முகில் தினகரன்

அத்தியாயம்  – 18

இரவு.

தேவியின் வர்த்தைச் சாட்டைகள் அவன் மனதில் ரத்தத் தீற்றல்களை ஏற்படுத்தியிருக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

தேவியின் தேள் கொடுக்குச் சொற்கள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன.

‘தேவி…நான் யாருக்காகம்மா வாழுறேன்?….உனக்காக மட்டும்தாம்மா வாழ்ந்திட்டிருக்கேன்!…உனக்காகத்தாம்மா இந்த உடம்பின் ஒரு முக்கிய உறுப்பையே வித்தேன்… உனக்காகத்தாம்மா என் காதலியையே இழந்தேன்….. உனக்காகத்தாம்மா…இதோ இந்தக் கிறுக்குப் பெண்ணையே கட்டிக்கிட்டேன்?… இப்படி ஒரே வர்த்தைல என்னைய நொறுங்கிப் போக வெச்சிட்டியேம்மா!”

தலையணையில் முகம் புதைத்துக் கதறினான்.

‘தேவி…சத்தியமாச் சொல்றேம்மா…எனக்கு மட்டும் அந்தச் சாமி மூணு கிட்னியக் குடுத்திருந்தா….என்னோட மாப்பிள்ளைக்கு அழகாத் தூக்கிக் குடுத்திருப்பேனேம்மா!..”

‘இரவு முழுதும் கொசுக்கடி… அவள் நினைவுகள்’ என்று எழுதிய யாரோ ஒரு கவிஞன் சுந்தரின் நிலையைப் பார்த்திருந்தால் ‘இரவு முழுதும் சவுக்கடி…தங்க வார்த்தைகள்” என்றும் எழுதியிருப்பான்.
 
பக்கத்தில் வாயைப் பிளந்தபடி கொர்…கொர்…”ரென்று பேய்த்தனமாய்க் குறட்டை விட்டு உறங்கும் ரேணுகாவை வெறுப்பாய்ப் பார்த்தான்.

விடியற்காலை நேரத்தில் அவனையேயறியாமல் அவன் உறங்கிய போது, கனவில்…

வெள்ளைச் சேலையுடன் நடந்து வந்த தேவி, ‘அண்ணா…இது உனக்கே நியாயமா?… என் கழுத்துல தாலி ஏறக் காரணமாயிருந்த நீயே…அது இறங்கவும் காரணமாயிட்டியே…சரி… பரவாயில்லை… கோடிச்சேலையாவது குடு…குடுண்ணா..குடு” என்று கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்க,

வாரிச்சுருட்டிக் கொண்டு விழித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி 6.15.

‘அய்யோ…அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்களே….”நினைக்கும் போதே அவன் உடல் பதறியது.

ஏழு மணிவாக்கில் தறிக் கூடத்திற்குக் கிளம்பியவன், போகிற போக்கில் தாயிடம், ‘அம்மா…தேவி நேத்திக்கு தறிக் கூடத்திற்கு வந்திருந்தா…அவ புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு என்னைய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா…”

‘அய்யய்யோ…. என்னடா இவ்வளவு சாவகாசமாச் சொல்றே?…மாப்பிள்ளைக்கு என்னடா உடம்புக்கு?”

‘அது…வந்து….”என்று திணறியவன், ‘நீயே போய் விசாரிச்சுக்கம்மா!” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு அதே அவசரத்துடன் வெளியேறினான்.

‘என்னாச்சு இவனுக்கு?” குழம்பிப் போன லட்சுமி, ‘டேய்..டேய்..எந்த ஆஸ்பத்திரின்னாவது சொல்லிட்டுப் போடா!”

‘சிவா ஆஸ்பத்திரி” சொல்லிவிட்டுச் சென்றான்.

——

ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தாயிடம் தேவி அந்த விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்து போனாள் அவள்.

‘யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனுசனுக்கு பகவான் இப்படியொரு நோவக் குடுத்திட்டானே!” மகளுக்காக கண்ணீர் வடித்தாள்.

நேரம் பார்த்து தேவி தன் அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

‘அம்மா…அண்ணன் நினைச்சா…என் மாங்கல்யத்தைக் காப்பாத்தலாம்மா!…ஆனா…அண்ணன்தான்…மாட்டேன்னு!” அழுகையை முன்னிறுத்தி தன் தேவைக்கான கொக்கியைப் போட்டாள்.

‘என்ன..என்னம்மா சொல்றே?…சுந்தர் உனக்காக என்ன வேணாலும் செய்வானாச்சே…அவனா மாட்டேன்கறான்?…என்கிட்டச் சொல்லும்மா…நான் அவன்கிட்டப் பேசறேன்!”

தான் சுந்தரிடம் கிட்னி கேட்ட விஷயத்தையும், அவன் மறுத்த விஷயத்தையும் தனக்கே உரிய பாணியில் தேவி தன் தாயிடம் விவரிக்க,
 
‘என்னம்மா ஆச்சரியமாயிருக்கு!…நீ கேட்டு சுந்தர் மறுத்திட்டானா?…என்னால நம்பவே முடியலையே!”

‘அதெல்லாம் அப்ப…இப்ப அண்ணன் மாறிடுச்சு!”

‘சரி தேவி..நீ கவலைப்படாதே!…நான் அவன் கிட்டப் பேசி சம்மதிக்க வைக்கிறேன்!… போதுமா!” நம்பிக்கையுடன் சொன்ன லட்சுமியை பார்த்துச் சிரித்தாள் தேவி.

‘ஏண்டி சிரிக்கறே?”

‘பின்னே சிரிக்காம என்ன பண்ணச் சொல்றே?…நான் கேட்டே தராதவன்   நீ கேட்டா மட்டும் தந்திடவாப் போறான்?” தாயாரைத் தூண்டி விடும் விதமாய் அவள் சொல்ல,

‘நீ வேணாப் பாருடி..நான் சொன்னா அவன் கேட்பான்!” என்ற லட்சுமி மாப்பிள்ளையையும் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *