திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

6

 

சுலோச்சனா

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
   
            மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

               பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

          ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

              அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

             ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                   யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                             “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

            பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

              உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

     திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

படத்திற்கு நன்றி :

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

  1. இதன் உட்பொருள் விளக்கம் வேறு. பின்னர் தருகின்றேன். என் தமிழ் செயலி தற்சமயம் செயல்படவில்லை.

  2. யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    இந்தப்பாடலின் உட்பொருளானது

    >>> யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை. <<>>யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<>>>யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர்கைப்பிடி <<<<<<<<<>>>>>>>>> யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே <<<<<<<<<<

    முள்வைத்துக் குத்தினாலும் ஒரு முனிவர் (நிஜமான முனிவர்) சாபம் இடுவதில்லை. மாறாகத் தன்னை துன்புறுத்தும் அந்த அன்பரை இறைநிலையிலிருந்து வாழ்த்துவர்.

    நாமும் நம் அன்றாட வாழ்வினில் பிறரை வாழ்த்த வாழ்த்த எல்லாருமே நம்முடன் இசைவாகவே நட்பு பாராட்டுவர். அருட்கருணை பொங்கி வழியும். கோபம் வருவதில்லை.

    வாழ்த்த வேண்டுமெனில் வாய்விட்டு எல்லோருக்கும் கேட்கும்படியாக அல்ல; மனதிற்குள் வாழ்த்தினாலே போதும். அப்படி தொடர்ந்து வாழ்த்தும்பொழுது நம்மைச் சுற்றி அவரைப் பற்றிய நல்லெண்ணங்கள் மூளையிலுள்ள நியூரான்களால் Broadcast செய்யப்படும். இது அந்த நபரின் Sub-Concious Mindனுள் ஆழமாக அவரை அறியாதே உட்செலுத்தப்படும்.

    மனோவியலில் Subliminal message என்ற ஒன்றினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். புறக்காரணிகள் எதுவும் இன்றி அடுத்தவரின் மனதினுள் நம் எண்ணங்களை விதைத்தல்.

  3. இந்தப்பாடலின் உட்பொருளானது

    முதல்வரி…

    >>> யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை. <<<

    எல்லா உயிரிகளிலும் இருப்பது (Universal Magnetism) எனப்படும் வான்காந்தமானது ஜீவகாந்தமாய் (Bio-Magnetism) தன்மாற்றமடைந்த பரிணமிப்பே.

    பச்சிலை என்று குறிப்பிடுவது கவனிக்கப்படவேண்டும். காய்ந்த இலை அல்லது சருகு என்று குறிப்பிடவில்லை. காய்ந்த இலைகளில் ஜீவகாந்தம் இருப்பதில்லை. அதாவது இலை மரணித்துவிட்டது. உயிர்களில் ஜீவகாந்தம் உள்ளது.

    இறந்த இலையில் இறைவன் இல்லையா ? என நீங்கள் கேட்கலாம். எல்லாமே இறைத்துகள்களால் ஆனவை. இன்று விஞ்ஞானிகள் கூறும் Boson Particle அல்ல இறைத்துகள். அது அதற்கும் நுண்ணிய ஒன்று. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை நம்மால். Fundamental Energy Particle. இதனையே நம் முன்னோர்கள் பரமாணு என்கின்றனர்.

    அதாவது உயிருள்ளவைகளில் கண்டிப்பாக ஜீவகாந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பது முதல்வரியின் பொருள்.

  4. இரண்டாம் வரி

    >>>யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<

    இந்த வரி மிகவும் நுட்பமானது.
    இங்கே ‘யாவர்க்கும்’ என்பது மானிடர்களை மட்டுமே குறிப்பிடுகின்றார்.

    பசுவிற்கு உயிர்ச்சுழல் Clock Wise Directionல் அமைந்திருக்கின்றது. மனிதனுக்கும் அவ்வாறே உயிர்ச்சுழல் கடிகாரச்சுழலில் அமைந்திருக்கின்றது.

    சில சந்தர்ப்பங்களில் அது எதிர்மறையாகச் சுழல ஆரம்பித்தால் ஜீவகாந்தம் இழக்கப்பட்டு இறுதியில் மரணத்தில் முடியும்.

    கையுறை – கைக்கவசம், வழங்கி உதவு , any offering taken by one who goes to see a great personage , visiting presents .

    இங்கே இப்படியும் பொருள் கொள்ளலாம்.

    உன் ஜீவகாந்தம் இழக்காமல் தக்க பாதுகாப்பினை கைக்கொள் என்றும் கொள்ளலாம்

    உன்னிடம் இருக்கும் அதிகமான ஜீவகாந்த ஆற்றலை தேவைப்படும் பிறருக்கு கொடுத்து உதவிடு என்றும் கொள்ளலாம்.

    ரிஷிகள் ஆசி வழங்குவது தங்களுடைய அதிகப்படியான ஜீவகாந்தத்தினை ஜீவகாந்தம் குறைவானவர்களுக்கு தங்களின் உள்ளங்கைகளின் மூலமும் கண் பார்வையின் மூலமும் அருள்கின்றனர். இதனையே அருள்பாலித்தல் என்கின்றனர்.

  5. >>>>யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர்கைப்பிடி <<<<<<<<<<

    சித்தர்களின் வாழ்வியல் முறையில் இதுதான் மிகவும் சூட்சுமமான ஒன்று.

    சித்தர்கள் சாப்பிடும் முன்னர் ஒரு கைப்பிடி உணவினை உள்ளங்கையில் வைத்து அதிலுள்ள ஆற்றலைத் தன் உடலிற்கு ஒத்துக்கொள்ளும்படியான ஜீவகாந்தமாக மாற்றும் ஒரு உத்தி.

    ஒரு கைப்பிடி கவள உணவினை உள்ளங்கையில் வைத்தபடி மூலாதாரத்தில் இருக்கும் உயிராற்றலை உணவுடன் இணைத்து மூளைக்கு செலுத்தி அங்கே பதங்கமாக்கியபின்னர் உடலிலுள்ள அனைத்து செல்களிலும் அந்த உணவின் மீநுட்பமான ஆற்றலைப் பாய்ச்சும் ஒரு உத்தி.

    இதனால் உடல் இளமை பெறும். முகம் தேஜஸ் ஆகும். உணவு உடலிற்கு ஊறு செய்யா.

  6. நான்காம் வரி…
    >>>>>>>>>> யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே <<<<<<<<<<

    முள்வைத்துக் குத்தினாலும் ஒரு முனிவர் (நிஜமான முனிவர்) சாபம் இடுவதில்லை. மாறாகத் தன்னை துன்புறுத்தும் அந்த அன்பரை இறைநிலையிலிருந்து வாழ்த்துவர்.

    நாமும் நம் அன்றாட வாழ்வினில் பிறரை வாழ்த்த வாழ்த்த எல்லாருமே நம்முடன் இசைவாகவே நட்பு பாராட்டுவர். அருட்கருணை பொங்கி வழியும். கோபம் வருவதில்லை.

    வாழ்த்த வேண்டுமெனில் வாய்விட்டு எல்லோருக்கும் கேட்கும்படியாக அல்ல; மனதிற்குள் வாழ்த்தினாலே போதும். அப்படி தொடர்ந்து வாழ்த்தும்பொழுது நம்மைச் சுற்றி அவரைப் பற்றிய நல்லெண்ணங்கள் மூளையிலுள்ள நியூரான்களால் Broadcast செய்யப்படும். இது அந்த நபரின் Sub-Concious Mindனுள் ஆழமாக அவரை அறியாதே உட்செலுத்தப்படும்.

    மனோவியலில் Subliminal message என்ற ஒன்றினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். புறக்காரணிகள் எதுவும் இன்றி அடுத்தவரின் மனதினுள் நம் எண்ணங்களை விதைத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *