கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

-மேகலா இராமமூர்த்தி

மாரிக்காலம் முடிவுற்றும் சுக்கிரீவனின் படைகள் இராமனுக்கு உதவியாய் வந்துசேரவில்லை. சுக்கிரீவனின் இந்த நன்றிகொன்ற செயலை எண்ணிச் சினந்த இராமன், அவன் தவற்றைச் சுட்டிக்காட்டுமாறு இளவல் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பினான்.

தமையனின் ஆணையையேற்று விரைந்து கிட்கிந்தை மலைக்குச் சென்ற இலக்குவன் அதன் உச்சியில் நின்ற தோற்றம் மலையின்மீது பொன்னிறமானதோர் ஆண்சிங்கம் நிற்பதைப் போன்றிருந்தது.

சீற்றத்தொடு சீயமென இலக்குவன் குன்றின் உச்சியில் நிற்பதைக் கண்ட வானரர்கள், காலனைக் கண்டவர்கள்போல் கதிகலங்கி, அங்கதனை அடைந்து இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.

அங்கதன் மறைவாக நின்று இலக்குவனின் கோப முகக்குறியைக் கண்டுகொண்டான். விரைந்து தன் சிறிய தாதையான சுக்கிரீவனிடம் சென்றான். விசுவகர்மாவின் மகனான நளன் எனும் வானரன் உருவாக்கிய அரண்மனையில் பஞ்சணையின்மீது இளமகளிர் தன் பாதம் வருட இன்துயிலில் ஆழ்ந்திருந்தான் சுக்கிரீவன்.

அங்குவந்த அங்கதன் பதற்றத்துடன், ”எந்தையே…நான் சொல்வதைக் கேள்! இராமனின் இளவல் இலக்குவன் தன் மனத்திலுள்ள பெருங்கோபத்தை முகம் எடுத்துக்காட்ட, யாரும் தடுக்கவியலா வேகத்தொடு கிட்கிந்தைக்கு வந்து சேர்ந்துள்ளான். அதுகுறித்து உன்னுடைய உள்ளக் கருத்து என்ன?” என்று கேட்டான்.

எந்தை கேள் அவ்
      இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடுஞ்
      சீற்றம் திரு முகம்
தந்து அளிப்ப தடுப்ப
      அரும் வேகத்தன்
வந்தனன் உன் மனக்
      கருத்து யாது என்றான். (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4397)

ஆனால், கள்ளருந்திய களிப்பிலும், இளமங்கையர் அருகிருந்து செய்யும் பணிவிடையிலும் மயங்கிக் கிடந்த சுக்கிரீவனிடமிருந்து எந்த விடையும் கிடைக்கவில்லை அங்கதனுக்கு.

வாலி கணித்தபடியே சுக்கிரீவன் பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்றவனாகவும், கொடுத்த வாக்கை மறந்த பொறுப்பற்றவனாகவும் நடந்துகொண்டமைக்கு இந்தக் காட்சி நல்ல சாட்சி!

சுக்கிரீவனின் நிலையைக்கண்ட அங்கதன், இனி இவனிடம் யோசனை கேட்டுப் பயனில்லை என்பதையுணர்ந்து அறிவிற் சிறந்த அனுமனைத் தேடிச்சென்று அவனையும் திறல்மிகு வீரர்களையும் அழைத்துக்கொண்டு தன் தாய் தாரை தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்தான்.

இலக்குவனின் வருகை பற்றி அவளுக்கு அறிவித்து, மேலே நாம் செய்ய வேண்டியது என்ன என்று அவளை வினவினான் அங்கதன். சுக்கிரீவனின் நன்றியற்ற செயலால் ஏற்கனவே வெறுப்படைந்திருந்த தாரை, ”இராமன் சொன்ன கெடுவுக்குள் படைதிரட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று நான் பன்முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை; இப்போது அதன் விளைவைச் சந்திக்கின்றீர்கள்; வாலியைக் கொன்று அரசாட்சியை உங்களுக்கு (சுக்கிரீவனுக்கு) அளித்த பேராற்றல் உடைய அவர்கள் உங்கள் அலட்சியச் செயலைப் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அவர்கள் உங்களோடு போருக்கு வந்தால் நீங்கள் மாளவேண்டியதுதான்” என்றாள் கோபத்தோடு.

அந்த நேரத்தில் இலக்குவன் எளிதில் நகருக்குள் நுழையாதபடி வானரர்கள் நகரின் வாயிற்கதவைத் தாழிட்டுப் பாறைகளை வைத்து அடைத்தனர். இலக்குவன் உள்ளேவந்தால் அவனை நையப் புடைப்போம் என எண்ணிக் கையில் பெரும் மரங்களையும் பாறைகளையும் வைத்துக்கொண்டு தயாராக நின்றனர்.

தன்னிடமிருந்து தப்புவதற்காக வானரர்கள் செய்த வேடிக்கையான செயல்களைக் கண்டு எள்ளலோடு நகைத்த இலக்குவன், தன் தாமரைபுரை தாளினால் அவ்வாயிற் கதவினை மிக எளிதாகத் தள்ளினான். அதனால், பெரும் பாறைகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட வாயிற்கதவோடு மதிலும் சேர்ந்து சிதைந்துபோனது. இந்நிகழ்வு, தெய்வத்தின் திருவடிபட்ட அளவில் தீர்த்தற்கரிய தீவினைகளும் அழிந்துபோவதை ஒத்திருந்தது என்கின்றார் கம்பர்.

காவல் மா மதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.
(கம்ப – கிட்கிந்தைப் படலம் – 4409)

அரணைத் திரணமாய் மதித்து இலக்குவன் தள்ளியது கண்டு உயிரச்சம் கொண்ட வானரர்கள், கிட்கிந்தை மலையைவிட்டு விரைந்தோடிக் கானடைந்ததால் விண்மீனிலா வானம்போல் வெறுமையாய்க் காட்சியளித்தது கிட்கிந்தை.

நிலைமையின் விபரீதத்தை அறிந்த தாரை, மகளிர்குழாத்தோடும் சென்று இலக்குவன் வரும் வழியில் நின்றாள். சினத்தோடு சீறி வந்துகொண்டிருந்த இலக்குவன், மகளிர்குழாம் எதிர்நிற்பது கண்டு வேகந்தணிந்து அவர்களை நேர்நோக்க நாணித் தலைகவிழ்ந்துகொண்டான். அவன் தன் வில்லினை நிலத்தில் ஊன்றி, வானர மகளிரை நிமிர்ந்துநோக்கத் தயங்கிநின்ற அக்காட்சியானது, ”மாமியர் கூட்டத்தினிடையே நாணிநின்ற மருமகனை ஒத்திருந்தது” என்று நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார் கவிவலாரான கம்பர்.

இலக்குவனின் அருகில்வந்த தாரை, ”ஐய! நீ சீற்றதோடு வருவதுகண்ட வானரர்கள் நீ வந்த காரணம் அறியாது உன்னைக் கண்டு அஞ்சுகின்றனர். இராமனின் திருவடிகளை நீங்காதவனாகிய நீ இங்குவந்த காரணத்தை எமக்கு அறியத்தருவாய்” என்று அன்போடு வினவினாள்.

பகலில் தோன்றிய நிலவுபோல் வந்துநின்ற தாரையைச் சற்றே நிமிர்ந்து நோக்கினான் இலக்குவன். மங்கல அணிகளற்று, கூந்தலில் மலர்களற்று, உடலை ஆடையால் முழுவதும் போர்த்துக்கொண்டு நின்ற அவளின் கைம்மைக் கோலம் தயரதனைப் பிரிந்த தம் தாயரின் கோலத்தை அவனுக்கு நினைவூட்டவே, அதனைக் காண ஆற்றாது அவன் நயனங்கள் பனித்தன; நெஞ்சம் வேதனையில் ஆழ்ந்தது.

மனத்தைத் தேற்றிக்கொண்டு தாரையை நோக்கிய இலக்குவன், ”சுக்கிரீவன் படைகளோடு சீதையைத் தேட உதவிக்கு வருவேன் என்று சொல்லியிருந்தான்; ஆனால் சொன்னதை மறந்துவிட்டான்; அவன் நிலையை அறிந்துவர அண்ணனிட்ட கட்டளையை ஏற்று இங்கு வந்தேன்! அதுகுறித்து விளம்புக!” என்றான்.

சமயோசித அறிவு நிரம்பிய தாரை, ”செம்மையான உள்ளத்தோடு சுக்கிரீவனின் பெரும்பகையை மாற்றி (வாலியை அழித்தமை), அவனுக்கு அரசாட்சியை அளித்திருக்கின்றீர்கள். நீர் செய்த பேருதவியைச் சுக்கிரீவனும் அவனுடைய கூட்டத்தாரும் சிறுமையாய்க் கருதிப் புறக்கணிப்பரேல் இப்பிறவியிலேயே வறுமையடைந்து செல்வத்தோடு புகழும் அழிந்து, மறுமையிலும் நற்கதி பெறாது நரகெய்துவர்” என்று பதிலிறுத்தாள்.

செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
      பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும்
      மாற்றி அரசு வீற்றிருக்கவீட்டீர்
உம்மையே இகழ்வர் என்னின்
      எளிமையாய் ஒழிவது ஒன்றோ
இம்மையே வறுமை எய்தி
     இருமையும் இழப்பர் அன்றே.  (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4431)

இராமன் சுக்கிரீவனுக்குச் செய்த உதவியின் சிறப்பு குறித்துத் தாரை சொன்ன சொற்கள், அமுத தாரையென இலக்குவனின் காதில் விழுந்தன; அவன் சினம் தணிந்தான். அதுதான் இலக்குவனைச் சந்திக்கச் சரியான சமயம் என்றுணர்ந்த மாருதி, மெல்ல இலக்குவனின் அருகில் வந்தான்.

வந்தவன் இலக்குவனின் அடிபணிய, அவனை நோக்கிய இலக்குவன், ”கேள்வி ஞானத்தில் வரம்பில்லாதவனாகிய நீயும் முன்பு நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டாய் அல்லவா?” என்று மாருதியைப் பார்த்து ஏமாற்றத்தோடு வினவ, அதனை உடனே மறுத்த மாருதி,

”ஐயனே! அன்புமிகு தாயையும் தந்தையையும் குருவையும் தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும் பசுக்களையும் குழந்தைகளையும் பாவையரையும் கொலை செய்தவர்க்கும் அந்தப் பாவங்களைப் போக்குதற்குரிய கழுவாய் உண்டு. ஆனால், காலத்தினாற் செய்த அழியாத பேருதவியை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து மீளும் வழி ஒன்றேனும் உண்டோ? இல்லை!” என்றான்.

சிதைவு அகல் காதல் தாயை
      தந்தையை குருவை தெய்வப்
பதவி அந்தணரை ஆவை
      பாலரை பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ. (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4435)

எத்தகைய நன்மையை மறந்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழியுண்டு; ஆனால் காலத்தினாற் செய்த நன்மையை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்பதுதானே வள்ளுவரின் வாய்மொழியும்?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(110)

வள்ளுவரின் இக்கருத்தை விரிவான சான்றுகளோடு விளக்குகின்றது சங்கப் புலவர் ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடல்.

”பசுவின் முலையறுத்த தீவினையாளர்களுக்கும், சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும்கூட அவர்கள் செய்த கொடுந் தீவினைகளிலிருந்து விடுபடக் கழுவாய் (பரிகாரம்) உண்டு. ஆனால், உலகமே தலைகீழாய்ப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்மையைப் போற்றாது புதைத்தோர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியில்லை என்று அறநூல் தெரிவிக்கின்றது” என்பது அப்பாடல் நமக்குத் தரும் செய்தி.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ…”
  (புறம்: 34)

ஈண்டு அறம் பாடிற்று என்று புலவர் குறிப்பிடுவது திருக்குறளைத்தான் என்பது தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

ஆலத்தூர்கிழாருடைய பாடலின் பிரதிபலிப்பாகவே, மாருதியின் வாக்காக அமைந்த, மேற்கண்ட கம்பரின் பாடலும் விளங்குவது கண்கூடு. சங்கப் பாடல்களில் கம்பருக்கிருந்த பற்றையும் பயிற்சியையும் இது தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

தொடர்ந்து இலக்குவனிடம் பேசிய மாருதி, ”ஆண் தகையே! வானர அரசனாகிய சுக்கிரீவன் உம் ஆணையை மறக்கவில்லை. வலிமையுள்ள வானரப் படைகளைத் திரட்டிச் சேர்ப்பதற்கு எல்லாத் திசைகளிலும் அவன் தூதர்களை அனுப்பியுள்ளான். அவ்வானர வீரர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதால் சற்றுக் காலதாமதம் ஆகிவிட்டது. நீங்கள் அளித்த அரசச் செல்வத்தையும் அதனைப் பெற்றுவக்கும் சுக்கிரீவனையும் நாம் காணச் செல்வோம் வாருங்கள்!” என்று பணிவோடு தெரிவிக்கவும் இலக்குவனின் கோபம் அடங்கியது.

மாருதியோடு இலக்குவன் சென்றான். வழியில் வாலி மைந்தனான அங்கதன் எதிர்வந்து இலக்குவனை வணங்கவே, ”என் வரவினை உன் தந்தைக்குத் தெரிவி” என்றான் இலக்குவன்.

அங்கதன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு மீண்டும் சென்று அவனைத் துயிலெழுப்பினான். மெல்லக் கண்விழித்த சுக்கிரீவனிடம், சொல்லிய காலக்கெடு முடிந்தபின்னும் வானரர்கள் சேனையொடு இராமனைக் காணச் செல்லாததால் இலக்குவன் சீற்றத்தோடு கிட்கிந்தைக்கு வந்திருப்பதையும், சேனை திரட்டச் சுக்கிரீவன் தூதர்களை அனுப்பியிருப்பதால்தான் காலதாமதம் ஆகிறது என்று கூறி தாரையும் அனுமனும் நிலைமையைச் சமாளித்து இலக்குவனின் சினத்தீயைத் தணித்திருப்பதையும் தெரிவித்தான்.

அதனைக்கேட்ட சுக்கிரீவன், நறவின் பிடியில் தான் சிக்கியதால் நேர்ந்த அவலமே இது என்று தன்பால் கழிவிரக்கம் கொண்டான். இனி நறவைத் தொடுவதில்லை எனச் சூளுரைத்து, “இலக்குவனை நீயே இங்கு அழைத்து வருக!” என்று அங்கதனை அனுப்பிவிட்டு இலக்குவனை வரவேற்கும் வகையில் தன் அரண்மனைத் தலைவாயிலில் சுற்றஞ்சூழ வந்துநின்றான்.

இலக்குவன் அங்கே வர, அரச குலத்தவரை வரவேற்பதற்குரிய முறைப்படி அவனை வரவேற்ற சுக்கிரீவன், இலக்குவனை அரண்மனைக்குள் அழைத்துச்சென்று உணவுண்ணும்படி உபசரிக்க, ”சீதையின் இருப்பிடத்தை நீ காட்டுவதே எங்களுக்கு அமுதம் ஊட்டுவதற்கு ஒப்பாகும்” எனவுரைத்து இலக்குவன் உணவுண்ண மறுத்துவிட்டான்.

”சுக்கிரீவன் அதுகண்டு மனம் வருந்தி, ”நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு நீ இராமனிடம் விரைவில் வந்துசேர்” என்று மாருதியிடம் கூறிவிட்டு இலக்குவனோடு சென்று இராமனைச் சந்தித்தான்; உரிய காலத்தில் படையுடன் வராததற்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.     

மறுநாள் காலை வெள்ளம்போல் வானர சேனைகள் நாலா பக்கமிருந்தும் வந்து குவிந்தன. அதனைக் கண்ட இராமன் இலக்குவனிடம், ”கடலினைக் கண்டோம் என்று சொல்பவர் யாரும் அதனை முழுமையாய்க் கண்டவர் இல்லை; அஃதொப்ப இந்த வலிமைமிகு சேனையின் உடலை (அதன் நடுப்பகுதியை) மட்டுமே நாமும் காணமுடிகின்றது; இதன் முடிவைக் காண இயலவில்லை” என்றான் வியந்து!

அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு
      நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் இனி முடிவு
      உள காணுமாறு உளதோ
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்
     மண்ணிடை மாக்கள்
கடல் கண்டோம் என்பர் யாவரே
      முடிவு உறக் கண்டார். (கம்ப: தானைகாண் படலம் – 4547)

அதனை ஆமோதித்த இளவல் இலக்குவன், ”ஆம், எதனையும் எளிதில் முடிக்கவல்ல இந்தச் சேனையின் துணையால் அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றான் அழுத்தமாக.

[தொடரும்]

*****

1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க