முகில் தினகரன்

தொலைக்காட்சியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த பாபு அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக வேண்டி எழுந்து ஜன்னலை மூடப் போனான். அங்கே….. ஜன்னலுக்கு வெளியே வேலைக்காரி முனியம்மா தன் மகன் கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவனை மடியில் அமர்த்தி வைத்து…விளையாட்டுக் காட்டிக் கொண்டே ஒவ்வொரு கவளமாக அவள் ஊட்ட..ஊட்ட அவன் சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க பாபுவின் மனம் ஏங்கியது. ‘ஹூம்..அந்தக் கண்ணனுக்கும் என் வயசுதான்!…இருந்தும் அவனோட அம்மா அவனை மடியில் வெச்சு ஊட்டி விடறாங்க..எங்கம்மாவுந்தான் இருக்காங்க..ஒரு நாள் என் கூட உட்கார்ந்து நான் சாப்பிடறதை பார்த்திருப்பாங்களா?…எப்பப் பார்த்தாலும் லேடீஸ் கிளப்…மீட்டிங்….இதேதான்’

‘ம்மா…போதும்மா…வயிறு நெறைஞ்சிடுச்சும்மா’ கண்ணன் முகத்தைத் திருப்ப ‘இந்தா..இந்த வடையாச்சும் சாப்பிடு’ என்றபடி அவள் வடையை நீட்ட, வாங்கிக் கொண்டான்.

‘அய்யய்ய…இது நேத்திக்கு காலைல நம்ம வீட்டுல செஞ்ச வடையாச்சே.!.அது கெட்டுப் போச்சுன்னு நான்தானே வேண்டாம்னு எறிஞ்சேன்..அதைய அம்மா இந்த வேலைக்காரிக்குக் குடுத்திருக்கா போலிருக்கே’ தனக்குள் சொல்லிக் கொண்டே தொலைக்காட்சிக்கு முன் வந்து அமர்ந்த பாபுவிற்கு மனசு வலித்தது. ‘ஹூம்…நான் வேண்டாம்ன்னு வீசியெறியறதை சாப்பிடறவங்க கூட சந்தோஷமா இருக்காங்க..மூணு நேரமும் சுடச்சுட..வகைவகையா சாப்பிடற நான்…இஷ்டமேயில்லாம…வேண்டா வெறுப்பா சாப்பிடறேன்’

மறுநாள் பள்ளி விடுமுறையானதால் வழக்கம் போல தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலேயே தவம் கிடந்தான் பாபு.

‘தம்பி…வாப்பா… சாப்பிடலாம்… மணி ஒம்பதாகப் போகுது…பசிக்கலையா?’ வேலைக்காரி முனியம்மா அன்போடு அழைக்க அதில் தொனித்த தாய்ப்பாசத்திற்குக் கட்டுப்பட்டு மௌனமாய் வந்து அமர்ந்தான் பாபு. போதாதற்கு முனியம்மா பக்கத்திலேயே நின்று கொண்டு ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா..இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா’ என்று அன்பொழுக பரிமாற தன்னையுமறியாமல் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் பாபு.

‘எதுக்கப்பா இந்த ஒரு சப்பாத்தி மட்டும் பாக்கி…இதையும் சாப்பிட்டுடப்பா’ அவள் நீட்ட மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அதையும் தீர்த்தான். தாயப்பாசத்திற்கு ஏங்கிய அந்த பிஞ்சு மனசு வேலைக்காரியின் அன்பையே தாய்ப்பாசமாய் ஏற்று மகிழ்ந்தது.

முற்பகல் பதினோரு மணியிருக்கும், வெளியே முனியம்மாவின் மகன் கண்ணனின் அழுகுரல் கேட்க ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்தான் பாபு.

‘அட..என்னைய என்ன சாமி பண்ணச் சொல்றே..எப்பவும் அரைகுறையாச் சாப்பிடுற அந்தத் தம்பி இன்னிக்குத்தான் பாவம் நல்லா சாப்பிட்டுச்சு…அதான் அந்த சந்தோஷத்துல எல்லா சப்பாத்தியையும் குடுத்து சாப்பிட வெச்சேன்..பரவாயில்லை விடுப்பா…இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்’ ஆறுதலாய்க் கூறினாள். எப்படியும் இன்று மீந்து போன சப்பாத்தி கிடைக்கும் என்ற ஆசையில் மண் விழுந்ததைத் தாங்க முடியாத கண்ணன் அழுது கொண்டேயிருந்தான.;

பாபுவின் மனதில் முனியம்மா மீதிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. ‘ஆஹா…என்ன ஒரு மனசு இந்த தாய்க்கு…இதுவே வேறு யாராவதாயிருந்தால்..வேண்டுமென்றே எனக்குக் குறைவாகப் பரிமாறிவிட்டு மீந்து போனதை தன் மகனுக்குக் கொண்டு போய்க் குடுத்திருப்பாங்க..ஆனா..இந்த முனியம்மா என்னடான்னா…நான் நிறைய சாப்பிடறதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தம்மகனுக்கு இல்லாட்டியும் பரவாயில்லைன்னு மொத்தத்தையும் எனக்கே ஊட்டி விட்டுட்டாளே…! ஆனா ஒண்ணு நல்லா புரியது..நான் நல்லா சாப்பிட்டா..அந்தப் பையனுக்குக் கிடைக்காது…நான் அரைகுறையாய்ச் சாப்பிட்டு மீதம் வெச்சாத்தான் அவனோட வயிறு நெறையும்!…அப்ப சரி…’

அன்று பாபுவுக்கு பிறந்த நாள்.

‘முனியம்மா..இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாள்…அவன் என்ன கேக்கறானோ..அதைச் செய்து குடு!….பாபு…உனக்கு இஷ்டமானதைக் கேளு…முனியம்மா சமைச்சுத் தருவாள்…சாப்பிடு..நான் ஒரு மீட்டிங்க்கு போயிட்டு ஈவினிங் வந்திடறேன்’ மேக்கப்பைச் சரி செய்தபடியே அவசரமாய்ச் சொல்லிவிட்டுப் பறந்தது அம்மாக்கிளி.

அப்பாக்கிளியொ வந்திருந்த வியாபார நண்பர்களுடன் பேசியவாறே சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது.

பாபு ஆசை தீரப் பட்டியலிட்டான். முனியம்மா மலைத்துப் போனாள். ‘அட என் ராசா…என் கண்ணே பட்டுடும் போலிருக்கே’ சந்தோஷமாய் சமையலில் இறங்கினாள.;

மதியம். டைனிங் டேபிளில் பாபுவின் விருப்பப்படி சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஏகமாய்க் காத்திருக்க, பாபுவை அழைக்க அவன் அறைக்குள் சென்ற முனியம்மா அதிர்ந்து போனாள்.

பையன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

‘என்னப்பா..என்னாச்சு?’

‘வயிறு ரொம்ப வலிக்குது முனியம்மா’ துடித்தான்.

‘அய்யய்யோ…பொறந்த நாளும் அதுவுமாய் இப்படிச் சொல்றியே…என்ன சாப்பிட்டே?’

‘ஒண்ணுமே சாப்பிடலையே முனியம்மா’

‘சரி வா டாக்டர்கிட்ட போய்க் காட்டிட்டு வந்துடலாம்’

‘ம்ஹூம் மாட்டேன்..டாக்டர் ஊசி போடுவார் அது இதை விட வலிக்கும்’ அவசரமாய் மறுத்து விட்டு மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டவனை உசுப்பினாள்.

‘அதுக்காக சாப்பிடாமப் படுத்தா எப்படி தம்பி..கொஞ்சமாச்சும் சாப்பிடேன்’

‘அய்யோ…வயிறு வலிக்குதுன்னு சொல்றேனல்ல?..அப்புறம் ஏன் என்னைய ‘சாப்பிடு…சாப்பிடு’ன்னு உயிரெடுக்கறே..சாயந்திரம் வரைக்கும் நான் படுத்துத் தூங்கப் போறேன்…என்னைய தொந்தரவு பண்ணாதே..போ’ பாபுவின் பேச்சில் திடிரென்று ஏறி;ய கடுமை முனியம்மாவின் வாயை அடைத்துவிட, முக வாட்டத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ‘பாவம்..பொறந்த நாளன்னைக்கா இந்தப் பாழும் வயித்து வலி பையனுக்கு வரணும்’

செய்த பலகாரங்கள் அனைத்தும் வீணாகிப் போக, அன்று இரவு அத்தனையையும் தூக்கி முனியம்மாவிடம் கொடுத்து விட்டு மகனை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் பாபுவின் தாய்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ‘ஏம்பா..டாக்டர் எல்லா டெஸ்டும் பண்ணிப் பாத்துட்டு ‘வயித்துல ஒண்ணுமே மிஸ்டெக் இல்லே’ன்னுட்டாராம..பொய்யாப்பா சொன்னெ நீ?’ முனியம்மா பாபுவிடம் ரகசியமாய்க் கேட்க,

‘ஆமாம் பொய்தான் சொன்னேன்’

‘ஏன்?..எதுக்குப் பொய் சொன்னே?..நீ கேட்டதையெல்லாம்தான் நான் சமைச்சு வெச்சிட்டேனே’

லேசாய்க் குறுஞ்சிரிப்பு சிரித்த அந்தச் சிறுவன் ‘முனியம்மா நான் அப்படிப் பொய் சொன்னதுனாலதான் மொத்தப் பலகாரமும் கண்ணனுக்குக் கெடைச்சுது…பாவம்…அன்னிக்கு ஒரு சப்பாத்திகூட விடாம சாப்பிட்டு அவனை அழ வெச்சுட்டேனல்ல…அதுக்காகத்தான் அத்தனை பலகாரமும் அவனுக்குக் கெடைக்க இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினேன்..அது சரி…கண்ணன் நல்லா திருப்தியா சாப்பிட்டானா?’

பதில் சொல்ல முடியாதபடி தொண்டை அடைக்க கண்களில் ‘குபுக்’கென கண்ணீர் பொங்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் முனியம்மா.

(முற்றும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வயிறாற நன்றி

  1. அருமையான கதை. ஒரு குழந்தை பாசத்திற்காக ஏங்குவதும், பாசம் காட்டுவதும் நெஞ்சை தொடுகிறது. பாசத்தை யார் கொடுத்தால் என்ன?                                 மனோகரன் விசாகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *