திருச்சி புலவர் இராமமூர்த்தி

திருத்தொண்டர்  புராணம்

10. ஏனாதி நாதர்புராணம்

வரலாறு

அடுத்து ‘ஏனாதி நாதர்’   என்று போற்றப்பெற்ற சிவனடியார்  வரலாற்றைச்  சேக்கிழார்  எழுதிய  பாடல்கள் வழியே காண்போம். குளிர்ச்சி மிக்க  வெண்கொற்றக்  குடையால் உலகிற்கே  தண்ணளி வழங்கிய  வளவன் ஆளும் சோழ நாட்டில் இயற்கை அரண் கொண்ட வயல்கள் சூழ்ந்த   மூதூர் எயினனூர் ஆகும். அவ்வூரில் வாழ்ந்த ஏனாதி நாதர் என்னும் அடியாரின் வரலாறு பெரிய புராணத்தின் பத்தாம் பகுதியாகும்.  முதலில் அடியாரை ஊரைச் சேக்கிழார்  அறிமுகம் செய்கிறார்.

பாடல்

வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலிற்
றாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையதாய்
வாழக் குடிதழைத்து மன்னியவப் பொற்பதியில்
ஈழக் குலச் சான்றா ரேனாதி நாதனார்.

பொருள்

குளிர்ச்சி பொருந்திய வயல்களில் நாணற்கரும்பினோடு மென்கரும்பும் தாழும்படி கதிர்ச்சாலிதான் ஓங்கிவளரும் தன்மையுடையதாக (அதனால்) வாழ்வு பெறும்படி பெருங்குடிகள் தழைத்து நிலைபெற்ற அந்த அழகிய நகரிலே ஈழக்குலச்சான்றார் மரபிலே வந்தவர் ஏனாதிநாதனார் என்ற பெரியார்.

விளக்கம்

வேழக்கரும்பு – மென்கரும்பு – கரும்புவகைகள். வேழக்கரும்பு – நாணற்கரும்பு என்று வழங்குவர். இவை கடினமான தண்டுடையனவாம். நரி முதலிய பிராணிகள் நாசம் செய்யக்கூடாதனவாகி நாணல் போன்ற சிறிய தண்டுடையன. இவற்றின் கடினத்தன்மையைக் “கருஞ்சகட மிளகவளர் கரும்பு” என்றருளினர் ஆளுடைய பிள்ளையார்.

மென்கரும்பு – மெல்லிய கரும்புவகை. இவற்றின் மேல்பாகம் இலகுவில் உடைந்து சாறுதரக்கூடியன; இவை சாறுமிகவுடையன; இவற்றைச் சாறுபிழிந்து பயன்படுத்துதலோடு மக்கள் நேரே பல்லினாற் கடித்தும் உண்டு சுவைப்பர். மென் என்றது இலகுவில் உடைத்துச் சாறுபெறுதற்குற்ற மென்மைத் தன்மை குறித்தது.

“விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன் பொழியுங் கணமங்கலம்”
என்று  சேக்கிழார் பின்னர் கூறுவார்.

மென் கரும்பை ஒடு விகுதி தந்து வேழக்கரும்பினைச்சார வைத்தது பெரும்பான்மை இந்நாட்டின் இவ்வகையே மிகும் சிறப்புப்பற்றி. கரும்பின் வகை விசேடங்களை, சேக்கிழார் நன்கு அறிந்தவர்.

கரும்புதாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை – கரும்புதாழும்படி நெல் ஓங்குவன. கரும்பல்ல நெல்லென்ன என்ற பாட்டில் உரைத்தவற்றை நினைவுகூர்க.

கதிர்ச்சாலி – விட்டபருவத்துள்ள நெற்பயிர். இவை தழைத்தோங்கி நிமிர்ந்து பரந்து நிற்கும் இயல்புடையன; நீர் – நிலம் – உரம் -விதை-  வலிமை – முதலிய வளங்களால் சாலியின் தண்டுகள் பருத்து நிமிர்ந்து மென்கரும்பின் தண்டு போல்வன. நெல்லும் கரும்பும் இந்நாட்டு வயல்களில் அடுத்துக்காண உள்ளன. இரண்டும் மருதத்துக்குரியன. நெல் நிமிர்ந்து கதிருடன் நிற்கும் பருவத்தே கரும்பு சாய்ந்து கிடக்கும் காட்சியினாலே கரும்பு தாழச் சாலி

ஓங்கும் தன்மையதாய் என்றார். தாழ – வீழ்ந்து தாழ்ந்து கிடக்க என்றும், குறைந்து காட்ட என்றும் இருபொருளும்பட வைத்தமையால்  இப்பாடல் தன்மைநவிற்சியணி.

நெல்இன்றியமையாத உணவுப் பொருளாதலும், கரும்பு அவ்வாறன்றி உருசிவேண்டுவார்க்கு அமுதுக்கு உருசிதரும் அறுவகையினுள் ஒன்றாகி ஒரோ வழி வேண்டப்படுதலின் அத்துணைச் சிறப்பில்லாது அதனினும் தாழ்தலும், அதனால் மேலே மிகுதலும் குறித்த நயமும் காண்க.இங்கு வயலின் விளைபொருள்களுள் உயர்ந்த இருவளங்கள் கூறினார். வலியகரும்பு தாழ மெல்லிய சாலி ஓங்கும். என்றதனால் அரனுக்கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள், என்றபடி அடியார் தோற்றங் காட்டும் மெலியனாகிய அதிசூரனுக்கு வலியராகிய நாயனார் தலைவணங்கித் தாழும் இச்சரித நிகழ்ச்சி பற்றியதோரர்  உட்குறிப்பும் நிற்பது காண்க. இவ்வாறு உலகியற் பொருள்களை அவ்வச்சரிதக் குறிப்புக் கண்ணாற் கண்டு காட்டுதல் ஆசிரியர் மரபு.

வாழக்குடிதழைத்து  என்ற தொடர், வாழ – மேற்கூறியவாறுள்ள நிலவளத்தால் வாழ்வடைய. குடி தழைத்து மன்னிய – குடி அரச அங்கம் ஆறனுள் ஒன்று.

“படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு,அரண், ஆறும்
உடையானரசருள் ஏறு” என்பது குறள்.

வாழஎன்பதனைச் சாலி என்பதனோடு சேர்த்து சாலி தன்மையதாகி வாழ என்றலுமாம்.

தழைத்து  என்ற சொல் ,  மக்கள், செல்வம், அறிவு, ஒழுக்கம், இறை வழிபாடு   முதலியவற்றால் மிகுத்து என்பதைக்  குறித்தது!

மன்னிய – நிலைபெற்ற. வழிவழியாய் வந்த.

வாழ் அக் குடி என்று பிரித்து வாழ்கின்ற அந்தக் குடிகள் என்றலுமாம்.

ஈழக்குலம் – இஃது சான்றார் குடிவகைகளில் ஒன்று. ஈழம் இங்கு ஈழநாட்டின் தொடர்பு பற்றியதோ என்று சிலர் ஐயங் கொள்கின்றனர். ஈழம் – கள் என்ற பொருளில் வழங்குதலின் ஈழக்குலம் என்றது கள் இறக்கும் தொழில் பூண்ட குலம் என்றும், அது சான்றார் மரபில் ஒருபிரிவு என்றும் கூறுவர். மலைநாட்டில் இத்தொழில் செய்பவர் ஈழவர் என்ற பெயரால்வழங்கும் ஒரு சாதியினர் உண்டு. கொங்கு நாட்டில் இத்தொழில் செய்வோர் சான்றார் (சாணார் என மருவி வழங்குவது) என்ற மரபுப் பெயரால் வழங்கும் ஒரு சாதியினரும் உண்டு.

இங்கு ஆசிரியரும், வகை நூலுடையாரும், புராண சாரமுடையாரும் ஈழக்குலம் என்று குலத்தோடு புணர்த்தியே கூறியிருத்தலின் இ.:.து ஈழம் என்ற நாட்டின் றொடர்பாற் போந்ததென்று கொள்ளுதற் காதாரமின் றென்பர். புராண வரலாற்றில் குலங் குறியாது சான்றார் ஏனாதிநாதர் என்று கூறினார். குலம் – மரபின் உட்பிரி வென்பது வழக்கிலும் காண்க. சான்றார் – சான்றவர் மரபினர். சான்றார் ஏனாதிநாதனார் என்க. பெயர்ப் பயனிலை கொண்டது. ஏனாதிநாதனார் – “ஏனாதிநாதன்” என்ற முதனூலாட்சியை எடுத்தாண்டபடி. இச்சரிதத்துப் பிறஇடங்களிலும் இவ்வாறே கூறியதும் காண்க. “ஏனாதிநாதனை” என்று வகை நூலிலும், “ஏனாதி நாதர்” (11) என்று புராண சாரத்தினும், புராண வரலாற்றினும், “நீண்டபுக ழேனாதி நாதர்” என்று திருநாமக் கோவையினும் ஒப்பக் குறித்தல் காண்க. ஏனாதிநாதர் என்பது அவர் பெயர் போலும். எனவே ஏனாதிநாயனார் என்பது தவறென்க.

ஏனாதி என்பது முன்னாளில் அரசர் சேனைகளின் அதிபர்களாகிய உத்தியோகத்தின் பெயர் என்றும், இதற்கடையாளமாக நெற்றியி லணியும் ஏனாதித் தங்கப்பட்டமும் விரலுக்கு ஏனாதி மோதிரமும் அரசர்கள் தருதல் மரபாமென்றும், சிந்தாமணி – மணிமேகலை-புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களால் அறிகின்றோம். ஏனாதி, எட்டி, காவிதி முதலியன பட்டப்பெயர்களாம். எனத்  தொல்காப்பியம் கூறும்.  நாதர் – தலைவர் – முதல்வர் – என்ற பொருளில் வந்தது. Commander-in-Chief  முதலிய நவீனப் பெயர்களும் காண்க.

ஏனாதி நாதர் என்பது இவ்வாறு அவரது உத்தியோகப் பெயராய் நின்றதோ? அன்றித் “தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலா மாசிரியத் தன்மை”  என்றதனால் அதுவே இக்குடியில் வந்த முதல்வர்க்கு இயற்பெயராய் வழங்கிற்றோ? என்பது ஐயம். குலச்சிறை – என்ற பெயரும் இவ்வாறே  காணப்படுமென்பர்.

இப்பாட்டான், நிலவளம், குடிவளம் நாயனாரது பெயர், மரபு ஆகிய பலவும் கூறினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.