புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

மீனாட்சி பாலகணேஷ்
வில், வாள், ஆயுதம் பயிலல் (புதிய பருவங்கள்- இருபால் பிள்ளைத்தமிழ்)
1.பெண்பால்
புதியதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடிய பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான ஒரு பருவத்தைப் பார்க்கலாம். அரசுகட்டில் ஏறும் ஆண்மகனுக்கு உரியது ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் பருவம். இதனை நாம் முன்பே கண்டோம். வில், வாள் ஆகிய ஆயுதப் பயிற்சி, குதிரை, யானையேற்றம் ஆகியனவும் ஆண்மகனுக்கே, சிறுவயதிலிருந்தே (ஏழெட்டு ஆண்டுகளிலிருந்தே) பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கு உரியதாக இதனை முதலில் காணலாமா?
தடாதகை போலும் இளம் சிறுமிகளுக்கும் போர்க்கலைகளான இவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவள் பாண்டிய அரசியல்லவா? பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில், மதுரைக் காண்டத்தில், தடாதகை வளரும் பருவத்தில் போர்க்கலைகள் பயில்வது பற்றி ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அன்னை கயிலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போர்புரியும்போது அவளது போர்த்திறத்தை நன்கு விவரிக்கிறார் புலவர்பெருமான்.
மூன்று பாடல்கள் அம்மையின் போர்த்திறத்தை அழகுறப்பாடுகின்றன.
சிவகணங்களின் தலைவர் நந்தியெம்பெருமான். அவருடைய படைவீரர்கள் தத்தம் கைகளில் ஏந்தியிருந்த படைகளைத் தடாதகைப் பிராட்டியார் தமது கொடிய கணைகளினின்றும் பாம்புபோன்ற அம்புமழையினைச் சொரிந்து பொடிப்பொடியாக்கினார். (‘கட்புற்றரவில் கணைமாரிகள் தூற்றி நின்றாள்’).
கொட்புற் றமரா டுமிக்கொள்கையர் தம்மி னந்தி
நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞானமூர்த்தி
பெட்புற் றருள வருமெங்கள்பி ராட்டி வெய்ய
கட்புற் றரவிற் கணைமாரிக டூற்றி நின்றாள்1.
கையிலுள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதும் அச்சிவகணங்கள் கற்களை எடுத்து தடாதகையின் உடலில் படும்வண்ணம் வீசினர். அவை தன்மீது படும்முன்பே ‘பொய்ம்மை மனத்தினர் செய்யும் தவம் அழிவது போல’ தனது நெய்பூசிய வச்சிரப்படைகொண்டு அம்மை அவற்றை அழித்தனள்.
கையிற் படையற் றனர்கற்படை தொட்டு வீரர்
மெய்யிற் படுகென் றுவிடுக்குமுன் வீரக் கன்னி
பொய்யிற் படுநெஞ் சுடையார் தவம்போல மாய
நெய்யிற் படுவச் சிரவேலைநி மிர்ந்து வீசி2.
பின் அவ்வீரர்களின் படைகளைத் துண்டம்துண்டமாகத் துணித்தாள் அன்னை. தனது தண்டப்படையால் அவைகளைத் தாக்கினாள். அவர்கள் புறம்காட்டி ஓடினர். ‘அண்டங்களையும் சராசரங்களையும் தானே படைத்துக் காக்கும் பராசக்தியின் வலிமையைக் கூறவும் நம்மால் இயலுமோ?’ என்கிறார் பரஞ்சோதி முனிவர்.
துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
அண்டங் கள்சரா சரம்யாவையுந் தானே யாக்கிக்
கொண்டெங் குநின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ3.
*****
இனி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் காணப்படும் அம்மையின் போர்த்திறன் பற்றிய செய்திகளைக் காணலாமா?
குழந்தையை உறங்கவைக்கப் பாடும் பாடலில் தாய்மாரும் செவிலியரும் அம்பிகையின் சேனை செய்த போரை ஒரு தாலப்பருவப்பாடலில் விவரிக்கின்றனர். அவர்களுக்குப் பெரும் உற்சாகம். தடாதகை நந்திதேவனின் அப்படைகளை ஓட ஓட விரட்டினாள் எனப்பாடி மகிழ்கின்றனர்.
தடாதகை திக்விஜயம் சென்றபோது அவள் வயது பதினைந்தோ பதினாறோ தான். இளங்குமரியான அரசகுமாரி சிவகணங்களை எதிர்த்தகாலை, நந்திதேவர் அலட்சியமாக அவளை நோக்கி, “மயிர்ச்சாந்து அணிந்த கருமையான கூந்தலையுடைய சிறிய பெண்ணான நீதானோ எம் தலைவனாகிய சிவபிரான் வாழும் கயிலைமலையை முற்றுகை இடுபவள்?” எனச் சீறுகிறார். அவர்கள் அனைவரையும் தனது போர்த்திறத்தால் தோற்றோடச் செய்த வீரம் படைத்தவள் தடாதகை என்கிறார் புலவனார்.
‘தகரக் கரிய குழற்சிறுபெண்பிளை
நீயோ தூயோன்வாழ்
சயிலத் தெயிலை வளைப்பவளென்றெதிர்
சீறா வீறோதா
நிகரிட் டமர்செய் கணத்தவர்நந்திபி
ரானோ டேயோடா4…’
போரைத் தொடர்பவள் கயிலைமலைத் தலைவனைப் போருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பு வந்ததும் உடனே உள்ளப்புணர்ச்சி காரணமாக இவரே தன் மணாளன் எனத் தெளிகிறாள். நாணேற்ற உயர்த்திய வில்லைத் தழைத்துப் பிடித்தபடி, அதன் நாணினை விரல்களால் தழுவியபடி உயிர்ச்சித்திரம்போல் உண்மையாகவே வந்த நாணத்துடன் நிற்கிறாள்.
மெய்வந்த நாணினொடு நுதல்வந்தெழுங்குறு
வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
விம்மிதமு மாய்நின்றஉயிரோவம் எனவூன்று
விற்கடை விரற்கடைதழீஇத்
தைவந்த நாணினொடு தவழ்தந்தசெங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே5
இங்கு போருக்கெடுத்த வில் பயனின்றிக் கையில் தவழ்கின்றது!! அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும் ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!
கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு
கைவிற்குனித்துநின்ற
போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்
பொன்னூசல்ஆடியருளே6!
ஆக, யாம் கண்ட வரையிலும் அருமையான பல பாடல்களிலும் அன்னையின் போர்த்திறமையைப் பெரிதாகப் பேசுபவர் குமரகுருபரனார் ஒருவரே!
மேலும் மங்கையர்க்கரசியார் எனும் அரசமகளுக்கும் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. (கோவை கவியரசு கு. நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது). இவர் சோழர்குல இளவரசியாகப் பிறந்து பின் திருமண உறவால் கூன்பாண்டின் எனப்பட்ட நின்றசீர் நெடுமாறப் பாண்டியற்கு மனைவியானார். இவர்மீதான பிள்ளைத்தமிழிலும் இவர் சைவத்திற்கு சம்பந்தப் பெருமானுடன் சேர்ந்து செய்த தொண்டுதான் பலவாறு சுட்டப்படுகின்றதேயன்றி, இவரது போராற்றலும் திறமையும் கூறப்படவில்லை. சோழ இளவரசியாக இருந்தபோது ‘மானி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.
‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி7,’ என்பது சம்பந்தப்பெருமான் வாக்கு (தேவாரம்).
தற்சமயம் சக்தி விகடனில் ‘சிவமகுடம்’ எனும் பெயரில் ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதில் இவருடைய போர்த்திறமை நன்கு நயமாக மிகவும் உயர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் எவ்விலக்கியத்திலும் (பெரியபுராணத்திலும் கூட) இவருடைய போர்த்திறமை கூறப்படவில்லை; பாடப்படவில்லை! இது வியப்பிற்குரிய செய்தியாகும்.
*****
இனி, எமது கற்பனையில் உதித்த, எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுமியான தடாதகை எனும் மீனாட்சியம்மை போர்க்கலை பயிலும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.
*****
போர்க்கலை ஆசான் வாளைச் சுழற்றி வீசப் பயிற்றுவிக்கிறார். வெகு அலட்சியமாக தனது வாளைச் சுழற்றி, அவருடைய வாள் வீச்சைத் தடுக்கிறாள் தடைசெய்யவியலாத ஆற்றல் படைத்த மங்கை தடாதகை எனும் மீனாட்சி! அடுத்து அவர் வேல்வீசக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ அதனை நொடியில் பயின்று, தன் கண்களெனும் வேலை வீசவும் பழகியிருந்தனள். குமரிப் பெண்ணல்லவா?அவள் தனது தாள்களே கதி எனப்பணியும் தவத்தோர்க்கு அவருடைய இருவினைகளையும் தீர்த்து வைப்பவள். எமக்கும் அவ்வினைகளைத் தீர்த்து தனது பால்போலும் பளிங்குமுகத்தில் புன்னகை காட்டி அருளுகிறாள் அந்த மீனாட்சி!
வாள்வீச்சி னையாசான் வகுத்துணர்த் துவிக்கவவ்
வாள்வீச்சி னைத்தனதுவா ளாற்றடுத்தாள்
வேல்வீச்சி னையடுத்து வேண்டிப்ப யிற்றுவிக்க
வேல்வீச்சி னைத்தன்விழி களாற்பயின்றாள்
தாள்நோக்கி யன்பர்க தித்துத்துதித் திடத்தன்
தாளவர் தலைபதித் துவினையெ லாங்களைந்தெம்
பால்நோக்கி பவரோகம் பழவினையு மழிந்திடப்
பால்போன்ற நகைமுகம் காட்டியருளினாள்8. (1)
*****
திக்விஜயத்திற்குத் தயாராகும் அரசி மீனாட்சியை அடுத்துக் காண்கிறோம். கூந்தலை இறுகக் கொண்டையிட்டு நறுநெய்பூசி வாரிமுடிந்து கட்டியுள்ளாள். போர்க்கவசம் கச்சணிந்த மும்முலைகளையும் அணைத்துக் காக்கிறது. மருதோன்றியணிந்த கரங்கள் வாளின் தந்தப்பிடியை இறுகப் பற்றியுள்ளன. சிலம்பும் சதங்கையும் கொஞ்சும் பஞ்சுப்பாதங்கள் இப்போது தண்டை எனும் வீரக்கழல்களை அணிந்துள்ளன. இடையிலணிந்துள்ள மேகலை, உடைவாளின் உறையுடன் உரசி ஒருவிதமான தாளலயத்தை உண்டாக்கி அவளுடைய நடைக்குக் கட்டியம் கூறுகிறது! பிடியைப்போல் மென்னடை பயில வேண்டிய இளநங்கை இப்போது ‘தம்,தம்,’ எனக் கூடமே அதிர தன் அன்னையைக்கண்டு ஆசிபெற வந்துகொண்டிருக்கிறாள்! பாண்டிய வம்சத்திற்குரிய வேப்பமாலை, மருக்கொழுந்து, முல்லை மலர்களுடன் கூடிய ஒரு ஆரமெனத் திருமார்பில் புரளுகிறது! கயல்விழிகள் அன்பு, வீரம், அருள், கொடை, இளமைக்கே உரிய அச்சமின்மை, சிறிது ஆணவம் (சிவனையும் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் கயிலை செல்லுபவளல்லவா இம்மங்கை?) ஆகிய உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலிக்கின்றன. பாண்டியரின் கயற்கொடி ஒளிவீசிப்பறக்க அவள் திக்குவிசயத்திற்குப் புறப்பட்டு விட்டாள்!
வஞ்சிய வள்நங்கை பாண்டியன் குலமங்கை
வில்லேந்தி வீரநடை பயின்றனளே!
வானவருந் தானவரும் வடவரு மேங்கிநிற்க
வேப்பமாலை தவழவெஞ் சமருக்கே!
அஞ்சன மெழுதிய அங்கயற் கண்ணழகி
அங்கையில் வாளேந்தி ஆரவாரமாக
அன்னை காஞ்சனையி னாசிகளைப் பெற்று
அன்புமற முங்குணமு மொருங்கமைய
குஞ்சரப் படையுங் குதிரைகற் றம்படையுங்
கொண்டுவிண் ணுமண்ணும திரக்கோமகள்
கொடியிடை யாளன்னை வாழ்த்தக் கொடுஞ்சமருக்
குப்படைதி ரட்டிப்புறப் பட்டனளே!
கொஞ்சுமொ ழிப்பாவை கூடலுறை பொற்பூவை
கையிலொரு வாளுங்கூர் வேலுமேந்தி
கன்னிநாட் டின்கயற் கொடியை யுயர்த்தி
திக்குவிசய மெனப்புறப் பட்டனளே9! (2)
இவ்வாறு திக்குவிசயத்திற்குப் புறப்பட்ட தடாதகை, எல்லா அரசர்களையும் தனக்குத் திறை செலுத்த வைத்தோ, அல்லது போரில் வென்று சிறைப்பிடித்தோ வைத்தபடி சென்று பின் கயிலைமலையை அடைகிறாள். வியர்க்க, விறுவிறுக்கச் சிவகணங்களுடன் போர் செய்தவள், வில்லிலிருந்து கணைகளைத் தொடுத்தும், ஆயுதங்களால் அடித்தும் நந்திதேவரையே கலங்க வைக்கிறாள்.
தவஞ்செய்யும் முனிவர்கள் வாழும் கயிலைமலை மீதேறி, ஆண்டவனாம் சிவபெருமானை சமருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பாக வந்து தோன்றியதும், தனது பழைய நினைவுகள் திரும்ப வந்ததும், அவரே தன் மணாளனென உணர்ந்து மலைத்து வியர்க்கிறாள்.
அண்ணல்மீது காதற்கணைகளைக் கண்களால் தொடுக்கிறாள். தண்ணிலவின் கிரணங்கள் வெந்தணலாய்ப் பொழிய (காதல் வயப்பட்டோருக்கு, நிலவும் சுடும்!), போர்க்கோலமொழிந்து காதலில் தன்னையிழந்து நிற்கிறாள் தடாதகை!
மூண்டதொரு சமரிலவள் முகமெல்லாம் வியர்த்தாள்
மூண்டெழுஞ் சினத்தில்சிவ கணங்களையு மொறுத்தாள்
மூண்டெழும் வேகத்தில்விற் கணைகளைத் தொடுத்தாள்
மூண்டெழுந் திறத்தில்நந் திதேவனை யுமடித்தாள்.
யாண்டவர் தவஞ்செய் யுங்கயிலை மலைமீதேறி
யாண்டவன் றன்னையும் வெஞ்சமருக் கழைத்தா
ளாண்டவ னாங்கந்த அணங்கவள் முன்தோன்றவவ்
வாண்டகை தனைக்கண் டயர்வியர் வெய்தினாள்.
அண்ணலின்மீ தெண்ணிலாக் கட்கணைகள் தொடுத்தாள்
தண்ணிலவும் வெந்தணலாய் தண்கலை கள்பொழிய
பெண்ணவள் தன்போர்க்கோ லமழிந்திட் டுநின்றாள்
விண்ணவரு மண்ணவரு மலர்மாரி பொழிந்தார்10. (3)
இப்பாடல்கள் அன்னையின் இப்பருவத்தைப் போற்றச் செய்த எனது சிறுமுயற்சி. அவள் திருவடிகளுக்கே அர்ப்பணம்.
(புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)
————————–
பார்வை நூல்கள்:
1, 2, 3 – பரஞ்சோதி முனிவர்- திருவிளையாடற் புராணம்.
4, 5, 6 – குமரகுருபரர்- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
7. திருஞானசம்பந்தர்- தேவாரம்
8, 9, 10 – பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்.