திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு 

பாடல்

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

இறைவன்  தம் வலத்திருக் கண்ணில் தம் கண்ணை எடுத்து அப்பிய வள்ளல்தன்மை மிக்க திண்ணனாரின்  சிறப்பை மேலும் காட்டத்   திருவுளம் கொண்ட பெருமான்தம், அடுத்த திருக்கண்ணிலும் செங்குருதி பாய்ச்சுவதை உலகில்  வேட்டுவக்  குலத்தின் தவத்தால் தோன்றி, தம் கொள்கை உறுதியால் தேவர்களை விட மேலாக விளங்கிய திண்ணனார் துண்ணெனக் கண்டனர்!

அவ்வாறு கண்ட வேடுவர், ‘’ஆ! கெட்டேன். எங்கள் காளத்தி ஈசர் திருக் கண்களுள் ஒன்றில்  வழிந்த குருதி நின்றபோது, மற்றைத் திருக்கண்ணிலும் குருதி பொங்கி நிறைந்து வழிகிறதே! ஆ! நான் இதனைக் கண்டு அஞ்சமாட்டேன். என்வசம் மருந்து உள்ளதே! இன்னும்  ஒரு கண் எனக்கு உண்டு! அந்தக் கண்ணையும் தோண்டி அப்பி  இத்துன்பத்தை ஒழிப்பேன்! என்றார்.

நெற்றியில் கண் ஒன்று  பெற்ற இறைவனின் குருதி பொழியும் இடத்  திருக்கண்ணில், எவ்வாறு தம் இடக் கண்ணை எடுத்து அப்புவது? என்று  நேர்ந்த சிக்கலைச் சிந்தித்தார். தம் இடக்கால்  விரலை இறைவனின் குருதி பொங்கும் திருக்கண்ணில் ஊன்றி , அடையாளம் வைத்துக் கொண்டார்! தம் உள்ளத்தில்  நிறைந்த பாசத்துடன், ஒப்பற்ற அம்பொன்றை  திண்ணனார் தம் இடக் கண்ணில் வைத்து  ஊன்றினார்!  அதனைக் கண்ட தேவதேவர் திருவுள்ளத்தால்  அச்செயலைப்  பொறுத்துக்   கொள்ள இயலவில்லை!

அப்போது அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது!  அதன் மேலிருந்து  திண்ணனார் உள்ளத்தை வசமாக்கிக் கொண்ட அற்புதச் செயலைச் செய்த திருக்காளத்தி இறைவன்  திருக்கரம் உயர்ந்து  அன்புடன் தம் கண்ணைத்  தோண்டும் கரத்தைத் தடுத்தது. அப்போதே நாகப்பாம்பைக்  கங்கணமாக  அணிந்த அவர் தம் அருள்வாக்கு, ‘’ நில்லு  கண்ணப்ப, நில்லு கண்ணப்ப! எனதன்புடைத் தோன்றலே  நில்லு கண்ணப்ப! ‘’ என்று பதற்றத்துடன்  கூறியருளிற்று!

வேடர்தலைவர் தம் கண்களைத்   தோண்டி அப்பியதையும், அவர் அளித்த ஊனமுதை உகந்து ஏற்றுக் கொண்ட இறைவன் திருக்கரம் விரைந்து திண்ணனார் கரத்தைப் பிடித்துத் தடுத்ததையும் ஆகம அறிவு மிக்க அந்தணர் கண்டுணர்ந்தார்!  அப்போது பிரமன் முதலான தேவர்கள் பூமாரி பொழிந்தனர்! வேதங்கள் ஒலித்தன! என்றெழுதிய சேக்கிழார் பாடுகிறார்;

பாடல்

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு’ என் வலத்தில்
மாறு இலாய்! நிற்க’ என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

பொருள்

இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’ எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!

இப்பாடலின் பொருள்

தமது பெருமானது திருக்கண்ணினுக்கு வந்த ஊற்றினைக் கண்டுபயந்து; தங்கண் இடந்தப்பும் கையை – என்ற தொடர் தமது இடக்கண்ணைத் தோண்டி அப்புதற்கு உதவநின்ற கண்ணப்பரதுகையை; ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு – இடபக்கொடியை உயர்த்தியவராகிய காளத்தியப்பர் தமது கையினாற் பிடித்துக்கொண்டு; மாறிலாய்! – ஒப்புயர்வற்றவனே!; என்வலத்தில் – எனது வலது பக்கத்தில்; நிற்க என்று மண்ணு பேரருள் புரிந்தார் – நிற்பாயாக என்று நிலைபெற்ற பெரிய திருவருளினைச் செய்தனர்.

பேறு இனி இதன் மேல் உண்டோ? (ஆதலால்) இனி யிதன்மேற் பெறத்தக்க பயன் வேறேதும் உண்டோ? இல்லை.

விளக்கவுரை

இங்கு வலப்பக்கத்தில் நிற்க என்றருளப் பெற்ற கண்ணப்ப நாயனாரும் அவ்வாறருளி அவரது இடப்பக்கத்தில் தாம் அமைந்து நின்ற காளத்திநாயனாரும் பூட்டிய வில்லின் இருதலை போலப் பிரித்துணராத நிலையிற் பிணைந்தனர் என்பது குறிக்க இவ்வாறு பூட்டுவிற் பொருள்கோள் பெற வைத்தது குறிக்க.

நற் பேறு – இங்கு இதன்மேல் உண்டோ என்றதனால் சிவசாயுச்சியமாகிய முடிந்த பதம் குறித்தது. அருள்ஞானக் குறியினின்று அருள் நோக்கத்தால் மலமூன்று மற்றாராய், அவனேதானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி செய்தனராதலின் இவர் பெற்றது பரமுத்தியேயாம் என்றும், வேறு சிலர் கூறுவதுபோலச் சிவபூசையாகிய கிரியைக்குரிய சாமீபமாகிய பதம் மட்டுமன்று என்றும் விசேட உரை காண்பர் ஆலாலசுந்தரம் பிள்ளை.

உண்டோ? – ஆன்மாக்கள் அடையத்தகும் பேறு இதற்கு மேல் வேறொன்று மி்ல்லை என்று வினா எதிர்மறை குறித்தது. “கற்றதனா லாய பயனென் கொல்” என்புழிப்போல வேறு இல்லை என்னாது உண்டோ என வினாச்சொல்லாற் கூறியது உறுதிப் பொருள் தருதற்பொருட்டு.

“கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பரா”தலின் கற்றதனாலாய் முடிந்த பயனைப் பெற்றனர் என்ற இத்திருக்குறட் பொருட்குறிப்பும் காண்க கண்ணப்பர் தாம் யாவரினும் மிக்க பேறுபெற்றனர் என்பது கருத்து. இதுபற்றியே திருவாதவூரடிகள் முதலிய பரமாசாரிய மூர்த்தி மற்றும் எல்லாப் பெரியோர்களாலும் துதிக்கப்பெற்றனர் என்க.

திருக்கண் – பிரானது ஞானத் திருமேனியில் எவ்விதவூனமும் இல்லாத கண். வந்த – தோற்றப்பட்ட. ஊறு – உறுவது. ஆகுபெயராய்ப் புண்ணையும் அதிற் பெருகிய உதிரத்தையும் குறித்தது. ஊறு – பேறு தொழிலாகு பெயர்கள்.

அஞ்சி – அவர்க்குத்தீங்கு – ஊறு – நேர்ந்ததற்கு அஞ்சினாரேயன்றித் தம்கண்ணைத் தோண்டுதற்கு அஞ்சினாரல்லர் என்பதுதோன்றத் தங்கண் இடந்து அப்ப என்றார்.

அப்ப உதவும் கை – உதவும் – வலது கண்ணைத் தோண்ட உதவின என இறந்த காலப் பெயரெச்சமாகவும், இடது கண்ணைத் தோண்ட உதவி நிற்கும் என காலப் பெயரெச்சமாகவும், இவ்வரிய செயல்களிரண்டினையும் உதவும் என்ற ஒரு சொல்லாலே குறிக்க உதவும் சொல் அருமை காண்க.

உதவும் கை – உயிரின் இச்சையறிந்து உதவுவது கையின் பண்பு என்பது குறிப்பு; “உடுக்கை யிழந்தவன் கை போல” என்ற திருக்குறளானறிக என்பார் சுப்பராய செட்டியார்.

ஏறு உயர்த்தவர் – காளத்தி நாதர். தருமசொருபமாகிய விடையினை ஊர்ந்து அருள்வது போலஅதனையே கொடியாக உயர்த்தியும் கையாற்பிடித்தவாறு அவ்வறத்தின் வழியே அன்பு செய்த இவரையும் கையாற் பிடித்துத் தமது சாயுச்சியத்திற்கு உயர்த்தினர் என்றது குறிப்பு.

தம்கையால் – சிவலிங்கத்திருமேனியினின்றும் தோன்றிய கையினாலே, உதவும் கைக்குப் பிரதி உபகாரம் தமது கையாற் பிடித்தலாம் என்பது போலக் கையாற் பிடித்தனர் என்றதும் குறிப்பு. இது பெண்ணொரு பாகனது வளையலணிந்த இடக்கை என்று காளத்தியில் உள்ள வடமொழிக் கல் வெட்டுக் கூறுகிறது.

என்வலத்தில் – வலத்தில் – வலப்பக்கத்தில், இடப்பக்கத்தில் உமையம்மையாரும் திருமாலும் உள்ளார்கள் என்ற குறிப்பினால் வலத்தில் என்றார். இடம் அம்மையாரது பாகமாக, வலம் தமது பாகமாதலின் அதனில் நிறுத்தினார் என்பதுமாம். அம்மையாருக்கு இடமே இடமாகக் கொடுத்தவர் இவர்க்கும் வலமே இடமாகக் கொடுத்தார் என்ற நயமும், சக்கரம் வேண்டித் தமது ஒரு கண்ணைத் தோண்டி அருச்சித்த திருமாலுக்கு எளிய இடப்பாகமும், தனக்கென ஒன்றும் வேண்டாது இறைவன் திருக்கண்ணில் வந்த ஊறுகண்டு அஞ்சி அதன்பொருட்டே தமது ஒருகண்ணை அப்பி மற்றொது கண்ணையும் உதவ நின்றும் பணி செய்த இவர்க்கு வலப்பாகமும் கொடுத்தனர் என்ற நயமும்காண்க. வலம் – மேம்பாடு – வெற்றி – எனக்கொண்டு அன்பே சிவமாவது சிவத்தின் வலமாதலால் அதனில் நீ நிற்பாய் என்றார் என்ற குறிப்புமாம்.

மாறு இலாய் வலத்தின் நிற்க என்க – ஒப்பும் உயர்வுமில்லாதவனே நீ வலத்தில் நிற்பாயாக. வலத்தின் நிற்க – எனப் பிரித்து, வலம் – வல்லமை, இன் – உவமவுருபு எனக்கொண்டு, அருள் வடிவாகிய சத்தி “நீரின் தன்மை அனல் வெம்மையென” அகலாது சமவாயமாக நீக்கமின்றி நிற்றல்போல, அன்பு வடிவமாகிய நீ் பிறிவறியாது அத்துவிதமாக நிற்க என்பதும் குறிப்பு.

“ஒளியென்ன நில்லென்றான்” என்பது பஞ்சாக்கரப்பஃறொடை.

நிற்க – நிலைபேறு பெற்று நிற்க என்றலுமாம்.

மன்னு பேரருள் – நிலைபெறும் பெரியதிருவருள். அன்பிற் பெரியவருக்கு அருளாற்பெரியது செய்தனர் என்க.

சிறப்புப் பொருள்

இதனைக் காணும் நற்பேறு அந்த அந்தணருக்கும், அறியும் நற்பேறு நமக்கும் இதனை விட  வேறெதுவும்  உண்டோ? சிவபிரான் திருக்கண்ணில் உற்ற காயத்தைக்  கண்டு அஞ்சித் தம் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி எடுத்து அப்பிய  அடியவரின் கரத்தினை, அறமாகிய ஏற்றினைக் கொடியாக  உயர்த்தியதம் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’எப்போதும் என் வலப்பக்கத்தில் விலகாமல் நிற்பாயாக!’’ என்று கூறி நிறைந்த பேரருளைப்  புரிந்தார்!  அவரைத் தாங்கிய தருமதேவதையாகிய இடபத்தின்  கண் சிவந்தது! பின்னர் அதுவே இடபக் கொடியாக உயர்ந்தது. இங்கு அறம் மேலோங்கியதை உணரலாம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சேக்கிழார் பாடல் நயம் (பேறினி)

  1. வணக்கம்!

    ‘பேறு இனி இதன் மேல் உண்டோ?’ என்னும் ஆசிரியர் கூற்றினைச் சிவகோசரியாருக்கும் நாயனார் புராணம் ஓதியும் காளத்தி மலை காட்சியை மொழிவழியாகக் காணும் நமக்கும் கிட்டிய பேறாகக் கட்டுரையாசிரியர் கூறுவது இலக்கிய நயம் மட்டுமன்று. உண்மையான பேறு என்பதை உணர்தல் வேண்டும்.!

    ‘பேறு இனி இதன் மேல் உண்டோ? என்னுந் தொடர் சேக்கிழார் நம்மைப் பாரத்துக் கூறுவது!

    இலக்கிய நயம் சுட்டல் என்பது ஆன்மாவிற்கு இதம் அளிக்க வேண்டும் இது போல!

    இனி சக்கரம் வேண்டி ஒரு கண்ணை இழந்த பெருமாளுக்கு இடப்பக்கததை அளித்த பெருமான் இரு கண்ணையும் இழந்த நாயனாருக்கு வலப்பக்கத்தை அளித்தான் என்னும் முதிர்ச்சியான இலக்கிய நயம்; பாராட்டல்!

    வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *