குறளின் கதிர்களாய்…(353)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(353)
ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
– திருக்குறள் – 493 (இடனறிதல்)
புதுக் கவிதையில்...
வென்றிடத் தக்க இடத்தின்
விபரமறிந்து,
தம்மையும் காத்துக்கொண்டு
பகைவரிடம்
தம் செயலைச் செய்தால்,
தகுந்த வலிமையற்றவரும்
வலிமை உள்ளவராக
வெல்வார் உறுதியாக…!
குறும்பாவில்...
இடத்தின் தன்மையை அறிந்து
தம்மையும் காத்து எதிரியிடம் வினையாற்றினால்,
வலிமையற்றவரும் வலுவுடன் வெல்வார்…!
மரபுக் கவிதையில்...
வென்றிடத் தக்கதாய் இடமதனின்
விபர மதனை நன்கறிந்து,
தன்னுயிர் தனையும் பாதுகாத்துத்
தம்செய லதனைப் பகைவர்தம்
முன்னே சென்று செய்திட்டால்,
முறையாய் வலிமை யற்றவரும்
வென்றிடும் ஆற்றல் பெற்றேதான்
வெல்வார் எதிரியை உறுதியாயே…!
லிமரைக்கூ...
பகைவரை எதிர்த்திடச் செல்வார்
இடமறிந்து தற்காத்து வினையைச் செய்தால்,
இயலாதவரும் வலிமைபெற்று வெல்வார்…!
கிராமிய பாணியில்..
எடமறியணும் எடமறியணும்,
எதுத்துப் போகுமுன்னால
எதிராளி எடத்த நல்லா அறியணும்..
சண்டைக்கேத்த வலிம இல்லாதவனும்
எதிராளி எடத்த நல்லாத்
தெரிஞ்சிக்கிட்டு
தன்னயும் காப்பாத்திக்கிட்டு
பகயாளி எடத்துக்குப் போனா
பெலம்வந்து செயிப்பான் பாரு..
அதால
எடமறியணும் எடமறியணும்,
எதுத்துப் போகுமுன்னால
எதிராளி எடத்த நல்லா அறியணும்…!