Featuredஇலக்கியம்கட்டுரைகள்

“மஹா சிவராத்திரி”

தமிழ்த்தேனீ

Picture1

ஒரு முதியவர் இரவு இனிய இரவு என்று சொல்லிவிட்டுப் படுத்தார், இருமல் வந்தது அவருக்கு, எழுந்து உட்கார்ந்தவர் இன்னிக்கு சிவராத்திரிதான் என்றார். அன்று உண்மையிலேயே மஹாசிவராத்திரி. அது அவருக்குத் தெரியவில்லை….!!!!! அன்று அவர் தூங்கவே இல்லை, ஆனால் தூக்கம்தான் வரவில்லையே என்று ஓம் நம் சிவாய நமஹ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். காலையில் பொழுது விடிந்தது, சற்றே ஆயாசத்துடன் எழுந்து குளித்துவிட்டு, வழக்கமாகச் செய்யும் பூஜையை செய்து விட்டு, காலை உணவு உண்டார். மதியம் நல்ல சாப்பாடு, இரவு வழக்கம் போல் இரண்டு வாழைப்பழங்கள், ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இனிய இரவு என்று சொல்லி விட்டு படுத்து தூங்க ஆரம்பித்தார். ஆழ்ந்த தூக்கம். அன்று அவருக்கு இருமல் வரவே இல்லை. அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகு அவருக்கு 10 வருடங்களாக இருந்த இருமல் வரவே இல்லை.

முதல் நாள் இருமலின் கொடூரத்தால் நொந்து போய் இன்று சிவராத்திரிதான் என்று சொன்னாரே, அன்று உண்மையாகவே மஹா சிவராத்திரி…. அதன் விசேஷமோ, அன்றி இறைவன் சிவனின் நாமத்தை அன்று இரவு முழுவதும் ஏகாக்ர சிந்தையுடன் அவர் ஜபித்ததின் விளைவோ, அவருடைய வியாதி முற்றிலும் குணமாகி விட்டது. நம்புபவர்களுக்கு தெய்வம் நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில் அதாவது நாதனும் சக்தியும் நமக்குள்ளே இருக்கும் வரை நம்பிக்கைதானே தெய்வம்.

ஆகவே நாம் தெரிந்து செய்தாலும், தற்செயலாக செய்தாலும், நல்ல நேரங்களில் இறைவனை தொழுவது நல்ல பலன்களையே தரும் என்பது சத்தியமான உண்மை. நாமறியாமல் செய்யும் பாவங்களும் புண்ணியங்களும் அனைத்திற்கும் பலன் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஆகவே தெரியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்கிறோம். தெரிந்தே ஒரு புண்ணியமாவது செய்வோமே. நாளை இரவு மஹா சிவராத்திரி,மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மஹா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரியில் சர்வேஸ்வரனையும் அம்பிகையையும் ஆத்ம சமர்ப்பணம் என்னும் மனப்பூர்வமான பக்திசெலுத்தினால், பெரும் புண்ணியம் என்று சொல்வார்கள், மகிமையைப் நாமும் தான் உணர முற்படுவோமே.

ப்ரும்ம முஹூர்த்தம் என்று சொல்லக்கூடிய விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு, மனப்பூர்வமாக மஹாசிவனை வழிபட்டு, இரவு முழுவதும் அர்த்தநாரீச்வரனாகிய ஈச்வரனை மனதிலிருத்தி தூங்காமல் விழித்திருந்து, அவன் லீலைகளை சொல்லக்கூடிய திருவாசகம் படித்து மறுநாள் காலையில் ஸ்னானம் செய்துவிட்டு அந்த மஹா சிவனையும் அகிலாண்டதேவி அன்னை பராசக்தியையும் நமஸ்கரித்து விரதம் முடிப்போம். மேலும் சக்தியை தன்னில் பாதியாகக் கொண்ட சிவ பெருமானுக்கும் சக்திக்கும் உகந்த அத்துணை சித்ரான்னங்களையும், அவர்களுக்கு மனப்பூர்வமாக நைவேத்யமாகப் படைத்து நம் மனதுக்கும், சக்தி சமேத ஈச்வரனுக்கும் உகந்த மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து (முக்கியமாக வில்வ இலைகள்) அம்பாளையும், ஈச்வரனையும் தம்பதி சமேதரராக மானசீகமாக இருத்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் நமஸ்காரம் செய்து, மனம் குளிரப் பண்ணி, நாமும் அந்த ப்ரசாதங்களை மனமார, வயிறார உண்டு, கூடியவரையில் அன்று ஒரு நாளாவது, சில ஏழைகளுக்கும், அந்தப் ப்ரசாதங்களைப் பகிர்ந்தளித்து அவர்களையும் த்ருப்திப் படுத்துவோம்.

“தெய்வம் மனுஷ ரூபேண” என்று சாஸ்திரங்கள் சொல்கிறது, பல ராத்திரிகள் நம்மை தூங்கச் செய்து, காலையில் சக்தியை அளித்து, அதாவது மீண்டும் நமக்கு உயிராகிய சக்தியை அளித்துக் காக்கும் அம்பாளையும் ஈச்வரனையும் நமஸ்கரித்து அருள் பெறுவோம்….!!!!! எல்லா நலன்களும் நம்மை நாடி வந்தடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ஈஸ்வரோ ரக்ஷது :

Picture1

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க