ஆக்கம் : மேதகு அப்துல் கலாம்

மொழிபெயர்ப்பு : ரஞ்சனி நாராயணன்

images (1)

அன்புள்ள இந்தியர்களே,

இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா? இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்? இதைச் செய்வதை விட்டுவிட்டு  இப்போது  நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை பேசாமல் செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு, கேள்வி கேட்கும்  காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம். நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, கூடவே கையில் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துப் போவார்கள். தங்கள் நாய் கக்கா போனவுடன் அதை எடுத்து பையில் போட்டுக் கொள்வார்கள். நம் நாட்டில்  எந்த இந்தியனாவது செய்வானா?

தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

நன்றியுடன்,

அப்துல் கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அன்புள்ள இந்தியர்களே!

  1. அருமையான பகிர்வு.  ஆனால் இந்தக் கேள்விகளைப் பலரிடமும் கேட்டாச்சு. 🙁 யாரும் இன்னமும் உணரவில்லை என்பதே உண்மை.

  2. கீதா மேடம் சொல்வது போல் யாரும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.
    அருமையான  தமிழாக்கம். ஆங்கில உரையை படித்திருக்கிறேன். அழகான தமிழாக்கம்.
    பாராட்டுக்கள்.

  3. தவறாக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். பெரியவர் அப்துல் காலாம் சொல்வதை போல நான் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் போது ஒவ்வொரு முறையும் கவனமாக இருப்பேன். ஆனாலும் என் உடன் பிறப்புகள் என்னைத்தான் முட்டாளாக பார்க்கின்றார்களே தவிர வேறு ஒன்றும் அங்கு நடப்பது இல்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை இந்தியாவிற்கு சனிதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *