வாராயோ வெண்ணிலாவே..
கவிஞர் காவிரி மைந்தன்
காதலர்கள் கொஞ்சி விளையாட இந்த வெண்ணிலா மட்டும்தான் காலகாலமாக இடம் கொடுத்து வருகிறது! எந்தக் கவிஞனும் சின்னக் குழந்தையாகிவிடுகிறான்.. நிலாவே உன்னைக்கண்டு! தூது விடுப்பதற்கும் நீயே சாலப்பொருத்தம் என்று சரித்திரம் பேசுகிறது! வட்டமுகம்காட்டி வான்வழியே உலா காணும் உன் வதனம் கண்டு சொக்கிப் போகாதவர்கள் யாரிங்கே? நீ சூரியனிடமிருந்து ஒளியைக் கடன்வாங்கியிருந்தாலும் உன் சுடர்மிகு ஒளிவெள்ளம் இன்பம் ஊட்டுவதால் இங்கே இரவுகளுக்குக்கூட கொண்டாட்டம்தானே! புரட்சிக்கவிஞர் முதல் பைந்தமிழர் பாசறை வழிவந்த எந்தக் கவிஞனும் உன்னைத் தொட்டுவிளையாட மறந்தவனில்லை! பட்டுக்கோட்டை கூட பாங்கான பாடல்தந்தான் அன்றோ.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா? மூத்தவளா வெண்ணிலாவே.. என்ன அருமையான பாடல்!
இதோ.. மற்றுமொரு வெள்ளித்திரைதந்த வெண்ணிலா பாடல்! அற்புத சுகமானது! ஆனந்த ரகமானது! நித்தமினிக்கும் இன்பத் திருவிழாபோல் நெஞ்சில் சந்தோஷ அலையடிக்குது! காதலனும் காதலியும்.. அட.. திரைப்படத்தில் கதாநாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பாடும் பாடலாக.. உன்னை இடையே வைத்துக் கொண்டு! கற்பனை ராஜ்ஜியம் நடக்கும்போதெல்லாம் கண்டிப்பாக உன் பங்கு அதிகமிருக்கும் என்பார்கள்! பாட்டுத் தேரோட்டம் பாங்காக நடந்திருக்க.. பாடிய குயில்கள் இரண்டு.. ஒன்று.. ஏ. எம். ராஜா மற்றொன்று.. பி. லீலா !
எஸ். ராஜேஸ்வரராவ் இசையமைப்பில் தஞ்சை ராமையா தாஸ் வரிகள் இதயம் தழுவிச் செல்கிறார்.. கவிதைபோல் ஒரு சில பாடல்கள்தான் திரையிசையில் அமையும்.. அந்த வரிசையில் இந்தப் பாடல் பொருந்தும்!
கனகச்சிதமான இசையும் கவிதையும் கலந்தினிக்கும் கானா அமிர்தம் என்பேன் நான்!
AMR:
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
அகம்பாவம் கொண்ட சதியால்
அறிவால் உயர்ந்திடும் பதினான்
அகம்பாவம் கொண்ட சதியால்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
PL:
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிட செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
AMR:
வாராயோ வெண்ணிலாவே
தன் பிடிவாதம் விடாது
என்மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது
என்மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது
PL:
வாராயோ வெண்ணிலாவே
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறம் ஆமோ நிலவே
AMR, PL:
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே