உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்கத் தேர்தல்!

7

 

பவள சங்கரி

தலையங்கம்


அனைத்துலகும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா மற்றும் மிட் ராம்னி என் இரு பெரும் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஜனநாயக விழா, பல ஆயிரம் கோடி (5500 டாலர்) செலவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் நிலையான முடிவுகள் என்று சில உண்டு. இந்தியாவுடனான தொடர்புகள் தொடரப்போவதில் சந்தேகம் இல்லை. சீனாவுடனான வணிகத் தொடர்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். பாகிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தாலும் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு, போன்றவைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். வெற்றிகரமான தொழில் அதிபரா அல்லது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அதிபரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்னும் 48 மணி நேரத்தில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். பணக்காரத் தத்துவம் நிறைந்த , சிறந்த தொழிலதிபரான மிட் ராம்னி தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்வந்தரின் நலனுக்காக மட்டுமே முடிவெடுத்து, செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தொழிலகங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்க முதலாளித்துவ தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதாகவே அமையும். அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏழை மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் வாய்ப்பு அதிகம்.  புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏழை மக்களின் கண்ணீர் துடைப்புகளுக்கான நம்பிக்கை அதிகரிக்கலாம். ஏழை மக்களின் கண்ணீரா அல்லது செல்வந்தரின் பாதுகாக்கப்படும் செல்வமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!

படத்திற்கு நன்றி :

http://www.bbc.co.uk/news/world-us-canada-20180630

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்கத் தேர்தல்!

  1. ஒபாமா வென்றால் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படுமா? கண்ணீரை வரவழைக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டவர் துடைக்க நான்கு வருடங்கள் எடுப்பார் என்கிறீர்களோ?

  2. ஒபாமா என்னவோ பிச்சைக்காரன் என்பது போல தொனிக்கிறது. அவரும் செல்வந்தர் தான். ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு பெருஞ்செல்வந்தராகியிருக்கிறார். ராம்னி அப்படியல்ல.

    செல்வந்தரென்றால் தவறா? உழைப்பின் வெற்றியை ஏன் இப்படி கரிக்கிறோம்?

  3. வென்றது பணம் தான் தேமொழி. ஒபாமா ராம்னியை விட இரண்டு மடங்கு தேர்தலில் செலவு செய்திருக்கிறார்.  ராம்னி செலவழித்ததில் பாதி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக. ஒபாமா செலவழித்த ஒட்டு மொத்தமும் அவருடைய ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள. தேர்தல் செலவுகளுக்கான பல புதிய சாதனைகளை முறியடித்திருக்கிறார் ஒபாமா.

  4. அன்பின் திரு அப்பாதுரை,

    ராம்னியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ அன்றி அவருடைய உழைப்பின் வெற்றியைக் கரிக்கவோ என்ன தேவை? அவருடைய முதலாளித்துவ கொள்கைகளைப் பற்றி மட்டுமே இங்கு விமர்சிக்கப்படுகிறது. ராம்னி தன் சொந்த நாட்டில் முதலீட்டை ஏற்படுத்தாமல், அந்நிய நாட்டில் (சீனா) மூதலீடு செய்தவர் சொந்த நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லையே! அவருடைய சொல்லிற்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லையே… இது பெரிய முரண்பாடாகவல்லவா இருக்கிறது?

  5. அன்னிய நாட்டில் முதலீடு செய்தவரா? யார் சொன்னது? அவருடைய பெரும்பான்மையான முதலீடுகள் உள்நாட்டு கம்பெனிகள். 
    சைனாவுக்கு உற்பத்தித் தொழிலை அனுப்புவது உலக இயல்பாகி விட்ட நிலையில், அவர் முதலீடு செய்த கம்பெனிகள் சைனாவுக்கு அனுப்பினால் அவர் என்ன செய்வார்?  அதைவிட முக்கியம் – சைனாவில் முதலீடு செய்தால் என்ன தவறு? அதை அனுபவிக்கும் தொழிலாளிகள் சைனாவிலும் உண்டு, அமெரிக்காவிலும் உண்டு. இங்கே ராம்னியின் திறமை முதலீடு அல்ல, நலிந்த கம்பெனிகளை மீண்டும் நல்ல லாபத்துக்குக் கொண்டு வந்ததாகும். அக்கறை இல்லாதவர் அப்படிச் செய்வாரா? முதலாளித்துவம் பற்றியத் தவறானப் புரிதல்.  முதலீடு இல்லையென்றால் எந்தத் தொழிலும் இல்லை.
    ராம்னியின் எந்த முதலீடு அப்படி உள்நாட்டு மக்களுக்கு லாபம் கொண்டு வரவில்லை என்று எடுத்துக்கூற முடியுமா? முடியாது – காரணம் அப்படி எதுவுமே இல்லை. சைனாவில் முதலீடு செய்யாத நாடுகளே இல்லை – அமெரிக்க *அரசாங்கம்* உள்பட!

  6. இனி பயன்படாத விஷயம்.. எனினும்..
    ராம்னி ஆட்சிக்கு வந்த முதல் வாரத்தில் சைனாவை currency manipulationக்காக பிடித்து நசுக்கியிருப்பார். டெமோக்ரேட் அதிபர்கள் அத்தனை பேரும் (ஜிம்மி கார்டரில் தொடங்கிய சரிவு) சைனாவுக்கு பாலிசி வால் பிடிப்பவர்கள்.  இது தான் அமெரிக்க சரித்திரத்தில் புலப்படும் உண்மை. 
    ராம்னிக்கு சாகசம் வராது. அதுதான் தொல்லையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *