Blog

  • கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..- கவிஞர் வாலியின் கைவண்ணம்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    நீர்க்குமிழி என்னும் திரைப்படத்தை யாரும் மறக்கத்தான் முடியுமா? நகைச்சுவைத்திலகம் நாகேஷ் தான் ஒரு நவசர நாயகன் என உறுதிசெய்த படமாகும். முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து.. பிற்பாதியில் உள்ளம்கலங்கி அழவைத்துவிடுகிற அவரது நடிப்பை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பெற்றுத்தந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்கிற பாடலையும் இந்தப் படம் தாங்கி வந்தது.

    தான் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உரிமையாளரின் புதல்வி வெளிநாடு செல்லும் முன் நடக்கின்ற ஒரு இனிய விழாவில் .. ஆடலும் பாடலும் உற்சாகம் கரைபுரள இடம்பெறுகிறது. உடல்நலிவுற்றிருக்கும் நாகேஷ் இத்தனை ஆட்டம் ஆடும்போதும் அவரைக் கண்காணிக்கும் மருத்துவர் மனவேதனையுடன் அக்காட்சியைக் காண்பதாக திரையோட்டம்!

    மேடையில் நாட்டியம் ஒரு ஆடவன் ஆடும்போது அசந்துபோக வைத்தவர்கள் ஒரு சிலரே.. அவ்வரிசையில் நாகேஷ் முன்னணியில்! இணை சேர்ந்து ராஜஸ்ரீ பாடவும் ஆடவும் வருகிறார். கன்னிநதியோரம்.. மின்னி விளையாடும்.. பாடல்!

    கவிஞர் வாலியின் கைவண்ணம்! இசையமைத்திருக்கிறார்.. வி.குமார்.. அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் அலங்காரம் செய்துகொண்டு வருகின்றன..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    எண்ணிப் பார்த்தால் எத்தனை சொர்க்கம் என்கிற விதத்தில் ரசிக்கப்பட்ட பாடல்! காதல் பாடலாய் இருந்தாலும் கவிஞரின் பேனா நகரும்போது கதையின் முடிவை அவரால் தவிர்க்க இயலாமல்.. முடிவுரையோ.. தூங்க வேண்டுமோ என்றுதானே எழுதிவைத்திருக்கிறார்..

    கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
    உன்னழகு மேனி என்ன கதை கூறும்
    வண்ண விழிமேடை வந்த இளம்பேடை
    சின்ன இடையோ.. ஜோ..ஜோ.. சேர்ந்து இசை பாடும்!

    கன்னங்கள் கோடி பெறுமோ.. கைகளில் ஆடிவருமோ..
    எண்ணங்கள் பொங்கி வருமோ.. இன்பத்தில் பங்கு தருமோ
    தாளாமல் ஓடிவருமோ.. தழுவாமல் ஆசை தீருமோ..
    நாணத்தை பெண்மை விடுமோ.. நானின்னும் சொல்ல வேண்டுமோ..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    நீர்க்குமிழி திரைப்படத்திற்காக டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..

    நாகேஷ் திரையில்.. ராஜஸ்ரீயுடன்..

    Kanni nathiyoram-Neerkumizhi

    Share
  • பூதாதிகாசம் ஓரங்க நாடகம்

    இன்னம்பூரான்

    unnamed

    இடம்: கரும்புலியூர் ஆஸ்தானம்.
    நேரம்: சாயும் காலம்.
    பொருள்: அதுவும் இதுவும்.
    ஏவல்: ஜரிகா புத்ரன் என்ற ….
    பாத்திரங்கள்: பூதாதிகாசத்தனார் (தலை மாந்தர்)
    மாத்ருதீபனார் ( அவருடைய மைத்துனர்)
    ஏழுமலை ( எடுபிடி)
    அபய குசலாம்பிகை ( தலைவி)

    (திரை விலகுகிறது)

    வீட்டு முகப்பு: அபயகுசலாம்பிகை விலாசம். ஹால். சோஃபா இத்யாதி.
    ஏழுமலை தூசி தட்டுகிறான். பூதாதிகாசத்தனார் சுருட்டுப் பிடிக்கிறார். சாம்பல் ரத்னகம்பளத்தில் விழுகிறது. மாத்ருதீபனார் மோட்டுவளையை பார்த்துக்கொண்டபடியே அளவளாவுகிறார். அபய குசலாம்பிகை பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு, அதை பத்து மடங்கு அதிகப்படுத்துகிறான், மாடிப்படியிலிருந்து குதித்து ஆரவாரம் செய்து கொண்டு இறங்கின ஜரிகா புத்ரன். பூதாதிகாசத்தனாரின் சுருட்டை பிடுங்கி ஊதுகிறான். புகை மண்டலம். அவன் தான் ரெஸிடெண்ட் குட்டிச்சாத்தான்.

    அ (அபய குசாலாம்பிகை): [தனி மொழி] ‘எங்க அப்பா மஞ்சக்காணியாக கொடுத்த மாளிகை இது. ரத்னகம்பளத்தில் சாம்பல் போடுகிறார். ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு.’
    [கட கடா என்று பாத்திரம் உருளல். குமுறலோ! கூப்பாடோ ! யான் அறியேன். ]

    அ: (குரல் எழுப்பி.) ஏழுமலை. ஐயாவை ஒரு நிமிடம் உள்ளே வரச்சொல்லு. காப்பித்தண்ணி ஆறிப்போவுது.

    ஏ: அவரு எங்கே வரப்போறாரு. போத்தல் கேட்டாக. மச்சின பிள்ளையும் ஒரு கோப்பை வேணும்னாக.
    ஜரிகா புத்ரன் மெனக்கட்டு வந்து காப்பியை குடித்து விட்டு, எஜமானியம்மாவின் மூக்குக்கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அமைதிக்குரல் கொடுத்து, ஏழுமலை அதை மீட்டு பாகசாலையில் கொடுக்கும் போது ஜரிகா புத்ரன் இருந்த விஸ்கியை குடித்து விடுகிறான்.
    அவனை தவிர, எல்லாரும் எரிச்சலோடு. அவனோ நிச்சலத்தத்துவன். மாத்ருதீபனாரோ சஞ்சலபுத்தி மனிதன். பூதாதிகாசத்தனாரோ ‘லொக்கு’ லொக்கு’ இருமல். காசநோய் உச்சக்கட்டத்தில். அவர் செத்தால் சொத்து நம் கையில் என்கிறான், ‘சூழ்ச்சி’ மாத்ருதீபம். அவனை அடக்கி வைத்திருப்பது, ஏழுமலை. அவன் தான் சீட்டாட அவனுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவன். ஏகபுத்திரியாக ஏகபோகமாக வளர்ந்த அபய குசாலாம்பிகைக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குஞ்சு குளவான் இல்லை. சொத்து என்னமோ கரைந்து வருகிறது. அப்பன் வீட்டு சொத்து. ஆயிரம் பொய் சொல்லில்லே அவுக (அதான் பூதாதிகாசத்தனாருடைய அப்பன்காரரு) பொண்ணெடுத்தார். பையனுக்கு வேலை பர்மாவுலே இன்னாரு. அப்றம் தான் தெரிஞ்சது, அவரு பர்மா பஜாரை சொல்றாருன்னு. அதுக்குள்ளே விரைசா தாலிக்கட்டிப்பிட்டானே.
    இனி நாடக மேடை:

    மா (மாத்ருதீபனார்) : மாப்பிள்ளை சார்! இந்த குட்டிச்சாத்தானை கொன்னுப்போடணும். ஏழுமலை! அந்த துப்பாக்கி எடுத்துக்கிட்டு வா.

    ஏ: துப்பாக்கிலெ ரவை இல்லிங்கலே. பரவாயில்லையா? ஜ.பு. அதை எடுத்து குளத்திலெ போட்டுட்டான்.

    பூ (பூதாதிகாசத்தனார்): கொஞ்சம் மெதுவா பேசு மாத்ரு. உங்க அக்கா காதிலெ விளுந்தா ரணகளம் ஆயிடும். ஜ.பு. அவளுக்குத் தத்துப்பிள்ளை மாதிரி. அந்த மலையாளத்து மாந்திரீகனிடம் மந்திரிச்சுல்லெ உங்கப்பன் அவனை துணைக்கு அனுப்பினாரு.

    மா: உங்கப்பன் அது, இதுன்னு பேசினா நான் பல்லை ஒடைப்பேன். உங்கப்பன் யோக்யதை தெரியாதா என்ன? அக்காவோட மஞ்சக்காணி பங்களாவுக்கு போலி பத்திரம் எளுதி வச்சவன் தானே. அந்த கணக்குப்புள்ளே அவரு கிட்டேயும் காசு வாங்கினான். எங்கிட்டேயும் வாங்கில்லெ, சொல்லிப்போட்டான். நாங்க சுதாரிச்சுக்கிணோம். அக்கா! கொஞ்சம் வாயேன்…

    பூ: உனக்கு ஆயிரம் புண்ணியம் மாத்ரு. அவளை கிளப்பாதே. நான் கிளப்புக்குக் கூட்டிக்கிணு போய் உனக்கு தண்ணி ஊத்ரேன்.

    அ: என்ன திட்டம் போட்றீக, மாப்பிளையும், மச்சானும். வக்கத்த புருஷன். கடங்கார தம்பி. எங்க அப்பா மட்டும் இருந்தா, உங்களை கட்டி வச்சு அடிச்சிருப்பார்.

    பூ: (தனி மொழி): இங்க மட்டும் என்ன வாழ்ந்திருச்சாம். ஆட்டிப்படைக்கிறா.

    ஏ: அம்மா! ஐயா வண்டிக்கட்ட சொல்றாரு. எனக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஊத்தம்மா. ஓடிட்றேன்.

    அ: ஹாலில் வந்து சத்தம் போடுகிறாள்: ‘என்ன நினச்சுக்கிட்டு வண்டி கட்ட சொன்னீக. நான் கோயிலுக்கு போறதா இல்லை. நேர்ந்து கொண்டிருக்கேனே, சிதற்தேங்காய் உடைக்கிறதா. உங்களுக்கு சுயமா சம்பாதிக்கிற புத்தி வரணும். நம்ம மாத்ருவுக்கு நல்ல பொண்ணா அமையணும் தான் வேண்டுதல். டேய்! ஜரிகா புத்ரா! ஐயாவுக்கு தூபம் போட்றா. கண்ணோல்லியோ.

    பூதாதிகாசத்தனார் தெருவை நோக்கி ஓட்றார். மாத்ரு கொல்லை பக்கம் ஓட்றான். அங்கே தானே அக்காவிடமிருந்து திருடிய சங்கிலியை புதைத்து வைத்து இருக்கிறான். ஜரிகா புத்ரன் தோண்டி எடுத்துட்டா.

    (திரை விழுகிறது)

    டிஸ்கி: இது அன்றாடம் நடப்பது தான். நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சம் மாறலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: https://d2nh4f9cbhlobh.cloudfront.net/_uploads/galleries/22032/poltergeist-1.jpg

    Share
  • விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு

     
     
     

    Water vapour in Large Planet

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    ஒரு யுகத்தில் உடைந்து மீளும் !
    விழுங்கிய கருந்துளை வயிற்றில்
    உயிர்த்தெழும் மீன்கள் !
    விண்வெளி  விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை !
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கிச்
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை !
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமியைப் போல்
    நீர்க்கோள்  இரண்டைப்
    பார்த்துளது கெப்ளர் விண்ணோக்கி !
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல ! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது மறைந்து
    தேடிக் கிடைக்கா  கோள்கள்
    கோடிக் கணக்கில் !

    +++++++++++++++

    Water vapor discovery

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீடர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா வென்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா வென்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணபட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour]  இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப் பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா  லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல.  அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை.    ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால்  அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை  உடைய வரா என்பது தெரியாது.   இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும்.   ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும்.  மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e,  கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன.   அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன.  நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது.  கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid].   தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு  வாயுவை மிகுதி யாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது.   இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது 

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது.   அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62].  விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது.  அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் :  கெப்ளர் -62e, கெப்ளர் -62f  [Kepler -62e and Kepler -62f].   நீர்க்கோள்  கெப்ளர் -62e,  அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்;  நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள்.  அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f  40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன.  வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார்.   கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும்,  பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது.  தூரத்தில் சுற்றும் நீர்க்கோள்  கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில்  நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது.  இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள  அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b.   2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது.  2013  ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது.  நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.   மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும்  நிலவு போல் காணப் பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கர மானது : 2000 டிகிரி F.  வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை.   அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது.  2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope]  விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F  என்று கணிக்கப் பட்டது.

    Einstein Planet

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம்.  ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி !  அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டு பிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது.  அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை.  ஆனால் புதிய உந்துசக்திப் பொறி நுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம்.  பேராற்றல் கொண்ட வானோக்கி களின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு !

    250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் !  இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை !  தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்.  இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார்.  1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள்.  அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள்  [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !  புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது.  7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது !  ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை !

    2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப்பட்டது.  சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை.  4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் !  அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது !  ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது.  அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் !  ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது !  எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது !  அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு !  அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) !  அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன !  ஹப்பிள் தொலைநோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.

    சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்

    ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள்.  தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலை நோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது.  அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலை நோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது.  கண்டு பிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது;  அதன் விட்டம் 12,000 மைல்.  புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு.  அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c].  புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம்.  நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே!

    Exoplanets 2012

    பரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] 1051, 797 பரிதிக் குடும்பங்கள்]  வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது.  கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது.  பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன.  வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.

    மறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்

    2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலை நோக்கி வழியாகக் கண்டார்.  ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார்.  வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது.  அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது.  அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்:  அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே!  அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே!  அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம்.  சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.

    ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன?

    நாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும் பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை.  அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம்.  மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன.  1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார்.  ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக் கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன.  அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது.  ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்:  பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன் களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது.  அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது.  அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது.  அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

    பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்

    நேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.  தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி.  மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை ? வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes)  கண்ட முறைகளே.  அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.

    1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி. 2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் : 3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. 5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015) 6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016) 7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.) 8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம்   (PEGASE)

    PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks  The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Are There Other Planets Like The Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Science – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

    21 National Geographic Magazine – Discovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40704261&format=html (திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)

    25 National Geographic Magazine – Searching the Stars for New Earths (Dec 2004)

    26 Scientific American – Does Methane Point to Bacteria on Mars & Titan ? By : Sushil K. Atreya. (May 2007)

    27 News Week Magazine The New Solar System – Our Changing Way of the Universe -(Sep 2006)

    28 Cosmos Magazine – Three-Planet Solar System Detected (May 2006)

    29 Cosmos Magazine – Origin of Planets Confirmed (Oct 2006)

    30 Cosmos Magazine – Earth-Like Planet Await Discovery (Sep 2006)

    31 Cosmos Magazine – Distant Sun Has System of Five Planets (Nov 2007)

    32 Cosmos Magazine – Catalogue of Strange New Worlds (May 2007)

    33 Cosmos Magazine – New Earth-Like Planet May Hold Liquid Water (April 2007)

    34 Astronomy Magazine – Earth-Like Planets May Be Common (Dec 2003)

    35 Omnome Science – Earth -2 How to Find Earth-Like Planets (June 2006)

    36 Extra-Solar Planets By : Wikipedia [31 July 2008]

    36(a)  http://revolutionizingawareness.com/tag/space/  [December 24, 2011]

    36(b)  http://www.kavlifoundation.org/science-spotlights/searching-best-and-brightest  [2011]

    37  http://www.messagetoeagle.com/alienwaterworldskepler.php#.Uem1lo3VCPU  [April 18, 2013]

    38  http://www.dailygalaxy.com/my_weblog/2013/07/two-alien-planets-with-endless-oceans-unlike-anything-in-our-solar-system-.html  [July 11, 2013]

    39  http://www.scientificamerican.com/article.cfm?id=first-distant-planet-be-seen-in-color-blue&print=true  [July 11, 2013]

    40  http://science.gsfc.nasa.gov/sed/index.cfm?fuseAction=home.main&&navOrgCode=667  [NASA Sites for Exoplanets]

    41  http://www.spacedaily.com/reports/Hubble_Finds_a_Cobalt_Blue_Planet_999.html [July 12, 2013]

    42.   https://en.wikipedia.org/wiki/Exoplanet  [December 11, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 1, 2014

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • வார ராசி பலன்:24.02.14-02.03.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறை யில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம்.

    ரிஷபம்: பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், வேண்டிய லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுங்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பப் பிரச்னையில் பக்குவமாகக் கையாள்வதன் மூலம், பெண்கள் தங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு நெருங்கிப்பழகியவரால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், கவனமாய் இருப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு தொழில் ரீதியாக இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை காட்டி வந்தால் அவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    மிதுனம்:பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
    கடகம்:வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

    சிம்மம்: குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தோன்றி மறையும். எனவே பெற்றோர்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். பணம் மற்றும் செலவு சம்பந்தமான விஷயங்களில் சற்று சிக்கனமாய் இருந்தால், பெண்கள் கடன் தொல்லைகள் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் தாழ்வு மனப் பான்மையை தூர எறிந்துவிட்டு, துணிவுடன் செயல்பட்டால்,உங்கள் திறமைகளை பிறர் உணர்வா ர்கள். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப் பது நலம். இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், நீங்கள் நினைத்த காரியத்தை திறம்பட முடித்து விடுவீர்கள்.

    கன்னி: பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும் வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப் பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

    துலாம்: சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. வெளி ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் விலைஉயர்ந்த மின்பொருள்களின் பழுதை நீக்குவதற்காக அதிக பணம், நேரம் இரண்டையும் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும். வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் அதிக லாபம், புதிய ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் பெறு வர். முக்கியமான செயல்களை விரைந்து முடிக்க, நட்பும், உறவும் கை கொடுப்பார்கள்.

    விருச்சிகம்: தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், பெண்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள். வியாபாரிகளும், வேலைக்கு செல்பவர் களும் தங்கள் வருமான வரி கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.அலுவலகத்தில் நிலவும் உட்பூசல்களில் தலையிடாதீர்கள். கணினித் துறை யில் உள்ளவர்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுத்துணையாக இருப்பதால் புதிய சலுகை களைப் பெறுவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவன ம் செலுத்துவது அவசியம். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலை ஞர்களின் குடும்பத்திலும், தொழிலும் குழப்பம் இராது.

    தனுசு: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களை கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.

    மகரம்: மாணவர்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையை க் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப் புணர்ந்து செயல்படு பவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!

    கும்பம்: வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளை கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்று விடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப்போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடை முறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால்,கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

    மீனம்: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில், கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

    Share
  • திருமால் திருப்புகழ் (13)

    101-0105_IMG

    கிரேசி மோகன்

    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன-தனதான….

    ————————————————————————————————————-
    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்images (1)
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….

    ————————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (12)

     

    கிரேசி  மோகன்

    perumal1

    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான….
    ———————————————————————————————————————–

    “திரைகட லுளோடி திரவிய வியாச 5709796
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”
    ————————————————————————————————————————-

    Share
  • வாராயோ வெண்ணிலாவே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    காதலர்கள் கொஞ்சி விளையாட இந்த வெண்ணிலா மட்டும்தான் காலகாலமாக இடம் கொடுத்து வருகிறது! எந்தக் கவிஞனும் சின்னக் குழந்தையாகிவிடுகிறான்.. நிலாவே உன்னைக்கண்டு! தூது விடுப்பதற்கும் நீயே சாலப்பொருத்தம் என்று சரித்திரம் பேசுகிறது! வட்டமுகம்காட்டி வான்வழியே உலா காணும் உன் வதனம் கண்டு சொக்கிப் போகாதவர்கள் யாரிங்கே? நீ சூரியனிடமிருந்து ஒளியைக் கடன்வாங்கியிருந்தாலும் உன் சுடர்மிகு ஒளிவெள்ளம் இன்பம் ஊட்டுவதால் இங்கே இரவுகளுக்குக்கூட கொண்டாட்டம்தானே! புரட்சிக்கவிஞர் முதல் பைந்தமிழர் பாசறை வழிவந்த எந்தக் கவிஞனும் உன்னைத் தொட்டுவிளையாட மறந்தவனில்லை! பட்டுக்கோட்டை கூட பாங்கான பாடல்தந்தான் அன்றோ.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா? மூத்தவளா வெண்ணிலாவே.. என்ன அருமையான பாடல்!

    இதோ.. மற்றுமொரு வெள்ளித்திரைதந்த வெண்ணிலா பாடல்! அற்புத சுகமானது! ஆனந்த ரகமானது! நித்தமினிக்கும் இன்பத் திருவிழாபோல் நெஞ்சில் சந்தோஷ அலையடிக்குது! காதலனும் காதலியும்.. அட.. திரைப்படத்தில் கதாநாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பாடும் பாடலாக.. உன்னை இடையே வைத்துக் கொண்டு! கற்பனை ராஜ்ஜியம் நடக்கும்போதெல்லாம் கண்டிப்பாக உன் பங்கு அதிகமிருக்கும் என்பார்கள்! பாட்டுத் தேரோட்டம் பாங்காக நடந்திருக்க.. பாடிய குயில்கள் இரண்டு.. ஒன்று.. ஏ. எம். ராஜா மற்றொன்று.. பி. லீலா !

    எஸ். ராஜேஸ்வரராவ் இசையமைப்பில் தஞ்சை ராமையா தாஸ் வரிகள் இதயம் தழுவிச் செல்கிறார்.. கவிதைபோல் ஒரு சில பாடல்கள்தான் திரையிசையில் அமையும்.. அந்த வரிசையில் இந்தப் பாடல் பொருந்தும்!
    கனகச்சிதமான இசையும் கவிதையும் கலந்தினிக்கும் கானா அமிர்தம் என்பேன் நான்!

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதினான்
    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதிபதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே

    PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிட செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே

    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது

    PL:
    வாராயோ வெண்ணிலாவே

    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறம் ஆமோ நிலவே

    AMR, PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாராயோ வெண்ணிலாவே…

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 2​​​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

     

    jay1

    jay2

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • ஓம் நமசிவாய

    விசாலம்s-index

    அன்னை சக்தி உன்னிடம் பாதி
    அண்ணாமலையில் ஒளிரும் ஜோதி .
    ஐந்தெழுத்து மந்திரம் துன்பம் நீக்கும்
    ஐந்தெழுத்து ஜபிக்க மனமும் அடங்கும்
    உயிர்களைக் காக்க விஷமும் குடித்தாய் .
    உயிர்களின் அழிவை தடுத்து வென்றாய்
    கர்ம வினைகள் எல்லாம் நீங்கும்.
    கரத்தில் சூலம் எதிரியை அழிக்கும்..
    துன்பம் அழிக்கும் பஞ்சாட்சர ஜோதி
    துதிப்போரின் தீவினைகள் மறைவது நீதி.
    உன் விபூதி பூச மனமும் அடங்கும்.
    உயிருக்குள் ஒரு சக்தி தொடங்கும்.
    காங்கேயனை அளித்த முக்கண்ணன் நீதானே!
    காலனை அழித்த பரமசிவன் நீ தானே!
    நமசிவாய ஓதினாலே மரணபயம் தீரும் .
    நம்பியவர் வாழ்வில்அருளொளி வீசும்
    உன் தாள் பணிய மறுபிறப்பேது?
    உன் நாமம் ஓத எனக்குக் குறையேது?

    படத்துக்கு நன்றி

    http://www.angelfire.com/nc2/cybertemples/Shiva.html

    Share
  • அன்புள்ள மணிமொழி

    எஸ். பாலசுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழி ஆனந்த  கண்மணி,

    வாழ்த்துக்கள் எப்போதும் எனது நினைவில் நின்று என்னை இயக்குவதற்கு…!

    என்ன ஆச்சு….? திடீரென கடந்த ஒருவார காலமாகவே  உனது காட்சியும் இல்லை. கைபேசி தொடர்பும் இல்லை…? இரண்டாண்டு காலமாக நமது நட்பு கொஞ்சம்  கொஞ்சமாக வளர்ந்து காதலாக கனிந்து இப்போது நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வருகையில் ஏன் இந்த திடீர் இடைவெளி..? எனது வீட்டில் பெரியவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்பதை நீ நன்கு அறிந்திருப்பாய்….! உங்கள் வீட்டில் தான் எனது வருமானத்தை வைத்து குறை சொல்லியதாக சொன்னதை நான் இன்னமும் மறக்கவில்லை. எனது சம்பளம் குறைவுதான். அதுக்காக நாம் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடியுமா…? இப்போதைக்கு நம்மிருவரின் தேவைக்கு எனது சம்பளம் கண்டிப்பாக போதும் எனபதே உண்மை . அன்று கடைசியாக மெரீனாவில் நமது சந்திப்பில் கூட விளையாட்டாக ஒரு மாத பட்ஜெட் எனது சம்பளத்தை மட்டும் வைத்து போட்டோமே. அதில் கூட மீதமாக மாதம் இரண்டாயிரம் ரூபாய் வந்ததே…!

    மறந்து விட்டாயா மணிமொழி. கொஞ்ச நாட்களுக்கு உனது சம்பளம் முழுவதையும் உனது வீட்டுக்கே கொடுப்பதில் எனக்கோ எனது வீட்டு பெரியவர்களுக்கோ எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லியிருந்ததை மறந்து விட்டாயா மணிமொழி. கடந்த இரண்டு ஆண்டுகளாக உன்னிடம் நான் கொடுத்த வாக்கை மீறி எதுவும் செய்யவில்லை என்பதை நீ அறிந்திருப்பாய் அல்லவா…?  நாம் தமிழ் நாட்டில் இருக்கும் வரை குடும்ப  செலவை பற்றி ஏன் கவலை கண்ணே.

    நமக்கு திருமணம் முடிந்ததும் முதலில் நாம் செய்யபோவது நமக்கென தனியாக ஒரு ரேசன் கார்டுதான். அதுவும் பச்சை கலர் அட்டையுடன் கூடியது. அப்படி பச்சை கார்டு வாங்கி விட்டால் மாதமாதம் அரிசி  இலவசமா கிடைக்கும். அப்படி கிடைக்கும் அரிசியை  வாங்கி வைத்து கொண்டாலும் நமக்கு முடியாத நேரத்தில்  மலிவு விலையில் அம்மா உணவகங்கள்.  இப்போ இரவு கூட சப்பாத்தி மிகவும் குறைந்த விலையில்  அப்புறம் என்ன நமக்கு கவலை..? நமது அரசாங்கமே நமக்கு இலவசமாக கிரைண்டர்… மிக்ஸி… மின்விசிறி கூட கொடுக்கிறர்கள். கிட்டத்தட்ட 45 வருட காலமாக தேசியக்கட்சிகள் நமது தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர முடியில்லை. திராவிட கட்சிகள் இதுவரையில் கொடுத்த இலவசங்களை கண்டிப்பாக இனி அதிகபடுத்துவார்களே தவிர கண்டிப்பாக குறைக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை, என்னதான் தேர்தல் கமிஷன் தடை போட்டலும் வேறு ஒரு ரூபத்தில் இலவசங்கள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும், நமது வருமானம் குறைவாக இருந்தாலும் இது போன்ற  இலவசங்கள் நம் போன்று உண்மையான வசதி குறைவானவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்,  எனவே நீ இன்னமும் என்னை பாரா முகமாக இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த மின் அஞ்சல் கண்டதும் உடனடியாக கைபேசி மூலம் உன் குரலை கேட்பேன் என்ற நம்பிக்கையுடன்  உன் நினைவுகளை மனதில் சுமந்தபடி உலா வருகின்ற

    உன் உளங்கவர்ந்த கள்வன்

    பாலா​​​​​

    27.02.2014

    பின் குறிப்பு: நாளை கண்டிப்பாக நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில காத்திருப்பேன் என்பதை மறவாதே. நேரில் வா … உனக்கு வேறு சந்தேகங்கள் இருந்தா அதையும் நிவர்த்தி பண்ணுகிறேன். அவசியம் வருக . எனக்கு மன அமைதியை தருக.

    Share
  • குறளின் கதிர்களாய்… (22)

     

    செண்பக ஜெகதீசன்ele-index

    சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்

    பட்டுப்பா டூன்றுங் களிறு.

    -திருக்குறள்- 597 (ஊக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அம்புபட்டு புண்பட்டாலும்

    யானை

    அசந்துவிடுவதில்லை,

    தெம்புடன் முன்னேறி

    திறமையை நிலைநிறுத்தும்..

     

    ஊக்கமுடையோர் கதையிதுதான்,

    அவர்

    உயர்வுக்குச் சிதைவு வரினும்

    உறுதியாய் நின்று

    ஊக்கமுடன் செயலாற்றி

    இறுதியில் பெறுவார் வெற்றியையே…!

     

    குறும்பாவில்…

     

    அம்பினால் புண்பட்டாலும் அசராமல்

    திறம்காட்டும் யானையாய்

    இடர்களைந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அம்பது பட்டுப் புண்படினும்

    அந்த வலியையும் பாராமல்

    தெம்பு கொண்டே முன்னேறும்

    திறமை மிக்க யானையைப்போல்,

    நம்பும் வெற்றிப் பாதைதனில்

    நலிவு யேதும் வந்திடினும்

    தெம்பாய் முயன்று பணிசெய்வார்

    தீதிலா வெற்றி பெறுவாரே…!

     

    லிமரைக்கூ…

     

    ஊக்கமுடன் திறம்காட்டும் புண்படினும் அம்பால்,

    உறுதியுடன் யானைபோல்

    இடர்கடந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர் தெம்பால்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஆன ஆன போர்யான

    அம்பாரி வச்ச போர்யான,

    அஞ்சா நெஞ்சப் போர்யான

    ஆவேச மான போர்யான,

    அம்பு பட்ட புண்ணுடனும்

    தெம்பாப் போவும் போர்யான

    தெறம காட்டும் போர்யான..

     

    இப்புடித்தான்,

    தும்பம் வந்து தடுத்தாலும்

    தொல்ல வந்து மறிச்சாலும்,

    தொவண்டு வெலவிப் போவாம

    தெம்பா வேல செஞ்சிவரும்

    தெடமா மனசு உள்ளவந்தான்,

    தெறம காட்டிச் செயிப்பானே…!

     

    http://www.personal.psu.edu/afr3/blogs/SIOW/2011/10/the-elephants-trunk.html

           

    Share
  • கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை!…

    பேரா.துரைஅரசன்

    கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை

    நோக்கம்:

    ஐந்திணகளைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசை முறையில் கூறுவதே நடைமுறை வழக்காகும். ஆனால் தொல்காப்பியம் தொடங்கி அகப்பொருள் இலக்கணம் கூறும் பல இலக்கண நூல்களில் ஐந்திணைகளின் வரிசை முறை வெவ்வேறாக உள்ளன. இந்நூல்கள் கூறும் வரிசை முறையிலிருந்து கலித்தொகையில் இடம் பெற்றுள்ள இத்திணைகளின் வரிசைமுறை முற்றிலும் மாறி அமைந்துள்ளது. இது குறித்து ஆய்வு நோக்கில் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    1. தொல்காப்பியர்:

    ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ (தொல். அகத்திணையியல், நூ.5 )

    என்பது ஒல்காப் புகழ் தொல்காப்பியரின் வரிசை அமைப்பியல் முறைமை ஆகும். இதில் தொல்காப்பியர் பாலைத்திணையைக் குறிக்கவில்லை.  இவர்,

    ‘நடுவண் ஐந்திணை நடுவண தொழிய

    படுதிரை வையம் பாத்திய பண்பே’ (தொல். அகத்திணையியல், நூ.2 )

    என்று கூறியதன் மூலம் மேற்காட்டிய வரிசை முறையில் நடுவில் பாலைத் திணை அமைத்துக் கொள்ளப்படும். எனவே, தொல்காப்பியர் கருத்துப்படி முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பது ஐந்திணை வரிசை முறை ஆகும்.

    2. நம்பியகப்பொருள்:

    நம்பியகப்பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளது. இதனை,

    ‘குறிஞ்சி பாலைமுல்லை மருதம்

    நெய்தல்ஐந்திணைக்கு எய்திய பெயரே’          (நம்பியகப்பொருள், அகத். நூ. 6)

    என்று அந்நூல் குறிப்பிட்டுள்ளது.

    3. இறையனாரகப்பொருள்:

    இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று ஐந்திணைகளை வரிசைப் படுத்தி உள்ளது. இதனை, ‘ஐந்திணையாவன யாவையோ எனின், குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என இவை’ (இறையனராகப்பொருள் உரை,ப.17) என்பதன் மூலம் அறிய முடிகிறது.

    4. தொன்னூல் விளக்கம்:

    தொன்னூல் விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கையாண்டுள்ளது. இதனை,

    ‘குறிஞ்சி பாலை முல்லை மருத
    நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
    வரையே சுரமே புறவே பழனந்
    திரையே யவையவை சேரிடந் தானு
    நிரையே யைந்திணை நிலமெனப் படுமே’        (தொன்னூல் விளக்கம், நூ.174)

    என்ற தொன்னூல் விளக்க நூற்பா காட்டி நிற்கிறது. நம்பியகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன ஐந்திணை வரிசை முறையில் ஒத்துள்ளன.

    5. தமிழ்நெறி விளக்கம்:

    தமிழ்நெறி விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று நம்பியகப்பொருள் வரிசை முறையையும் தொன்னூல் விளக்க வரிசை முறையையும் ஒத்து அமைந்துள்ளது. இதனை,

    ‘பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்
    பரப்பமை வாரி குறிஞ்சிமுதற் பாகே’                      (தமிழ்நெறி விளக்கம், நூ.3)

    என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.

    6. வீரசோழியம்:

     முல்லை குறிஞ்சி மருதத் தொடுமுது பாலைநெய்தல்
    சொல்லிய காஞ்சி சுரநடை கைக்கிளை பாலைதும்பை
    இல்லவண் முல்லை தபுதாரந் தாபத மேய்ந்தவள்ளி
    அல்லது காந்தள் குறுங்கலி வெட்சி யடல்வஞ்சியே

    (வீரசோழியம் 87)

    என்ற வீரசோழிய நூற்பா முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று ஐந்திணை அமைப்பு முறையைக் குறிப்பிட்டுள்ளது.

    7. முத்துவீரியம்:

    முத்துவீரியம் ஐந்திணை வரிசைமுறையை,

    ‘அகப்பொருள் கைக்கிளை யைந்திணை பெருந்திணை
    எனவெழு வகைப்படு மென்மனார் புலவர்’  (முத்துவீரியம், நூ.770)

    என்ற நூற்பா மூலம் காட்டியுள்ளது. இதற்கு ‘அகப்பொருள் – கைக்கிளையும், குறிஞ்சி – முல்லை – பாலை – மருதம் – நெய்தலாகிய ஐந்திணையும், பெருந்திணையும் என ஏழு வகைப்படும்’  (மேற்படி, ப. 215) என்று உரையாசிரியர் விளக்கம் கூறியுள்ளார். இவ்வரிசை முறை தொல்காப்பிய வரிசை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளது.

    8. சுவாமிநாதம்:

    ‘திணைகுறிஞ்சி, பாலை,முல்லை, மருத(ம்),நெய்தல், ஐந்தாம்’  (சுவாமி. நூ. 72)

    என்று ஐந்திணைகளை சுவாமிநாதம் வரிசைப்படுத்தி உள்ளது. இவ்வரிசை, நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ்நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய நூல்களில் அமைந்துள்ள வரிசைமுறையை ஒத்துள்ளது.

    ஐந்திணை வரிசைமுறை:

    எனவே மேற்கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து ஐந்திணைகளை வரிசைப்படுத்துகின்ற முறையில், தொல்காப்பியமும் முத்துவீரியமும் ஒத்துணவர்வு கொண்டுள்ளன. அதாவது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று இவ்விரு நூல்களும் ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளன.

    நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் ஐந்திணைகளை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளன.

    இவ்விரண்டு முறைகளிலிருந்தும் வேறுபட்டு இறையனராகப்பொருளும் வீரசோழியமும் வெவ்வேறு முறைகளைக் குறிப்பிட்டுள்ளன. அதாவது இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று வரிசைப்படுத்தி உள்ளது; வீரசோழியம் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளது.

    உலக வழக்கு:

    ஐந்திணை வரிசை முறைகளில் மேற்கண்ட எட்டு நூல்களில் நான்கு முறைகளைக் காணமுடிகிறது. ஆனால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதே நடைமுறை வழக்காக அல்லது உலக வழக்காக உள்ளது. இவ்வுலக வழக்கையும் இணைத்துப் பார்த்தால் ஐந்திணை வரிசை முறையில் ஐந்து நிலைகள் உள்ளன.

    கலித்தொகை:

    மேற்காட்டிய ஐந்து முறைகளிலிருந்தும் மாறுபட்ட வகையில் கலித்தொகையின் ஐந்திணை வரிசை அமைப்பு முறைமை அமைந்துள்ளது. அதாவது கலித்தொகையில் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற முறையில் ஐந்திணை வரிசை அமைந்துள்ளது.

    ஐயங்கள்:

    கலித்தொகையில் அமைந்துள்ள இம்முறை சரிதானா?  இங்ஙனம் அமைக்கக் காரணம் என்ன? பாலையை முன் வைத்தது சரிதானா? என்ற வினாக்கள் எழுகின்றன.

    நச்சினார்க்கினியர்:

    உச்சிமேற் புலவர்களில் நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் ‘சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ என்றதால் சொல்லாத முறையிலும் சொல்லவும் படும் என்று கூறி கலித்தொகையின் வரிசை முறையை நியாயப்படுத்த முனைகிறார். ஆனால் அவரின் இவ் வாதம் ஏற்புடையதன்று.

    கலித்தொகையின் ஐந்திணை வரிசைமுறைக்கானக் காரணங்கள்:

    கலித்தொகையில் ஐந்திணை வரிசை முறை இங்ஙனம் அமையப் பின் வரும் காரணங்களைக் கூறலாம்:

    1) ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதால் தலைவியைப் பிரிந்து தலைவன் கடமையாற்றச் செல்வதால் பாலையை முன் வைத்தார் எனலாம்.

    2) கல்வி, தூது, செல்வம் ஈட்டுதல் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். இவை ஆடவரின் இயல்பாதலால் இதன் பொருட்டுப் பிரியும் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாலையை முன் வைத்திருக்கலாம்.

    3) பிரிந்து போய் தலைவன் ஆற்றும் செயல்கள் எல்லாம் அவன் செய்வதற்குரிய அறங்களே ஆகும். மேலும் இல்லத்தில் நிகழ வேண்டிய விருந்தோம்பல் முதலிய நல்லறங்கள் முட்டின்றி நிகழ்வற்கும் இவை இன்றியமையாக் காரணங்களாகும். இவற்றை எல்லாம் இத்திணை தன்னுள் அடக்கி நிற்றலான் இத்திணையைத் தலையாயதாகக் காட்டும் முகத்தான் கலித்தொகையில் முன்னிறுத்தி இருக்கலாம்.

    4) பாலை முழுவதும் பிரிவன்று; தலைவன் பிரிவானோ என்று அஞ்சுவது பெரும்பாலும். அஞ்சும் பொழுது அன்பின் நொய்மை நன்கு புலப்படும். பிரிந்து சென்றவன் தான் விட்டு வந்த மனைவியைக் குறித்து வருந்துவது; நடுவில் ஐயோ இவ்வளவு கொடுமையான வழியில் சென்றேனே என்று வழியைக் குறித்து வருந்துவது. எந்தப் புலவனும் துன்பத்தைப் பற்றிச் சொல்லும்போதுதான்,  மனித தத்துவத்தை அறிந்துள்ள முறையை நன்குணர்த்த முடியும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் Tragic-Comedies சிறந்தவை என்பர். இதற்குக் காரணம் இன்பமும் துன்பமும் விரவி வருவதே ஆகும். அது போலவே தமிழிலும் பாலைத்திணை சிறந்தது. ஆதலால் கலித்தொகை என்னும் தொகையுள் பாலைத்திணையை முற்கூறியதில் அதிசயம் ஒன்றுமில்லை என்று கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் அம்மையார் (ப.74) குறிப்பிட்டுள்ளார்.

    முடிவுரை:      

    முதுகலைத் தமிழ் பயில்கின்ற காலத்தில் கலித்தொகைப் பாடத்தைப் படிக்கின்ற வேளையில்  கலித்தொகையில் பாலையை முன் வைத்தது சரியா என்று ஐயம் கொண்டேன். அவ்வையத்திற்கு விடை தேடியபொழுதுதான் கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் கூறிய விளக்கங்கள் கிடைத்தன. இது சரியா? ஏற்புடையதா? என்பதைத் தமிழாய்வுலகம் ஆராய்ந்து தெளிவுறுத்த வேண்டும்.

    இக்கருத்தை முன் வைத்து இக்கட்டுரையை எழுத முனைந்தபொழுதுதான் அகப்பொருள் கூறும் இலக்கண நூல்களில் ஐந்திணை வரிசைமுறை எங்ஙனம் அமைந்துள்ளது என்று  ஆராய்ந்தேன். அப்பொழுதுதான் மேற்காட்டிய எட்டு நூல்களில் ஐந்திணை வரிசைமுறை வெவ்வேறு விதமாக (எட்டு நூல்களில் நான்கு விதம்) அமைந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. ஒரு சிக்கலை அவிழ்ப்பதற்காக இறங்கிய முயற்சியில் இன்னொரு சிக்கல் முகிழ்த்துள்ளது. அதாவது உலக வழக்காக உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசைமுறை மேற்காட்டிய எந்த நூல்களிலுமே இடம் பெறவில்லை. இவ்வரிசை முறை எப்படித் தோன்றியது?; எங்கிருந்து வந்தது?.

    ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல ஐந்திணை வரிசைமுறை பற்றிய விளக்கம் கடினமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் எல்லாவறையும் ஆய்வு செய்தாகி விட்டது; அதில் மேலும் ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

    Share
  • சிறு கை அளாவிய கூழ் (4)

     

    இவள் பாரதி 

     
    கண்ணெதுpappa
    மூக்கெது
    தலையெது என
    தன் குட்டிவிரலால்
    சுட்டிக் காட்டுகிறாய்
    எப்படி அழுவாய்
    எனக் கேட்க
    கண்கள் இடுக்கி
    உதடு குவித்து
    எழுப்பும் ஒலியும்
    முகபாவமும்
    எந்தத் திரையிலும்
    பதிவு செய்யப்படாதது

    —

    முகத்தருகே வந்து சிரிக்கிறாய்
    சிரித்த கணம் முடிவதற்குள்
    கன்னத்தில் அடிக்கிறாய்
    கண்கலங்கித் துளிவீழுமுன்னே
    கைதட்டிச் சிரிக்கிறாய்
    என்ன செய்ய என்னை?
    என்ன சொல்ல உன்னை?

    Share
  • வாழ்க்கை நலம் – 50

    குன்றக்குடி அடிகள்

    50. நன்றி பாராட்டுக!

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று”
    (திருக்குறள் –  108)

    என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப்பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு மேலோங்கி நிற்கிறது.

    இன்று எந்த நிகழ்ச்சியானாலும் “நன்றி கூறல்” என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ‘நல்லது’ என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

    ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

    ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

    பொருளைவிட, நல்லறிவு கொள்ளுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும்.  ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

    புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாக பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

    ஆதலால், நற்பன்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மதுமொழியானாய் ! மணிமொழியே!

    தில்லி                                                      உ                            25-02-14

     

    மொழியே மொழியே தமிழ் மொழியே

    ஈன்றெனைக்  காத்தத் தாய்மொழியே

    மணியென அழைத்தாய்! மார்பளித்தாய்!

    மதுமொழியானாய் ! மணிமொழியே!

     

    மழலாய் என்றென்  த‌மிழ் ரசித்தாய்

    நிழலாய்  வந்தென்  நடை பயின்றாய்

    சுழலாய் வாய்மொழி திகட்டியதாய்

    குழலாய் மடலை வரைந்தேன்! நான்.

     

    காலம் மாறும் உண்மைதான் காசினி மாறும் உண்மைதான்

    பாலம் ஆகும் மொழிபெயர்ந்தால் பலனும் இல்லை உண்மைதான்

    தமிழைத் தமிலாய் சிலர் கூற தமிழை ட்டமிலாய் சிலர் பேச

    அமுத அப்பம் கரைந்திங்கே அப்பளமாகி நொறுங்குதடி!

     

    கழகம் என்பதைக் கலகமென அழகன் என்பதை அலகனென

    பழகும் நாவில் பலகாலம் பயிலாவகுப்பின் சதியாமோ

    அம்மா அத்தை இவைமாறி “மம்மி ஆன்டி” தமிழானால்

    சும்மா இருக்க முடியாது தோட்டா எடுப்பேன் புரியாது.

     

    “அய்யா” என்று அழைக்காது “ஹாயென்றும்” அழைப்பார்கள்

    “அச்சா”   என்றும் விளிப்பவர்கள் அப்படியாயெனில் விழிப்பார்கள்!

    அயலார் தமிழைக் கற்றாங்கே  அழகாய் சொல்லிடக் கேட்டாலும்

    இயலார் தமிழ்நாட் டுடையோரே! “இன்னா நயினா” என்பார்கள்.

     

    காப்பியம் காவியம் சங்கமென  ஆயும்சரித்திர ஆய்வாளர்

    கூப்பிடும் மேடையில் அங்கமென அறிந்ததை சிரிக்க மொழிவாரே

    தேக்கிய நீர்மடை கூட்டமது  நாற்றமெடுத்திடக் காணாது

    ஆக்கிய  உரையும் வீணாமோ  ஆய்வுரை அதனில் பயனுளதோ?

     

    முகத்தைப் பார்த்து பாராட்டி  சால்வைகளோடு சீராட்டி

    அகத்தைக் கந்தல் ஆக்கியதால் அகந்தையாகிடும் சாராம்சம்

    பணத்தை பதவியும் புகழையுமே தராசு ஆக்கி எடைபோட்டின்

    படைப்பின் ஆக்கம் ஆழமுடன் மொழியும் குழியில் வீழாதோ

     

    முத்துடன் சேரும் முத்தமிழே! மெல்ல எந்தன் முறையீடு

    இத்துடன்  யாவும் போகட்டும் இனிமேலாவது வாழட்டும்

    அன்று வாடியப் புலவர்க்கென பெருத்த செலவினில் மாநாடு

    இன்று வாழும் அறிஞரைநீ      இருக்கும்போதே பாராட்டு

     

    அப்பா அம்மா தமிழ்பேச குழவியர் தமிழில் பதில்கூற‌

    தாத்தா பாட்டி கதைச்சேர‌ பேரர் பேத்தியர் இளைப்பார‌

    தமிழகம் விட்டு நகர்ந்தாலும் இல்லம் தமிழகம் ஆகவிடு

    எழிலகம் எட்டி இருந்தாலும் உள்ளம் தமிழினில் ஆளவிடு

     

    அன்புடன்

    உன் மகன்

    Share