கூந்தல்
கருமேகம்.
நெற்றி
நிலா.
பிறை.
விழி
மீன்.
நாசி
கிளி.
வாய்
கோவைப்பழம்.
பல்
முத்து.
கழுத்து
சங்கு.
தனம்
கவிழ்ந்தமலை.
இடை
கொடி.
தொடை
வாழை.
இப்படியான
உருவகங்களால்
ஊனமாகிப்போனது
உன்னையும்
தன்னைப் போன்றதொரு
சக மனுசியாய் மதிக்காத
என் ஆண்மை தனம்!
கூந்தல்
கருமேகம்.
நெற்றி
நிலா.
விழி
மீன்.
நாசி
கிளி.
வாய்
கோவைப்பழம்.
பல்
முத்து.
கழுத்து
சங்கு.
தனம்
கவிழ்ந்தமலை.
இடை
கொடி.
தொடை
வாழை.
இப்படியான
உருவகங்களால்
ஊனமாகிப்போனது
உன்னையும்
தன்னைப் போன்றதொரு
சக மனுசியாய் மதிக்காத
என் ஆண்மை தனம்!
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.
எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.
என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு
காரணம் உண்டு.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.
உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.
1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.
உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.
1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.
இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.
எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.
1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும்,
தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.
இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.
விளைவு !
1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.
கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.
அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.
இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.
தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.
இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.
இதற்காகத்தான் கவியரசர்,
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்! என்று எழுதி வைத்தாரோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
பெருவை பார்த்தசாரதி
புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர, செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான். அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.
மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.
மக்கள் அறவழியில் சென்று ஒழுக்கத்தை முறையாகக் கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்
எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.
மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.
குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.
‘’நில்லென்று மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு
கொல்லென்று வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’
என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.
‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.
தற்காலத்தில் அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும். இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.
பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன். மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.
ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன. இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.
யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.
தொடரும
படத்திற்கு நன்றி :
தமிழ்த்தேனீ –
தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே! தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!
ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே! செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே! உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.
உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா? அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!
பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.
1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.
3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்
4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்
மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.
தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.
” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”
இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.
அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.
நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.
காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது. நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம். ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.
ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?
யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.
“பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “ என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.
அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.
1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.
2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்
3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்,
அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும். ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.
இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.
எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.
பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.
நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.
இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்
ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.
வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.
உங்களுக்கும் வியர்க்கிறதா?
இன்னம்பூரான்
4. தகைமை மூன்று
தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.
4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக. அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு. இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம்.
4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது. உரையாசிரியர் அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும் எசுர், சாமவேதம் என்ற பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியிலும் ‘…சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம வேதியனே, நெடுமாலே…’ (7-7-3) என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள் வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘… இராமனை முதன்முறை கண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன் கூற்றினைச் செவிமடுத்த இராமன் இவன் இருக்கு, எசுர்,சாமவேதம் என்ற வேதங்களில் பயிற்சியுடையனாதல் வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு வணக்கமும் தொடர்ச்சியும் இனிமையும் உடையதாய் உள்ளது என்று இலக்குவனிடம் குறிப்பிட்டதாக வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன…’ என்றும் எழுதியுள்ளார்.
5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. ‘இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.
(தொடரும்)
இன்னம்பூரான்
07 11 2012
உசாத்துணை:
திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
தமிழ் இணையக் கல்விக்கழகம்
திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm
தி.வே. கோபாலையர்:http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=5
சித்திரத்திற்கு நன்றி:
http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-23/namu1.jpg
பவள சங்கரி
தலையங்கம்

அனைத்துலகும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா மற்றும் மிட் ராம்னி என் இரு பெரும் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஜனநாயக விழா, பல ஆயிரம் கோடி (5500 டாலர்) செலவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் நிலையான முடிவுகள் என்று சில உண்டு. இந்தியாவுடனான தொடர்புகள் தொடரப்போவதில் சந்தேகம் இல்லை. சீனாவுடனான வணிகத் தொடர்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். பாகிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தாலும் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு, போன்றவைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். வெற்றிகரமான தொழில் அதிபரா அல்லது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அதிபரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் 48 மணி நேரத்தில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். பணக்காரத் தத்துவம் நிறைந்த , சிறந்த தொழிலதிபரான மிட் ராம்னி தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்வந்தரின் நலனுக்காக மட்டுமே முடிவெடுத்து, செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தொழிலகங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்க முதலாளித்துவ தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதாகவே அமையும். அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏழை மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் வாய்ப்பு அதிகம். புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏழை மக்களின் கண்ணீர் துடைப்புகளுக்கான நம்பிக்கை அதிகரிக்கலாம். ஏழை மக்களின் கண்ணீரா அல்லது செல்வந்தரின் பாதுகாக்கப்படும் செல்வமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!
படத்திற்கு நன்றி :
http://www.bbc.co.uk/news/world-us-canada-20180630
பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
பலி கேட்கிறது சட்டம்,
பள்ளிச்சிறுமியின் உயிரை..
சட்டத்தின் ஓட்டை அடைத்திட
முயன்றால்,
சாவு எத்தனையோ..
அட,
அதுமட்டும் நடக்காது-
அதை வைத்துத்தானே
ஆட்சியாளர்கள் மற்றும்
பலரது பிழைப்பே…!
படத்துக்கு நன்றி
http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece
சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்
அடுத்த வீட்டுக்காரி முந்திக்கிட்டான்னா,
நம்ம பூ விக்காது.
எல்லாப் பூவும் வித்து,
பூக்காரருக்குக் கணக்குத் தீர்த்து,
அரிசி வாங்கியாந்து,
சோறாக்கணும்.
நேரமாச்சுன்னா,
அப்பா குடிச்சிட்டு வந்து,
அம்மாவை அடிக்கும்.
இனியும் அடிவாங்கினா,
அம்மா செத்துடும்.
சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்.
படத்துக்கு நன்றி
http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1194193
பிரபு
பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.
அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy (www.amazon.com/dp/B009XUI1X6)
பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.
பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.
முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது, சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் – அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.
பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.
உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.
அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது.
இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.
அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.
The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors என்ற இந்தப் புத்தகம் அச்சு வடிவில் வெளிவரவில்லை. அமேசான்.காமில் (www.amazon.com/dp/B009XUI1X6) மின் புத்தகமாக வாங்கிக் கொள்ள்ளலாம். வாங்கிய பின் Kindle ரீடர் இருந்தால் அதன் மூலம் வாசிக்கலாம். இல்லையென்றால் Kindle for PC என்ற இலவச சாஃப்ட்வேரை http://www.amazon.com/gp/feature.html/ref=sv_kstore_1?ie=UTF8&docId=1000493771 இல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கொண்டு நமது கம்ப்யூட்டரிலேயே வாசிக்கலாம்.
மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.
****