தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 18

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இலக்கண உரைகளில் உவமங்கள்- 4

முன்னுரை

ஒரு நூல் எழுதி உலகப்புகழ் பெறுவது தமிழ்ப்புலவர் பெருமக்களுக்கு வெகு இயல்பு. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய படைப்பிலக்கியங்களைப் போலவே உரையிலக்கியத்திலும்; இந்தப் போக்கு காணப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு மட்டும் உரையெழுதிப் பெருமையுற்றவர் இளம்பூரணர் என்றால் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதித் தனது பெயரை நிலைநிறுத்தியவர் சேனாவரையர். மக்கள் சமுதாயமே மொழியியலின் தாயகம் என்பதை உணர்ந்த தொல்காப்பிய நெறியில் தோய்ந்த அன்னார் தமது உரைகளில் வழக்குப் பற்றிய பலவற்றை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். உலக வழக்கில் உள்ளனவற்றை உவமமாக்குதல், ஓர் உவமைக்குப் பல விளக்கங்கள் தருதல், ஓர் இலக்கண விளக்கத்திற்குப் பல இலக்கியங்களிலிருந்து உவமம் காட்டுதல், இலக்கணத்திற்கு மற்றொரு இலக்கணத்தையே உவமமாகக் கொள்ளுதல், பிறதுறை பயிற்சியினால் உவமங்களைக் கையாளுதல் எனப் பன்முகமாக அமைந்த சேனாவரையர் சொல்லதிகார உரையில் காணப்படும் உவமங்கள் சிலவற்றின் சிறப்பினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

சொற்களை அமைத்தலா? ஆக்குதலா?

‘கிளவியாக்கம்’ என்னும் தலைப்பில் அமைந்த சொல்லதிகாரத்தின் முதலியல் தமிழின் சொல்வழக்கில் உள்ள வழுக்களைச் சுட்டுதல், வழுவகற்றி அவற்றை வழங்க வேண்டுதல், சில காரணம் பற்றி அவ்வழுக்களை அமைத்துக் கொள்ளுதல் என்னும் முப்பெரும் கூறுகளை ஆராய்வதாக அமைந்திருக்கிறது. இம்மூன்று கூறுகளும் மொழிக்கட்டமைப்பைக் காக்கும் தலையாய நோக்கத்துடன் பெரிதும் தொடர்புடையன. சேனாவரையர் இவ்வதிகார நூற்பாக்களைப் பன்முறை நோக்கி, அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ‘கிளவியாக்கம்’ என்னும் இயல் தலைப்பின் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். வழு சுட்டுதல், வழுவற்க எனல், வழுவமைத்துக் கொள்ளுதல் என்னும் மூன்றும் சொற்களை ஆக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே எனக் கருதுகிறார். எனவே ‘சொற்களை ஆக்கிக் கொள்ளுதல்’ அதாவது ‘கிளவிகளை ஆக்கிக் கொள்ளுதல்’ என்பதை உணர்த்தும் பகுதிக்குக் ‘கிளவியாக்கம்’ என்னும் பெயர் பொருத்தமே என்னும் முடிவுக்கு வருகிறார்.

“வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம் அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கமாயிற்று எனினும் அமையும்”

மேற்கண்ட பகுதியிலிருந்து ‘மொழிசார்ந்த இலக்கணமேயானாலும் அவர் மக்கள் சமுதாயத்திலிருந்தே அவ்விலக்கணத்தை நோக்கியிருக்கிறார் என்பது புலனாகும். ‘அமைத்ததை’ ‘ஆக்கியது’ எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதற்குத் தொல்காப்பியர் கால வழக்கே காரணம் என்பது சேனாவரையர் உள்ளக்கிடக்கை. ‘கிளவியாக்கம்’ என்னும் தொடருக்குப் பொருள்கொள்வதில் தெய்வச்சிலையாரைத் தவிர ஏனைய உரையாசிரியர்கள் பெரும்பாலும் ஒத்த கருத்தினை உடையவர்கள் என்பதை அவரவர் உரைகளால் அறிய முடிகிறது. இருப்பினும் ஏற்ற சொற்களை அமைத்துக் கொள்ளுதலுக்குச் சேனாவரையர் கூறிய உவமத்தின் பொருள்புலப்பாட்டுத்திறன், ‘கிளவியாக்கம்’ என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் பிறர் சொன்ன கருத்துக்களை நோக்கினால் நன்கு புலப்படும். ‘நொய்யும் நுறுங்கும்’ என்பது வழுக்களைக் குறித்தன. அவை களையப்பட்ட அரிசி உணவுக்காவது போல வழுக்களைந்த சொற்களே மொழிக்கு ஆக்கமாகும் என்பது உவமத்தாற் பெறப்படும் கருத்தாகும். உரையாசிரியர்களில் சேனாவரையர் மட்டுமே இந்த உவமத்தைக் கையாண்டு பொருள் விளக்கம் தந்திருக்கிறார். அவ்வுவமையால் கிளவியாக்கம் என்னும் முதல் இயலின் உள்ளடக்கம் முழுமையும் தெளிவாகி விடுவதைக்  காணலாம்.

இரட்டைக் கிளவி ஒரு சொல்லா? பல சொற்களா?

தமிழில் ஓர் எழுத்து தனித்து நின்று பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து ஒரு சொல்லாக நின்றும் பொருளுணர்த்தும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து நின்று தொடராகப் பொருளுணர்த்தும். இவற்றோடு ஒரே சொல் இரட்டித்து நின்றும் பொருளுணர்த்தும். அவ்வாறு அது பொருளுணர்த்துங்கால் குறிப்புப் பொருளாகவே வெளிப்படும். சான்றாக ஒருவன் பற்களைக் கடித்துத் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை வழக்கில் மக்கள் ‘அவன் பற்களை நறநறவென்று கடித்தான்’ என வழங்குவர். ‘நறவு’ என்னும் தமிழ்ச்சொல்லுக்குத் ‘தேன்’ என்று பொருள். இங்கே தேனுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. ‘நற’ என்னும் சொல் இரண்டுமுறை அடுக்கிவந்து பற்களைக் கடித்தவன் பாங்கினைக் குறிப்பாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு ஒரே சொல் இரட்டித்து நின்று குறிப்புப் பொருளைச் சுட்டுவதை ‘இரட்டைக் கிளவி’ என்பது தமிழிலக்கண வழக்கு. இந்தக் குறிப்புப் பொருள் இசை, பண்பு, வினை என்னும் மூன்றினையும் சார்ந்து வரும். இவ்வாறு அமையும் இரட்டைக் கிளவிக்குள் இரண்டு சொற்கள் இருந்தாலும் அது ஒருசொல்லாகவே கருதப்படும் என்பது சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் கருத்து. ‘ஒரு சொல்லாய் நின்று அப்பொருள் உணர்த்திற்று’ என்பது சேனாவரையர் உரைப்பகுதி. இரண்டு சொற்களை ஒரே சொல்லாகக் கருதமுடியுமா என்பதற்கான விடையை விளக்குவதற்காகச் சேனாவரையர் காட்டுகிற உவமம் மக்கள் வழக்குச் சார்ந்ததாக அமைந்திருக்கிறது.

“ஈண்டு இரட்டைக் கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கிரட்டைபோல வேற்றுமையுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”

என்பது இரட்டைக்கிளவியின் அமைப்பை விளக்குதற்குச் சேனாவரையர் காட்டும் உவமம்.  மக்களிலோ விலங்குகளிலோ இரட்டை என்றால் அவை ஒரே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவை தனித்தனியானவை. இரட்டைக்கிளவி அவை போன்றதன்று. இலைகளிலோ பூக்களிலோ இரட்டை என்றால் ஒன்றாகவும் இருக்கும் இரண்டாகவும் அமையும். ‘இரட்டைக்கிளவி’ என்பதும் இது போன்றதுதான் என்பதே சேனாவரையர் விளக்கம். இரட்டைக்கிளவியில் அமைந்திருக்கும் இரு சொற்களில் முன்னது குறைசொல்லாகவும் பின்னது முழுச்சொல்லாகவும் (குறுகுறுத்தான், கடுகடுத்தான், விறுவிறுப்பு — இவற்றுள் முன்னவை குறைசொல்லாகவும் பின்னவை முழுச்சொல்லாகவும் இருப்பதை நோக்கினால் சேனாவரையர் காட்டும் உவமம், இலக்கணப் பொருள் புலப்பாட்டுக்குச் செய்யும் பேருதவியைப் புரிந்து கொள்ள முடியும். ‘வில்வமரத்து இலைகள் புறத்தோற்றத்தில் மூன்றாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஓரிலையே’ என்பதாக விளக்கும் அறிஞர் சுந்தரமூர்த்தியின் கருத்து விளக்கமும் இங்கே சுட்டத்தகுந்ததாம். ‘இரட்டை’ என்னும் பன்மையும் ‘கிளவி’ என்னும் ஒருமையும் இணைந்தமைந்த ஒரு சொல்லாட்சியின் அடிப்படையை விளக்கப் பழந்தமிழ் உரையாசியர்கள் தொடங்கித் தற்கால இலக்கண அறிஞர்கள் முடியச் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன.

ஆ தீண்டு குற்றியும் அந்தநாள் வழக்கும்

சொல்லளவில் ஒன்றாக இருப்பது பொருள்நிலையில் மாறுபடும். இதற்குப் பலபொருள் ஒரு சொல் என்று பெயர். இது  பலபொருளைக் குறிப்பது வினை, இனம், சார்பு என்னும் முத்திறத்தால் அமையும். இம்முத்திறத்தாலும் அமையும் அல்லது பொருளுணர்த்தும் பலபொருள் ஒருசொல்லை வினையால் மட்டுமே வேறுபடும் எனத் தொல்காப்பியம் கூறியிருப்பதற்குச் சேனாவரையர் வழக்குச் சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளிக்கிறார். பழங்காலத்தில் பசுக்கள் உடல் தினவு எடுத்தால் உராய்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே மரக்கட்டைகளை நட்டிருப்பர். பசுக்களேயன்றி ஏனைய விலங்குகளும் தங்கள் உடல் தினவுகளைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் கட்டையை மக்கள் வழக்கில் ‘ஆ தீண்டு குற்றி’ என்றே வழங்குவர். தினவு தீர்த்துக்கொள்ளும் விலங்குகளில் பசுக்கள் சிறப்புடைமையின் அதனை முன்னிறுத்தி ‘ஆ தீண்டு குற்றி’ என்றேயழைத்தனர். அந்த வழக்கியல் நிகழ்வை உவமமாக்கிக் கொள்கிறார் சேனாவரையர். ‘பல விலங்குகளும் பயன்படுத்திக் கொள்ளும் குற்றியை ‘ஆ தீண்டு குற்றி’ எனப் பசுவை மட்டும் விதந்து கூறுவதுபோலப், பலபொருள் ஒருசொல்லைப் பொருள் வேறுபடுத்தும் கூறுகள் இனம், சார்பென இருப்பினும் வினையின் சிறப்பு நோக்கி ‘வினைவேறுபடூஉம் பலபொருள் ஒருசொல்’ என்றார் என விளக்கமளிக்கிறார்.

மா பூத்தது என்பது ஒரு தொடர். மாவும் மருதும் வளர்ந்தன என்பது ஒரு தொடர். கவசம் பூட்டிய வீரன் மாவைக் கொணர்க என்பது ஒரு தொடர். இம்மூன்று தொடர்களிலும் மா என்னும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது. முதல் தொடரில் ‘பூத்தது’ என்ற வினையால் அது ‘மரம்’ என்பது பெறப்படும். இரண்டாவது தொடரில் ‘மருது’ என்னும் இனத்தால் ‘மா’ என்பது மரம் என்பது பெறப்படும். மூன்றாவது தொடரில் மருதமாகிய சார்புநிலையால் ‘மா’ என்பது குதிரை என்பது பெறப்படும். இம்மூன்றனுள்ளும் வினையால் வேறுபடுவதே பெரும்பான்மை என்பது அறிக.

“இனமும் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி என்பதுபோல”

என்பது சேனாவரையர் தரும் உவம விளக்கம். பலபொருள் ஒருசொல்லின் பொருள் வேறுபாடு ‘வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும்’ எனப் பின்னால் தொல்காப்பியம் கூறியிருந்தாலும், அது பற்றிய அறிமுக நூற்பாவில் இரண்டினை ஒழித்து, வினையை மட்டும் முன்னிறுத்தியமைக்கான காரணம் சேனாவரையரின் இந்த உவம விளக்கத்தால் அறியப்படுவதோடு, பழங்காலச் சமுதாய வழக்கங்களில் ஒன்றினையும் அறிந்து கொள்ள முடிகிறது.

நிலவு கருப்பென்பாரும் உளர்

பால் வெண்மை என்பதே சரி. பால் வெண்மையானது என்பது தவறு. காரணம் பாலுக்கு வெண்மை இயல்பு. இயல்பான நிறத்தை அப்படியே சொல்லவேண்டுமேயன்றி ஆனது என ஆக்கம் வரவழைத்தல் கூடாது. ‘தனது இயல்பில் திரியாது நின்ற பொருளை அதனது இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இத்தன்மைத்து’ எனச் சுட்ட வேண்டும் என்பது தொல்காப்பிய விதி. அதாவது நீருக்குக் குளிர்ச்சியும் நெருப்புக்கு வெம்மையும் காற்றுக்குத் திரிதலும் நிலத்துக்கு உறுதியும் இயல்பானது. தண்ணீர் குளிர்ச்சி ஆனது என்பது பிழை வழக்கு. அந்தந்தப் பொருளுக்கான மேற்கண்ட தன்மையைக் குறிக்குமிடத்து நீர் தண்ணிது, தீ வெய்யது, காற்று உளரும், நிலம் வலிது எனக் கூறல் வேண்டுமேயன்றி நீர் தண்ணிது ஆயிற்று, தீ வெம்மை ஆயிற்று, காற்று உளர்தல் ஆயிற்று, நிலம் வலிதாயிற்று என ஆக்கச்சொல் வருவித்து உரைத்தல் மரபு வழுவாகும். இம்மரபினை,

“இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்”

என்னும் நூற்பாவில் தொல்காப்பியம் சுட்டுகிறது. சிலர் ‘நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவது பற்றிச் சேனாவரையர் சிந்தித்து எழுதுகிறார்.

முதற்கண் எந்தெந்த இடத்தில் இயற்கைப் பொருளை ஆக்கத்தோடு கூறுவதை அமைத்துக் கொள்ளலாம் என்பதனை விளக்கிக் காட்டுகிறார். இயற்கையான நிலத்தில் கருங்கல், செங்கல் ஆகியவற்றையெல்லாம் இட்டு வன்னிலமாக மாற்றியதொன்றை நிலம் வலிதாயிற்று என்றால் சொல்பவன் நிற்கும் இடம் இயற்கை நிலமன்று. ஆதலின் அது பிழையன்று.

சேற்று நிலத்தில் நின்ற ஒருவன் பின் இயற்கையான நிலத்தில் நிற்பானாயின் பின்னது முன்னதின் வலிமையுடைத்து என்பதனால் அதுவும் பிழையன்று.

மேற்கண்ட இரண்டு இடங்களிலும் ‘நிலம் வலிதாயிற்று’ என்பது ஒப்பீட்டுத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய சூழல்கள் ஏதுமின்றி ‘இயற்கை நிலத்தில் நின்று கொண்டே ‘நிலம் வலிதாயிற்று’ என ஒருவன் கூறினால் அது மரபுவழுவாம். இவ்வாறு ஒருவன் கூறுவது ‘நிலவு கரிய நிறம் உடையது’ என்று கூறுவதுபோல் என விளக்கமளிக்கிறார்  சேனாவரையர்.

“நிலம் வலிதாயிற்று’ என இயற்கைப் பொருள் ஆக்கம் பெற்று வருமால் எனின்…. கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற்றெனின் அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான் ‘நிலம் வலிதாயிற்று’ என்றவழி மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் ‘வேறுபாடு’ குறித்து நிற்றலின் இயற்கைப் பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது ‘நிலத்திற்கு வன்மை விகாரமென்று’ ஓர்ந்து ‘நிலம் வலிதாயிற்று’ என்னுமாயின் ‘திங்கள் கரிது’ என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படாதென்க”

திங்கள் வெண்மை என்பது உண்மை. வெண்மையைக் கருப்பென்று வழங்குவது  அஞ்ஞானம். மெய்ஞ்ஞானிக்கு விளக்கம் தேவையில்லை. ஞான சூன்யங்களுக்குச் சொன்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால் அஞ்ஞானிக்கு அவன் சொல்வதே வேதம். கடுமையான அணுகுமுறையைப் பெரும்பாலும் கைக்கொள்ளாத சேனாவரையர் உலக வழக்குச் சார்ந்த  கடுமையான வெளிப்பாடொன்றை  உவமமாகக் கூறியதன் மூலம் மரபு காப்பதில் தனக்குள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம்.

நிறைவுரை

‘ஆற்றூர் சேனாவரையர்’ என வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் சேனாவரையர் நெல்லை மாவட்டத்தில் தாமிரவருணிக்கு அருகில் உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர். படைத்தலைவர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்கக் கூடும் என நம்பப்படும் இவரது உரையின் பன்முகச் சிறப்புக்களில் மக்கள் வழக்குகளை இலக்கண விளக்கத்திற்காக உவமங்களாக்கியனவே பெருமை எனக் கருதப்படுகிறது. சமுதாய வாழ்வியல் நெறிகளையும் நிகழ்வுகளையும் இலக்கண விளக்கத்தில் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரியபுராணச் சேக்கிழாரை இவரோடு ஒப்பிட இயலும். எதனையும் பரபரக்காது வரவரக் கண்டாய்வதே அறிவுடைமையாம் என்னும் கொள்கையுடையவர் சேனாவரையர். சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியிருக்கும் உரையைக் கல்லாதவருக்குப் புலவர் உலகம் ஏற்பளிப்பதில்லை.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *