Blog

  • புகழின் விலை (சிறுகதை)

    புகழின் விலை (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தையின் முகம் பௌர்ணமி சந்திரன்மாதிரி எவ்வளவு அழகா, உருண்டையா இருக்கு!” என்று பார்த்தவர்களெல்லாரும் பிரமிக்க, அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.

    இப்போது நினைத்துப் பார்க்கையில், பிறந்ததிலிருந்தே பிறரது பாராட்டுக்காகவே நான் வளர்க்கப்பட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

    நான்கு வயதிலேயே கேட்ட பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவேனாம். குரல் வேறு இனிமையாக இருந்து தொலைத்ததா, முறையாக இசை பயில அனுப்பினார் என் தந்தை. எல்லாம் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல்தான்.

    “இப்போ எதுக்கு பாட்டும் கூத்தும்? படிச்சு, ஒரு டிகிரி வாங்கறமாதிரி ஆகுமா?” என்று அப்பா சொல்லிப் பார்த்தாராம். அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

    “டி.வியில இப்போல்லாம் பாட்டுப் போட்டி வெக்கறாங்க, சின்னக் குழந்தைகளுக்குக்கூட. இவளுக்கு இருக்கிற குரலுக்கும் சங்கீத ஞானத்துக்கும்! பரிசு என்ன தெரியுமா?” என்று சவால் விட்டாள் அம்மா.

    அப்போதே, தங்கள் பெண் அப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, பல லட்சம் பெறுமான வீடு தங்களுக்குச் சொந்தமாகப்போகிறது என்ற கனவில் ஆழ்ந்தார்கள் இருவரும்.

    பத்து வயதில் எனக்கு இதெல்லாம் புரியவில்லை. வித விதமான ஆடைகள் அணிய முடிகிறதே, போட்டிக்கு முன்னாலும், முடிந்த பிறகும் எல்லாரும் கொஞ்சுகிறார்களே என்று கர்வமாக இருந்தது. பள்ளிக்கூடத்திலும் நான் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டதைப் பெருமையுடன் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்கள். எல்லா ஆசிரியைகளும் மாணவிகளும் கைதட்டினதை மறக்க முடியுமா!

    “பூர்ணிமாவைப் பாட்டுக் கிளாசிலே சேர்க்கணும்னு நான் சொன்னப்போ என்னமோ யோசிச்சீங்களே! இப்போ பாத்தீங்களா?” எனக்குப் பரிசாகக் கிடைத்த அபார்ட்மெண்டுக்குள் நுழையும்போது அம்மா அப்பாவை இடித்துக் கேட்டாள்.

    அப்பா அசட்டுச்சிரிப்புச் சிரித்தார், தன் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல். அதற்குப்பின், எல்லாமே அம்மாவின் விருப்பப்படிதான் நடந்தது.

    இசைத்துறையில் முன்னணியில் இருந்த ஜகதாம்பாளிடம் என்னை அனுப்பினார்கள். மேடைக் கச்சேரி செய்யும்போதெல்லாம் நானும் என் குருவிற்குச் சற்றுப் பின்னால் அமர்ந்து, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், உடலும் அசையாமல் தாளம் போடுவேன்.

    அது பாவாடை- சட்டை மட்டும் அணிந்திருந்த பருவம். உடன் பாடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில், அவர்கள் வீட்டிலேயே தங்குவேன்.

    பாடும்போது, டீச்சருக்கு அடிக்கடி இருமல் வரும்.

    “ஜகதா மாமி! தண்ணி கொண்டு வரட்டுமா?”

    என்னைப் பார்த்து ஆதுரத்துடன் சிரித்தாள் மாமி. தானே எழுந்து உள்ளே போய், ஒரு கிளாஸ் நிறைய ஏதோ மருந்தை ஊற்றிக் கொண்டுவந்தார்கள்.

    சிறிது குடித்ததும், குரலில் மீண்டும் இனிமை.

    வீடு திரும்பியதும், அப்பாவிடம் சொன்னேன், “ஜகதா மாமிக்கு உடம்பு சரியில்லேப்பா. ரொம்ப இருமறாங்க. அடிக்கடி மருந்து குடிக்கறாங்க. கிளாஸிலே!”

    அப்பாவின் முகத்தில் கவலையின் ரேகை.

    `அப்பா, நல்ல அப்பா! டீச்சர் நல்லா இருக்கணும்னு எவ்வளவு அக்கறை!’ என்று நான் நினைத்துக்கொண்டேன்.

    “நான் கச்சேரிக்காக ஒரு மாசம் வெளியூருக்குப் போறேன், பூர்ணிமா. பாட்டு கிளாஸ் கிடையாது. நீ தினமும் பிராக்டீஸ் பண்ணணும். என்ன?”

    `பாடு! பாடு! இல்லாட்டி, சாரீரம் பேசாது!’ என்று காலை நான்கு மணிக்கே என்னை எழுப்பி, ஓயாமல் விரட்டும் அம்மாவைவிட எனக்கு மாமியைத்தான் பிடிக்கும்.

    ஒரு மாதம் மாமியைப் பார்க்க முடியாதா! அழுகை வந்தது.

    “அதெல்லாம் அவ பாடுவா. நான் பாத்துக்கறேன்,” என்று அம்மா அதிகாரமாகக் கூறியபோது என் அழுகை பலத்தது. இந்த அழுகை எனக்காக.

    சாயங்கால வேளைகளில் மற்ற குழந்தைகள் எல்லாரும் சிரித்து விளையாட, நான் மட்டும் மணிக்கணக்கில் பாடியாக வேண்டும். கைதிகளுக்குக் காவல் இருப்பதுபோல் அம்மா அருகிலேயே உட்கார்ந்திருப்பாள்.

    எப்போதாவது, அம்மா கடைகண்ணிகளுக்குப் போயிருக்கும்போது, `தப்பித்தோம்’ என்று நானும் விளையாட ஓடுவேன்.

    ஒரு முறை, என்னைக் கையும் களவுமாகப் பிடித்ததோடு நிற்கவில்லை அம்மா. என்னுடன் விளையாடிய மற்ற சிறுமிகளை மிரட்டினாள், “இனிமே நீங்க அவளோட விளையாடினா, தெரியும் சேதி!” என்று.

    ஒரு நீண்ட பிரசங்கம் தொடர்ந்தது. “இன்னும் கொஞ்ச வருஷத்திலே பூர்ணிமா பெரிய, பெரிய சபாக்களில கச்சேரி செய்யப்போறா, அவ டீச்சர்மாதிரி. அகல ஜரிகைபோட்ட பெரிய பட்டுப்புடைவை கட்டிக்கிட்டு, தலை நிறைய பூவோட! ஒவ்வொரு கச்சேரிக்கும் புதுசு புதுசா புடவை கட்டுவா. ஒங்களைப்போல விளையாட்டிலே நேரத்தை வீணடிச்சா, அதெல்லாம் கிடைக்குமா?”

    எனக்கும் அந்தக் கனவு பிடித்துத்தான் இருந்தது.

    அதையும் மீறி, எப்போதாவது விளையாடப் போனால், “எங்ககூட நீ விளையாடினா, ஒங்கம்மா எங்களைத்தான் திட்டுவாங்க. வேணாம்பா,” என்று என்னை ஒதுக்கிவிடுவார்கள்.

    அப்போதெல்லாம் எனக்கு அம்மாவின்மேல் ஆத்திரமாக இருக்கும். ஆனால், அது நிலைக்காது.

    அம்மாவின் முயற்சி இல்லாவிட்டால், பன்னிரண்டு வயதுக்குள் சினிமாவில் பின்னணி பாடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா?

    ஆரம்பத்தில் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.

    “என்னம்மா, இப்படி அழுத்தி, அழுத்திப் பாடறே? இது மேடைக் கச்சேரி இல்லே. பாட்டுன்னா என்னான்னே தெரியாதவங்களும் ரசிக்க வேணாமா? மேலாகப் பாடு,” என்று நான் கற்ற பாணியை மாற்றினார்கள் இசை அமைப்பாளர்கள்.

    ஜகதா மாமிக்கு இசையைப்பற்றித் தெரிந்த அளவு இவர்களுக்குத் தெரிந்திருக்குமா?

    அம்மாவிடம் என் சந்தேகத்தைத் தெரிவித்தேன்.

    “அவங்க சொல்றபடிதான் பாடிட்டுப் போயேன்!” என்று வழிகாட்டினாள். “யாருக்கு நிறைய பணம் கிடைச்சிருக்கு? யோசிச்சுப்பாரு!”

    ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என் குரலைப் பதிவு செய்தபோது, அம்மாவுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

    இப்போதெல்லாம் நான் ஜகதா மாமியிடம் பாட்டு கற்கப் போவதில்லை. தெரிந்தவரை போதும். மாமியின் வழியில் பாடினால், சினிமா வாய்ப்புப் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளூர இருந்தது.

    மாமிக்கே இப்போது கச்சேரிகள் குறைந்துவிட்டன. ரொம்ப இருமலாம்.

    சில வருடங்களுக்குப்பின், மாமியின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, மரியாதைக்காகப் பார்க்கப் போனேன்.

    “வாடி!” என்று வாயார வரவேற்றாள் மாமி. “ரொம்ப பெரிய மனுஷியாகிட்டேபோல! ரேடியோவிலும், டிவியிலும் எப்பவும் ஒன் குரல்தான்!”

    குரலில் பொறாமை இல்லை – என் சக பின்னணிப் பாடகர்களைப்போல. உண்மையான மகிழ்ச்சியும் பெருமையும் தொனித்தன.

    நான் சூள் கொட்டினேன்.

    “ஒங்கப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே?”

    “துபாய், மலேசியா, சிங்கப்பூர்னு மேடையில பாட கூட்டிட்டுப் போறாங்க, மாமி. எனக்குத் துணை போகணும்னு அப்பா வேலையை விட்டுட்டார். ஆனா..,” நிறுத்தினேன்.

    “ஒங்கம்மாவுக்குத்தான் நீ பிரபலமான பாடகியாகணும்னு ரொம்ப ஆசை”.

    மெள்ளக் கூறினேன். “அம்மா போய் அஞ்சு வருஷமாயிடுச்சு, மாமி”.

    “அடடா! சின்ன வயசுதானே அவங்களுக்கு! என்ன ஆச்சு?”

    “போயிட்டாங்க. அவ்வளவுதான். எப்படிச் செத்தா என்ன?” கடுமையாக வந்த என் குரல் மாமிக்கு மட்டுமல்ல, எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    தினமும் நான் குற்ற உணர்வால் வெந்துபோவது என்னுடன் இருக்கட்டும்.

    எனக்காகத்தானே அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்!

    நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வயது அப்போது.

    எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்க வழிசெய்வதாக அம்மாவிடம் ஆசைகாட்டிய ஒரு பாடலாசிரியர் முதலில் மரியாதையாகத்தான் நடந்துகொண்டானாம்.

    தனிமையில் அவனைப்பற்றி விளக்கிவிட்டு, “அவன் பக்கமே தலைவெச்சுக்கூடப் படுக்காதே, பூர்ணிமா!” என்று அழுதபடி, ஆணித்தரமாக அறிவு புகட்டிய அம்மா மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. கட்டிலின் கீழ் காலியான தூக்க மாத்திரைப் புட்டி.

    வெளியில் விஷயம் பரவுவதற்குள் அம்மாவின் இறுதிக்கடனை முடித்தார் அப்பா.

    அம்மா அழுததன் காரணம் பிறகுதான் புரிந்தது எனக்கு.

    அம்மா அவனுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். இறுதியில், கணவருக்குத் துரோகம் செய்துவிட்டோமே என்று குமைந்து, சாவை நாடியிருக்கிறாள்.

    ஒரு விம்மல் வெளிப்பட்டது என்னிடமிருந்து.

    “என்ன, பூர்ணிமா? நீ இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி?  இன்னிக்கு நீ பேரும் புகழுமா இருக்கிறதைப் பாத்து அம்மா எங்கேயிருந்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கப்போறாங்க!”

    மாமியின் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

    ஒவ்வொரு முறையும் அப்பாவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா பின்தங்கியதன் ரகசியம் புரிந்தது.

    `ஏம்பா அம்மாவும் நம்பகூட வீட்டுக்கு வரதில்ல?’ என்று அப்பாவைக் கேட்டபோதெல்லாம், `யாராவது கொண்டு விட்டுடுவாங்க,’ என்பார் அப்பா, அலட்சியமாக. அவர் என்று அம்மாவை மீறியிருக்கிறார்!

    பேச்சை மாற்ற, “மாமி. எனக்கும் ஒங்கமாதிரி அடிக்கடி இருமல் வருது,” என்று ஏதோ சொன்னேன்.

    “நான்தான் குடிச்சுச் சீரழிஞ்சு போனேன். நீயாவது ஒடம்பைப் பாத்துக்க, பூர்ணிமா. ஒங்கிட்ட இருக்கிறது அபூர்வமான வித்தை. சாமி குடுத்த வரம்,” என்று ஏதேதோ சொன்னார்கள் ஜகதா மாமி.

    எனக்கு ஒன்றுதான் புரிந்தது. அம்மாவை அழித்த இந்தப் பாட்டு எனக்கு வேண்டாம். இனி கோயில்களில்தான் பாடப்போகிறேன். இறைவன் கொடுத்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்யப்போகிறேன்.

    அதற்கு முன்னால், நான் செய்யவேண்டிய முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருக்கிறது.

    அம்மாவுக்கு அவன் செய்த கொடுமையை எனக்கே செய்ததாகக் கூறி, “மீ டூ” என்று, நாடறிய அவன் பெயரை நாறடிக்கப்போகிறேன்.

    Share
  • சார் போஸ்ட்

    சார் போஸ்ட்

    பாஸ்கர்

    அம்ருதாஞ்சன் கட்டடம், அந்தக் காலத்து வடிவமைப்பு. எப்போதும் லேசாக அந்தத் தைல வாசம் வரும். அதை நுகராதவர்கள் யாரும் இல்லை. விஷயம் வாசம் அல்ல. அந்த இடம். அது பலரது கனவுகளைத் தாங்கி கொண்டு நிற்கும் வாசல்.

    எழுபதுகளில் மஞ்சள் தெருவிளக்குகள்தான். ஒவ்வொரு நாள் இரவும் சுமார் ஏழரை மணியளைவில் சுமார் அங்கு முப்பது பேர் கூடி நிற்பார்கள். பொதுக்கூட்டம் ஏதும் இல்லை. ஆர் எம் எஸ் தபால் வண்டிக்காக அங்கு நிற்கும் மக்கள் – யுவதிகளும் உண்டு.

    வேலை தேடும் என்னைப் போன்ற ஆட்களும் உண்டு. இதில் பிரசித்தம் என்னவெனில் அந்த வண்டியில் தபால் சேர்த்தால் அடுத்த நாள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை.

    அங்கேயே தபால் தலை உண்டு. பதிவு தபால் உண்டு. ஒரு குட்டி தபால் அலுவலகம். சுமார் பத்து நிமிடம் தான் நிற்கும்.

    நான், மௌலி மற்றும் நண்பர்கள் சிலர் அங்குச் செல்வது பத்திரிகைகளுக்குத் தபால் அனுப்ப.. வேலை எல்லாம் அப்புறம். என்னைப் போல, மெயிலுக்கும் இந்துவுக்கும் எழுதும் முதியவர் குழு ஒன்றும் உண்டு.

    நான் கத்துக்குட்டி. அவர்கள் விரல் நுனியில் உலகை வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட நாங்கள் அரை நிஜார்.

    அது அஜந்தா தாண்டி லஸ் பக்கம் வரும் அழகே தனி. ரௌண்ட்டானாவில் அது திரும்பும்போது எங்கள் குதூகலம் சொல்லி மாளாது.

    இப்படி தினம் தினம் எதாவது எழுதி அது பிரசுரம் ஆக வேண்டும் என்ற வெறி உச்சத்தை அடைய, அங்குச் செல்வது என்பது ஒரு தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிட்டது.

    பழக்கம் சட்டென உடையாது. ஆனால் வண்டி அங்கு வரும் வசதியை தபால் துறை ஒரு நாள் விலக்கிக்கொண்டது. எல்லோருக்கும் அது பெரும் துக்கம். அந்த விஷயத்தைக் கூட, சிலர் எழுதினார்கள். ஆனால் எதுவும் அரசின் முன் எடுபடவில்லை.

    நேற்று அதே இடத்தில ஒரு தபாலைப் பெட்டியில் போடும் போது ஏற்பட்ட சப்தம் சட்டென என்னை முப்பது வருடங்கள் பின்தள்ளிப் போட்டது. இந்தச் சப்தம், என்னை அந்நாட்களில் வெகுவாய் தாக்கிய ஒன்று. தபாலைப் பெட்டி முழுங்கினால் வரும் ஒரு நிறைவை பின்னாளில் எந்த மின்னஞ்சலும் தரவில்லை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(346)

    குறளின் கதிர்களாய்…(346)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(346)

    மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
    பழித்த தொழித்து விடின்.

    – திருக்குறள் – 280 (கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்...

    உயர்ந்தோர் வெறுக்கும்
    உலகம் பழிக்கும்
    தீயொழுக்கத்தை
    மனத்தால்
    ஒதுக்கிவிட்டால்,
    தவத்தோர்க்குத்
    தாடி வளர்த்தல்
    மொட்டை போடுதல் போன்ற
    புறக்கோலம் எதுவும்
    தேவையில்லை…!

    குறும்பாவில்...

    உலகும் உயர்ந்தோரும் பழிக்கும்
    தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் தவத்தோர்க்கு மொட்டை
    தாடி போன்ற புறவேடங்கள் வேண்டாம்…!

    மரபுக் கவிதையில்...

    உலகில் வாழும் மாந்தர்களும்
    உத்தம மான சான்றோரும்
    விலக்கிப் பழிக்கும் தீயொழுக்கம்
    விட்டு விட்ட தவத்தோர்க்குப்
    பலவாய்ப் புறத்தில் வேடமிட
    பலநாள் முடியை வளர்த்தேதான்
    தலையில் சடையும் தாடிவளர்த்தும்
    தவிர்த்து மொட்டையும் வேண்டாமே…!

    லிமரைக்கூ..

    நடப்பில் நல்லொழுக்கப் பாடம்
    பேணும் தூய துறவோர்க்கு வேண்டாம்,
    மழித்து வளர்க்கும் புறத்து வேடம்…!

    கிராமிய பாணியில்...

    வேணும்வேணும் நல்லொழுக்கம்,
    வேண்டவே வேண்டாம்
    வெறுத்து ஒதுக்குற தீயொழுக்கம்..

    ஒலகத்து மக்களும்
    உத்தமமான பெரியவங்களும்
    வேண்டாம்னு பழிக்கிற
    கெட்ட ஒழுக்கத்த மனசால
    விட்டுவிட்ட சாமியாருங்க
    வெளிவேசமா
    மொட்டயும் போடவேண்டாம்,
    முழு நீளமா
    சடையும் வளக்கவேண்டாம்..

    அதால
    வேணும்வேணும் நல்லொழுக்கம்,
    வேண்டவே வேண்டாம்
    வெறுத்து ஒதுக்குற தீயொழுக்கம்…!

    Share
  • உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்

    உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்

    தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களைப் பற்றிய ‘உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்’ என்ற புகழ் பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விதைகள்

    விதைகள்

    மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த இந்த விதைகள் உங்களுக்கு வேண்டுமா? இந்தப் பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலிபோர்னியக் கூந்தல் பனையை நோக்கி ஒரு பயணம்

    கலிபோர்னியக் கூந்தல் பனையை நோக்கி ஒரு பயணம்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பாம் ஸ்ப்ரிங்ஸ் (Palm Springs) என்ற பகுதியில் உள்ள ஆண்ட்ரியாஸ் கேன்யான் (Andreas Canyon), இந்தியன் கேன்யான் (Indian Canyon) ஆகியவை புகழ் பெற்றவை. இங்கே பழைமை வாய்ந்த பனை மரங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் பனைமர உயரத்திற்குப் பனையோலைகள் தொங்குகின்றன (கலிபோர்னியக் கூந்தல் பனை?).

    இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளின் இரு புறத்தையும் நாம் பார்த்துக்கொண்டே போகலாம். வழியெங்கும் உள்ள மலைகள், மரங்கள், காற்றாலைகள், சாலை அமைப்பு, கட்டமைப்பு… எனப் பலவற்றையும் நாம் கண்டுகளிக்கலாம். அமெரிக்காவின் விரிந்து பரந்த நிலப்பரப்பையும் ஒவ்வொரு நிலப்பரப்பின் தன்மையையும் நாம் பார்க்க முடியும். தமிழ்ப்பெண் ஒருவர் மகிழுந்தை ஓட்டிச் செல்ல, தமிழில் பேசியபடி அனைவரும் பயணிப்பது, கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை பார்க்காத அமெரிக்காவை, இதில் நீங்கள் பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 62

    பழகத் தெரிய வேணும் – 62

    நிர்மலா ராகவன்

    தற்கொலை வேண்டாமே!

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றி பெறாதவர்கள் கூறுவது: “நாங்கள் முயன்றது கோழைத்தனத்தால் அல்ல!”

    பின் ஏன் அப்படி ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள்?

    தற்காலிகமான ஒரு பிரச்னையைத் தாள முடியாது, நிரந்தரமான தீர்வை நாடுகிறார்கள்.

    கதை

    கிட்டு என்ற இளைஞன் ஒரு நோயால் அவதிப்பட்டு, அதன் உக்கிரம் தாங்க முடியாது, தன் உயிரைத் தானே போக்கிக்கொண்டான்.

    தற்கொலை முயற்சிக்கு இறங்குமுன், “இப்படிக் கஷ்டப்படறதுக்கு ஒரு வழியா செத்துடலாம்னு இருக்கு!” என்று மரணத்தைப் பற்றியே பேசினான்.

    அவனுடைய செய்கையின் விளைவு, பிறரை எப்படிப் பாதிக்கும் என்று அவன் யோசிக்கவில்லை.

    மனைவி, ஒரே வயதான குழந்தை, தாய் – எல்லாரையும் தவிக்கவிட்டு, தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த ஒருவனின் சுயநலமான காரியம் அது.

    அதுவே அபாயச் சங்கு.

    ஆனால், பிறர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. `ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறான்!’ என்று அலட்சியப்படுத்தினார்கள்.

    இன்னொரு மலேசியக் கதை (படித்தது)

    பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டபின், அவர்களது ஐந்து வயது மகன், பாட்டியுடன் வளர்ந்தான்.

    அவள் அன்புடன் ஊட்டி வளர்த்ததில் உடல் பருமனாகிக்கொண்டே போயிற்று. பெற்றோரின் உண்மை நிலை புரியாத சோகம் வேறு.

    இடைநிலைப் பள்ளியில் படிக்கையில், `குண்டு!’ என்ற கேலிக்கு ஆளானான். உணர்வு ரீதியில் பலவீனமான அவனைக் கொடுமைப்படுத்தியவர்களுடன் சேர விரும்பாது, பதினான்கு வயதிலேயே தனித்துப் போனான்.

    பாட்டியின் மறைவுக்குப் பின், `யாருமே எனக்கு ஆதரவாக இல்லை!’ என்ற தன்னிரக்கம் எழுந்தது.

    பேச்சுத் துணைக்கும் எவருமில்லை, வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. இனி எதற்கு உயிர்வாழ வேண்டும் என்று தோன்றிப் போக, தற்கொலை செய்துகொள்ள என்னென்ன முறைகள் இருக்கின்றன என்று ஆராய ஆரம்பித்தான்.

    “வாழ்க்கை வெறுத்துவிட்டது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்,” என்று பேச்சுவாக்கில் தாயிடம் கூறினான்.

    “செய்துகொள்,” என்றுவிட்டாள் அவனைப் பெற்றவள். தற்கொலையைப் பற்றிய சிந்தனை அவளுக்கும் இருந்தது.

    அவனுக்கிருந்த ஒரே துணை தொலைக்காட்சிதான். தாய்மொழி அல்லாத ஒரு வேற்று மொழியில் அமைந்த படங்களைப் பார்த்தபோது, தானும் அந்த நாட்டுக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வயது ஏற ஏற, அது வெறியாகவே மாறியது. ஆனால், எப்படித் தன் கனவை நனவாக்குவது என்று புரியாது குழப்பம் ஏற்பட்டது.

    மொழியைக் கற்கத் தேவையான பெரிய தொகை எங்கிருந்து கிடைக்கும்?

    இயலாமையால் எழுந்த வருத்தத்தில், மீண்டும் தற்கொலையைப் பற்றிய எண்ணம் எழுந்தது.

    அவன் ஏதோ சோகத்தில் ஆழ்ந்து, சரியாகச் சாப்பிடாது, எதிலும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்ட பள்ளி ஆசிரியை அங்கிருந்த கவுன்சிலரிடம் அனுப்பினாள்.

    அவளிடமும் தனது தற்கொலை எண்ணத்தைப் பற்றிக் கூற, `உடனடியாக நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், உங்கள் மகன் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வான்!’ என்று அவனுடைய பெற்றோரை வரவழைத்துக் கூறினாள்.

    முதலில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருந்துகள் சாப்பிட்டான். சிறுவர்களுக்கான உளவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    “உனக்கு ஜப்பான் நாட்டுக்குத்தானே போகவேண்டும்? முதலில் இங்கிருக்கும் அந்நாட்டு உணவகம் ஒன்றில் வேலை தேடிக்கொள். மொழியைக் கற்றுக்கொள்வது முதல் படி,” என்று ஊக்கினாள் சிகிச்சையாளர்.

    சில வருடங்களிலேயே அம்மொழியில் அவனுக்கிருந்த தேர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, அங்கு போய்ப் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஒருவர். உபகாரச் சம்பளமும் கிடைத்தது.

    “தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், பிறரது உதவியை நாட வேண்டும். அவர்களது வழிகாட்டலில் வாழ்வில் மீண்டும் பிடிப்பு ஏற்படும். முதலில் உங்கள் உணர்ச்சிகளையும், பிறகு மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!

    “யாரிடம்தான் குறைகளில்லை? நமக்கும் ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியாதா, என்ன! நம்மால் என்னவெல்லாம் முடியாது என்று எண்ணி எண்ணிக் குமைவதைவிட, நாம் இருக்கிறபடியே ஏற்பதுதான் புத்திசாலித்தனம்,” என்று பலவாறாகப் பிறருக்கு அறிவுரை வழங்குகிறான் இப்போது.

    இருக்கும் நிலை பிடிக்காவிட்டால், மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை எப்படி மாற்றிக்கொள்வது என்று புரியாதபோதுதான் தற்கொலை எண்ணமே வருகிறது.

    கதை

    பதினைந்து வயதுக்குள், `மென்ஸா (MENSA) என்ற அகில உலகச் சங்கத்தில் இணைய முடிந்தது சுனந்தாவால். `மகா புத்திசாலி’ என்று வீட்டிலும் பள்ளியிலும் கொண்டாடப்பட்டாள்.

    எந்தக் காரியத்தைக் கொடுத்தாலும், கண்ணும் கருத்துமாகச் செய்வாள் என்பதால் ஆசிரியைகள் அனைவருக்கும் செல்லப்பெண். ஒவ்வொருவரும் தாம் செய்யவேண்டியவற்றுக்கு, சுனந்தாவின் உதவியை நாடினார்கள். அவளுடைய செல்வாக்கு கூடியது. அதற்காக அவள் கர்வப்படவில்லை. எல்லாரிடமும் அன்பு செலுத்தினாள்.

    ஈராண்டுகள் கழித்து, அரசாங்கப் பரீட்சை வந்தது.

    “உனக்கென்னம்மா! படிக்காமலேயே தேர்ச்சி பெற்றுவிடுவாய்!” என்று உடன் படித்த மாணவிகள் வயிற்றெரிச்சல் பட்டார்கள்.

    முடிவு வந்தபோது, எல்லாரும் எதிர்பார்த்தபடி உயர்ந்ததாக இருக்கவில்லை.

    “எல்லாருடைய வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டாயே! இப்போது பார்!” என்று கண்டபடி திட்டினார் தந்தை.

    புகழ்ச்சியையும் பாராட்டையுமே அனுபவித்திருந்தவளுக்கு இகழ்ச்சியைப் பொறுக்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது.

    ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு, கழிப்பறைக்குப் போனவளின் மனம் மாறியது. வெளியில் வந்து கதறினாள்.

    “இது உலகின் முடிவு இல்லை. இன்னும் சில வருடங்கள் போனால், இதற்கா அவ்வளவு வருத்தப்பட்டோம் என்று தோன்றிவிடும்,” என்று தாய் நம்பிக்கை அளித்தாள்.

    மன உறுதி ஏற்பட, சுனந்தா சமாதானம் அடைந்தாள்.

    ஒவ்வொரு நாளையும் சற்று நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் கழிக்கப் பழகிக்கொண்டாள். உயிர் வாழ்வதற்குத் துணிச்சல் வேண்டும் என்று புரிந்தது.

    சில வருடங்களிலேயே பெரும் புகழ் பெற்று, பிறரது மதிப்புக்கும் ஆளானாள். இப்போது, தந்தை அவளைப் பற்றிப் பெருமையாக நண்பர்களிடம் பேசிக்கொண்டார்!

    அவசரப்பட்டு, உயிரை மாய்த்துக்கொண்டிருந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக, பிறருக்கு உபயோகமாக அமைந்திருக்குமா?

    கதை

    சுப்புவுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவனுடைய தாயும், அவளுடைய குழந்தைகளும் நிராதரவாகப் போன துக்கம் பாட்டிக்கு.

    “எனக்கு இன்னொரு தோசை!” என்று விரும்பிக் கேட்ட சுப்புவைத் திட்டினாள் “அதான் அப்பாவை முழுங்கிட்டியே! தோசையை வேற முழுங்கணுமா?”

    அதன்பின், பையன் காணாமல் போனான். சில தினங்கள் கழித்து, அவனுடைய சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது.

    பதின்ம வயதில், எந்த நிகழ்வுக்கும் அளவுக்கு மீறிய எதிர்வினை உண்டாகும். இது புரிந்து, பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.

    கணவரை இழந்த சோகத்துடன், மகனையும் பறிகொடுத்த துக்கமும் சேர்ந்துகொண்டது, சுப்புவின் தாய்க்கு.

    சில வருடங்களுக்கு முன், மலேசிய தினசரியில் தன் பரீட்சை முடிவைப் பார்த்துவிட்டு, தான் தேறவில்லையே என்ற வருத்தத்துடன், செடிகளுக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து, தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாள் தோட்டக்காரர் ஒருவரின் மகள்.

    இதில் சோகம் என்னவென்றால், அடுத்த நாளே, `பரீட்சை முடிவில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது’ என்ற அறிக்கையுடன், அப்பெண் தேர்ச்சி பெற்றிருந்த செய்தி வெளிவந்தது.

    ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இந்த உலகிற்கு வந்திருக்கிறோம். அது என்னவென்று புரியுமுன் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது கொடுமை.

    இளைஞன் (காதலியிடம்): நான் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.

    காதலி புத்திசாலி. அவள் கூறியது: முட்டாள்! நீ செத்துவைத்து, என்னைக் குற்ற உணர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தி என்ன பயன்? எனக்காக வாழ்வேன் என்று சொல்!

    Share
  • குப்பைமேனியை உண்ணும் பூனைகள்

    குப்பைமேனியை உண்ணும் பூனைகள்

    தன் உடலில் உள்ள நச்சுகளை நீக்க, குப்பைமேனி இலைகளையும் வேர்களையும் பூனை சாப்பிடும். இதனால் குப்பைமேனிக்குப் பூனைவணங்கி என்ற பெயரும் உண்டு. நம் தெருவில் ஒரு வீட்டில் குப்பைமேனிச் செடிகளைப் பிடுங்கி வீதியில் தூக்கிப் போட, பூனைகள் அவற்றை ஆவலுடன் கடித்து உண்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாய்

    பாய்

    பாஸ்கர் 

    எண்பதுகளில் மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் விசாரணை பகுதியில் ஒரு முஸ்லிம் பாய் இருப்பார். கெட்டிக்கார தாத்தா. எல்லா தகவலும் விரல் நுனியில். பைன்ஆர்ட்ஸ் பற்றி கேள்வியா தோ பதில் தயார். போன செமஸ்டருக்கும் நாலாவதுக்கும் ஏதேனும் கட்டணம் மாறுமா எனக் கேட்டால் சட்டெனச் சொல்வார்..

    பொறுமையின் சிகரம். கோபமே வராது. கல்லூரி கட் அடித்து விட்டு பஸ் பாசில் அவரைப் பார்க்கச் செல்வேன். எனக்கு அரட்டை. மற்றவர்க்குப் படிப்பு. பிரிட்டிஷ்காரன் கட்டடத்தில் நடந்து சென்றால் கொஞ்சம் கர்வம் கொப்பளிக்கும். அவ்வளவே. அது படிப்பால் உண்டாகும் கர்வம் இல்லை.

    அவரைப் பற்றி, நகைச்சுவை ஒன்று சொல்வார்கள்.

    சார் நான் என் கைக்குட்டையை சென்டேனரி ஹால்பக்கம் காவாவில் போட்டுவிட்டேன். கொஞ்சம் ஹெல்ப் பாய்.

    எத்தனை மணிக்கு சார்.

    ரெண்டு மணிக்கு பாய்.

    அப்ப ஒன்னு செய்யுங்க.

    ரெண்டு எட்டுக்கு ஸ்டேட் பேங்க் பக்கம் போய் நின்றால் உம்ம கைக்குட்டை அங்கு கிடைக்கும். அதன் டிராவல் டைம் ஏழு நிமிஷம். அடைப்பு இருப்பதால் ஒரு நிமிஷம் லீட் டைம். நேராகச் சென்றால் சரியாகக் கிடைக்கும். – அதுதான் பாய்.

    பாய் பற்றி இன்னொரு விஷயம். அவர் பணிக் காலத்தின் இறுதி வரை அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தது இல்லை. ஞானமும் படிப்பும் கல்வியும் புத்தகத்தில் தான் இருக்கிறது என நினைப்பவர்கள் முதலில் அதனைத் தள்ளி வையுங்கள். புத்தகம் விரலைப் பிடித்துக்கொள்ள. நடக்க வேண்டியவர்கள் நாமே.

    Share
  • ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

    பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

    ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கிய, பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள்.

    ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களிடமிருந்து உங்கள் பிரத்யேக பலன்களைப் பெற, வேலை, தொழில், காதல், திருமணம், மகப்பேறு, ஆரோக்கியம் போன்றவை தொடர்பான துல்லியமான ஜோதிட ஆலோசனைகளைப் பெற, nallayogam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். இது கட்டணச் சேவை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சித்திரைப் பெண்ணே வருக

    சித்திரைப் பெண்ணே வருக

    சரஸ்வதி ராசேந்திரன்

    சித்திரைப்  பெண்ணே  வருக
    சிறப்பெல்லாம் அள்ளித் தருக
    சாதகம்   ஆக்கவே    வருக
    சாற்றிட   நற்செயல்    புரிக

    தீநோய்   தீர்த்திட   வருக
    திருத்தமாய்  நல்வழி   புரிக
    உறவுகள்   சிறந்திட  வழிசெய்க
    உள்ளம்  மகிழ்வுற  அருள்புரிக

    விளைபயிர்  காத்திட மழைதருக
    விலைபொருள் குறைய அருள்புரிக
    நசித்திட வேண்டும் வீணர்களை
    இசைத்திட வேண்டும் நல்வாழ்க்கை

    வாட்டிட வேண்டும் வறுமையினை
    வதைத்திட  வேண்டும் நோயினையே
    காத்திட  வேண்டும்  குழந்தைகளை
    கற்றிடப்  பள்ளிகள் திறந்திடவேண்டும்

    சித்திரப்    பெண்ணே    வருக
    சீக்கிரம்   சிறப்பை  அள்ளித்தருக
    ஊர்நலம்   கூடிட  வேண்டும்
    உறவுகள்  பலப்பட   வேண்டும்

    Share
  • சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

    சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, 
    ஆஸ்திரேலியா

    சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதாதைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதாஎன்று ஒரு போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுஅரசி யல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டுஅக்கட்சிகள் சார்பாக அறிஞ ர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்சையினை உருவாக்கி ஆட்சிகள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பலரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவுமேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் – வீண் தர்க்கமும் குதர்க்கமும் பேசி அங்கும் ஒரு பஞ்சாயத்தை அரங்கேற்றுவதும் பொருத்தமுடையதா சிந்தித்தால் தெளிவு வரும் அல்லவா?

    சித்திரை மாதத்தின் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள் என்பதற்கு சான்றுகள் பல இருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது. வானியலையும்பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டே சித்திரைத்திருநாள் புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது எனலாம். பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு எடுக்கும் காலம் பனிரெண்டு  மாதங்களாகும்.சூரியன் பூமத்திய ரேகையில் பிரகாசிக்கும் மாதம் ஆண்டினது தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அந்த ராசியைவிட்டு வெளி யேறும் வரையுள்ள காலமானது சித்திரை மாதமேயாகும்.

    அகத்தியரின் பன்னீராயிரத்தில்‘ பங்குனி மாதத்தை கடை மாதம் என்று காட்டப்படுகிறது. சங்க இலக்கியம் தமிழர்தம் பொக்கிஷ மாகும். அந்த பொக்கிஷத்திலேயே சித்திரைத் திருநாள் – புத்தாண்டு என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். நெடுநெல் வாடையில் 160-161 வரிகளில் “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக” என்று நக்கீரர் பகுருகின்றார். இப்பாடலில் வரும் ஆடுதலைக்கு‘ மேஷ ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் வாயிலாக முனைவர் மா. இராசமாணிக்கனார் தெளிவு படுத்துகிறார். “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்று மலைபடுகடாம் என்னும் சங்கப்பாட்டு காட்டுகிறது. அதாவது – பங்குனி மாதத்தின் கடைசி சித்திரை மாதத்தின் முதல் நாளிலேதான் வேங்கை மரங்கள் வழக்கமாகப் பூக்கும் என்பது இதன் பொருளாகும். அதுமட்டுமல்ல கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என பழமொழி நானூறு சுட்டிக் காட்டுவதால் – இளவேனில் காலத்தின் துவக்கமானாது சித்திரையே என்பதும் அதுவே தலைநாளாக மிளிர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?.

    சீவகசிந்தாமணியிலும் கோடை காலமே முதலாவது பருவம் என்று சுட்டுவதும் நோக்கத்தக்கதே. மேலும் புஷ்பவிதி‘ என்னும் நூலிலே “சித்திரை முதல் மாதமே” என்று கமலை ஞானப் பிரகாசரும் விளக்கம் அளித்துள்ளமையும் கருத்திருத்த வேண்டியதே.

    சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் புத்தாண்டைக் கணக்கிடலாம். அப்படித்தான் கணக்கிடப்பட்டும் வருகிறது அதனால்தான் சித்திரைத் திருநாள் புத்தாண்டாய் மலர்கிறது. தைமாதம் என்பது மகர ராசியில் வருகிறது. மகர ராசி என்பது வானிலைப்படி பஞ்சாங்கப்படி பத்தாவது ராசியாகும். பத்தாவது ராசியில் வரும் தை எப்படி புத்தாண்டாய் அமைய முடியும்மேஷ ராசிதான் முதலாவது ராசி என்பதற்கே ஆதாரங்கள் இருப்பதாலும் அதனையே இலக்கியச் சான்றுகள் உறுதிப் படுத்துவதாலும்மேஷத்தில் சூரியன் நுழையும் காலமாக சித்திரையே பொருந்தி வருவதாலும்புத்தாண்டினைச் சித்திரையில் கொண்டாடி வருவதே வரன் முறையாக இருக்கிறது என்பது சித்திரைத் திருநாள் கொண்டாடி மகிழும் வேளை யாவரும் மனமிருத்தல் நல்லது என்று கருகிறேன்.

    இளவேனில் காலத்தில்த்தான் சித்திரையே ஆரம்பிக்கின்றது. இதனையே வசந்தகாலம் என்று அழைக்கின்றனர். வசந்த காலத்தில்த் தான் மாமரங்களில்  மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக் குலுங்கு கின்றன. வேப்பமரங்களிலும் வேப்பம் பூக்களும் பூத்துக் குலுங்கு கின்றன.மாமரங்கள் பூத்துக் குலுங்கினால் நல்ல சுவையான மாங்கனிகள் கிடைக்கும். சுவைத்தால் இன்பமே பெருகும். வேம்பின் குணமோ கசப்பு. வேம்பம் பூவின் நிலையும் கசப்புத்தான். கசப்பான வேம்பும்இனிப்பான மாவும் ஜொலிக்கும் காலம்தான் சித்திரைத் திருநாள். அதாவது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை என்பதை இயற்கையே உணர்த்தி பாடம் நடத்தும் காலம்தான் புத்தாண்டாய் வருவிருக்கும் சித்தைரைத் திருநாள் என்பதை மனமிருத்தல் அவசியமானது என்று கருதுகிறேன்.

    சித்திரை என்று நினைத்தாலே பெரும் எதிர்பார்ப்புகள் வந்தே நிற்கும். பங்குனிபோய் சித்திரை வந்தால் பத்திரிகை வந்திடும் கல்யாணப் பத்திரிகை வந்திடும்” என்று ஒரு பாட்டும் பிரபல்யமாய் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம். அப்படி என்றால் – சித்திரை என்பது வாழ்வில் நல் முத்திரை பதிக்க வரப் போகிறது என்பதுதானே அர்த்தம்! சித்திரைத் திருநாள் தமிழர்தம் உள்ளங்களில் உவகையினை ஏற்படுத்தும் நாளாகவே அமைகிறது எனலாம்.

    புத்தாடை வாங்குவது! விதம்விதமாய் பலகாரங்கள் செய்வது! பட்டாசு மத்தாப்பு என்று வாங்கிக் குவிப்பது! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது! வீட்டை அழகு படுத்துவது! ஒரே கல கலப்புத்தான்!

    சித்திரைப் புதுவருடம் என்றவுடன் மருத்துநீர் முனவந்து நிற்கும்! மருத்துநீர் என்பது மருத்துவத்தின் ஒரு பங்களிப்பே எனலாம். தமிழர்கள் எதைச் செய்தாலும் அதற்குள் மருத்துவத்தையும் இணைத்தே விடுவார்கள். இது தமிழர்களின் அத்தனை கொண்டாங்களிலும் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

    தாழம்பூதாமரைப்பூமாதுளம்பூதுளசிவிஷ்ணுகிராந்திசீதேவியார் செங்கழுநீர்வில்வம்அறுகுபீர்க்குபால்கோசலம், கோமயம்கோரோசனைமஞ்சள்திற்பலிசுக்குஇவற்றை நீரிலை கலந்து காய்ச்சி எடுப்பதுதான் மருத்து நீர்‘ என்னும் சித்திரைத் திருநாள் விஷேட மருந்துவம் ஆகும். இந்த மருத்து நீரை அனைவரும் தலையில் வைத்து பின்னர் நீராடுதல் என்பது அவசியமானதாகச் சொல்லப்பட்டு பெரும்பாலும் அனைவருமே செய்து வருகின்றனர். கொண்டாட்டம் என்றாலும் அதிலும் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்திருப்பது கவனதுக்குரியது அல்லவா?

    மருத்துநீர் வைத்து நீராடிய பின்னர் வாங்கிய புத்தாடைகளை அணிவது மரபாக இருந்து வருகிறது. புத்தாடை அணிந்து கோவில் சென்று தரிசனம் செய்து பெரியவரிடம் ஆசி பெற்று பலவகையான பட்சணங்களை உண்டு மகிழ்வதும் வழமையாக இருக்கிறது.

    பெரியவர்களிடம் ஆசிபெறுவதுகைவிசேசம் வாங்குவது சித்திரைப் புத்தாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெரியவர்களின் வாழ்த்து என்றுமே துணைநிற்கும் என்பதும் அவர்களிடம் பெறும் கைவிசிசேசம் அந்த ஆண்டு முழுவதலும் இலட்சுமி கடாட்சமாய் ஜொலிக்கும் என்பதும் மனத்தில் பதியும் அசையாத நம்பிக்கை எனலாம்.

    கோவில்களில் திருவிழாக்கள் இக்காலத்தில் சிறப்பாக இடம் பெறும். பெரும்பாலும் அனைவருமே கோவில் வழிபாட்டை தவறாமல் பயபக்தியுடன் செய்திடத் தவறவே மாட்டார்கள்.

    கலைவிழாக்களுக்குக் குறைவிருக்காது. விளையாட்டு நிகழ்சிகளும் நடை பெறும். கிழகிலங்கைப் பகுதிகளில் ஊஞ்சல் கட்டி அதில் சிறியவர் முதல் பெரியவர்வரை அமர்ந்து ஆடிப்பாடி மகிழ்வது சித்திரைத் திருநாளில் பெரிய தொரு விசேசமாய் நடந்து கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இல்லை என்றே சொல்லாலாம். கிழக்கிலங்கையில் சில பகுதிகளில் புத்தாடை வாங்கினால் முதலில் அதனை வீட்டிலிருக்கும் தென்னைக்கு கட்டி அதன் பின்னே அவர்கள் தாங்கள் கட்டிக் கொள்ளும் வழமையும் இருந்து வருகிறது. ஆனால் இம்முறை யாழ்ப்பாணப்பாணப்பகுதில் இல்லை எனலாம்.

    அச்சு முறுக்குசீனிப்பணியாராம்பயத்தம் பணியாரம்கிழக்கிலங்கையில் சித்திரையில் அதிகமாக எல்லா வீடுகளிலுமே செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் இவை எல்லாம் செய்தாலும் அவர்கள் தங்களுக்கென்று சிறப்பான பலவற்றையும் செய்து பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.

    உறவுகள் ஒன்று சேர்வதுஉணவுகளில் அறுசுவை சேர்ப்பதுபக்கத்து வீட்டாருக்குப் பகிர்ந்து மகிழ்வதுவறுமையில் இருப்பார்க்கு இயன்றவற்றைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விப்பதுஇயன்றவரை தான தர்மம் செய்வது சித்திரைப் புத்தாண்டில் இடம்பெறும் முக்கியமான பண்பாடு எனலாம்.

    இலங்கையில் சித்திரைப் புத்தாண்டினை சிங்கள பெளத்தர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதும் அரசாங்க பொதுவிடுமுறை தினமாக இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தமிழர்கள் பலவித பலகாரங்கள் செய்வார்கள். ஆனால் சிங்கள பெளத்தர்கள் பாற்சோறு வைத்துப் பரிமாறி மகிழ்வார்கள். அவர்களும் பெரியவர்களிடம் வெற்றிலையில் கைவிசேசம் பெற்று ஆசியும் பெறுவார்கள். ஆளும் இனமும் ஆளப்படும் இனமும் கொண்டாடி மகிழும் கொண்டாட்டமாய் சித்திரைப் புத்தாண்டு இலங்கையில் விளங்குவதும் முக்கியத்துவம் மிக்கதாய் தென்படுகிறது அல்லாவா!

    இந்தியாவில் அடங்கியிருந்த கொரனா மீண்டும் தலைவிரித்து நிற்கிறது. அங்கும் சித்திரையைக் கொண்டாட விரும்பினாலும் நிலமை சீரடையுமா என்பது கேள்வியாய் எழுந்து நிற்கிறது! சிங்கப்பூர், மலேசியா தமிழர்களும் சித்திரைத் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.ஆனால் அங்கும் இன்னும் சீனாவின் சீதனம் சிக்கலாய் நிற்கிறது!

    புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் சித்திரையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்த வண்ணமே இருக்கிறார்கள். ஆனால் சித்திரையோ பக்கத்தில் வந்து நிற்கிறது!

    கொரனா என்னும் அரக்கன் தனது கோரப்பிடியை விட்டபாடில்லை. கொண்டாட்டங்கள் அனைத்துமே பெருந் திண்டாட்டமாய் ஆகிவிட்டது. இதில் சித்திரை வந்தால் என்னவராவிட்டால்த்தான் என்னஎன்னும் அளவுக்கு மக்கள் மனமெல்லாம் பயமென்னும் இருளே செறிந்து காணப்படுகிறது. என்றாலும் சித்திரை என்றவுடன் நித்திரையே பறக்கிறது! எப்படியும் கொண்டாடி மகிழ வேண்டும் என்னும் ஆவலை மட்டும் அடக்கிவிடவே முடியவில்லை. கொண்டாடுவோம்! ஆனால் அடக்கமாய் ஆன்மீகமாய் கொண்டாடி அகநிறைவினை அடைவோம்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

    சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருத்தொண்டர்  புராணம்

    10. ஏனாதி நாதர்புராணம்

    வரலாறு

    அடுத்து ‘ஏனாதி நாதர்’   என்று போற்றப்பெற்ற சிவனடியார்  வரலாற்றைச்  சேக்கிழார்  எழுதிய  பாடல்கள் வழியே காண்போம். குளிர்ச்சி மிக்க  வெண்கொற்றக்  குடையால் உலகிற்கே  தண்ணளி வழங்கிய  வளவன் ஆளும் சோழ நாட்டில் இயற்கை அரண் கொண்ட வயல்கள் சூழ்ந்த   மூதூர் எயினனூர் ஆகும். அவ்வூரில் வாழ்ந்த ஏனாதி நாதர் என்னும் அடியாரின் வரலாறு பெரிய புராணத்தின் பத்தாம் பகுதியாகும்.  முதலில் அடியாரை ஊரைச் சேக்கிழார்  அறிமுகம் செய்கிறார்.

    பாடல்

    வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலிற்
    றாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையதாய்
    வாழக் குடிதழைத்து மன்னியவப் பொற்பதியில்
    ஈழக் குலச் சான்றா ரேனாதி நாதனார்.

    பொருள்

    குளிர்ச்சி பொருந்திய வயல்களில் நாணற்கரும்பினோடு மென்கரும்பும் தாழும்படி கதிர்ச்சாலிதான் ஓங்கிவளரும் தன்மையுடையதாக (அதனால்) வாழ்வு பெறும்படி பெருங்குடிகள் தழைத்து நிலைபெற்ற அந்த அழகிய நகரிலே ஈழக்குலச்சான்றார் மரபிலே வந்தவர் ஏனாதிநாதனார் என்ற பெரியார்.

    விளக்கம்

    வேழக்கரும்பு – மென்கரும்பு – கரும்புவகைகள். வேழக்கரும்பு – நாணற்கரும்பு என்று வழங்குவர். இவை கடினமான தண்டுடையனவாம். நரி முதலிய பிராணிகள் நாசம் செய்யக்கூடாதனவாகி நாணல் போன்ற சிறிய தண்டுடையன. இவற்றின் கடினத்தன்மையைக் “கருஞ்சகட மிளகவளர் கரும்பு” என்றருளினர் ஆளுடைய பிள்ளையார்.

    மென்கரும்பு – மெல்லிய கரும்புவகை. இவற்றின் மேல்பாகம் இலகுவில் உடைந்து சாறுதரக்கூடியன; இவை சாறுமிகவுடையன; இவற்றைச் சாறுபிழிந்து பயன்படுத்துதலோடு மக்கள் நேரே பல்லினாற் கடித்தும் உண்டு சுவைப்பர். மென் என்றது இலகுவில் உடைத்துச் சாறுபெறுதற்குற்ற மென்மைத் தன்மை குறித்தது.

    “விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
    கரும்பு தேன் பொழியுங் கணமங்கலம்”
    என்று  சேக்கிழார் பின்னர் கூறுவார்.

    மென் கரும்பை ஒடு விகுதி தந்து வேழக்கரும்பினைச்சார வைத்தது பெரும்பான்மை இந்நாட்டின் இவ்வகையே மிகும் சிறப்புப்பற்றி. கரும்பின் வகை விசேடங்களை, சேக்கிழார் நன்கு அறிந்தவர்.

    கரும்புதாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை – கரும்புதாழும்படி நெல் ஓங்குவன. கரும்பல்ல நெல்லென்ன என்ற பாட்டில் உரைத்தவற்றை நினைவுகூர்க.

    கதிர்ச்சாலி – விட்டபருவத்துள்ள நெற்பயிர். இவை தழைத்தோங்கி நிமிர்ந்து பரந்து நிற்கும் இயல்புடையன; நீர் – நிலம் – உரம் -விதை-  வலிமை – முதலிய வளங்களால் சாலியின் தண்டுகள் பருத்து நிமிர்ந்து மென்கரும்பின் தண்டு போல்வன. நெல்லும் கரும்பும் இந்நாட்டு வயல்களில் அடுத்துக்காண உள்ளன. இரண்டும் மருதத்துக்குரியன. நெல் நிமிர்ந்து கதிருடன் நிற்கும் பருவத்தே கரும்பு சாய்ந்து கிடக்கும் காட்சியினாலே கரும்பு தாழச் சாலி

    ஓங்கும் தன்மையதாய் என்றார். தாழ – வீழ்ந்து தாழ்ந்து கிடக்க என்றும், குறைந்து காட்ட என்றும் இருபொருளும்பட வைத்தமையால்  இப்பாடல் தன்மைநவிற்சியணி.

    நெல்இன்றியமையாத உணவுப் பொருளாதலும், கரும்பு அவ்வாறன்றி உருசிவேண்டுவார்க்கு அமுதுக்கு உருசிதரும் அறுவகையினுள் ஒன்றாகி ஒரோ வழி வேண்டப்படுதலின் அத்துணைச் சிறப்பில்லாது அதனினும் தாழ்தலும், அதனால் மேலே மிகுதலும் குறித்த நயமும் காண்க.இங்கு வயலின் விளைபொருள்களுள் உயர்ந்த இருவளங்கள் கூறினார். வலியகரும்பு தாழ மெல்லிய சாலி ஓங்கும். என்றதனால் அரனுக்கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள், என்றபடி அடியார் தோற்றங் காட்டும் மெலியனாகிய அதிசூரனுக்கு வலியராகிய நாயனார் தலைவணங்கித் தாழும் இச்சரித நிகழ்ச்சி பற்றியதோரர்  உட்குறிப்பும் நிற்பது காண்க. இவ்வாறு உலகியற் பொருள்களை அவ்வச்சரிதக் குறிப்புக் கண்ணாற் கண்டு காட்டுதல் ஆசிரியர் மரபு.

    வாழக்குடிதழைத்து  என்ற தொடர், வாழ – மேற்கூறியவாறுள்ள நிலவளத்தால் வாழ்வடைய. குடி தழைத்து மன்னிய – குடி அரச அங்கம் ஆறனுள் ஒன்று.

    “படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு,அரண், ஆறும்
    உடையானரசருள் ஏறு” என்பது குறள்.

    வாழஎன்பதனைச் சாலி என்பதனோடு சேர்த்து சாலி தன்மையதாகி வாழ என்றலுமாம்.

    தழைத்து  என்ற சொல் ,  மக்கள், செல்வம், அறிவு, ஒழுக்கம், இறை வழிபாடு   முதலியவற்றால் மிகுத்து என்பதைக்  குறித்தது!

    மன்னிய – நிலைபெற்ற. வழிவழியாய் வந்த.

    வாழ் அக் குடி என்று பிரித்து வாழ்கின்ற அந்தக் குடிகள் என்றலுமாம்.

    ஈழக்குலம் – இஃது சான்றார் குடிவகைகளில் ஒன்று. ஈழம் இங்கு ஈழநாட்டின் தொடர்பு பற்றியதோ என்று சிலர் ஐயங் கொள்கின்றனர். ஈழம் – கள் என்ற பொருளில் வழங்குதலின் ஈழக்குலம் என்றது கள் இறக்கும் தொழில் பூண்ட குலம் என்றும், அது சான்றார் மரபில் ஒருபிரிவு என்றும் கூறுவர். மலைநாட்டில் இத்தொழில் செய்பவர் ஈழவர் என்ற பெயரால்வழங்கும் ஒரு சாதியினர் உண்டு. கொங்கு நாட்டில் இத்தொழில் செய்வோர் சான்றார் (சாணார் என மருவி வழங்குவது) என்ற மரபுப் பெயரால் வழங்கும் ஒரு சாதியினரும் உண்டு.

    இங்கு ஆசிரியரும், வகை நூலுடையாரும், புராண சாரமுடையாரும் ஈழக்குலம் என்று குலத்தோடு புணர்த்தியே கூறியிருத்தலின் இ.:.து ஈழம் என்ற நாட்டின் றொடர்பாற் போந்ததென்று கொள்ளுதற் காதாரமின் றென்பர். புராண வரலாற்றில் குலங் குறியாது சான்றார் ஏனாதிநாதர் என்று கூறினார். குலம் – மரபின் உட்பிரி வென்பது வழக்கிலும் காண்க. சான்றார் – சான்றவர் மரபினர். சான்றார் ஏனாதிநாதனார் என்க. பெயர்ப் பயனிலை கொண்டது. ஏனாதிநாதனார் – “ஏனாதிநாதன்” என்ற முதனூலாட்சியை எடுத்தாண்டபடி. இச்சரிதத்துப் பிறஇடங்களிலும் இவ்வாறே கூறியதும் காண்க. “ஏனாதிநாதனை” என்று வகை நூலிலும், “ஏனாதி நாதர்” (11) என்று புராண சாரத்தினும், புராண வரலாற்றினும், “நீண்டபுக ழேனாதி நாதர்” என்று திருநாமக் கோவையினும் ஒப்பக் குறித்தல் காண்க. ஏனாதிநாதர் என்பது அவர் பெயர் போலும். எனவே ஏனாதிநாயனார் என்பது தவறென்க.

    ஏனாதி என்பது முன்னாளில் அரசர் சேனைகளின் அதிபர்களாகிய உத்தியோகத்தின் பெயர் என்றும், இதற்கடையாளமாக நெற்றியி லணியும் ஏனாதித் தங்கப்பட்டமும் விரலுக்கு ஏனாதி மோதிரமும் அரசர்கள் தருதல் மரபாமென்றும், சிந்தாமணி – மணிமேகலை-புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களால் அறிகின்றோம். ஏனாதி, எட்டி, காவிதி முதலியன பட்டப்பெயர்களாம். எனத்  தொல்காப்பியம் கூறும்.  நாதர் – தலைவர் – முதல்வர் – என்ற பொருளில் வந்தது. Commander-in-Chief  முதலிய நவீனப் பெயர்களும் காண்க.

    ஏனாதி நாதர் என்பது இவ்வாறு அவரது உத்தியோகப் பெயராய் நின்றதோ? அன்றித் “தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலா மாசிரியத் தன்மை”  என்றதனால் அதுவே இக்குடியில் வந்த முதல்வர்க்கு இயற்பெயராய் வழங்கிற்றோ? என்பது ஐயம். குலச்சிறை – என்ற பெயரும் இவ்வாறே  காணப்படுமென்பர்.

    இப்பாட்டான், நிலவளம், குடிவளம் நாயனாரது பெயர், மரபு ஆகிய பலவும் கூறினார்.

    Share