சேக்கிழார் பாடல் நயம் – 132 (நாணனே)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம்’ என்ன நாணன்,
‘காண நீ போதின், நல்ல காட்சியே காணும்; இந்தச்
சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.
வரலாறு
முதல்வேட்டைஎனப்பட்ட கண்ணிவேட்டைக்குக் கிளம்பினான்திண்ணன். அவ்வாறு வேட்டைபயின்று வளர்ந்து பதினாறாண்டு அகவை அடைந்தான். அந்த உடுப்பூர்வேடர்குலத்தார் கானகத்தில் வேட்டையாடிப் பன்றி, புலி, கரடி, காட்டுமான், கலைமான் ஆகியவற்றை வேட்டையாடி விருந்துண்டு வாழ்ந்தனர். அப்போது முதுமையால்தளர்ந்த வேடர்குலத்தலைவன் நாகன், ‘’என்முதுமையால் தளர்ந்தேன்! இனிஇந்தவேடர்குலத் தலைவன் என்னும் பொறுப்பைத் திண்ணனுக்கு அளிப்பேன்! தேவராட்டியை அழைத்து , காடு கிழாளுக்கு பலியூட்டி. பூசைசெய்ய அழைக்க!’’ என்றான். வேட்டுவர் குலத்தின் பூசைமகளாகிய மூத்த வேட்டுவச்சி, ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு வேண்டிய உணவைஅளித்துப் போற்றிய காடன்,’’ என்மகன் திண்ணனை வேடர்குலத் தலைவனாவதற்கு உரிய வழிபாடுசெய்து உதவுக” என்றான், முதியோளும்‘’ இவன்வேடர் குலத்தலைவன் ஆவதற்குரிய சகுனங்கள் சிறப்பாக இருக்கின்றன!’’ என்றாள்.
நாகனும் தன்முன் வந்து வணங்கிய மகனைத் தழுவி, முறைப்படி தலைவனுக்குரிய முதல் சுரிகை, உடை தோல் ஆகியவற்றை வழங்கினான் திண்ணனும் தந்தையை வணங்கி மறுநாள் அதிகாலையில் வேட்டைக்குப் புறப்பட்டான். தலைவனுக்கு உரிய வகையில், தலை, தோள், மார்பு, கை, இடை, ஆகியவற்றில் வீரம் காட்டும் அணிகளை அணிந்து கொண்டு காலில் வீரக்கழல் மற்றும் செருப்பும் அணிந்து வேடர் கூட்டமாகிய தோழர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்!
எல்லாரும் எல்லாத்திக்கிலும் பரவிச் சென்று பற்பல விலங்குகளை விரட்டி, திண்ணனார் வேட்டையாட உதவினர். அப்போது காட்டின் கொற்றவைக்கு பலியூட்டி முதியவள் வந்தாள். திண்ணனுக்குத் தலையில் சேடை என்னும் அட்சதை தூவி வாழ்த்தினாள். உடனே திண்ணன் வேட்டைக்குப் புறப்பட்டதைச் சேக்கிழார்,
தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.
என்றுபாடினார். மேலும் அவர் எய்த அம்பில் அடிபட்ட விலங்குகளை,
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்;
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா;
நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.
என்று, வேட்டையின் சிறப்பினை ஓசைநயம்படப் பாடினார்! காட்டுக்குள் நெடுந்தூரம் வேட்டையாடிக் கொண்டே விரைந்த திண்ணனுடன், தொடர்ந்து சென்ற நாணனும் காடனும் ஓரிடத்தில் பெரிய காட்டுப்பன்றி இரண்டு துண்டாகி வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர்! ‘’நாம் பல காததூரம் வந்தோம்! இவர் தனியாக முன்னேறி வந்து, ஆடவர்களின் தலைவனாகி இதனைக் கொன்றான், அச்சோ!’’ என்று போற்றினர், அதனச் சுட்டு உணவாக்கிக் கொள்ள முயன்ற போது. தண்ணீரில் வேக வைக்க வேண்டுமே! என்று திண்ணன் கூறிய போது நாணன் தண்ணீர் ஓடும் பொன்முகலி யாற்றைக் காட்டினான். அங்கே இப்பன்றியைக் கொண்டுபோவோம் என்று கூறிச்சென்ற திண்ணன், அங்கிருந்த மலையைக் கண்டான். இவ்வாறு மலைக்காட்சியைக் காட்டியபோது அங்கே மலையும், சாரலும். கோயிலும் ஒன்றாகி, ‘’நிர்விகற்பக்காட்சி’’ யாகப் புலப்பட்டது ; பின்னர் நெருங்கிச் சென்று காணும் போது, தனித்தனியாகிச் ‘’சவிகற்பககாட்சி’’ ஆயிற்று. நற்காட்சி என்ற சித்தாந்த நிலையை இங்கே சேக்கிழார் குறிப்பிட்டார்! இதனை இப்பாடலில் காண்போம்.
‘நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்’ என்றான்.
பொருள்
“நாணணே! முன்னே தோன்றும் குன்றின்கண் சேர்வோம்” என்று திண்ணனார் சொல்ல, நாணன், “நீ அங்கே காணப் போவாயாகில் நல்ல காட்சியே காணப்படும்; சேணில் உயரும் இந்தத் திருக்காளத்தி மலையின்மேல் எழுந்து செம்மைபெறக் கோணமில்லையாகச் செய்யும் குடுமித்தேவர் இருப்பார்; நாம் கும்பிடலாம்” என்று சொன்னான்.
தோன்றும் குன்றில் – முதலிற் கண்ணுக்குப் புலப்பட்டது குன்றின் உயர்ந்த சிகரமாதலின் அது அவர் கருத்தைக் கவர்ந்தது.
நீகாணப்போதின்- காண்பதற்கென்று நீ போவாயானால். இவ்வகை யிடங்களுக்குப் போதுவார் பலரும் போய்வந்த மட்டில் அமைவரே யன்றி அங்குள்ள சிறப்புக்களைக் காணாமலே வருவர் என்பது கண்கூடு. ஆதலின், நண்ணுவோம் என்று தன் தலைவன் கூற அவ்வாணைக் குட்பட்டு உடன்படும் நாணன், அவ்வாறு நீ காணும்பொருட்டே செல்வாயனால், ஏனையோர் போலல்லாது நீ காணும் சிறப்பு இன்னதென்று கூறுவானாகி, அது நல்ல காட்சியே என அறிவுறுத்துகின்றான். அக்காட்சி இன்னதாம் என மேலும் வற்புறுத்திக் கூறுகின்றான் “குன்றின் நண்ணுவோம்; அதனைக் காணல்வேண்டும்; காண்பது நல்ல காட்சி; அஃது இதுவாம்” என்றவாறு. இக்குன்றவர் கடவுட்காட்சியில் வைத்தகருத்துப் பாராட்டத்தக்கது.
காணநீபோதின் என்று நாணன் உரைத்தவாறு உண்மையில் நாயனார் காண்பதற்கே அங்குப் போகின்றார். ஏனையோர் போலல்லாது,
“ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டுகொண்டே
நேர்பெற நோக்கி நின்றார்” என்பது காண்க.
நல்ல காட்சியே காணும் – காட்சி – காணப்படுவது. காணும் – காணப்படும். இவர்காணும் காட்சி இறைவனது அருள் திரு நோக்கம் பெற்று அவன் காட்டக்காணும் காட்சியாதலின் நல்ல காட்சியே என்றார். தோற்றமுமாம். நல்லகாட்சியாவது அகம் புறமாகிய கரணங்களால் எதனைக் காணவேண்டுமென்று நூல்கள் விதிக்கின்றனவோ அதனையே காணுதல்.
“கண்காள் காண்மின்களோ – கடல் – நஞ்சுண்ட கண்டன்றனை,
யெண்டோள் வீசிநின் றாடும் பிரான்றனைக் (கண்காள்)”
என்றது தமிழ்மறை.
இந்த …. கும்பிடலாம் – நல்லகாட்சி இதுவாமென்று நாணன் கூறியது. சேண்உயர் – வானில் உயர்ந்துவிளங்கும். உயர்ந்து தோன்றியதனால் முன்னர்த் “தோன்றும் குன்று” என்றார். அவ்வாறு திண்ணனார் “தோன்றும் குன்று” என்ற அதன் பெயரை அவருக்கு அறிவுறுத்துவான் இந்த என்று கையாற்சுட்டிக் காட்டித் திருக்காளத்திமலை என்று வாயினாற் பேர் கூறினான். “பெரிய தேக்கி னப்புறஞ் சென்றால் நீண்ட, குன்று” (743) என்று நாணன்கூறக் கேள்விமாத்திரத்தாலறிந்த நாயனார், இங்கு அதனைக்கண்ணுக்குப் புலப்படக் கண்டறிந்தபோது அவன் சொல்லியபடியே “தோன்றும் குன்று” என்று பேர்குறியாது கூறியது காண்க.
மலைமிசைஎழுந்து செவ்வே – மலையினின்றும் வேரூன்றி முளைத்ததுபோல மேல் எழுந்து செம்மைபெற. கோணம்இல் – கோணத்தை இல்லையாகச்செய்யும். கோணம் – குற்றம். இது கோண் – கோணைஎனவும் வழங்கும்.
“யான்செய்தேன் பிறர்செய்தாரென்னதியா னென்னுமிக்
கோணை”
(சிவஞானசித்தியார் – 10, சூத்திரம் – 2).
குடுமித்தேவர் – குடுமி – உச்சி. மலையின் உச்சியிலிருப்பவர். தலையின்மேல் உச்சியிலிருப்பதால் தலைமயிர்க்கற்றை, குடுமி எனப்படும். கானவர் காளத்தியப்பரை இப்பெயராலறிந்து கும்பிட்டனர் என்க. வேதங்களுள் முடிவினிற்பது அதர்வணமாம். அதன் சிரம் அதர்வசிரசு எனப்படும். அதன்
சிகையாயுள்ள அதர்வசிகை “ஏனையவற்றை யெல்லாங் கைவிட்டுமங்களஞ்செய்பவனாகிய சிவன் ஒருவனே தியானிக்கற்பாலன். அதர்வசிகை முடிந்தது” என்று முடிபுகூறுகின்றது. அவ்வுச்சியில் முடிந்தமுடிபாய் விளங்குபவன் இவ்விறைவன் என்பதும் குறிப்பாம். உபநிடதத்துச்சியில் விளங்கும் போதக்காட்சி என்னும் வழக்குங்காண்க.
நாணன் மேலே சொல்லியவை
“குன்றினுக் கயலேயோடும் குளிர்ந்த பொன் முகலி”
என்றது இவரை வழிப்படுத்திய முதல்உபதேச மொழி;
இப்பாட்டிற் கூறியன இரண்டாவது உபதேச மொழிகளாம். மேலிருபாட்டிலும் முறையே தீர்த்த விசேடமும் தலவிசேடமும் கூறப்பட்டது போல இப்பாட்டால் மூர்த்திவிசேடம் கூறப்பட்டது காண்க.
இறைவனை அறிந்து கொள்ளுதலாகிய நற்காட்சி மூலம் அவரை அடைய வேண்டும் என்பதும், அடையும் வழிமுறையும் , அடைதலும் ஆகிய சித்தாந்த நெறி இப்பாடலில் விளக்கப்பெறுகின்றது. இறைவனை அடையும் வழியை முன்பே அறிந்தவர் மூலம் தெரிந்து கொள்ளுதல் என்ற வகையில் நாணன் திண்ணனுக்குக் கூறிய உபதேச மொழியாகக் கொள்ள வேண்டும். சமய உலகில் உபதேசம் எங்கிருந்து வேண்டுமானாலும் கிட்டும் என்பது சாத்திரம்!