“யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [4] வாலி வதைப் படலம்

 

இன்னம்பூரான்

இராவணனால் வாலியின் வாலைக் கூட அசைக்கமுடியவில்லை. அத்தனை வலிமை, வாலிக்கு. பாற்கடல் கடைந்த போது தேவாசுரர்கள் களைத்துப் போயினர். ஆபத்துக்கு உதவும் நண்பனாக வந்து அமிர்ததைக் கடைந்த வானரோத்தமன் வாலியை, ஆலகால நஞ்சு போல் முறித்து மாற்றியது, சுக்ரீவனின் வீண்வம்பு அறைகூவல்.  கம்பரின் உயர்வு நவிற்சி அணி எப்படியெல்லாம் வாலியின் பராக்கிரமத்தை வருணித்தது என்பதைப் பார்த்தோம். அதிபராக்கிரமசாலியான வாலியின் இராமபக்தி அபாரம்.

தாரையின் எச்சரிக்கை உதறித்தள்ளக்கூடியது அல்ல. இளவல் சுக்ரீவனுக்கு பயந்த ஸ்வபாவம். சஞ்சலபுத்தி. அவனொரு அசட்டுப்பிறவி. கிஷ்கிந்தா காண்டத்தில், அவன் சுய அறிவு இழந்தவனாகத் தான் தோற்றம். தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாது, அவனுக்கு. அத்தனை பலவீனம். சந்தேகப்பிராணி. ராமலக்ஷ்மணர்கள் கிஷ்கிந்தையில் நுழைந்ததே அவனுக்கு அச்சம் விளைவித்தது. எளிதில் குழப்பம் அடையும் குணமுண்டு, அவனுக்கு. இராமலக்ஷ்மணர்களை வாலி தான் தன்னைக்கொல்ல அனுப்பினான் என்று அனுமனிடம் புலம்புகிறான். இந்த அசட்டு வானரத்திடம், மிகவும் மரியாதையுடன் தஞ்சம் புகுந்தனர், தசரதனின் மைந்தர்கள். அந்த அசடும், இவர்களின் உன்னத நிலையை அனுமன் சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல், இராமனின் தன்னடக்கமான நட்புரிமை நாடும் சொல்லையும் காதில் போட்டுக்கொள்ளலாம், கைலாகு கொடுத்து, தனக்கு சமானமாக அமரச்சொல்கிறான்! என்னே டாம்பீகம்! நான் வால்மீகி ராமாயணம் பக்கம் போகவில்லை. அங்கும் சுக்ரீவனுக்கு பெத்த பெயரில்லை. இராம லக்ஷ்மணர்கள் அவனிடன் தஞ்சம் புகுந்ததாகத் தான் நான் படித்த உரை கூறுகிறது.

இப்பேர்ப்பட்ட சுக்ரீவன் வாலியை வம்புக்கு இழுத்தால், அவனுக்கு ஏதோ வலிமை மிகுந்த துணை கிடைத்திருக்கவேண்டும் என்பது – சரி – வெள்ளிடை மலை. அந்த துணை இராமன் என்பதால், எச்சரிக்கையின் தீவிரம் வாலிக்கு புரிந்திருக்க வேண்டும்.

‘அன்னது கேட்டவள், ‘அரச! “ஆயவற்கு

இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,

உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்” என,

துன்னிய அன்பினர் சொல்லினார்’ [3964]

என்றாள். இராமன் வந்தது உன் உயிரை பறிக்கவே’ என்று அவள் தெளிவாகத்தான் எச்சரித்தாள்.  

(‘…தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது…’ ~ உரை.)

அந்த எச்சரிக்கையை உதறிவிட்டான், இராமபக்தனான வாலி. ‘…இயல்பு அல இயம்பி என் செய்தாய்?…’ என்ன பேச்சு இது? ‘…பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்’ என்று அவளுக்கு ஈவிரக்கம் காட்டினான், சினம் மிகுந்த கால கட்டத்தில் கூட. இராமனிடம் உள்ள பக்தியால் தான், தாரையை கடிந்து கொண்டான், வாலி.

உழைத்த வல் இரு

      வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு

      அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு, இயல்பு அல

      இயம்பி என் செய்தாய்?

பிழைத்தனை; பாவி! உன்

      பெண்மையால்’ என்றான். [3965]
    

இனி அவன் ஶ்ரீராமசந்தர மூர்த்தியின் கீர்த்தியை சொல்வதை கவனியும்.

1. ‘… அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு…’

~ தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த
இராமபிரான் என்கிறான், வாலி.

2.’இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ?

~ இராமன் குறுகிய நோக்கம் உள்ளவன் அல்ல. இம்மைக்கும், மறுமைக்கும் உரிய பலாபலன்களை சீர்த்தூக்கிப் பார்க்கும் இயல்பு உடையவன். (சுக்ரீவனுடன் கூட்டு சேர்வதால்) அவனுக்கு பயன் யாதும் இல்லை. (என்ன உளறுகிறாய்?) தரணிதனில் வாழும் உயிர்களின் ரக்ஷகனான தருமமே தன்னை அழித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் இராமனின் உன்னத நிலையை தன் புரிந்து கொண்டதைக்கூறி, தாரையை கடிந்து கொள்கிறான்.

‘இருமையும் நோக்குறும்

     இயல்பினாற்கு இது

பெருமையோ? இங்கு இதில்

     பெறுவது என்கொலோ?

அருமையின் நின்று, உயிர்

     அளிக்கும் ஆறுடைத்

தருமமே தவிர்க்குமோ

     தன்னைத் தான்அரோ? (3966)

‘இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து
மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன்
செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே
உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய
மாட்டான் என்பதால் ‘தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்’ என்றான்.
‘அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்’ (1349) ‘மெய்யற மூர்த்தி வில்லோன்’
(5882) என்பன காண்க.’ (உரை)

3. ‘ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்

மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

போற்றலை; இன்னன புகறல்பாலையோ?’ [3967]

(அடி பேதாய்!) தன்னுடைய மாற்றாந்தாயின் கட்டளைக்கு பணிந்து ராஜ்யபாரத்தை பரதனுக்கு உவகையுடன் தந்துருளிய சான்றோன் இராமனை புகழ்ந்து பாராட்டாமல், நீ அவரை இகழலாமா?)

‘பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி’ என்றார் குலசேகரர்.(பெருமாள்திருமொழி-8-5) என்று உரையில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

4. நின்று பேர் உலகு

எலாம் நெருக்கி நேரினும்,

வென்றி வெஞ் சிலை

      அலால், பிறிது வேண்டுமோ?

தன் துணை ஒருவரும்,

      தன்னில் வேறு இலான்,

புன் தொழில் குரங்கொடு

      புணரும் நட்பனோ? (3968)

இராமன் நிகற்ற மாவீரன்.  அவனுக்கு தன்னுடையை வில் ஒன்றே போதும், உலகெலாம் திரண்டு வந்து அவனை எதிர்த்தாலும். போய்ம் போயும் இந்த அற்பனாகிய குரங்குடன் அவன் கூட்டு சேர்வானா?

தம்பியர் அல்லது தனக்கு

      வேறு உயிர்

இம்பரின் இலது என

      எண்ணி ஏய்ந்தவன்,

எம்பியும் யானும் உற்று

      எதிர்ந்த போரினில்

அம்பு இடை தொடுக்குமோ,

      அருளின் ஆழியான்? [3969]

 சகோதர பாசத்தின் அருமையை உணர்ந்தவன் இராமன். கருணைக்கடலான இராமன் தன் சகோதரர்களிடமிருந்து தன்னை பிரித்துப் பார்ப்பதை அறியாதவன். என் தம்பியும் நானும் சண்டை போட்டால், இடையில் புகுந்து என் மீது அம்பு தொடுக்கமாட்டான்.

‘தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை
ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு
பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற
நம்பிக்கையில் வாலி ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை
தொடுக்குமோ’ என்றான். ‘தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்’
(3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி
வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி – கருணைக்கடல். இராமனைக்
‘கருணைக்கடல்’ (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.’ (உரை)

வாலியின் அதிபராக்கிரமமும், அவன் பார்க்கடலை கடைந்து தேவாசுரர்களை உய்வித்ததும், ராவணனை நசுக்கியதும், அவனுடைய இராமபக்திக்கு முன் சிறிய விஷயங்கள். அத்தகைய பக்தனை பற்றி இராமன் அறியாமலும் இல்லை. அவனை விட்டு விட்டு, சஞ்சலபுத்தியும், டாம்பீகமும் குடி கொண்டுள்ள சுக்ரீவனிடம் இராமலக்ஷ்மணர்கள் தஞ்சம் புகுந்தது ஏன்?

பழவினையோ?

(தொடரும்)

இன்னம்பூரான்

04 11 2012  

உசாத்துணை (மூலமும், உரையும்): http://www.tamilvu.org/library/libindex.htm

About இன்னம்பூரான்

இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க