மலர் சபா

புகார்க்காண்டம் – 07. கானல் வரி

வசந்தமாலை கையிலிருந்த யாழை மாதவி தொழுது வாங்கி, திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி, கானல் வரி பாடத் தொடங்குதல்
கட்டுரை
                       (1)
வசந்தமாலை கொணர்ந்த யாழது
ஒவிய வேலைப்பாடமைந்த
வண்ணத்துணியாலான உறையினுள்
வைக்கப்பட்டிருந்தது.
அதன் அழகிய கோடுகளில்
மலர்கள் சூட்டப்பட்டிருந்தன.
மைதீட்டிய பெரிய கண்களையுடைய
மணமகள்  ஒருத்தியின்
ஒப்பனைக் கோலத்துக்கு ஒப்பாய்
மிக்க அழகுடன் இருந்தது.
அந்த யாழானது
பத்தர், கோடு, ஆணி, நரம்பு முதலான
பதினெட்டு வகை உறுப்புகளிலும்
எந்தக் குற்றமும் குறையும் இன்றிச்
சிறந்து விளங்கியது.
நல்யாழ் அதனை
மாதவிதானும் தொழுது
தன் கையிலே வாங்கிக் கொண்டனள்.
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என
இசை நூல்கள் கூறும்
எண்வகைக் கலைத்தொழிலாலும்
யாழதன் நரம்புகளை ஆராய்ந்து
இசை எழுப்பினள் மாதவி.
பண்வகையிலும் குற்றம் இன்றி
யாழ்மீட்டிச் சுருதி சேர்த்தனள்.
மரகதமணி மோதிரங்கள் அணிந்த
அவளின் மென்காந்தள் விரல்கள்
பாடுகின்ற வண்டினம்போல்
யாழ்நரம்பின் மீது தவழ்ந்தன.
வார்த்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
உருட்டல் தெருட்டல் அள்ளல் பட்டடை
இங்ஙனம்
இசைநூலோர் வகுத்துவைத்த
எண்கரணங்களை
அவற்றின் இசைக்கூறுகளைத்
தன் செவித்திறத்தால் நன்கு ஆராய்ந்து
சீர்தூக்கி அறிந்தனள்.
பின் கோவலனை நோக்கி,
“தங்கள் ஏவலுக்குக் காத்திருக்கிறேன்;
கட்டளையிடுங்கள்” என்றே கூறிச்
சுருதி கூட்டிய யாழதனை நீட்டினள்.
அவனும் அவள் மனம் மகிழ வேண்டி,
காவிரி குறித்தும், கடற்கானல் குறித்தும்
வரிப்பாட்டுகளைப் பாடத் தொடங்கினன்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
படத்துக்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *