Blog

  • இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

    இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உள்ளே ஓர் உலா.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    சென்னையில் பயங்கர இடி, மின்னல்

    முந்தாநாள் (2021 ஜூன் 7, திங்கட்கிழமை அன்று) இரவு 10.45 மணி முதல் 12 மணி வரை சென்னையில் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நீளமான இடியும் மின்னலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தன. உச்சியை உலுக்கி, கிடுகிடுக்க வைக்கும் அந்த அசாதாரண நிகழ்வின் ஒரு பகுதி இங்குள்ளது. படக்கருவியை வான்நோக்கிப் பிடித்து, தரையைப் பார்த்தபடி இந்தக் காட்சிகள் பலவற்றையும் படம்பிடித்தேன். இதோ, நீங்களும் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

    சி. ஜெயபாரதன், B. Eng [Hons], P. Eng [Nuclear]

    சமீபத்தில் (2020) வெளிவந்த அகில நாட்டு பூகோளச் சூடேற்றத்தில், அணுமின்சக்தியின் பங்கு [IAEA CLIMATE CHANGE & NUCLEAR POWER ROLE REPORT] என்னும் வெளியீட்டில் அணுமின்சக்தி நிலையங்கள் பற்பல கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை வெளிவர உதவிய உலக தொழில்நுணுக்க மேதைகள் 210 பேர், 60 நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அறிக்கைக்குக் குறிநோக்கு [IPCC & PARIS AGREEMENT TARGET 1.5 C] 1.5 C உஷ்ணம் எச்சரிக்கை வரம்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் குறிநோக்கு 2050ஆம் ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் குறைக்கப்படவேண்டும், மீள்புதிப்பு எரிசக்தி மின்சார நிலையங்கள் பெருக வேண்டும்,

    அத்துடன் பேரளவு அடித்தள மின்பளு ஏற்புக்கு [BASE LOAD NUCLEAR POWER PLANTS] அமைக்க வேண்டும் என்று அறிக்கை வலிவுறுத்துகிறது. மேலும் அந்த உஷ்ண வரம்பைத் தாண்டாமல் இருக்க. 400 மேற்பட்ட வழிமுறைகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சுமார் 50,000 MWe அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பெரு வெப்ப அணு மின்சக்தி நிலையங்கள், 200 MWe சிற்றளவு அணுமின் நிலையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேம்பாட்டு நீர்த் தணிப்பு அணுமின் நிலையங்கள் [ADVANCED WATER-COOLED REACTORS 9000 GWe CAPACITY (9000 1000 MWe)] கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    தற்போது 31 உலக நாடுகள் [இந்தியா உட்பட], 442 அணுமின் உற்பத்தி நிலையங்களை 392,000 MWe திறத்தில் இயக்கி வருகின்றன. புதிதாக 53 அணுமின் நிலையங்கள், 56,000 MWe திறத்தில் கட்டப்பட்டு வருகின்றன. 2050ஆம் ஆண்டுக்குள் 500, 000 MWe புதிய அணுமின் நிலையங்கள் கட்ட, குறைந்தது 50% நிதி ஒதுக்கு மேலாகத் தேவைப்படும். கடந்த பத்தாண்டு இயங்கிய அணுமின் நிலையங்கள் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் இரண்டு கெகா டன் கார்பன்டையாக்சைடு [2 gega ton CO2] அளவைக் குறைத்துள்ளன.

    With the adoption of the Paris Agreement in 2015, almost all Parties to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) agreed to prepare nationally determined contributions (NDCs) to control GHG emissions and limit the increase of global mean surface temperature by the end of the century to below 2°C relative to pre-industrial levels. Since then, increasing scientific understanding of the significant risks associated with warming of 2°C, along with increasing societal concern, have established the need for more urgent and ambitious action to avoid the worst impacts of climate change, by limiting warming to 1.5°C.

    To reach this goal, carbon dioxide (CO2) emissions from electricity generation must fall to nearly zero by the middle of this century, even as electricity needs worldwide continue to grow and expand in end-uses such as transportation, heating and industrial energy use.

    Climate Change and Nuclear Power 2018
    http://www-pub.iaea.org/MTCD/Publications/PDF/CCNAP-2018_web.pdf
    https://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020
    English CCANP-18123  36   2018
    Book : 123 pages

     Download PDF (3.61 MB) Get citation details

    DESCRIPTION

    The 40th edition of RDS-1 contains estimates of energy, electricity and nuclear power trends up to the year 2050. The publication is organized into world and regional subsections, with global and regional nuclear power projections presented as low and high cases, encompassing the uncertainties inherent in projecting trends.

    DESCRIPTION

    THIS PUBLICATION PROVIDES AN UPDATE ON THE CURRENT STATUS OF NUCLEAR POWER AND PROSPECTS FOR ITS CONTRIBUTION, TOGETHER WITH OTHER LOW CARBON ENERGY SOURCES, TO AMBITIOUS MITIGATION STRATEGIES THAT WILL HELP THE WORLD LIMIT GLOBAL WARMING TO 1.5°C IN LINE WITH THE 2015 PARIS AGREEMENT. SINCE 2000, THE IAEA HAS ISSUED SUCH INFORMATION AND ANALYSIS REGULARLY, IN ORDER TO SUPPORT THOSE MEMBER STATES THAT CHOOSE TO INCLUDE NUCLEAR POWER IN THEIR ENERGY SYSTEM AS WELL AS THOSE CONSIDERING OTHER STRATEGIES. THE FOCUS OF THE 2020 PUBLICATION IS ON THE SIGNIFICANT POTENTIAL OF NUCLEAR ENERGY, INTEGRATED IN A LOW CARBON ENERGY SYSTEM, TO CONTRIBUTE TO THE 1.5°C CLIMATE CHANGE MITIGATION TARGET, AND THE CHALLENGES OF REALIZING THIS POTENTIAL. ENERGY SYSTEM AND MARKET RELATED FACTORS AFFECTING THE TRANSITION TO A LOW CARBON ENERGY SYSTEM ARE REVIEWED. THIS EDITION ALSO OUTLINES DEVELOPMENTS NEEDED TO REALIZE THE LARGE SCALE CAPACITY INCREASE REQUIRED TO RAPIDLY DECARBONIZE THE GLOBAL ENERGY SYSTEM IN LINE WITH LIMITING GLOBAL WARMING TO 1.5°C.

    Reference

    ttps://www.iaea.org/publications/14725/climate-change-and-nuclear-power-2020

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம்’  என்ன நாணன்,
    ‘காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    வரலாறு

    முதல்வேட்டைஎனப்பட்ட கண்ணிவேட்டைக்குக்  கிளம்பினான்திண்ணன். அவ்வாறு வேட்டைபயின்று வளர்ந்து பதினாறாண்டு அகவை அடைந்தான். அந்த உடுப்பூர்வேடர்குலத்தார் கானகத்தில் வேட்டையாடிப் பன்றி, புலி, கரடி, காட்டுமான், கலைமான் ஆகியவற்றை வேட்டையாடி விருந்துண்டு வாழ்ந்தனர். அப்போது முதுமையால்தளர்ந்த வேடர்குலத்தலைவன் நாகன், ‘’என்முதுமையால் தளர்ந்தேன்! இனிஇந்தவேடர்குலத் தலைவன் என்னும் பொறுப்பைத் திண்ணனுக்கு அளிப்பேன்!  தேவராட்டியை அழைத்து , காடு கிழாளுக்கு பலியூட்டி. பூசைசெய்ய அழைக்க!’’ என்றான். வேட்டுவர்  குலத்தின் பூசைமகளாகிய மூத்த  வேட்டுவச்சி, ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு  வேண்டிய உணவைஅளித்துப் போற்றிய காடன்,’’ என்மகன்   திண்ணனை வேடர்குலத் தலைவனாவதற்கு உரிய வழிபாடுசெய்து உதவுக”  என்றான், முதியோளும்‘’ இவன்வேடர் குலத்தலைவன் ஆவதற்குரிய சகுனங்கள் சிறப்பாக இருக்கின்றன!’’ என்றாள்.

    நாகனும் தன்முன் வந்து வணங்கிய  மகனைத் தழுவி, முறைப்படி தலைவனுக்குரிய முதல் சுரிகை, உடை தோல்  ஆகியவற்றை வழங்கினான் திண்ணனும் தந்தையை வணங்கி மறுநாள் அதிகாலையில் வேட்டைக்குப் புறப்பட்டான்.  தலைவனுக்கு உரிய வகையில், தலை, தோள், மார்பு, கை, இடை, ஆகியவற்றில் வீரம் காட்டும் அணிகளை அணிந்து கொண்டு காலில்  வீரக்கழல்  மற்றும் செருப்பும்  அணிந்து வேடர் கூட்டமாகிய தோழர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்!

    எல்லாரும் எல்லாத்திக்கிலும்  பரவிச் சென்று பற்பல விலங்குகளை விரட்டி, திண்ணனார் வேட்டையாட உதவினர். அப்போது காட்டின் கொற்றவைக்கு பலியூட்டி முதியவள் வந்தாள். திண்ணனுக்குத் தலையில் சேடை என்னும் அட்சதை தூவி வாழ்த்தினாள். உடனே திண்ணன்  வேட்டைக்குப் புறப்பட்டதைச்  சேக்கிழார்,

    தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
    வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
    ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
    மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.

    என்றுபாடினார். மேலும்  அவர் எய்த அம்பில் அடிபட்ட விலங்குகளை,

    தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்;
    வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா;
    நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;
    மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.

    என்று,  வேட்டையின் சிறப்பினை ஓசைநயம்படப் பாடினார்! காட்டுக்குள் நெடுந்தூரம்   வேட்டையாடிக்   கொண்டே விரைந்த  திண்ணனுடன், தொடர்ந்து  சென்ற  நாணனும் காடனும் ஓரிடத்தில் பெரிய காட்டுப்பன்றி இரண்டு துண்டாகி வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர்! ‘’நாம் பல காததூரம்  வந்தோம்! இவர்  தனியாக முன்னேறி வந்து,  ஆடவர்களின் தலைவனாகி இதனைக்   கொன்றான், அச்சோ!’’  என்று போற்றினர், அதனச் சுட்டு உணவாக்கிக் கொள்ள முயன்ற போது. தண்ணீரில் வேக வைக்க வேண்டுமே! என்று திண்ணன் கூறிய போது  நாணன் தண்ணீர்  ஓடும்  பொன்முகலி யாற்றைக் காட்டினான்.  அங்கே இப்பன்றியைக் கொண்டுபோவோம் என்று கூறிச்சென்ற திண்ணன், அங்கிருந்த மலையைக்  கண்டான். இவ்வாறு மலைக்காட்சியைக்  காட்டியபோது அங்கே மலையும், சாரலும். கோயிலும் ஒன்றாகி, ‘’நிர்விகற்பக்காட்சி’’ யாகப் புலப்பட்டது ; பின்னர் நெருங்கிச் சென்று காணும் போது, தனித்தனியாகிச்  ‘’சவிகற்பககாட்சி’’ ஆயிற்று. நற்காட்சி என்ற சித்தாந்த நிலையை இங்கே சேக்கிழார்  குறிப்பிட்டார்! இதனை இப்பாடலில் காண்போம்.

    ‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
    சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
    கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.

    பொருள்

    “நாணணே! முன்னே தோன்றும் குன்றின்கண் சேர்வோம்” என்று திண்ணனார் சொல்ல, நாணன், “நீ அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்; சேணில் உயரும் இந்தத் திருக்காளத்தி மலையின்மேல் எழுந்து செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர் இருப்பார்; நாம் கும்பிடலாம்” என்று சொன்னான்.

    தோன்றும் குன்றில் – முதலிற் கண்ணுக்குப் புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக் கவர்ந்தது.

    நீகாணப்போதின்- காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகை யிடங்களுக்குப் போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு. ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக் குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும் வற்புறுத்திக் கூறுகின்றான் “குன்றின் நண்ணுவோம்; அதனைக் காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்” என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப் பாராட்டத்தக்கது.

    காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில் நாயனார் காண்பதற்கே அங்குப் போகின்றார். ஏனையோர் போலல்லாது,

    “ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டுகொண்டே
    நேர்பெற நோக்கி நின்றார்”  என்பது காண்க.

    நல்ல காட்சியே காணும் – காட்சி – காணப்படுவது. காணும் – காணப்படும்.  இவர்காணும் காட்சி இறைவனது அருள் திரு நோக்கம் பெற்று அவன் காட்டக்காணும் காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம் புறமாகிய கரணங்களால் எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ அதனையே காணுதல்.

    “கண்காள் காண்மின்களோ – கடல் –  நஞ்சுண்ட கண்டன்றனை,
    யெண்டோள் வீசிநின் றாடும்  பிரான்றனைக் (கண்காள்)”

    என்றது தமிழ்மறை.

    இந்த …. கும்பிடலாம் – நல்லகாட்சி இதுவாமென்று நாணன் கூறியது. சேண்உயர் – வானில் உயர்ந்துவிளங்கும். உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த் “தோன்றும் குன்று” என்றார். அவ்வாறு திண்ணனார் “தோன்றும் குன்று” என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று வாயினாற் பேர் கூறினான். “பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால் நீண்ட, குன்று” (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது அவன் சொல்லியபடியே “தோன்றும் குன்று” என்று பேர்குறியாது கூறியது காண்க.

    மலைமிசைஎழுந்து செவ்வே – மலையினின்றும் வேரூன்றி முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் – கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் – குற்றம். இது கோண் – கோணைஎனவும் வழங்கும்.

    “யான்செய்தேன் பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக்
    கோணை”

    (சிவஞானசித்தியார் – 10, சூத்திரம் – 2).

    குடுமித்தேவர் – குடுமி – உச்சி. மலையின் உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால் தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்

    சிகையாயுள்ள அதர்வசிகை “ஏனையவற்றை யெல்லாங் கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது” என்று முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன் இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும் போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.

    நாணன் மேலே  சொல்லியவை

    “குன்றினுக் கயலேயோடும் குளிர்ந்த பொன் முகலி”

    என்றது இவரை வழிப்படுத்திய முதல்உபதேச மொழி;

    இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச மொழிகளாம். மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும் கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது காண்க.

    இறைவனை அறிந்து கொள்ளுதலாகிய நற்காட்சி மூலம்  அவரை அடைய வேண்டும் என்பதும், அடையும் வழிமுறையும் , அடைதலும் ஆகிய  சித்தாந்த  நெறி   இப்பாடலில்  விளக்கப்பெறுகின்றது. இறைவனை  அடையும் வழியை   முன்பே அறிந்தவர் மூலம் தெரிந்து  கொள்ளுதல் என்ற வகையில்  நாணன்  திண்ணனுக்குக்  கூறிய உபதேச  மொழியாகக்   கொள்ள வேண்டும். சமய உலகில்  உபதேசம்  எங்கிருந்து வேண்டுமானாலும்  கிட்டும் என்பது சாத்திரம்!

    Share
  • இயற்கை வழியில் நான் கண்ட தீர்வுகள் – ‘ரூட்ஸ் ஆர்கானிக்ஸ்’ தீபிகா

    இயற்கை வழியில் நான் கண்ட தீர்வுகள் – ‘ரூட்ஸ் ஆர்கானிக்ஸ்’ தீபிகா

    எந்திரப் பொறியாளரான தீபிகாவுக்கு வெளியூரில் சென்று வேலை செய்யத் தொடங்கியதும் முடி உதிர்வுச் சிக்கல் ஏற்பட்டது. கோலம் போடும்போது கையில் தோல் உரிந்தது. சித்த மருத்துவரான தம் தந்தையின் உதவியுடன், தாயின் ஆலோசனைகளுடன் தனக்கான இயற்கைவழிப் பொருள்களை உருவாக்கத் தொடங்கினார். நல்ல பலன் கிடைத்தது. நெருங்கிய தோழிகளின் சிக்கல்களுக்கும் இதே போல் தீர்வு கண்டார்.

    எங்களுக்கும் கிடைக்குமா எனப் பலரும் கேட்டதால், ரூட்ஸ் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியே நலங்கு மாவு, சிகைக்காய் மாவு, முடி உதிர்வைத் தடுக்கும் தைலம், வழுக்கையைப் போக்கும் தைலம், நரைமுடியை மாற்றும் தைலம், கண் மை, உதட்டுப் பூச்சு, பாத்திரம் தேய்க்கும் தூள், பற்பொடி, கோலப் பொடி, ஹோலிப் பண்டிகைக்கான வண்ணப் பொடி… எனப் பலவற்றை இயற்கை முறையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

    தான் உற்பத்தி செய்வதை, தான் பயன்படுத்திப் பார்த்து, தானே பரிசோதித்துப் பார்த்து, அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்குகிறார். தனது வெற்றிப் பயணத்தை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32

    -மேகலா இராமமூர்த்தி

    சுக்கிரீவன் மனையாட்டியைக் கவர்ந்து வைத்திருக்கும் வாலியின் ஒழுக்கக் கேட்டைச் சுட்டிக்காட்டி, அவன் பிழைசெய்தவன் என்று இராமன் குற்றஞ்சாட்டியதைக் கேட்ட வாலி அதனை மறுத்து, ”ஐய! மனிதர்கள் பின்பற்றும் கற்பொழுக்கத்தைப் பின்பற்றி வாழும் வகையில் விலங்குகளாகிய எம்மை இறைவன் படைக்கவில்லை; மனம் விரும்பியபடி வாழும் வாழ்க்கையே எமக்குரியது; திருமண முறைகளோ அவற்றைக் கைக்கொள்ளும் பண்புகளோ எமக்கில்லை” என்றுரைத்துத் தான் சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்ததில் பிழையில்லை என்று வாதிட்டான்.

    இராமன் அதனை ஒப்பவில்லை. ”தேவர்களைப்போல் பிறந்து அறவழிகள் அனைத்தையும் தெளிவுற அறிந்துள்ள உன்னை எங்ஙனம் விலங்கென்று கருதமுடியும்? எனவே நீ கூறும் சமாதானம் பொருத்தமுடைத்தன்று!” என்று மறுத்துரைத்தவன்,

    மாடு பற்றி இடங்கர் வலித்திட
    கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
    பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்
    வீடு பெற்ற விலங்கும் விலங்குஅதோ.
    (கம்ப: வாலிவதைப் படலம் – 4155)

    முதலை தன்னை ஒருபக்கம் பற்றியிழுத்த வேளையில், பாஞ்சசன்னியம் எனும் சங்கினைத் தாங்கிய திருமாலைக் கூவியழைத்துத் தன் ஒப்பற்ற நல்லறிவின் பயனால் வீடுபேறுற்ற கசேந்திரனாகிய யானையை விலங்கு என்று நாம் எண்ணமுடியுமா? என்று கேட்டு, நல்லறிவு பெற்ற வாலியையும் விலங்கென்று எண்ணமுடியாது எனும் தன் கருத்தை வெளிப்படுத்திய இராமன், எக்குலத்தில் பிறந்தவராயினும் அவர்கட்கு உயர்வும் தாழ்வும் அவர்தம் செயல்களாலேயே வருவன; அத்தன்மையை அறிவிற் சிறந்த நீ அறிந்திருந்தும், பிறன் மனைவியின் மாட்சியை அழித்தாய்” என்று தன் குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினான்.

    ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்”
    (குறள்: 505) என்ற வள்ளுவர் வாய்மொழியும், மனிதனின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவன் செயல்களையே காரணங்காட்டுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    இராமனின் கருத்தைக் கேட்ட வாலி, ”சரி, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால், போர்க்களத்தில் என் முன்நின்று அம்பு எய்யாமல், கொடிய வேடர்கள் விலங்குகள்மீது மறைந்திருந்து அம்பு தொடுப்பதுபோல் என்மேல் தொடுக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

    அவ் உரை அமையக் கேட்ட
          அரி குலத்து அரசும் மாண்ட
    செவ்வியோய் அனையது ஆக செருக்
          களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன
          விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான்
          இலக்குவன் இயம்பலுற்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4162)

    ”வேட்டுவன் புதரில் மறைந்திருந்து வலைவீசிப் புள்ளைப் பிடிப்பதற்கு ஒப்பானது, தவ வேடத்தில் மறைந்துகொண்டு ஒருவன் அவச் செயல்கள் புரிவது” என்கின்ற குறளின் மூலமாக மறைந்திருந்து வேட்டுவர்கள் விலங்கை வேட்டையாடுதல் என்பது நெடுநாளைய வழக்கமே என்பது நமக்குப் புலனாகின்றது.

    தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
    (குறள்: 274)

    வாலியின் இந்த நியாயமான வினாவுக்கு இராமன் பதிலளிக்கவில்லை; அவன் இளவல் இலக்குவன் பதிலளிக்கிறான்.

    ”உன் தம்பியாகிய சுக்கிரீவன் முதலில் வந்து இராமனிடம் சரண் புகுந்தான்; அவனிடம், முறைதவறி நடந்த உன்னைத் தென்புலத்துள்ள எமனுலகுக்கு அனுப்புவேன் என்று ஏற்கனவே இராமன் உறுதிமொழி கூறிவிட்டான். அவ்வாறிருக்கப் போர்க்களத்தில் நீயும் உயிர்மீது அன்புடையவனாகி இராமனிடம் அடைக்கலம் வேண்டினால் அவனால் அளிக்கமுடியாதன்றோ? அதனால்தான் அவன் மறைந்திருந்து உன்மீது அம்பெய்தான்” என்றான் இலக்குவன்.

    முன்பு நின் தம்பி வந்து
          சரண் புக முறை இலோயைத்
    தென் புலத்து உய்ப்பென் என்று
          செப்பினன் செருவில் நீயும்
    அன்பினை உயிருக்கு ஆகி
          அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து
         நின்று எய்தது என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4163)

    இராமனின் செயலுக்கு இலக்குவன் கூறும் சமாதானம் ஏற்புடையதாக இல்லை. ஆனால் வான்மீகத்தில், ”விலங்குகளை மறைந்திருந்து கொல்லல் தவறன்று; ஆதலால் விலங்கொத்த நடைகொண்டவனாகிய நின்னை அவ்வாறு கொன்றேன்” என்று இராமன் அமைதி கூறுவான்.

    கம்பர், இராமன் அவ்வாறு கூறியதாகப் படைக்கவில்லை. அவ்வாறு படைத்தால், ”நன்னெறிகளை அறிந்த உன்னை விலங்கென்று கருத இயலாது” எனும் இராமனின் கருத்தை அவனே மறுத்ததாகும். ஆதலால், அதே கருத்தை, ”வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னை” என வாலியின் வாக்காகச் சுட்டியதோடு நிறுத்திக்கொண்டார். இதனைக் காண்கையில், இராமனின் செயலுக்கு இதனை ஓர் பொருத்தமான காரணமாய்ச் செப்பக் கவிச்சக்கரவர்த்தியின் மனம் ஒருப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

    ஆயிரம் சமாதானங்கள் சொல்லினும் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கியது அவன் பேராண்மைக்கு அழகு சேர்ப்பதாயில்லை; மாறாக அவன் பண்புக்கொரு களங்கமாகவே விளங்குகின்றது.

    ஆனால், இலக்குவனின் விளக்கத்தைத் தொடர்ந்து வாலி வாதிடவில்லை; தன் தவறுணர்ந்து மெய்யுணர்வு அடைந்தவனாய் இராமனிடம் தன் புன்செயல்களுக்கு மன்னிப்புக் கோருகின்றான். இத்தகு இரசவாத மாற்றத்துக்கு உட்பட்ட வாலியைச் ‘சிறியன சிந்தியாதான்” என்று மீண்டும் உயர்த்திக் கூறுகின்றார் கம்பர்.

    இராமனைப் போற்றிப் பலமொழிகள் பகரும் வாலி, ”என் தம்பி தனக்கு வெற்றரசை எடுத்துக்கொண்டு எனக்கு உயர்ந்த வீட்டரசை நல்கிவிட்டான்” என்று அவனையும் புகழ்கின்றான். அடுத்து, இராமனிடம் வாலி கேட்கின்ற வரம் அவனைப் பண்பின் சிகரமாகவே காட்டுகின்றது எனலாம்.

    ”சித்திரத்தில் எழுதியதுபோன்ற எழிலுரு உடையவனே! நாய்போல் சிறுமை உடையவனாகிய நான் உன்னிடம் வேண்டிப்பெறுவது ஒன்றுளது! மலர்களில் உண்டாகும் மதுவையருந்தி, அறிவுதிரிந்த நிலையில் செய்யத்தகாத தீவினைகள் எவற்றையேனும் என் தம்பி செய்வானாயினும் அவன்மீது சீனங்கொண்டு, என்மேல் ஏவிய அம்பெனும் கூற்றுவனை அவன்மீது ஏவிவிடாதே!” என்று வேண்டுகின்றான் வாலி. சிறியன சிந்தியாதவன் அவன் என்பதற்கும், தம்பியின் இயல்பை நன்கு அறிந்தவன் என்பதற்கும் இப்பாடல் தக்க சான்றாகின்றது.

    ஓவிய உருவ நாயேன் உளது
          ஒன்று பெறுவது உன்பால்
    பூ இயல் நறவம் மாந்திப்
          புந்தி வேறு உற்றபோழ்தில்
    தீவினை இயற்றுமேனும் எம்பிமேல்
          சீறி என்மேல்
    ஏவிய பகழி என்னும்
          கூற்றினை ஏவல் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4172)

    வாலி கணித்தபடியே பின்னர் நறவம் மாந்தி, இராமனுக்குக் கொடுத்த வாக்கைச் சுக்கிரீவன் மறந்துபோவதைக் காப்பியத்தில் நாம் காணமுடிகின்றது.

    மற்றொரு வரத்தையும் வாலி கேட்கின்றான். ”ஐய! என் தம்பியைக் காணும்போது உன் தம்பிமார்கள், ”இவன் தமையனைக் கொல்லச் செய்தவன்” என்று இகழக்கூடும்; அவ்வாறு அவர்கள் செய்யமுற்படுவரேல் அதனை நீ தடுத்துநிறுத்த வேண்டும். சுக்கிரீவனின் குறைகளை நீக்குவதாக நீ முன்னமே மொழிந்திருப்பதால் அவனுக்குச் செய்யவேண்டியவற்றைச் செய்ய வேண்டும்; அவ்வாறே அவனால் உனக்கு ஆகவேண்டிய வினைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று மொழிகின்றான்.

    இன்னம் ஒன்று இரப்பது
          உண்டால் எம்பியை உம்பிமார்கள்
    தன்முனைக் கொல்வித்தான் என்று
          இகழ்வரேல் தடுத்தி தக்கோய்
    முன்முனே மொழிந்தாய் அன்றே இவன்
          குறை முடிப்பது ஐயா
    பின் இவன் வினையின்
          செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4173)

    இவ்வரங்கள் வாலியின் நுண்மாண் நுழைபுலத்தையும், தம்பியின் நலனில் அவன் கொண்டிருந்த அக்கறையையும் புலப்படுத்துகின்றன.

    தொடர்ந்து பேசுகின்ற வாலி, ”கொற்றவனே! தீச்செயலை நினக்குப் புரிந்த இராவணனை வாலினால் பற்றிக்கொண்டு வந்து உன்வசம் நிறுத்தி இக்குரங்கின் வலிமை இன்னது என்று காட்டத் தவறிவிட்டேன்; சென்றதைப் பேசி இனிப் பயனில்லை.

    ஆழியை ஏந்திய தலைவனே! வானினும் உயர்ந்த தோளனே! இதோ இருக்கிறானே அனுமன்…இவனைச் சாதாரணமாய் எண்ணிவிடாதே! நின் கையில் இருக்கும் வில்லாகிய கோதண்டமே இவன் என்று நினைப்பாயாக; என் தம்பியை உன் தம்பியருள் ஒருவனாய் ஏற்றுக்கொள்! இவர்களைப் போன்ற ஒப்பற்ற துணைவர்கள் வேறிலர்; இவர்களின் துணைகொண்டு சீதையைத் தேடிக் கொள்வாயாக!” என்று இராமனின் பிரச்சினை தீரவும் வழிகூறுகின்றான்.

    அனுமன் என்பவனை ஆழி
          ஐய நின் செய்ய செங் கைத்
    தனு என நினைதி மற்று என்
          தம்பி நின் தம்பி ஆக
    நினைதி ஓர் துணைவர் இன்னோர்
          அனையவர் இலை நீ ஈண்டு அவ்
    வனிதையை நாடிக் கோடி
          வானினும் உயர்ந்த தோளாய்! (கம்ப: வாலிவதைப் படலம் – 4175)

    இராமன் கையிலிருக்கும் வில் நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதுபோல், இராமனின் நற்பணிகளுக்கு அனுமன் துணையாவான் என்பதையே ”அனுமனை நின் செங்கைத் தனு என நினைதி!” என்று குறிக்கின்றான் வாலி.

    அதன்பின்னர் தன் தம்பியாகிய சுக்கிரீவனை ஆரத்தழுவி, அவனை இராமனிடம் அடைக்கலப்படுத்தியவன், ”உன்னரும் புதல்வனாகிய அங்கதனை அழைத்துவா!” என்று சுக்கிரீவனைப் பணிக்கின்றான்.

    அங்கதன் வாலியின் மகனே ஆயினும் சிற்றப்பன் முறையினனான சுக்கிரீவனுக்கும் அவன் மகன் முறையே அல்லவா? அத்தோடு, வாலியின் மரணத்துக்குப்பின் தந்தையாயிருந்து அங்கதனைக் காக்கவேண்டியவனும் சுக்கிரீவனே எனும் குறிப்புப்பொருள் தோன்ற, ’உன்னரும் புதல்வன்’ என்று சுக்கிரீவனிடம் உரைக்கின்றான் வாலி.

    சுக்கிரீவன் சென்றழைத்துவர, செங்குருதிசோரச் சாய்ந்துகிடக்கும் தன் விறல்மிகு தந்தை வாலியைக் கண்டான் அவன் வீரமைந்தன் அங்கதன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • திருக்குறள் படிப்பது தண்டனையா?

    திருக்குறள் படிப்பது தண்டனையா?

    குற்றவாளிகள், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதைக் காவலர்களும் நீதிபதிகளும் ஒரு நல்ல நோக்கில் சொல்கிறார்கள்.

    ஆனால், ஒரு தண்டனையாகத் திருக்குறளைப் படிக்க வைப்பது, திருக்குறளின் மீது வெறுப்பினை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு.

    தொண்டு இல்லத்தில் சமூக சேவை செய்யச் சொல்வதற்கும் இது பொருந்தும்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

    முன்னுரை

    ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

    ‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

    “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

    மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

    இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

    தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

    “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

    என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

    ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

    சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

    மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

    “இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

    என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நிலவு கருப்பென்பாரும் உளர்

    பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

    “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

    என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

    முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

    சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

    மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

    “நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

    திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

    நிறைவுரை

    ‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(353)

    குறளின் கதிர்களாய்…(353)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(353)

    ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.

    – திருக்குறள் – 493 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்...

    வென்றிடத் தக்க இடத்தின்
    விபரமறிந்து,
    தம்மையும் காத்துக்கொண்டு
    பகைவரிடம்
    தம் செயலைச் செய்தால்,
    தகுந்த வலிமையற்றவரும்
    வலிமை உள்ளவராக
    வெல்வார் உறுதியாக…!

    குறும்பாவில்...

    இடத்தின் தன்மையை அறிந்து
    தம்மையும் காத்து எதிரியிடம் வினையாற்றினால்,
    வலிமையற்றவரும் வலுவுடன் வெல்வார்…!

    மரபுக் கவிதையில்...

    வென்றிடத் தக்கதாய் இடமதனின்
    விபர மதனை நன்கறிந்து,
    தன்னுயிர் தனையும் பாதுகாத்துத்
    தம்செய லதனைப் பகைவர்தம்
    முன்னே சென்று செய்திட்டால்,
    முறையாய் வலிமை யற்றவரும்
    வென்றிடும் ஆற்றல் பெற்றேதான்
    வெல்வார் எதிரியை உறுதியாயே…!

    லிமரைக்கூ...

    பகைவரை எதிர்த்திடச் செல்வார்
    இடமறிந்து தற்காத்து வினையைச் செய்தால்,
    இயலாதவரும் வலிமைபெற்று வெல்வார்…!

    கிராமிய பாணியில்..

    எடமறியணும் எடமறியணும்,
    எதுத்துப் போகுமுன்னால
    எதிராளி எடத்த நல்லா அறியணும்..

    சண்டைக்கேத்த வலிம இல்லாதவனும்
    எதிராளி எடத்த நல்லாத்
    தெரிஞ்சிக்கிட்டு
    தன்னயும் காப்பாத்திக்கிட்டு
    பகயாளி எடத்துக்குப் போனா
    பெலம்வந்து செயிப்பான் பாரு..

    அதால
    எடமறியணும் எடமறியணும்,
    எதுத்துப் போகுமுன்னால
    எதிராளி எடத்த நல்லா அறியணும்…!

    Share
  • இரண்டு ஆள்காட்டிப் பறவைகள்

    இரண்டு ஆள்காட்டிப் பறவைகள்

    இன்று மதியம் இரண்டு சிவப்புமூக்கு ஆள்காட்டிப் பறவைகளை (Red Wattled Lapwings) ஜோடியாகப் பார்த்தேன். அதுவும் காதல் உணர்வுடன் ஒன்றை மற்றொன்று பின்தொடர்ந்தது. ஆண்பறவை நெருங்கி நெருங்கி வர, பெண்பறவை தள்ளித் தள்ளிச் செல்ல, இந்தக் காதல் நாடகத்தைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்குயிலின் குரல்

    பெண்குயிலின் குரல்

    ஆண்குயில் கூவும்போது பல முறைகள் படம் பிடித்திருக்கிறேன். பெண்குயில் எப்போதும் எங்கோ மறைந்திருந்தே கூவும். பெண்குயில் கூவும்போது படம் பிடிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டாகக் காத்திருந்தேன். இன்றுதான் அது நிறைவேறியது. இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Seshadri Baskar

    When Ethiraj Kalyana mandapam was converted as a covid hospital i thought it would be only an allopathy hospital. But it’s not to be and it’s now an Ayurveda hospital with fifty beds. People generally show interest to go for allopathy and in this medical Unit started almost a week back it had got filled with sixteen patients against the capacity of fifty bedded centre.

    People who test positive can directly show the Mobile message and Aadhar card Xerox copy to get admitted. The medication and all the food is totally free for the patients .The facility has got clean bathroom facility and other day to day needed amenities.

    They will provide all the assistance and in case of information and if anybody wish to get admitted (I wish not honestly) can contact Mr. Sivasankar over there at 9444358891. 

    Please refer this service to the needy and in case of assistance I can be reached at 98410 33888 so that I can guide and assist my bit.

    The venue is Ethiraj Kalyana Mandapam on TTK Road Opposite the Hindustan Petroleum Pump near Rajkamals Film office.

    Share
  • Let the Predation issue stop allover in schools

    Let the Predation issue stop allover in schools

    Seshadri Baskar

    When the said victims expressed that they could not travel during the lockdown on any grounds, they are still being compelled to come in person. Many old students told they are ready for a video conference but the management is adamant on the personal Visits. In such case of a meeting I would like these following to be followed.

    1 Two women police officers of high rank to be present

    2 The whole process has to be videographed and the digital document should be with police

    3 All the victims should be allowed to cover their faces and then be enquired

    4 A Lawyer especially a women lawyer has to be present during the investigation

    5 All expenses for the said complainant should be borne by the said school including the travel

    6 No information of the investigation be let out to press and it’s the onus of the Police and Legal Personalities

    7 Mother of the said student should be allowed to accompany especially sister if Possible else mother is the only choice.

    Besides when the complaints had already been sent to the concerned departments there is no point in making an enquiry in the school level without representation from the Government.

    This should be applicable to all schools which are connected with the Predation issue.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 69

    பழகத் தெரிய வேணும் – 69

    நிர்மலா ராகவன்

    உடல்மொழியும் நம்பிக்கையும்

    மனிதன் தனி மரமல்ல. ஏதோ ஒரு விதத்தில் பிறருடன் தொடர்பு வைத்திருக்க நேர்கிறது.

    நாம் கூறுவது பிறருக்குப் போய்ச்சேர வேண்டுமானால், கேட்பவர்களுக்கு நம்மீது நம்பிக்கை எழச் செய்யவேண்டும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

    மிகக் குண்டாக இருந்த ஒரு மாது சிறப்புரை ஆற்ற ஒரு கல்லூரிக்கு வந்தாள்.

    அதை ஒட்டி, ஆங்கில தினசரியில் வந்த ஒரு கண்டனக் கடிதம்: “தங்கள் உடலையே தகுந்தபடி பார்த்துக்கொள்ளத் தெரியாதவர்கள் பிறருக்கு அறிவுரை கூற வருகிறார்கள்! முதலில் அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளக் கற்கட்டும்”.

    ஆசிரியப் பயிற்சியின்போது எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது: “அழகாக உடுத்து வருகின்ற ஆசிரியை மாணவ மாணவிகளின் கவனத்தை ஈர்க்கிறாள்”.

    சூழ்நிலைக்குப் பொருத்தமான ஆடை அணிவது தன்னம்பிக்கைக்கான முதல் படி. சுருங்கச் சொன்னால், கல்யாணத்திற்கு அணிவதை துக்கம் விசாரிக்கப் போகும்போதோ, கடைகண்ணிகளுக்கோ அணிவது மடமை.

    நான் பள்ளியில் பயிலும்போது, ஆசிரியை ஒருவர் பக்கவாட்டில் அசைந்தபடியே பாடம் கற்பிப்பார். சற்றுப் பருமனான இருந்த இன்னொருவர் கரும்பலகைமீது சாய்ந்துதான் பேசுவார். எங்களுக்குள் பேசி, கேலி செய்வோம்.

    குரல், தொனி

    “குரல் உரக்கவோ, அல்லது அதிகாரமாகவோ இருப்பதுதான் ஒரு தலைவருக்கு ஏற்றது”. பலரும் இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

    கீழ்ப்படியாதவர்களை வேண்டுமானால் இவ்வாறு அச்சுறுத்தலாம்.

    கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் வசதிகுறைந்த இல்லங்களிலிருந்து வருபவர்கள்.  பாடம் நடக்கும்போதே உரக்கப் பேசுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாங்கும் சம்பளத்திற்கு ஆசிரியைகள் உயிரைக் கொடுக்கவேண்டும்.

    முதல் வருடம், என்னால் மாணவர்களை அடக்க முடியவில்லை.

    “Your voice is not commanding, Teacher!” என்று விளக்கினான் ஒருவன்.

    நான் வேண்டுமென்றே குரலைக் குறைத்து, “உங்களுக்காக நான் சாகப்போவதில்லை. அக்கறை இருந்தால், கவனியுங்கள்!” என்றேன்.

    `நான் உங்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறேன்!’ என்பதுபோல் மாணவர்களை மிரட்டி, அதிகாரமாக நடத்தும் ஆசிரியர்கள் அவர்களிடம் தோழமையை எதிர்பார்க்க முடியாது.

    ஆசிரியையுடன் தோழமையா! நடக்கிற காரியமா?

    தம் வகுப்பிலிருந்த மாணவர்கள் பிற ஆசிரியைகளுக்கு வைத்திருந்த கேலிப்பெயர்களைக்கூட என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள் மாணவிகள். இது நம்பிக்கையுடன் நட்பையும் குறிக்கிறது.

    உருவத்துடன், நடை, உடை இதெல்லாம் சரியாக இருந்தால் போதுமா?

    முகபாவம், கையசைவு, கண்ணால் தொடர்பு கொள்வது ஆகியவையும் உடல் மொழிதான்.

    ஒரு பேச்சுப்போட்டியில், மனப்பாடம் செய்துவைத்திருந்தது மறந்துவிடுமோ என்ற பதைப்புடன், தூரத்தில் ஒரே இடத்தில் பார்வையைப் பதித்து, சொல்லி முடித்தேன்.

    நீதிபதி கூறிய அறிவுரை: “பிறருடன் பேசும்போது, அவரைப் பார்த்துத்தான் பேசுகிறோம். ஒரே நிலையில் பார்வை எங்கோ பதிந்திருந்தால், நீங்கள் கூறுவது நம்பும்படியாக இருக்காது”.

    தன்னம்பிக்கை உடையவர்களின் அடையாளம்

    தம் திறமை என்னவென்று புரிந்து, பழைய சாதனைகளை அலசுவது, ஏதாவதொரு இலக்கு மற்றும் அமைதியோடு பயனும் அளிக்கும் பொழுதுபோக்கு என்று நாட்களைக் கழிப்பார்கள்.

    “தன்னைத்தானே அறிகிறவனே எதிலும் வெற்றி பெறுவான்” (தத்துவஞானி SUN TZU).

    மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும், நான் இருக்கிறபடியேதான் இருக்கமுடியும். எதற்கு மாற வேண்டும்?

    இவ்வாறு நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொண்டால், தன்னம்பிக்கை தானே வரும்.

    இது கர்வமில்லை. பிறர் புகழும்போது ஏற்படுவதுதான் கர்வம்.

    ஏன் பயம்?

    ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்குமுன், `பிறர் என்ன சொல்வார்கள்?’ `தோற்றுவிடுவோமோ?’ என்று பல எதிர்மறை எண்ணங்கள் எழுவதால்தான் அச்சம் எழுகிறது.

    பிறர் நினைப்பதைப் பற்றி என்ன யோசனை? அவர்களும் மற்றவர்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்!

    `பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்?” என்று நமக்கு எழும் குழப்பத்தை ஆக்ககரமாக மாற்றிக்கொள்ளலாமே!

    நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்ல பயிற்சி.

    எனக்குள் ஒவ்வொரு உணர்வு எழும்போதும், `ஏன் இப்படி?’ என்று அலசுவேன், எட்டு வயதிலிருந்தே.

    `ஏன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்?’

    `எப்போதும் திட்டும் ஆசிரியை இன்று புகழ்ந்தார்’.

    இவ்வாறு யோசிக்க யோசிக்க, என் உணர்ச்சிகள் பிறரைச் சார்ந்திருக்கிறதென்று புரிந்தது.

    நாளடைவில், `நான் என்ன, அவர்கள் கைப்பாவையா, அவர்களுக்கேற்ப ஆட?’ என்ற எரிச்சலெழ, மாறிப்போனேன். பிறரது கூற்று என்னை அதிகமாகப் பாதிக்கவிடாது பார்த்துக்கொண்டேன்.

    அதன்பின், வெற்றியோ, தோல்வியோ, எது கிடைத்தாலும், வேடிக்கையாகத்தான் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ எழுவதில்லை.

    ஒருவர் தன்னம்பிக்கையோடு நடந்தால், பிறரும் வெற்றி பெறத் தூண்டுகோலாக அமைகிறார்.

    கதை

    எங்கள் வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று மற்றொரு பள்ளி ஆசிரியைகளுடன் இழு-பறி (TUG OF WAR) போட்டி.

    “போட்டியில் பங்கு கொள்வது வெற்றி பெறத்தான். அதற்கேற்ப உடை அணிந்து வாருங்கள்,” என்று எங்கள் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வலியுறுத்தினேன்.

    வேடிக்கையாகச் சொல்கிறேன் என்றெண்ணி முதலில் சிரித்தாலும், எல்லாரும் சம்பவத்தன்று விளையாட்டு வீராங்கனைகளாக வந்தார்கள்.

    அடுத்த பள்ளி தலைமை ஆசிரியை கவலைதோய்ந்த முகத்துடன், எங்கள் உடைகளையும், காலணிகளையும் பார்த்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். அப்போதே எங்களது தைரியம் கூடியது.

    தங்கள் பள்ளி வெற்றி பெற்றதில் எங்கள் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை.

    பரிசாக, ஆளுக்கொரு ஒரு சிறு குடை கிடைத்தது.

    “நன்றாக இழுத்தீர்கள், டீச்சர்!” என்று என்னைத் தனியாகப் பாராட்டினான் ஒரு மாணவன்.

    அதன்பின், இடுப்பு வலியால் துடிதுடித்து, மருத்துவ விடுப்பு எடுத்தது வேறு கதை!

    கலாசார வேறுபாடு

    `நிமிர்ந்து நில். நேராகப் பிறர் கண்களைப் பார்த்துப் பேசு! அப்போதுதான் நீ சொல்வதில் நம்பகத்தன்மை இருக்கும்’.

    எல்லா கலாசாரத்திற்கும் இந்த அறிவுரை பொருந்தாது.

    மாணவன் ஒருவன் மலாய் ஆசிரியரின் கண்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தால், அது மரியாதைக்குறைவு எனக் கருதப்படுகிறது.

    அவர் கூறுவது விளங்காமல் தமிழ் மாணவன் விழிப்பான். அவரோ, `என்ன முறைக்கிறே?’ என்று தண்டிப்பார்.

    சில நாடுகளில், ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் கை குலுக்குவார்கள். முன்பு இந்த கலாசாரம் நம்மிடையே இருக்கவில்லை.

    இந்திய இளைஞன் ஒருவன் என்னிடம் கூறினான்: “சற்று வயது முதிர்ந்த பெண்களின் கையைக் குலுக்கலாமா, இல்லை, தவறாக எண்ணிவிடுவார்களோ என்று தயக்கமாக இருக்கிறது!”

    நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, என்னிடமிருந்து விடை பெறும்போது, “அணைத்து, முத்தம் கொடுக்கலாமா, இல்லை கைகுலுக்குவதா என்று எனக்குத் தெரிவதில்லை,” என்று என் மகளின் நண்பன் குழம்ப, “கை குலுக்கு. போதும்,” என்று அலறினேன்.

    மேற்பயிற்சியின்போது

    `எங்கள் மதம்தான் மிக உயர்வானது!’ என்று பெருமையுடன் கூறினாள் விரிவுரையாளர், ரோஸ்னா. தொடர்ந்து, “நிர்மலா! கவலைப்படாதீர்கள்,” என்றும் குரலெழுப்பினாள், கேலியாக.

    அப்போதுதான் புரிந்தது, என் கையை மோவாய்க்குக் கீழே பதித்திருந்தேன் என்று.

    மற்றவர் சொல்வதை ஏற்கவில்லை என்றால், நம்மையுமறியாது அப்படிச் செய்துவிடுகிறோம்.

    நிமிர்ந்த நடைகொண்ட பெண்களையே தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்கிறோம்.

    ஆனால், தலையை அதிகமாக நிமிர்த்தினால், `உன்னை மீறுகிறேன். நீ சொல்வதைக் கேட்கமாட்டேன்,’ என்கிற எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்த உடல் மொழி இருபாலருக்கும் பொதுவானது.

    பெண்களின் உடல் மொழி

    எல்லாருடனும் இணக்கமாக நடக்கவேண்டும் என்று சிறுவயது முதலே பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. தொட்டுத் தொட்டுப் பேசுவார்கள்.

    நிறையச் சிரிப்பார்கள், இல்லையேல் முறுவலிப்பார்கள். முகபாவம் அதிகம் காட்டுவார்கள்.

    பெண்களின் குரல் உயரும், கோபத்தை வெளிப்படுத்த. (`இதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறோம்!’ என்கிறீர்களா?)

    பெண்களின் மூளையில் 14-லிலிருந்து 16 பாகங்கள்வரை மற்றவர்களின் நடத்தையை அலசுகின்றனவாம். அதனால், பிறரது நடத்தை அவர்களுக்கு எளிதாகப் புரியும்.

    ஆண்களோ!

    இயற்கையில், ஆண்களுக்குப் புன்சிரிப்பு, முகபாவம் இரண்டுமே குறைவு.

    மூன்று முறை தலையை மேலும் கீழும் அசைத்தால், `கவனித்துக் கேட்கிறேன். மேலே பேசு,’ என்று அர்த்தம்.

    ஓர் ஆணின் பார்வை எதிரிலிருக்கும் பெண்ணின் கண்ணிலிருந்து வாய்வரை மட்டுமே இருந்தால், அவள் அவனை நம்பலாம்.

    ஆண்குரல் அவ்வளவாக மாறுவதில்லை – அதிகாரம் தன் கையில்தானே என்ற மதர்ப்புடன். அடிக்கடி உயர்ந்தால், சுயக்கட்டுப்பாடு குறைவு.

    பிறரது நடத்தையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஆண்களின் மூளையில் நான்கிலிருந்து ஆறு பகுதிவரைதான் வேலை செய்கின்றன.

    இதனால்தான், `இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை!’ என்று அயர்கிறார்களோ?

    புரிந்துவிட்டால், அப்புறம் என்ன கவர்ச்சி!

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    வில், வாள், ஆயுதம் பயிலல் (புதிய பருவங்கள்- இருபால் பிள்ளைத்தமிழ்)

    1.பெண்பால்

    புதியதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடிய பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான ஒரு பருவத்தைப் பார்க்கலாம்.   அரசுகட்டில் ஏறும் ஆண்மகனுக்கு உரியது ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் பருவம். இதனை நாம் முன்பே கண்டோம். வில், வாள் ஆகிய ஆயுதப் பயிற்சி, குதிரை, யானையேற்றம் ஆகியனவும் ஆண்மகனுக்கே, சிறுவயதிலிருந்தே (ஏழெட்டு ஆண்டுகளிலிருந்தே) பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கு உரியதாக இதனை முதலில் காணலாமா?

    தடாதகை போலும் இளம் சிறுமிகளுக்கும் போர்க்கலைகளான இவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவள் பாண்டிய அரசியல்லவா? பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில், மதுரைக் காண்டத்தில், தடாதகை வளரும் பருவத்தில் போர்க்கலைகள் பயில்வது பற்றி ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அன்னை கயிலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போர்புரியும்போது அவளது போர்த்திறத்தை நன்கு விவரிக்கிறார் புலவர்பெருமான்.

    மூன்று பாடல்கள் அம்மையின் போர்த்திறத்தை அழகுறப்பாடுகின்றன.

    சிவகணங்களின் தலைவர் நந்தியெம்பெருமான். அவருடைய படைவீரர்கள் தத்தம் கைகளில் ஏந்தியிருந்த படைகளைத் தடாதகைப் பிராட்டியார் தமது கொடிய கணைகளினின்றும் பாம்புபோன்ற அம்புமழையினைச் சொரிந்து பொடிப்பொடியாக்கினார். (‘கட்புற்றரவில் கணைமாரிகள் தூற்றி நின்றாள்’).

                        கொட்புற் றமரா டுமிக்கொள்கையர் தம்மி னந்தி
                       நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞானமூர்த்தி
                       பெட்புற் றருள வருமெங்கள்பி ராட்டி வெய்ய
                       கட்புற் றரவிற் கணைமாரிக டூற்றி நின்றாள்1.

    கையிலுள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதும் அச்சிவகணங்கள் கற்களை எடுத்து தடாதகையின் உடலில் படும்வண்ணம் வீசினர். அவை தன்மீது படும்முன்பே ‘பொய்ம்மை மனத்தினர் செய்யும் தவம் அழிவது போல’ தனது நெய்பூசிய வச்சிரப்படைகொண்டு  அம்மை அவற்றை அழித்தனள்.

                        கையிற் படையற் றனர்கற்படை தொட்டு வீரர்
                       மெய்யிற் படுகென் றுவிடுக்குமுன் வீரக் கன்னி
                       பொய்யிற் படுநெஞ் சுடையார் தவம்போல மாய
                       நெய்யிற் படுவச் சிரவேலைநி மிர்ந்து வீசி2.

    பின் அவ்வீரர்களின் படைகளைத் துண்டம்துண்டமாகத் துணித்தாள் அன்னை. தனது தண்டப்படையால் அவைகளைத் தாக்கினாள். அவர்கள் புறம்காட்டி ஓடினர். ‘அண்டங்களையும் சராசரங்களையும் தானே படைத்துக் காக்கும் பராசக்தியின் வலிமையைக் கூறவும் நம்மால் இயலுமோ?’ என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

                        துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
                       தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
                       அண்டங் கள்சரா சரம்யாவையுந் தானே யாக்கிக்
                       கொண்டெங் குநின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ3.

                                       *****

    இனி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் காணப்படும் அம்மையின் போர்த்திறன் பற்றிய செய்திகளைக் காணலாமா?

    குழந்தையை உறங்கவைக்கப் பாடும் பாடலில் தாய்மாரும் செவிலியரும் அம்பிகையின் சேனை செய்த போரை ஒரு தாலப்பருவப்பாடலில்  விவரிக்கின்றனர். அவர்களுக்குப் பெரும் உற்சாகம். தடாதகை நந்திதேவனின் அப்படைகளை ஓட ஓட விரட்டினாள் எனப்பாடி மகிழ்கின்றனர்.

    தடாதகை திக்விஜயம் சென்றபோது அவள் வயது பதினைந்தோ பதினாறோ தான். இளங்குமரியான அரசகுமாரி சிவகணங்களை எதிர்த்தகாலை, நந்திதேவர் அலட்சியமாக அவளை நோக்கி, “மயிர்ச்சாந்து அணிந்த கருமையான கூந்தலையுடைய சிறிய பெண்ணான நீதானோ எம் தலைவனாகிய சிவபிரான் வாழும் கயிலைமலையை முற்றுகை இடுபவள்?” எனச் சீறுகிறார். அவர்கள் அனைவரையும் தனது போர்த்திறத்தால் தோற்றோடச் செய்த வீரம் படைத்தவள் தடாதகை என்கிறார் புலவனார்.

                            ‘தகரக் கரிய குழற்சிறுபெண்பிளை
                                நீயோ தூயோன்வாழ்
                      சயிலத் தெயிலை வளைப்பவளென்றெதிர்
                                         சீறா வீறோதா
                       நிகரிட் டமர்செய் கணத்தவர்நந்திபி
                                      ரானோ டேயோடா4…’

    போரைத் தொடர்பவள் கயிலைமலைத் தலைவனைப் போருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பு வந்ததும் உடனே உள்ளப்புணர்ச்சி காரணமாக இவரே தன் மணாளன் எனத் தெளிகிறாள். நாணேற்ற உயர்த்திய வில்லைத் தழைத்துப் பிடித்தபடி, அதன் நாணினை விரல்களால் தழுவியபடி உயிர்ச்சித்திரம்போல் உண்மையாகவே வந்த நாணத்துடன் நிற்கிறாள்.

                            மெய்வந்த நாணினொடு நுதல்வந்தெழுங்குறு
                                          வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
                        விம்மிதமு மாய்நின்றஉயிரோவம் எனவூன்று
                                          விற்கடை விரற்கடைதழீஇத்
                       தைவந்த நாணினொடு தவழ்தந்தசெங்கைகொடு
                                          சப்பாணி கொட்டியருளே5

    இங்கு போருக்கெடுத்த வில் பயனின்றிக் கையில் தவழ்கின்றது!! அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும் ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

                            கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு
                                         கைவிற்குனித்துநின்ற
                       போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்
                                பொன்னூசல்ஆடியருளே6!

    ஆக, யாம் கண்ட வரையிலும் அருமையான பல பாடல்களிலும் அன்னையின் போர்த்திறமையைப் பெரிதாகப் பேசுபவர்  குமரகுருபரனார் ஒருவரே!

    மேலும் மங்கையர்க்கரசியார் எனும் அரசமகளுக்கும் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. (கோவை கவியரசு கு. நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது). இவர் சோழர்குல இளவரசியாகப் பிறந்து பின் திருமண உறவால் கூன்பாண்டின் எனப்பட்ட நின்றசீர் நெடுமாறப் பாண்டியற்கு மனைவியானார். இவர்மீதான பிள்ளைத்தமிழிலும் இவர் சைவத்திற்கு சம்பந்தப் பெருமானுடன் சேர்ந்து செய்த தொண்டுதான் பலவாறு சுட்டப்படுகின்றதேயன்றி, இவரது போராற்றலும் திறமையும் கூறப்படவில்லை. சோழ இளவரசியாக இருந்தபோது ‘மானி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.

                            ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
                                வரிவளைக் கைம்மட மானி
                       பங்கயச் செல்வி பாண்டிமாதேவி7,’ என்பது சம்பந்தப்பெருமான் வாக்கு (தேவாரம்).

    தற்சமயம் சக்தி விகடனில் ‘சிவமகுடம்’ எனும் பெயரில் ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதில் இவருடைய போர்த்திறமை நன்கு நயமாக மிகவும் உயர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் எவ்விலக்கியத்திலும் (பெரியபுராணத்திலும் கூட) இவருடைய போர்த்திறமை கூறப்படவில்லை; பாடப்படவில்லை! இது வியப்பிற்குரிய செய்தியாகும்.

                                                               *****

    இனி, எமது கற்பனையில் உதித்த, எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுமியான தடாதகை எனும் மீனாட்சியம்மை போர்க்கலை பயிலும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.

                                                               *****

    போர்க்கலை ஆசான் வாளைச் சுழற்றி வீசப் பயிற்றுவிக்கிறார். வெகு அலட்சியமாக தனது வாளைச் சுழற்றி, அவருடைய வாள் வீச்சைத் தடுக்கிறாள் தடைசெய்யவியலாத ஆற்றல் படைத்த மங்கை தடாதகை எனும் மீனாட்சி! அடுத்து அவர் வேல்வீசக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ அதனை நொடியில் பயின்று, தன் கண்களெனும் வேலை வீசவும் பழகியிருந்தனள். குமரிப் பெண்ணல்லவா?அவள் தனது தாள்களே கதி எனப்பணியும் தவத்தோர்க்கு அவருடைய இருவினைகளையும் தீர்த்து வைப்பவள். எமக்கும் அவ்வினைகளைத் தீர்த்து தனது பால்போலும் பளிங்குமுகத்தில் புன்னகை காட்டி அருளுகிறாள் அந்த மீனாட்சி!

                            வாள்வீச்சி னையாசான் வகுத்துணர்த் துவிக்கவவ்
                                வாள்வீச்சி னைத்தனதுவா ளாற்றடுத்தாள்
                       வேல்வீச்சி னையடுத்து வேண்டிப்ப யிற்றுவிக்க
                                வேல்வீச்சி னைத்தன்விழி களாற்பயின்றாள்
                       தாள்நோக்கி யன்பர்க தித்துத்துதித் திடத்தன்
                                தாளவர் தலைபதித் துவினையெ லாங்களைந்தெம்
                       பால்நோக்கி பவரோகம் பழவினையு மழிந்திடப்
                                பால்போன்ற நகைமுகம் காட்டியருளினாள்8. (1) 

                                                               *****

    திக்விஜயத்திற்குத் தயாராகும் அரசி மீனாட்சியை அடுத்துக் காண்கிறோம். கூந்தலை இறுகக் கொண்டையிட்டு நறுநெய்பூசி வாரிமுடிந்து கட்டியுள்ளாள். போர்க்கவசம் கச்சணிந்த மும்முலைகளையும் அணைத்துக் காக்கிறது. மருதோன்றியணிந்த கரங்கள் வாளின் தந்தப்பிடியை இறுகப் பற்றியுள்ளன. சிலம்பும் சதங்கையும் கொஞ்சும் பஞ்சுப்பாதங்கள் இப்போது தண்டை எனும் வீரக்கழல்களை அணிந்துள்ளன. இடையிலணிந்துள்ள மேகலை, உடைவாளின் உறையுடன் உரசி ஒருவிதமான தாளலயத்தை உண்டாக்கி அவளுடைய நடைக்குக் கட்டியம் கூறுகிறது! பிடியைப்போல் மென்னடை பயில வேண்டிய இளநங்கை இப்போது ‘தம்,தம்,’ எனக் கூடமே அதிர தன் அன்னையைக்கண்டு ஆசிபெற வந்துகொண்டிருக்கிறாள்! பாண்டிய வம்சத்திற்குரிய வேப்பமாலை, மருக்கொழுந்து, முல்லை மலர்களுடன் கூடிய ஒரு ஆரமெனத் திருமார்பில் புரளுகிறது! கயல்விழிகள் அன்பு, வீரம், அருள், கொடை, இளமைக்கே உரிய அச்சமின்மை, சிறிது ஆணவம் (சிவனையும் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் கயிலை செல்லுபவளல்லவா இம்மங்கை?) ஆகிய உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலிக்கின்றன. பாண்டியரின் கயற்கொடி ஒளிவீசிப்பறக்க அவள் திக்குவிசயத்திற்குப் புறப்பட்டு விட்டாள்!

                            வஞ்சிய வள்நங்கை பாண்டியன் குலமங்கை
                                வில்லேந்தி வீரநடை பயின்றனளே!
                           வானவருந் தானவரும் வடவரு மேங்கிநிற்க
                                வேப்பமாலை தவழவெஞ் சமருக்கே!
                       அஞ்சன மெழுதிய அங்கயற் கண்ணழகி
                                அங்கையில் வாளேந்தி ஆரவாரமாக
                           அன்னை காஞ்சனையி னாசிகளைப் பெற்று
                                அன்புமற முங்குணமு மொருங்கமைய
                       குஞ்சரப் படையுங் குதிரைகற் றம்படையுங்
                                கொண்டுவிண் ணுமண்ணும திரக்கோமகள்
                           கொடியிடை யாளன்னை வாழ்த்தக் கொடுஞ்சமருக்
                                குப்படைதி ரட்டிப்புறப் பட்டனளே!
                       கொஞ்சுமொ ழிப்பாவை கூடலுறை பொற்பூவை
                                கையிலொரு வாளுங்கூர் வேலுமேந்தி
                           கன்னிநாட் டின்கயற் கொடியை யுயர்த்தி
                                திக்குவிசய மெனப்புறப் பட்டனளே9!  (2)

    இவ்வாறு திக்குவிசயத்திற்குப் புறப்பட்ட தடாதகை, எல்லா அரசர்களையும் தனக்குத் திறை செலுத்த வைத்தோ, அல்லது போரில் வென்று சிறைப்பிடித்தோ வைத்தபடி சென்று பின் கயிலைமலையை அடைகிறாள். வியர்க்க, விறுவிறுக்கச் சிவகணங்களுடன் போர் செய்தவள், வில்லிலிருந்து கணைகளைத் தொடுத்தும், ஆயுதங்களால் அடித்தும் நந்திதேவரையே கலங்க வைக்கிறாள்.

    தவஞ்செய்யும் முனிவர்கள் வாழும் கயிலைமலை மீதேறி, ஆண்டவனாம் சிவபெருமானை சமருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பாக வந்து தோன்றியதும், தனது பழைய நினைவுகள் திரும்ப வந்ததும், அவரே தன் மணாளனென உணர்ந்து மலைத்து வியர்க்கிறாள்.

    அண்ணல்மீது காதற்கணைகளைக் கண்களால் தொடுக்கிறாள். தண்ணிலவின் கிரணங்கள் வெந்தணலாய்ப் பொழிய (காதல் வயப்பட்டோருக்கு, நிலவும் சுடும்!), போர்க்கோலமொழிந்து காதலில் தன்னையிழந்து நிற்கிறாள் தடாதகை!

                        மூண்டதொரு சமரிலவள் முகமெல்லாம் வியர்த்தாள்
                       மூண்டெழுஞ் சினத்தில்சிவ கணங்களையு மொறுத்தாள்
                       மூண்டெழும் வேகத்தில்விற் கணைகளைத் தொடுத்தாள்
                       மூண்டெழுந் திறத்தில்நந் திதேவனை யுமடித்தாள்.

                       யாண்டவர் தவஞ்செய் யுங்கயிலை மலைமீதேறி
                       யாண்டவன் றன்னையும் வெஞ்சமருக் கழைத்தா
                       ளாண்டவ னாங்கந்த அணங்கவள் முன்தோன்றவவ்
                       வாண்டகை தனைக்கண் டயர்வியர் வெய்தினாள்.

                        அண்ணலின்மீ தெண்ணிலாக் கட்கணைகள் தொடுத்தாள்
                       தண்ணிலவும் வெந்தணலாய் தண்கலை கள்பொழிய
                       பெண்ணவள் தன்போர்க்கோ லமழிந்திட் டுநின்றாள்
                       விண்ணவரு மண்ணவரு மலர்மாரி பொழிந்தார்10. (3)

    இப்பாடல்கள் அன்னையின் இப்பருவத்தைப் போற்றச் செய்த எனது சிறுமுயற்சி. அவள் திருவடிகளுக்கே அர்ப்பணம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 2, 3 – பரஞ்சோதி முனிவர்- திருவிளையாடற் புராணம்.

    4, 5, 6 – குமரகுருபரர்- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    7. திருஞானசம்பந்தர்- தேவாரம்

    8, 9, 10 – பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்.

    Share