Blog

  • ஊனம்

     

    கோபி சரபோஜி

    கூந்தல்
    கருமேகம்.

    நெற்றி
    நிலா.

    புருவம்
    பிறை.

    விழி
    மீன்.

    நாசி
    கிளி.

    வாய்
    கோவைப்பழம்.

    பல்
    முத்து.

    கழுத்து
    சங்கு.

    தனம்
    கவிழ்ந்தமலை.

    இடை
    கொடி.

    தொடை
    வாழை.

    இப்படியான
    உருவகங்களால்
    ஊனமாகிப்போனது
    உன்னையும்
    தன்னைப் போன்றதொரு
    சக மனுசியாய் மதிக்காத
    என் ஆண்மை தனம்!

     
    படத்துக்கு நன்றி
     
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (31)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.

    எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.

    என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு காரணம் உண்டு.

    2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.

    உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

    எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.

    1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.

    உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.

    1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.

    இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.

    எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

    1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும், தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.

    இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.

    விளைவு !

    1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.

    கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.

    இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

    இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

    தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.

    இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.

    இதற்காகத்தான் கவியரசர்,

    வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
    மனிதனாக வேண்டும்
    வாசல் தேடி உலகம் உன்னை
    வாழ்த்திப் பாட வேண்டும்!     என்று எழுதி வைத்தாரோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ :: தொடர்-20

     

    பெருவை பார்த்தசாரதி

    புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர,  செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான்.  அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.

    மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி  விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.

    மக்கள் அறவழியில்  சென்று ஒழுக்கத்தை முறையாகக்  கடைபிடித்து நல்வாழ்க்கை  வாழவேண்டும் என்ற உயரிய  நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்

    எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.

    மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான  அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

    குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே  நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.

    ‘’நில்லென்று  மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு

    கொல்லென்று  வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’

    என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.

    ‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

    தற்காலத்தில்  அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும்.  இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.

    பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன்.  மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.

    ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன.  இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

    யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற  புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.

    தொடரும

    படத்திற்கு நன்றி :

    http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

    Share
  • கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

     

    அரவிந்த் சச்சிதானந்தம்

    “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia

    கைக்குட்டை  என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர்  விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதத்தில்  நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். ஒரு வருடத்திற்கு சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது ! வேறு வழி இல்லை…

    ஏதோ நான் கைகுட்டையை  வைத்து பாய்மரக்கப்பல் செய்வதாக  நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காக கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காக கைக்குட்டையை பயன்படுத்தும்  ஒரு சாதாரண  மனிதன் தான்.. ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதரனமானவையன்று.

    “பத்திரம்டா ! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்த கைகுட்டைய என் யுனிபார்ம்  ட்ரௌசரோட சேர்த்து ஊக்கை குத்தும் போது.

    அழகான பூ போட்ட  வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூ போட்ட கைக்குட்டை உபயோகப்படுத்தவில்லை. யாரும் உபயோகப்படுத்த விடவில்லை. பூ போட்ட கைகுட்டைகளும்  குடைகளும் பெண்களுக்கு  மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப்படுகிறது. பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிகின்றன.

    ஆண் கடவுளுக்கு பூ சூட்டி அழகு பார்க்கும் இந்த சமுதாயம், பூவை பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

    ஆறாம் வகுப்பு  படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த  ராமஜெயத்தை எல்லாரும் அழும்  வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல  இயலவில்லை. நண்பர்கள் என்னை  ஒதுக்கி வைத்திடுவார்களோ  என்ற பயம்.வீட்டிலும் ஒரு  நாள் பூ போட்ட புடவையை  முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்த தழும்பு இன்னும் என்  வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்கு பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல்  ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்…

    சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு  முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது  விளக்குமாற்றில்  அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்து  சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு  ஏதாவதொரு காரணம் வேண்டும்.

    “ஒரு கைக்குட்டையை தொலச்சதற்க்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.

    “எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி !” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரைக்குறைவாக பேசுவாள். அதனாலேயே யாரும் மத்தியஸ்தத்திற்கு வரமாட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் கைக்குட்டையை தொலைத்து விட்டு நான்  ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாட தொடங்கிவிடுவாள்.

    அம்மா அடிக்கும்போது  அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று  இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும்.மூச்சு இறைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

    “ஏன்டா உன் புத்தி இப்படி போகுது…பொருள தொலைச்சதற்கு பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும்,என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதை சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும்.

    “……..பொட்ட புத்தி உனக்கெதுக்கு டா !” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்பு தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

    பெரும்பாலும்  அம்மா எதற்காக அடிக்கிறாள்  என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்த காரணங்களுக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

    “ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களை காண தாளாமல் நான் அவள் கால்களை கட்டிக் கொள்வேன்.

    “இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா ! நீ அழாத !”.

    நான் என்ன தப்பு  செய்தேனென்று  எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படி சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாறு குச்சிகள் சிதறும்.

    அப்போதெனக்கு  பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று  எனக்கு தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற  பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால்  நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்கு கோபம் வந்திடும்.

    “திருட்டுப் புத்தி வேறயா ?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூ போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லி சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடிய கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரிக் காம்பே…”

    அந்த கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம்  ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று என பல வகையான   கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்ட கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள்.

    இருதினங்களுக்குமுன் அக்காவிற்கு கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத்  தெரியாமல் நான் எடுத்து  வைத்துக் கொண்டேன். எடுத்து  வைத்திருக்கலாம்… புடைவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றை பார்த்தால் என் மனம் கட்டுப்பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குபின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

    அன்று என் அம்மா  அக்காவின் கைக்குட்டையை திருடியதற்காக சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு  நாள் அவள் மாங்காடு கோவிலுக்கு சென்றிருத்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்து சுற்றிக் கொண்டேன்.அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைக்காக அடிக்கிறாள்.

    அம்மா ரொம்ப  நல்லவள், என்னை அடித்தாலும்…

    பெரும்பாலும்  பிச்சைக்காரிகளுக்கு கொடுப்பதற்காகவே  தன் பழைய புடவைகளை எடுத்து  மூட்டைக் கட்டி வைத்திருப்பாள்.அவள் இல்லாத போது அதிலிருந்து  சில புடவைகளை எடுத்து ஒளித்து  வைத்துக் கொள்வேன். நிறைய  புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதை கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்த சுடுகாடு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில்சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் .

    என் தனிமையின்  பின்னால் ஒளிந்திருக்கும்  ரகசியங்களை  அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள்.. அதன் பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது.அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்…

    நான் செய்வது  சரியா தவறா என்று தெரியாத  குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று  பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை.அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான்.

    முழு ஆண்டு  விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்தி பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்கு போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து  தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னை ‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்து செல்வதற்காக.. வாழ்க்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாக கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்…

    “இந்த வருஷம் சித்தி வீட்டுக்கு போகல !” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது.

    “அப்பா வறார்டா….!”

    எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

    அம்மா ஏதோ வத்தி  வைத்திருக்கிறாள். ஒரு வேலை என் நடவடிக்கைகளைப் பற்றி  சொல்லி இருக்கலாம்.  பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்த பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டு பயணம் தடைப்பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது .

    அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையை திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.

    “பை மாறி போச்சா ! அக்காகிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு ”
    பின் அவர் கொடுத்த எந்த பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

    அப்பா எதற்காக  வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும்  அப்பாவும் ஏதோ ரகசியம்  பேசிக் கொண்டனர். நான் அறையினுள்  நுழைந்தால்,பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகத்தான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது.

    அம்மா மலிவு  விலை கைக்குட்டைகளை வாங்குவதைக்  கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்ப தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா  சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில்  அவர் வார்த்தைகள் பதிந்து  விட்டது. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின்  வார்த்தைகளை பின்பற்றுவதன்  விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்….

    “அக்கா கல்யாணம்டா….” இதற்கு தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார்.

    அடுத்த ஒரு  மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. தினம் தினம் விருந்தாளிகள்  வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துக்கு தெருவில் ஒரு  லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு  அழைத்து செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள் ! வகை வகையான ஆடை  அலங்காரங்கள் ! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்கு தெரிந்தது. என் வயது பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் கலைகட்டி கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

    ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம்  செலவழித்ததால் என் சித்தி பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம்  நான் திடீரென ஒட்டாமல் போனதை  அவள் ஒரு பெரிய அதிசயம்  போல் தன் தோழிகளிடம் விவரித்துக்  கொண்டிருந்தாள்.

    “என் தம்பிய பாத்தீங்களா…பெரிய மனுஷன்…நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”
    தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். என்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

    “ஏண்டி கல்யாணப் பொண்ணே ! நீ உன் வேலைய பார்த்துகிட்டு போ…உன் தம்பிக்கு பத்து வயசுதான்…ஆனா.. ” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கி சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

    அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும்  கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த  வீட்டிற்க்கு சென்று விட்டாள். வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளும்  ஒவ்வாருவராக சென்றுவிட்டனர். இறுதியாக சென்றார்கள் என்  சித்தியும் அவளின் மகளும்.

    “அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்பி துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

    வெட்கத்துடன்  சித்தி மகள் “போயிட்டு வறேன் பெரியம்மா!” என்றவாறே என்னை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்.

    “மொட்டை பைய்ன் மாதிரி ஆடாத…வீட்ல அடக்கமா இரு.“ அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே  கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை  பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

    ஆட்டோ மறையும்  வரை கலங்கிய கண்களுடன்  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகி போய்விடுவாள். அப்பா  மீண்டும் வெளிநாடு போக போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி  என்னை சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது,  ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின் பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்க்கு’ நான் எதையோ இழந்துக் கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை……

    அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று  சொன்னார்,நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். ”நான் துபாய்க்கு போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

    டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில்,என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களை போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப்  பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசுக்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவனை பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

    எனக்கு கண்கள் மீதும் இருட்டியது. நான் அப்போதுதான்  ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்குள் என் பன்னிரெண்டாம்  வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது.

    “மாதம் ஒரு முறை நீங்க வந்து  பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்த தாளில். அப்பா உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்.

    “அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்து சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை.  திடீரென்று அங்கு அமைதி குடிகொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுகொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா.நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

    “என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத
    சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றிவைக்கப்பட்டு
    விடுகிறது.பரந்த இவ்வுலகத்தில்
    சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருக்கிறது…

    கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும்  மலர்ந்திருந்தது. அப்பாவின்  மீது பாசம் கூடிவிட்டது  எனவும் சொல்லலாம். அன்று  முழுக்க பல இடங்களுக்கு  அழைத்துச் சென்றார். எதிலும்  எனக்கு நாட்டமில்லை. என்  கவனம் முழுக்க அப்பா  வாங்கி தந்த அந்த பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது..

    ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால்  எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையை கோதியவாறே  சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

    அப்பா எதைக்  கெட்டதென்கிறார்….! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்கங்களை கேள்விக் கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே  பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு  ஒத்து வாழ் என்பதே அப்பா  சொல்ல வந்தது.

    போவதற்கு  முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை  வல்லரசாக்குவதைப் பற்றியா  பேசியிருக்கப் போகிறார்கள் ! என்னை பற்றித்தான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை  இரண்டு முறை திரும்பிப் பார்த்தது  எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறுக்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

    அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை  என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்க்கு புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்……

    ஆனால் கல்லூரி  வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின்  சகவாசமேயின்றி பள்ளிப்  படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு  கூச்ச சுபாவம் குடிகொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்த பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிற சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்த பெண்களின் ஆடைகளை பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கித்தான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

    கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

    “நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறிமாலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

    “இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனை கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்து கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளை தொலைக்கும் பணியினை நான் செவ்வென செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

    பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான  மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து
    கைக்குட்டைகள் வாங்கிடுவேன்.
    ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன் ….

    அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,
    ” நீ வேணும்னே தான்  தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.
    நானும் அன்று பல்லை
    இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம். பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது.

    ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்தும்போது காரணங்கள்  நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள்  எனக்குப் பிடிக்கும். அது எனக்கு பிடிக்கும் என்பது என்னை  சூழ்ந்தோருக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு  காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அதை நான் ஏன் வைத்துக் கொள்ளகூடாது என்பதற்கு  இச்சமுகம் காரணம் சொல்ல  முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த  வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னை பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திட திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன !

    சம்பாதிக்க  தொடங்கிய,பின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில்  சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.
    “சார்! இது உங்களுக்கா !” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.
    “இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான் !” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.
    “ஓ! மாறி போச்சா…வேற எடுத்திட்டு வரேன் “என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன்.
    நான் நினைத்திருந்தால்,அது எனக்கு தான் என்று தைரியமாக சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன் !

    பெண்மையை போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில்  பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக்  கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே   தவறோ ! ஆண்மை பெண்மை என பாகுபாடுகள் எவ்வாறு வந்தது. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார் ! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்  ! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது ! ஆண்மைக்கான அடையாளம் எது ! அடையாளங்களை அடையாளப்படுத்த யாரால் முடியும். !
    தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களை துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமுக உரிமை சார்ந்த விடயமாயிற்றே ! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையை துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மை துறப்பதெனில் ஆண்மையை தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ !

    பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள் (ஆண்கள்) பெண்மையை, அது யாரிடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது ! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள் ! அவவாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படமால் அகற்றப் படும்போது, எல்லாரும் உணவற்ற ஒரே ஜடநிலையை தானே அடைகிறோம் ! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே . !

    அப்படியெனில்  எல்லோரும் ஜடமா ! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே ! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடுவருகிறது ! மெல்லிய குணம் பெண்மை, முரட்டு குணம் ஆண்மை என்கிறார்களா ! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில்-தாய் மண் சமுதாயத்தில்  வேட்டையாடியது பெண்கள்தானே ! அவ்வாறெனில் அவர்கெல்லாம் ஆண்களா ! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியமாக இருக்க முடியும்? நியாமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாகப் புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைபட்டு போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்துவிடுகிறது. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறது. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது ? சேலைகளை சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளை பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே ! இதற்க்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது !

    இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாக பெண்கள் உடை விற்கும் கடைகளுக்கு சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்த குரல் கேட்டு திரும்பினேன்.
    “அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க ” இனிமையான அந்த குரலுக்கு சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவையை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்பத்தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம்.என் மனைவியாயிற்றே !

    “உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது.

    பல முறை யோசித்திருக்கிறேன், அவளின் கரங்களை பற்றி என்னைப் பற்றின உண்மைகளை சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சி என்னைத் தடுத்திடும்.

    பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

    “ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்”

    “ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல ! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிற புடவையையும் வாங்கிக் கொண்டாள்…

    என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என்  தமக்கையின் குடும்பதோடு  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால  ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன் ! மாற்றிக் கொள்வதற்க்கு…

    என் மனைவியை  பொறுத்த வரையில் நான் ஒரு  உன்னதமான கணவன்.  ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது.என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுதிக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியாமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை.அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்….

    இன்னும் சொல்வதற்க்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக. அப்படியென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காக புடவை வாங்கப் போகிறேனென்று…

    Share
  • உங்களுக்கும் வியர்க்கிறதா

     

    தமிழ்த்தேனீ –              

    தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
    2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

    3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

    4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

    தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

    ” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

    இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

    அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

    ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

    யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

    “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “    என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

    அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

    ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     

    1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்,

    அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

    இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

    எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

    பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

    இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்

    ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

    வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

     

    Share
  • இசைக்க மறந்த வீணை

      

    பொன்-ராம்    

     

    சன்னலோரத்து ரோஜா தலையை ஆட்டியபடி, கண்ணாடிக் கதவைத் தன் இதழ்வாயால் முத்தமிட்டுத் திறக்க முயற்சித்தபடி இருந்ததைக்கண்ட சிவா, “அப்பா! சூரியவெளிச்சம்  செடிக்குத் தேவை தானே! ஏன் கதவைச் சாத்தியிருக்கு? எனக் கேட்க,

     

    ஓவரா வெயில்பட்டா செடி வாடிப் போயிடும்பா, அந்த வெள்ளை ரோஜாவைப் பாத்தியா, ஓரத்தில பிங்க் நிறம் வச்சமாதிரி அதுக்கு பார்டர் வேற,  ஏம்பா நீதான் கதை எழுதறேன்னு உக்காண்டுருக்கியே, எழுந்து தண்ணீ ஊத்தறது, கதவைத் திறந்து வைக்கறது, ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலைல இருக்கோம்னு பொழுதன்னிக்கும் சிஸ்டத்தோட மல்லடிச்சிண்டு இருக்க, நீ காதுல பாட்டுக் கேட்க வயர் வயரா போட்டுக்கற,! ஆனா வாட்ச் கூட கட்டறதுல்ல. கேட்டா டிஸ்டர்ப்புங்கற.  ஏதோ இப்பதான் கொஞ்சம் நான் சொல்றேன்னு உனக்குப் பிடிச்ச லைனுக்கு வந்துண்டிருக்க.

     

      அப்பா இந்தக்காலத்து இளைஞர்களைப் பத்தி நீங்க இன்னும் புரிஞ்சுக்கலப்பா,     என்ன புரிஞ்சுக்கல?      அதோ பாருங்க பஸ் போயிண்டிருக்கு, ரோடு ஃபுல்லா தூசி பறக்குது, ரோடு போடறதா சொல்லி நாலு மாசம் ஆகுது. அங்கங்க பள்ளம், இன்னமும் யாரும் அதைச்  சரி செஞ்சமாதிரி தெரியல.

     

    பக்கத்துல டாஸ்மாக், விழுந்தான்னா அவன் வீட்டு கதி,   மழைக்காலமும் நெருங்கிடுச்சு, பக்கத்தாத்து சமையல்வேலை செய்யற மாமி பையன் இப்பத்தாம்பா வந்துசொல்லிட்டுப்போனான் அவன் இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டலையாம்.

     

     உனக்கென்ன அதைப்பத்தி,     நீ தான் ஃபாரின் போய் கை நிறைய சம்பாதிக்கப் போற,   அப்புறம் என்ன உனக்கு அதைப்பத்தியெல்லாம் என்ன கவலை?       படிச்ச படிச்சதுக்குத் தகுந்த  வேலை கிடைச்சுது.  ஃபாரின் சான்ஸ் வந்தா  கிளம்பு. அதானே இந்தக் காலத்துப் பசங்களுக்கு கார்ல போகணும்.  வேணுங்கறத வாங்கணும், நிக்க ஒரு இடம், படுக்க ஒரு இடம், உட்கார ஒரு இடம், உலகம் ஃபுல்லா சுத்தி வரணும். சனி, ஞாயிறுன்னா ஃப்ரெண்ட்ஸ் இதானே உங்க எய்ம்?

     

    நிறையபேர் அப்படித்தாம்பா நினைச்சுண்டிருக்கா. நான் என்ன சொல்ல வர்றேன்னா.       நம்ம அப்புறமா பேசலாம், ”வா! கோயிலுக்குப் போகலாம்.சரி அப்படியே அம்மா படத்துக்கு அந்த ரோஜாவைப் பறிச்சு வச்சுட்டு வாப்பா.     அப்பா உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா,

     

     ஏம்பா! நீங்க அம்மா இறந்ததுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலை.    மௌனமாக சுவரில் தொங்கியிருந்த தன் மனைவியின் படத்திலிருந்த கண்களை உற்றுநோக்கினார் அரவிந்த்.

     

     பூமியில பிறந்த மனிதர்கள் எல்லாம் அவங்க குழந்தைகள்னு நினைச்சுத்தாம்பா கடவுள் படைச்சாரு. நாம நம்ம கல்வி கத்துக்கறது, நம்ம பேரண்ட்ஸ், நமக்கு வழி காட்டின பெரியவங்க இவங்கள முன்னுதாரணமா வச்சுத்தாம்பா வாழறோம்,  என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா, அம்மா, நமக்குக் கிடைத்த லைஃப் பார்ட்னர் எல்லாமே ஒரே ஒருத்தர் தாம்பா, பிடிச்சா வேற சட்டைய மாத்தியோ, வெரைட்டி ஃபுட் சாப்புடற மாதிரியோ இஷ்டத்துக்கும் இந்த உறவு முறையை மாத்திக்க முடியாதுப்பா.

     

     வாழ்க்கைன்னா நெளிவு சுளிவுன்னு இருக்கத்தான் செய்யும்.    அதுக்காக இஷ்டத்துக்கு வாழறது இல்லை வாழ்க்கை. இதாம்பா நா உங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையில அனுபவிச்சு தெரிஞசுக்கிட்டது.  அதுக்காக நம்ம வசதியான லைஃபை நாம தொலைக்கணுமா?  பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தார் அரவிந்த்.  அப்துல்லா வாடா எப்ப வந்தே?  ஆச்சு   சன்னலோரத்து ரோஜாவுல ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.

     

    ஏண்டா வந்தவுடனே உள்ள வர்றதுக்கு என்னடா,   வாசப்படியிலேயே நின்னுண்ட,  அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் யார்.     நான் கேக்க நினைச்சு மௌனமாகிப் போனதை உம் பையன் கேக்கறானே? நீ என்ன சொல்றன்னு பார்ப்போம்னு தான் வெயிட்  பண்ணினேன்.என்றார் அப்துல்லா.

    ஆமா என்ன கேட்ட, மனைவி இல்லாம இருக்கறத சொல்றியா,  இதோ இந்த படம் வெறும் உயிரற்ற ஜடமா வேணும்னா பாக்கறவங்க கண்ணுக்குத் தெரியலாம்,ஆனா  சில உறவுகளைப் பற்றி வெளியே பேசலாம்.ஆனா தாம்பத்ய துணை அப்படியில்லைன்னு நினைக்கிறேன், மௌனமானார் அரவிந்த்.

     

    பதில ரொம்ப கரெக்டா சொல்லிட்ட  என்றார் மேரி கொண்டுவந்த காப்பியை உறிஞ்சியபடி.  அவிக எப்பயுமே இப்பிடித்தான், நானும் இந்தப் பையன் மூணு வயசு இருக்கறப்பதான் இங்கு தோட்ட வேலைக்கு வந்தேன், உங்கப்பா தான் வீட்டு வேலை அத்தனையும்,  இதோ தம்பிக்கும் கல்யாண வயசு வந்தாச்சு.

     

    மேரி பாட்டி, சும்மா கல்யாணம்னு இப்பவே பேசாதீங்கோ,  எனக்குன்னு இன்னமும் சில கடமைகள் இருக்கு,   என்ன  செய்யப் போற?      நான் இங்க வந்ததே அதுக்குத்தான், நல்ல அலயன்ஸ் ஒண்ணு வந்துருக்கு,   உனக்கேத்த நல்ல குணம். உன் படிப்பு, அழகு, உன் கொள்கை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு எடுத்துட்டு வந்துருக்கேன். சாதகத்தோட   முடிச்சிட்டு ஸ்டேட்ஸ்க்குப் போயிடு“ என்றார் அப்துல்லா.

     

    அங்கிள்   நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க,   சாதகம்   அது இதுன்னு,  செல்ஃபோனில் ஒலித்த குறையொன்றுமில்லை, பாடலை நிதானமாக இரசித்த சிவா, ஹலோ என்றான்.  கிடைச்சா வாங்கிடு,  உன் ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்?

     

    நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என் கொள்கையும், உன் கொள்கையுமே என்னைக்குமே ஒண்ணு தான் நிவி.     இசைக்க மறந்த வீணையாய் பெட்டிக்குள்ள இருக்கறத நான் விரும்பல நிவி.   ரி  அப்புறம் பேசறேன்.   அங்கிள் வந்திருக்கார் பேசுறியா, சரி வைக்கிறேன்,    என் ஃப்ரெண்டுப்பா, உங்களுக்கும் தெரியும்.  நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே நிவின்னு. அவதான் பண்ணா, அப்பறமா சொல்றன்பா அதப்பத்தி.

     

    அவளா, சரிப்பா, சரி எங்க விட்டோம், முடிவா  என்ன சொல்ற,   அப்பா 5  ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவுல டிராவல் பண்ணா தஞ்சாவூர்ல டிக்கட் தர்றவனுக்கும், சென்னைல கடைல குடை வாங்கினாகூட பில் தராம இருக்கறவன் மனசும் வேறயா இருக்கறதுப்பா.இடமும் வேறயா இருக்கறதுப்பா. மனசு அது போலத்தாம்பா சில நேரங்கள்ல ரொம்ப கனமாயிடுதுப்பா.

     

    பச்சை சாயத்துல தோச்செடுத்த வெள்ளை ரோஜா மாதிரி, இன்னைக்கு நாங்களும் தப்பா உங்க பார்வைல நிக்கறோம்,  நீங்க பணத்தை பிள்ளைங்க கிட்ட எதிர்பார்க்கறதில்ல,  உங்க சொந்தம், உங்க ஊர்,பெருமையா பிள்ளை ஸ்டேட்ஸ்ல இருக்கான், அப்படின்னு சொல்லிக்க மட்டும்தான் நினைக்கிறீங்க, சோஷியல் சர்வீசும் செய்யறீங்க,

     

    சில பேர் இருக்காங்கப்பா, கஷ்டப்பட்டுட்டேதாம்பா இருப்பாங்க, கடைசிவரை பிள்ளைங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு.  அவங்க ஐடியா என்னன்னே தெரியலப்பா,   வெளிநாட்டுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதுன்னு போறோம். விவேகானந்தரையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” புறநானூறையும் நினைச்சுத்தாம்பா வாழணும்னு நினைக்கிறோம்.   அதுக்காக குடும்ப ஸ்டைல மாத்திக்க மாட்டோம்.

     

    இப்படித்தான் சொல்லுவீங்க, அப்பறம் உலக அழகி மாதிரி வேணும்பீங்க. சிரித்தார் அப்துல்லா.  நோ நோ  இட்ஸ் இம்பாஸிபிள்,  .உங்க லைஃப் ஸ்டைல்தாம்பா கரெக்ட். உலகெங்கும் இந்த லைஃப் ஸ்டைல் வரக்கூடாதா? அப்படின்னு நாங்க நினைக்காத நாளில்லை.

     

    இதெல்லாம் இந்தக்காலத்துக்கு சரிப்படுமா, தம்பி ” என்றாள் மேரி. ஏன் சரிப்படாது பாட்டி? எங்களால் முடிஞ்சவரைக்கும் செய்யறோம். அங்கங்க சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நாங்கள்லாம் இடம் வாங்கறோம்னு சொல்றீங்கள்ல. நீங்க உங்க அளவுல சோஷியல் சர்வீஸ் செய்யறத நாங்க உலகளவுல செய்யத்தான் பாடுபடறோம். இவ்வளவு செஞ்சும் அங்க பாருங்க, நாய்க்குப் பிஸ்கட் வாங்கிப் போடும் அந்தப் பிச்சைக்காரப்பாட்டியை.

     

    மாமரத்தில் ஒற்றைக்குயிலொன்று சடசடவென்று கூட்டமாகப் பறக்கும் வெள்ளைப்புறாக்களைத் துரத்தியதைக்   கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓரமாக இருந்த ஊன்றுகோலைத் தன் தோளுக்கு இடையில்  கொடுத்தபடி ரோஜாவைப் பறிக்க கட்டைக்கால்கள் சப்திக்க வேகமாக நடந்தான் சிவா.

     

    நடந்து கொண்டேகொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேம்பா,   கட்டு கட்டா பண மூட்டையை டாய்லெட்ல யாரோ வச்சுட்டு போய்ட்டாங்களாம். கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல,   என .ஃபோட்டோவில் தெரசா சிரித்தபடி இருந்ததைப் பார்த்தபடி பேசினான்.

     

    மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்த ஆளில்லைங்கறபோது அந்தப் பணத்தை வைக்கிற இடம் எதுன்னு பாத்தீங்களாப்பா   என்றான் சிவா.   பறித்த ரோஜாவை உள்ளங்கையில் வைத்து அதன்  வெள்ளை வண்ணத்தைப் பார்த்தபடி மௌனமானான்.

     

     எங்கோ துல்லியமான வீணையின் ஒலி கேட்க, அப்துல்லா வா! பக்கத்துல கௌரி ஆசிரமத்துல சில்ட்ரன்ஸ்டே செலிப்ரேஷன் இருக்கு,  அதுக்கு ஏதோ ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்றான்னு நினைக்கிறேன்,  ஆறு நாள்ல தீபாவளி வேற,   அதுக்கு வேற நிறைய வேலை கிடக்கு.    மகனே வா கோயிலுக்குப் போய்ட்டு   அவரவர் வேலையைப் பார்க்கலாம்”என்றார் அரவிந்த்.

     

    வீணை இசை நல்லாயிருக்குப்பா… பெட்டிக்குள்ளே இருந்திருந்தா இதெல்லாம் கேட்க முடியுமா? என்றார் அப்துல்லா. அதை அங்கீகரிப்பதுபோல் மௌனமாக சிவாவின் தோளைத் தட்டினார் அரவிந்த்.      

        

    டீபாயின் மேலிருந்த புத்தருடைய சிலையில் வைத்திருந்த பூ காற்றில் ஆடியபடி மௌனமாகச் சிரித்தது.

     

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை

     

    இன்னம்பூரான்

    4. தகைமை மூன்று

    தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
    இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
    நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
    மேன்முறை யாளர் தொழில்.

    4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம்.

    4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘…சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே…’ (7-7-3)   என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘… இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே   வழக்கில்   இருந்தன…’ என்றும் எழுதியுள்ளார்.

    5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. ‘இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    07 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    தி.வே. கோபாலையர்:http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=5

     

    சித்திரத்திற்கு நன்றி:

    http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-23/namu1.jpg

     

    Share
  • உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்கத் தேர்தல்!

     

    பவள சங்கரி

    தலையங்கம்


    அனைத்துலகும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா மற்றும் மிட் ராம்னி என் இரு பெரும் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஜனநாயக விழா, பல ஆயிரம் கோடி (5500 டாலர்) செலவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் நிலையான முடிவுகள் என்று சில உண்டு. இந்தியாவுடனான தொடர்புகள் தொடரப்போவதில் சந்தேகம் இல்லை. சீனாவுடனான வணிகத் தொடர்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். பாகிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தாலும் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு, போன்றவைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். வெற்றிகரமான தொழில் அதிபரா அல்லது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அதிபரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்னும் 48 மணி நேரத்தில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். பணக்காரத் தத்துவம் நிறைந்த , சிறந்த தொழிலதிபரான மிட் ராம்னி தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்வந்தரின் நலனுக்காக மட்டுமே முடிவெடுத்து, செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தொழிலகங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்க முதலாளித்துவ தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதாகவே அமையும். அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏழை மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் வாய்ப்பு அதிகம்.  புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏழை மக்களின் கண்ணீர் துடைப்புகளுக்கான நம்பிக்கை அதிகரிக்கலாம். ஏழை மக்களின் கண்ணீரா அல்லது செல்வந்தரின் பாதுகாக்கப்படும் செல்வமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.bbc.co.uk/news/world-us-canada-20180630

     

    Share
  • பிழைத்திட…

     

     செண்பக ஜெகதீசன்

    பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
    பலி கேட்கிறது சட்டம்,
    பள்ளிச்சிறுமியின் உயிரை..

    சட்டத்தின் ஓட்டை அடைத்திட
    முயன்றால்,
    சாவு எத்தனையோ..

    அட,
    அதுமட்டும் நடக்காது-
    அதை வைத்துத்தானே
    ஆட்சியாளர்கள் மற்றும்
    பலரது பிழைப்பே…!

    படத்துக்கு நன்றி

    http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece

               

    Share
  • திருத்தப்பட்ட தீர்ப்புகள்

     

    முகில் தினகரன்

    பிரசவ வார்டின் முன்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும்…களேபரங்களும் சீஃப் டாக்டர்  நந்தினி வர சட்டென்று அடங்கிப் போயின.

    “என்ன…என்ன இங்க சத்தம்?…இதென்ன பிரசவ வார்டா இல்ல மீன் கடையா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள்.

    “டாக்டா;…ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட் ஆகியிருக்கு, இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க..”

    “இருக்கட்டும்…அதுக்காக சத்தம் எதுக்குப் போடணும்?”

    “இல்ல டாக்டா;…அந்தப் பொண்ணு…சொன்ன பேச்சுக் கேட்காம இந்த நிலைல டூவீலர் ஓட்டிப் பழகப் போயி கீழ விழுந்திருக்கு…வயத்துல எக்கச்சக்கமா அடிபட்டிருக்கு… அதான் சொந்தக்காரங்கெல்லாம் …அதோட புருஷன் உட்பட அந்தப் பொண்ணைத் திட்டித் தீர்த்துட்டிருக்காங்க”

    “வாட் நான்சென்ஸ்?..எதுக்கு அந்தப் பொண்ணைத் திட்டணும்?…அவளைத் திட்டிட்டா எல்லாம் சரியாய்டுமா?…இந்தக் கூட்டத்துல அந்தப் பொண்ணோட புருஷன் யாரு காட்டு… நான் கேட்கறேன்..” சீஃப் டாக்டர் நந்தினி கடுப்பாகி நோக்க,

    சற்று மாநிறமாய்…அகன்ற முகத்துடன்…குள்ளமாய்…குண்டாய் இருந்த ஒருவனை நர்ஸ் முன்னுக்கு அழைத்தாள்.

    வந்தவனிடம் பேச சீஃப் டாக்டர் நந்தினி வாயெடுக்கும் முன் அவனே முந்திக் கொண்டு,

    “த பாரு டாக்டர்…நானும் எங்காத்தாவும் இந்தச் சனியன் புடிச்சவகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னோம்… “வாயும் வயிறுமாய் இருக்கறே..வண்டிய எடுக்காதே”ன்னு…கேட்டாளா?…இப்ப வந்திடுச்சல்ல…கேடு வந்திடுச்சல்ல?…அதான் சொல்லிப் போட்டோம்.. அதோட வயத்துல இருக்கறது எங்க வம்சத்தோட வாரிசு… அதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருக்கட்டும்… மவளே.. அப்புறம் கவனிச்சுக்கறோம் அவளை…”

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கலே….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்… ”மாமியார்க்காரி போல் தெரிந்த ஒருத்தி சாமியாடினாள்.

    டென்ஷனாகிப் போன சீஃப் டாக்டர் நந்தினி, “இங்க பாருங்க…இதெல்லாம் எதிர்பாராம நடக்கற விபத்துக்கள்…யாரும் வேணுமின்னு எதுவும் செய்யறதில்லை…”

    “நீ…என்ன வேணா சொல்லு டாக்டரம்மா..எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை… இங்க நடக்கறதே வேற…”

    சொல்லித் திருத்த முடியாத இந்த ஜென்மங்களிடம் தொடர்ந்து பேசுவதில் சிறிதும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த சீஃப் டாக்டா; பிரசவ அறையை நோக்கி வேகவேகமாக நடக்க,

    கத்தல்களும்… களேபரங்களும் மறுபடியம் மெல்லமாய்த் தலை தூக்க ஆரம்பித்தன.

    பிரசவ அறை.

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகப் போராடிய சீஃப் டாக்டர் நந்தினியால் பெரிய உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கல….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்…” என்ற மாமியாரின் மிரட்டலும்

    “எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை…இங்க நடக்கறதே வேற…” என்ற புருஷனின் அதட்டலும்,  சீஃப் டாக்டா; நந்தினியின் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, குழம்பிப் போனார்.

    “இப்ப என்ன செய்யறது…எப்படி சமாளிக்கறது…இந்தச் சூழ்நிலைல வெளிய நிக்கற கூட்டத்துக்கு தகவல் தெரிஞ்சுது அவ்வளவுதான்…இந்தப் பொண்ணோட கதி அதோ கதிதான்”

    “டாக்டா;…இப்ப என்ன பண்றது?” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா கேட்க,

    நெற்றியைத் தடவிக் கொண்டு யோசித்த சீஃப் டாக்டா; நந்தினி, திடிரென ஒரு முடிவுக்கு வந்தவராய் “கரெக்ட்…அதுதான் ஒரே வழி” எனத் தனக்குள் சொல்லிக் கொள்ள,

    “டாக்டா;…?”

    “ம்ம்ம்…மிஸ்.விமலா..ஆறாவது வார்டுல இன்னிக்குக் காலைல ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆச்சே..பெண் குழந்தை பிறந்ததே?…,”

    “ஆமாம் டாக்டர்”

    “அந்தப் பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்தாச்சா?”

    “இல்ல டாக்டா;…இன்னும் தெளியலை” என்ற அசிஸ்டெண்ட் சர்ஜன் “ஏன் டாக்டர்?..எதுக்குக் கேட்கறீங்க?”

    “அந்தப் பொண்ணு நேத்திக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் வெச்சுது”

    “என்ன வேண்டுகோள் டாக்டர;?”

    “ஏற்கனவே அவளுக்கு மூணு பெண் குழந்தைகளாம்..நாலாவதா ஒண்ணு போன வருஷம் பொறந்திச்சாம்… அதுவும் பொண்ணாப் போயிட்டதால அவளோட புருஷனும் மாமியார்காரியும் சேர்ந்து அந்தப் பெண் குழந்தையை கள்ளிப் பாலுக்கு பலியாக்கிட்டாங்களாம்… இப்ப ஐந்தாவதா பொறக்கப் போறதும் ஒரு வேளை பொண்ணாயிருந்திட்டா அவ மயக்கம் தெளியறதுக்கு முன்னாடியே அதை நான் அழிச்சிடனுமாம்… இல்லென்னா எங்காவது கொண்டு போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்துடனுமாம், ஏன்னா… எப்படியும் வீட்டுக்குப் போனதும் அவ புருஷனும் மாமியாரும் அந்தக் குழந்தையைக் கொல்லத்தான் போறாங்களாம்.. ஹூம்…ஒரு டாக்டரான நான் உயிர்களை காப்பாற்ற மட்டுமே செய்வேன் எந்தச் சூழ்நிலையிலும் அதை அழிக்க முற்பட மாட்டேன்னு பாவம் அந்தப் பொண்ணுக்குத் தெரியலை”

    “டாக்டர் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

    “அந்தப் பெண் மயக்கம் தெளியறதுக்கு முன்னாடி அந்தக் குழந்தையை எடுத்திட்டு வந்து இங்க போட்டுடு…அதே மாதிரி இறந்து பிறந்த இந்தக் குழந்தையைக் கொண்டு போய் அங்க போட்டுடு”

    “டாக்டா;…..”

    “யோசிக்கவே வேண்டாம்…எப்படியும் அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போனதும் கள்ளிப் பாலுக்கு இரையாகத்தான் போகின்றது.. எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாத அந்த ஜென்மங்க கிட்டயிருந்து இந்தப் பெண் குழந்தையைக் காப்பாத்த ஒரே வழி இதுதான்”

    “டாக்டர் …நீங்க சொல்றதெல்லாம் சரிதான்…ஆனாலும்…இது…”

    “மிஸ்.விமலா அப்படியே இந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்க… “குழந்தை மட்டும் செத்துப் பிறக்கட்டும் உன்னையக் கவனிச்சுக்கறேன்”னு கட்டினவனும் அவளோட உறவுக்காரங்களும் குமுறிக்கிட்டிருக்கற இந்த நெலைல நாம போய் “குழந்தை இறந்துதான் பிறந்தது”ன்னு சொன்னா என்ன நடக்கும்?….யோசிச்சுப் பாரு”

    “அய்யோ டாக்டர், அந்தக் கும்பல் அந்தப் பொண்ணை இங்கியெ வெச்சுக் கொன்னாலும் கொன்னு போட்டுடுவாங்க” சொல்லும் போதே அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலாவின் உடல் லேசாக நடுங்கியது.

    “புரியதா?…இப்பப் புரியதா..நான் ஏன் அப்படிச் செய்யச் சொன்னேன்னு?”

    “இருந்தாலும் டாக்டர், இது தப்பில்லையா?”

    “மிஸ்.விமலா…ஆண்டவன் சில சமயம் சில தவறுகளை செய்து விடுகிறான்…அதாவது வேண்டாம்னு நெனைக்கறவங்களுக்கே திரும்பத் திரும்ப நிறையக் குடுக்கறான்…அதே சமயம் “வேணும்…வேணும்”னு  ஏங்கறவங்களுக்கு ‘இல்லை’ன்னு ‘பொசுக்’குன்னு கையை விரிச்சிடறான்…அதான் ஆண்டவனோட இந்தச் சிறிய தவறை நான் திருத்தறேன்… அவ்வளவுதான்… நான் செய்யற இந்தச் செயலினாலே ஒரு குழந்தை இந்த உலகத்துல உயிரோட இருக்கும்…ஒரு தாய் இந்த உலகத்துல சந்தோஷமா வாழ்வா…அது போதும்மா எனக்கு…”

    அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா பதிலேதும் பேசாது அமைதி காக்க,

    “என்னடா இது…அதிகப் பிரசங்கித்தனமா ஆண்டவனையே திருத்தறேன்னு சொல்றாளே அப்படின்னு நீ நினைக்கறது எனக்குப் புரியது மிஸ்.விமலா…அதே நேரம் நீயும் ஒண்ணைப் புரிஞ்சுக்கோ டாக்டர்களுக்கு ஆண்டவனைத் திருத்தற அந்த உரிமை இருக்கு! ஏன்னா… அவங்க ஆண்டவனோட பிரதிநிதிகள்”

    நெகிழ்ந்து போய் சீஃப் டாக்டர் நந்தினியை தலையாட்டலில் பாராட்டிய அந்த அசிஸ்டெண்ட் சர்ஜன் அவர; இட்ட கட்டளையை படு நாசூக்காக யாருக்கும் சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் செய்து முடித்தாள்.

    ஆறாவது வார்டில்

    “இன்னாது…பொட்டக் கொளந்த செத்துப் பொறந்திச்சா?..ரொம்ப சந்தோஷம்..நமக்கு வேலை மிச்சம்” கல் மனசுக் கணவன் கரகரத்த குரலில் சொல்ல, அவன் தாய் முக மலர்ச்சியுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.

    அதே நேரம்….பிரசவ வார்டில்…

    “எப்படியோ டாக்டர் எங்க வம்ச வாரிச…மகாலட்சுமிய…உசுரோட பொறக்க வெச்சுக் குடுத்துட்டீங்க… நீங்க நல்லா இருக்கோணும்” புருஷன்காரன் சீஃப் டாக்டர்; நந்தினியைக் கும்பிட,

    அவன் அம்மாக்காரி மருமகளின் தலையைத் தடவிக் குடுத்தபடி சொன்னாள் “பின்னே…எப்பேர்ப்பட்ட வம்சத்துல வந்து உதிச்சிருக்கற குழந்தை இது…இந்த மாதிரியான சின்னச் சின்ன விபத்துக்கெல்லாம் செத்துடுமா என்ன?”

     

    Share
  • பனங்காய் சுமக்கும் குருவி

     

     சு. கோதண்டராமன்

    சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்

    அடுத்த வீட்டுக்காரி முந்திக்கிட்டான்னா,

    நம்ம பூ விக்காது.

    எல்லாப் பூவும் வித்து,

    பூக்காரருக்குக் கணக்குத் தீர்த்து,

    அரிசி வாங்கியாந்து,

    சோறாக்கணும்.

    நேரமாச்சுன்னா,

    அப்பா குடிச்சிட்டு வந்து,

    அம்மாவை அடிக்கும்.

    இனியும் அடிவாங்கினா,

    அம்மா செத்துடும்.

    சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும். 

     

    படத்துக்கு நன்றி

     

    http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1194193


    Share
  • he Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors

    பிரபு

    பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.

    அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy (www.amazon.com/dp/B009XUI1X6)

    பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

    பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.

    முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது,  சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் – அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.

    பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.

    உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.

    அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது.

    இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.

    அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

    குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.

    The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors என்ற இந்தப் புத்தகம் அச்சு வடிவில் வெளிவரவில்லை. அமேசான்.காமில் (www.amazon.com/dp/B009XUI1X6) மின் புத்தகமாக வாங்கிக் கொள்ள்ளலாம். வாங்கிய பின் Kindle ரீடர் இருந்தால் அதன் மூலம் வாசிக்கலாம். இல்லையென்றால் Kindle for PC  என்ற இலவச சாஃப்ட்வேரை http://www.amazon.com/gp/feature.html/ref=sv_kstore_1?ie=UTF8&docId=1000493771 இல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கொண்டு நமது கம்ப்யூட்டரிலேயே வாசிக்கலாம்.

    மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.
    ****

    Share
  • தனக்கொரு நியாயம்

     

    விசாகை மனோகரன்

    திவாகர் ஆபீஸ் வந்து, சீட்டில் அமர்ந்தான். பக்கத்து சீட்டில் இருக்கும் அவன் நண்பன் சதீஷ் இன்னும் வரவில்லை. வந்துவிடுவான். ஏதாவது டிராபிக் ஜாமாயிருக்கும். சிங்காரச் சென்னையில் அதற்க்குத்தான் பஞ்சமேயில்லையே. பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரே நாளில் இந்த பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். நல்ல நண்பர்கள். அதோ சதீஷ் வந்துவிட்டான்.

    வாடா, ஏன் லேட்டு? டிராபிக் ஜாமா?

    ஆமாண்டா. எலெக்டிரிக்  டிரெய்ன்ல ஏறமுடியல கூட்டம், பஸ்ல வந்தேன்.

    ஏண்டா இன்னிக்கு தெரியுமா நம்ம சம்பள உயர்வு பத்தி?

    ஆமாம். என்ன பண்ணப்போறாங்களோ!

    எப்படியும்  மாசம் ஒரு 5000/ உசராது? பாக்கலாம்.

    சுமார் 11மணி  வாக்கில் அவர்களது மேஜையில் வந்து விழுந்தன சம்பள சீட்டுக் கவர். இரண்டு பேரும் ஆவலுடன்  பிரித்தார்கள். சதீஷ் சந்தோஷத்துடன் “திவா, நீ சொன்னமாதிரியே 5000/ ரூபா உசந்திருக்குடா!” திவாகர் பேசவில்லை. பேயறைஞ்ச மாதிரி இருந்தான்.

    திவா, திவா என்னடா?

    ஒண்ணூம் சொல்லாமல் சீட்டை அவனிடம் நீட்டினான் திவாகர். அதில் அவனுக்கு வெறும் 2000/ தான் உயர்வு என்று இருந்தது. என்ன சொல்லவதென்று புரியவில்லை சதீஷ்க்கு. மவுனமாயிருந்தான்.

    திவாகர் சீட்டை எடுத்துக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான்

    சார், என்ன இது? வெறும் 2000/ ரூபா உசந்திருக்கு?

    ஆமாம் திவாகர், நீங்க பன்ற வேலைக்குத் தகுந்த  மாதிரி கம்பெனி கொடுத்திருக்கு.

    எப்படி சார் இது நியாயம்? நானும் சதீஷும் ஒண்ணா சேந்தோம். ஒரே வேலை பாக்கறோம். அவனுக்கு 5000, எனக்கு 2000மா?

    நீங்களும் அவரும் ஒண்ணா சேர்ந்திருக்கலாம், ஆனா ஒரே வேலை பாக்கறோம்னு சொல்லாதீங்க. அவர் டேபிள்ல பாத்தீங்களா? ஒரு ஃபைல் பெண்டிங் இருக்கா? சரி, மாசம் எவ்வளவு லீவ் போடறாரு? நீங்க? போங்க ஸார், போயி வேலைய ஒழுங்கா பாருங்க. அப்பறம் கேளுங்க.

    ஒன்றும் பேசாமல், பேச முடியாமல், சாயங்காலம் வீட்டிற்கு டல்லாக வந்து, உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்து, என்னவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அவன் மனைவி, கல்லூரிக்குச் செல்லும் மகனையும், பள்ளிக்கு செல்லும் மகளையும் அருகில் அழைத்து “அப்பா மூஞ்சி சரியில்ல, ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இரண்டு பேரும் சத்தம் போடாதீங்க” அப்படின்னு சொன்னா.

    கொஞ்ச நேரம்  கழித்து காபியுடன் நுழைந்த அவள்..

    “ஏங்க ஒரு  மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா” ந்னு கேட்டாள்.

    ஆமாம்டி, நான் ஆபீஸ்ல வேலையே செய்யறதில்லையாம், ஃபைல் பெண்டிங் வெக்கறேனாம், லீவ் நிறைய போடறேனாம், அது இதுன்னு சொல்லி என்னைய சதீஷோட கம்பேர் பண்ணி, அவனுக்கு 5000, எனக்கு வெறும் 2000 தான் சமபளம் உயர்வுன்னு சொல்றாங்கடி.

    விடுங்க போகட்டும், ஏன் டென்சன்?

    அதில்ல எனக்கு. அவங்க “உனக்கு இவ்வளவுதான்”னு சொன்னா கூட பரவாயில்ல. அதென்ன இன்னொருத்தன் கூட கம்பேரிசன். அதான் எனக்கு பிடிக்கல.

    விடுங்க. வந்து  சாபிடுங்க வாங்க

    நான் கொஞ்ச  நேரம் கழிச்சு வரேன். நீ பசங்களுக்கு குடு.

    கொஞ்ச நேரம்  கழிச்சு, சாப்பிடப் போனா, பையன்  அம்மாகிட்ட அப்பான்னு ஏதோ சொல்லிக்கிட்டிருந்தான்.

    “ஏம்மா, போன  மாசம் நான் நம்ம பக்கத்து வீட்டு விஷ்ணுவோட ஃபைக் மாதிரி எனக்கும் வாங்கித்தாங்கப்பான்னதுக்கு, அவன மாதிரி நீயும் மார்க் வாங்கிக் காமி, பாக்கலாம்ன்னு கம்பேர் பண்ணினாரே அது கரெக்ட்டு, ஆபீஸ்ல பண்ணினா மட்டும் தப்பா?. இது என்னம்மா தனக்கொரு நியாயம், மத்தவங்களுக்கு வேறயா?”

    எனக்கு சுருக்குன்னு குத்திச்சு. அது கரெக்ட்டுன்னா  இதுவும்….

    சிரிப்பு  வந்தது, அறிவும் வந்தது. நாளைக்கு பையனுக்கு ஃபைக் வாங்கணும்

    எங்கியோ ஒரு பாட்டு கேட்டது..

    “துன்பம் வரும் வேளையில சிரிங்க
    என்று சொல்லிவெச்சான் வள்ளுவரு சரிங்க”.

    Share
  • ரசிகன்

    தமிழ்த்தேனீ

    ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான்.“ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ்.

    “இல்லேப்பா நான் சரியாத்தான் நடந்துக்கறேன். டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும் அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன், நான் ஆஃல்பாபெடிக்லே எழுதியிருந்ததை தலைகீழாக் காமிச்சேன், அப்போ தலைகீழாத் தெரியுமில்லே அதான். அந்த டீச்சருக்குப் புரியலைப்பா, திட்றாங்க” என்றான் ஆகாஷ்.

     “அப்புறம் தமிழ்லே ஒரு பாடம் எழுதச் சொன்னாங்க, அதிலே ஒரு வரிலே “அவள் சென்றாள்” ன்னு எழுதினேன், அதைப் படிச்சிட்டு எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கே. ஆனா இந்த “அவள்“ அப்பிடீங்கிறதுலே மட்டும் தப்பா எழுதி இருக்கே. “அவல்” ன்னு எழுதி இருக்கே, அதுனாலே பெரிய “ள்” போடணும்னாங்க. சரின்னு சொல்லிட்டு ‘அவல்’ன்னு பெரிசா எழுதிக் காட்டினேன் திட்றாங்க” என்றான்.

    பேரனை உச்சி மோந்தபடி, “என் பேரன் கெட்டிக்காரன் நல்லா யோசிக்கறான்” என்றாள் பாக்கியம். “போதும்மா, நீங்க அவனுக்கு ரொம்பச் செல்லம் குடுக்கறீங்க அதான்” என்றான் ரமேஷ். ஆனாலும் மனதுக்குள் இந்தச் சிறு வயதில் ஆகாஷோட புத்திசாலித் தனம் அவனுக்குள் ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது. மகனை ரசித்துக் கொண்டே உணவருந்தினான் ரமேஷ்.

    “பாட்டி, ஒரு கதை சொல்றியா?” அன்பாகக் கேட்டான் பேரன் ஆகாஷ்.   “என்னாலே முடியாது!” என்றாள் பாக்கியம் தீர்மானமான குரலில். உண்டு முடித்துக் கை கழுவித் துடைத்துக் கொண்டே வந்த ரமேஷ், “ஏம்மா? அவன் ஆசையாக் கதை கேக்கறான், ஏன் சொல்ல மாட்டேங்கற? என்றான்.

     “உன் பையனுக்குக் கதை சொல்ல என்னாலே முடியாதுப்பா. நீ சொல்லு, அவன் கேக்கட்டும்” என்றாள் பாக்கியம்.

    “டேய் கண்ணா ஆகாஷ், இங்கே வா” என்று மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “அப்பா நான் சொல்றேன் கதை” என்றான் ரமேஷ். “போப்பா, உனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்றான் ஆகாஷ். அதிர்ந்தான் ரமேஷ். இன்றைக்குத் திரை உலகமே வியந்து பாராட்டும் ஒரு முதன்மை இயக்குனன் அவன். ஆகாஷ் சொன்னது ரமேஷின் தன்மானத்தையே பாதித்து விட்டது. “இல்லைடா கண்ணா, நான் நல்லாக் கதை சொல்லுவேன், இப்போ ஒரு கதை சொல்றேன், நீ கேக்கணும்” என்றான் அதட்டும் குரலில். ஆகாஷ் பயந்து போய் வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்தான்.

     பாக்கியம் நமுட்டுச் சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “ராமாயணம் கதை உனக்குச் சொல்லட்டுமா? ராமரோட பொண்டாட்டி சீதையை ராவணன் தூக்கிண்டு போயிட்டான். அவங்களை எங்கே வெச்சிருக்கான் ராவணன்? அப்பிடீன்னு கண்டு பிடிக்க அனுமாரை அனுப்பினாங்க”

    “போங்கப்பா, இது வரைக்குத்தான் சொல்லிக் கிட்டே இருக்கீங்க, அதுக்கு மேலே சொல்ல மாட்டேங்கறீங்க, அது சரி, உங்களுக்குப் புதுசா எதுவும் கதை சொல்லத் தெரியாதா? எனக்கு இந்தக் கதை வேணாம், உண்மையாக் கதை வேணும்” என்றான் ஆகாஷ்.

     “சரிதான், உனக்குப் பாட்டி ஏன் கதை சொல்ல மாட்டேங்கறாங்கன்னு இப்போ புரியுது. பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். எதுத்துப் பேசக் கூடாது” என்றான் ரமேஷ். “அப்பிடித்தான் கேப்பேன், பாட்டிதான் சொன்னாங்க. சந்தேகம் வந்தாக் கேக்கணும். அப்போத்தான் அறிவு வளரும்ன்னு” என்றான் ஆகாஷ்.

     “ஏம்ப்பா. உன்னோட ரசிகர்கள் உன்னைக் கேள்வி கேக்கறதில்லே? அதே மாதிரிப் பையனும் உன்னைக் கேள்வி கேக்கக் கூடாதுன்னா முடியுமா? ரசிகர்கள் எதிர்க் கேள்வி கேட்டா எப்பேர்ப்பட்ட டைரக்டரும் பதில் சொல்ல முடியாதுப்பா. ஆனாப் பையன் கிட்டே உன் பாச்சா பலிக்காது” என்றாள் பாக்கியம்.    “சரி.. சரி.. நீ பாட்டி கிட்டயே கதை கேட்டுக்கோ” என்றபடி அங்கிருந்து நழுவினான் ரமேஷ்.

     “பாட்டி ஒரு கதை சொல்லு பாட்டி, நான் சமத்தாக் கேக்கறேன்” என்றான் ஆகாஷ். மனமிளகிய பாட்டி பாக்கியம், “சரி உங்க அப்பா சொன்னாரே, அந்தக் கதையைச் சொல்றேன். அனுமார் கதை சொல்றேன் சரியா” என்றாள் ஆர்வமாகக் கதை கேட்க உட்கார்ந்தான் ஆகாஷ்.

     “அனுமார் வானத்திலே பறந்து போயி” என்று ஆரம்பித்தாள் பாட்டி, உடனே “ஆகாஷ் ஏன் அப்போல்லாம் ஏரோப்ளேன் கிடையாதா?” என்றான். “இல்லேடா, அப்போக் கண்டு பிடிக்கலே”

     “சரி, மேலே கேளு. லங்கைக்குப் போனார். அங்கே போயிப் பார்த்தா அந்த நாட்டுலே ஒரு அழகான வனம் இருந்துது, அங்கே போயி இறங்கினார். அவருக்கு மனசுக்குள்ளே ஒரே கோவம். அவர் தெய்வமா நினைக்கிற ஶ்ரீராமனோட பொண்டாட்டி சீதையை ராவணன் கடத்திண்டு வந்துட்டான். அந்தக் கோவத்திலே ஆக்ரோஷமாப் போயிண்டு இருக்கார். அப்போ இந்திரஜித்னு ஒரு ராட்சசன் பிரும்மாஸ்திரம் போட்டு அவரைக் கட்டிப் புட்டான்.”

     “அங்கே இருந்த ராக்‌ஷசா எல்லாம் அனுமாரைக் கேலி செஞ்சுண்டே அவரோட வால்லே நெருப்பு வச்சா” என்றாள் பாக்கியம்.   “ஏன் பாட்டி, உடனே அனுமார் ஃபயர் இஞ்சினுக்குப் போன் போட்டுக் கூப்பிட வேண்டியதுதானே?” என்றான் ஆகாஷ்.

     “இதோ பாரு, எனக்குத் தூக்கம் வருது, நானும் நீயும் தூங்கலாமா” என்றாள் பாக்கியம்.

     

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [4] வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

    இராவணனால் வாலியின் வாலைக் கூட அசைக்கமுடியவில்லை. அத்தனை வலிமை, வாலிக்கு. பாற்கடல் கடைந்த போது தேவாசுரர்கள் களைத்துப் போயினர். ஆபத்துக்கு உதவும் நண்பனாக வந்து அமிர்ததைக் கடைந்த வானரோத்தமன் வாலியை, ஆலகால நஞ்சு போல் முறித்து மாற்றியது, சுக்ரீவனின் வீண்வம்பு அறைகூவல்.  கம்பரின் உயர்வு நவிற்சி அணி எப்படியெல்லாம் வாலியின் பராக்கிரமத்தை வருணித்தது என்பதைப் பார்த்தோம். அதிபராக்கிரமசாலியான வாலியின் இராமபக்தி அபாரம்.

    தாரையின் எச்சரிக்கை உதறித்தள்ளக்கூடியது அல்ல. இளவல் சுக்ரீவனுக்கு பயந்த ஸ்வபாவம். சஞ்சலபுத்தி. அவனொரு அசட்டுப்பிறவி. கிஷ்கிந்தா காண்டத்தில், அவன் சுய அறிவு இழந்தவனாகத் தான் தோற்றம். தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாது, அவனுக்கு. அத்தனை பலவீனம். சந்தேகப்பிராணி. ராமலக்ஷ்மணர்கள் கிஷ்கிந்தையில் நுழைந்ததே அவனுக்கு அச்சம் விளைவித்தது. எளிதில் குழப்பம் அடையும் குணமுண்டு, அவனுக்கு. இராமலக்ஷ்மணர்களை வாலி தான் தன்னைக்கொல்ல அனுப்பினான் என்று அனுமனிடம் புலம்புகிறான். இந்த அசட்டு வானரத்திடம், மிகவும் மரியாதையுடன் தஞ்சம் புகுந்தனர், தசரதனின் மைந்தர்கள். அந்த அசடும், இவர்களின் உன்னத நிலையை அனுமன் சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல், இராமனின் தன்னடக்கமான நட்புரிமை நாடும் சொல்லையும் காதில் போட்டுக்கொள்ளலாம், கைலாகு கொடுத்து, தனக்கு சமானமாக அமரச்சொல்கிறான்! என்னே டாம்பீகம்! நான் வால்மீகி ராமாயணம் பக்கம் போகவில்லை. அங்கும் சுக்ரீவனுக்கு பெத்த பெயரில்லை. இராம லக்ஷ்மணர்கள் அவனிடன் தஞ்சம் புகுந்ததாகத் தான் நான் படித்த உரை கூறுகிறது.

    இப்பேர்ப்பட்ட சுக்ரீவன் வாலியை வம்புக்கு இழுத்தால், அவனுக்கு ஏதோ வலிமை மிகுந்த துணை கிடைத்திருக்கவேண்டும் என்பது – சரி – வெள்ளிடை மலை. அந்த துணை இராமன் என்பதால், எச்சரிக்கையின் தீவிரம் வாலிக்கு புரிந்திருக்க வேண்டும்.

    ‘அன்னது கேட்டவள், ‘அரச! “ஆயவற்கு

    இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,

    உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்” என,

    துன்னிய அன்பினர் சொல்லினார்’ [3964]

    என்றாள். இராமன் வந்தது உன் உயிரை பறிக்கவே’ என்று அவள் தெளிவாகத்தான் எச்சரித்தாள்.  

    (‘…தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது…’ ~ உரை.)

    அந்த எச்சரிக்கையை உதறிவிட்டான், இராமபக்தனான வாலி. ‘…இயல்பு அல இயம்பி என் செய்தாய்?…’ என்ன பேச்சு இது? ‘…பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்’ என்று அவளுக்கு ஈவிரக்கம் காட்டினான், சினம் மிகுந்த கால கட்டத்தில் கூட. இராமனிடம் உள்ள பக்தியால் தான், தாரையை கடிந்து கொண்டான், வாலி.

    உழைத்த வல் இரு

          வினைக்கு ஊறு காண்கிலாது

    அழைத்து அயர் உலகினுக்கு

          அறத்தின் ஆறு எலாம்

    இழைத்தவற்கு, இயல்பு அல

          இயம்பி என் செய்தாய்?

    பிழைத்தனை; பாவி! உன்

          பெண்மையால்’ என்றான். [3965]
        

    இனி அவன் ஶ்ரீராமசந்தர மூர்த்தியின் கீர்த்தியை சொல்வதை கவனியும்.

    1. ‘… அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு…’

    ~ தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த
    இராமபிரான் என்கிறான், வாலி.

    2.’இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ?

    ~ இராமன் குறுகிய நோக்கம் உள்ளவன் அல்ல. இம்மைக்கும், மறுமைக்கும் உரிய பலாபலன்களை சீர்த்தூக்கிப் பார்க்கும் இயல்பு உடையவன். (சுக்ரீவனுடன் கூட்டு சேர்வதால்) அவனுக்கு பயன் யாதும் இல்லை. (என்ன உளறுகிறாய்?) தரணிதனில் வாழும் உயிர்களின் ரக்ஷகனான தருமமே தன்னை அழித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் இராமனின் உன்னத நிலையை தன் புரிந்து கொண்டதைக்கூறி, தாரையை கடிந்து கொள்கிறான்.

    ‘இருமையும் நோக்குறும்

         இயல்பினாற்கு இது

    பெருமையோ? இங்கு இதில்

         பெறுவது என்கொலோ?

    அருமையின் நின்று, உயிர்

         அளிக்கும் ஆறுடைத்

    தருமமே தவிர்க்குமோ

         தன்னைத் தான்அரோ? (3966)

    ‘இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து
    மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன்
    செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே
    உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய
    மாட்டான் என்பதால் ‘தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்’ என்றான்.
    ‘அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்’ (1349) ‘மெய்யற மூர்த்தி வில்லோன்’
    (5882) என்பன காண்க.’ (உரை)

    3. ‘ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்

    மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

    ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

    போற்றலை; இன்னன புகறல்பாலையோ?’ [3967]

    (அடி பேதாய்!) தன்னுடைய மாற்றாந்தாயின் கட்டளைக்கு பணிந்து ராஜ்யபாரத்தை பரதனுக்கு உவகையுடன் தந்துருளிய சான்றோன் இராமனை புகழ்ந்து பாராட்டாமல், நீ அவரை இகழலாமா?)

    ‘பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி’ என்றார் குலசேகரர்.(பெருமாள்திருமொழி-8-5) என்று உரையில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    4. நின்று பேர் உலகு

    எலாம் நெருக்கி நேரினும்,

    வென்றி வெஞ் சிலை

          அலால், பிறிது வேண்டுமோ?

    தன் துணை ஒருவரும்,

          தன்னில் வேறு இலான்,

    புன் தொழில் குரங்கொடு

          புணரும் நட்பனோ? (3968)

    இராமன் நிகற்ற மாவீரன்.  அவனுக்கு தன்னுடையை வில் ஒன்றே போதும், உலகெலாம் திரண்டு வந்து அவனை எதிர்த்தாலும். போய்ம் போயும் இந்த அற்பனாகிய குரங்குடன் அவன் கூட்டு சேர்வானா?

    தம்பியர் அல்லது தனக்கு

          வேறு உயிர்

    இம்பரின் இலது என

          எண்ணி ஏய்ந்தவன்,

    எம்பியும் யானும் உற்று

          எதிர்ந்த போரினில்

    அம்பு இடை தொடுக்குமோ,

          அருளின் ஆழியான்? [3969]

     சகோதர பாசத்தின் அருமையை உணர்ந்தவன் இராமன். கருணைக்கடலான இராமன் தன் சகோதரர்களிடமிருந்து தன்னை பிரித்துப் பார்ப்பதை அறியாதவன். என் தம்பியும் நானும் சண்டை போட்டால், இடையில் புகுந்து என் மீது அம்பு தொடுக்கமாட்டான்.

    ‘தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை
    ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு
    பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற
    நம்பிக்கையில் வாலி ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை
    தொடுக்குமோ’ என்றான். ‘தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்’
    (3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி
    வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி – கருணைக்கடல். இராமனைக்
    ‘கருணைக்கடல்’ (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.’ (உரை)

    வாலியின் அதிபராக்கிரமமும், அவன் பார்க்கடலை கடைந்து தேவாசுரர்களை உய்வித்ததும், ராவணனை நசுக்கியதும், அவனுடைய இராமபக்திக்கு முன் சிறிய விஷயங்கள். அத்தகைய பக்தனை பற்றி இராமன் அறியாமலும் இல்லை. அவனை விட்டு விட்டு, சஞ்சலபுத்தியும், டாம்பீகமும் குடி கொண்டுள்ள சுக்ரீவனிடம் இராமலக்ஷ்மணர்கள் தஞ்சம் புகுந்தது ஏன்?

    பழவினையோ?

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    04 11 2012  

    உசாத்துணை (மூலமும், உரையும்): http://www.tamilvu.org/library/libindex.htm

    Share