கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

8

 

அரவிந்த் சச்சிதானந்தம்

“Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia

கைக்குட்டை  என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர்  விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதத்தில்  நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். ஒரு வருடத்திற்கு சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது ! வேறு வழி இல்லை…

ஏதோ நான் கைகுட்டையை  வைத்து பாய்மரக்கப்பல் செய்வதாக  நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காக கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காக கைக்குட்டையை பயன்படுத்தும்  ஒரு சாதாரண  மனிதன் தான்.. ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதரனமானவையன்று.

“பத்திரம்டா ! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்த கைகுட்டைய என் யுனிபார்ம்  ட்ரௌசரோட சேர்த்து ஊக்கை குத்தும் போது.

அழகான பூ போட்ட  வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூ போட்ட கைக்குட்டை உபயோகப்படுத்தவில்லை. யாரும் உபயோகப்படுத்த விடவில்லை. பூ போட்ட கைகுட்டைகளும்  குடைகளும் பெண்களுக்கு  மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப்படுகிறது. பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிகின்றன.

ஆண் கடவுளுக்கு பூ சூட்டி அழகு பார்க்கும் இந்த சமுதாயம், பூவை பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

ஆறாம் வகுப்பு  படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த  ராமஜெயத்தை எல்லாரும் அழும்  வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல  இயலவில்லை. நண்பர்கள் என்னை  ஒதுக்கி வைத்திடுவார்களோ  என்ற பயம்.வீட்டிலும் ஒரு  நாள் பூ போட்ட புடவையை  முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்த தழும்பு இன்னும் என்  வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்கு பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல்  ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்…

சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு  முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது  விளக்குமாற்றில்  அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்து  சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு  ஏதாவதொரு காரணம் வேண்டும்.

“ஒரு கைக்குட்டையை தொலச்சதற்க்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.

“எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி !” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரைக்குறைவாக பேசுவாள். அதனாலேயே யாரும் மத்தியஸ்தத்திற்கு வரமாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் கைக்குட்டையை தொலைத்து விட்டு நான்  ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாட தொடங்கிவிடுவாள்.

அம்மா அடிக்கும்போது  அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று  இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும்.மூச்சு இறைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது…பொருள தொலைச்சதற்கு பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும்,என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதை சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும்.

“……..பொட்ட புத்தி உனக்கெதுக்கு டா !” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்பு தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

பெரும்பாலும்  அம்மா எதற்காக அடிக்கிறாள்  என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்த காரணங்களுக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

“ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களை காண தாளாமல் நான் அவள் கால்களை கட்டிக் கொள்வேன்.

“இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா ! நீ அழாத !”.

நான் என்ன தப்பு  செய்தேனென்று  எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படி சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாறு குச்சிகள் சிதறும்.

அப்போதெனக்கு  பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று  எனக்கு தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற  பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால்  நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்கு கோபம் வந்திடும்.

“திருட்டுப் புத்தி வேறயா ?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூ போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லி சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடிய கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரிக் காம்பே…”

அந்த கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம்  ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று என பல வகையான   கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்ட கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள்.

இருதினங்களுக்குமுன் அக்காவிற்கு கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத்  தெரியாமல் நான் எடுத்து  வைத்துக் கொண்டேன். எடுத்து  வைத்திருக்கலாம்… புடைவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றை பார்த்தால் என் மனம் கட்டுப்பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குபின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

அன்று என் அம்மா  அக்காவின் கைக்குட்டையை திருடியதற்காக சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு  நாள் அவள் மாங்காடு கோவிலுக்கு சென்றிருத்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்து சுற்றிக் கொண்டேன்.அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைக்காக அடிக்கிறாள்.

அம்மா ரொம்ப  நல்லவள், என்னை அடித்தாலும்…

பெரும்பாலும்  பிச்சைக்காரிகளுக்கு கொடுப்பதற்காகவே  தன் பழைய புடவைகளை எடுத்து  மூட்டைக் கட்டி வைத்திருப்பாள்.அவள் இல்லாத போது அதிலிருந்து  சில புடவைகளை எடுத்து ஒளித்து  வைத்துக் கொள்வேன். நிறைய  புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதை கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்த சுடுகாடு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில்சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் .

என் தனிமையின்  பின்னால் ஒளிந்திருக்கும்  ரகசியங்களை  அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள்.. அதன் பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது.அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்…

நான் செய்வது  சரியா தவறா என்று தெரியாத  குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று  பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை.அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான்.

முழு ஆண்டு  விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்தி பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்கு போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து  தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னை ‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்து செல்வதற்காக.. வாழ்க்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாக கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்…

“இந்த வருஷம் சித்தி வீட்டுக்கு போகல !” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது.

“அப்பா வறார்டா….!”

எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

அம்மா ஏதோ வத்தி  வைத்திருக்கிறாள். ஒரு வேலை என் நடவடிக்கைகளைப் பற்றி  சொல்லி இருக்கலாம்.  பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்த பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டு பயணம் தடைப்பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது .

அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையை திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.

“பை மாறி போச்சா ! அக்காகிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு ”
பின் அவர் கொடுத்த எந்த பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

அப்பா எதற்காக  வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும்  அப்பாவும் ஏதோ ரகசியம்  பேசிக் கொண்டனர். நான் அறையினுள்  நுழைந்தால்,பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகத்தான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது.

அம்மா மலிவு  விலை கைக்குட்டைகளை வாங்குவதைக்  கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்ப தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா  சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில்  அவர் வார்த்தைகள் பதிந்து  விட்டது. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின்  வார்த்தைகளை பின்பற்றுவதன்  விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்….

“அக்கா கல்யாணம்டா….” இதற்கு தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அடுத்த ஒரு  மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. தினம் தினம் விருந்தாளிகள்  வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துக்கு தெருவில் ஒரு  லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு  அழைத்து செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள் ! வகை வகையான ஆடை  அலங்காரங்கள் ! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்கு தெரிந்தது. என் வயது பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் கலைகட்டி கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம்  செலவழித்ததால் என் சித்தி பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம்  நான் திடீரென ஒட்டாமல் போனதை  அவள் ஒரு பெரிய அதிசயம்  போல் தன் தோழிகளிடம் விவரித்துக்  கொண்டிருந்தாள்.

“என் தம்பிய பாத்தீங்களா…பெரிய மனுஷன்…நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”
தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். என்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

“ஏண்டி கல்யாணப் பொண்ணே ! நீ உன் வேலைய பார்த்துகிட்டு போ…உன் தம்பிக்கு பத்து வயசுதான்…ஆனா.. ” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கி சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும்  கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த  வீட்டிற்க்கு சென்று விட்டாள். வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளும்  ஒவ்வாருவராக சென்றுவிட்டனர். இறுதியாக சென்றார்கள் என்  சித்தியும் அவளின் மகளும்.

“அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்பி துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

வெட்கத்துடன்  சித்தி மகள் “போயிட்டு வறேன் பெரியம்மா!” என்றவாறே என்னை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்.

“மொட்டை பைய்ன் மாதிரி ஆடாத…வீட்ல அடக்கமா இரு.“ அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே  கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை  பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

ஆட்டோ மறையும்  வரை கலங்கிய கண்களுடன்  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகி போய்விடுவாள். அப்பா  மீண்டும் வெளிநாடு போக போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி  என்னை சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது,  ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின் பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்க்கு’ நான் எதையோ இழந்துக் கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை……

அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று  சொன்னார்,நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். ”நான் துபாய்க்கு போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில்,என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களை போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப்  பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசுக்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவனை பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

எனக்கு கண்கள் மீதும் இருட்டியது. நான் அப்போதுதான்  ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்குள் என் பன்னிரெண்டாம்  வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது.

“மாதம் ஒரு முறை நீங்க வந்து  பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்த தாளில். அப்பா உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்து சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை.  திடீரென்று அங்கு அமைதி குடிகொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுகொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா.நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

“என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத
சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றிவைக்கப்பட்டு
விடுகிறது.பரந்த இவ்வுலகத்தில்
சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருக்கிறது…

கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும்  மலர்ந்திருந்தது. அப்பாவின்  மீது பாசம் கூடிவிட்டது  எனவும் சொல்லலாம். அன்று  முழுக்க பல இடங்களுக்கு  அழைத்துச் சென்றார். எதிலும்  எனக்கு நாட்டமில்லை. என்  கவனம் முழுக்க அப்பா  வாங்கி தந்த அந்த பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது..

ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால்  எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையை கோதியவாறே  சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

அப்பா எதைக்  கெட்டதென்கிறார்….! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்கங்களை கேள்விக் கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே  பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு  ஒத்து வாழ் என்பதே அப்பா  சொல்ல வந்தது.

போவதற்கு  முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை  வல்லரசாக்குவதைப் பற்றியா  பேசியிருக்கப் போகிறார்கள் ! என்னை பற்றித்தான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை  இரண்டு முறை திரும்பிப் பார்த்தது  எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறுக்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை  என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்க்கு புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்……

ஆனால் கல்லூரி  வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின்  சகவாசமேயின்றி பள்ளிப்  படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு  கூச்ச சுபாவம் குடிகொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்த பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிற சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்த பெண்களின் ஆடைகளை பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கித்தான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

“நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறிமாலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

“இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனை கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்து கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளை தொலைக்கும் பணியினை நான் செவ்வென செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான  மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து
கைக்குட்டைகள் வாங்கிடுவேன்.
ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன் ….

அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,
” நீ வேணும்னே தான்  தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.
நானும் அன்று பல்லை
இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம். பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது.

ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்தும்போது காரணங்கள்  நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள்  எனக்குப் பிடிக்கும். அது எனக்கு பிடிக்கும் என்பது என்னை  சூழ்ந்தோருக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு  காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அதை நான் ஏன் வைத்துக் கொள்ளகூடாது என்பதற்கு  இச்சமுகம் காரணம் சொல்ல  முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த  வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னை பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திட திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன !

சம்பாதிக்க  தொடங்கிய,பின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில்  சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.
“சார்! இது உங்களுக்கா !” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.
“இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான் !” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.
“ஓ! மாறி போச்சா…வேற எடுத்திட்டு வரேன் “என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன்.
நான் நினைத்திருந்தால்,அது எனக்கு தான் என்று தைரியமாக சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன் !

பெண்மையை போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில்  பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக்  கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே   தவறோ ! ஆண்மை பெண்மை என பாகுபாடுகள் எவ்வாறு வந்தது. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார் ! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்  ! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது ! ஆண்மைக்கான அடையாளம் எது ! அடையாளங்களை அடையாளப்படுத்த யாரால் முடியும். !
தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களை துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமுக உரிமை சார்ந்த விடயமாயிற்றே ! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையை துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மை துறப்பதெனில் ஆண்மையை தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ !

பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள் (ஆண்கள்) பெண்மையை, அது யாரிடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது ! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள் ! அவவாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படமால் அகற்றப் படும்போது, எல்லாரும் உணவற்ற ஒரே ஜடநிலையை தானே அடைகிறோம் ! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே . !

அப்படியெனில்  எல்லோரும் ஜடமா ! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே ! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடுவருகிறது ! மெல்லிய குணம் பெண்மை, முரட்டு குணம் ஆண்மை என்கிறார்களா ! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில்-தாய் மண் சமுதாயத்தில்  வேட்டையாடியது பெண்கள்தானே ! அவ்வாறெனில் அவர்கெல்லாம் ஆண்களா ! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியமாக இருக்க முடியும்? நியாமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாகப் புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைபட்டு போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்துவிடுகிறது. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறது. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது ? சேலைகளை சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளை பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே ! இதற்க்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது !

இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாக பெண்கள் உடை விற்கும் கடைகளுக்கு சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்த குரல் கேட்டு திரும்பினேன்.
“அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க ” இனிமையான அந்த குரலுக்கு சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவையை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்பத்தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம்.என் மனைவியாயிற்றே !

“உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது.

பல முறை யோசித்திருக்கிறேன், அவளின் கரங்களை பற்றி என்னைப் பற்றின உண்மைகளை சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சி என்னைத் தடுத்திடும்.

பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

“ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்”

“ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல ! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிற புடவையையும் வாங்கிக் கொண்டாள்…

என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என்  தமக்கையின் குடும்பதோடு  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால  ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன் ! மாற்றிக் கொள்வதற்க்கு…

என் மனைவியை  பொறுத்த வரையில் நான் ஒரு  உன்னதமான கணவன்.  ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது.என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுதிக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியாமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை.அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்….

இன்னும் சொல்வதற்க்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக. அப்படியென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காக புடவை வாங்கப் போகிறேனென்று…

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

  1. கதையும் சொல்லப்பட்ட விதமும் காதோடு ரகசியம் போலவே…. வாழ்த்துகள் அரவிந்த்!

  2. கதையின் போக்கும், சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *