கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32
-மேகலா இராமமூர்த்தி
சுக்கிரீவன் மனையாட்டியைக் கவர்ந்து வைத்திருக்கும் வாலியின் ஒழுக்கக் கேட்டைச் சுட்டிக்காட்டி, அவன் பிழைசெய்தவன் என்று இராமன் குற்றஞ்சாட்டியதைக் கேட்ட வாலி அதனை மறுத்து, ”ஐய! மனிதர்கள் பின்பற்றும் கற்பொழுக்கத்தைப் பின்பற்றி வாழும் வகையில் விலங்குகளாகிய எம்மை இறைவன் படைக்கவில்லை; மனம் விரும்பியபடி வாழும் வாழ்க்கையே எமக்குரியது; திருமண முறைகளோ அவற்றைக் கைக்கொள்ளும் பண்புகளோ எமக்கில்லை” என்றுரைத்துத் தான் சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்ததில் பிழையில்லை என்று வாதிட்டான்.
இராமன் அதனை ஒப்பவில்லை. ”தேவர்களைப்போல் பிறந்து அறவழிகள் அனைத்தையும் தெளிவுற அறிந்துள்ள உன்னை எங்ஙனம் விலங்கென்று கருதமுடியும்? எனவே நீ கூறும் சமாதானம் பொருத்தமுடைத்தன்று!” என்று மறுத்துரைத்தவன்,
மாடு பற்றி இடங்கர் வலித்திட
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்
வீடு பெற்ற விலங்கும் விலங்குஅதோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4155)
முதலை தன்னை ஒருபக்கம் பற்றியிழுத்த வேளையில், பாஞ்சசன்னியம் எனும் சங்கினைத் தாங்கிய திருமாலைக் கூவியழைத்துத் தன் ஒப்பற்ற நல்லறிவின் பயனால் வீடுபேறுற்ற கசேந்திரனாகிய யானையை விலங்கு என்று நாம் எண்ணமுடியுமா? என்று கேட்டு, நல்லறிவு பெற்ற வாலியையும் விலங்கென்று எண்ணமுடியாது எனும் தன் கருத்தை வெளிப்படுத்திய இராமன், எக்குலத்தில் பிறந்தவராயினும் அவர்கட்கு உயர்வும் தாழ்வும் அவர்தம் செயல்களாலேயே வருவன; அத்தன்மையை அறிவிற் சிறந்த நீ அறிந்திருந்தும், பிறன் மனைவியின் மாட்சியை அழித்தாய்” என்று தன் குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினான்.
”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” (குறள்: 505) என்ற வள்ளுவர் வாய்மொழியும், மனிதனின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவன் செயல்களையே காரணங்காட்டுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
இராமனின் கருத்தைக் கேட்ட வாலி, ”சரி, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால், போர்க்களத்தில் என் முன்நின்று அம்பு எய்யாமல், கொடிய வேடர்கள் விலங்குகள்மீது மறைந்திருந்து அம்பு தொடுப்பதுபோல் என்மேல் தொடுக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான்.
அவ் உரை அமையக் கேட்ட
அரி குலத்து அரசும் மாண்ட
செவ்வியோய் அனையது ஆக செருக்
களத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன
விலங்கியே மறைந்து வில்லால்
எவ்வியது என்னை என்றான்
இலக்குவன் இயம்பலுற்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4162)
”வேட்டுவன் புதரில் மறைந்திருந்து வலைவீசிப் புள்ளைப் பிடிப்பதற்கு ஒப்பானது, தவ வேடத்தில் மறைந்துகொண்டு ஒருவன் அவச் செயல்கள் புரிவது” என்கின்ற குறளின் மூலமாக மறைந்திருந்து வேட்டுவர்கள் விலங்கை வேட்டையாடுதல் என்பது நெடுநாளைய வழக்கமே என்பது நமக்குப் புலனாகின்றது.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (குறள்: 274)
வாலியின் இந்த நியாயமான வினாவுக்கு இராமன் பதிலளிக்கவில்லை; அவன் இளவல் இலக்குவன் பதிலளிக்கிறான்.
”உன் தம்பியாகிய சுக்கிரீவன் முதலில் வந்து இராமனிடம் சரண் புகுந்தான்; அவனிடம், முறைதவறி நடந்த உன்னைத் தென்புலத்துள்ள எமனுலகுக்கு அனுப்புவேன் என்று ஏற்கனவே இராமன் உறுதிமொழி கூறிவிட்டான். அவ்வாறிருக்கப் போர்க்களத்தில் நீயும் உயிர்மீது அன்புடையவனாகி இராமனிடம் அடைக்கலம் வேண்டினால் அவனால் அளிக்கமுடியாதன்றோ? அதனால்தான் அவன் மறைந்திருந்து உன்மீது அம்பெய்தான்” என்றான் இலக்குவன்.
முன்பு நின் தம்பி வந்து
சரண் புக முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென் என்று
செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி
அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து
நின்று எய்தது என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4163)
இராமனின் செயலுக்கு இலக்குவன் கூறும் சமாதானம் ஏற்புடையதாக இல்லை. ஆனால் வான்மீகத்தில், ”விலங்குகளை மறைந்திருந்து கொல்லல் தவறன்று; ஆதலால் விலங்கொத்த நடைகொண்டவனாகிய நின்னை அவ்வாறு கொன்றேன்” என்று இராமன் அமைதி கூறுவான்.
கம்பர், இராமன் அவ்வாறு கூறியதாகப் படைக்கவில்லை. அவ்வாறு படைத்தால், ”நன்னெறிகளை அறிந்த உன்னை விலங்கென்று கருத இயலாது” எனும் இராமனின் கருத்தை அவனே மறுத்ததாகும். ஆதலால், அதே கருத்தை, ”வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னை” என வாலியின் வாக்காகச் சுட்டியதோடு நிறுத்திக்கொண்டார். இதனைக் காண்கையில், இராமனின் செயலுக்கு இதனை ஓர் பொருத்தமான காரணமாய்ச் செப்பக் கவிச்சக்கரவர்த்தியின் மனம் ஒருப்படவில்லை என்றே தோன்றுகின்றது.
ஆயிரம் சமாதானங்கள் சொல்லினும் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கியது அவன் பேராண்மைக்கு அழகு சேர்ப்பதாயில்லை; மாறாக அவன் பண்புக்கொரு களங்கமாகவே விளங்குகின்றது.
ஆனால், இலக்குவனின் விளக்கத்தைத் தொடர்ந்து வாலி வாதிடவில்லை; தன் தவறுணர்ந்து மெய்யுணர்வு அடைந்தவனாய் இராமனிடம் தன் புன்செயல்களுக்கு மன்னிப்புக் கோருகின்றான். இத்தகு இரசவாத மாற்றத்துக்கு உட்பட்ட வாலியைச் ‘சிறியன சிந்தியாதான்” என்று மீண்டும் உயர்த்திக் கூறுகின்றார் கம்பர்.
இராமனைப் போற்றிப் பலமொழிகள் பகரும் வாலி, ”என் தம்பி தனக்கு வெற்றரசை எடுத்துக்கொண்டு எனக்கு உயர்ந்த வீட்டரசை நல்கிவிட்டான்” என்று அவனையும் புகழ்கின்றான். அடுத்து, இராமனிடம் வாலி கேட்கின்ற வரம் அவனைப் பண்பின் சிகரமாகவே காட்டுகின்றது எனலாம்.
”சித்திரத்தில் எழுதியதுபோன்ற எழிலுரு உடையவனே! நாய்போல் சிறுமை உடையவனாகிய நான் உன்னிடம் வேண்டிப்பெறுவது ஒன்றுளது! மலர்களில் உண்டாகும் மதுவையருந்தி, அறிவுதிரிந்த நிலையில் செய்யத்தகாத தீவினைகள் எவற்றையேனும் என் தம்பி செய்வானாயினும் அவன்மீது சீனங்கொண்டு, என்மேல் ஏவிய அம்பெனும் கூற்றுவனை அவன்மீது ஏவிவிடாதே!” என்று வேண்டுகின்றான் வாலி. சிறியன சிந்தியாதவன் அவன் என்பதற்கும், தம்பியின் இயல்பை நன்கு அறிந்தவன் என்பதற்கும் இப்பாடல் தக்க சான்றாகின்றது.
ஓவிய உருவ நாயேன் உளது
ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்திப்
புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல்
சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல் என்றான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4172)
வாலி கணித்தபடியே பின்னர் நறவம் மாந்தி, இராமனுக்குக் கொடுத்த வாக்கைச் சுக்கிரீவன் மறந்துபோவதைக் காப்பியத்தில் நாம் காணமுடிகின்றது.
மற்றொரு வரத்தையும் வாலி கேட்கின்றான். ”ஐய! என் தம்பியைக் காணும்போது உன் தம்பிமார்கள், ”இவன் தமையனைக் கொல்லச் செய்தவன்” என்று இகழக்கூடும்; அவ்வாறு அவர்கள் செய்யமுற்படுவரேல் அதனை நீ தடுத்துநிறுத்த வேண்டும். சுக்கிரீவனின் குறைகளை நீக்குவதாக நீ முன்னமே மொழிந்திருப்பதால் அவனுக்குச் செய்யவேண்டியவற்றைச் செய்ய வேண்டும்; அவ்வாறே அவனால் உனக்கு ஆகவேண்டிய வினைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று மொழிகின்றான்.
இன்னம் ஒன்று இரப்பது
உண்டால் எம்பியை உம்பிமார்கள்
தன்முனைக் கொல்வித்தான் என்று
இகழ்வரேல் தடுத்தி தக்கோய்
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன்
குறை முடிப்பது ஐயா
பின் இவன் வினையின்
செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ. (கம்ப: வாலிவதைப் படலம் – 4173)
இவ்வரங்கள் வாலியின் நுண்மாண் நுழைபுலத்தையும், தம்பியின் நலனில் அவன் கொண்டிருந்த அக்கறையையும் புலப்படுத்துகின்றன.
தொடர்ந்து பேசுகின்ற வாலி, ”கொற்றவனே! தீச்செயலை நினக்குப் புரிந்த இராவணனை வாலினால் பற்றிக்கொண்டு வந்து உன்வசம் நிறுத்தி இக்குரங்கின் வலிமை இன்னது என்று காட்டத் தவறிவிட்டேன்; சென்றதைப் பேசி இனிப் பயனில்லை.
ஆழியை ஏந்திய தலைவனே! வானினும் உயர்ந்த தோளனே! இதோ இருக்கிறானே அனுமன்…இவனைச் சாதாரணமாய் எண்ணிவிடாதே! நின் கையில் இருக்கும் வில்லாகிய கோதண்டமே இவன் என்று நினைப்பாயாக; என் தம்பியை உன் தம்பியருள் ஒருவனாய் ஏற்றுக்கொள்! இவர்களைப் போன்ற ஒப்பற்ற துணைவர்கள் வேறிலர்; இவர்களின் துணைகொண்டு சீதையைத் தேடிக் கொள்வாயாக!” என்று இராமனின் பிரச்சினை தீரவும் வழிகூறுகின்றான்.
அனுமன் என்பவனை ஆழி
ஐய நின் செய்ய செங் கைத்
தனு என நினைதி மற்று என்
தம்பி நின் தம்பி ஆக
நினைதி ஓர் துணைவர் இன்னோர்
அனையவர் இலை நீ ஈண்டு அவ்
வனிதையை நாடிக் கோடி
வானினும் உயர்ந்த தோளாய்! (கம்ப: வாலிவதைப் படலம் – 4175)
இராமன் கையிலிருக்கும் வில் நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதுபோல், இராமனின் நற்பணிகளுக்கு அனுமன் துணையாவான் என்பதையே ”அனுமனை நின் செங்கைத் தனு என நினைதி!” என்று குறிக்கின்றான் வாலி.
அதன்பின்னர் தன் தம்பியாகிய சுக்கிரீவனை ஆரத்தழுவி, அவனை இராமனிடம் அடைக்கலப்படுத்தியவன், ”உன்னரும் புதல்வனாகிய அங்கதனை அழைத்துவா!” என்று சுக்கிரீவனைப் பணிக்கின்றான்.
அங்கதன் வாலியின் மகனே ஆயினும் சிற்றப்பன் முறையினனான சுக்கிரீவனுக்கும் அவன் மகன் முறையே அல்லவா? அத்தோடு, வாலியின் மரணத்துக்குப்பின் தந்தையாயிருந்து அங்கதனைக் காக்கவேண்டியவனும் சுக்கிரீவனே எனும் குறிப்புப்பொருள் தோன்ற, ’உன்னரும் புதல்வன்’ என்று சுக்கிரீவனிடம் உரைக்கின்றான் வாலி.
சுக்கிரீவன் சென்றழைத்துவர, செங்குருதிசோரச் சாய்ந்துகிடக்கும் தன் விறல்மிகு தந்தை வாலியைக் கண்டான் அவன் வீரமைந்தன் அங்கதன்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.