படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

கடவூர் மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

முன்னுரை

மரபுசார்ந்த தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள் அகம், புறம் என இரண்டேயாயினும் ‘பாடுகளங்கள்’ பல. தமிழ் பொருளிலக்கணத்தில் அகத்திணை, புறத்திணை ஆகிய இரு திணைகளுக்கும் துறைகள் உண்டு. அகத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் துறை விளக்கம் இன்றியமையாதது. துறைகள் தம்முள் மயங்குவதோடு கற்பாருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தும். சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துறை வகுத்திருப்பதற்கு இதுதான் காரணம். புறத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பாட்டின் அடிப்பகுதியில் திணை, துறை பதிவுகளோடு கூடிய ‘கொளு’ மிகவும் இன்றியமையாத ஒன்று. வரலாற்றுக் குறிப்போடு அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கொளுவே பாடுகளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகச் செயல்படும். பொருள் துறைகள் பல. அவையனைத்தும் திணைவாரியாக விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு திணைக்குரிய துறைகள் ஏனைய திணைக்குள் அடங்குவதில்லை. திணை என்பதை ஆறாகக் கொண்டால் துறை என்பது படித்துறை என்பது புலனாகும். ‘படித்துறை’ என்றாலும் ‘நீர்த்துறை’ என்றாலும் ஒன்றே. புறத்திணைகளில் ஒன்றாகிய காஞ்சித்திணையில் அமைந்துள்ள கையறுநிலைத் துறையில் தற்காலத் தமிழ்க்கவிஞருள் ஒருவராகிய கடவூர் மணிமாறன் அவர்களால் பாடப்பெற்றுள்ள சில பாடல்களை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

இழப்பும் அதன் இலக்கிய மதிப்பீடும்

இன்பம் முதலிய பல்வகை உணர்ச்சிகளும் இலக்கியப் படைப்பில் இடம் பெறினும் இழப்பினால் ஏற்படுகிற அவலம், இலக்கியச் சித்திரிப்பில் தலையாய இடம் பெறுகிறது. நடப்பியல் வாழ்வில் அவலம் தாங்குதற்குரியது. இலக்கியத்தில் அது சுவைத்தற்குரியது. கணவனை நிரந்தரமாகப் பிரியும் முதுபாலை, பாலைவழியில் மனைவியை இழந்த கணவன் துயர் கூறும் சுரநடை, மனைவியை இழந்த கணவனின் தபுதார நிலை, கணவனை இழந்த மனைவியின் தாபத நிலை, தாயை இழந்த பிள்ளையின் துன்பம் பாடிய தலைப்பெயல் நிலை, மாறாகப் பிள்ளையை இழந்த தாயின் துயரத்தையும் மன்னனை இழந்த மக்கள் வேதனையையும் பாடும் பூசல்மயக்கு, கணவனோடு எரிபுக நிற்கும் மகளிர் நிலைபாடும் மாலை நிலை, கணவனோடு மனைவியும் உடன்கட்டை ஏற, அதனைக் கண்டோர் கலங்கிப் புலம்பிய மூதானந்தம், விரிச்சிக்கு மாறுபட்டுத் தீய சகுனம் கண்ட மனைவிபடும் துன்பமாகிய ஆனந்தம், கணவன் இறந்த பின்னும் தான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நாணி வருந்தும் ஆனந்தப் பையுள், புரந்தார் சாகவும் புரக்கப்பட்டார் வருந்தவுமான கையறு நிலை என இழப்புக்கள் பல. அவற்றைப் பதிவு செய்திருக்கும் இலக்கியங்களும் பல.

‘கையறு நிலை’ — ஒரு விளக்கம்

இழப்பு ஏற்படுத்தும் துன்பத்தை வெளிப்படுத்தும் நிலையைக் ‘கையறுநிலை’என இலக்கணம் சுட்டும். ‘கலங்கிக் கையற்று’ என்பது தமிழிலக்கியத்தில் பெருவழக்கு.

“கை விதிர்த்துக் கலங்கும் நிலை, கையறு நிலை எனப்பட்டது”

என்பது பேராசிரியர் ச.பாலசுந்தரனார் தரும் சொற்பொருள் விளக்கம். இவ்வாறு கையற்று நிற்கும் நிலையைத் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் காஞ்சித்திணையில் வைத்துக் கூறுகிறது. தொல்காப்பியக் காஞ்சித்திணை, போரொழுக்கம் பற்றிக் கூறாது, வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றியது என்பது,

“பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

என்னும் நூற்பாவால் பெறப்படும். மரணம் நிலையாமை உணர்த்தும் கருவி.  இவ்வடிப்படையில்,

“கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை”

என்னும் காஞ்சித்திணைத் துறைகள் பற்றிய நூற்பாப் பகுதியை நோக்கினால், தம் வாழ்நாள் கழிந்து மரணமடைந்த நிலையில், அவர்தம் துணையும் பாதுகாப்பும் இழந்த மற்றவர்கள் அவ்வாறு இழந்தவற்றை எண்ணிப் புலம்புவதே கையறுநிலையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவில் பயின்றுவரும் ‘ஒழிந்தோர்’ என்னும் சொல், சுற்றத்தார், பெற்றோர், உடன்பிறந்தார், புரப்போர்  என யாவரையும் குறித்து நிற்கிறது.

‘இழந்ததற்கிரங்கல்’ என்னும் பொருண்மையை உள்ளடக்கிய இத்துறையைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் பொதுவியல் திணையில் அடக்கிக் காட்டுவார்.

“செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையற உரைத்துக் கைசோர்ந்தன்று”

“கழிந்தோன் தன்புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத்துறை யன்ன”

என்னும் இரண்டு கொளுக்களைக் கொண்டு இத்துறையை விளக்குவார் அவர். முதற்கொளு ‘மன்னன் இறந்த நிலையில் மற்றவர் புலம்பலைச்’சுட்டியும், இரண்டாவது கொளு ‘அன்பிற்குரிய எவர் இறப்பினும் அவர் புகழை எடுத்துக் கூறும் பிறர் புலம்பலையும்’சுட்டி நிற்கின்றன.

இழப்புக்களும் புலம்பல்களும்

இழப்புக்கள் பலவானால் புலம்பல்களின் எண்ணிக்கையும்  பலவாகும். உள்ளங்கவர் நண்பனை இழந்து புலம்புவது, ஆசைமிகு கணவனை இழந்து புலம்புவது, பாசமிகு மனைவியை இழந்து புலம்புவது, பிள்ளைகளை இழந்து பெற்றோரும் பெற்றோர்களை இழந்து பிள்ளைகளும் புலம்புவது எனப் பல்வகைப்படும்.  மனைவிக்கு முன்னால் மனைவியும், பெற்றோர்களுக்குப் பின்னால் பிள்ளையும், இளைஞர்களுக்கு முன்னால் முதியோரும் மறைவது இயற்கை. இந்த இயற்கை மரபு சில பொழுதுகளில் ஊழ்வினை காரணமாகத் தம்முள் முரண்படுகிறது. அத்தகைய நேர்வுகளில் இழப்பின் துன்ப வெளிப்பாடு இதயத்தைப் பிழிவதாக அமைந்துவிடுவதைக் காணலாம். கணவனை இழந்து மனைவி புலம்புவதைவிட மனைவியை இழந்த கணவன் புலம்புவது எண்ணிப்பார்க்க முடியாத இயற்கை முரண். இந்த முரணுக்கு ஆட்பட்ட மன்னன் ஒருவன் தன் மனைவியை இழந்து பாடிய கையறு நிலைப்பாடலைப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது.  ‘நண்ணாரும் உட்கும் பீடு’அவனுடையது. களத்திலே கலங்காத ஒருவன் தன் காதலிக்காகக் கலங்கித் துடிப்பது கற்பார்தம் உள்ளம் உருக்குவதாம்.

“யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனைத்தே
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்”

“கள்ளி அம் போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடை பொத்திய விளை விறகுஈமத்தீ
ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல்! என்னிதன் பண்பே?”

என்று நெருப்பிலே தன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு கிடத்தப்பட்டது கண்டு கதறுகிறான் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. ‘இருவரும் ஓருயிர்’ என்பது உண்மையானால் அவள் இறந்து தான் இன்னும் இருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு சொன்னதெல்லாம் இன்று பொய்யாகியிருக்கிறது என்பது கருத்து.

கலைஞர் பாடிய கையறுநிலை

தமிழ்க்கவிதை உலகில் கையறு நிலைத்துறையில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது கலைஞர் பாடிய இரங்கற்பா தனிச்சிறப்புக்குரியது. அவருடைய கம்பளிக் குரலில் வானொலியில் அவர் வாசித்தபோது கலங்காதவர் இல்லை. அண்ணாவின் பெருமைகளை,

“நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரலசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே? அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்! இன்று
மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை?
கொடுமைக்கு முடிவு கண்டாய்! எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?”

என நிரல்பட அடுக்கி அவர் புலம்பியது இன்றைக்கும் இணையத்தில் இருக்கிறது.

பாவேந்தரும் பன்னீர் செல்வமும்

இருபதாம் நூற்றாண்டில் தமிழின் எல்லாத் ‘துறை மரபுகளையும்’ கையாண்டு கவிதை படைத்தவர் பாவேந்தர். அவற்றுள் ‘கையறு நிலை’ என்னும் புறத்துறையும் ஒன்று. பாரதியார் உட்படச் சான்றோர் பலரின் மறைவுக்கு அவர் கையறுநிலை பாடியிருக்கிறார்.  எனினும் தமிழர்தம் வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கிய கே.டி.பன்னீர்செல்வம் மறைந்தபோது அத்துறையில் அவர் பாடிய பாட்டு அவர்தம் தனிப்பாடல்களில் தனித்து விளங்கும் சிறப்புடையது.

“பண்கெட்டுப் போன தான
பாட்டுப்போல் தமிழர் வாழும்
மண்கெட்டு போமே என்னும்
மதிகெட்டும், மானம் கெட்டும்
எண்கெட்ட தமிழர் பல்லோர்
பாரப்பனர்க் கேவ லாகிக்
கண்கெட்டு வீழும் போதோ
கடல்பட்ட தெங்கள் செல்வம்?”

விமான விபத்தில் சிக்கிக் கடலில் வீழ்ந்து, பன்னீர் செல்வம் மறைந்தார்  என்பதனை இலக்கியமாக்கும் போது, ‘முன்பே பல்வகைச் செல்வங்களைக் கொண்ட கடல் பன்னீர் செல்வத்தின் பெருமை கண்டு அவரையும் தன்னுடைய செல்வமாகக் கொண்டதோ’எனத் தற்குறிப்பேற்றமாகக் கருதுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். ‘இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாமற் போனாரே’ என்னும் ஏக்கத்தைக், ‘கண்கெட்டு வீழும்போதோ கடல்பட்டது எங்கள் செல்வம்?’ என்னும் தொடர் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

கவிமணியும் கையறுநிலையும்

புகழேந்திக்குப் பிறகு வெண்பாவால் விருந்து வைத்தவர் கவிமணி. யாப்பில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் நேரிசை வெண்பாவை ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’மாற்றிக் கொண்டவர் அவர். செப்பலோசையில் அமைந்தாலும் உணர்ச்சியின் வேகம் குறையாமல் கையறுநிலைக்கு அதனைப் பயன்படுத்திக் காட்டியிருக்கும் கவிமணியின் கவிநேர்த்தி போற்றுதலுக்குரியது  ரசிகமணி டி.கே.சி. அவர்கள் மறைந்தபோது அவர் பாடிய கையறுநிலை பாடலொன்று இப்படி அமைந்திருக்கிறது.

“என்னருமை நண்பா! இனிய கலைரசிகா!
தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! – மன்னுமுளம்
தத்தளித்து நின்றன் சரமகவி பாடுதற்கோ
இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?”

சரமகவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?’ என்னும் வினாவில் பொங்கிவழியும் கையறுநிலை உணர்ச்சி மனத்தைப் பிழிகிறது. ‘நண்பன், ‘கலைரசிகன், ‘தமிழ்ச்செல்வன்’என முன்னிரண்டு அடிகளில் இழந்தோரின் பெருமை கூறிப், பின்னிரண்டு அடிகளில் அவ்விழப்பின் ஆழத்தைப் பதியவைக்கும் கவிமணியின் மரபியல் பார்வை  மதிக்கத்தக்கது.

எமனுக்குக் கொள்ளி வைத்த கண்ணதாசன் 

கவிஞர் கண்ணதாசனின் கருத்துக்களில் முரண்படுவோர்  உண்டு. அவருடைய முரண்பட்ட பார்வைகள் பற்றி முன்னெடுத்து மொழிவோர் உண்டு. ஆனால் அவர்தம் கவிதைகள் பல்வகை உணர்ச்சிகளின் பிழிவாக உள்ளன என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. கவிதைக் கூறுகளில் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. அதிலும் இழப்புப் பற்றிய அவருடைய கவிதைகள் கற்பார்தம் நெஞ்சைக் கரைய வைப்பன. கையறுநிலையில் அவா படைத்த பாடல்கள் பல இருப்பினும் பதச்சோறாக ஒருசில இவண் சுட்டப்படுகின்றன.

“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?
சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ?
தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ?”

என்று பண்டித ஜவகர்லால் நேரு மறைந்தபோது அவர் உகுத்த கண்ணீர் கையறுநிலைக்கு ஓர் அழியா எடுத்துக்காட்டு.

“தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?
என்னுயிரைத் தருகின்றேன், எங்கே என் மாகவிஞன்?”

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவர் வடித்த கண்ணீர் கவிஞனுக்கு மற்றொரு கவிஞன் பாடிய கையறுநிலையின் தொடர்ச்சியாகலாம்.

மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

தமிழிலக்கியப் புறத்துறைகளில் தனித்து விளங்கும் இத்தகைய கையறுநிலைப் பாடல்கள் அவல உணர்ச்சியின் ஆழமான வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. மணிமாறனும் தமது கவிதைப்படைப்புக்களில் அத்துறைப் பாடல்கள் பலவற்றைப் படைத்துக் காட்டியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழிலக்கியப் ‘பொருள்மரபு’ அவர் படைப்புக்களில் ஊடுருவி நிற்கும் பாங்கை அறியலாம். உள்ளங்கவர் நண்பர்கள் இழப்பு, உரிமையான உறவுகள் இழப்பு, சமுதாய நலன் நாடும் சான்றோர்கள் இழப்பு எனக் கையறுநிலைக்கான கருப்பொருள் நிகழ்வுகள் பலவாயினும், தன் மகனையே இழந்து புலம்பிய கையறுநிலை கண்ணீர் மல்க வைப்பதாக உள்ளது.

வெந்தழலுக்கு இரையான வீரப்பன்

தமிழக அரசியலை முற்றிலும் தடம்மாறச் செய்த நிகழ்வு 1965இல் நடந்தேறியது. ‘மொழிப்போர்’ என்னும் சொல் உலக வரலாற்று அகராதியில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டது. ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகத்தினால் நமக்கென்ன பயன்?’ என்னும் சிந்தனை, உயிரைத் துரும்பென மதிக்க வைத்தது. தாய்மொழி அழிவைத் தாங்கிக் கொள்ள இயலாத இளைஞர்கள் தங்கள் உயிரைத் தாங்களே தீவைத்துக் கொண்டு இறந்தனர். அவர்களுள் ஆசிரியராகப் பணியாற்றிய வீரப்பனும் ஒருவர். அவர் கவிஞருக்குக் கெழுதகை நண்பரும் ஆவார். அன்னாருக்குப் பாடிய கையறுநிலைப் பாடல் வருமாறு,

“என்னென்று அறைகுவன்? என்னென்று அறைகுவன்?
அன்னைத் தமிழின் அழிவினைப் பொறாஅது
புன்மொழி இந்தியின் போக்கறு நிலைக்கே
தன்னுயிர் ஈந்த தறுகண் அம்மா!
நானிலம் போற்றும் நல்லிசை நாட்டிய
மேனிலைச் சிறப்பை என்னென்று அறைகுவன்? 
            ……………………………………..
உரமும் திறமும் உணர்வும் மிகுந்திட
உடலம் துகளாய் உருக்குலைந்து ஓய்ந்திடப்
பொடிபடச் சிதைந்து பொசுங்கிய ஞான்றும்
இடியென ஆர்த்தனன்”

என்னும் இப்பாடல் ‘நண்பன், ஆசிரியன், மொழிகாக்கும் வீரன்’ என்னும் முத்திறம் தாங்கிய ஒருவரின் இழப்புக்கு ஆற்றாத நெஞ்சத்தின் வெளிப்பாடாகக் கருதலாம்.

“1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுத் தீந்தமிழ்க் காக்கத் தீக்குளித்து மாண்ட ஆசிரிய நண்பர் வீரப்பனின் அழியா ஈகத்தை வியந்து பாடியது”

என்னும் பின்குறிப்போடு பதிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் பொருண்மையால் மரபு சார்ந்தும் பொருண்மைக்கான காரணம் புதுமை சார்ந்தும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இழப்புக்கான களம் போர்க்களமோ, நோயோ, விபத்தோ என்றில்லாமல் மொழிப்போர் காரணமாக அமைந்திருப்பது பொருண்மையில் புதிய போக்காகக் கருதப்படலாம்.

தனித்தமிழ் கண்ட கனிச்சாறு கவிஞர்

பாவேந்தருக்குப் பிறகு பாடுபொருளாகிய கவிதைக் களங்கள் அனைத்திலும் மரபு சார்ந்த தமிழ்க்கவிதைகளைப் படைத்த கவிஞர் சிலருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். தனித்தமிழ்ப் பாவலரான அன்னார் வடித்தெடுத்த பாடல்களில் பிறமொழிச் சொற்கள் ஒன்றுகூட இல்லை என்பது வியப்பிற்குரியது. தனித்தமிழில் அமைந்தாலும் கவிதைக்குரிய கற்பனை, உணர்ச்சி முதலிய கூறுகள் அவர் பாடல்களில் குறைந்ததாக அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காட்சியையும் பொருளையும் கவிதையாகவே நோக்கி அவை பற்றிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் கவிதையாகவே சிந்திக்கத் தெரிந்த கவிஞராக அவர் தனித்து விளங்குகிறார். அவருடைய இழப்பு ‘தென்மொழியை’மட்டுமன்றித் தமிழன்பர்கள் பலரையும் பாதித்தது. அவருள் மணிமாறனும் ஒருவர். அன்னாருடைய இழப்புக்கு மணிமாறன் பாடிய கையறுநிலைப் பாடல்களில் அவலச்சுவையின் அடர்த்தியை உணர முடிகிறது.

“பன்னூறு முறை ‘தம்பி’என்ற ழைப்பீர்
பாசமழை பொழிவீரே! பறந்ததெங்கே?”

எனத் தன்னைத் ‘தம்பி’ என அழைத்த பாசமிகு அண்ணன் மறைந்துபோனதை எண்ணிப் புலம்புவதைச் சுட்டுகிறார்.

“மூவேந்தர்அக்காலம் காத்து வந்த
                                    மூவாத சீர்த்திமிகு தமிழன் மாண்பைச்
சாவேந்தும் வேளையிலும் நிலைக்கச் செய்தீர்
                        சான்றாண்மை எந்நாளும் காத்து வந்தீர்!
கூவிவந்த தமிழ்க்குயிலே! விடியும் முன்பே
                        குரலொடுங்கிப் போயினையே!”

தமிழின் மரபுசார்ந்த பெருமையை முன்னர்ச் சுட்டித், தமிழனுடைய மாண்பு காப்பதில் பெருஞ்சித்திரனார் இறுதிவரையில் உறுதியாக இருந்தார் என்னும் நிலைப்பாட்டைப் பின்னர்ச் சுட்டுகிறார். தமிழும் தழிழ்நாடும் தமிழர்களும் அடையவேண்டிய பெருமையை அடையும் முன்பே அவர் மறைந்து போனதை, ‘விடியும்’ முன்பே என்னும் தொடரால் குறிப்பாகப் பெறவைக்கின்றார்.

“துஞ்சாமல் தோளுயர்த்திக் கிளர்ந்த  வேழம் 
தூய்தமிழை மறந்திந்நாள் சென்ற தெங்கே?

“……………………………………..எங்கள்
எழுச்சிக்குப் பண்ணிசைத்த முரசே! வாழை
குருத்தொன்று முறிந்ததுபோல் விழிகள் மூடிக்
கும்மிருட்டில் எமைஆழ்த்திச் சென்றீர் அய்யா!”
தூய்தமிழை மறந்திந்நாள் சென்றதெங்கே?”

என்றும், ‘கும்மிருட்டில் எமை ஆழ்த்திச் சென்றீர் ஐயா’என்றும் பயின்று வந்துள்ள கவிதைத் தொடர்கள் பெருஞ்சித்திரனாரை இழந்து கலங்கிக் கையற்ற கவிஞர்தம் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

ஆசிரியருக்குக் கையறுநிலை

மகாகவி பாரதியின் நண்பராகப் பழகத் தொடங்கி, அவரைக் குருவாக வரித்துக் கொண்டவர் பாரதிதாசன். நட்பு, குருவான கதை இது. குருவாக திகழ்ந்தவர் நண்பரான கதை மணிமாறன் வாழ்க்கையில் நிகழ்ந்தது. வெள்ளமுத்து என்பார் கவிஞர் மணிமாறனின் உயர்நிலைப்பள்ளிக் கணித ஆசிரியர். காலம், வெள்ளமுத்து கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மணிமாறனையும் தமிழாசியராகக் கொண்டு வந்து அவரோடு சேர்த்தது. தனக்கு ஆசிரியராக இருந்தவருடன் தானும் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு மணிமாறனுக்குக் கிட்டியது. ஆசிரியர் நண்பரானதால் மதிப்போடு உரிமையும் கூடி இழைவது தவிர்க்க இயலாதது. நண்பராகப் பழகிய ஆசிரியர் வெள்ளமுத்து மறைந்தபோது,

“பற்றுடனே பாசமழை பொழிந்தீர் வெள்ளைப்
பாற்சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தீர்! எங்கள்
சுற்றத்தைப் புலவர்களை மறந்து சென்றீர்!
சொல்லவொணாத் துயர்தந்தீர்! அய்யா இங்கே
கற்றவர்கள் பாராட்டும் நல்லீர்! உங்கள்
கற்கண்டு சொல்லமிழ்தை என்று கேட்போம்?”

என்று பாடினார் கவிஞர். ‘பாசமழை பொழிந்தது, ‘வெள்ளைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தது, ‘கற்றவர்களால் பாராட்டப்பட்டது’, ‘கற்கண்டு சொல்லமிழ்து’என வெள்ளமுத்தின்  சிறப்புக்களையெல்லாம் சிந்தனையில் தேக்கி, ‘என்று கேட்போம்?’ எனக் கலங்கி முடித்திருப்பது, கையறுநிலையைக் காட்சிப்படுத்துவதில் கவிஞர் பெற்ற இலக்கிய வெற்றியைக் குறிக்கிறது.

விடியலின் பனி நீரான மகன் 

கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனாகிய இராவணன், புலம்பலையே அறியாதவன். அத்தகையவன் தன் பாசமிகு மகன் இந்திரசித்தன், இலக்குவனால் வீழ்த்தப்பட்டபோது கலங்கிக் கையற்றுப் புலம்புகிறான்.

“சினத்தொடும் கொற்றம் முற்றி
இந்திரன் செல்வம் மேவி,
நினைத்ததை முடித்து நின்றேன்.
நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத் தக்க
கடனெல்லாம் ஏங்கி ஏங்கி
நினக்கு யான் செய்வ தானேன்,
என்னின்யார் உலகத் துள்ளார்?”

என்னும் இராவணன் புலம்பலில் ஒரு தந்தையின் பாசம் பொங்கி வழிவதைக் காணமுடிகிறது. ‘தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடனையெல்லாம் தந்தை தான் பெற்ற மகனுக்கே செய்ய நேர்ந்ததே?’ என்னும் இலங்கை வேந்தனின் உணர்ச்சிக் குமுறல், கவிஞர் மணிமாறன் தன் மகன் இறந்த வேளையில் பாடிய,

“கொள்ளிக்கண் பாய்ச்சும் இந்தக்
கொடியதோர் உலகைக் காண
பிள்ளை நீ வெறுத்தாய் போலும்!
பெரும்பழி நேரும் என்றோ
கள்ளமில் மழலை நீயும்
கையறு நிலையைத் தந்து
வெள்ளமாய் விரைந்து போனாய்?
விடியலின் பனிநீர் ஆனாய்?” 

என்னும் பாடலில் எதிரொலிக்கிறது. ‘உலகத்தின் பார்வை அஞ்சி’ என்னாமல் ‘உலகத்தைக் காண வெறுத்து’ என்னும் நுண்ணோக்குக் கையறுநிலையின் பொருளடர்த்தியைக் கூடுதலாக்குகிறது.

“இன்பத்தைப் பாடுவதைவிடத் துன்பத்தைப் பாடுவதில் புலவர்கள் முனைந்துள்ளனர். காதலைப்பாடும் புலவர்கள் காதலரின் இன்ப நிலையைப் பாடுதல் மிகக் குறைவாக உள்ளது. காதலரின் பிரிவாற்றாத் துயரத்தைப் பாடுதலே மிகுதியாக உள்ளது…………… ஏக்கத்திலும் துன்பத்திலும் துயரத்திலுமே பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. மாறுதலுக்கு இடையே நிலைபேற்றையும், அலைவுக்கு இடையே அமைதியையும், அழிவுக்கு இடையே என்றுமுள தன்மையையும் நாடி ஏங்கி உணர்தலே பாட்டின் இயல்பாக உள்ளது”

என்பார் அறிஞர் மு.வ. மானுட உணர்ச்சிகள் அனைத்தும் வலிமை வாய்ந்தன எனினும் ‘பிரிவு’அல்லது ‘இழப்பு’என்னும் உணர்ச்சியே கவிதை ஆக்கத்தில் பெரும் செல்வாக்குடையது என்னும் அறிஞர் மு.வ. அவர்களின் கருத்து, மணிமாறனின் கையறுநிலைப் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்படுகிறது எனலாம்.

முனைவர் கடவூர் மணிமாறன்! ‘ஐயாயிரம் தமிழர் ஆம் உரிமை காக்க நான் பொய்யர்தமை எதிர்த்தபோது பொய்வழக்கால் சேர்த்த சிறை எனக்குத் தென்றல் வரும் சோலையன்றோ?’ என்று பாடிய பாவேந்தர் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட கவிதைப் போர்வாள்!. ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்’ அக்கால நூற்பயன்! இனம், மொழி, நாடு ஆகியவற்றின் எழுச்சிக்காகப் பாடுவது இக்காலக் கவிஞர் கடமை! இவர் அக்காலத்தை மறக்காத இக்காலத்துக் கவிஞர். அதனால் இவர் படாத இடர் இல்லை! அந்த நாள்  அகத்திணையும் தெரியும். இவர் இந்த நாள் சமூக நிலையும் அறிவார். அறுபது நூல்களுக்கு ஆசிரியர். ஐந்தாறு நாடுகளுக்குப் பார்வையாளர். உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகத் தொடங்கி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றவர். பன்னிரண்டாயிரம் நூல்களைத் தன் வீட்டு மாடியில் வைத்திருக்கும்  இவர் மடியில் வைத்துக் கொஞ்சுபவை மரபுக்கவிதைகளையே!. கரந்தை புலவர் கல்லூரி கண்ட கந்தகக் கவிஞருள் ஒருவர். இவர் துறந்தது இன்பம்! துறக்காதது தமிழ்த்தொண்டு! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழாசிரியருக்கு இலக்கணம் வகுத்தவர் சிலர். இவர் அவருள் ஒருவர்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *