சு.கோதண்டராமன்

பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

 

வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

 

இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

  சு.கோதண்டராமன்

எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.

இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். (மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.)

 

1     வந்தது வந்தது பேரொளி இன்று,

வானகமெங்கும் பரவியே நின்று.

ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு

அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

 

2     வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்

இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.

இரவென ஒருத்தி பகலென ஒருத்தி

அமரத் தன்மை அடைந்த மகளிர்

ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு

ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று

விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

 

3     மூலப் பரம்பொருள் ஏவியபடியே

முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்

இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி

மாறி மாறியே பயணம் செய்வர்.

நிறம் தான் வேறு மனமோ ஒன்று

அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்

தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.

 

4     உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

 

5     சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை

பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்

இன்ன நலன்களை இனிதே நாடவும்

தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி

விழியிலார்க்கு விழிகள் அருளி

ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

 

6     கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்

புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்

இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்

கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்

வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று

ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

 

7     விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்

நல்லுடை உடுத்த நளின மங்கையே,

புவியின் செல்வம் ஆளும் ராணியே,

மங்கலச் செல்வி, இன்று எம்மீது

உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

 

8     கடந்து சென்ற கணக்கிலா விடியல்

அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்

இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்

யாவற் றிற்கும் நீ வழி காட்டி.

உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.

இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

 

9     உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்

தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.

சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.

தேவ பூசனை செய்யும் உந்துதல்

உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

 

10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?

இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?

கடந்து சென்ற நாட்களின் வழியில்

நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.

இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

 

11     எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

எண்ணிலா விடியல் கண்டு களித்து

எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட

இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

புதிய மக்கள் நாளை வருவர்

விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

 

12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை

நெடிய பகையினை நீளத் துரத்தினை

மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி

இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை

தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை

இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

13    தேவி உனது திருநிறை ஒளியை

பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.

இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்

மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்

இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

 

14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்

கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்

செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்

கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

 

15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்

உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை

வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்

கடந்து சென்ற விடியல் களிலே

கடைசியாய் வந்தது இன்றைய வைகறை

இனிவர விருக்கும் விடிவு களுக்கு

முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

 

16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,

விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்

பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்

இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்

 

17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து

உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்

போற்றும் புலவர்க் கருளுக உஷையே

குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

 

18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து

காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை

வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்

பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

 

19    தேவர் தாயே, அதிதியின் வடிவே

வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!

யாவரும் போற்றும் இனிய நங்காய்,

உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை

உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

 

20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு

உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்

மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்

விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

படத்திற்கு நன்றி

http://chakrabodyyoga.blogspot.in/2012/06/from-blah-to-brilliant-3-great-reasons.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வைகறைப் பொழுது

 1. இரவையும் பகலையும் இரு பெண்களாக்கி அதை சகோதரிகளாக்கி வந்த விதம் அருமை.

 2. “கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
  புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
  இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
  கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
  வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று”

  தத்துவக் கவிதை வரிகள்.. அருமையான வரிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *