தில்லி                                                      உ                            25-02-14

 

மொழியே மொழியே தமிழ் மொழியே

ஈன்றெனைக்  காத்தத் தாய்மொழியே

மணியென அழைத்தாய்! மார்பளித்தாய்!

மதுமொழியானாய் ! மணிமொழியே!

 

மழலாய் என்றென்  த‌மிழ் ரசித்தாய்

நிழலாய்  வந்தென்  நடை பயின்றாய்

சுழலாய் வாய்மொழி திகட்டியதாய்

குழலாய் மடலை வரைந்தேன்! நான்.

 

காலம் மாறும் உண்மைதான் காசினி மாறும் உண்மைதான்

பாலம் ஆகும் மொழிபெயர்ந்தால் பலனும் இல்லை உண்மைதான்

தமிழைத் தமிலாய் சிலர் கூற தமிழை ட்டமிலாய் சிலர் பேச

அமுத அப்பம் கரைந்திங்கே அப்பளமாகி நொறுங்குதடி!

 

கழகம் என்பதைக் கலகமென அழகன் என்பதை அலகனென

பழகும் நாவில் பலகாலம் பயிலாவகுப்பின் சதியாமோ

அம்மா அத்தை இவைமாறி “மம்மி ஆன்டி” தமிழானால்

சும்மா இருக்க முடியாது தோட்டா எடுப்பேன் புரியாது.

 

“அய்யா” என்று அழைக்காது “ஹாயென்றும்” அழைப்பார்கள்

“அச்சா”   என்றும் விளிப்பவர்கள் அப்படியாயெனில் விழிப்பார்கள்!

அயலார் தமிழைக் கற்றாங்கே  அழகாய் சொல்லிடக் கேட்டாலும்

இயலார் தமிழ்நாட் டுடையோரே! “இன்னா நயினா” என்பார்கள்.

 

காப்பியம் காவியம் சங்கமென  ஆயும்சரித்திர ஆய்வாளர்

கூப்பிடும் மேடையில் அங்கமென அறிந்ததை சிரிக்க மொழிவாரே

தேக்கிய நீர்மடை கூட்டமது  நாற்றமெடுத்திடக் காணாது

ஆக்கிய  உரையும் வீணாமோ  ஆய்வுரை அதனில் பயனுளதோ?

 

முகத்தைப் பார்த்து பாராட்டி  சால்வைகளோடு சீராட்டி

அகத்தைக் கந்தல் ஆக்கியதால் அகந்தையாகிடும் சாராம்சம்

பணத்தை பதவியும் புகழையுமே தராசு ஆக்கி எடைபோட்டின்

படைப்பின் ஆக்கம் ஆழமுடன் மொழியும் குழியில் வீழாதோ

 

முத்துடன் சேரும் முத்தமிழே! மெல்ல எந்தன் முறையீடு

இத்துடன்  யாவும் போகட்டும் இனிமேலாவது வாழட்டும்

அன்று வாடியப் புலவர்க்கென பெருத்த செலவினில் மாநாடு

இன்று வாழும் அறிஞரைநீ      இருக்கும்போதே பாராட்டு

 

அப்பா அம்மா தமிழ்பேச குழவியர் தமிழில் பதில்கூற‌

தாத்தா பாட்டி கதைச்சேர‌ பேரர் பேத்தியர் இளைப்பார‌

தமிழகம் விட்டு நகர்ந்தாலும் இல்லம் தமிழகம் ஆகவிடு

எழிலகம் எட்டி இருந்தாலும் உள்ளம் தமிழினில் ஆளவிடு

 

அன்புடன்

உன் மகன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மதுமொழியானாய் ! மணிமொழியே!

  1. “அன்புள்ள அத்தான் வணக்கம் ” “அன்புள்ள மான் விழியே”, “எழுதி அனுப்புவது கடிதமல்ல‌”,  இன்னும் 
    எத்தனையோ  கடிதங்கள் இசைக் கவிதைகளாக இன்றும் பாடப் ப்டுவது யாவரும் அறிந்ததே 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *