கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை!…

பேரா.துரைஅரசன்

கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை

நோக்கம்:

ஐந்திணகளைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசை முறையில் கூறுவதே நடைமுறை வழக்காகும். ஆனால் தொல்காப்பியம் தொடங்கி அகப்பொருள் இலக்கணம் கூறும் பல இலக்கண நூல்களில் ஐந்திணைகளின் வரிசை முறை வெவ்வேறாக உள்ளன. இந்நூல்கள் கூறும் வரிசை முறையிலிருந்து கலித்தொகையில் இடம் பெற்றுள்ள இத்திணைகளின் வரிசைமுறை முற்றிலும் மாறி அமைந்துள்ளது. இது குறித்து ஆய்வு நோக்கில் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. தொல்காப்பியர்:

‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ (தொல். அகத்திணையியல், நூ.5 )

என்பது ஒல்காப் புகழ் தொல்காப்பியரின் வரிசை அமைப்பியல் முறைமை ஆகும். இதில் தொல்காப்பியர் பாலைத்திணையைக் குறிக்கவில்லை.  இவர்,

‘நடுவண் ஐந்திணை நடுவண தொழிய

படுதிரை வையம் பாத்திய பண்பே’ (தொல். அகத்திணையியல், நூ.2 )

என்று கூறியதன் மூலம் மேற்காட்டிய வரிசை முறையில் நடுவில் பாலைத் திணை அமைத்துக் கொள்ளப்படும். எனவே, தொல்காப்பியர் கருத்துப்படி முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பது ஐந்திணை வரிசை முறை ஆகும்.

2. நம்பியகப்பொருள்:

நம்பியகப்பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளது. இதனை,

‘குறிஞ்சி பாலைமுல்லை மருதம்

நெய்தல்ஐந்திணைக்கு எய்திய பெயரே’          (நம்பியகப்பொருள், அகத். நூ. 6)

என்று அந்நூல் குறிப்பிட்டுள்ளது.

3. இறையனாரகப்பொருள்:

இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று ஐந்திணைகளை வரிசைப் படுத்தி உள்ளது. இதனை, ‘ஐந்திணையாவன யாவையோ எனின், குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என இவை’ (இறையனராகப்பொருள் உரை,ப.17) என்பதன் மூலம் அறிய முடிகிறது.

4. தொன்னூல் விளக்கம்:

தொன்னூல் விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கையாண்டுள்ளது. இதனை,

‘குறிஞ்சி பாலை முல்லை மருத
நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
வரையே சுரமே புறவே பழனந்
திரையே யவையவை சேரிடந் தானு
நிரையே யைந்திணை நிலமெனப் படுமே’        (தொன்னூல் விளக்கம், நூ.174)

என்ற தொன்னூல் விளக்க நூற்பா காட்டி நிற்கிறது. நம்பியகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன ஐந்திணை வரிசை முறையில் ஒத்துள்ளன.

5. தமிழ்நெறி விளக்கம்:

தமிழ்நெறி விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று நம்பியகப்பொருள் வரிசை முறையையும் தொன்னூல் விளக்க வரிசை முறையையும் ஒத்து அமைந்துள்ளது. இதனை,

‘பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்
பரப்பமை வாரி குறிஞ்சிமுதற் பாகே’                      (தமிழ்நெறி விளக்கம், நூ.3)

என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.

6. வீரசோழியம்:

 முல்லை குறிஞ்சி மருதத் தொடுமுது பாலைநெய்தல்
சொல்லிய காஞ்சி சுரநடை கைக்கிளை பாலைதும்பை
இல்லவண் முல்லை தபுதாரந் தாபத மேய்ந்தவள்ளி
அல்லது காந்தள் குறுங்கலி வெட்சி யடல்வஞ்சியே

(வீரசோழியம் 87)

என்ற வீரசோழிய நூற்பா முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று ஐந்திணை அமைப்பு முறையைக் குறிப்பிட்டுள்ளது.

7. முத்துவீரியம்:

முத்துவீரியம் ஐந்திணை வரிசைமுறையை,

‘அகப்பொருள் கைக்கிளை யைந்திணை பெருந்திணை
எனவெழு வகைப்படு மென்மனார் புலவர்’  (முத்துவீரியம், நூ.770)

என்ற நூற்பா மூலம் காட்டியுள்ளது. இதற்கு ‘அகப்பொருள் – கைக்கிளையும், குறிஞ்சி – முல்லை – பாலை – மருதம் – நெய்தலாகிய ஐந்திணையும், பெருந்திணையும் என ஏழு வகைப்படும்’  (மேற்படி, ப. 215) என்று உரையாசிரியர் விளக்கம் கூறியுள்ளார். இவ்வரிசை முறை தொல்காப்பிய வரிசை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளது.

8. சுவாமிநாதம்:

‘திணைகுறிஞ்சி, பாலை,முல்லை, மருத(ம்),நெய்தல், ஐந்தாம்’  (சுவாமி. நூ. 72)

என்று ஐந்திணைகளை சுவாமிநாதம் வரிசைப்படுத்தி உள்ளது. இவ்வரிசை, நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ்நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய நூல்களில் அமைந்துள்ள வரிசைமுறையை ஒத்துள்ளது.

ஐந்திணை வரிசைமுறை:

எனவே மேற்கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து ஐந்திணைகளை வரிசைப்படுத்துகின்ற முறையில், தொல்காப்பியமும் முத்துவீரியமும் ஒத்துணவர்வு கொண்டுள்ளன. அதாவது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று இவ்விரு நூல்களும் ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளன.

நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் ஐந்திணைகளை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளன.

இவ்விரண்டு முறைகளிலிருந்தும் வேறுபட்டு இறையனராகப்பொருளும் வீரசோழியமும் வெவ்வேறு முறைகளைக் குறிப்பிட்டுள்ளன. அதாவது இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று வரிசைப்படுத்தி உள்ளது; வீரசோழியம் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளது.

உலக வழக்கு:

ஐந்திணை வரிசை முறைகளில் மேற்கண்ட எட்டு நூல்களில் நான்கு முறைகளைக் காணமுடிகிறது. ஆனால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதே நடைமுறை வழக்காக அல்லது உலக வழக்காக உள்ளது. இவ்வுலக வழக்கையும் இணைத்துப் பார்த்தால் ஐந்திணை வரிசை முறையில் ஐந்து நிலைகள் உள்ளன.

கலித்தொகை:

மேற்காட்டிய ஐந்து முறைகளிலிருந்தும் மாறுபட்ட வகையில் கலித்தொகையின் ஐந்திணை வரிசை அமைப்பு முறைமை அமைந்துள்ளது. அதாவது கலித்தொகையில் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற முறையில் ஐந்திணை வரிசை அமைந்துள்ளது.

ஐயங்கள்:

கலித்தொகையில் அமைந்துள்ள இம்முறை சரிதானா?  இங்ஙனம் அமைக்கக் காரணம் என்ன? பாலையை முன் வைத்தது சரிதானா? என்ற வினாக்கள் எழுகின்றன.

நச்சினார்க்கினியர்:

உச்சிமேற் புலவர்களில் நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் ‘சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ என்றதால் சொல்லாத முறையிலும் சொல்லவும் படும் என்று கூறி கலித்தொகையின் வரிசை முறையை நியாயப்படுத்த முனைகிறார். ஆனால் அவரின் இவ் வாதம் ஏற்புடையதன்று.

கலித்தொகையின் ஐந்திணை வரிசைமுறைக்கானக் காரணங்கள்:

கலித்தொகையில் ஐந்திணை வரிசை முறை இங்ஙனம் அமையப் பின் வரும் காரணங்களைக் கூறலாம்:

1) ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதால் தலைவியைப் பிரிந்து தலைவன் கடமையாற்றச் செல்வதால் பாலையை முன் வைத்தார் எனலாம்.

2) கல்வி, தூது, செல்வம் ஈட்டுதல் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். இவை ஆடவரின் இயல்பாதலால் இதன் பொருட்டுப் பிரியும் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாலையை முன் வைத்திருக்கலாம்.

3) பிரிந்து போய் தலைவன் ஆற்றும் செயல்கள் எல்லாம் அவன் செய்வதற்குரிய அறங்களே ஆகும். மேலும் இல்லத்தில் நிகழ வேண்டிய விருந்தோம்பல் முதலிய நல்லறங்கள் முட்டின்றி நிகழ்வற்கும் இவை இன்றியமையாக் காரணங்களாகும். இவற்றை எல்லாம் இத்திணை தன்னுள் அடக்கி நிற்றலான் இத்திணையைத் தலையாயதாகக் காட்டும் முகத்தான் கலித்தொகையில் முன்னிறுத்தி இருக்கலாம்.

4) பாலை முழுவதும் பிரிவன்று; தலைவன் பிரிவானோ என்று அஞ்சுவது பெரும்பாலும். அஞ்சும் பொழுது அன்பின் நொய்மை நன்கு புலப்படும். பிரிந்து சென்றவன் தான் விட்டு வந்த மனைவியைக் குறித்து வருந்துவது; நடுவில் ஐயோ இவ்வளவு கொடுமையான வழியில் சென்றேனே என்று வழியைக் குறித்து வருந்துவது. எந்தப் புலவனும் துன்பத்தைப் பற்றிச் சொல்லும்போதுதான்,  மனித தத்துவத்தை அறிந்துள்ள முறையை நன்குணர்த்த முடியும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் Tragic-Comedies சிறந்தவை என்பர். இதற்குக் காரணம் இன்பமும் துன்பமும் விரவி வருவதே ஆகும். அது போலவே தமிழிலும் பாலைத்திணை சிறந்தது. ஆதலால் கலித்தொகை என்னும் தொகையுள் பாலைத்திணையை முற்கூறியதில் அதிசயம் ஒன்றுமில்லை என்று கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் அம்மையார் (ப.74) குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை:      

முதுகலைத் தமிழ் பயில்கின்ற காலத்தில் கலித்தொகைப் பாடத்தைப் படிக்கின்ற வேளையில்  கலித்தொகையில் பாலையை முன் வைத்தது சரியா என்று ஐயம் கொண்டேன். அவ்வையத்திற்கு விடை தேடியபொழுதுதான் கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் கூறிய விளக்கங்கள் கிடைத்தன. இது சரியா? ஏற்புடையதா? என்பதைத் தமிழாய்வுலகம் ஆராய்ந்து தெளிவுறுத்த வேண்டும்.

இக்கருத்தை முன் வைத்து இக்கட்டுரையை எழுத முனைந்தபொழுதுதான் அகப்பொருள் கூறும் இலக்கண நூல்களில் ஐந்திணை வரிசைமுறை எங்ஙனம் அமைந்துள்ளது என்று  ஆராய்ந்தேன். அப்பொழுதுதான் மேற்காட்டிய எட்டு நூல்களில் ஐந்திணை வரிசைமுறை வெவ்வேறு விதமாக (எட்டு நூல்களில் நான்கு விதம்) அமைந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. ஒரு சிக்கலை அவிழ்ப்பதற்காக இறங்கிய முயற்சியில் இன்னொரு சிக்கல் முகிழ்த்துள்ளது. அதாவது உலக வழக்காக உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசைமுறை மேற்காட்டிய எந்த நூல்களிலுமே இடம் பெறவில்லை. இவ்வரிசை முறை எப்படித் தோன்றியது?; எங்கிருந்து வந்தது?.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல ஐந்திணை வரிசைமுறை பற்றிய விளக்கம் கடினமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் எல்லாவறையும் ஆய்வு செய்தாகி விட்டது; அதில் மேலும் ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

1 thought on “கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை!…

  1. நல்ல ஆராய்ச்சி நோக்கிலான கட்டுரை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அமைப்பு வரிசைமுறையில் இவ்வளவு மாறுபாடுகளா?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க