தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

 

ராமஸ்வாமி ஸம்பத்

“அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் மேலும் மெருகடைந்து நகமும் சதையும் போல் இணைபிரியாதவர் ஆனோம். எம் நட்பின் நெருக்கம் என்னை அவன் அந்தப்புரத்திற்குள்ளும் தங்கு தடையின்றி செல்லக்கூடிய உரிமையை அளித்தது. அஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணி எனக்கருதப்பட்ட இளவரசி பானுமதியுடன் நான் சொக்கட்டான் ஆடுவதையும் துரியன் வெகுவாக ரசித்தான்.

“அவ்வாறு ஒருநாள் அவளுடன் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு வந்த தன் நாயகனைக் கண்டு பானுமதி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதை அறியாத நான் ‘ஓஹோ, தோல்விக்குப் பயந்து ஓட நினைக்கிறாயா?’என்று அவளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவள் மேகலாபரணம் சிதைந்து அதில் உள்ள முத்துக்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. அப்போது துரியன் மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி ‘கர்ணா, முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?’ என்றான். கண்ணா, இப்போது சொல்லுங்கள். எந்த கணவன், அதுவும் இந்நாட்டின் அரசனாகப் போகிறவன், இப்படி கல்மஷம் இல்லாமல் நட்பைப் போற்றி நடந்துகொள்வான்? இந்த நிகழ்வு ஒன்று போதாதா எங்கள் நட்பின் ஆழத்தினைப் புரிந்துகொள்ள?”

“நன்று கர்ணா, உண்மை நட்பின் இலக்கணத்தை உங்கள் இருவரின் தோழமை பறைசாற்றுகிறது. எனினும் அறம் பெரிதா நட்பு பெரிதா எனக்கேட்பின் தர்மத்திற்கே முதலிடம் கொடுக்கப் படவேண்டும். அதனையே உன்னிடம் யாசிக்கிறேன்,” என்றான் கண்ணன்.

சினத்தில் கர்ணன் முகம் சிவந்தது. “நீங்கள் ’பாண்டவ பக்‌ஷபாதி’ என்பது அனைவரும் அறிந்ததல்லவா? அவ்வைவருக்காகத்தானே என்னை துரியனிடமிருந்து பிரிக்க முயலுகிறீர்கள்?”

”இல்லை கர்ணா! உன்னை உரியவர்களிடம் சேர்க்கத்தான் துடிக்கிறேன்.”

கண்ணனின் கூற்று கர்ணனுக்கு விளங்கவில்லை. “என்ன, எனக்கு உரியவரா? யார் அவர்கள்? என்னை உயிருக்கும் மேல் நேசிக்கும் துரியோதனன்தான் எனக்கு உரியவன். இந்தத் தேரோட்டி மகனான ராதேயனுக்கு வேறு எவரும்  உரியவர்கள் இல்லை,” என்றான்.

“அப்படி சொல்லாதே கர்ணா. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. அது தெரிந்தால் நீ இப்படி அதர்மத்திற்கு அடிவருடமாட்டாய்.”

“என் பிறப்பின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தால் அதைத்தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்தான். ஆனால் அதற்கும் துரியனுடன் என் நட்புக்கும் என்ன இணைப்பு?”

கண்ணன் மிக நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

“கர்ணா! உனக்கு மிக்க அதிர்ச்சி அளிக்கப்போகும் அந்த ரகசியத்தை இப்போது வெளிப்படுத்துகிறேன். நீ மூத்த பாண்டவன். மஹாராணி குந்திக்கும் கதிரவனுக்கும் பிறந்தவன். நீ பாண்டவர்களுடன் இருக்கவேண்டியவன். ஆனால் நீயோ அதர்மத்தின் உருவான துரியனின் முகாமில் இருக்கிறாய்.”

கண்ணனின் இக்கூற்றினைக் கேட்ட கர்ணனுக்குத் தொண்டையில் ஒரு அடைப்பு ஏற்பட்டதுபோல் இருந்தது. பூமி தன் கால்களைவிட்டு நழுவதுபோல் தோன்றியது. தன் முன் ப்ரபஞ்சமே சுற்றுவது போல உணர்ந்தான். ‘நான் குந்தி புத்திரனா?…..நான் குந்தி புத்திரனா?’ என்ற கேள்விக்கணைகள் அவன் உள்ளத்தை துளைக்கத் தொடங்கின.

“கண்ணா, என்னைக் குழப்புவதற்காக தாங்கள் பிரயோகிக்கும் மாயை இது என நினைக்கிறேன். இதற்கு என்ன ஆதாரம்?” என்றான்.

“இதற்கான ஆதாரத்தை நாளை காலை என் அத்தையே உன் ஜன்ம விருத்தாந்தத்தைக் கூறி உன் முன் வைப்பாள். நான் சொல்வதை நம்பு. இவ்வுண்மை சூரியனுக்கும் மஹாராணி குந்திக்கும் எனக்கும் விதுரர் மற்றும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களுக்குக்கூட இது தெரியாது. தெரிந்தால் தர்மபுத்திரன் உன்னையே அஸ்தினாபுரத்து அரசனாக்கி விடுவான். ஐவருக்கு ஊசிமுனை அளவு நிலம் கூட கொடுக்கமாட்டேன் என்று கொக்கரித்த துரியனும் உன்னை அஸ்தினாபுர அரசனாக்க அங்கிகாரம் அளித்து விடுவான். நாளை நடக்க இருக்கும் குருக்‌ஷேத்திரப் போரும் தொலைந்துவிடும். அப்படிப்பட்ட அமைதி நிலவவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு உன் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்” என்று கண்ணன் அடுக்கிக்கொண்டே போனான்.

“இந்த உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தீர்? என்னை எல்லோரும் தேரோட்டி மகன் என்று இழிவாக அழைத்த காலத்தில் நீங்கள் ஏன் அதனை மறுக்க முற்படவில்லை? இப்போது என்னை ஏன் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்?”

“குழப்பம் தேவையில்லை கர்ணா. உண்மையை என்றும் மறைக்க முடியாது. எவ்வாறாகிலும் அதற்குரிய நேரத்தில் தக்க சூழ்நிலையில் அது வெளிப்பட்டே ஆகவேண்டும். அத்தருணம் வந்துவிட்டது இப்போது.”

“விதி சதி செய்து என்னை என் சகோதரர்களுக்கு எதிராக போரிட வைத்துள்ளதே! ’அண்மையில் வெளிப்பட்ட உடன்பிறப்புகளா அல்லது நெடுநாளைய உற்ற நண்பனா?’ என்ற கேள்வியால் நான் ஒரு  தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளேனே. கண்ணா, இது என்ன கொடுமை? நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த ரகசியத்தை என்னிடம் ஏன் கூறினீர்கள்?”

“நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், நாம் எப்பாடுபட்டும் நலிந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இதுதான் என் எண்ணம். அவ்வெண்ணம்  வெற்றி பெறவே இந்த முயற்சி. அது பலிப்பதற்கு உன் ஒத்துழைப்பு தேவை கர்ணா.”

கண்ணனின் இக்கூற்று மூத்த கெளந்தேயனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் விரைவில் தெளிவு பெற்றான். சில நொடிகள் அமைதியாக இருந்தபின் கர்ணன் பேசலுற்றான்.

 (தொடரும்)

படத்திற்கு நன்றி:

http://www.tamilhindu.com/2010/06/chariot-great-hindu-cultural-symbol/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

 1. தர்மம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ம்ம்ம்ம்ம், வில்லியாரின் பாணியிலேயே அதை ஒட்டியே கொண்டு போகிறீர்கள்.  ஆனால் மூலத்தில் இவை இல்லை. :)))  எப்படி இருந்தாலும் கர்ணனை ஒரு கதாநாயகனாக என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. :))))) அடுத்துத் தொடரக் காத்திருக்கிறேன்.

 2. துரோணரிடம் குருகுல வாசம் செய்தபோதில் இருந்தே துரியோதனாதியரோடு கர்ணனுக்குப் பழக்கம் உண்டு.  பாண்டவர்கள் மேல் அவனுக்கு இருந்த அதீத பொறாமையைத் தூண்டி விடுகிறாப்போல் துரியோதானாதியரின் விருப்பமும் இருக்கவே தான் அவர்களோடு கூட்டுச் சேருகிறான் கர்ணன்.  அர்ஜுனனிடம் இயல்பாகவே அவனுக்கு வெறுப்பு உண்டு.  அவனைக் கொல்ல வேண்டியே பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக்கொடுக்குமாறு துரோணரிடம் கேட்க, அவர் நாசூக்காக, அதற்கு வேண்டிய மனோதிடமும், பக்குவமும் கர்ணனுக்கு வரவில்லை எனக் கூறி மறுப்பார்.  அதன் பின்னரே பரசுராமரிடம் பொய் கூறி மாணவனாகச் சேர்ந்து பிரம்மாஸ்திரப் பிரயோகத்தைக் கற்பான் கர்ணன்.  இதுவே வியாசர் சொல்வது. :))))

 3. என்னதான் மூலத்தில் இல்லை எனச் சொன்னாலும், கர்ணன் பாத்திரம் ஒரு குரோதமான பாத்திரம் இல்லை என நான் எண்ணுகிறேன். சிவாஜி ரசிகன் என்பதும் ஒரு வலுவான காரணமாக இருக்கலாம்!:))

  சந்தர்ப்ப சூழ்நிலைகள் சிலரை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் கொண்டுபோய் விடும் எனப் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இவனுக்கும் நேர்ந்தது.

  மற்ற ஐவரையும் தன்னுடனே வைத்துக்கொண்ட குந்தி இவனை மட்டும் விட்டதுதான் இதற்கெல்லாம் மூல காரணம். முன்னமேயே இது நிகழ்ந்தது என ஒரு காரணம் இதற்கு! ஆனால், நடந்ததென்னவோ உண்மைதானே!

  தாய் செய்த தவற்றால் ஒருவன் துயரப் பட்டான். ஐவர் பலனடைந்து புகழ் பெற்றனர்.‌

  இந்த விவாதம் காலங்காலமாக நடைபெற்றே வருகிறது! இன்னும் நடக்கும்!

  அப்படியே கர்ணன் படத்தை ரீவைண்ட் செய்து நடுவிலிருந்து முன்நோக்கிப் பார்ப்பதுபோல் இருக்கிறது சார்!

  நடையின் சுவை களைப்பைத் தராமல் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published.