கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..- கவிஞர் வாலியின் கைவண்ணம்!
கவிஞர் காவிரி மைந்தன்
நீர்க்குமிழி என்னும் திரைப்படத்தை யாரும் மறக்கத்தான் முடியுமா? நகைச்சுவைத்திலகம் நாகேஷ் தான் ஒரு நவசர நாயகன் என உறுதிசெய்த படமாகும். முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து.. பிற்பாதியில் உள்ளம்கலங்கி அழவைத்துவிடுகிற அவரது நடிப்பை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பெற்றுத்தந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்கிற பாடலையும் இந்தப் படம் தாங்கி வந்தது.
தான் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உரிமையாளரின் புதல்வி வெளிநாடு செல்லும் முன் நடக்கின்ற ஒரு இனிய விழாவில் .. ஆடலும் பாடலும் உற்சாகம் கரைபுரள இடம்பெறுகிறது. உடல்நலிவுற்றிருக்கும் நாகேஷ் இத்தனை ஆட்டம் ஆடும்போதும் அவரைக் கண்காணிக்கும் மருத்துவர் மனவேதனையுடன் அக்காட்சியைக் காண்பதாக திரையோட்டம்!
மேடையில் நாட்டியம் ஒரு ஆடவன் ஆடும்போது அசந்துபோக வைத்தவர்கள் ஒரு சிலரே.. அவ்வரிசையில் நாகேஷ் முன்னணியில்! இணை சேர்ந்து ராஜஸ்ரீ பாடவும் ஆடவும் வருகிறார். கன்னிநதியோரம்.. மின்னி விளையாடும்.. பாடல்!
கவிஞர் வாலியின் கைவண்ணம்! இசையமைத்திருக்கிறார்.. வி.குமார்.. அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் அலங்காரம் செய்துகொண்டு வருகின்றன..
முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..
எண்ணிப் பார்த்தால் எத்தனை சொர்க்கம் என்கிற விதத்தில் ரசிக்கப்பட்ட பாடல்! காதல் பாடலாய் இருந்தாலும் கவிஞரின் பேனா நகரும்போது கதையின் முடிவை அவரால் தவிர்க்க இயலாமல்.. முடிவுரையோ.. தூங்க வேண்டுமோ என்றுதானே எழுதிவைத்திருக்கிறார்..
கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
உன்னழகு மேனி என்ன கதை கூறும்
வண்ண விழிமேடை வந்த இளம்பேடை
சின்ன இடையோ.. ஜோ..ஜோ.. சேர்ந்து இசை பாடும்!
கன்னங்கள் கோடி பெறுமோ.. கைகளில் ஆடிவருமோ..
எண்ணங்கள் பொங்கி வருமோ.. இன்பத்தில் பங்கு தருமோ
தாளாமல் ஓடிவருமோ.. தழுவாமல் ஆசை தீருமோ..
நாணத்தை பெண்மை விடுமோ.. நானின்னும் சொல்ல வேண்டுமோ..
முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..
நீர்க்குமிழி திரைப்படத்திற்காக டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..
நாகேஷ் திரையில்.. ராஜஸ்ரீயுடன்..