தொல்லை காட்சி- சூப்பர் குடும்பம்-கல்யாண மாலை-பாலுமஹேந்திரா கதை நேரம்

0

மோகன் குமார்

சூப்பர் குடும்பம்

கங்கை அமரன்- மீனா-சுகன்யா நடுவர்களாக பங்கு பெரும் சூப்பர் குடும்பம் என்கிற நிகழ்ச்சி ஒரு சில நாள் தப்பித் தவறி பார்த்து தொலைச்சுட்டேன். சீரியலில் வரும் நடிகர்களை வெவ்வேறு டீமில் போட்டு சூப்பர் சிங்கர் 20-20 மாதிரி எதோ கேம் ஷோ நடத்துறாங்க. இப்படி டீம் பிரிச்சவங்க- ஒண்ணு பாடுறாங்க; அல்லது டான்ஸ் / மிமிக்ரி செய்றாங்க. மிக சுமாரான தரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை சன் டிவி எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை.

நான் பார்த்த நிகழ்ச்சியில் கங்கை அமரன் கம்மியா மார்க் தர்றார்; Biased ஆக நடந்துக்குறார் என சொல்லி சண்டை வேற நடந்துச்சு (நிஜமா? செட் அப்பா?)

டிவியில் வக்கீலுக்கு விளம்பரம் !

பொதுவாய் வக்கீல், ஆடிட்டர் இவர்கள் பத்திரிக்கை, டிவியில் விளம்பரம் செய்வதில்லை. இவர்கள் தங்கள் சேவையை விளம்பரப்படுத்தக் கூடாது என சட்டமே ரொம்ப நாள் இருந்தது. இப்போது அது சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

பல டிவியில் ஒரு வக்கீல் விளம்பரம் வருகிறது. கலாமோகன் என்ற வக்கீல் தனது நிறுவனம் பற்றி அடிக்கடி விளம்பரம் செய்கிறார். ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது இதைப் பார்க்க. நான் தான் ஆச்சரியப்பட்டேன் என்றால் இதே போல் பார்த்த நண்பர்கள் சிலரும் ” என்னங்க இது.. வக்கீல் விளம்பரம் எல்லாம் டிவியில் வருது !” என போன் பண்ணி ஆச்சரியபடுகின்றனர் !

நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : “சின்ன சின்ன ஆசை “

“சின்ன சின்ன ஆசை ” மக்கள் டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை வருகிற நல்ல நிகழ்ச்சி. வாழ்க்கையில் மிக நொந்து போனவர்களை கண்டுபிடித்து (சிலர் தற்கொலை வரை சென்றவர்கள்) அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது !

சூப்பர் சிங்கர் 20-20

இந்த வாரம் அய்யாசாமி மிக மகிழ்ச்சியாய் சூப்பர் சிங்கர் 20-20 பார்த்தார். காரணம் அவருக்கு பிடித்த ராகினிஸ்ரீ மற்றும் எஸ். மதுமிதா இருவரும் இந்த வாரம் இணைந்து சில பாடல்கள் பாடினர். இருவரும் ஒரே டீம் என்பது அவருக்கு கூடுதல் குஷி.

ரஜினி மற்றும் கமல் பிறந்த நாளை இந்த வாரம் சூப்பர் சிங்கரில் கொண்டாடி மகிழ்ந்தனர். கமல்- ரஜினி இருவர் பாடல்களையும் பாடும்போது, இருவர் வெற்றிக்குமே இளையராஜா எவ்வளவு உதவியிருக்கிறார் என்பது தெரிகிறது !

நிற்க. மா. கா. பா. ஆனந்த் மீசையை மழித்துக் கொண்டு கொடுமையாய் வந்து போகிறார் (ஸ்டைலாமாம் !) இன்னொரு தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு என்னா மாதிரி வாய் ! செம பேச்சு ! செம வாலுத்தனம் !

கல்யாண மாலை

சன் டிவி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கல்யாண மாலை. ஞாயிறு காலை வரும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் அல்லது உறவினர் தங்கள் குடும்ப வரனுக்கு பெண்/ மாப்பிள்ளை தேவை என பேசுவார்கள். இந்த வாரம் ஒரு தாய்- தந்தை இருவரும் லேசாக அழுது கொண்டே தங்கள் எதிரில் அமர்ந்துள்ள மகனுக்கு வரன் வேண்டும் என பேசினர். பையன் காது கேட்காத -வாய் பேச முடியாத ஒருவர்- அதான் அவர்களுக்கு அவ்வளவு எமோஷன் போலும் !

வருகிற பலரும் நிகழ்ச்சி நடத்தும் மோகனைக் காட்டி உங்களை போல மாப்பிள்ளை இருந்தால் போதும் என்கின்றனர் (கல்யாண மாலை மோகனுக்கு வயது 60 !!)

பிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் கதை நேரம்

இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கதை நேரம் ஒரு சிறுகதை எப்படி படமாக்கப்பட் வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது. தமிழின் மிக சிறந்த சிறுகதைகளை இதில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோரின் பல நல்ல கதைகள் குறும் படங்களாய் விரிந்தன. முதலில் சன் டிவியில் வந்த போதும் பின் மக்கள் தொலைக்காட்சியில் வந்த போதும் விடாமல் பார்த்த நிகழ்ச்சி இது. இப்போது DVD வடிவிலும் கிடைக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் அவசியம் DVD வாங்கி பார்த்து இன்புறலாம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *