தமிழொலி முழங்க ….தமிழுணர்வு பொங்க ….அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ந. தெய்வ சுந்தரம்
தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் கல்வியியல் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை மாநாடு நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்றனர்.
காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது . தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, மாநாட்டுக் குழுவின் ஒன்றிணைப்பாளர் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் நோக்கம்பற்றியும் விளக்கினார். பின்னர் தமிழக அரசுச் செயலர் ( தமிழ் வளர்ச்சி – அறநிலையங்கள் – செய்தித்துறைகள் ) முனைவர் மூ. இராசாராம் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கினார். விரைவில் தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான படிப்புகளையும் ஆய்வுகளையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரையில் தொடங்கவிருக்கிற உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். வரும் 12 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் கூறினார். பின்னர் உரையாற்றிய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ம. திருமலை அவர்கள் இன்றைய கணினி யுகத்தில் கணினித்தமிழ் வளர்ச்சியானது தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மொழியியல் அடிப்படையிலான தமிழ்மொழி ஆய்வின் அவசியத்தை எடுத்துக்கூறினார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியர் கி. கருணாகரன் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி , மையக்கருத்துரை வழங்கினார்.
அடுத்து, தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, முதல் அமர்வு தொடங்கியது. தமிழ் ஆய்வாளர் முனைவர் இராமகி அவர்கள் அமர்வுக்குத் தலைமை வகித்தார். முதலில் அவர் இன்று கணினித்தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளை மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறினார். பின்னர் மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடுகள் விரிவடையவேண்டும் என்ற நோக்கில் திரு. நாக . இளங்கோவன், திரு. இரா. சுகுமாரன், திருமதி. ஜேஸ்லின் பிரசில்டா, திரு. இராஜ்குமார் பழனிச்சாமி, திரு. மா. பூங்குன்றன், திரு. தெ.சீ.சு. மணி உரையாற்றினார்கள்.
பகல் 1.30 மணியிலிருந்து 2 மணிவரை மதிய உணவு விருந்து நடைபெற்றது.
மீண்டும் 2 மணிக்கு இரண்டாவது அமர்வு தொடங்கியது. கணினித்தமிழ் வளர்ச்சித் திட்டம் வகுக்கும் அமர்வாக இது அமைந்தது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ அவர்கள் தலைமைவகித்தார். அவரது உரையைத் தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர். ப.அர. நக்கீரன், முனைவர். சி.இரா.செல்வக்குமார், முனைவர். வ. நாகராசன், முனைவர் மா. கணேசன், முனைவர் சி. சுப்பிரமணி, முனைவர் வி. கிருட்டிணமூர்த்தி, முனைவர் நா. இளங்கோ, முனைவர் க.உமாராசு, முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, 4.30 மணிக்கு மாநாட்டின் நிறைவுவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் தலைமைவகித்தார். பேராசிரியர் . ந. தெய்வ சுந்தரம் மாநாட்டின் இரண்டு அமர்வுகளிலும் கலந்துரையாடப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறினார். உத்தமத்தின் செயலர் திரு. அ. இளங்கோவன் , கணித்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி , பேராசிரியர். இல. இராமமூர்த்தி , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து முனைவர் கா.மு. சேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறினார். முனைவர் மு. கண்ணன் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் மாநாடு இனிதே நிறைவுபெற்றது.
மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.
5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த, தமிழக அரசும் , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.
6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.
மேற்கூறிய கருத்துகள்பற்றி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், மின்தமிழ் வளர்ச்சிக்கான தமிழக அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கவும் தமிழ் ஆர்வலர்களைக்கொண்டு கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை ஒன்றை நிறுவிச் செயல்பட மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் விரும்பியதையொட்டி, மாநாட்டில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்து என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் அங்கேயே உறுப்பினராகத் தங்களைப் பதிவுசெய்து கொண்டனர். விரைவில் பேரவை பதிவு செய்யப்படும், பேரவையின் நடவடிக்கைகளைத் அனைத்துப் பகுதிகளிலும் விரிவாக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான இணையதளம், செய்தி மடல் ஆகியவை விரைவில் தொடங்கப் பெறும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து, மின்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை இப்பேரவை மேற்கொள்ளும்.
மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் மின்னணுத் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒரு தெளிவான திட்டத்தை விரைவில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையானது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலரிடம் அளிக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
எஸ் 4, எம் டி எஸ் அடுக்ககம்
எண் 5, 3 ஆம் குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர், அடையாறு
சென்னை 600020
ndsundaram@hotmail.com
அலைபேசி : 9789059414
திவாகர்
மனித வாழ்க்கை மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்குமே நேரம் கிடைப்பது இல்லை. சில நல்ல விஷயங்கள் கேட்க நேரமே கிடைப்பதில்லை. சில நல்லவர்களைப் பார்க்கப் போகலாம் என்றாலும் நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அப்படியே சாவகாசமாய் நல்ல விஷயங்களைப் படிக்கத்தான் செய்வோமே என்றால் நேரம் ’எங்க சார் இருக்கு.. எனக்கும் படிக்கணுமுனு ஆசைதான்.. ஆனா பாருங்க.. இந்த இருபத்தி நாலு மணிநேரமும் சரியா பொழுது போயிடுது.. தூங்கறதுக்கு கூட சரியா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க..’ என்றுதான் பதில் வரும். இந்த நேரம் கிடைப்பதற்காக. அவர்களுக்கு உதவ 24 மணி நேரத்தை யாராவது சித்தரோ மந்திரவாதியோ அல்லது சாட்சாத் கடவுளோ திடீரென கீழே தோன்றி சற்று நீட்டித்து விட்டால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. பாருங்கள் அப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா நேரத்தை ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக ஒதுக்கிக் கொள்ளலாமே..
ஆனால் உண்மையாகச் சொல்லப்போனால் நமக்கு நேரம் நிறைய இருக்கவே செய்கிறது. ‘டைம் மேனேஜ்மெண்ட்’ என்று வைத்துக்கொண்டு கொஞ்சம் நேர்த்தியாக திட்டமிட்டு நம் வழக்கமாக செய்யும் வேலைகளை பிரிவுபடுத்திக்கொண்டு இன்னின்ன வேலைகளுக்கு இன்னின்ன நேரம் ஒதுக்கி அதன்படி செய்வோம் என்று பார்த்தால் இன்றைய இந்த பரபரப்பான காலத்திலே நமக்கு நேரம் அதிகமாகவே மீதி இருக்கும். டைம் மேனேஜ்மெண்ட் என்பதெல்லாம் ஆகிற காரியமா.. என்றால் அதுவும் சரிதான்.. இதுக்கெல்லாம் நாம் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் நமக்கென்று இந்த விஷயங்களை ஒட்டிய ஒரு நல்ல கட்டுரையை வல்லமையில் வெளியிட்டிருக்கிறார் திரு பெருவை பார்த்தசாரதி.
ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில் சம்பாதித்தது எதுவுமே இறந்த பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள். அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-
பண்டம் பெய் கூரை பழவி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
மண்டி அவ்வழி நடவாதே.
நாயனாரை ஆழ்வாரோடு ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில் சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.
பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
வாழ்க்கைப் பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் http://www.vallamai.com/paragraphs/29506/
கடைசி பாரா: பாகம் பிரியாள் அவர்களின் சில கவிதைத் துளிகள்.
இதோ
யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
வழுக்குப் பாறையின் மீது!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பேரொளி வீசும்
பெரும் பூதவுரு விண்மீன்
தெரிந்தது விண்ணில் !
உஷ்ணம் ஏறும் விரைவாய் !
கன உலோகம்
கதிரியக்க யுரேனியம் போல்
சிதைந்து நிலைத்துவம் அடைவது !
வடிவம் பெருத்து
வெடிக்கும் விண்மீன் முடிவில் !
அசுரக் காந்த ஆற்றல் கொண்ட
மரண விண்மீன்கள் !
பூமிக்கருகில் நெருங்கினால்
மக்களின்
உடற் மூலக்கூறுகள் முறிந்து
முடமாக்கி விடும் !
உயிரினத்துக்கு
மரணம்
உண்டாக்கும் நியூட்ரான்
விண்மீன் !
எரிசக்தி வாயுக் கோளமான
உயிர் விண்மீன்கள்
எரிசக்தி தீர்ந்த பிறகு
வறியதாய் மூப்படைந்து
சிறிது சிறிதாகி
விரைவாகச் சுற்றிப்
பரிதி போல் திணிவு பெற்று
பன்மடங்கு பெருத்து
ஆயுள் குன்றிச்
செத்திடும் விண்மீன் மீண்டும்
புத்துயிர் பெறும் !
++++++++++++++++++
1980 ஆண்டுகளில் பெரும் பூதவுரு விண்மீன் [HR 8752] காலக்ஸியில் காணப்பட்டது. அது வெடித்துச் சிதைந்து போகும் பெரும் பூத விண்மீன் “ரோ காஸ்” [Rho Cas of Spectral Type F] என்பதை ஒத்தது. ஆனால் 1985 முதல் 2005 ஆண்டுக்குள் HR 8752 விண்மீனின் சூழ்வெளி வெகு விரைவில் 3000 டிகிரி உஷ்ணம் மிகையானது. அந்த விண்மீன் இப்போது தன் பௌதிகப் பண்பாடுகளைக் காட்டிப் பேரளவு உஷ்ணமுள்ள [A Type] விண்மீன் வரிசையில் வந்து விட்டது. இவ்விதம் 20 ஆண்டுகளில் HR 8752 விண்மீனில் நேர்ந்த பெருத்த மாறுதல் நிகழ்ச்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அலெக்ஸ் லோபெல் [Alex Lobel, ROB Scientist]
பெரும்பூத விண்மீன் HR 8752 வெற்றரங்கத்தின் ஊடே [மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்] [YEV- Yellow Evolutionary Void] புகும் போது அதன் பௌதிகப் பண்பாடுகள் சூழ்வெளியில் மாறிப் போய் போராட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவிதப் பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பெரும் பூத விண்மீன் [யுரேனியம், ரேடியம் போல் சிதையும் கதிரியக்கமுள்ள கன மூலகங்கள் போல] நிலைத்துவம் இழந்து சிதைவது. அதன் விளைவு : சூழ்வெளியில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களின் அயனிகள் பேரளவு பரவி வெளியாவது. அந்த அயனிகள் குறுகிய அரங்கில் 8000 டிகிரி உஷ்ணத்தில் வகுபடும் போது மீண்டும் நிலைத்துவம் பெறும்.
அலெக்ஸ் லோபெல்
காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) ! அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது ! அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.
விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)
“பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம். அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் ! அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன ! பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் ! அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”
டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)

ஒளிமயமாகிச் சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் கண்டுபிடிப்பு
சமீபத்தில் ஐரோப்பிய ஆய்வுக் குழுவொன்று ஒளிமயமான ஓர் அரிய பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star H 8752] “மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்” [YEV – Yellow Evolutionary Void] என்னும் ஓர் அபூர்வ அரங்கத்தின் ஊடே புகுந்து போவதைக் கண்டுபிடித்தார்கள். அந்தப் பேரொளி வீசும் விண்மீன் மேற்தள உஷ்ணம் [1985 – 2005] அதாவது கடந்த இருபது ஆண்டு களுக்குள் 3000 டிகிரி உஷ்ணம் ஏறியதாகக் கணித்திருக்கிறார்கள். மேலும் முப்பது [1982 -2012] ஆண்டுகளில் அதன் உஷ்ணம் 5000 டிகிரியிலிருந்து 8000 டிகிரி ஏறிவிட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பு, எப்படி நிறை மிகுந்த விண்மீன்கள் காலக்ஸியில் தோன்றி முதிர்ச்சியுற்று வந்துள்ளன என்று அறிந்து கொள்ள உதவி செய்யும். பெரும் பூதவுரு விண்மீன்கள் நமது சூரியன் போல் கால் மில்லியன் அளவு கூடியதாய் பேரொளி வீசுபவை. அவற்றின் வடிவம் நமது பரிதி போல் பல நூறு மடங்கு நீளமுள்ள விட்டம் உடையவை. அதில் விந்தை என்ன வென்றால் அந்த விண்மீன் மஞ்சள் வளர்ச்சி வெற்று அரங்கத்தின் வழியாய்க் கடக்கும் போது சிதைவாகி நிலைத்து மற்றுப் போகிறது.
பெரும் பூதவுரு விண்மீனைச் சாதாரணப் பைனாகுலரிலே காஸ்ஸியோபீடியா விண்மீன் கூட்டத்தில் [Constellation Cassiopedia] பார்க்க முடியும். நமது காலக்ஸியில் இதுவரை 12 பெரும் பூதவுரு விண்மீன்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன்களின் ஆயுள் குறுகியது. அவை கதிர்வீசித் தேயும் யுரேனியம், தோரியம், ரேடியம் ஆகிய கன மூலகங்கள் போன்று நிலையற்றுச் [Unstable Heavy Elemetns] சிதைபவை. இறுதியில் நிலைபெறும் ஈயம் போல், பூதவுரு விண்மீனும் சிதைவாகி இறுதியில் நிலைத்துவம் அடைபவை.
http://www.telegraph.co.uk/science/space/8748876/Massive-supernova-visible-from-Earth.html
http://www.maniacworld.com/Crab-Supernova-Explosion.html
( Supernova Explosion by ESA )
1900 ஆண்டு முதல் 1980 வரை பூதவுரு விண்மீன் HR 8752 சூழ்வெளி உஷ்ணம் 5000 டிகிரியில் நிலையாக இருந்துள்ளது. பிறகு அது 1985 முதல் 2005 வரை திடீரென 8000 டிகிரியா ஏறியது என்று தெரிகிறது. அப்போது பூதவுரு விண்மீனின் ஆரம் நமது பரிதியைப் போல் 750 மடங்கி லிருந்து 400 மடங்காகச் சிறுத்து விட்டதாகக் கணிக்கப் பட்டுள்ளது. பூதவுரு விண்மீன் HR 8752 நிலை எதிர்காலத்தில் எப்படி மாறி இருக்கும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அது ஒரு சூப்பர்நோவா பேராற்றல் வெடிப்பில் [Supernova Explosion] சிதைந்து விடும் என்று நம்பிட அழுத்தமானக் குறிகள் உள்ளன என்று கருதுகிறார்கள்.
புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்
1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக் களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டு களில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை ! காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) ! அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars). இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம் : அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு
பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை ! பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது ! அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் ! அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் ! அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.

காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்
பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை. 600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது ! பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது ! 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது ! எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன ! சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) ! அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !

காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?
நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது. அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது. ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது. ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது ! பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது ! சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது ! 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது ! பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !

மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !
கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன ! மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு ! அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !

நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்
பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் ! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன ! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !

சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் ! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது ! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.

[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Cosmos Gamma Ray Bursts)
11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
15. Spectacular Hypergiant Star Found Passing Through “Forbidden Zone.” [December 10, 2012]
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [December 15, 2012]
பசியும், சுவையும், வளர்ச்சியும்.
இன்னம்பூரான் & தேமொழி
விலங்கினங்களின் உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். நம் மனித இனம் அனைத்தையும் உண்ணும் வகைதான். எதையும் விட்டு வைப்பதில்லை. அசையாத் தாவரங்கள் முதற்கொண்டு நீந்துவன, ஊர்வன, பறப்பன, ஓடுவன என அகப்படும் விலங்கினங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்கிறது, மனித இனம்!
மனித இனம் கண்டுபிடித்த மிக அரிய கண்டுபிடிப்புக்களில், மிகவும் உதவும் கண்டுபிடிப்பாக விளங்குவது சமையல் கலை. சமைப்பதால் உணவு செரிக்கப்பட்டு வெகு விரைவில் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. எனினும் சில காய், கனி, மூலிகைகளை சமைத்தால், அவற்றின் பயன் குறைந்து போவதும் உண்மை.
சமைத்துண்ணும் உணவுப் பழக்கத்தால், பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காலப் போக்கில் மழுங்கிய கோரைப் பற்களையும், செயல் திறனற்ற சுருங்கிய குடல்வாலும் நமக்கு நிலைத்துவிட்டது. காலப்போக்கில் மனித குடலின் அளவும் குறைந்து வருகிறது என்கிறார்கள்.
சொல்லப்போனால் நாம் இரண்டும் கெட்டான். நமக்கு பசுமாட்டின் அசை போட்டு அரைக்கும் பற்களும் கிடையாது. புலியின் கோரைப்பற்களும் கிடையாது. அத்துடன், தாவரஉண்ணி போல தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலக் கூறுகளை செரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்ட, ‘செயல்படும் திறனுள்ள’ குடல்வால் (Vermiform appendix) உறுப்பும் மனித இனத்திற்கு இல்லை.
நாம் உணவை உண்டு, செரித்து அதன் சக்தியை பெற்றுக்கொள்வதில் உடலின் பல உறுப்புகள் பங்கு பெறுகின்றன. நம் உடல் உணவின் மூலம் சக்தி பெறுவதில் உணவு மண்டல உறுப்புகளுடன் மூளையின் பங்கும் இன்றியமையாததாக அமைகிறது. உணவு உட்கொள்வதைக் கண்காணிப்பதில், கட்டுப்படுத்துவதில் நம் மூளை அல்லது மனம் பங்கேற்கிறது. மனம் திருப்தி அடைவது போல சாப்பிடுவது மனித இயல்பு.
உணவு நமக்கு சக்தி கொடுக்கிறது என்று உணர்ந்து நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை.நம் உணர்வுகளுக்கு திருப்தி தரும் உணவுகளையே நாம் நாடுகிறோம். அவற்றை நமக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பிடுகிறோம். இந்த திருப்தி அடையும் உணர்வினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நம் மூளை, மற்றும் மூளையை உணவு மண்டலத்துடன் இணைக்கும் நரம்புகளின் செயல்.
சக்தி இழந்து உணவு தேவைப்படும் பொழுது, இரைப்பையில் கெரிலின் (Ghrelin) என்ற சுரப்பிநீர் சுரக்கிறது. இதனால் ‘உணவு தேவை’ என்ற சமிக்கை மூளைக்கு அனுப்பப்பட்டு ‘போய் சாப்பிடு’ என்ற பதில் கட்டளையையும் மூளை நமக்கு அனுப்புகிறது. அது போலவே திருப்தியாக வயிறு நிறைந்தால் மூளைக்கு ‘வயிறு நிறைந்தது’ பற்றி சமிக்கை அனுப்பப்படுகிறது. மூளை ‘சாப்பிட்டது போதும் நிறுத்து’ என்று பதில் சமிக்கை அனுப்புகிறது. படிப்படியாக பல படிகளில் கட்டளைகள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப் படுகின்றன.
சக்தி இழப்பின் எச்சரிக்கை, சுவையான உணவின் நினைவு, பரிசாக கொடுக்கப்படும் உணவு, அதனால் ஏற்படும் திருப்தி, உணவு தேவை நிறைவேற்றப்பட்டது என்பது போன்று தொடர்ந்து தேவையானக் கட்டளைகளை மூளை நிலைமைக்குத் தக்கவாறு ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புகிறது. ஒரு கட்டளை நிறைவேற்றப்பட்ட சமிக்கை சென்றதும், அதன் தன்மைக்கேற்ப அடுத்த கட்டளை மூளையினால் பிறப்பிக்கப்படும்.
மூளை தரும் இந்தக் கட்டளைகளை நாம் புறக்கணிப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் அதிகம் உண்டு நோயை வரவழைத்துக் கொள்ளுதல், அல்லது பட்டினி கிடந்தது உயிரைவிடுதல் போன்றவை நிகழ்கிறது. இவ்வாறு நாம் மூளையின் கட்டளைகளைப் புறக்கணித்து உணவில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுது அந்தப் பழக்கம் மனநோயாக வகைப்படுத்தப் படும் ‘உண்ணும் கோளாறுகள்’ (eating disorders) என்ற நிலையை அடைகிறது.
உண்ணும் கோளாறுகள் மூன்று முக்கிய வகையாக; (1) அனோரெக்ஸ்யா, (2) புலுமியா, (3) பின்ஜ் ஈட்டிங் (Anorexia nervosa, Bulimia nervosa, and binge-eating disorders) என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. இக்கோளாறுகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். எந்த வயதினரும் பாதிக்கப் பட வாய்ப்பு இருந்தாலும், பதின்ம வயதினர், அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். மெல்லிய தோற்றம் கொண்டிருப்பதே ‘உடல் அழகு’ என்ற கருத்து சமுதாயத்தினால் பெண்கள் மேல் நிர்பந்திக்கப்படும்போழுது அவர்கள் உணவு உண்ணுதலில் கட்டுப்பாட்டினை இழந்து மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.
அனோரெக்ஸ்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் உணவை தவிர்த்து பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் எலும்பும் தோலுமாக மாறுவார்கள். இரத்த சோகை, உயிர்ச்சத்துகள் (vitamins) குறைவு போன்றவை தாக்கி, உருவம் மாற்றமடைந்து, எளிதில் நோய்களால் பாதிக்கபடுவார்கள்.
புலுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் உண்பது, பிறகு வாந்தி எடுப்பது, மலமிலக்கி உபயோகப்படுத்துவது போன்றவற்றினால் உணவை உடலில் சேராமல் செய்யும் முறைகளைக் கையாள்வது, உணவைக் கட்டுப்படுத்துதல் (Dieting) போன்ற வழிகளைக் கையாண்டு சீரற்ற உடல் எடையை கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள்.
பின்ஜ் ஈட்டிங் உணவுப் பழக்கமுள்ளவர்கள், கட்டுப்பாடின்றி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடல் பருமனால் (obesity) பாதிக்க்கப்படுவார்கள். இதனால் குற்றவுணர்வு, மனச்சோர்வு (Depression) போன்ற மேலும் மனநோய்களுக்கு ஆளாவதுடன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அதிகரித்தல், அதனால் மாரடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் (Diabetes) போன்றவைகளினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான காயசண்டிகையை இது நினைவு படுத்தினாலும், யானைக்கு அன்றாட உணவு, கண்ணுங்கருத்துமாக அளவிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்று நாம் அறிவோம்.
இந்த உண்ணும் கோளாறுகளில் வகைப்படுத்தப் படாதவைகள் (eating disorders not otherwise specified – EDNOS) என மற்றொரு பிரிவின் கீழ் மேலும் பல தவறான உணவுப் பழக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவையாவும் மனநோயாகக் கருதப்பட்டே சிகிச்சை தரப்படுகிறது.
பசி இயல்பு. சுவை விருப்பம். வளர்ச்சி இயற்கையின் கொடை. தற்காலம், மேற்கத்திய நாடுகளில், பாட்டியின் கைவைத்தியத்துக்கும், இயற்கையின் அன்பளிப்புக்கும், மூலிகை வைத்தியத்துக்கும், ஆயுர் வேதத்துக்கும் மதிப்பு கூடி வருகிறது. உசாத்துணையில் இன்னம்பூரான் கூட்டியிருக்கும் நூலின் சாராம்சம்:
ஷேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தில் கூறியது போல, பசி வந்தால் நல்ல ஜீரணம். ஜீரணித்தால் ஆரோக்கியம். ஹிப்போக்ரட்டீஸ் சொன்னது போல வியாதிகளின் மூலஸ்தானம், குடல். அந்த அவஸ்தையை நாம் நாடுவதை பற்றி விலாவாரியாக விமரிசிக்கும் திருமதி. ஜில் தாமஸ் சொல்வதைக் கேட்போம்,
1. வேண்டிய அளவு நார்ச்சத்து இல்லையேல், மலம் சிக்கும்;
2. நீரில்லையேல் ஜீரண அவயவங்கள் தவிக்கும்;
3. ஒவ்வாத வகையில் பதார்த்தங்களை முழுங்கிவிடுவதைப் போல பாவம் ஒன்றுமில்லை;
4. அவசரப்பட்டு, அடிச்சு பிடிச்சு சாப்பிட்டால், வயிறு அழும்;
5. உண்ணும் போது நிதானம் உதவும். மன அழுத்தம் நீங்காத போது உண்டால், வயிறு வலிக்கும்;
6. காலையில் எழுந்தவுடன் மலஜலம் கழிப்பது சாலத்தகும்; பொறுத்தார் வயிறாள்வார்!
7. செத்துப்போன உணவை விலக்கவும். கட்டித்தந்த மாமிசத்துகள்களை விட ஒரு கேரட்டை கடிப்பது, உத்தமம்;
8. லாஹிரி வஸ்துக்கள் வயிற்றின் பகை. அவற்றைக்கொண்டு வயிற்றை அடிக்காதே:
9. மருந்தானாலும் விருந்தோடு உண் என்பது சரி. விருந்தானாலும் கபளீகரம் தவிற்க. மருந்து அத்தருணம் உதவாது.
இவற்றின் அடிப்படையில் யான் கூறவருவது: பசிக்கு உணவு; சுவைக்கு பக்குவம்; வளர்ச்சிக்கு தராதரம்.
இருவர் இணைந்து வழங்கினால் பயன் அதிகரிக்கறது. அடுத்த இழையில் குடலுக்குள் புகுந்து பார்க்கலாமா? என்ன சொல்றேள்?
இன்னம்பூரான்
தேமொழி
கவனம்:
நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது. அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
— இன்னம்பூரான் & தேமொழி
உசாத்துணை:
http://www.nimh.nih.gov/health/publications/eating-disorders/complete-index.shtml
http://www.nationaleatingdisorders.org/information-resources/index.php
http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713166.htm
Jill Thomas (2007) Healthy Gut Guide: London: Penguin
சித்திரத்துக்கு நன்றி:
http://1.bp.blogspot.com/-reYJG0vTlfw/UBkOncA5ZfI/AAAAAAAABRo/5YCdGFlRSXU/s1600/maya14.jpg
பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.
வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.
இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.
இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில் தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.
வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.
பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.
சு.கோதண்டராமன்
எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.
இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். (மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.)
1 வந்தது வந்தது பேரொளி இன்று,
வானகமெங்கும் பரவியே நின்று.
ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு
அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.
2 வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்
இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.
இரவென ஒருத்தி பகலென ஒருத்தி
அமரத் தன்மை அடைந்த மகளிர்
ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு
ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று
விண்ணில் நடக்கும் விந்தை காணீர்
3 மூலப் பரம்பொருள் ஏவியபடியே
முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்
இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி
மாறி மாறியே பயணம் செய்வர்.
நிறம் தான் வேறு மனமோ ஒன்று
அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்
தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.
4 உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்
5 சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை
பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்
இன்ன நலன்களை இனிதே நாடவும்
தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி
விழியிலார்க்கு விழிகள் அருளி
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்
6 கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று
ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்
7 விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்
நல்லுடை உடுத்த நளின மங்கையே,
புவியின் செல்வம் ஆளும் ராணியே,
மங்கலச் செல்வி, இன்று எம்மீது
உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.
8 கடந்து சென்ற கணக்கிலா விடியல்
அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்
இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்
யாவற் றிற்கும் நீ வழி காட்டி.
உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.
இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?
9 உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்
தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.
சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.
தேவ பூசனை செய்யும் உந்துதல்
உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!
10 எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?
இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?
கடந்து சென்ற நாட்களின் வழியில்
நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.
இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்
11 எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
எண்ணிலா விடியல் கண்டு களித்து
எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
புதிய மக்கள் நாளை வருவர்
விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.
12 நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை
நெடிய பகையினை நீளத் துரத்தினை
மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி
இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை
தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை
இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு
13 தேவி உனது திருநிறை ஒளியை
பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.
இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்
மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்
இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்
14 விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்
கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்
செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்
கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.
15 உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்
உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை
வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்
கடந்து சென்ற விடியல் களிலே
கடைசியாய் வந்தது இன்றைய வைகறை
இனிவர விருக்கும் விடிவு களுக்கு
முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்
16 உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,
விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்
பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்
இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்
17 ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து
உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்
போற்றும் புலவர்க் கருளுக உஷையே
குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.
18 சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து
காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை
வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்
பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.
19 தேவர் தாயே, அதிதியின் வடிவே
வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!
யாவரும் போற்றும் இனிய நங்காய்,
உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை
உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.
20 உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு
உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்
மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்
விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.
படத்திற்கு நன்றி
http://chakrabodyyoga.blogspot.in/2012/06/from-blah-to-brilliant-3-great-reasons.html
புகார்க்காண்டம் – 07. கானல் வரி
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.
ரிஷபம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச்சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.
மிதுனம்: வாகனங்களை புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்றவரைத் தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும் . வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம். .
கடகம்: வெளியிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிடமுடியும். யாரையும் குற்றம்சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப்போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.
சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.
கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பி பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்திவர, லாபம் தடையின்றி வரும் . வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள் . தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல்படுவார்கள். கலைஞர்களுக்கு , எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.
துலாம்: பொது சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.. கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்
விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.
தனுசு:தொல்லை தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், புது தெம்புடன் வலம் வருவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மை பெறலாம். பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். புதிய துறையில் கால் பதிப்பவர்கள், சில கெடுபிடிகளைத் தாண்டி, தன் திறமைகளை நிரூபிக்க வேண்டி இருக்கும். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை பெற்றோர்கள் இதமாகக் கண்டிப்பதே நல்லது.
மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, பிரச்சனைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிஆகிய இரண்டையும் கடைபிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.
கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தேகம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.
மீனம்: முதியோர்களுக்கு , உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோபதாபங்களைக் குறைத்து பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.
கே.எஸ்.சுதாகர்
ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படி பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொரு நாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருந்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். மருந்துக் கடையில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப் போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த மருந்துக் கடையில். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவைப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.
எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் பல் மருத்துவராக வேலை பார்க்கின்றார். அவர் என்னை எங்கு கண்டாலும் தெரியாதமாதிரிப் போய்விடுவார். அதிகம் கதைக்கமாட்டார். அவரிடம் பல்லுப் பிடுங்கப் போனதும், முரசிற்குள் விறைப்பிற்கான ஊசியைப் போட்டவுடன் கதைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு புகையிரதம் போவது மாதிரி ‘கடக்கடா புடக்கடா’ என்று நிறுத்தவே மாட்டார். நாங்கள் வாயே திறக்கமாட்டோம் என்ற தைரியம் அவருக்கு. அவர் சொல்லும் எல்லாவற்றையுமே கேட்கவேண்டியதுதான். “நீர் என்ன சிவில் இஞ்சினியரோ? ஒரு வீடு அல்லது பாலம் கட்டும்போது அத்திவாரம் எவ்வளவு உறுதியாக இருக்கவேணுமோ அப்பிடித்தான் பல்லும். பல்லுப் போனா சொல்லுச் போச்சு எண்டு பழமொழி இருக்கல்லோ! பல்லை அடிக்கடி கிளீன் பண்ணவேணும். எத்தனை வருஷ்ம் கிளீன் பண்ணி. பாளம் பாளமா வருது?” கன்னங்கரிய நிறத்திலிருக்கும் அவர் தனது வாயைத் திறந்து ஈ என்று காட்டுவார். மின்னல் ஒன்று அடிச்சாப்போல அறை பிரகாசிக்கும். எல்லாவற்றையும் ம் ம் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். விறைப்பு நீங்கும்போது அவரும் தனது கதையை நிறுத்தியிருப்பார்.
இப்போது அவரின் ஞாபகம் வரக்காரணம், நேற்று என்னுடைய நண்பர் ஒருவர் அவரிடம் போயிருந்தார். அவரும் யான் பெற்ற அனுபவத்தைப்
பெற்றிருப்பார். பல்லைப்பிடுங்கியபின் அதன் வலி போக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்திருந்தார். மருந்தை மூன்றுவேளை பாவித்தால் போதும் என்று கூறியிருந்தார். நண்பர் பார்மசிக்கு முன்னால் நின்றபடி, எதிரே தெரியும் மது பானக்கடையை வெறித்துப் பார்த்தபடி தீவிர யோசனையின் நின்றார். என்ன விஷயம் என்றேன். “பல்லுப் பிடுங்கியிருக்கின்றேன். பல மருத்துவர் 3 மாத்திரைகள் போட்டால் போதும் என்றார். பார்மசியில் 3 மாத்திரைகள் கேட்டால் ஒரு பெட்டியை எடுத்து நீட்டுறான். பெட்டியிலை 30 இருக்கு. விலையும் 45$. மிச்சத்தை நான் என்ன செய்வது? அதுதான் இந்த மருந்தைப்பற்றி கொஞ்சம் யோசிக்கிறேன்” என்று எதிரே தெரியும் மதுபானக் கடையைக் காட்டினான். சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் அதை நோக்கி நடந்தான். நடப்பதை ஓரமாக நின்று அவதானித்தேன். சற்று நேரத்தில் ஒரு போத்தலுடன் கடைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கடைக்கு முன்னாலேயே நின்று அதை உடைத்தான். அண்ணாந்து போத்தலுடன் வாயிற்குள் சரித்தான். பிறகு அதன் மூலமே வாயைக் கொப்பளித்தான். இன்று அவனைச் சந்தித்தபோது, “அது மச்சான் ஒரு 25 டாலரோடு எல்லாக் கொதி வலியும் போச்சுது” என்றான்.
படத்திற்கு நன்றி:
மோகன் குமார்
சூப்பர் குடும்பம்
கங்கை அமரன்- மீனா-சுகன்யா நடுவர்களாக பங்கு பெரும் சூப்பர் குடும்பம் என்கிற நிகழ்ச்சி ஒரு சில நாள் தப்பித் தவறி பார்த்து தொலைச்சுட்டேன். சீரியலில் வரும் நடிகர்களை வெவ்வேறு டீமில் போட்டு சூப்பர் சிங்கர் 20-20 மாதிரி எதோ கேம் ஷோ நடத்துறாங்க. இப்படி டீம் பிரிச்சவங்க- ஒண்ணு பாடுறாங்க; அல்லது டான்ஸ் / மிமிக்ரி செய்றாங்க. மிக சுமாரான தரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை சன் டிவி எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை.
நான் பார்த்த நிகழ்ச்சியில் கங்கை அமரன் கம்மியா மார்க் தர்றார்; Biased ஆக நடந்துக்குறார் என சொல்லி சண்டை வேற நடந்துச்சு (நிஜமா? செட் அப்பா?)
டிவியில் வக்கீலுக்கு விளம்பரம் !
பொதுவாய் வக்கீல், ஆடிட்டர் இவர்கள் பத்திரிக்கை, டிவியில் விளம்பரம் செய்வதில்லை. இவர்கள் தங்கள் சேவையை விளம்பரப்படுத்தக் கூடாது என சட்டமே ரொம்ப நாள் இருந்தது. இப்போது அது சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
பல டிவியில் ஒரு வக்கீல் விளம்பரம் வருகிறது. கலாமோகன் என்ற வக்கீல் தனது நிறுவனம் பற்றி அடிக்கடி விளம்பரம் செய்கிறார். ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது இதைப் பார்க்க. நான் தான் ஆச்சரியப்பட்டேன் என்றால் இதே போல் பார்த்த நண்பர்கள் சிலரும் ” என்னங்க இது.. வக்கீல் விளம்பரம் எல்லாம் டிவியில் வருது !” என போன் பண்ணி ஆச்சரியபடுகின்றனர் !
நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : “சின்ன சின்ன ஆசை “
“சின்ன சின்ன ஆசை ” மக்கள் டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை வருகிற நல்ல நிகழ்ச்சி. வாழ்க்கையில் மிக நொந்து போனவர்களை கண்டுபிடித்து (சிலர் தற்கொலை வரை சென்றவர்கள்) அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது !
சூப்பர் சிங்கர் 20-20
இந்த வாரம் அய்யாசாமி மிக மகிழ்ச்சியாய் சூப்பர் சிங்கர் 20-20 பார்த்தார். காரணம் அவருக்கு பிடித்த ராகினிஸ்ரீ மற்றும் எஸ். மதுமிதா இருவரும் இந்த வாரம் இணைந்து சில பாடல்கள் பாடினர். இருவரும் ஒரே டீம் என்பது அவருக்கு கூடுதல் குஷி.
ரஜினி மற்றும் கமல் பிறந்த நாளை இந்த வாரம் சூப்பர் சிங்கரில் கொண்டாடி மகிழ்ந்தனர். கமல்- ரஜினி இருவர் பாடல்களையும் பாடும்போது, இருவர் வெற்றிக்குமே இளையராஜா எவ்வளவு உதவியிருக்கிறார் என்பது தெரிகிறது !
நிற்க. மா. கா. பா. ஆனந்த் மீசையை மழித்துக் கொண்டு கொடுமையாய் வந்து போகிறார் (ஸ்டைலாமாம் !) இன்னொரு தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு என்னா மாதிரி வாய் ! செம பேச்சு ! செம வாலுத்தனம் !
கல்யாண மாலை
சன் டிவி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கல்யாண மாலை. ஞாயிறு காலை வரும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் அல்லது உறவினர் தங்கள் குடும்ப வரனுக்கு பெண்/ மாப்பிள்ளை தேவை என பேசுவார்கள். இந்த வாரம் ஒரு தாய்- தந்தை இருவரும் லேசாக அழுது கொண்டே தங்கள் எதிரில் அமர்ந்துள்ள மகனுக்கு வரன் வேண்டும் என பேசினர். பையன் காது கேட்காத -வாய் பேச முடியாத ஒருவர்- அதான் அவர்களுக்கு அவ்வளவு எமோஷன் போலும் !
வருகிற பலரும் நிகழ்ச்சி நடத்தும் மோகனைக் காட்டி உங்களை போல மாப்பிள்ளை இருந்தால் போதும் என்கின்றனர் (கல்யாண மாலை மோகனுக்கு வயது 60 !!)
பிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் கதை நேரம்
இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கதை நேரம் ஒரு சிறுகதை எப்படி படமாக்கப்பட் வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது. தமிழின் மிக சிறந்த சிறுகதைகளை இதில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோரின் பல நல்ல கதைகள் குறும் படங்களாய் விரிந்தன. முதலில் சன் டிவியில் வந்த போதும் பின் மக்கள் தொலைக்காட்சியில் வந்த போதும் விடாமல் பார்த்த நிகழ்ச்சி இது. இப்போது DVD வடிவிலும் கிடைக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் அவசியம் DVD வாங்கி பார்த்து இன்புறலாம் !
மு.பழனியப்பன்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.
இதில் ஏறி வெற்றிக் கொள்வது
எப்படி என்பது இன்று வரை புதிர்தான்!
எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும்,
இடை தழுவும் கொடியும் உன்மத்தம் ஏற்றும்.
கால் வைத்து ஏற ஆங்காங்கே கவிதைப்படிகளும்,
கண்ணீர் உப்பால் கெட்டித்துப்போன பாறையும் உண்டு.
அமைதியாய் இருப்பதாய் எண்ணுகையில்
அதை முறிப்பதற்கே விழுந்து தெறிக்கும்
கூரான கோபச் சில்லுகள் எங்கும்.
கண்ணில் பட்டவரும், காவியங்களும்
சொன்ன கதையில் மயங்கி ஓர் ஆர்வம்
கொழுந்து விட்டது மெல்லவே. இதோ
யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
வழுக்குப் பாறையின் மீது!
படத்திற்கு நன்றி
செய்நன்றி தனை மறந்து
முகத்துக்கு முன் துதியும்
முதுகுக்குப் பின் மிதியடியும்
மலிந்து விட்ட சமூகத்தில் –
இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!
பெயரளவில் பெண்ணுரிமை
என்றுரைத்து விட்டு
வழக்கமான கடிவாளங்களை
பொன்னால் பூட்டும் உலகில்
இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!
உழைப்பவன் செவ்வனே உழைக்க
எவனோ ஒருவன் – அட்டையென
உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்
இனியும் வேண்டாம் –
ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!
யாமின்றி அணுவும் அசையாது
என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? – என்று
எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக்
காட்டேரிகளின் மயான உலகில்
புல்லாய்க் கூட – வேண்டாம் ஓர் பிறவி !!!
படத்துக்கு நன்றி: http://www.mea.org/advertising/enoughads.html