பாய்

பாஸ்கர் 

எண்பதுகளில் மெட்ராஸ் யூனிவெர்சிட்டியில் விசாரணை பகுதியில் ஒரு முஸ்லிம் பாய் இருப்பார். கெட்டிக்கார தாத்தா. எல்லா தகவலும் விரல் நுனியில். பைன்ஆர்ட்ஸ் பற்றி கேள்வியா தோ பதில் தயார். போன செமஸ்டருக்கும் நாலாவதுக்கும் ஏதேனும் கட்டணம் மாறுமா எனக் கேட்டால் சட்டெனச் சொல்வார்..

பொறுமையின் சிகரம். கோபமே வராது. கல்லூரி கட் அடித்து விட்டு பஸ் பாசில் அவரைப் பார்க்கச் செல்வேன். எனக்கு அரட்டை. மற்றவர்க்குப் படிப்பு. பிரிட்டிஷ்காரன் கட்டடத்தில் நடந்து சென்றால் கொஞ்சம் கர்வம் கொப்பளிக்கும். அவ்வளவே. அது படிப்பால் உண்டாகும் கர்வம் இல்லை.

அவரைப் பற்றி, நகைச்சுவை ஒன்று சொல்வார்கள்.

சார் நான் என் கைக்குட்டையை சென்டேனரி ஹால்பக்கம் காவாவில் போட்டுவிட்டேன். கொஞ்சம் ஹெல்ப் பாய்.

எத்தனை மணிக்கு சார்.

ரெண்டு மணிக்கு பாய்.

அப்ப ஒன்னு செய்யுங்க.

ரெண்டு எட்டுக்கு ஸ்டேட் பேங்க் பக்கம் போய் நின்றால் உம்ம கைக்குட்டை அங்கு கிடைக்கும். அதன் டிராவல் டைம் ஏழு நிமிஷம். அடைப்பு இருப்பதால் ஒரு நிமிஷம் லீட் டைம். நேராகச் சென்றால் சரியாகக் கிடைக்கும். – அதுதான் பாய்.

பாய் பற்றி இன்னொரு விஷயம். அவர் பணிக் காலத்தின் இறுதி வரை அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தது இல்லை. ஞானமும் படிப்பும் கல்வியும் புத்தகத்தில் தான் இருக்கிறது என நினைப்பவர்கள் முதலில் அதனைத் தள்ளி வையுங்கள். புத்தகம் விரலைப் பிடித்துக்கொள்ள. நடக்க வேண்டியவர்கள் நாமே.

About பாஸ்கர்

நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது . வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி . சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க