Blog

  • பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி

    இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி

    அண்ணாகண்ணன்

    இந்தியத்தாய்க்கு நான் பாடிய திருப்பள்ளியெழுச்சி இதோ. ‘பூபாளம்’ என்ற தலைப்பில், 1996இல் வெளியான என் முதல் கவிதைத் தொகுப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    பாடல் – தொன்று நிகழ்ந்தது
    இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடியவர் – கிருஷ்ணகுமார்
    ஓவியங்கள் – வி.கிருத்திகா

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிங்க் டால்பின் சாகசங்கள்

    பிங்க் டால்பின் சாகசங்கள்

    சிங்கப்பூரில் நடைபெற்ற பிங்க் டால்பின் கேளிக்கைக் காட்சி, இதோ. டால்பின்கள் நடனமாடுவதையும் நடப்பதையும் வளையத்துக்குள் பாய்வதையும் வளையத்தை மூக்கால் சுழற்றுவதையும் பந்து எடுத்து வருவதையும் பார்வையாளருக்கு முத்தம் கொடுப்பதையும் இன்னும் பல சாகசங்களையும் கண்டுகளியுங்கள்.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்.

    This is Pink Dolphin show in Sentosa Island, Singapore. These Indo-Pacific Humpback Dolphins, also known as “pink dolphins”. Trainers interact with two pink dolphins during this show. Visitors can meet the dolphins. Dolphins can also kiss visitors. You can watch dolphins dancing, walking, diving… and much more. Enjoy the show.

    Video by Hemamalini Lokanathan.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 79

    பழகத் தெரிய வேணும் – 79

    நிர்மலா ராகவன்

    யார் விவேகி?

    “எனக்கு நிறைய நண்பர்கள்!” என்று சிலர் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கக் கூறுவார்கள்.

    `நண்பர்கள்’ என்று நாம் நினைப்பவர்களில் எத்தனைபேருக்கு நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது?

    ஒன்றாக வாழும் தம்பதியருக்கே அத்தகைய புரிந்துணர்வு பெற இருபது ஆண்டுகள்கூடப் பிடிக்கலாம். ஏனெனில், தான் நினைப்பதுபோல் மற்றொருவரும் நினைக்கவேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்யவேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ என்பது கைகூடாத ஆசையாக முடிந்துவிடும். பாட்டில் கேட்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

    ஒரே குடும்பத்தினர் ஆனாலும், சகோதர சகோதரியர்கூட குணத்தால், அனுபவத்தால் ஒன்றுபட்டிருப்பார்களா?

    கதை

    மூத்த மகளை அவளுடைய தாய் ஓயாமல் திட்டுவாள். தந்தை அவளிடம் பாசமாக இருந்தது அவள் பொறாமையைத் தூண்டிவிட்டதோ, இல்லை, எல்லாவற்றிற்கும் மகள் தன்னை நாடவில்லையே என்ற ஆற்றாமையோ!

    தாயின் வசவுக்குப் பயந்த இளையவள் சாரதாவோ, அம்மாவின் நிழலாக நடந்தாள். தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    பெரியவளாகப் போனதும், தன்னைச் சுந்திரமாக நடக்கவிடாமல் செய்துவிட்ட தாயின்மேல் வெறுப்பு எழுந்தது.

    தாய் இறந்தபின், அக்காளைப் பார்த்து சாரதாவுக்கு ஆச்சரியம். “நீ எப்படி அம்மாமேல் ஆத்திரப்படாமல் இருக்கிறாய்? நீ திட்டு வாங்கும்போதெல்லாம், மாற்றாந்தாய் குழந்தையோ என்றுகூட நினைப்பேன்!”

    “அப்பா நிறைய செல்லம் கொடுத்தார். அம்மாவும் அப்படி இருந்திருந்தால், நான் கெட்டுப்போயிருப்பேனோ, என்னவோ! இப்போது, யார் என்னைத் திட்டினாலும், அவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று என் யோசனை போகிறது”.

    ஒரே அனுபவம்தான். ஆனால், சகோதரியர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது.

    பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஆராய்வதுதான் விவேகம். அப்போதுதான் நாமும் அதேபோல் நடந்து, அவர்களைத் துன்புறுத்தமாட்டோம். அவர்கள் நம்மிடம் காட்டாத பொறுமையையும் மென்மையையும் பதிலாக அளிக்கமுடியும்.

    எச்சரிக்கை: கணவன்மாரிடம் வதைபடும் பெண்கள் பொறுமையாக நடந்தால், வதை அதிகரிக்கும்.

    சிறுவயதில் ஒருவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனைவியையும் அதேபோல் பாடுபடுத்த வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. இருந்தாலும், தவறுதான்.

    ஒரு பெண் எவ்வளவுதான் உறுதுணையாக இருந்தாலும், அவள் உதவியை நாடும் சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பது வீண்.

    கதை

    கணவரிடம் உடல்ரீதியாக வதைபட்ட பெண்கள் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட இல்லம் அது. கோலாலம்பூரில் உள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை, அவரவர் மத வழிபாடு எல்லா வசதிகளும் உண்டு.

    கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு வந்தவர்கள் சிலர் மீண்டும் கணவருடன் போய்விடுவார்கள்.

    “அழுவறாருங்க. பாவமா இருக்கு!” இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்ட பெண்மணி என்னிடம் கூறியது.

    அவள் பக்கத்தில் இருந்தவள் லேசாகச் சிரித்தபடி, முட்டியை இறுக்கி, அவள் முகத்தில் குத்துவதுபோல் பாவனை செய்தாள்.

    இவ்வாறு, மூன்று முறை தம் வீட்டுக்கே சென்றுவிட்டபின், திரும்பவும் பாதுகாப்பான அந்த இல்லத்திற்கு வர அனுமதி கிடையாது.

    பெண்களுக்கு இரக்க சுபாவம் இருக்கலாம். ஆனால், சற்று விவேகம் வேண்டாமா?

    நான்தான் விவேகமானவன்

    என்னைப்போல் இல்லாதவர்கள் முட்டாள்கள்!

    கதை

    ஒரு விமரிசகர் இசைத்துறையில் முன்னணியில் இருந்த பாடகியை விமரிசனம் செய்தார்: `தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு, அதிலிருந்து சற்றும் விலகமாட்டார்!” என்று, அது ஒரு பெரிய குறைபாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

    பாடகியின் முழுத்திறனையும் புரிந்துகொள்ளும் இசைஞானம் அவருக்கு இருக்கவில்லை. குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிறரைக் குறைகூறினார்.

    இன்னொருவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதால் தான் மிகப் புத்திசாலி என்று நினைப்பவர்கள் பிறரிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.

    இவர்களது குணம் புரிந்து, `திருத்தி’க்கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் விவேகம்.

    “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு. தன்னையே புரிந்துகொள்வது விவேகம்” (சீனத் தத்துவஞானி, லாவோஜி, LAOZI).

    எனக்குப் புரிகிறது

    இந்த இரு வார்த்தைகளுக்கும் நல்ல சக்தி உண்டு.

    ஒருவர் நம்மைத் தாக்கும்போது, “உங்கள் உணர்ச்சி எனக்குப் புரிகிறது,” என்று சொல்லிவைத்தால், அவர் அடங்கிவிடுவார். உண்மையில் அது நமக்குப் புரிகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.

    உற்றவரை இழந்து தவிப்பவர்களிடம் ஆறுதலாக எல்லாரும் சொல்வார்கள்: “உங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது”.

    இந்தப் போலித்தன்மையால் துக்கப்பட்டிருப்பவர்களின் மனதை ஆற்ற இயலுமா?

    ஒருவர் தானே அனுபவித்தால்தான் துன்பமோ, துயரமோ புரியும். பிறரும் அதே நிலையில் இருக்கும்போது, உண்மையாக ஆறுதல் கூறமுடியும்.

    “இறைவன் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பது நாம் பிறரது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்குத்தான்!” (மகாத்மா காந்தி).

    இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு.

    ஒரு கவுன்சிலர் பிறரது மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொண்டு, அவர்கள் மனம்விட்டுச் சொல்வதை உள்ளபடி புரிந்துகொள்கிறார். அதாவது, அவரது எதிர்பார்ப்போ, பின்னணியோ குறுக்கிடுவதில்லை.

    அவருக்கு அதே அனுபவம் கிடைத்திருக்காவிட்டாலும், பிறருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெகு சிலரால்தான் இப்படி நடக்கமுடியும்.

    அவரிடம் தம் குறைகளைச் சொல்ல வருகிறவர்கள் அவரது புரிந்துணர்வால் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். `காதல்’ என்று அதை எண்ணிவிடுவார்கள்!

    அறிவான பிராணிகள்

    பேசத் தெரியாவிட்டாலும், தன்னை வளர்ப்பவர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்கின்றன இல்லத்தில் வளையவரும் பிராணிகள்.

    எங்கள் வீட்டுப் பூனை, நாள் முழுவதும், என் காலைத் தடுக்காத குறையாக என்கூடவே நடக்கும். சிறு வயதிலேயே தாயிடமிருந்து பிரிந்துவிட்டதால், நான்தான் அதன் அம்மா.

    ஒரு காலைப்பொழுதில், “குறுக்கே, குறுக்கே நடக்காதே! தூக்கக்கலக்கத்தில் நான் விழுந்து வைக்கப்போறேன். ஒரு ஓரமா ஒக்காரு!” என்று கண்டித்தேன்.

    உடனே புரிந்துகொண்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டது. எனக்கே பரிதாபமாகிவிட்டது.

    மறுநாள் சொல்லிவைத்தாற்போல், தானே அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டது, நான் அங்கும் இங்கும் நடக்க சௌகரியமாக.

    எத்தனை மனிதர்களுக்குப் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும் திறமை இருக்கிறது?

    அடுக்கடுக்காகக் கேள்வி கேட்பது

    சிலர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எதிராளியின் பதிலைக் காதில் வாங்கிக்கொள்ளுமுன், அடுத்த கேள்வி வந்துவிடும்.

    கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைத்திருப்பார்கள்! ஒருவர் கேட்கும் கேள்விகளாலேயே அவரது அறிவுகூர்மை வெளிப்பட்டுவிடும்.

    எத்தகைய கேள்விகள் கேட்கிறோம், அதனால் யாருக்காவது பயன் இருக்கிறதா என்பது முக்கியம்.

    நிதானம் தவறாதே!

    “உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது உறுதியானதும், என்ன செய்தீர்கள்?” என்று என் நெருங்கிய தோழி ஒரு கேள்வி கேட்டாள்.

    “`அவன் கண்களைத் தானம் கொடுத்துவிடலாமா?’ என்று என் கணவரைக் கேட்டேன்,” என்று நான் பதிலளித்ததும், “ஐயோ!” என்று அதிர்ந்தாள்.

    எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது இருப்பவர்கள் பிறரது அச்சத்திற்கு – பாராட்டுக்கல்ல – ஆளாகிறார்கள். அதற்காக நிதானம் இழக்கலாமா?

    வெற்றி கிடைக்க

    `எனக்கு வெற்றி கிட்டுவதேயில்லை. யாரும் ஊக்குவிப்பதில்லை’. பலரின் புலம்பல் இது.

    வெற்றியும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

    நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

    பிறரது பாராட்டையோ, புகழையோ எதிர்பார்த்து ஒரு காரியம் செய்து அடையும் மகிழ்ச்சி நீடிக்காது.

    நாம் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதை நோக்கிப் பயணிப்போம், நம்மையும் அறியாமல். ஆனால், அது நம் திறமைக்குட்பட்டதாக, நியாயமான வழிகளில் இருக்கவேண்டும்.

    கதை

    பதின்ம வயதினனான அவன் ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்தவன்.

    மிகுந்த பிரயாசைக்குப்பிறகு நான் அவனைப் பேட்டி கண்டேன்.

    சிரித்தபடி, இக்கருத்தை என்னிடம் வெளியிட்டான் மூன்று கொலைகள் புரிந்திருந்த அப்பையன்: “சாகப்போகிறோம் என்று புரிந்ததும், ஒருவர் கண்ணில் தோன்றும் பயம் இருக்கிறதே, அப்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது!”

    சொல்லும்போதே அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நான் அதிர்ந்தே போனேன்.

    மகிழ்ச்சி தரும் காரியமெல்லாம் வெற்றி என்பதல்ல, தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று உணர்ந்தபின், அதிலிருந்து விலகும் விவேகம் அவனுக்கு இருந்தது.

    அவனுக்குள் இருந்த முரட்டுத்தனத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியிடக் கற்றான்.

    பிறரைப் பயமுறுத்துகிறவர்கள் பயந்தவர்கள் என்று புரிந்தால், பலரும் அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை.

    Share
  • கோவையில் கண்ட வண்ணத்துப்பூச்சி

    கோவையில் கண்ட வண்ணத்துப்பூச்சி

    கோவையில் நான் கண்ட வண்ணத்துப்பூச்சி, இது. கல்லிலும் மண்ணிலும் அமர்ந்தபடி இருந்தது. அரை மணிநேரம்போல் இதைப் பின்தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தேன். அதைத் தொந்தரவு செய்கிறேன் என எண்ணியதோ என்னவோ, நேராக என் கண்களைக் குறிவைத்து, தாக்குவது போல் நெருங்கி வந்தது. கண்களுக்கு முன் செல்பேசி இருந்ததால் தப்பித்தேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கடவூர் மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    முன்னுரை

    மரபுசார்ந்த தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள் அகம், புறம் என இரண்டேயாயினும் ‘பாடுகளங்கள்’ பல. தமிழ் பொருளிலக்கணத்தில் அகத்திணை, புறத்திணை ஆகிய இரு திணைகளுக்கும் துறைகள் உண்டு. அகத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் துறை விளக்கம் இன்றியமையாதது. துறைகள் தம்முள் மயங்குவதோடு கற்பாருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தும். சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துறை வகுத்திருப்பதற்கு இதுதான் காரணம். புறத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பாட்டின் அடிப்பகுதியில் திணை, துறை பதிவுகளோடு கூடிய ‘கொளு’ மிகவும் இன்றியமையாத ஒன்று. வரலாற்றுக் குறிப்போடு அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கொளுவே பாடுகளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகச் செயல்படும். பொருள் துறைகள் பல. அவையனைத்தும் திணைவாரியாக விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு திணைக்குரிய துறைகள் ஏனைய திணைக்குள் அடங்குவதில்லை. திணை என்பதை ஆறாகக் கொண்டால் துறை என்பது படித்துறை என்பது புலனாகும். ‘படித்துறை’ என்றாலும் ‘நீர்த்துறை’ என்றாலும் ஒன்றே. புறத்திணைகளில் ஒன்றாகிய காஞ்சித்திணையில் அமைந்துள்ள கையறுநிலைத் துறையில் தற்காலத் தமிழ்க்கவிஞருள் ஒருவராகிய கடவூர் மணிமாறன் அவர்களால் பாடப்பெற்றுள்ள சில பாடல்களை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    இழப்பும் அதன் இலக்கிய மதிப்பீடும்

    இன்பம் முதலிய பல்வகை உணர்ச்சிகளும் இலக்கியப் படைப்பில் இடம் பெறினும் இழப்பினால் ஏற்படுகிற அவலம், இலக்கியச் சித்திரிப்பில் தலையாய இடம் பெறுகிறது. நடப்பியல் வாழ்வில் அவலம் தாங்குதற்குரியது. இலக்கியத்தில் அது சுவைத்தற்குரியது. கணவனை நிரந்தரமாகப் பிரியும் முதுபாலை, பாலைவழியில் மனைவியை இழந்த கணவன் துயர் கூறும் சுரநடை, மனைவியை இழந்த கணவனின் தபுதார நிலை, கணவனை இழந்த மனைவியின் தாபத நிலை, தாயை இழந்த பிள்ளையின் துன்பம் பாடிய தலைப்பெயல் நிலை, மாறாகப் பிள்ளையை இழந்த தாயின் துயரத்தையும் மன்னனை இழந்த மக்கள் வேதனையையும் பாடும் பூசல்மயக்கு, கணவனோடு எரிபுக நிற்கும் மகளிர் நிலைபாடும் மாலை நிலை, கணவனோடு மனைவியும் உடன்கட்டை ஏற, அதனைக் கண்டோர் கலங்கிப் புலம்பிய மூதானந்தம், விரிச்சிக்கு மாறுபட்டுத் தீய சகுனம் கண்ட மனைவிபடும் துன்பமாகிய ஆனந்தம், கணவன் இறந்த பின்னும் தான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நாணி வருந்தும் ஆனந்தப் பையுள், புரந்தார் சாகவும் புரக்கப்பட்டார் வருந்தவுமான கையறு நிலை என இழப்புக்கள் பல. அவற்றைப் பதிவு செய்திருக்கும் இலக்கியங்களும் பல.

    ‘கையறு நிலை’ — ஒரு விளக்கம்

    இழப்பு ஏற்படுத்தும் துன்பத்தை வெளிப்படுத்தும் நிலையைக் ‘கையறுநிலை’என இலக்கணம் சுட்டும். ‘கலங்கிக் கையற்று’ என்பது தமிழிலக்கியத்தில் பெருவழக்கு.

    “கை விதிர்த்துக் கலங்கும் நிலை, கையறு நிலை எனப்பட்டது”

    என்பது பேராசிரியர் ச.பாலசுந்தரனார் தரும் சொற்பொருள் விளக்கம். இவ்வாறு கையற்று நிற்கும் நிலையைத் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் காஞ்சித்திணையில் வைத்துக் கூறுகிறது. தொல்காப்பியக் காஞ்சித்திணை, போரொழுக்கம் பற்றிக் கூறாது, வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றியது என்பது,

    “பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

    என்னும் நூற்பாவால் பெறப்படும். மரணம் நிலையாமை உணர்த்தும் கருவி.  இவ்வடிப்படையில்,

    “கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
    ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை”

    என்னும் காஞ்சித்திணைத் துறைகள் பற்றிய நூற்பாப் பகுதியை நோக்கினால், தம் வாழ்நாள் கழிந்து மரணமடைந்த நிலையில், அவர்தம் துணையும் பாதுகாப்பும் இழந்த மற்றவர்கள் அவ்வாறு இழந்தவற்றை எண்ணிப் புலம்புவதே கையறுநிலையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவில் பயின்றுவரும் ‘ஒழிந்தோர்’ என்னும் சொல், சுற்றத்தார், பெற்றோர், உடன்பிறந்தார், புரப்போர்  என யாவரையும் குறித்து நிற்கிறது.

    ‘இழந்ததற்கிரங்கல்’ என்னும் பொருண்மையை உள்ளடக்கிய இத்துறையைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் பொதுவியல் திணையில் அடக்கிக் காட்டுவார்.

    “செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
    கையற உரைத்துக் கைசோர்ந்தன்று”

    “கழிந்தோன் தன்புகழ் காதலித்து உரைப்பினும்
    மொழிந்தனர் புலவர் அத்துறை யன்ன”

    என்னும் இரண்டு கொளுக்களைக் கொண்டு இத்துறையை விளக்குவார் அவர். முதற்கொளு ‘மன்னன் இறந்த நிலையில் மற்றவர் புலம்பலைச்’சுட்டியும், இரண்டாவது கொளு ‘அன்பிற்குரிய எவர் இறப்பினும் அவர் புகழை எடுத்துக் கூறும் பிறர் புலம்பலையும்’சுட்டி நிற்கின்றன.

    இழப்புக்களும் புலம்பல்களும்

    இழப்புக்கள் பலவானால் புலம்பல்களின் எண்ணிக்கையும்  பலவாகும். உள்ளங்கவர் நண்பனை இழந்து புலம்புவது, ஆசைமிகு கணவனை இழந்து புலம்புவது, பாசமிகு மனைவியை இழந்து புலம்புவது, பிள்ளைகளை இழந்து பெற்றோரும் பெற்றோர்களை இழந்து பிள்ளைகளும் புலம்புவது எனப் பல்வகைப்படும்.  மனைவிக்கு முன்னால் மனைவியும், பெற்றோர்களுக்குப் பின்னால் பிள்ளையும், இளைஞர்களுக்கு முன்னால் முதியோரும் மறைவது இயற்கை. இந்த இயற்கை மரபு சில பொழுதுகளில் ஊழ்வினை காரணமாகத் தம்முள் முரண்படுகிறது. அத்தகைய நேர்வுகளில் இழப்பின் துன்ப வெளிப்பாடு இதயத்தைப் பிழிவதாக அமைந்துவிடுவதைக் காணலாம். கணவனை இழந்து மனைவி புலம்புவதைவிட மனைவியை இழந்த கணவன் புலம்புவது எண்ணிப்பார்க்க முடியாத இயற்கை முரண். இந்த முரணுக்கு ஆட்பட்ட மன்னன் ஒருவன் தன் மனைவியை இழந்து பாடிய கையறு நிலைப்பாடலைப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது.  ‘நண்ணாரும் உட்கும் பீடு’அவனுடையது. களத்திலே கலங்காத ஒருவன் தன் காதலிக்காகக் கலங்கித் துடிப்பது கற்பார்தம் உள்ளம் உருக்குவதாம்.

    “யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனைத்தே
    உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்”

    “கள்ளி அம் போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடை பொத்திய விளை விறகுஈமத்தீ
    ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல்! என்னிதன் பண்பே?”

    என்று நெருப்பிலே தன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு கிடத்தப்பட்டது கண்டு கதறுகிறான் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. ‘இருவரும் ஓருயிர்’ என்பது உண்மையானால் அவள் இறந்து தான் இன்னும் இருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு சொன்னதெல்லாம் இன்று பொய்யாகியிருக்கிறது என்பது கருத்து.

    கலைஞர் பாடிய கையறுநிலை

    தமிழ்க்கவிதை உலகில் கையறு நிலைத்துறையில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது கலைஞர் பாடிய இரங்கற்பா தனிச்சிறப்புக்குரியது. அவருடைய கம்பளிக் குரலில் வானொலியில் அவர் வாசித்தபோது கலங்காதவர் இல்லை. அண்ணாவின் பெருமைகளை,

    “நாத இசை கொட்டுகின்ற
    நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
    விரலசைத்து எழுத்துலகில்
    விந்தைகளைச் செய்தாயே? அந்த
    விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
    கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
    பேரழகைப் பார்த்துள்ளேன்! இன்று
    மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
    தடுப்பதென்ன கொடுமை?
    கொடுமைக்கு முடிவு கண்டாய்! எமைக்
    கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?”

    என நிரல்பட அடுக்கி அவர் புலம்பியது இன்றைக்கும் இணையத்தில் இருக்கிறது.

    பாவேந்தரும் பன்னீர் செல்வமும்

    இருபதாம் நூற்றாண்டில் தமிழின் எல்லாத் ‘துறை மரபுகளையும்’ கையாண்டு கவிதை படைத்தவர் பாவேந்தர். அவற்றுள் ‘கையறு நிலை’ என்னும் புறத்துறையும் ஒன்று. பாரதியார் உட்படச் சான்றோர் பலரின் மறைவுக்கு அவர் கையறுநிலை பாடியிருக்கிறார்.  எனினும் தமிழர்தம் வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கிய கே.டி.பன்னீர்செல்வம் மறைந்தபோது அத்துறையில் அவர் பாடிய பாட்டு அவர்தம் தனிப்பாடல்களில் தனித்து விளங்கும் சிறப்புடையது.

    “பண்கெட்டுப் போன தான
    பாட்டுப்போல் தமிழர் வாழும்
    மண்கெட்டு போமே என்னும்
    மதிகெட்டும், மானம் கெட்டும்
    எண்கெட்ட தமிழர் பல்லோர்
    பாரப்பனர்க் கேவ லாகிக்
    கண்கெட்டு வீழும் போதோ
    கடல்பட்ட தெங்கள் செல்வம்?”

    விமான விபத்தில் சிக்கிக் கடலில் வீழ்ந்து, பன்னீர் செல்வம் மறைந்தார்  என்பதனை இலக்கியமாக்கும் போது, ‘முன்பே பல்வகைச் செல்வங்களைக் கொண்ட கடல் பன்னீர் செல்வத்தின் பெருமை கண்டு அவரையும் தன்னுடைய செல்வமாகக் கொண்டதோ’எனத் தற்குறிப்பேற்றமாகக் கருதுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். ‘இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாமற் போனாரே’ என்னும் ஏக்கத்தைக், ‘கண்கெட்டு வீழும்போதோ கடல்பட்டது எங்கள் செல்வம்?’ என்னும் தொடர் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    கவிமணியும் கையறுநிலையும்

    புகழேந்திக்குப் பிறகு வெண்பாவால் விருந்து வைத்தவர் கவிமணி. யாப்பில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் நேரிசை வெண்பாவை ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’மாற்றிக் கொண்டவர் அவர். செப்பலோசையில் அமைந்தாலும் உணர்ச்சியின் வேகம் குறையாமல் கையறுநிலைக்கு அதனைப் பயன்படுத்திக் காட்டியிருக்கும் கவிமணியின் கவிநேர்த்தி போற்றுதலுக்குரியது  ரசிகமணி டி.கே.சி. அவர்கள் மறைந்தபோது அவர் பாடிய கையறுநிலை பாடலொன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “என்னருமை நண்பா! இனிய கலைரசிகா!
    தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! – மன்னுமுளம்
    தத்தளித்து நின்றன் சரமகவி பாடுதற்கோ
    இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?”

    சரமகவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?’ என்னும் வினாவில் பொங்கிவழியும் கையறுநிலை உணர்ச்சி மனத்தைப் பிழிகிறது. ‘நண்பன், ‘கலைரசிகன், ‘தமிழ்ச்செல்வன்’என முன்னிரண்டு அடிகளில் இழந்தோரின் பெருமை கூறிப், பின்னிரண்டு அடிகளில் அவ்விழப்பின் ஆழத்தைப் பதியவைக்கும் கவிமணியின் மரபியல் பார்வை  மதிக்கத்தக்கது.

    எமனுக்குக் கொள்ளி வைத்த கண்ணதாசன் 

    கவிஞர் கண்ணதாசனின் கருத்துக்களில் முரண்படுவோர்  உண்டு. அவருடைய முரண்பட்ட பார்வைகள் பற்றி முன்னெடுத்து மொழிவோர் உண்டு. ஆனால் அவர்தம் கவிதைகள் பல்வகை உணர்ச்சிகளின் பிழிவாக உள்ளன என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. கவிதைக் கூறுகளில் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. அதிலும் இழப்புப் பற்றிய அவருடைய கவிதைகள் கற்பார்தம் நெஞ்சைக் கரைய வைப்பன. கையறுநிலையில் அவா படைத்த பாடல்கள் பல இருப்பினும் பதச்சோறாக ஒருசில இவண் சுட்டப்படுகின்றன.

    “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?
    சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ?
    தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ?”

    என்று பண்டித ஜவகர்லால் நேரு மறைந்தபோது அவர் உகுத்த கண்ணீர் கையறுநிலைக்கு ஓர் அழியா எடுத்துக்காட்டு.

    “தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?
    என்னுயிரைத் தருகின்றேன், எங்கே என் மாகவிஞன்?”

    என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவர் வடித்த கண்ணீர் கவிஞனுக்கு மற்றொரு கவிஞன் பாடிய கையறுநிலையின் தொடர்ச்சியாகலாம்.

    மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    தமிழிலக்கியப் புறத்துறைகளில் தனித்து விளங்கும் இத்தகைய கையறுநிலைப் பாடல்கள் அவல உணர்ச்சியின் ஆழமான வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. மணிமாறனும் தமது கவிதைப்படைப்புக்களில் அத்துறைப் பாடல்கள் பலவற்றைப் படைத்துக் காட்டியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழிலக்கியப் ‘பொருள்மரபு’ அவர் படைப்புக்களில் ஊடுருவி நிற்கும் பாங்கை அறியலாம். உள்ளங்கவர் நண்பர்கள் இழப்பு, உரிமையான உறவுகள் இழப்பு, சமுதாய நலன் நாடும் சான்றோர்கள் இழப்பு எனக் கையறுநிலைக்கான கருப்பொருள் நிகழ்வுகள் பலவாயினும், தன் மகனையே இழந்து புலம்பிய கையறுநிலை கண்ணீர் மல்க வைப்பதாக உள்ளது.

    வெந்தழலுக்கு இரையான வீரப்பன்

    தமிழக அரசியலை முற்றிலும் தடம்மாறச் செய்த நிகழ்வு 1965இல் நடந்தேறியது. ‘மொழிப்போர்’ என்னும் சொல் உலக வரலாற்று அகராதியில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டது. ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகத்தினால் நமக்கென்ன பயன்?’ என்னும் சிந்தனை, உயிரைத் துரும்பென மதிக்க வைத்தது. தாய்மொழி அழிவைத் தாங்கிக் கொள்ள இயலாத இளைஞர்கள் தங்கள் உயிரைத் தாங்களே தீவைத்துக் கொண்டு இறந்தனர். அவர்களுள் ஆசிரியராகப் பணியாற்றிய வீரப்பனும் ஒருவர். அவர் கவிஞருக்குக் கெழுதகை நண்பரும் ஆவார். அன்னாருக்குப் பாடிய கையறுநிலைப் பாடல் வருமாறு,

    “என்னென்று அறைகுவன்? என்னென்று அறைகுவன்?
    அன்னைத் தமிழின் அழிவினைப் பொறாஅது
    புன்மொழி இந்தியின் போக்கறு நிலைக்கே
    தன்னுயிர் ஈந்த தறுகண் அம்மா!
    நானிலம் போற்றும் நல்லிசை நாட்டிய
    மேனிலைச் சிறப்பை என்னென்று அறைகுவன்? 
                ……………………………………..
    உரமும் திறமும் உணர்வும் மிகுந்திட
    உடலம் துகளாய் உருக்குலைந்து ஓய்ந்திடப்
    பொடிபடச் சிதைந்து பொசுங்கிய ஞான்றும்
    இடியென ஆர்த்தனன்”

    என்னும் இப்பாடல் ‘நண்பன், ஆசிரியன், மொழிகாக்கும் வீரன்’ என்னும் முத்திறம் தாங்கிய ஒருவரின் இழப்புக்கு ஆற்றாத நெஞ்சத்தின் வெளிப்பாடாகக் கருதலாம்.

    “1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுத் தீந்தமிழ்க் காக்கத் தீக்குளித்து மாண்ட ஆசிரிய நண்பர் வீரப்பனின் அழியா ஈகத்தை வியந்து பாடியது”

    என்னும் பின்குறிப்போடு பதிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் பொருண்மையால் மரபு சார்ந்தும் பொருண்மைக்கான காரணம் புதுமை சார்ந்தும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இழப்புக்கான களம் போர்க்களமோ, நோயோ, விபத்தோ என்றில்லாமல் மொழிப்போர் காரணமாக அமைந்திருப்பது பொருண்மையில் புதிய போக்காகக் கருதப்படலாம்.

    தனித்தமிழ் கண்ட கனிச்சாறு கவிஞர்

    பாவேந்தருக்குப் பிறகு பாடுபொருளாகிய கவிதைக் களங்கள் அனைத்திலும் மரபு சார்ந்த தமிழ்க்கவிதைகளைப் படைத்த கவிஞர் சிலருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். தனித்தமிழ்ப் பாவலரான அன்னார் வடித்தெடுத்த பாடல்களில் பிறமொழிச் சொற்கள் ஒன்றுகூட இல்லை என்பது வியப்பிற்குரியது. தனித்தமிழில் அமைந்தாலும் கவிதைக்குரிய கற்பனை, உணர்ச்சி முதலிய கூறுகள் அவர் பாடல்களில் குறைந்ததாக அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காட்சியையும் பொருளையும் கவிதையாகவே நோக்கி அவை பற்றிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் கவிதையாகவே சிந்திக்கத் தெரிந்த கவிஞராக அவர் தனித்து விளங்குகிறார். அவருடைய இழப்பு ‘தென்மொழியை’மட்டுமன்றித் தமிழன்பர்கள் பலரையும் பாதித்தது. அவருள் மணிமாறனும் ஒருவர். அன்னாருடைய இழப்புக்கு மணிமாறன் பாடிய கையறுநிலைப் பாடல்களில் அவலச்சுவையின் அடர்த்தியை உணர முடிகிறது.

    “பன்னூறு முறை ‘தம்பி’என்ற ழைப்பீர்
    பாசமழை பொழிவீரே! பறந்ததெங்கே?”

    எனத் தன்னைத் ‘தம்பி’ என அழைத்த பாசமிகு அண்ணன் மறைந்துபோனதை எண்ணிப் புலம்புவதைச் சுட்டுகிறார்.

    “மூவேந்தர்அக்காலம் காத்து வந்த
                                        மூவாத சீர்த்திமிகு தமிழன் மாண்பைச்
    சாவேந்தும் வேளையிலும் நிலைக்கச் செய்தீர்
                            சான்றாண்மை எந்நாளும் காத்து வந்தீர்!
    கூவிவந்த தமிழ்க்குயிலே! விடியும் முன்பே
                            குரலொடுங்கிப் போயினையே!”

    தமிழின் மரபுசார்ந்த பெருமையை முன்னர்ச் சுட்டித், தமிழனுடைய மாண்பு காப்பதில் பெருஞ்சித்திரனார் இறுதிவரையில் உறுதியாக இருந்தார் என்னும் நிலைப்பாட்டைப் பின்னர்ச் சுட்டுகிறார். தமிழும் தழிழ்நாடும் தமிழர்களும் அடையவேண்டிய பெருமையை அடையும் முன்பே அவர் மறைந்து போனதை, ‘விடியும்’ முன்பே என்னும் தொடரால் குறிப்பாகப் பெறவைக்கின்றார்.

    “துஞ்சாமல் தோளுயர்த்திக் கிளர்ந்த  வேழம் 
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்ற தெங்கே?

    “……………………………………..எங்கள்
    எழுச்சிக்குப் பண்ணிசைத்த முரசே! வாழை
    குருத்தொன்று முறிந்ததுபோல் விழிகள் மூடிக்
    கும்மிருட்டில் எமைஆழ்த்திச் சென்றீர் அய்யா!”
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்றதெங்கே?”

    என்றும், ‘கும்மிருட்டில் எமை ஆழ்த்திச் சென்றீர் ஐயா’என்றும் பயின்று வந்துள்ள கவிதைத் தொடர்கள் பெருஞ்சித்திரனாரை இழந்து கலங்கிக் கையற்ற கவிஞர்தம் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    ஆசிரியருக்குக் கையறுநிலை

    மகாகவி பாரதியின் நண்பராகப் பழகத் தொடங்கி, அவரைக் குருவாக வரித்துக் கொண்டவர் பாரதிதாசன். நட்பு, குருவான கதை இது. குருவாக திகழ்ந்தவர் நண்பரான கதை மணிமாறன் வாழ்க்கையில் நிகழ்ந்தது. வெள்ளமுத்து என்பார் கவிஞர் மணிமாறனின் உயர்நிலைப்பள்ளிக் கணித ஆசிரியர். காலம், வெள்ளமுத்து கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மணிமாறனையும் தமிழாசியராகக் கொண்டு வந்து அவரோடு சேர்த்தது. தனக்கு ஆசிரியராக இருந்தவருடன் தானும் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு மணிமாறனுக்குக் கிட்டியது. ஆசிரியர் நண்பரானதால் மதிப்போடு உரிமையும் கூடி இழைவது தவிர்க்க இயலாதது. நண்பராகப் பழகிய ஆசிரியர் வெள்ளமுத்து மறைந்தபோது,

    “பற்றுடனே பாசமழை பொழிந்தீர் வெள்ளைப்
    பாற்சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தீர்! எங்கள்
    சுற்றத்தைப் புலவர்களை மறந்து சென்றீர்!
    சொல்லவொணாத் துயர்தந்தீர்! அய்யா இங்கே
    கற்றவர்கள் பாராட்டும் நல்லீர்! உங்கள்
    கற்கண்டு சொல்லமிழ்தை என்று கேட்போம்?”

    என்று பாடினார் கவிஞர். ‘பாசமழை பொழிந்தது, ‘வெள்ளைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தது, ‘கற்றவர்களால் பாராட்டப்பட்டது’, ‘கற்கண்டு சொல்லமிழ்து’என வெள்ளமுத்தின்  சிறப்புக்களையெல்லாம் சிந்தனையில் தேக்கி, ‘என்று கேட்போம்?’ எனக் கலங்கி முடித்திருப்பது, கையறுநிலையைக் காட்சிப்படுத்துவதில் கவிஞர் பெற்ற இலக்கிய வெற்றியைக் குறிக்கிறது.

    விடியலின் பனி நீரான மகன் 

    கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனாகிய இராவணன், புலம்பலையே அறியாதவன். அத்தகையவன் தன் பாசமிகு மகன் இந்திரசித்தன், இலக்குவனால் வீழ்த்தப்பட்டபோது கலங்கிக் கையற்றுப் புலம்புகிறான்.

    “சினத்தொடும் கொற்றம் முற்றி
    இந்திரன் செல்வம் மேவி,
    நினைத்ததை முடித்து நின்றேன்.
    நேரிழை ஒருத்தி நீரால்,
    எனக்கு நீ செய்யத் தக்க
    கடனெல்லாம் ஏங்கி ஏங்கி
    நினக்கு யான் செய்வ தானேன்,
    என்னின்யார் உலகத் துள்ளார்?”

    என்னும் இராவணன் புலம்பலில் ஒரு தந்தையின் பாசம் பொங்கி வழிவதைக் காணமுடிகிறது. ‘தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடனையெல்லாம் தந்தை தான் பெற்ற மகனுக்கே செய்ய நேர்ந்ததே?’ என்னும் இலங்கை வேந்தனின் உணர்ச்சிக் குமுறல், கவிஞர் மணிமாறன் தன் மகன் இறந்த வேளையில் பாடிய,

    “கொள்ளிக்கண் பாய்ச்சும் இந்தக்
    கொடியதோர் உலகைக் காண
    பிள்ளை நீ வெறுத்தாய் போலும்!
    பெரும்பழி நேரும் என்றோ
    கள்ளமில் மழலை நீயும்
    கையறு நிலையைத் தந்து
    வெள்ளமாய் விரைந்து போனாய்?
    விடியலின் பனிநீர் ஆனாய்?” 

    என்னும் பாடலில் எதிரொலிக்கிறது. ‘உலகத்தின் பார்வை அஞ்சி’ என்னாமல் ‘உலகத்தைக் காண வெறுத்து’ என்னும் நுண்ணோக்குக் கையறுநிலையின் பொருளடர்த்தியைக் கூடுதலாக்குகிறது.

    “இன்பத்தைப் பாடுவதைவிடத் துன்பத்தைப் பாடுவதில் புலவர்கள் முனைந்துள்ளனர். காதலைப்பாடும் புலவர்கள் காதலரின் இன்ப நிலையைப் பாடுதல் மிகக் குறைவாக உள்ளது. காதலரின் பிரிவாற்றாத் துயரத்தைப் பாடுதலே மிகுதியாக உள்ளது…………… ஏக்கத்திலும் துன்பத்திலும் துயரத்திலுமே பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. மாறுதலுக்கு இடையே நிலைபேற்றையும், அலைவுக்கு இடையே அமைதியையும், அழிவுக்கு இடையே என்றுமுள தன்மையையும் நாடி ஏங்கி உணர்தலே பாட்டின் இயல்பாக உள்ளது”

    என்பார் அறிஞர் மு.வ. மானுட உணர்ச்சிகள் அனைத்தும் வலிமை வாய்ந்தன எனினும் ‘பிரிவு’அல்லது ‘இழப்பு’என்னும் உணர்ச்சியே கவிதை ஆக்கத்தில் பெரும் செல்வாக்குடையது என்னும் அறிஞர் மு.வ. அவர்களின் கருத்து, மணிமாறனின் கையறுநிலைப் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்படுகிறது எனலாம்.

    முனைவர் கடவூர் மணிமாறன்! ‘ஐயாயிரம் தமிழர் ஆம் உரிமை காக்க நான் பொய்யர்தமை எதிர்த்தபோது பொய்வழக்கால் சேர்த்த சிறை எனக்குத் தென்றல் வரும் சோலையன்றோ?’ என்று பாடிய பாவேந்தர் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட கவிதைப் போர்வாள்!. ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்’ அக்கால நூற்பயன்! இனம், மொழி, நாடு ஆகியவற்றின் எழுச்சிக்காகப் பாடுவது இக்காலக் கவிஞர் கடமை! இவர் அக்காலத்தை மறக்காத இக்காலத்துக் கவிஞர். அதனால் இவர் படாத இடர் இல்லை! அந்த நாள்  அகத்திணையும் தெரியும். இவர் இந்த நாள் சமூக நிலையும் அறிவார். அறுபது நூல்களுக்கு ஆசிரியர். ஐந்தாறு நாடுகளுக்குப் பார்வையாளர். உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகத் தொடங்கி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றவர். பன்னிரண்டாயிரம் நூல்களைத் தன் வீட்டு மாடியில் வைத்திருக்கும்  இவர் மடியில் வைத்துக் கொஞ்சுபவை மரபுக்கவிதைகளையே!. கரந்தை புலவர் கல்லூரி கண்ட கந்தகக் கவிஞருள் ஒருவர். இவர் துறந்தது இன்பம்! துறக்காதது தமிழ்த்தொண்டு! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழாசிரியருக்கு இலக்கணம் வகுத்தவர் சிலர். இவர் அவருள் ஒருவர்!

    (தொடரும்…)

    Share
  • ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில் வாழ்ந்தவர் தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் – மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுலகில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தரரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு – அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண் களே துணையாகவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் – தான் வந்தவேலை முடிந்தவுடன் – எங்கு முன்னர் இருந் தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

    கதைகளை நம்பலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. கதைகள் எப்படி இருந்தாலும் கதைகளூடாகப் புலப்படுகின்ற கருத்துக்களை த்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். காமனையே தகனம் செய்த இடத்தில் காதலுக்கு இடமே இல்லை. காதல் கொண் டால் தண்டனை அனுபவிக்க வேண்டும்தண்டனைதான் பூவுலகில் வந்து பிறப்பது. பூவுலகுதான் காதலுக்கும் சிற்றின்பத்துக்கும் ஏற்ற இடமாகும்.சிற்றின்பத்தை அனுபவிக்கும் வேளை பேரின்பம் பற்றிய புரிதல் வரும். வருவதற்கு பேரின்ப மயமான அந்தப் பெரும் பொ ருளை பரம்பெருளைப் பற்ற வேண்டும். பற்றும் நிலையும் பல இருக்கிறது. அதில் ஒரு நிலை நட்பு நிலையாகும். அதாவது அந்தப் பரம்பொருளை நண்பனாகக் கொண்டு அவனிடம் அடைக்கலம் புகுவ தேயாகும். அதைத்தான் ஆலாலசுந்தரர் இப்பிறவியில் கையாண்டார்.

    சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
    தாதாமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
    நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
    நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்

    என்று சிவஞானசித்தியார் – இறைவன்மீது அடியார் கொள்ளும் பக்தி நிலை பற்றிக் காட்டுவது நோக்கத்தக்கது.

    அந்தணராய் பிறந்தார். அரசனாய் வளர்ந்தார். ஆடம்பரமான வாழ் வினை வாழ்ந்தார். அப்பரைப் போலவோமணிவாசகரைப் போல வோ ஆலாலசுந்தரர் வாழ்ந்தவராகத் தெரியவில்லை. சுந்தரரைக் காட்டும் அத்தனை படங்களுமே அவர் அணி மணிகளுடன் ஆட ம்பரமாய் அரசிளங்குமரனாகவே இருப்பதாகவே அமைந்திருக்கி ன்றன. அப்பரையோ மணிவாசகரையோ காட்டும் படங்கள் அத்த னையும் எதுவுமே இல்லாத துறவுக் கோலத்தில் இருப்பதாகவே அமைந் திருப்பதையும் காணமுடிகிறது.ஆனாலும் சுந்தரர் இறை வனின் நண்பனாக விளங்கி – தான் விரும்பிய அனைத்தையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்றும் அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர் மணக்கோலத்தில் வருகிறார். பெண்வீட்டாரும் வருகிறார்கள். அந்த ஆனந்தமான வேளையில் சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல – ஒரு கிழப்பிரா மணர் உள்ளே வந்து விடுகிறார். புதிய புரட்சியை அவர் உருவாக்கி விடுகிறார். “திருமணம் செய்ய இருக்கும் மணமகன் சுந்தரன் – தனக்கு அடிமை” என்று ஒரு குண்டைப் போட்டு விடுகிறார். திருமணத்தை காண வந்தவர்கள் திகைக்கிறார்கள்! மணமகன் அடிமையா என்ன வினோதம் என்று யாவரும் முணுமுணுக்கி றார்கள். வந்த கிழப்பிராமணரோ பிடித்த பிடியாக “சுந்தரன் எனக்கு அடிமை” என்று அடித்துச் சொல்லி – அதற்கான எழுத்து ஆதார த்தையும் காட்டுகிறார். சபையினரால் எதுவுமே செய்ய முடிய வில்லை. மணமகன் கோலத்தில் இருந்த சுந்தரர் “நீர் என்ன பித்தனா அல்லது பேயனா – மனிதனுக்கு மனிதன் அடிமையா?” இது முறையற்றது என்று துள்ளிக் குதிக்கிறார்.ஆனாலும் கிழப்பிரா மணரின் பக்கம் வலுவாய் இருப்பதால் யாவரும் அவரையே பார்த்தபடி செயலற்று நிற்கிறார்கள். உஷாரான கிழப்பிராமணர்” இந்த வழக்கினைத் தீர்க்க இந்த இடம் பொருத்தம் அல்ல – நான் இருக்கும் திருவெண்ணை நல்லூர்தான் பொருத்தம் என்று கூறி “சுந்தரர் பின் தொடர திருவெண்ணை நல்லூர் செல்கிறார். அங்குள்ள கோவிலுக்குள் சென்ற அந்தணர் மறைகிறார். அனைவரும் திகைக் கின்றனர். எம்பெருமான் காட்சி தருகிறார். சுந்தரர் தெளிவு பெறு கிறார். “என்னை எப்படிப் பேசினாயோ அப்படியே சொற்றமிழால் சுந்தரா பாடு – உன் பாட்டே எனக்கு உகந்த அர்ச்சனை ஆகும்” என்கிறார் இறைவன். சுந்தரர் வாயிலிருந்து செந்தமிழ் அருவியாய் பெருக்கெடுக்கிறது. இறைவனை எந்தவார்த்தையால் திட்டினாரோ அதே வார்த்தையையே வைத்து

    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருட்துறையுள்
    அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

    என்று மனங்கசிந்துருகிப் பாடிப்பரவி நின்றார். நாயேன் பலநாளும் உன் நினைப்பின்றி இருந்தேன். அதனால் பேயாய் திருந்தேன், நீ பொன்னாய்மணியாய்வயிரமாய் இருக்கின்றாய் நானோ உன்னை மறந்தே இருந்திருக்கிறேன். ஊனாய்உயிராய்உடலாய்உலகாய்வானாய்நிலனாய்கடலாய்மலையாய்நீயே இருக்கிறாய். நானோ உனை அறியாமல் இருந்து விட்டேன்.

    என்று தம்மைத் தடுத்தாட்கொண்ட நிலையில் சுந்தரர் மெய்யுருகிச் செந்தமிழால் பரம்பொருளைப் பாடி நிற்கிறார். உனக்கு நான் ஏற்க னவே அடியவன் என்பதை மறந்துவிட்டேன் . நீ வந்து தெளிவு படுத்தி என்னை உனது மீளா அடைமையாய் ஆக்கி – என்னை மீட்டெடுத்தாயே பரம் பொருளே என்று ஏங்குவதும்இரங்குவதும் சுந்தரர் நிலையால் வெளிப்பட்டு நிற்கிறது எனலாம். ஆண்டவனின் பரீட்சை அடியவனைக் கடைத்தேற்றியதை இங்கு கண்டு தெளிகி றோம்.

    திருமணம் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று கேள்விகள் கேட்டு குழம்புவதில் பயனில்லை. தனது அடியானைத் தடுத்தாட் கொள்ள நடந்த ஒரு அற்புதம் என்றுதான் இதனைக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப் பங்களை அந்தப் படைத்தவன் செய்து காட்டியிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்தால் சுந்தர் கதை நன்றாகவே விளங்கும் என எண் ணுகிறேன்.

    இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தர் பின்னர் சங்கிலியார்பரவையார் என்னும் பெண்களை மணமுடிக்கிறார். பூவுலகில் அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிக்கிறார். அவரின் விருப்பங் களுக்கு ஆண்டவனும் நண்பனாய் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதும் சுந்தரர் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரர் பற்றிய கதைகள் பலவற்றைக் கேட்கும் நாம் – சுந்தரரின் முக்கியத்துவம் பற்றி நோக்குவதுதான் மிகவும் அவசியமாகும். அவற்றையே அகம் இருத்துவதுதான் முறையானதாகும் என்று கருதுகிறேன்.சுந்தரரின் தடுதாட் கொண்ட கதையில் மனம் லயிக்கும் நாங்கள் சுந்தரரின் பங்களிப்பை பற்றிப் பெரிதும் பார்ப்பதே இல்லை. “பித்தா பிறை சூடி” என்னும் பதிகத்தையும் “மீளா அடிமை உனக்கே ஆளாய்” என்னும் பதிகத்தையும் பாடி நிற்கும் அளவிலேயே சுந்தரரை விட்டு விடுவோம்.ஆனால் அதற்கு அப்பாலும் சென்று சுந்தரரை நாம் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது மனக்கிடக் கையாகும்.

    சம்பந்தர்அப்பர் காலம் போல் சுந்தரர் காலம் அமையவில்லை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் புறச்சமயங்களின் எதிர்ப்பலைகள் நிறையவே இருந்தன. அவர்களின் பணிகள் அனைத்துமே – புறச்சமயங்களின் எதிர்ப்பினின்று சைவத்தை “மேன்மை கொள் சைவமாக” மிளிர்ந்திடச் செய்ய வேண்டும் என்னும் வகையிலே அமைந்தது எனலாம். அதற்காகவே அவர்கள் அடியவர்கள் புடைசூழ பக்தியென்னும் புரட்சியை சமூகத்தில் நடத்திக் காட்ட வேண்டிய வர்களாகவே செயற்பட்டார்கள். ஆனால் சுந்தரர்காலம் அப்படி இல்லாத காரணத்தால் சுந்தரரின் பக்திப் பாடல்கள் நோக்கும்போக் கும் வித்தியாசமாய் அமைந்தது என்பது கருத்திருத்த வேண்டியது முக்கியம் எனலாம்.

    சுந்தரர் இக இன்பங்களில் திளைத்தவராகவே இருந்திருக்கி ன்றார்.ஆனால் எந்த நிலையிலும் இறைவனை மறவாதவராக, இறைபுகழ் பாடுபவராகஇருந்திருக்கிறார் என்பதும் நோக்கத் தக்கது. துறவையோவெறுப்பையோ அவரது பக்திப் பனுவல்கள் காட்டுவதாக இல்லை எனலாம். இயற்கையினை மிகவும் நேசித்துப் பாடுகிறார். இரந்து நின்று பாடிப் பரிசில் பெறும் நிலையினை அவர் சாடுகிறார். தனக்கு வேண்டியவற்றை இறைவனிடம் நண்பனாய் கேட்டே பெறுகின்றவராய் சுந்தரர் இருக்கின்றார்.

    தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
    பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
    அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே

    என்று வித்தியாசமாய் சிந்தித்துப் பாடுவது சுந்தரரின் முக்கியத்துவம் எனலாம். அதாவது “தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும், சார்ந்து நின்றாலும், பொருள்தர மனம் வராத பொய்மைமயான வாழ்வு உடைய செல்வரைப் பாடாமல், சிவனுடைய கோவிலைப் பாடுங்கள், இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; மறுமையில் சிவகதியும் கிடைக்கும். ஐயம் இல்லை” என்பதேயாகும்.

    வீரத்தின் மிடுக்கு இல்லாத செல்வனை – வீமன்அருச்சுனன் என்று புகழ்வதில் எந்தப் பயனுமில்லைகொடுக்க மனம் இல்லா தவனைப் பாரி என்று புகழ்ந்து கூறினாலும் கொடுபவர் இல்லை. மூத்துத் தளர்ந்து உடல் நடுங்கும் கிழவனாகிய செல்வனை – மலை போன்ற தோள் உடையவன் என்று புகழ்ந்து வாழ்த்துவதால் பயன் இல்லை.வஞ்ச நெஞ்சனைகொடியவனைபாவியைகெட்டவனைசாது என்று கூறிப் பாடுவதால் பயன் இல்லை.ஈயாத உலோபியை வள்ளல் என்றும்கல்வி இல்லாதவனைக் கல்வி வல்லவன் என்றும்புகழ்ந்து காலம் கழிக்காதீர். எம்பெருமான் சிவனைப் பாடிப் பயன் பெறுங்கள்” என்று காட்டும் பாங்கு சுந்தரரின் வித்தியாசமான சிந்தனையினையினை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா !

    சம்பந்தர்அப்பர்மணிவாசகர் செய்யாத ஒரு காரியத்தைச் சுந்தரர் செய்து தமிழ்ப் பக்திப் பரப்பில் முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறார். தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனத்தொடங்கும் “திருத்தொண்டத் தொகையினை” அளித்தமை எனலாம்.சுந்தரரின் இந்தக் கொடை மட்டும் கிடைக்கா விட்டிருந்தால் – நாங்கள் ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் சைவத்தின் அறுபத்து மூவரும் வந்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் இறை அனுபவங்களையும் நாம் அறியும் வாய்ப்பும் எமக்கு வாய்த்திருக்காது. அந்த பெருவாய்ப்பினை நாம் இன்று பெற்றிருப்பதற்கு அத்திவாரமே சுந்தரர்தான் என்பதை மனமிருத் துதல் அவசியமாகும்.

    சுந்தரரின் திருத்தொண்டர் தொகை இல்லையேல் – பெரியபுராணம் வந்திருக்காது. சேக்கிழார் என்னும் தெய்வப்புலவர்செந்தமிழ் புலவர் – இறை அடியார்களை எங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டி யிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சிந்தாமணியில் மூழ்கிய சோழ மன்னனும் சிவனின் திருவருளை அறிந்திருக்க மாட்டான்.

    பெரியபுராணம் என்னும் சைவத்தமிழ் காப்பியம் இன்று சைவவ த்துக்கே பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது என்றால் அதற்கு மூலகாரணமே ஆலாலசுந்தரர் தான் என்பதை மறுத்துரைத்துவிட முடியாது. ஆலயங்கள் தோறும் அடியார்களின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டு உரிய காலங்களில் குருபூஜை செய்யப்பட்டுதிருவீதி உலா வருவதற்கும் ஆலாலசுந்தரப் பெருமானே அடித்தளம் இட்டார் என்பது பெரு முக்கியத்தைத்தை உணர்த்து கிறதல்லவா !

    தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
    நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றே
    ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்
    தான்படிக்கும் அனுபங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

    வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி

    Share
  • ஸ்ட்ராங் மிட்டாய்

    ஸ்ட்ராங் மிட்டாய்

    பாஸ்கர் சேஷாத்ரி

    “எக்ஸ்கியுஸ் மீ” என குரல் கேட்டது

    திரும்பினேன்.

    பெரியவர் ஒருவர் உட்காந்து இருந்தார்.

    அது ஒரு சின்ன பூங்கா.

    “என்னையா சார் கூப்பிட்டீர்கள்?”

    “ஆமாம் சார்”

    “உங்க பேரு என்ன?”

    “சார், நீங்க யாரு என்ன ஒன்னும் புரியல”

    “எதாவது பணம் வேணுமா?”

    “இல்ல சார்”

    “ஏதாவது சாப்பிட வாங்கி வரட்டுமா?”

    “வேணாம். பக்கத்துல கொஞ்சம் உக்காருங்களேன்.”

    “இல்ல சார். இது சமயம் இல்லை. நோய்த்தொற்று ரொம்ப அதிகமா இருக்கு. நான் தள்ளி நிக்கறேன்.”

    “உங்களுக்கெல்லாம் இப்பதான் இந்த கோவிட். நான் தனிமைப்பட்டு ரொம்ப வருஷம் ஆச்சு”

    “புரியல சார்”

    “உங்க பேர் என்ன?”

    “செல்வம்”

    “செல்வம். எனக்கு பெரிய பசி எல்லாம் எப்பவோ போச்சு”

    “எந்த ஆசையும் இல்லை. உடல் நலம் அவ்வளவு நல்லா இல்லை. தினம் இங்கே வரேன். இங்க மரங்களோட பேசிக்கொண்டு இருக்கிறேன். யாரும் என்னை பொருட்டாக மதிக்க இல்ல.”

    “சாரி சார்.” நான் உட்கார்ந்தேன்.

    “தாங்க்ஸ் செல்வம். எனக்கு மனைவி இல்லை. இறந்து ஒம்போது வருஷம் ஆச்சு பையன் பேரன் எல்லாம் வெளியூர்ல. வாடகை வீடு. எனக்கு எல்லா பொழுதும் பெரும் பாரமாக இருக்கிறது. எவ்வளவு நேரம் டீ வி பார்க்கறது. படிக்க கண்கள் தெளிவாக இல்லை. தூக்கமும் போச்சு. என்னோடு தினமும் வந்து பேசுவியா?”

    “சார் என் வீடு கொஞ்சம் தொலைவு தான். ஆனால் காரில் இங்கு வந்து வாக்கிங் போறேன். நான் டிராப் பண்ணலாமா?”

    “எனக்கு வண்டி சொகுசு வேணாம்பா, நான் மெல்ல விந்தி போயிடுவேன்.”

    “உங்க போன் நம்பரை கொடுங்க. நான் வரும்போது சொல்றேன்.”

    “போன் இல்லப்பா. பக்கத்து வீட்டு போன் தான்.”

    “எனக்கு நிறைய விஷயம் பேசணும். தினம் வாங்களேன். உங்களுக்கு கஷ்டம் இல்லைன்னா. எனக்கு பேச ஒரு உயிர் வேணும்பா. சொல்றது புரிகிறதா செல்வம்?”

    “புரியறது சார்.”

    “பேசாம கலக்காம இருக்க முடியலப்பா? அமைதி என்னை கொல்கிறது ? திடீர்னு ஒரு அழுகை என்னை மீறி வருகிறது. தனிமை பெரிய கொடுமை. உனக்கெல்லாம் இது புரியுமா தெரியல?”

    “இல்ல சார். உங்க ஆழமான வலி எனக்கு உறைக்கிறது.”

    “நான் தினம் வந்து உங்களை பாக்கிறேன் சார். இப்ப உங்களை இறக்கி விடட்டுமா?”

    “வேணாம் பா. உடனே வீடு வந்து விடும். என்னோடு மெல்ல நடந்து வர முடியுமா?”

    “நிச்சயம் சார்” என எழுந்தேன்

    “நன்றி செல்வம். இந்தா இந்த ஸ்ட்ராங் மிட்டாயை வாய்ல போட்டுக்க. எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

    “தாங்க்ஸ் சார். அப்புறம் சாப்பிடறேன். இதை வாய்ல போட்டா பேச்சு போயிடும்” என்றேன்.

    “ஆமா இல்லை” என வாய் திறந்து சிரித்தவாறு சொன்ன போது அந்த மிட்டாயின் வெண்மை அவர் மனசையும் சொல்லியது.

    Share
  • ஆகஸ்டு 12, உலக யானை தினம்

    ஆகஸ்டு 12, உலக யானை தினம்

    ஆகஸ்டு 12, உலக யானை தினம். யானைகள் குளிக்கும் அழகை இங்கே பாருங்கள். பேருருவம் கொண்ட போதிலும், அதுவும் ஒரு குழந்தை தான் என்பதை இதில் கண்டுகொள்ளலாம்.

    Love elephants, celebrate elephants in this World Elephant Day.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய விளையாட்டுகள் – 90ஸ் மிட்டாய் கடை

    புதிய விளையாட்டுகள் – 90ஸ் மிட்டாய் கடை

    சென்னை சிட்லபாக்கத்தில் அமைந்துள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடை (Back To The 90s Mittai Kadai), 90களில் புழக்கத்தில் இருந்த விளையாட்டுகள், தின்பண்டங்களுக்குப் புகழ் பெற்றது. இந்தக் கடையின் புதிய வரவுகள், புதிய விளையாட்டுகள், புதிய தின்பண்டங்கள் என்னென்ன? வாங்க, பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்னஞ்சிறு கிளியே | கிருஷ்ணகுமார் குரலில்

    சின்னஞ்சிறு கிளியே | கிருஷ்ணகுமார் குரலில்

    பாடல் – சின்னஞ்சிறு கிளியே
    இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடியவர் – ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    -மேகலா இராமமூர்த்தி

    மாரிக்காலம் முடிவுற்றும் சுக்கிரீவனின் படைகள் இராமனுக்கு உதவியாய் வந்துசேரவில்லை. சுக்கிரீவனின் இந்த நன்றிகொன்ற செயலை எண்ணிச் சினந்த இராமன், அவன் தவற்றைச் சுட்டிக்காட்டுமாறு இளவல் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பினான்.

    தமையனின் ஆணையையேற்று விரைந்து கிட்கிந்தை மலைக்குச் சென்ற இலக்குவன் அதன் உச்சியில் நின்ற தோற்றம் மலையின்மீது பொன்னிறமானதோர் ஆண்சிங்கம் நிற்பதைப் போன்றிருந்தது.

    சீற்றத்தொடு சீயமென இலக்குவன் குன்றின் உச்சியில் நிற்பதைக் கண்ட வானரர்கள், காலனைக் கண்டவர்கள்போல் கதிகலங்கி, அங்கதனை அடைந்து இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.

    அங்கதன் மறைவாக நின்று இலக்குவனின் கோப முகக்குறியைக் கண்டுகொண்டான். விரைந்து தன் சிறிய தாதையான சுக்கிரீவனிடம் சென்றான். விசுவகர்மாவின் மகனான நளன் எனும் வானரன் உருவாக்கிய அரண்மனையில் பஞ்சணையின்மீது இளமகளிர் தன் பாதம் வருட இன்துயிலில் ஆழ்ந்திருந்தான் சுக்கிரீவன்.

    அங்குவந்த அங்கதன் பதற்றத்துடன், ”எந்தையே…நான் சொல்வதைக் கேள்! இராமனின் இளவல் இலக்குவன் தன் மனத்திலுள்ள பெருங்கோபத்தை முகம் எடுத்துக்காட்ட, யாரும் தடுக்கவியலா வேகத்தொடு கிட்கிந்தைக்கு வந்து சேர்ந்துள்ளான். அதுகுறித்து உன்னுடைய உள்ளக் கருத்து என்ன?” என்று கேட்டான்.

    எந்தை கேள் அவ்
          இராமற்கு இளையவன்
    சிந்தையுள் நெடுஞ்
          சீற்றம் திரு முகம்
    தந்து அளிப்ப தடுப்ப
          அரும் வேகத்தன்
    வந்தனன் உன் மனக்
          கருத்து யாது என்றான். (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4397)

    ஆனால், கள்ளருந்திய களிப்பிலும், இளமங்கையர் அருகிருந்து செய்யும் பணிவிடையிலும் மயங்கிக் கிடந்த சுக்கிரீவனிடமிருந்து எந்த விடையும் கிடைக்கவில்லை அங்கதனுக்கு.

    வாலி கணித்தபடியே சுக்கிரீவன் பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்றவனாகவும், கொடுத்த வாக்கை மறந்த பொறுப்பற்றவனாகவும் நடந்துகொண்டமைக்கு இந்தக் காட்சி நல்ல சாட்சி!

    சுக்கிரீவனின் நிலையைக்கண்ட அங்கதன், இனி இவனிடம் யோசனை கேட்டுப் பயனில்லை என்பதையுணர்ந்து அறிவிற் சிறந்த அனுமனைத் தேடிச்சென்று அவனையும் திறல்மிகு வீரர்களையும் அழைத்துக்கொண்டு தன் தாய் தாரை தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்தான்.

    இலக்குவனின் வருகை பற்றி அவளுக்கு அறிவித்து, மேலே நாம் செய்ய வேண்டியது என்ன என்று அவளை வினவினான் அங்கதன். சுக்கிரீவனின் நன்றியற்ற செயலால் ஏற்கனவே வெறுப்படைந்திருந்த தாரை, ”இராமன் சொன்ன கெடுவுக்குள் படைதிரட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று நான் பன்முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை; இப்போது அதன் விளைவைச் சந்திக்கின்றீர்கள்; வாலியைக் கொன்று அரசாட்சியை உங்களுக்கு (சுக்கிரீவனுக்கு) அளித்த பேராற்றல் உடைய அவர்கள் உங்கள் அலட்சியச் செயலைப் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அவர்கள் உங்களோடு போருக்கு வந்தால் நீங்கள் மாளவேண்டியதுதான்” என்றாள் கோபத்தோடு.

    அந்த நேரத்தில் இலக்குவன் எளிதில் நகருக்குள் நுழையாதபடி வானரர்கள் நகரின் வாயிற்கதவைத் தாழிட்டுப் பாறைகளை வைத்து அடைத்தனர். இலக்குவன் உள்ளேவந்தால் அவனை நையப் புடைப்போம் என எண்ணிக் கையில் பெரும் மரங்களையும் பாறைகளையும் வைத்துக்கொண்டு தயாராக நின்றனர்.

    தன்னிடமிருந்து தப்புவதற்காக வானரர்கள் செய்த வேடிக்கையான செயல்களைக் கண்டு எள்ளலோடு நகைத்த இலக்குவன், தன் தாமரைபுரை தாளினால் அவ்வாயிற் கதவினை மிக எளிதாகத் தள்ளினான். அதனால், பெரும் பாறைகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட வாயிற்கதவோடு மதிலும் சேர்ந்து சிதைந்துபோனது. இந்நிகழ்வு, தெய்வத்தின் திருவடிபட்ட அளவில் தீர்த்தற்கரிய தீவினைகளும் அழிந்துபோவதை ஒத்திருந்தது என்கின்றார் கம்பர்.

    காவல் மா மதிலும் கதவும் கடி
    மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
    தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
    பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.
    (கம்ப – கிட்கிந்தைப் படலம் – 4409)

    அரணைத் திரணமாய் மதித்து இலக்குவன் தள்ளியது கண்டு உயிரச்சம் கொண்ட வானரர்கள், கிட்கிந்தை மலையைவிட்டு விரைந்தோடிக் கானடைந்ததால் விண்மீனிலா வானம்போல் வெறுமையாய்க் காட்சியளித்தது கிட்கிந்தை.

    நிலைமையின் விபரீதத்தை அறிந்த தாரை, மகளிர்குழாத்தோடும் சென்று இலக்குவன் வரும் வழியில் நின்றாள். சினத்தோடு சீறி வந்துகொண்டிருந்த இலக்குவன், மகளிர்குழாம் எதிர்நிற்பது கண்டு வேகந்தணிந்து அவர்களை நேர்நோக்க நாணித் தலைகவிழ்ந்துகொண்டான். அவன் தன் வில்லினை நிலத்தில் ஊன்றி, வானர மகளிரை நிமிர்ந்துநோக்கத் தயங்கிநின்ற அக்காட்சியானது, ”மாமியர் கூட்டத்தினிடையே நாணிநின்ற மருமகனை ஒத்திருந்தது” என்று நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார் கவிவலாரான கம்பர்.

    இலக்குவனின் அருகில்வந்த தாரை, ”ஐய! நீ சீற்றதோடு வருவதுகண்ட வானரர்கள் நீ வந்த காரணம் அறியாது உன்னைக் கண்டு அஞ்சுகின்றனர். இராமனின் திருவடிகளை நீங்காதவனாகிய நீ இங்குவந்த காரணத்தை எமக்கு அறியத்தருவாய்” என்று அன்போடு வினவினாள்.

    பகலில் தோன்றிய நிலவுபோல் வந்துநின்ற தாரையைச் சற்றே நிமிர்ந்து நோக்கினான் இலக்குவன். மங்கல அணிகளற்று, கூந்தலில் மலர்களற்று, உடலை ஆடையால் முழுவதும் போர்த்துக்கொண்டு நின்ற அவளின் கைம்மைக் கோலம் தயரதனைப் பிரிந்த தம் தாயரின் கோலத்தை அவனுக்கு நினைவூட்டவே, அதனைக் காண ஆற்றாது அவன் நயனங்கள் பனித்தன; நெஞ்சம் வேதனையில் ஆழ்ந்தது.

    மனத்தைத் தேற்றிக்கொண்டு தாரையை நோக்கிய இலக்குவன், ”சுக்கிரீவன் படைகளோடு சீதையைத் தேட உதவிக்கு வருவேன் என்று சொல்லியிருந்தான்; ஆனால் சொன்னதை மறந்துவிட்டான்; அவன் நிலையை அறிந்துவர அண்ணனிட்ட கட்டளையை ஏற்று இங்கு வந்தேன்! அதுகுறித்து விளம்புக!” என்றான்.

    சமயோசித அறிவு நிரம்பிய தாரை, ”செம்மையான உள்ளத்தோடு சுக்கிரீவனின் பெரும்பகையை மாற்றி (வாலியை அழித்தமை), அவனுக்கு அரசாட்சியை அளித்திருக்கின்றீர்கள். நீர் செய்த பேருதவியைச் சுக்கிரீவனும் அவனுடைய கூட்டத்தாரும் சிறுமையாய்க் கருதிப் புறக்கணிப்பரேல் இப்பிறவியிலேயே வறுமையடைந்து செல்வத்தோடு புகழும் அழிந்து, மறுமையிலும் நற்கதி பெறாது நரகெய்துவர்” என்று பதிலிறுத்தாள்.

    செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
          பேர் உதவி தீரா
    வெம்மை சேர் பகையும்
          மாற்றி அரசு வீற்றிருக்கவீட்டீர்
    உம்மையே இகழ்வர் என்னின்
          எளிமையாய் ஒழிவது ஒன்றோ
    இம்மையே வறுமை எய்தி
         இருமையும் இழப்பர் அன்றே.  (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4431)

    இராமன் சுக்கிரீவனுக்குச் செய்த உதவியின் சிறப்பு குறித்துத் தாரை சொன்ன சொற்கள், அமுத தாரையென இலக்குவனின் காதில் விழுந்தன; அவன் சினம் தணிந்தான். அதுதான் இலக்குவனைச் சந்திக்கச் சரியான சமயம் என்றுணர்ந்த மாருதி, மெல்ல இலக்குவனின் அருகில் வந்தான்.

    வந்தவன் இலக்குவனின் அடிபணிய, அவனை நோக்கிய இலக்குவன், ”கேள்வி ஞானத்தில் வரம்பில்லாதவனாகிய நீயும் முன்பு நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டாய் அல்லவா?” என்று மாருதியைப் பார்த்து ஏமாற்றத்தோடு வினவ, அதனை உடனே மறுத்த மாருதி,

    ”ஐயனே! அன்புமிகு தாயையும் தந்தையையும் குருவையும் தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும் பசுக்களையும் குழந்தைகளையும் பாவையரையும் கொலை செய்தவர்க்கும் அந்தப் பாவங்களைப் போக்குதற்குரிய கழுவாய் உண்டு. ஆனால், காலத்தினாற் செய்த அழியாத பேருதவியை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து மீளும் வழி ஒன்றேனும் உண்டோ? இல்லை!” என்றான்.

    சிதைவு அகல் காதல் தாயை
          தந்தையை குருவை தெய்வப்
    பதவி அந்தணரை ஆவை
          பாலரை பாவைமாரை
    வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
          ஆம் ஆற்றல் மாயா
    உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
          ஒழிக்கலாம் உபாயம் உண்டோ. (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4435)

    எத்தகைய நன்மையை மறந்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழியுண்டு; ஆனால் காலத்தினாற் செய்த நன்மையை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்பதுதானே வள்ளுவரின் வாய்மொழியும்?

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    (110)

    வள்ளுவரின் இக்கருத்தை விரிவான சான்றுகளோடு விளக்குகின்றது சங்கப் புலவர் ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடல்.

    ”பசுவின் முலையறுத்த தீவினையாளர்களுக்கும், சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும்கூட அவர்கள் செய்த கொடுந் தீவினைகளிலிருந்து விடுபடக் கழுவாய் (பரிகாரம்) உண்டு. ஆனால், உலகமே தலைகீழாய்ப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்மையைப் போற்றாது புதைத்தோர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியில்லை என்று அறநூல் தெரிவிக்கின்றது” என்பது அப்பாடல் நமக்குத் தரும் செய்தி.

    ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
    மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
    குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
    வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
    நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

    செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
    அறம் பாடிற்றே ஆயிழை கணவ…”
      (புறம்: 34)

    ஈண்டு அறம் பாடிற்று என்று புலவர் குறிப்பிடுவது திருக்குறளைத்தான் என்பது தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    ஆலத்தூர்கிழாருடைய பாடலின் பிரதிபலிப்பாகவே, மாருதியின் வாக்காக அமைந்த, மேற்கண்ட கம்பரின் பாடலும் விளங்குவது கண்கூடு. சங்கப் பாடல்களில் கம்பருக்கிருந்த பற்றையும் பயிற்சியையும் இது தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

    தொடர்ந்து இலக்குவனிடம் பேசிய மாருதி, ”ஆண் தகையே! வானர அரசனாகிய சுக்கிரீவன் உம் ஆணையை மறக்கவில்லை. வலிமையுள்ள வானரப் படைகளைத் திரட்டிச் சேர்ப்பதற்கு எல்லாத் திசைகளிலும் அவன் தூதர்களை அனுப்பியுள்ளான். அவ்வானர வீரர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதால் சற்றுக் காலதாமதம் ஆகிவிட்டது. நீங்கள் அளித்த அரசச் செல்வத்தையும் அதனைப் பெற்றுவக்கும் சுக்கிரீவனையும் நாம் காணச் செல்வோம் வாருங்கள்!” என்று பணிவோடு தெரிவிக்கவும் இலக்குவனின் கோபம் அடங்கியது.

    மாருதியோடு இலக்குவன் சென்றான். வழியில் வாலி மைந்தனான அங்கதன் எதிர்வந்து இலக்குவனை வணங்கவே, ”என் வரவினை உன் தந்தைக்குத் தெரிவி” என்றான் இலக்குவன்.

    அங்கதன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு மீண்டும் சென்று அவனைத் துயிலெழுப்பினான். மெல்லக் கண்விழித்த சுக்கிரீவனிடம், சொல்லிய காலக்கெடு முடிந்தபின்னும் வானரர்கள் சேனையொடு இராமனைக் காணச் செல்லாததால் இலக்குவன் சீற்றத்தோடு கிட்கிந்தைக்கு வந்திருப்பதையும், சேனை திரட்டச் சுக்கிரீவன் தூதர்களை அனுப்பியிருப்பதால்தான் காலதாமதம் ஆகிறது என்று கூறி தாரையும் அனுமனும் நிலைமையைச் சமாளித்து இலக்குவனின் சினத்தீயைத் தணித்திருப்பதையும் தெரிவித்தான்.

    அதனைக்கேட்ட சுக்கிரீவன், நறவின் பிடியில் தான் சிக்கியதால் நேர்ந்த அவலமே இது என்று தன்பால் கழிவிரக்கம் கொண்டான். இனி நறவைத் தொடுவதில்லை எனச் சூளுரைத்து, “இலக்குவனை நீயே இங்கு அழைத்து வருக!” என்று அங்கதனை அனுப்பிவிட்டு இலக்குவனை வரவேற்கும் வகையில் தன் அரண்மனைத் தலைவாயிலில் சுற்றஞ்சூழ வந்துநின்றான்.

    இலக்குவன் அங்கே வர, அரச குலத்தவரை வரவேற்பதற்குரிய முறைப்படி அவனை வரவேற்ற சுக்கிரீவன், இலக்குவனை அரண்மனைக்குள் அழைத்துச்சென்று உணவுண்ணும்படி உபசரிக்க, ”சீதையின் இருப்பிடத்தை நீ காட்டுவதே எங்களுக்கு அமுதம் ஊட்டுவதற்கு ஒப்பாகும்” எனவுரைத்து இலக்குவன் உணவுண்ண மறுத்துவிட்டான்.

    ”சுக்கிரீவன் அதுகண்டு மனம் வருந்தி, ”நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு நீ இராமனிடம் விரைவில் வந்துசேர்” என்று மாருதியிடம் கூறிவிட்டு இலக்குவனோடு சென்று இராமனைச் சந்தித்தான்; உரிய காலத்தில் படையுடன் வராததற்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.     

    மறுநாள் காலை வெள்ளம்போல் வானர சேனைகள் நாலா பக்கமிருந்தும் வந்து குவிந்தன. அதனைக் கண்ட இராமன் இலக்குவனிடம், ”கடலினைக் கண்டோம் என்று சொல்பவர் யாரும் அதனை முழுமையாய்க் கண்டவர் இல்லை; அஃதொப்ப இந்த வலிமைமிகு சேனையின் உடலை (அதன் நடுப்பகுதியை) மட்டுமே நாமும் காணமுடிகின்றது; இதன் முடிவைக் காண இயலவில்லை” என்றான் வியந்து!

    அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு
          நாமும் நம் அறிவால்
    உடல் கண்டோம் இனி முடிவு
          உள காணுமாறு உளதோ
    மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்
         மண்ணிடை மாக்கள்
    கடல் கண்டோம் என்பர் யாவரே
          முடிவு உறக் கண்டார். (கம்ப: தானைகாண் படலம் – 4547)

    அதனை ஆமோதித்த இளவல் இலக்குவன், ”ஆம், எதனையும் எளிதில் முடிக்கவல்ல இந்தச் சேனையின் துணையால் அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றான் அழுத்தமாக.

    [தொடரும்]

    *****

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • சிம்ம வாகன சிங்காரி, மாதே நீலாயதாக்ஷி

    சிம்ம வாகன சிங்காரி, மாதே நீலாயதாக்ஷி

    நாகை ராமஸ்வாமி

    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி
    ஏகதந்தன் ஆனைமுகன் வலம் வந்த தாயே
    இருவிழிப் பார்வையுன் காருண்யம் காட்டுதம்மா
    முப்பெரும் தேவியே மூவுலகும் காப்பவளே
    நான்முக வேதமுன் நற்பெயர் ஓதுங்கால்
    ஐந்தெழுத் தலைவனும் நந்தியுடன் மகிழ்கின்றான்
    ஆறுமுகன் மயில்வாகனன் அருள் சுரக்க வைத்தாயே
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    ஏழுமலை கருடவாகனன் எழில்மிகு சோதரி
    எட்டா உயரமாம் கயிலை ஹேமவதி
    நவநிதியும் நலம் பலவும் நயமாய் நல்கிடுவாய்
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    நீள கரும்பின்னல் மின்னலாய் அசைந்தாட
    லாவண்யரூப கிளிகொஞ்சும் திருமுகம்
    யக்ஞகோஷம் புன்னகை பூக்க வைக்க
    தாமரைத் திருவடியில்  பரிமள மலரிட்டு
    க்ஷீராபிஷேகம் செய்தோம் மஞ்சள் குங்குமமிட்டோம்

    என்றும் அருளிடும் தாயே மாரியம்மா
    சாரியாய் நோயுறு முன் சேய்களை காத்திடுவாய்
    மன மகிழ்ந்திடுவாய் மங்களம் பொங்க வைப்பாய்
    சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் (பேறினி)

    சேக்கிழார் பாடல் நயம் (பேறினி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    பாடல்

    பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
    ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
    மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

    இறைவன்  தம் வலத்திருக் கண்ணில் தம் கண்ணை எடுத்து அப்பிய வள்ளல்தன்மை மிக்க திண்ணனாரின்  சிறப்பை மேலும் காட்டத்   திருவுளம் கொண்ட பெருமான்தம், அடுத்த திருக்கண்ணிலும் செங்குருதி பாய்ச்சுவதை உலகில்  வேட்டுவக்  குலத்தின் தவத்தால் தோன்றி, தம் கொள்கை உறுதியால் தேவர்களை விட மேலாக விளங்கிய திண்ணனார் துண்ணெனக் கண்டனர்!

    அவ்வாறு கண்ட வேடுவர், ‘’ஆ! கெட்டேன். எங்கள் காளத்தி ஈசர் திருக் கண்களுள் ஒன்றில்  வழிந்த குருதி நின்றபோது, மற்றைத் திருக்கண்ணிலும் குருதி பொங்கி நிறைந்து வழிகிறதே! ஆ! நான் இதனைக் கண்டு அஞ்சமாட்டேன். என்வசம் மருந்து உள்ளதே! இன்னும்  ஒரு கண் எனக்கு உண்டு! அந்தக் கண்ணையும் தோண்டி அப்பி  இத்துன்பத்தை ஒழிப்பேன்! என்றார்.

    நெற்றியில் கண் ஒன்று  பெற்ற இறைவனின் குருதி பொழியும் இடத்  திருக்கண்ணில், எவ்வாறு தம் இடக் கண்ணை எடுத்து அப்புவது? என்று  நேர்ந்த சிக்கலைச் சிந்தித்தார். தம் இடக்கால்  விரலை இறைவனின் குருதி பொங்கும் திருக்கண்ணில் ஊன்றி , அடையாளம் வைத்துக் கொண்டார்! தம் உள்ளத்தில்  நிறைந்த பாசத்துடன், ஒப்பற்ற அம்பொன்றை  திண்ணனார் தம் இடக் கண்ணில் வைத்து  ஊன்றினார்!  அதனைக் கண்ட தேவதேவர் திருவுள்ளத்தால்  அச்செயலைப்  பொறுத்துக்   கொள்ள இயலவில்லை!

    அப்போது அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது!  அதன் மேலிருந்து  திண்ணனார் உள்ளத்தை வசமாக்கிக் கொண்ட அற்புதச் செயலைச் செய்த திருக்காளத்தி இறைவன்  திருக்கரம் உயர்ந்து  அன்புடன் தம் கண்ணைத்  தோண்டும் கரத்தைத் தடுத்தது. அப்போதே நாகப்பாம்பைக்  கங்கணமாக  அணிந்த அவர் தம் அருள்வாக்கு, ‘’ நில்லு  கண்ணப்ப, நில்லு கண்ணப்ப! எனதன்புடைத் தோன்றலே  நில்லு கண்ணப்ப! ‘’ என்று பதற்றத்துடன்  கூறியருளிற்று!

    வேடர்தலைவர் தம் கண்களைத்   தோண்டி அப்பியதையும், அவர் அளித்த ஊனமுதை உகந்து ஏற்றுக் கொண்ட இறைவன் திருக்கரம் விரைந்து திண்ணனார் கரத்தைப் பிடித்துத் தடுத்ததையும் ஆகம அறிவு மிக்க அந்தணர் கண்டுணர்ந்தார்!  அப்போது பிரமன் முதலான தேவர்கள் பூமாரி பொழிந்தனர்! வேதங்கள் ஒலித்தன! என்றெழுதிய சேக்கிழார் பாடுகிறார்;

    பாடல்

    பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
    ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
    மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

    பொருள்

    இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’ எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!

    இப்பாடலின் பொருள்

    தமது பெருமானது திருக்கண்ணினுக்கு வந்த ஊற்றினைக் கண்டுபயந்து; தங்கண் இடந்தப்பும் கையை – என்ற தொடர் தமது இடக்கண்ணைத் தோண்டி அப்புதற்கு உதவநின்ற கண்ணப்பரதுகையை; ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு – இடபக்கொடியை உயர்த்தியவராகிய காளத்தியப்பர் தமது கையினாற் பிடித்துக்கொண்டு; மாறிலாய்! – ஒப்புயர்வற்றவனே!; என்வலத்தில் – எனது வலது பக்கத்தில்; நிற்க என்று மண்ணு பேரருள் புரிந்தார் – நிற்பாயாக என்று நிலைபெற்ற பெரிய திருவருளினைச் செய்தனர்.

    பேறு இனி இதன் மேல் உண்டோ? (ஆதலால்) இனி யிதன்மேற் பெறத்தக்க பயன் வேறேதும் உண்டோ? இல்லை.

    விளக்கவுரை

    இங்கு வலப்பக்கத்தில் நிற்க என்றருளப் பெற்ற கண்ணப்ப நாயனாரும் அவ்வாறருளி அவரது இடப்பக்கத்தில் தாம் அமைந்து நின்ற காளத்திநாயனாரும் பூட்டிய வில்லின் இருதலை போலப் பிரித்துணராத நிலையிற் பிணைந்தனர் என்பது குறிக்க இவ்வாறு பூட்டுவிற் பொருள்கோள் பெற வைத்தது குறிக்க.

    நற் பேறு – இங்கு இதன்மேல் உண்டோ என்றதனால் சிவசாயுச்சியமாகிய முடிந்த பதம் குறித்தது. அருள்ஞானக் குறியினின்று அருள் நோக்கத்தால் மலமூன்று மற்றாராய், அவனேதானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி செய்தனராதலின் இவர் பெற்றது பரமுத்தியேயாம் என்றும், வேறு சிலர் கூறுவதுபோலச் சிவபூசையாகிய கிரியைக்குரிய சாமீபமாகிய பதம் மட்டுமன்று என்றும் விசேட உரை காண்பர் ஆலாலசுந்தரம் பிள்ளை.

    உண்டோ? – ஆன்மாக்கள் அடையத்தகும் பேறு இதற்கு மேல் வேறொன்று மி்ல்லை என்று வினா எதிர்மறை குறித்தது. “கற்றதனா லாய பயனென் கொல்” என்புழிப்போல வேறு இல்லை என்னாது உண்டோ என வினாச்சொல்லாற் கூறியது உறுதிப் பொருள் தருதற்பொருட்டு.

    “கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பரா”தலின் கற்றதனாலாய் முடிந்த பயனைப் பெற்றனர் என்ற இத்திருக்குறட் பொருட்குறிப்பும் காண்க கண்ணப்பர் தாம் யாவரினும் மிக்க பேறுபெற்றனர் என்பது கருத்து. இதுபற்றியே திருவாதவூரடிகள் முதலிய பரமாசாரிய மூர்த்தி மற்றும் எல்லாப் பெரியோர்களாலும் துதிக்கப்பெற்றனர் என்க.

    திருக்கண் – பிரானது ஞானத் திருமேனியில் எவ்விதவூனமும் இல்லாத கண். வந்த – தோற்றப்பட்ட. ஊறு – உறுவது. ஆகுபெயராய்ப் புண்ணையும் அதிற் பெருகிய உதிரத்தையும் குறித்தது. ஊறு – பேறு தொழிலாகு பெயர்கள்.

    அஞ்சி – அவர்க்குத்தீங்கு – ஊறு – நேர்ந்ததற்கு அஞ்சினாரேயன்றித் தம்கண்ணைத் தோண்டுதற்கு அஞ்சினாரல்லர் என்பதுதோன்றத் தங்கண் இடந்து அப்ப என்றார்.

    அப்ப உதவும் கை – உதவும் – வலது கண்ணைத் தோண்ட உதவின என இறந்த காலப் பெயரெச்சமாகவும், இடது கண்ணைத் தோண்ட உதவி நிற்கும் என காலப் பெயரெச்சமாகவும், இவ்வரிய செயல்களிரண்டினையும் உதவும் என்ற ஒரு சொல்லாலே குறிக்க உதவும் சொல் அருமை காண்க.

    உதவும் கை – உயிரின் இச்சையறிந்து உதவுவது கையின் பண்பு என்பது குறிப்பு; “உடுக்கை யிழந்தவன் கை போல” என்ற திருக்குறளானறிக என்பார் சுப்பராய செட்டியார்.

    ஏறு உயர்த்தவர் – காளத்தி நாதர். தருமசொருபமாகிய விடையினை ஊர்ந்து அருள்வது போலஅதனையே கொடியாக உயர்த்தியும் கையாற்பிடித்தவாறு அவ்வறத்தின் வழியே அன்பு செய்த இவரையும் கையாற் பிடித்துத் தமது சாயுச்சியத்திற்கு உயர்த்தினர் என்றது குறிப்பு.

    தம்கையால் – சிவலிங்கத்திருமேனியினின்றும் தோன்றிய கையினாலே, உதவும் கைக்குப் பிரதி உபகாரம் தமது கையாற் பிடித்தலாம் என்பது போலக் கையாற் பிடித்தனர் என்றதும் குறிப்பு. இது பெண்ணொரு பாகனது வளையலணிந்த இடக்கை என்று காளத்தியில் உள்ள வடமொழிக் கல் வெட்டுக் கூறுகிறது.

    என்வலத்தில் – வலத்தில் – வலப்பக்கத்தில், இடப்பக்கத்தில் உமையம்மையாரும் திருமாலும் உள்ளார்கள் என்ற குறிப்பினால் வலத்தில் என்றார். இடம் அம்மையாரது பாகமாக, வலம் தமது பாகமாதலின் அதனில் நிறுத்தினார் என்பதுமாம். அம்மையாருக்கு இடமே இடமாகக் கொடுத்தவர் இவர்க்கும் வலமே இடமாகக் கொடுத்தார் என்ற நயமும், சக்கரம் வேண்டித் தமது ஒரு கண்ணைத் தோண்டி அருச்சித்த திருமாலுக்கு எளிய இடப்பாகமும், தனக்கென ஒன்றும் வேண்டாது இறைவன் திருக்கண்ணில் வந்த ஊறுகண்டு அஞ்சி அதன்பொருட்டே தமது ஒருகண்ணை அப்பி மற்றொது கண்ணையும் உதவ நின்றும் பணி செய்த இவர்க்கு வலப்பாகமும் கொடுத்தனர் என்ற நயமும்காண்க. வலம் – மேம்பாடு – வெற்றி – எனக்கொண்டு அன்பே சிவமாவது சிவத்தின் வலமாதலால் அதனில் நீ நிற்பாய் என்றார் என்ற குறிப்புமாம்.

    மாறு இலாய் வலத்தின் நிற்க என்க – ஒப்பும் உயர்வுமில்லாதவனே நீ வலத்தில் நிற்பாயாக. வலத்தின் நிற்க – எனப் பிரித்து, வலம் – வல்லமை, இன் – உவமவுருபு எனக்கொண்டு, அருள் வடிவாகிய சத்தி “நீரின் தன்மை அனல் வெம்மையென” அகலாது சமவாயமாக நீக்கமின்றி நிற்றல்போல, அன்பு வடிவமாகிய நீ் பிறிவறியாது அத்துவிதமாக நிற்க என்பதும் குறிப்பு.

    “ஒளியென்ன நில்லென்றான்” என்பது பஞ்சாக்கரப்பஃறொடை.

    நிற்க – நிலைபேறு பெற்று நிற்க என்றலுமாம்.

    மன்னு பேரருள் – நிலைபெறும் பெரியதிருவருள். அன்பிற் பெரியவருக்கு அருளாற்பெரியது செய்தனர் என்க.

    சிறப்புப் பொருள்

    இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய  அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!  அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது! பின்னர் அதுவே இடபக் கொடியாக உயர்ந்தது. இங்கு அறம் மேலோங்கியதை உணரலாம்

    Share