பாஸ்கர் சேஷாத்ரி

“எக்ஸ்கியுஸ் மீ” என குரல் கேட்டது

திரும்பினேன்.

பெரியவர் ஒருவர் உட்காந்து இருந்தார்.

அது ஒரு சின்ன பூங்கா.

“என்னையா சார் கூப்பிட்டீர்கள்?”

“ஆமாம் சார்”

“உங்க பேரு என்ன?”

“சார், நீங்க யாரு என்ன ஒன்னும் புரியல”

“எதாவது பணம் வேணுமா?”

“இல்ல சார்”

“ஏதாவது சாப்பிட வாங்கி வரட்டுமா?”

“வேணாம். பக்கத்துல கொஞ்சம் உக்காருங்களேன்.”

“இல்ல சார். இது சமயம் இல்லை. நோய்த்தொற்று ரொம்ப அதிகமா இருக்கு. நான் தள்ளி நிக்கறேன்.”

“உங்களுக்கெல்லாம் இப்பதான் இந்த கோவிட். நான் தனிமைப்பட்டு ரொம்ப வருஷம் ஆச்சு”

“புரியல சார்”

“உங்க பேர் என்ன?”

“செல்வம்”

“செல்வம். எனக்கு பெரிய பசி எல்லாம் எப்பவோ போச்சு”

“எந்த ஆசையும் இல்லை. உடல் நலம் அவ்வளவு நல்லா இல்லை. தினம் இங்கே வரேன். இங்க மரங்களோட பேசிக்கொண்டு இருக்கிறேன். யாரும் என்னை பொருட்டாக மதிக்க இல்ல.”

“சாரி சார்.” நான் உட்கார்ந்தேன்.

“தாங்க்ஸ் செல்வம். எனக்கு மனைவி இல்லை. இறந்து ஒம்போது வருஷம் ஆச்சு பையன் பேரன் எல்லாம் வெளியூர்ல. வாடகை வீடு. எனக்கு எல்லா பொழுதும் பெரும் பாரமாக இருக்கிறது. எவ்வளவு நேரம் டீ வி பார்க்கறது. படிக்க கண்கள் தெளிவாக இல்லை. தூக்கமும் போச்சு. என்னோடு தினமும் வந்து பேசுவியா?”

“சார் என் வீடு கொஞ்சம் தொலைவு தான். ஆனால் காரில் இங்கு வந்து வாக்கிங் போறேன். நான் டிராப் பண்ணலாமா?”

“எனக்கு வண்டி சொகுசு வேணாம்பா, நான் மெல்ல விந்தி போயிடுவேன்.”

“உங்க போன் நம்பரை கொடுங்க. நான் வரும்போது சொல்றேன்.”

“போன் இல்லப்பா. பக்கத்து வீட்டு போன் தான்.”

“எனக்கு நிறைய விஷயம் பேசணும். தினம் வாங்களேன். உங்களுக்கு கஷ்டம் இல்லைன்னா. எனக்கு பேச ஒரு உயிர் வேணும்பா. சொல்றது புரிகிறதா செல்வம்?”

“புரியறது சார்.”

“பேசாம கலக்காம இருக்க முடியலப்பா? அமைதி என்னை கொல்கிறது ? திடீர்னு ஒரு அழுகை என்னை மீறி வருகிறது. தனிமை பெரிய கொடுமை. உனக்கெல்லாம் இது புரியுமா தெரியல?”

“இல்ல சார். உங்க ஆழமான வலி எனக்கு உறைக்கிறது.”

“நான் தினம் வந்து உங்களை பாக்கிறேன் சார். இப்ப உங்களை இறக்கி விடட்டுமா?”

“வேணாம் பா. உடனே வீடு வந்து விடும். என்னோடு மெல்ல நடந்து வர முடியுமா?”

“நிச்சயம் சார்” என எழுந்தேன்

“நன்றி செல்வம். இந்தா இந்த ஸ்ட்ராங் மிட்டாயை வாய்ல போட்டுக்க. எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

“தாங்க்ஸ் சார். அப்புறம் சாப்பிடறேன். இதை வாய்ல போட்டா பேச்சு போயிடும்” என்றேன்.

“ஆமா இல்லை” என வாய் திறந்து சிரித்தவாறு சொன்ன போது அந்த மிட்டாயின் வெண்மை அவர் மனசையும் சொல்லியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *