Blog

  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    ஆங்கில எழுத்தாளர்கள் பலர் கடந்த கால சரித்திர நாயகர்களை – குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை மிகச் சீரிய வகையிலும், மிக ஆழமாகவும் ஆராய்ந்து அதையே கதை போல எழுதி எத்தனையோ வாசகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இர்விங் வால்லஸ், இவர் எழுதிய கதை ஒன்றில் ஜெர்மனியின் ஹிட்லரைப் பற்றிய விவரங்களை மிக ஆராய்ந்து ஹிட்லர் 1945 இல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் 1962 இல் இயற்கையாக இறந்ததாகவும், மனைவி ஈவா இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் எழுதி பரபரப்பு ஏற்படுத்துவார். அதற்காக அவர் கொடுத்த தரவுகள் மிகப் பலமான சான்றுகளாக கதையோடு ஒன்றி இருக்கும். இருந்தும் உண்மையில் அது கற்பனைதான் என்பதே உண்மை. நான் விரும்பிப் படித்த புத்தக்ங்களில் இது ஒன்று.

    ஆனால் இந்தியாவில் இர்விங் வாலஸுக்கும் முன்பாகவே ஒரு எழுத்தாளர்  இதே போல தோற்றம் கொண்ட கதையை ஆங்கிலத்தில் எழுதினார். அவர்தான் பாரதிய வித்யா பவனின் ஸ்தாபகரான மறைந்த கே. எம். முன்ஷி. இவர் எழுத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரத மக்களின் உணர்வோடு ஒன்று கலந்து புகழப்பட்டு வரும் மதுராபுரி மாயன் அந்தக் கண்ணபிரானே. ஆனால் புராணங்கள் வழியாகப் போகாமல் புராணங்களை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக் கொண்டு கண்ணன் எப்படி இந்த உலகுக்கு வந்திருப்பான், எப்படி சிந்தித்திருப்பான், எப்படி பாரதப் போரை முடித்திருப்பான் என்ற தீர்க்க சிந்தனையின் பேரில் ஒரு புத்தகம் எழுதினார். கிருஷ்ணா சீரிஸ் என்ற பெயரில் ஏழு புத்தக்ங்களாக அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் கண்ணன் தெய்வீகப் பிறவி அல்லவே அல்ல. சாதாரண மானுடன். ஆனால் ஒவ்வொரு சாகசத்தையும் அவன் வெற்றியுடன் முடித்துக்கொடுக்கும்போது அவன் மகுடத்தில் மயிலிறகு ஒன்றொன்றாக ஏறும். மிக அருமையாக இப்படித்தான் நடந்தது என்பதை நமக்கு அடித்துச் சொல்வது போல ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கும். திரௌபதி சுயம்வரமும் அவள் ஏன் ஐவரை மணக்க ஒப்புக் கொண்டாள் என்பதையும் தன் பாணியில் இவர் விவரிக்க விவரிக்க, அட, அனைத்தும் சரிதான் என்றுதான் நமக்குத் தோன்றும்.
     
    இந்த கிருஷ்ணா கதையைத் தமிழில் எழுதி வருகிறார் திருமதி கீதா சாம்பசிவம். வாரா வாரம் இவர் பிளாக்கில் வந்து கொண்டிருக்கிறது.http://kannanvaruvan.blogspot.in/ இந்த வார அத்தியாயத்தில் இயற்கையை வர்ணித்திருப்பார். எத்தனைதான் முன்ஷி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் அந்த வர்ணனையைப் படிக்கும்போதே அந்த இடத்தையே நாம் உணர்வது போல ஒரு நினைவலை..

    கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

    எழுத்துப் பணிகளை ஆரவாரமில்லாமல் செய்து வருபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கீதாம்மா என நான் பிரியமுடன் அழைக்கும் திருமதி கீதா சாம்பசிவம். இவர் எழுத்துகள் அனைத்தும் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக இருப்பினும் விவரங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அவைகளில் இவரது கடின உழைப்பு தெரியும். சிதம்பர ரகசியம் எனும் தல வரலாற்றினை மிக அருமையாக எழுதினார். பல சமயங்களில் எனக்கு ஆச்சரியம் வருவது உண்டு என்றால் அது இந்த கீதா சாம்பசிவம் அவர்களின் சில அயராத பணிகளைக் கண்டுதான். எல்லோருக்கும் சலிக்காமல் ஊக்குவித்து பின்னூட்டம் இடுவது, தன்னிடம் கிடைக்கப்பெற்ற எல்லாவற்றையும் கூர்ந்து படிப்பது (இது மிகவும் முக்கியம்),

    ஆனாலும் சென்றவாரம் அவர் முன்ஷியின் கிருஷ்ணா அத்தியாயத்தில் இயற்கைக் காட்சிகள் எழுதிய விதம் என்னை  மிகவும் ஆர்வத்துக்குள்ளாக்கினதான். இந்த வார வல்லமையாளராக திருமதி கீதா சாம்பசிவத்தைத் தேர்வு செய்வதில் வல்லமையாளர் குழு பெருமை கொள்கிறது. வாழ்க அவரது எழுத்துப் பணி!

    இந்த வார கடை பாரா: எனக்கு மிகவும் பிடித்த திருமூலர் பாடல். பாடலுக்கு உள்ளார்ந்த விளக்கத்தோடு கூடிய பொருளோடு வல்லமையில் வெளியிட்ட சுலோச்சனா அவர்களுக்கு நன்றி. http://www.vallamai.com/literature/articles/28444/

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-2)

     

    பர்வத வர்தினி

    ஒரு சில நிமிடங்களிலேயே கால இயந்திரம் அமைதியடைந்தது போல் தோன்றியது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள் சாரு. கிருஷ்ணசாமி அவளைக் கண்டு “நாம வந்து சேர்ந்துட்டோம் சாரு” என்றார். பிறகு கதவைத் திறக்க ஒரு பொத்தானை அழுத்தினார். கதவு சத்தமின்றி மெல்லத் திறந்தது. இருவரும் கால இயந்திரத்தை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தார்கள். அது இரவு நேரம். வானில் வெண்ணிலா பால்மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த இடம் நிறைய மரம் செடிகளுடன் ஏதோ காடு போல் தோன்றியது. 

    சாரு மெல்ல நடக்கத் துவங்கினாள். கிருஷ்ணசாமி அவளிடம் சற்று பொறுமையுடன் இருக்கும்படி கூறிவிட்டு அந்த இடத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஏதோ தேடுவது போல் தோன்றியது. சற்று நேரத் தேடுதலுக்குப் பிறகு அவர் சாருவை அழைத்தார். “இங்கே பாரு சாரு” என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அங்கே செடிகளும் புதர்களும் மிகவும் அடர்த்தியாக இருந்தன. “நம்மோட கால இயந்திரத்தை இந்த இடத்திலே மறைச்சு வெச்சுட்டு கிளம்புவோம்” என்றார். பிறகு மெல்ல கால இயந்திரத்தை புதர்களுக்கு நடுவில் மறைத்து வைத்தார். 

    “நாம போயிட்டு சீக்கிரம் வந்துடணும். நாம சரியான காலத்துக்கும் இடத்துக்கும் வந்திருக்கோமான்னு பார்த்துட்டு,நீ தெரிஞ்சிக்க விரும்பினதையும் தெரிஞ்சிக்கிட்டு கூடிய சீக்கிரம் வரணும். இது யார் கண்ணிலேயும் பட்டுடக்கூடாது” என்று கூறினார் கிருஷ்ணசாமி. 

    “நிச்சயமா அங்கிள்! இப்போ நாம போகலாம்” என்றாள் சாரு. 

    அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் வழி தேடி நடந்து சென்றார்கள். 

    சற்று தூரம் சென்ற போது காட்டில் ஏதோ வினோதமான சத்தம் கேட்டது. மிகவும் எச்சரிக்கையாக இருவரும் தொடர்ந்து முன்னேறினார்கள். சற்று தொலைவில் மங்கலான வெளிச்சத்தில் மிகவும் வியப்பிற்குரிய காட்சி தெரிந்தது. அங்கே மரங்களின் ஓரத்தில் ஒரு கோட்டை மதில் சுவரும் அதன் மீதிருந்து இறங்க யத்தனிக்கும் ஒரு வாலிபனும் தெரிந்தார்கள். அவனது கையில் ஒரு வாள் இருந்தது. அவனது உடை பழங்கால வீரர்களின் உடையைப் போன்று தோன்றியது. கீழே ஒரு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது, அருகில் ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருவரும் மெல்ல நடந்து சென்று ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டார்கள். கீழேயிருந்தவன் மேலிருந்தவனோடு ஏதோ பேசினான். பிறகு மேலிருந்தவன் கீழிருந்தவன் மீதே குதித்தான். இருவரும் சண்டையிட்டனர். இடையில் தடிமனான மற்றொருவன் ஒரு மரத்தின் பின்னிருந்து வந்து நாயின் மீது ஒரு கயிற்றையிட்டு மரத்தில் கட்டினான். பிறகு மேலிருந்து குதித்தவனுக்கு உதவியாக கீழே நின்றிருந்தவனோடு சண்டையிட்டான். கீழேயிருந்தவன் மயங்கி விழுந்தான். 

    இவையெல்லாம் ஏதோ ஊமைப்படம் போலே சாருவுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தெரிந்தது. அவர்கள் பேசியது ஏதும் காதில் விழவில்லை. ஆனால் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு சாரு மேலிருந்து குதித்தவன் வந்தியத்தேவன் என்றும் உதவி செய்த  குண்டு மனிதன் ஆழ்வார்க்கடியான் என்றும் நாயுடன் வந்து சண்டையிட்டவன் தேவராளன் என்றும் தெரிந்துகொண்டாள். அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அதை வெளியில் சொல்ல வாயெடுத்தவளை கிருஷ்ணசாமி தடுத்து தாழ்ந்த குரலில் கூறும்படி சைகை செய்தார். அவளும் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்று கிருஷ்ணசாமிக்குக் கூறினாள். “நாம சரியான இடத்துக்கு சரியான காலத்திற்கு வந்துட்டோம்” என்று அவரும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

    “நீ வந்தியத்தேவனைத் தானே பார்க்கணும்னு சொன்னே? இப்போதான் பார்த்தாச்சே? நாம போகலாமா?” என்று கேட்டார். 

    “அங்கிள் ப்ளீஸ்… இவ்வளோ தூரம் வந்துட்டோம். அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாமே. அதோட ஆதித்தகரிகாலனைக் கொன்னது யாருன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ஆசைப்பட்டேன்” என்றாள் கெஞ்சும் பாவனையில். 

    “சரி சாரு. ஆனா ஒரு விஷயம் நினைவுல வெச்சுக்க. நாம கடந்த காலத்துக்கு வந்திருக்கோம். நம்முடைய செயல் எதுவும் வரலாற்றை பாதிக்காதபடி பார்த்துக்கணும்.  இல்லைன்னா அதன் பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமா போயிடும். ஜாக்கிரதையா நடந்துக்கோ. அதேபோல இந்த காலத்துல வாழற இவங்களுக்கு தன்னுடைய எதிர்காலம் பத்தி முழுமையா தெரியக்கூடாது. அதுவும் பிரச்சினையா ஆகிடும். ஜோசியர்கள் சொல்ற மாதிரி பட்டும் படாமயும் தெரிஞ்சா பரவாயில்லை. ஆனா முழுசா தெரியக்கூடாது. இதெல்லாம் நீ மறக்கவே கூடாது. புரிஞ்சுதா? இனி நாம தொடர்ந்து போகலாம் வா” என்று கூறிவிட்டு கிருஷ்ணசாமி முன்னேறினார். 

    மயங்கியிருந்த தேவராளனைத் தாண்டி வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றனர். அவர்களுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு சாருவும் கிருஷ்ணசாமியும் தொடர்ந்தார்கள். வனாந்தரத்தின் இருள் கரியதாக இருந்தாலும் நிலவு போதிய வெளிச்சத்தைத் தந்திருந்தது. சற்று தூரம் சென்றதும் சட்டென்று வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் என்று தேடியபடியே சாருவும் கிருஷ்ணசாமியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்போது சடாரென பக்கத்திலிருந்த பெரிய மரத்தின் பின்புறமிருந்து வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இவர்களை சூழ்ந்து கொண்டனர். 

    “யார் நீங்கள்? எதற்காக எங்களைத் தொடர்ந்து வருகிறீர்கள்?” என வந்தியத்தேவன் கோபத்துடன் கேட்டான். 

    வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் அத்தனை அருகில் பார்த்து சாருவும் கிருஷ்ணசாமியும் பேசத் திராணியற்று பிரமிப்புடன் நின்றனர். அந்த நேரத்தில் தான் வந்தியனும் நம்பியும் அவர்களை ஆராய்ந்தார்கள். சுடிதார் அணிந்திருந்த சாருவும் பேண்ட் சட்டை சகிதம் இருந்த கிருஷ்ணசாமியும் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாதல்லவா? வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை பார்த்து, “வீர வைஷ்ணவரே, இவர்களைப் பாரும்! இவர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று தெரியவில்லையே. ஏதோ அயல்தேசத்திலிருந்து வந்திருப்பார்கள் போலும். அயல் நாட்டவர் இங்கெ எப்படி ஊடுருவியிருக்க முடியும்? மேலும் இவர்களுக்கு நாம் பேசுவது விளங்குமோ என்னமோ தெரியவில்லை. நான் கேள்வி கேட்டும் இவர்கள் திருதிருவென முழிக்கிறார்களே! நாம் அவசரமாக செல்லும் இவ்வேளையில் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். 

    ஆழ்வார்க்கடியானும் “சற்று பொறு தம்பி! ஏதேனும் கேட்டுப் பார்ப்போம். அல்லது சைகையினாலே கேட்போம்” என்றான். 

    “சரியாகச் சொன்னீர்கள் வைஷ்ணவரே! ஆனால் எனக்கு சைகை மொழியெல்லாம் தெரியாது. நீங்களே முயன்று பாருங்கள்” என்று கூறினான் வந்தியத்தேவன். 

    இவர்களது சம்பாஷணையின்போதே தனது ஆச்சரியம் நீங்கப் பெற்ற சாரு மெலிதாக புன்னகைத்தாள். 

    “நாங்கள் அயல் தேசத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்” என்று தன்னால் இயன்ற அளவிற்குத் தூய தமிழில் பேசினாள் சாரு. 

    “நல்ல வேளை! நீங்கள் தமிழில் பேசி நாங்கள் சைகை புரிய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று இன்னும் கூறவில்லையே. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள், ஆனால் உங்கள் நடை,உடை, பாவனை அனைத்தும் மிகவும் வேறுபட்டு உள்ளதே” என்றான் வந்தியத்தேவன். 

    “என் பேரு கிருஷ்ணசாமி, இவ பேரு சாருலதா. நாங்க உங்களையெல்லாம் பாக்கலாம்னு தான் எதிர்காலத்துலேர்ந்து வர்றோம்” என்றார் கிருஷ்ணசாமி. 

    வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் ஒருவரை  ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். வந்திருந்த இருவரையும் சந்தேகக்கண்ணுடன் நோக்கி “என்ன எதிர்காலத்திலிருந்து வருகிறீர்களா? நீங்கள் என்ன மாயாவிகளா? இது எப்படி சாத்தியம்? மேலும் செந்தமிழ் ஏன் உங்கள் நாவில் இப்படி அவஸ்தைக்குள்ளாகிறது?”என்று கேள்விகளை அடுக்கினான் ஆழ்வார்க்கடியான். 

    “சார், இதைப் பத்தி விரிவா சொல்றது கஷ்டம். ஆனால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி 1043 வருஷங்கள் தாண்டி உங்களைப் பாக்க வந்திருக்கோம். அதுலேயும் சாருவுக்கு வந்தியத்தேவரைப் பாக்க அவ்வளோ ஆசை. அதனாலே தான் வந்தோம்” என்று பதில் கூறினார் கிருஷ்ணசாமி. “உங்களோட சில தினங்கள் இருந்துட்டு போகலாம்னு எங்க விருப்பம்” என்றும் கூறினார். 

    “சார் – அப்படியென்றால்?” என்று கேட்டான் ஆழ்வார்க்கடியான். சாரு முந்திக் கொண்டு “சார் என்றால் ஐயா என்று அர்த்தம்” என்றாள். “ஓ அப்படியா சேதி!” என்று வந்தியத்தேவனைப் பார்த்தான் ஆழ்வார்க்கடியான். 

    வந்தியனோ சந்தோஷத்தில் திளைத்தான். பிறகென்ன 1000 ஆண்டுகள் கடந்தும் தன் புகழ் பரவியிருக்கிறதே!தன்னைப் பார்க்க ஒரு பெண் காலங்களைத் தாண்டி வந்திருக்கிறாள் என்றால் கேட்கவா வேண்டும்! பெருமையுடன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தான். அவனுக்கோ அவன் பார்வையின் பொருள் விளங்கியது. “1000ஆண்டுகள் கழித்தும் வந்தியனின் புகழ் பரவியிருக்கிறதா என்ன?” என்றான் சந்தேகத்துடன். 

    உடனே சாரு, “ஐயா! இவரது புகழ் மட்டுமல்ல. தங்கள் புகழும் பரவியிருக்கிறது. மேலும் இளவரசர் அருள்மொழிவர்மர், இளவரசர் ஆதித்தகரிகாலர், இளவரசி குந்தவைதேவியார் என அனைவரின் புகழும் பரவியிருக்கிறது. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் அறிந்துகொள்ள முக்கிய காரணமாயிருந்தவர் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் அறியும் வண்ணம் அற்புத காவியம் படைத்திருக்கிறார்” என்று கூறினாள். 

    ஆழ்வார்க்கடியான், “அம்மா நீ சொல்வது எவ்வளவு தூரம் உண்மையோ எமக்குத் தெரியாது. ஆனால் நீ சொல்வதைக் கேட்டு எங்கள் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. 

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

    தோன்றலின் தோன்றாமை நன்று 

    என்று வள்ளுவப் பெருமான் கூறியிருப்பதற்கிணங்க எங்கள் புகழ் நாங்கள் மறைந்த பின்பும் இருப்பதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும். கல்கி​யெனும் அந்தப் பெருந்த​கைக்கு நன்றிக் கடன்பட்டிருக்கி​றோம்” என்று கூறி ஆனந்தித்தார். 

    சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தவராக “உங்கள் இருவரையும் சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இப்போது அவசர வேலையாகச் செல்கிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்றான். 

    “ஆதித்தகரிகாலரை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்கத்தானே போகிறீர்கள்?  நாங்களும் உங்களுடன் வருகிறோம்” என்றாள் சாரு. 

    கிருஷ்ணசாமி உடனே “சாரு நாம இங்கே வந்திருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது. இவங்களை நீ பாக்கணும்னு சொன்னதாலே இவங்களை சந்திக்க அனுமதிச்சேன். மத்தபடி நாம இவங்களோட போறது சரியில்லை என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. 

    சாருவின் முகம் வாட்டமடைந்தது. “அப்படின்னா அட்லீஸ்ட் நாம இங்கே எங்கேயாவது தங்கலாம் அங்கிள். நான் பாக்க வந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத்தான் தெரியுமே” என்றாள். 

    வந்தியத்தேவன் அவர்களிடம் “உங்களை எங்களுடன் அழைத்துச் செல்வது இயலாத காரியம். வேறேதும் உதவி தேவையென்றால் கூறுங்கள். முடிந்ததை செய்கிறோம்” என்றான். 

    “நாங்க சில நாளு தங்க ஏற்பாடு செஞ்சு தர முடியுமா?” என்று கிருஷ்ணசாமி கேட்டார். 

    ஆழ்வார்க்கடியான் சற்று யோசித்து “எனக்குத் தெரிந்த ஒரு விவசாயி​கோட்டைக்கு வெளி​யே குடிசை அ​மைத்துக்​கொண்டு தன் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார். நீங்கள் அவர்களுடன் சில காலம் தங்கியிருங்கள். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டான். 

    இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க​வே, நால்வரும் காட்​டை விட்டு மெல்ல​வெளி​யேறினர். சிறிது தூரத்தி​லே​யே ஏகாந்தமான ஓரிடத்தில் ஒரு குடி​சை அமைந்திருந்தது. நால்வரும் அங்​கே​ சென்றனர். ஆழ்வார்க்கடியான் மெல்ல கதவைத் தட்டினார். சில விநாடிகளில் குடி​சையின் கத​வைத் திறந்து கொண்டு ஒரு முதியவர் வெளி​யே வந்தார். ஆழ்வார்க்கடியா​னைக் கண்டதும் “திரும​லை நீங்களா? வாருங்கள் வாருங்கள்” என்று முகம் மலர வர​வேற்றார். 

    அ​னைவரும்  உள்​ளே நு​ழைந்ததும் ஆழ்வார்க்கடியான்​”பொன்னும​லையா​னே! இவர்கள் இருவரும் நம் ஊ​ரைப் பார்க்க வெளி​தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்க​ளை சில நாட்கள் உனது விருந்தாளிகளாக வைத்திருக்க வேண்டும். மேலும் நம் தேசத்தின் மக்கள் உடுத்தும் உ​டைக​ளையும்​ கொடுத்து உதவ​வேண்டும். நான் அவசர காரியமாக சென்று கொண்டிருப்பதால் உன்னிடம் இந்தப் பொறுப்​பைத் தருகி​றேன். செய்வாயா?” என்று கேட்டான். 

    “அதற்​கென்ன திரும​லை, நிச்சயம் ​செய்கி​றேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பொன்னும​லையான் எனும் அந்த முதியவர். “உன் பேத்தி பூங்​கொடி எங்​கே?” என்று ஆழ்வார்க்கடியான் விசாரிக்கவும், “அவள் பின்புறம் வே​லை செய்து​கொண்டிருக்கிறாள். இ​தோ அ​ழைக்கி​றேன்” என்று​ சொல்லி “பூங்​கொடி பூங்​கொடி” என்று அ​ழைத்தார். 

    பூங்​கொடி பின்புற கத​வைத் திறந்து கொண்டு வந்தாள். அவ​ளைப் பார்த்த மாத்திரத்தி​லே​யே சாருவிற்கு பிடித்துவிட்டது. பூங்​கொடி ஆழ்வார்க்கடியானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு புதிதாக வந்திருந்த மூவ​ரையும் பார்த்தாள். முக்கியமாக சாரு மற்றும் கிருஷ்ணசாமியின் உ​டைக​ளையும் வியப்புடன் பார்த்துக்​கொண்டிருந்தாள்.“என்ன பார்க்கிறாய் அம்மா? இவர்கள் நம் விருந்தாளிகள். சில காலம் நம்முட​னே இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய மாற்று​டைக்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்” என்றார் பொன்னும​லையான். 

    ஆழ்வார்க்கடியான் கிருஷ்ணசாமியிடம் “நாங்கள் சென்று வருகி​றோம். விரைவிலே​யே தங்க​ளை திரும்பவும் சந்திக்கி​றேன்” என்று கூறி வி​டை ​பெற்றான். வந்தியத்​தேவனும் வணக்கம் கூறி விட்டு ​வெளி​யே ​சென்றான். 

    ஏ​னோ சாருவிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தான் வந்தது வந்தியத்​தேவனுடன் அளவளாவுவதற்கும் அவனது வீரப்பயணத்தில் பங்கு​கொண்டு மகிழ்ச்சிய​டையவும் அல்லவா? ஆனால் அதற்கு வாய்ப்பின்றி பிரிந்து ​செல்கிறானே என்று​ தோன்றியது. இருப்பினும் அவள் தனது நிலை​யையும் மறக்கவில்​லை. எதிர்காலத்​தை​சேர்ந்த நாம் கடந்த காலத்திற்கு வர முடிந்த​தே பெரிய விஷயம். இதற்கும் மேல் ஆ​சைப்படக்கூடாது என்று தன்​னைத் தா​னே சமாதானம் செய்து​கொண்டாள். 

    அதற்குள் பூங்கொடி அவர்களுக்கு மாற்றுடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். இரவு உணவருந்தி விட்டு சாருவும் பூங்கொடியும் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரு வித்தியாசமான தமிழில் பேசுவதாக பூங்கொடிக்குத் தோன்றியது. நிறைய பேசிய போதும் தான் கால இயந்திரம் கொண்டு கடந்த காலத்திற்கு வந்ததை மட்டும் சாரு தெரிவிக்கவில்லை. 

    பொன்னுமலையானும் கிருஷ்ணசாமியும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டனர். பொன்னுமலையானுக்கு தன் விருந்தாளி பேசுவது சரிவர புரியவில்லை. இவர் வேறேதோ மொழியை கலந்து வேறு பேசுகிறார். அதனால் சீக்கிரமே ஓய்வெடுக்கச் சென்று விட்டார். 

    மறுநாள் காலை பொன்னுமலையான் தன் வயலில் வேலை செய்ய கிளம்பினார். பூங்கொடி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாரு அவளிடம் ஊரைச் சுற்றிப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்கவும் தன் வேலைகளை சீக்கிரம்முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். 

    அழகிய தோட்டங்கள், வயல்வெளி, எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று இருந்தது. விதவிதமான மலர்களும் பழங்களும் நிறைந்து அற்புதக் காட்சியாக இருந்தது. ஊருக்குள்சென்றால் சில மாட்டு வண்டிகள் காணப்பட்டன.சென்னையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் வளர்ந்திருந்த சாருவிற்கு இந்த இடம் சொர்க்கம் போல் தோன்றியது. ஊருக்கு நடுவில் ஒரு சிறிய சிவன் கோயிலும் வெளியில் ஒரு ஐயனார் கோயிலும் இருந்தன. தெருக்கள் சுத்தமாக காணப்பட்டன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சாணமிட்டு மெழுகி கோலம் போட்டிருந்தனர். கோலத்தின் நடுவில் பூ வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். 

    மாலை வேளையில் கோயிலில் தேவாரப்பாடல் ஒலித்தது. ரம்மியமான இந்த சூழலைப் பற்றியே சாரு பூங்கொடியிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள். சொர்க்கமயமான இந்த வாழ்வு சாருவிற்கு மிகவும் பிடித்துப் போனது. 

    கிருஷ்ணசாமியோ தன் கால இயந்திரத்திற்கு ஏதும் ஆபத்து நேராதிருக்க அவ்வப்போது யாரும் பார்க்காத தருணத்தில் காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வந்தார். 

    இப்படியாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. மறுநாள் காலை ஊரே உற்சாகத்தில் காணப்பட்டது. மக்கள் அனைவரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தனர். சாரு பூங்கொடியிடம் அது பற்றி கேட்கவும் “இன்றைக்கு சோழநாட்டின் நிகரில்லா வீரரும் நமது இளவரசருமாகிய வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தகரிகாலர் கடம்பூருக்கு விஜயம்செய்கிறார். அவரது  திருமண ஏற்பாடு நடக்குமென தெரிகிறது. அவரைக் காணத் தான் எல்லோரும் செல்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாம் சாரு” என்றாள். 

    சாருவின் மனம் சட்டென தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தியது. ஆதித்தகரிகாலரின் ஆயுள் முடியும் தருணம் வரப்போகிறது.  அவரைக் கொலை செய்யப் போவது யாராக இருக்கும்? யாருடைய கரத்தின் வாள் அவரது உயிரை மாய்க்கப்போகிறது? இதை அறியத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆனால் அதை அறிய கோட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு என்னசெய்வது? எப்படி கோட்டைக்குள் செல்வது? இளவரசர் வருவதால் கோட்டையில் பலத்த பாதுகாப்பு இருக்குமே என்று தீவிரமாக யோசித்தாள். 

    பூங்கொடி, பொன்னுமலையான், சாரு மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய நால்வரும் மக்களுடன் மக்களாக காத்திருந்து இளவரசர் வருகையைக் கண்டனர். கட்டியக்காரன் வருவோரின் கீர்த்தியையும் பெயரையும் அறிவிக்கலானான். உயரமாக கம்பீரமாக தனது குதிரையை லாவகமாக செலுத்திக்கொண்டு ஆதித்தகரிகாலர் கடம்பூர் கோட்டை வாயிலை அடைந்தார். அவருடன் கூடவே வந்தியத்தேவன் மற்றுமொரு குதிரையில் வந்தான். அவர்களுக்குப் பின் மேலும் ஒருவர் வந்தார். கட்டியக்காரன் அவரை பார்த்திபேந்திர பல்லவன் என்று அறிமுகம் செய்தான். அவருக்குப் பின் படை வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். 

    இளவரசருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் நடுவில் வந்தியத்தேவன் சாருவைக் கண்டுகொண்டு கண்களினாலே தெரியப்படுத்தினான். சாருவிற்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. விழிபிதுங்கும் கூட்டத்திற்கு நடுவிலும் வந்தியத்தேவன் தன்னைக் கண்டது பேரானந்தமாக இருந்தது. 

    இளவரசர் ஆதித்தகரிகாலர் உள்ளே சென்றதும் கோட்டைக்கதவுகள் தாளிடப்பட்டன. இனி தான் எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையுடனேயே பூங்கொடியின் வீட்டிற்கு திரும்பி சென்றாள் சாரு. 

    அன்று மாலை கிருஷ்ணசாமி தனித்திருக்கும்போது தன் சந்தேகத்தைக் கேட்டாள் சாரு. “அங்கிள், இப்போ என்ன பண்றது? ஆதித்தகரிகாலருடைய கொலை நடக்கும் சமயம் நான் அங்கே இருந்தா தானே யாரு கொலை செய்தாங்கன்னு கண்டுபிடிக்கமுடியும்? அதுக்கு கோட்டைக்குள்ளே போகணும். எப்படி போறது? ஒண்ணுமே புரியலையே” என்றாள். 

    கிருஷ்ணசாமியோ, “எனக்கென்னமோ நாம இப்போ திரும்பி போயிடலாம்னு தோணுது சாரு. வீணா வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கையிலேயே யாரோ வருவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அங்கே ஆழ்வார்க்கடியான் வந்துகொண்டிருந்தான். “இதோ இவரிடமே கேட்போம்” என்று சாரு உற்சாகமடைந்தாள். 

    “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இருவரையும் கண்டு விடைபெறவே நான் வந்தேன். நான் இப்போது நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றான் ஆழ்வார்க்கடியான். 

    உடனே சாரு, “எங்களுக்கு நீங்கள் மற்றுமொரு உதவி செய்ய வேண்டும். நான் ஒரு முறை வந்தியத்தேவரை சந்திக்க வேண்டும். அதன் பின் நாங்கள் திரும்பவும் எங்களுடைய காலத்திற்கே சென்று விடுவோம். அவரோ கோட்டைக்குள் இருக்கிறார். தாங்கள் தான் உதவ வேண்டும்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டுக்கொண்டாள். 

    “அம்மா, இப்போது இளவரசர் கடம்பூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவரது உயிருக்கு ஆபத்து நேருமென நிமித்தங்கள் கூறுகின்றன. இந்நேரத்தில் நீ கோட்டைக்குள் செல்வது கடினம். அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றான் அவன். 

    “ஐயா, அதை அறிந்திருக்கிறேன். அதனாலேயே நான் வந்தியத்தேவரை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது. வந்தியத்தேவர் வீண் பழியில் மாட்டிக் கொள்ளும் அபாய நிலை ஏற்படக்கூடும். அதிலிருந்து அவரை காக்க விரும்புகிறேன். இதற்கு மேல் கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. தயவு செய்து என் விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்” என்றாள். 

    ஆழ்வார்க்கடியான் யோசித்தான். பிறகு “சரி. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அரசாங்க வேலைக்காக பூங்கொடி கோட்டைக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான் அவளிடம் கூறி விடுகிறேன். அரசாங்க வேலைக்கான ஆணைப் பத்திரம் அவளிடம் உள்ளது. அதை நான் உனக்குப் பெற்றுத் தருகிறேன். அவளுக்கு பதில் நீ உள்ளே சென்று விடு. சாமர்த்தியமாக நடந்து கொள். ஜாக்கிரதை. பத்திரமாக நீ உன் காலத்திற்கு திரும்பி செல்ல வேண்டும், நினைவு கொள்!” என்று கூறினான். 

    “ஐயா! இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை நான் மறக்கமாட்டேன்” என்று சாரு கூறினாள். 

    அவர்களிடம் விடை பெற்று கொண்டு ஆழ்வார்க்கடியான் புறப்பட்டான். போவதற்கு முன் தான் வாக்களித்தப்படி அரசாங்க ஆணைப்பத்திரத்தை சாருவிடம் சேர்ப்பித்தான். 

    கிருஷ்ணசாமி சாருவிடம் “இதனாலே உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கும்மா” என்றார். 

    “ஒண்ணு பண்ணலாம் அங்கிள். பூங்கொடி தன் தாத்தா பொன்னுமலையானோடதான் கோட்டைக்குள்ளே போறதா இருந்தது. நீங்க வேண்ணா அவருக்கு பதில் என் கூட கோட்டைக்குள்ளே வந்துடுங்க. நம்மோட காரியம் முடிஞ்சதும் சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிடலாம். சரியா?” என்று கேட்டாள். 

    இந்த யோசனை கிருஷ்ணசாமிக்கும் பிடித்திருந்தது. அவர் அதற்கு சம்மதித்தார். 

    (அடுத்து வரும்)

    படங்களுக்கு நன்றி –

    http://zaraahatke.blogspot.in/2008/02/ponniyin-selvan.html

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

    “அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் மேலும் மெருகடைந்து நகமும் சதையும் போல் இணைபிரியாதவர் ஆனோம். எம் நட்பின் நெருக்கம் என்னை அவன் அந்தப்புரத்திற்குள்ளும் தங்கு தடையின்றி செல்லக்கூடிய உரிமையை அளித்தது. அஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணி எனக்கருதப்பட்ட இளவரசி பானுமதியுடன் நான் சொக்கட்டான் ஆடுவதையும் துரியன் வெகுவாக ரசித்தான்.

    “அவ்வாறு ஒருநாள் அவளுடன் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு வந்த தன் நாயகனைக் கண்டு பானுமதி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதை அறியாத நான் ‘ஓஹோ, தோல்விக்குப் பயந்து ஓட நினைக்கிறாயா?’என்று அவளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவள் மேகலாபரணம் சிதைந்து அதில் உள்ள முத்துக்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. அப்போது துரியன் மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி ‘கர்ணா, முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?’ என்றான். கண்ணா, இப்போது சொல்லுங்கள். எந்த கணவன், அதுவும் இந்நாட்டின் அரசனாகப் போகிறவன், இப்படி கல்மஷம் இல்லாமல் நட்பைப் போற்றி நடந்துகொள்வான்? இந்த நிகழ்வு ஒன்று போதாதா எங்கள் நட்பின் ஆழத்தினைப் புரிந்துகொள்ள?”

    “நன்று கர்ணா, உண்மை நட்பின் இலக்கணத்தை உங்கள் இருவரின் தோழமை பறைசாற்றுகிறது. எனினும் அறம் பெரிதா நட்பு பெரிதா எனக்கேட்பின் தர்மத்திற்கே முதலிடம் கொடுக்கப் படவேண்டும். அதனையே உன்னிடம் யாசிக்கிறேன்,” என்றான் கண்ணன்.

    சினத்தில் கர்ணன் முகம் சிவந்தது. “நீங்கள் ’பாண்டவ பக்‌ஷபாதி’ என்பது அனைவரும் அறிந்ததல்லவா? அவ்வைவருக்காகத்தானே என்னை துரியனிடமிருந்து பிரிக்க முயலுகிறீர்கள்?”

    ”இல்லை கர்ணா! உன்னை உரியவர்களிடம் சேர்க்கத்தான் துடிக்கிறேன்.”

    கண்ணனின் கூற்று கர்ணனுக்கு விளங்கவில்லை. “என்ன, எனக்கு உரியவரா? யார் அவர்கள்? என்னை உயிருக்கும் மேல் நேசிக்கும் துரியோதனன்தான் எனக்கு உரியவன். இந்தத் தேரோட்டி மகனான ராதேயனுக்கு வேறு எவரும்  உரியவர்கள் இல்லை,” என்றான்.

    “அப்படி சொல்லாதே கர்ணா. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. அது தெரிந்தால் நீ இப்படி அதர்மத்திற்கு அடிவருடமாட்டாய்.”

    “என் பிறப்பின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தால் அதைத்தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்தான். ஆனால் அதற்கும் துரியனுடன் என் நட்புக்கும் என்ன இணைப்பு?”

    கண்ணன் மிக நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

    “கர்ணா! உனக்கு மிக்க அதிர்ச்சி அளிக்கப்போகும் அந்த ரகசியத்தை இப்போது வெளிப்படுத்துகிறேன். நீ மூத்த பாண்டவன். மஹாராணி குந்திக்கும் கதிரவனுக்கும் பிறந்தவன். நீ பாண்டவர்களுடன் இருக்கவேண்டியவன். ஆனால் நீயோ அதர்மத்தின் உருவான துரியனின் முகாமில் இருக்கிறாய்.”

    கண்ணனின் இக்கூற்றினைக் கேட்ட கர்ணனுக்குத் தொண்டையில் ஒரு அடைப்பு ஏற்பட்டதுபோல் இருந்தது. பூமி தன் கால்களைவிட்டு நழுவதுபோல் தோன்றியது. தன் முன் ப்ரபஞ்சமே சுற்றுவது போல உணர்ந்தான். ‘நான் குந்தி புத்திரனா?…..நான் குந்தி புத்திரனா?’ என்ற கேள்விக்கணைகள் அவன் உள்ளத்தை துளைக்கத் தொடங்கின.

    “கண்ணா, என்னைக் குழப்புவதற்காக தாங்கள் பிரயோகிக்கும் மாயை இது என நினைக்கிறேன். இதற்கு என்ன ஆதாரம்?” என்றான்.

    “இதற்கான ஆதாரத்தை நாளை காலை என் அத்தையே உன் ஜன்ம விருத்தாந்தத்தைக் கூறி உன் முன் வைப்பாள். நான் சொல்வதை நம்பு. இவ்வுண்மை சூரியனுக்கும் மஹாராணி குந்திக்கும் எனக்கும் விதுரர் மற்றும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களுக்குக்கூட இது தெரியாது. தெரிந்தால் தர்மபுத்திரன் உன்னையே அஸ்தினாபுரத்து அரசனாக்கி விடுவான். ஐவருக்கு ஊசிமுனை அளவு நிலம் கூட கொடுக்கமாட்டேன் என்று கொக்கரித்த துரியனும் உன்னை அஸ்தினாபுர அரசனாக்க அங்கிகாரம் அளித்து விடுவான். நாளை நடக்க இருக்கும் குருக்‌ஷேத்திரப் போரும் தொலைந்துவிடும். அப்படிப்பட்ட அமைதி நிலவவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு உன் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்” என்று கண்ணன் அடுக்கிக்கொண்டே போனான்.

    “இந்த உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தீர்? என்னை எல்லோரும் தேரோட்டி மகன் என்று இழிவாக அழைத்த காலத்தில் நீங்கள் ஏன் அதனை மறுக்க முற்படவில்லை? இப்போது என்னை ஏன் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்?”

    “குழப்பம் தேவையில்லை கர்ணா. உண்மையை என்றும் மறைக்க முடியாது. எவ்வாறாகிலும் அதற்குரிய நேரத்தில் தக்க சூழ்நிலையில் அது வெளிப்பட்டே ஆகவேண்டும். அத்தருணம் வந்துவிட்டது இப்போது.”

    “விதி சதி செய்து என்னை என் சகோதரர்களுக்கு எதிராக போரிட வைத்துள்ளதே! ’அண்மையில் வெளிப்பட்ட உடன்பிறப்புகளா அல்லது நெடுநாளைய உற்ற நண்பனா?’ என்ற கேள்வியால் நான் ஒரு  தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளேனே. கண்ணா, இது என்ன கொடுமை? நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த ரகசியத்தை என்னிடம் ஏன் கூறினீர்கள்?”

    “நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், நாம் எப்பாடுபட்டும் நலிந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இதுதான் என் எண்ணம். அவ்வெண்ணம்  வெற்றி பெறவே இந்த முயற்சி. அது பலிப்பதற்கு உன் ஒத்துழைப்பு தேவை கர்ணா.”

    கண்ணனின் இக்கூற்று மூத்த கெளந்தேயனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் விரைவில் தெளிவு பெற்றான். சில நொடிகள் அமைதியாக இருந்தபின் கர்ணன் பேசலுற்றான்.

     (தொடரும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.tamilhindu.com/2010/06/chariot-great-hindu-cultural-symbol/

    Share
  • வயிறாற நன்றி

    முகில் தினகரன்

    தொலைக்காட்சியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த பாபு அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக வேண்டி எழுந்து ஜன்னலை மூடப் போனான். அங்கே….. ஜன்னலுக்கு வெளியே வேலைக்காரி முனியம்மா தன் மகன் கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவனை மடியில் அமர்த்தி வைத்து…விளையாட்டுக் காட்டிக் கொண்டே ஒவ்வொரு கவளமாக அவள் ஊட்ட..ஊட்ட அவன் சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க பாபுவின் மனம் ஏங்கியது. ‘ஹூம்..அந்தக் கண்ணனுக்கும் என் வயசுதான்!…இருந்தும் அவனோட அம்மா அவனை மடியில் வெச்சு ஊட்டி விடறாங்க..எங்கம்மாவுந்தான் இருக்காங்க..ஒரு நாள் என் கூட உட்கார்ந்து நான் சாப்பிடறதை பார்த்திருப்பாங்களா?…எப்பப் பார்த்தாலும் லேடீஸ் கிளப்…மீட்டிங்….இதேதான்’

    ‘ம்மா…போதும்மா…வயிறு நெறைஞ்சிடுச்சும்மா’ கண்ணன் முகத்தைத் திருப்ப ‘இந்தா..இந்த வடையாச்சும் சாப்பிடு’ என்றபடி அவள் வடையை நீட்ட, வாங்கிக் கொண்டான்.

    ‘அய்யய்ய…இது நேத்திக்கு காலைல நம்ம வீட்டுல செஞ்ச வடையாச்சே.!.அது கெட்டுப் போச்சுன்னு நான்தானே வேண்டாம்னு எறிஞ்சேன்..அதைய அம்மா இந்த வேலைக்காரிக்குக் குடுத்திருக்கா போலிருக்கே’ தனக்குள் சொல்லிக் கொண்டே தொலைக்காட்சிக்கு முன் வந்து அமர்ந்த பாபுவிற்கு மனசு வலித்தது. ‘ஹூம்…நான் வேண்டாம்ன்னு வீசியெறியறதை சாப்பிடறவங்க கூட சந்தோஷமா இருக்காங்க..மூணு நேரமும் சுடச்சுட..வகைவகையா சாப்பிடற நான்…இஷ்டமேயில்லாம…வேண்டா வெறுப்பா சாப்பிடறேன்’

    மறுநாள் பள்ளி விடுமுறையானதால் வழக்கம் போல தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலேயே தவம் கிடந்தான் பாபு.

    ‘தம்பி…வாப்பா… சாப்பிடலாம்… மணி ஒம்பதாகப் போகுது…பசிக்கலையா?’ வேலைக்காரி முனியம்மா அன்போடு அழைக்க அதில் தொனித்த தாய்ப்பாசத்திற்குக் கட்டுப்பட்டு மௌனமாய் வந்து அமர்ந்தான் பாபு. போதாதற்கு முனியம்மா பக்கத்திலேயே நின்று கொண்டு ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா..இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா’ என்று அன்பொழுக பரிமாற தன்னையுமறியாமல் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் பாபு.

    ‘எதுக்கப்பா இந்த ஒரு சப்பாத்தி மட்டும் பாக்கி…இதையும் சாப்பிட்டுடப்பா’ அவள் நீட்ட மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அதையும் தீர்த்தான். தாயப்பாசத்திற்கு ஏங்கிய அந்த பிஞ்சு மனசு வேலைக்காரியின் அன்பையே தாய்ப்பாசமாய் ஏற்று மகிழ்ந்தது.

    முற்பகல் பதினோரு மணியிருக்கும், வெளியே முனியம்மாவின் மகன் கண்ணனின் அழுகுரல் கேட்க ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்தான் பாபு.

    ‘அட..என்னைய என்ன சாமி பண்ணச் சொல்றே..எப்பவும் அரைகுறையாச் சாப்பிடுற அந்தத் தம்பி இன்னிக்குத்தான் பாவம் நல்லா சாப்பிட்டுச்சு…அதான் அந்த சந்தோஷத்துல எல்லா சப்பாத்தியையும் குடுத்து சாப்பிட வெச்சேன்..பரவாயில்லை விடுப்பா…இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்’ ஆறுதலாய்க் கூறினாள். எப்படியும் இன்று மீந்து போன சப்பாத்தி கிடைக்கும் என்ற ஆசையில் மண் விழுந்ததைத் தாங்க முடியாத கண்ணன் அழுது கொண்டேயிருந்தான.;

    பாபுவின் மனதில் முனியம்மா மீதிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. ‘ஆஹா…என்ன ஒரு மனசு இந்த தாய்க்கு…இதுவே வேறு யாராவதாயிருந்தால்..வேண்டுமென்றே எனக்குக் குறைவாகப் பரிமாறிவிட்டு மீந்து போனதை தன் மகனுக்குக் கொண்டு போய்க் குடுத்திருப்பாங்க..ஆனா..இந்த முனியம்மா என்னடான்னா…நான் நிறைய சாப்பிடறதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தம்மகனுக்கு இல்லாட்டியும் பரவாயில்லைன்னு மொத்தத்தையும் எனக்கே ஊட்டி விட்டுட்டாளே…! ஆனா ஒண்ணு நல்லா புரியது..நான் நல்லா சாப்பிட்டா..அந்தப் பையனுக்குக் கிடைக்காது…நான் அரைகுறையாய்ச் சாப்பிட்டு மீதம் வெச்சாத்தான் அவனோட வயிறு நெறையும்!…அப்ப சரி…’

    அன்று பாபுவுக்கு பிறந்த நாள்.

    ‘முனியம்மா..இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாள்…அவன் என்ன கேக்கறானோ..அதைச் செய்து குடு!….பாபு…உனக்கு இஷ்டமானதைக் கேளு…முனியம்மா சமைச்சுத் தருவாள்…சாப்பிடு..நான் ஒரு மீட்டிங்க்கு போயிட்டு ஈவினிங் வந்திடறேன்’ மேக்கப்பைச் சரி செய்தபடியே அவசரமாய்ச் சொல்லிவிட்டுப் பறந்தது அம்மாக்கிளி.

    அப்பாக்கிளியொ வந்திருந்த வியாபார நண்பர்களுடன் பேசியவாறே சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது.

    பாபு ஆசை தீரப் பட்டியலிட்டான். முனியம்மா மலைத்துப் போனாள். ‘அட என் ராசா…என் கண்ணே பட்டுடும் போலிருக்கே’ சந்தோஷமாய் சமையலில் இறங்கினாள.;

    மதியம். டைனிங் டேபிளில் பாபுவின் விருப்பப்படி சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஏகமாய்க் காத்திருக்க, பாபுவை அழைக்க அவன் அறைக்குள் சென்ற முனியம்மா அதிர்ந்து போனாள்.

    பையன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    ‘என்னப்பா..என்னாச்சு?’

    ‘வயிறு ரொம்ப வலிக்குது முனியம்மா’ துடித்தான்.

    ‘அய்யய்யோ…பொறந்த நாளும் அதுவுமாய் இப்படிச் சொல்றியே…என்ன சாப்பிட்டே?’

    ‘ஒண்ணுமே சாப்பிடலையே முனியம்மா’

    ‘சரி வா டாக்டர்கிட்ட போய்க் காட்டிட்டு வந்துடலாம்’

    ‘ம்ஹூம் மாட்டேன்..டாக்டர் ஊசி போடுவார் அது இதை விட வலிக்கும்’ அவசரமாய் மறுத்து விட்டு மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டவனை உசுப்பினாள்.

    ‘அதுக்காக சாப்பிடாமப் படுத்தா எப்படி தம்பி..கொஞ்சமாச்சும் சாப்பிடேன்’

    ‘அய்யோ…வயிறு வலிக்குதுன்னு சொல்றேனல்ல?..அப்புறம் ஏன் என்னைய ‘சாப்பிடு…சாப்பிடு’ன்னு உயிரெடுக்கறே..சாயந்திரம் வரைக்கும் நான் படுத்துத் தூங்கப் போறேன்…என்னைய தொந்தரவு பண்ணாதே..போ’ பாபுவின் பேச்சில் திடிரென்று ஏறி;ய கடுமை முனியம்மாவின் வாயை அடைத்துவிட, முக வாட்டத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ‘பாவம்..பொறந்த நாளன்னைக்கா இந்தப் பாழும் வயித்து வலி பையனுக்கு வரணும்’

    செய்த பலகாரங்கள் அனைத்தும் வீணாகிப் போக, அன்று இரவு அத்தனையையும் தூக்கி முனியம்மாவிடம் கொடுத்து விட்டு மகனை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் பாபுவின் தாய்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு ‘ஏம்பா..டாக்டர் எல்லா டெஸ்டும் பண்ணிப் பாத்துட்டு ‘வயித்துல ஒண்ணுமே மிஸ்டெக் இல்லே’ன்னுட்டாராம..பொய்யாப்பா சொன்னெ நீ?’ முனியம்மா பாபுவிடம் ரகசியமாய்க் கேட்க,

    ‘ஆமாம் பொய்தான் சொன்னேன்’

    ‘ஏன்?..எதுக்குப் பொய் சொன்னே?..நீ கேட்டதையெல்லாம்தான் நான் சமைச்சு வெச்சிட்டேனே’

    லேசாய்க் குறுஞ்சிரிப்பு சிரித்த அந்தச் சிறுவன் ‘முனியம்மா நான் அப்படிப் பொய் சொன்னதுனாலதான் மொத்தப் பலகாரமும் கண்ணனுக்குக் கெடைச்சுது…பாவம்…அன்னிக்கு ஒரு சப்பாத்திகூட விடாம சாப்பிட்டு அவனை அழ வெச்சுட்டேனல்ல…அதுக்காகத்தான் அத்தனை பலகாரமும் அவனுக்குக் கெடைக்க இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினேன்..அது சரி…கண்ணன் நல்லா திருப்தியா சாப்பிட்டானா?’

    பதில் சொல்ல முடியாதபடி தொண்டை அடைக்க கண்களில் ‘குபுக்’கென கண்ணீர் பொங்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் முனியம்மா.

    (முற்றும்)

     

    Share
  • அம்பாரி

    தமிழ்த்தேனீ

    நேர்மையா இருக்கறவனுக்கு எந்தப் பலனுமே கிடையாதா ? “கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” அப்பிடீங்கிற கீதை வாசகம் மட்டும் தான் சொந்தமா?

    எரிச்சலாய் வந்தது  முரளிக்கு. பல வணிக ஸ்தலங்களுக்கு அதிபர் திரு மகாலிங்கம். அவராய்த் தன்னைத் தேடி அழைத்ததை தன்னுடைய அதிர்ஷ்டமாக  மனதில்  நினைத்துக்கொண்டு   அவரைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றார் முரளி.

    மரியாதையான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளே அமரவைக்கப்பட்டான் முரளி. திரு மகாலிங்கம் வந்தார். வாங்க மிஸ்டர் முரளி  உக்காருங்க , உங்க திறமையைப் பத்தி நிறையப் பேரு சொல்லி இருக்காங்க, அதுனாலேதான் நானும் உங்க திறமையை உபயோகிக்கணும்னு உங்களை வரச்சொன்னேன்.

    உங்களுக்குத் தெரியும், எனக்கு பல நிறுவனங்கள் இருக்கு.  குறிப்பா எல்லாத்திலேயும் நல்ல லாபம் வந்திட்டு இருக்கு. இந்த மகாலிங்கம் என்டெர்ப்ரைஸ் அப்பிடித்தான் ஓடிண்டு இருந்தது.

    இப்போ இந்த நிறுவனம்,  சிலபேரோட அலட்சியப் போக்காலே லாபம் கொறைஞ்சது மட்டுமில்லே. என் மனசிலே இதை எப்பிடி சரிப்படுத்தி லாபம் வரா மாதிரி இயங்க வைக்கறது அப்பிடீன்னு ஒரு கவலையே வந்துடிச்சு. இந்தக் கம்பனி விஷயமாத்தான் உங்களை வரச் சொன்னேன். 

    என்னோட மேனேஜர் எல்லா விஷயங்களையும்  உங்களுக்கு சொல்வார். எல்லாத்தையும் கேட்டப்புறம் ஒரு நல்ல  தீர்வு குடுப்பீங்கன்னு நான் நம்பறேன் என்றார்.

    ஒரு மாசமா  அவர் சொன்னதை கவனத்திலே வெச்சிண்டு  எல்லா வேலையையும் ஒதுக்கி வெச்சிட்டு, “சரி நம்மை மதிச்சுக் கூப்பிட்டிருக்கார். அதுனாலே அவருக்கு வேண்டிய இந்த முக்கியமான வேலையை செய்துகொடுப்போம்” அப்பிடீன்னு ராப்பகலா தூக்கத்திலேயும் இதே நினைப்போட யோசிச்சு யோசிச்சு உண்மையா, சுயநலமே பாக்காம நேர்மையா உழைச்சு உருவாக்கி  இந்த திட்டத்தை அவர்கிட்ட சொன்னார் முரளி.

    “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை எப்பிடிப் பாராட்டறதுன்னே தெரியலை”ன்னு சொல்லி  எழுந்து நின்னு கைகொடுத்துட்டு, “இவ்ளோ நாளா  உங்க திறமையை நான் உபயோகிக்காம விட்டது எவ்ளோ தப்புன்னு எனக்கு உணர்த்திட்டீங்க” அப்பிடீன்னு கண்கலங்க அவர் சொன்ன போது, “சரி நாம உழைச்ச உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஒரு தகுதி உணர்தல் கிடைக்கும்னு நம்பி அது வரை அந்த திட்டத்துக்காக அவர் செலவழித்த தொகையைக் கூட இன்று வரை அவரிடம் சொல்லாமல் எப்படியும் அவர் கணிசமான ஒரு தொகையைக் கொடுப்பார் என்று நம்பி காத்திருந்து”, சே எல்லாமே வீணாகிவிட்டதே.

    திட்டத்தை செயலாற்றும் வரை  தினமும் பலமுறை போனில் தொடர்பு கொண்டு அவருடைய அலுவலகத்துக்கே வரச்சொல்லி, மற்ற யாரையும் உள்ளே விடாமல் அவரிடம் மட்டுமே தனியாக விவாதித்து அவருடைய திறமையை மட்டுமே நம்புவதாகச் சொல்லி ஊக்கமளித்து அவரை நம்ப வைத்து வேலையை வாங்கிக் கொண்ட பின் ஒரு வாரமாக அவரிடமிருந்து அழைப்போ அல்லது அவன் செலவழித்த பணமோ எதுவுமே இல்லை. 

    இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மௌனம் காப்பது என்று யோசித்து அது வரை அவர் செலவழித்த தொகைக்கு கணக்கை எழுதி அவருக்கு அனுப்பினார் முரளி.  ஒரு மாதமாக  அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை, இவரே தொடர்பு கொண்டாலும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் அழைத்தார். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றது ஒரு இனிய குரல்.

    கொள்ளென்றால் வாய்திறக்கும், கடிவாளமென்றால் வாய் மூடிக்கொள்ளும் குதிரை போல் அவரும் என்ற உணர்வில்  மனம் கசந்து போனது முரளிக்கு.

    தெய்வத்துக்குப் பொதுவா நேர்மையா உழைச்சு அவன் கண்டு பிடித்த வழிகள் பின்பற்றப்படுகின்றன  என்று ஒருவர் மூலமாகத் தெரிந்தது.

    மகிழ்ச்சியாய் இருந்தாலும், தன்னை மதித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவர் ப்ரச்சனை தீர்ந்தவுடன் தன்னை ஒதுக்கிவிட்டாரே என்னும் வருத்தம் மனதுக்குள்  மையம் கொண்டது.

    துபாயிலிருந்து ஒரு போன். கால்  எடுத்து  யாரு என்றார் முரளி.  அப்பா நான்தான்  ரஞ்சனி பேசறேன் என்றாள் அவருடைய மகள். உங்க பேரன் கிண்டர் கார்டன்லே  பாஸ்பண்ணிட்டான். உங்ககிட்ட பேசணுமாம் என்றாள்.

    பேரன் போனில் “தாத்தா நானு எங்க ஸ்கூல்லே பாஸ் பண்ணிட்டேன்’, என்றான் மழலை மாறாத குரலில்.

    “வெரிகுட் சமத்துப் பையண்டா நீ. கங்ராஜுலேஷன்” என்றார் முரளி.

    “தாத்தா நீங்க  உம்மாச்சி  சேவிச்சீங்களா”,  என்றான்  பேரன்.  யாரோ பொட்டில் அறைந்தாற்போன்ற உணர்வு.

    சற்று நேரத்துக்கு முன்தான் இனி தெய்வங்களை சேவிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் முரளி.  குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்று தோன்றியது.

    “அம்மா தாத்தா பேசமாட்டேங்கறாங்க”, என்றான் பேரன்.

    “சரி ரஞ்சனி, ஒரு முக்கியமான  அழைப்பு வந்திருக்கு. நான் மறுபடியும்  பேசறேன்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் உட்கார்ந்தார் முரளி. 

    தொலைபேசி அழைத்தது.  எதிர்முனையில் திரு மகாலிங்கம் பேசினார்.

    “நீங்க கொடுத்த யோசனையை அமல்படுத்திவிட்டேன். இனி நீங்கதான் அந்தக் கம்பனியின் பொறுப்பாளர். உங்களைவிடத் தகுதியானவர் வேறு யாருமில்லை. அதனால்  நானே வந்து உங்களை நாளைக் காலையில் அழைத்துப் போய் பொறுப்பாளர் நாற்காலியில் உட்காரவைப்பேன் தயாராய் இருங்கள்” என்றார்.

    மனம் என்பது யானையைப் போன்றது. அதைப் பழக்கப்படுத்டும் விதத்தில் தானாகவே ஒரு கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும். கட்டுக்குள் கொண்டு வந்துதான் அதன் மேலே அம்பாரி  அமைத்து உட்கார முடியும்.

    பழக்கப்படுத்திவிட்டால் யானை யாருக்கு வேண்டுமானாலும் மாலை போடும்.

    ஆனால் யானைக்கு மாலை போடுவது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்த   முரளி  மகளை தொலைபேசி மூலமாக அழைத்து, “என் பேரன்கிட்ட குடு அவன்கிட்ட பேசணும்” என்றான்.

    “தாத்தா  என்னா செய்யறே”, என்ற குழந்தைக் குரலைக் கேட்டு மகிழ்ந்து   “டேய் குட்டிப் பையா,  நேத்தும் உம்மாச்சி சேவிச்சேன் இனிமே எப்பவும் சேவிப்பேன் சரியா” என்றான் முரளி.

    குழந்தை “அம்மா தாத்தா என்னவோ சொல்றான்ங்க  ஒண்ணும் புரியலை”  என்றது மழலைக் குரலில்.

    தியானத்தில் ஆழ்ந்தாலும் அதிலே மூழ்காமல் மிதப்பவன்தான் ஞானி என்று புரிந்தது  முரளிக்கு. 

    (சுபம் )

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 44 (05.11.12)

    மலர் சபா
     
    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
     
     
    விண்ணவரும் வந்திருந்து
    கண்டு களித்திருந்த
    இந்திரவிழாவும்
    மாதவியின் ஆடலும் கோலமும்
    இனிதே நிறைவேறின.
     
     
    பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
    தன் ஆடல் அழகை, கோலத்தை
    தொடர்ந்தே இராமல்
    சடுதியில் முடித்தனள் மாதவி.
     
    இதன் காரணமாய்
    ஊடல் கொண்டவன் போல்
    கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
     
     
    அவனை மகிழ்வித்து
    ஊடல் நீங்க வேண்டி
    அலங்காரக் கோலங்கள் பலவும்
    புனையலானாள் மாதவி.
     
     
    மாதவி நீராடிய முறை
     
     
    பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
    ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
    முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
    இவையனைத்தும் ஊறிய
    நறுமண நன்னீரிலே
    வாசநெய் பூசிய
    மணம் கமழும் கரிய கூந்தல்
    நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
     
     
    கூந்தலுக்குக் கத்தூரி
     
    நீராடிய பின்
    மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
    ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
    கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
     
     
    கால்விரல் அணிகள்
     
     
    செம்பஞ்சுக் குழம்பு பூசிய
    அழகிய சிவந்த சிறிய அடிகளில்
    நன்மை பொருந்திய மென் விரல்களில்
    காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
    அணிந்திட்டாள்.
     
     
    பாதத்துக்கான அணிகள்
     
     
    காலுக்குப் பொருத்தமான
    பரியகம், நூபுரம், பாடகம்,
    சதங்கை, அரியகம்
    முதலான
    அணிகலன்களை அணிந்திட்டாள்.
     
     
    தொடை அணி
     
    திரள்தொடைப் பகுதியில்
    குறங்குசெறி எனும்
    அணிகலன் அணிந்திட்டாள்.
     
     
    இடை அணி
     
     
    அளவில் பெரிய
    முத்துகள் முப்பத்தியிரண்டால்
    கோவையாகத் தொடுக்கப்பட்ட
    விரிசிகை எனும் அணியைத்
    தன் இடையை அலங்கரித்த
    பூவேலைப்பாடு செய்த
    நீலப்பட்டாடையின் மீது
    மேகலையென அணிந்திட்டாள்.
     
     
    தோள் அணி
     
     
    கண்டவர் காமமுற வைக்கும்
    அழகிய கண்டிகை எனும்
    தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
    முத்துவளையைத்
    தம் தோளுக்கு அணியாய்
    அணிந்திட்டாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 90
     
    படத்துக்கு நன்றி:

    http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=13&Itemid=59

    Share
  • சிங்கை கொலு & அன்னை நீலாயதாக்ஷி ஊஞ்சல் 2012

     

    நாகை வை. ராமஸ்வாமி

    அனைத்து உலக  ஹிந்துக்கள்  கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த நவராத்திரியில்  அன்னை தேவி     துர்கை, லக்ஷ்மி,  சரஸ்வதி ஆகிய சக்திகளாகவும்  பத்தாவது நாளில், விஜயதசமியில்,    வெற்றி தேவியாகவும்   வணங்கப்படுகிறாள்.     

    எங்கள் இல்லத்தில்  ( நாங்கள் எங்கு வசித்தாலும், மும்பை முதல், பங்களூர், தற்சமயம் சிங்கப்பூர் ) பொம்மைக் கொலுவுடன்,  எங்கள் ஊர் நாகப்பட்டினம் அன்னை நீலாயதாக்ஷி தேவியை ஒரு சிறு ஊஞ்சலில் தோரணம் மலர் மாலைகளால்  அலங்கரித்துப போற்றி உற்றம் சுற்றம் அழைத்து பாடல்கள் பாடி, வரும் சுமங்கலிகளுக்கும கன்னியர்களுக்கும் மங்கலப்பொருட்கள் அளித்து மகிழ்ந்து வருகிறோம். 

      இந்த ஆண்டு சிங்கப்பூரில் எங்கள் இல்ல கொலு, ஊஞ்சல் புகைப்படங்கள் இத்துடன்.    அன்னை நீலாயதாக்ஷி போற்றி நான் எழுதி வரும் பாடல்களில் பத்து தேர்வு செய்து இசை வடிவம் அமைத்து குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறோம்.  சில கணினி இசைத் தளத்திலும் (தள  முகவரி கீழே).    

     
    Amudame Kumudame
    Neelaayadaakshi Vandhaal
    Navarathna Kreedam
    Ulagaalum Umaiyavale
    Kaatharul Purivai
    Nityam Pooji Devi
    Kaarmegham Pozhindhidum
    Vidamunda Kandan
    Kallam Illaa Vellai Ullam
    Thiruvarul Mevidum
     

    Share
  • தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    மோகன் குமார்

    தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    டிவி யில் பார்த்த படம் – வாகை சூடவா

    வாகை சூடவா – சன் டிவியில் மறுபடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை மிக வியந்த விஷயம் ஹீரோயின் நடிப்பு தான் ! தமிழில் இனியாவுக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. என்ன ஒரு எக்ஸ்பிரஷன். உடல் மொழி..மிக அட்டகாசமான நடிப்பு.

     இயக்குனர் சற்குணம் மனதை தைக்கும் விதத்தில் படத்தை எடுத்திருந்தார். எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்த இவர் குடும்பத்துடன் பார்க்க கூடிய தரமான படங்களை மட்டுமே வழங்கி வருவது மிக மகிழ்ச்சி தருகிறது.

     

    வெறுப்பேற்றும் விளம்பரம்

    கோல்ட்வின்னருக்கு ஒரு மொக்கை விளம்பரம் வருகிறது. பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது. ரம்யா என்று ஓர் தொகுப்பாளினி இருக்கிறாரே அவர் ” இந்த தீபாவளி….” என்று சொல்லி விட்டு வேகமாய் எதோ பிதற்றுகிறார். பின் இது தான் சொன்னேன் என்று ஒரு விளக்கம் வேறு. கொடுமையான விளம்பரத்துக்கு போட்டி வைத்தால் இந்த விளம்பரம் டப் பைட் கொடுக்கும் . மாத்தி யோசிங்க சாரே !

    சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ்

    சென்ற சூப்பர் சிங்கர் சீசன் முடிந்ததும் சிவ கார்த்திகேயன் அடித்த கூத்துகளும், அவரின் புலோப்பர்ஸ்சும் தனியாக ஓரிரு நாள் போட்டார்கள். பலரும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. பின் யூ டியூபிலும் ஆயிரகணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இப்போது முடிந்த சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ் இந்த வாரம் போட்டார்கள். மரண மொக்கை ! அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாமல் சானல் மாற்றி விட்டோம். சிவ கார்த்திகேயன் சினிமாவுக்கு போனது தமிழ் காம்பியரிங் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்லணும் !

     

    மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம்

     

    தினம் ஏன் தாமதமாய் வருகிறாய் என ஆசிரியர் கேட்டதால் அவரை பின்னாலிருந்து கத்தியால் பதிமூன்று வயது மாணவன் குத்திய சம்பவம் இந்த வாரம் நடந்தது. இது பற்றி அந்த ஏரியாவின் கல்வி அதிகாரி பேசியதை நியூஸ்களில் காட்டினார்கள்

     

    ” சின்ன கத்தி தான் அது. ஒண்ணும் பிரச்சனை இல்லை. லேசா தான் குத்தினான். பெருசா பாதிப்பில்லை. ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேத்துருக்கோம். அவரு நார்மலா நல்லாருக்கார். பையனை போலீசில் வச்சு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். எல்லாம் கண்ட்ரோல்லே இருக்கு. எல்லாத்தையும் சரி பாத்துட்டோம் . ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை”

     

    வரிக்கு வரி ப்ராப்ளம் இல்லை; சரி பண்ணியாச்சு; கண்ட்ரோலில் இருக்கு என அவர் பேசியது, சீரியஸ் விஷயத்தை காமெடி ஆக்கிடுச்சு. எல்லாம் சொன்ன அவர், ” என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிடாதீங்க” என்ற கவுண்டர் டயலாக் மட்டும் சொல்லவே இல்லை 🙂

     

    பிளாஷ்பேக் : செல்லமே செல்லம்

     

    முன்பு டிவிக்களில் வந்து பலரும் ரசித்த சில நிகழ்சிகளை இந்த வரிசையில் பார்ப்போம்.

     

    ஜெயா டிவியில் உமா பத்மநாபன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி செல்லமே செல்லம். அம்மா மற்றும் குழந்தை பங்கு பெரும் இதில் குழந்தைக்கு என்ன வித உணவு பிடிக்கும், அவன் பெஸ்ட் நண்பன் யார் போன்ற எளிதான கேள்விகள் தான் கேட்பார்கள். அதற்கு குழந்தையும் அம்மாவும் பெரும்பாலும் மாற்றி தான் பதில் சொல்வார்கள். பார்க்க காமெடியாய் இருக்கும். சின்ன சின்ன குழந்தைகளை பார்க்கும் ஆவலிலேயே விடாமல் பார்ப்போம். துவக்கத்தில் வரும் “செல்லமே செல்லம்” என்கிற பாட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நினைவில் இருக்கு ! இது போன்ற குழந்தைகள் நிகழ்ச்சி இப்போது ஏதும் வருதா என தெரிய வில்லை.

     

    ரசித்த முகநூல் செய்தி

     

    ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனை புரிந்த அம்மாவின் ஜெயா டிவியில் “நீங்களும் செல்லலாம் தெருக்கோடி” என்ற விளம்பரம் அடிக்கடி வருகிறது !

     

     படத்துக்கு நன்றி

    vaagai-sooda-vaa-wallpaper-05.jpg

    Share
  • வார ராசி பலன் 04.11.2012-10.11.2012 வரை

     

    .
    காயத்ரி பாலசுப்பிரமணியமன்

    மேஷம்: பணியில் உள்ளவர்கள்,  சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிக கவனம் செலுத்தலாம். பெண்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. . மாணவர்கள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும் . கலைஞர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடி கவனம் தேவை.

    ரிஷபம்: . நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். மாணவர்கள் நண்பர்களோடு வீண் வாக்குவாதத்தில் இறங்கமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் கலைஞர்கள்,  தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். அதிகமாக புகழ்பவர்களிடமிருந்து,  பொது வாழ்வில் இருப்பவர்கள் விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும்.

    மிதுனம்: கர்ப்பிணிப்ப் பெண்கள், சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால்,ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற் றும் மாணவர்களின் கனவுகள் நனவாகும். கலைஞர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. வியாபாரிகள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செயவதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும்.  பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

    கடகம்:  இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் எப்போதும் கனிவாகப் பேசுவது அவசியம். மாணவர்கள் நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதிப் பார்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு இருக்க, பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள் வது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் , நல்ல இதயங்களை புண்படுத்தாமல் நடப்பது நன்மையைத் தரும்.

    சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட முடியும். கலைஞர்கள் நண்பர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். மாணவர்கள்  தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், எல்லோரிடமும்  நல்ல பெயரை பெறலாம். சுய தொழில் புரிபவர்கள், இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: கலைஞர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மாணவர்கள் , தேர்வு நேரங்களில் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமலிருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாகவும், திறமையாகவும்  செயல்படுவது முக்கியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் வியாபாரிகள்,  கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்படலாம்.

    துலாம்: பெண்கள் குடும்பத்தில் சச் சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். வியாபாரிகள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இருந்தால், நல்ல பெயரோடு, பணவரவும் தங்கும்.

    விருச்சிகம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் அவ்வப்போது தோன்றும் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளை முடித்தால் உறவுகள் நடுவே உங்கள் அந்தஸ்து உயரும். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும்.  கலைஞர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மாணவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: பெண்கள் பணிபுரியும் இடம் மற்றும் இல்லத்தை நேர்த்தியாக வைத்திருப்பார்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். பணியில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெய ரைப் பெறுவது எளிதாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் திறமையால் பிறர் கவனத்தையும், வாய்ப்புக்களையும் ஈர்ப்பார்கள். மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.

    மகரம்: பெண்கள் தங்க நகைகளை இரவலாய் வாங்குவது, இரவலாய் கொடுப்பது- இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பணியில் இருப்பவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்: முதியவர்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறா ர்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினர் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். மாணவர்கள் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். பொது வாழ்வில் இருபவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (18)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 18

    இரவு.

    தேவியின் வர்த்தைச் சாட்டைகள் அவன் மனதில் ரத்தத் தீற்றல்களை ஏற்படுத்தியிருக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    தேவியின் தேள் கொடுக்குச் சொற்கள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன.

    ‘தேவி…நான் யாருக்காகம்மா வாழுறேன்?….உனக்காக மட்டும்தாம்மா வாழ்ந்திட்டிருக்கேன்!…உனக்காகத்தாம்மா இந்த உடம்பின் ஒரு முக்கிய உறுப்பையே வித்தேன்… உனக்காகத்தாம்மா என் காதலியையே இழந்தேன்….. உனக்காகத்தாம்மா…இதோ இந்தக் கிறுக்குப் பெண்ணையே கட்டிக்கிட்டேன்?… இப்படி ஒரே வர்த்தைல என்னைய நொறுங்கிப் போக வெச்சிட்டியேம்மா!”

    தலையணையில் முகம் புதைத்துக் கதறினான்.

    ‘தேவி…சத்தியமாச் சொல்றேம்மா…எனக்கு மட்டும் அந்தச் சாமி மூணு கிட்னியக் குடுத்திருந்தா….என்னோட மாப்பிள்ளைக்கு அழகாத் தூக்கிக் குடுத்திருப்பேனேம்மா!..”

    ‘இரவு முழுதும் கொசுக்கடி… அவள் நினைவுகள்’ என்று எழுதிய யாரோ ஒரு கவிஞன் சுந்தரின் நிலையைப் பார்த்திருந்தால் ‘இரவு முழுதும் சவுக்கடி…தங்க வார்த்தைகள்” என்றும் எழுதியிருப்பான்.
     
    பக்கத்தில் வாயைப் பிளந்தபடி கொர்…கொர்…”ரென்று பேய்த்தனமாய்க் குறட்டை விட்டு உறங்கும் ரேணுகாவை வெறுப்பாய்ப் பார்த்தான்.

    விடியற்காலை நேரத்தில் அவனையேயறியாமல் அவன் உறங்கிய போது, கனவில்…

    வெள்ளைச் சேலையுடன் நடந்து வந்த தேவி, ‘அண்ணா…இது உனக்கே நியாயமா?… என் கழுத்துல தாலி ஏறக் காரணமாயிருந்த நீயே…அது இறங்கவும் காரணமாயிட்டியே…சரி… பரவாயில்லை… கோடிச்சேலையாவது குடு…குடுண்ணா..குடு” என்று கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்க,

    வாரிச்சுருட்டிக் கொண்டு விழித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி 6.15.

    ‘அய்யோ…அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்களே….”நினைக்கும் போதே அவன் உடல் பதறியது.

    ஏழு மணிவாக்கில் தறிக் கூடத்திற்குக் கிளம்பியவன், போகிற போக்கில் தாயிடம், ‘அம்மா…தேவி நேத்திக்கு தறிக் கூடத்திற்கு வந்திருந்தா…அவ புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு என்னைய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா…”

    ‘அய்யய்யோ…. என்னடா இவ்வளவு சாவகாசமாச் சொல்றே?…மாப்பிள்ளைக்கு என்னடா உடம்புக்கு?”

    ‘அது…வந்து….”என்று திணறியவன், ‘நீயே போய் விசாரிச்சுக்கம்மா!” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு அதே அவசரத்துடன் வெளியேறினான்.

    ‘என்னாச்சு இவனுக்கு?” குழம்பிப் போன லட்சுமி, ‘டேய்..டேய்..எந்த ஆஸ்பத்திரின்னாவது சொல்லிட்டுப் போடா!”

    ‘சிவா ஆஸ்பத்திரி” சொல்லிவிட்டுச் சென்றான்.

    ——

    ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தாயிடம் தேவி அந்த விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்து போனாள் அவள்.

    ‘யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனுசனுக்கு பகவான் இப்படியொரு நோவக் குடுத்திட்டானே!” மகளுக்காக கண்ணீர் வடித்தாள்.

    நேரம் பார்த்து தேவி தன் அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

    ‘அம்மா…அண்ணன் நினைச்சா…என் மாங்கல்யத்தைக் காப்பாத்தலாம்மா!…ஆனா…அண்ணன்தான்…மாட்டேன்னு!” அழுகையை முன்னிறுத்தி தன் தேவைக்கான கொக்கியைப் போட்டாள்.

    ‘என்ன..என்னம்மா சொல்றே?…சுந்தர் உனக்காக என்ன வேணாலும் செய்வானாச்சே…அவனா மாட்டேன்கறான்?…என்கிட்டச் சொல்லும்மா…நான் அவன்கிட்டப் பேசறேன்!”

    தான் சுந்தரிடம் கிட்னி கேட்ட விஷயத்தையும், அவன் மறுத்த விஷயத்தையும் தனக்கே உரிய பாணியில் தேவி தன் தாயிடம் விவரிக்க,
     
    ‘என்னம்மா ஆச்சரியமாயிருக்கு!…நீ கேட்டு சுந்தர் மறுத்திட்டானா?…என்னால நம்பவே முடியலையே!”

    ‘அதெல்லாம் அப்ப…இப்ப அண்ணன் மாறிடுச்சு!”

    ‘சரி தேவி..நீ கவலைப்படாதே!…நான் அவன் கிட்டப் பேசி சம்மதிக்க வைக்கிறேன்!… போதுமா!” நம்பிக்கையுடன் சொன்ன லட்சுமியை பார்த்துச் சிரித்தாள் தேவி.

    ‘ஏண்டி சிரிக்கறே?”

    ‘பின்னே சிரிக்காம என்ன பண்ணச் சொல்றே?…நான் கேட்டே தராதவன்   நீ கேட்டா மட்டும் தந்திடவாப் போறான்?” தாயாரைத் தூண்டி விடும் விதமாய் அவள் சொல்ல,

    ‘நீ வேணாப் பாருடி..நான் சொன்னா அவன் கேட்பான்!” என்ற லட்சுமி மாப்பிள்ளையையும் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்

    தொடரும்

     

     

    Share
  • திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

     

    சுலோச்சனா

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

    இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
       
                மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

                   பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

              ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

                  அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

                 ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                       யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

    புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
    பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

    எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                                 “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

    இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

                பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

                  உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

         திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

    தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

    படத்திற்கு நன்றி :

    http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    Share
  • நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.

     

                                                                                   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண்ணை
    வையத்தில் இறக்கியது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    நாசா விண்ணுளவி ஏகும்
    செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி,
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !

    +++++++++++

     

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

     

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

     

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     



    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

     

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November  3, 2012)

    Share
  • Ladies special weekly Magazine 15th Anniversary Function

     


    Looking forward your presence

    Parvathy balasubramanian

    (Sruthilaya Vidyalaya)

     
     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

     

    நண்பர்களே….  

    குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிறு (04-11-2012)மாலை 5 மணிக்கு சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. நண்பர்கள் அனைவரும் இதில் அவசியம் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

    நட்புடன்,

    எச்.பீர்முஹம்மது

     
    Share
  • பொறுமை

    கவிநயா

    தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் உள்ள ‘பொறுமை’ என்ற கவிதையின் தமிழாக்கம்.

     பொறுமை

     நீ ஏதும் பேச மறுத்தால்…

    என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி

    அதனை அடைகாத்து வைத்திருப்பேன்.

    சிறிதளவும் அசையாமல்

    தலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்

    நட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல

    மிகப் பொறுமையுடன் நானிருப்பேன்.

    காலை நிச்சயம் மலரும்,

    கவிந்திருக்கும் காரிருள் மறையும்,

    வானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்

    பொன்னருவியாகப் பொழியும்.

    சிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்

    என் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்

    இனிய கானங்களாய் ஒலிக்கும்,

    என் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்

    உனது இன்னிசை புகுந்து,

    வண்ணப் பூக்களாய்ப்

    பூத்துச் சொரியும்.

    Original in English

    Patience

    Rabindranath Tagore

     

    If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
    I will keep still and wait like the night with starry vigil
    and its head bent low with patience.
    The morning will surely come, the darkness will vanish,
    and thy voice pour down in golden streams breaking through the sky.
    Then thy words will take wing in songs from every one of my birds’ nests,
    and thy melodies will break forth in flowers in all my forest groves.

    படத்துக்கு நன்றி

    http://discomaulvi.wordpress.com/2011/04/30/sabr-patience-by-ibn-qayyim-al-jawziyyah/

     

     


    Share