே வருவார்கள். கழியின் இருபுறத்திலும் செம்புப் பாத்திரங்கள் இருக்கும். அரிசி, அச்சு வெல்லம் போன்றவை அவற்றில் போடப்படும். அந்தச் செம்புப் பாத்திரங்கள் தங்கத்தை மிஞ்சும்படியாக மின்னும்! அத்தனைப் பளபளப்பு! அப்படி, தினந்தோறும் அதைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளக்க வைத்திருப்பதுதான் பண்டாரத்தின் உழைப்பு! அதுதான் சித்த சுத்தி.

சித்தமும் ஆன்மாவும் ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி இருக்கிறது. சித்தம், ஆன்மாவின் சூழல்; விளக்கைச் சுற்றியிருக்கும் வெளிச்சம் போல! எனவே, அவை இரண்டுபோல் தோன்றும் ஒன்று.

தேகம், புலன்கள், மனம், புத்தி இவை நமது. சித்தம், ஆன்மா நாம்!

நாம் பார்க்கும் பொருட்களின் வடிவத்தை மேற்கொள்கிறது சித்தம். அதன்மூலம்தான் நாம், இது நாற்காலி, அது ஆட்டுக்கல் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எதை, ஊன்றிப் பதியம் போடுகிறோமோ அதன் தோட்டமாகவே மாறிவிடும் தன்மை வாய்ந்தது சித்தம். அவரை நட்டால் துவரை முளைக்காது. உண்மையை ஊன்றுவோம்; அது ஓங்கி வளர, அதன் நிழலில் அமர்ந்து குழலூதுவோம்! மனித நேயத்தை ஊன்றுவோம்; அதன் மகத்துவத்தில் மனத் தூய்மை பெறுவோம்! சமூக நலனே வாழ்க்கை என்ற கொள்கையை ஊன்றுவோம்; அதுவே கோட்பாடாக விரிந்து நம் அனைத்துச் சிந்தனைகளையும் கொள்ளட்டும்!

சித்தன் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே ஏன்? சித்தத்தில் எது தீவிரமாகச் சிந்திக்கப்படுகிறதோ, சித்தம் அதன்மயம் ஆகிவிடுகிறது என்பதைக் காட்டவே!

அவனிவன் மற்றும் அவையிவை என்னும்

கவனமே சோற்றினில் கல்

அவனே இவனே என்னாமல் சிவனே என்றிருந்தால் சித்தமெல்லாம் சிவமயமே! அதன்பிறகே எல்லாம் அவன்செயல் என்று சொல்வது பொருந்தும்!

அந்தக்கரணம் என்று சொல்லப்படும் இந்த வரிசைக்கிரமம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நம்மையும் பிறரையும் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படைப் பாடமிது. இதைப் புரிந்து கொள்ளாமல், மனித நேயம், உலக சமாதானம் என்பதெல்லாம் வெறும் முழக்கங்களாய் முடிந்துபோகும். விரித்தால் விகாரப்படும் என்பதாலேயே மிகச் சுருக்கமாக இங்கே சொல்லப்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால்,

சித்தரும் பித்தரே பித்தரும் சித்தரே

தத்தம் குரலளவே தாம்.

 படத்திற்கு நன்றி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *