தமிழ்த்தேனீ

நேர்மையா இருக்கறவனுக்கு எந்தப் பலனுமே கிடையாதா ? “கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” அப்பிடீங்கிற கீதை வாசகம் மட்டும் தான் சொந்தமா?

எரிச்சலாய் வந்தது  முரளிக்கு. பல வணிக ஸ்தலங்களுக்கு அதிபர் திரு மகாலிங்கம். அவராய்த் தன்னைத் தேடி அழைத்ததை தன்னுடைய அதிர்ஷ்டமாக  மனதில்  நினைத்துக்கொண்டு   அவரைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றார் முரளி.

மரியாதையான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளே அமரவைக்கப்பட்டான் முரளி. திரு மகாலிங்கம் வந்தார். வாங்க மிஸ்டர் முரளி  உக்காருங்க , உங்க திறமையைப் பத்தி நிறையப் பேரு சொல்லி இருக்காங்க, அதுனாலேதான் நானும் உங்க திறமையை உபயோகிக்கணும்னு உங்களை வரச்சொன்னேன்.

உங்களுக்குத் தெரியும், எனக்கு பல நிறுவனங்கள் இருக்கு.  குறிப்பா எல்லாத்திலேயும் நல்ல லாபம் வந்திட்டு இருக்கு. இந்த மகாலிங்கம் என்டெர்ப்ரைஸ் அப்பிடித்தான் ஓடிண்டு இருந்தது.

இப்போ இந்த நிறுவனம்,  சிலபேரோட அலட்சியப் போக்காலே லாபம் கொறைஞ்சது மட்டுமில்லே. என் மனசிலே இதை எப்பிடி சரிப்படுத்தி லாபம் வரா மாதிரி இயங்க வைக்கறது அப்பிடீன்னு ஒரு கவலையே வந்துடிச்சு. இந்தக் கம்பனி விஷயமாத்தான் உங்களை வரச் சொன்னேன். 

என்னோட மேனேஜர் எல்லா விஷயங்களையும்  உங்களுக்கு சொல்வார். எல்லாத்தையும் கேட்டப்புறம் ஒரு நல்ல  தீர்வு குடுப்பீங்கன்னு நான் நம்பறேன் என்றார்.

ஒரு மாசமா  அவர் சொன்னதை கவனத்திலே வெச்சிண்டு  எல்லா வேலையையும் ஒதுக்கி வெச்சிட்டு, “சரி நம்மை மதிச்சுக் கூப்பிட்டிருக்கார். அதுனாலே அவருக்கு வேண்டிய இந்த முக்கியமான வேலையை செய்துகொடுப்போம்” அப்பிடீன்னு ராப்பகலா தூக்கத்திலேயும் இதே நினைப்போட யோசிச்சு யோசிச்சு உண்மையா, சுயநலமே பாக்காம நேர்மையா உழைச்சு உருவாக்கி  இந்த திட்டத்தை அவர்கிட்ட சொன்னார் முரளி.

“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை எப்பிடிப் பாராட்டறதுன்னே தெரியலை”ன்னு சொல்லி  எழுந்து நின்னு கைகொடுத்துட்டு, “இவ்ளோ நாளா  உங்க திறமையை நான் உபயோகிக்காம விட்டது எவ்ளோ தப்புன்னு எனக்கு உணர்த்திட்டீங்க” அப்பிடீன்னு கண்கலங்க அவர் சொன்ன போது, “சரி நாம உழைச்ச உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஒரு தகுதி உணர்தல் கிடைக்கும்னு நம்பி அது வரை அந்த திட்டத்துக்காக அவர் செலவழித்த தொகையைக் கூட இன்று வரை அவரிடம் சொல்லாமல் எப்படியும் அவர் கணிசமான ஒரு தொகையைக் கொடுப்பார் என்று நம்பி காத்திருந்து”, சே எல்லாமே வீணாகிவிட்டதே.

திட்டத்தை செயலாற்றும் வரை  தினமும் பலமுறை போனில் தொடர்பு கொண்டு அவருடைய அலுவலகத்துக்கே வரச்சொல்லி, மற்ற யாரையும் உள்ளே விடாமல் அவரிடம் மட்டுமே தனியாக விவாதித்து அவருடைய திறமையை மட்டுமே நம்புவதாகச் சொல்லி ஊக்கமளித்து அவரை நம்ப வைத்து வேலையை வாங்கிக் கொண்ட பின் ஒரு வாரமாக அவரிடமிருந்து அழைப்போ அல்லது அவன் செலவழித்த பணமோ எதுவுமே இல்லை. 

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மௌனம் காப்பது என்று யோசித்து அது வரை அவர் செலவழித்த தொகைக்கு கணக்கை எழுதி அவருக்கு அனுப்பினார் முரளி.  ஒரு மாதமாக  அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை, இவரே தொடர்பு கொண்டாலும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் அழைத்தார். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றது ஒரு இனிய குரல்.

கொள்ளென்றால் வாய்திறக்கும், கடிவாளமென்றால் வாய் மூடிக்கொள்ளும் குதிரை போல் அவரும் என்ற உணர்வில்  மனம் கசந்து போனது முரளிக்கு.

தெய்வத்துக்குப் பொதுவா நேர்மையா உழைச்சு அவன் கண்டு பிடித்த வழிகள் பின்பற்றப்படுகின்றன  என்று ஒருவர் மூலமாகத் தெரிந்தது.

மகிழ்ச்சியாய் இருந்தாலும், தன்னை மதித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவர் ப்ரச்சனை தீர்ந்தவுடன் தன்னை ஒதுக்கிவிட்டாரே என்னும் வருத்தம் மனதுக்குள்  மையம் கொண்டது.

துபாயிலிருந்து ஒரு போன். கால்  எடுத்து  யாரு என்றார் முரளி.  அப்பா நான்தான்  ரஞ்சனி பேசறேன் என்றாள் அவருடைய மகள். உங்க பேரன் கிண்டர் கார்டன்லே  பாஸ்பண்ணிட்டான். உங்ககிட்ட பேசணுமாம் என்றாள்.

பேரன் போனில் “தாத்தா நானு எங்க ஸ்கூல்லே பாஸ் பண்ணிட்டேன்’, என்றான் மழலை மாறாத குரலில்.

“வெரிகுட் சமத்துப் பையண்டா நீ. கங்ராஜுலேஷன்” என்றார் முரளி.

“தாத்தா நீங்க  உம்மாச்சி  சேவிச்சீங்களா”,  என்றான்  பேரன்.  யாரோ பொட்டில் அறைந்தாற்போன்ற உணர்வு.

சற்று நேரத்துக்கு முன்தான் இனி தெய்வங்களை சேவிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் முரளி.  குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்று தோன்றியது.

“அம்மா தாத்தா பேசமாட்டேங்கறாங்க”, என்றான் பேரன்.

“சரி ரஞ்சனி, ஒரு முக்கியமான  அழைப்பு வந்திருக்கு. நான் மறுபடியும்  பேசறேன்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் உட்கார்ந்தார் முரளி. 

தொலைபேசி அழைத்தது.  எதிர்முனையில் திரு மகாலிங்கம் பேசினார்.

“நீங்க கொடுத்த யோசனையை அமல்படுத்திவிட்டேன். இனி நீங்கதான் அந்தக் கம்பனியின் பொறுப்பாளர். உங்களைவிடத் தகுதியானவர் வேறு யாருமில்லை. அதனால்  நானே வந்து உங்களை நாளைக் காலையில் அழைத்துப் போய் பொறுப்பாளர் நாற்காலியில் உட்காரவைப்பேன் தயாராய் இருங்கள்” என்றார்.

மனம் என்பது யானையைப் போன்றது. அதைப் பழக்கப்படுத்டும் விதத்தில் தானாகவே ஒரு கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும். கட்டுக்குள் கொண்டு வந்துதான் அதன் மேலே அம்பாரி  அமைத்து உட்கார முடியும்.

பழக்கப்படுத்திவிட்டால் யானை யாருக்கு வேண்டுமானாலும் மாலை போடும்.

ஆனால் யானைக்கு மாலை போடுவது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்த   முரளி  மகளை தொலைபேசி மூலமாக அழைத்து, “என் பேரன்கிட்ட குடு அவன்கிட்ட பேசணும்” என்றான்.

“தாத்தா  என்னா செய்யறே”, என்ற குழந்தைக் குரலைக் கேட்டு மகிழ்ந்து   “டேய் குட்டிப் பையா,  நேத்தும் உம்மாச்சி சேவிச்சேன் இனிமே எப்பவும் சேவிப்பேன் சரியா” என்றான் முரளி.

குழந்தை “அம்மா தாத்தா என்னவோ சொல்றான்ங்க  ஒண்ணும் புரியலை”  என்றது மழலைக் குரலில்.

தியானத்தில் ஆழ்ந்தாலும் அதிலே மூழ்காமல் மிதப்பவன்தான் ஞானி என்று புரிந்தது  முரளிக்கு. 

(சுபம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.