Blog

  • (Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

    (Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

    ச.கண்மணி கணேசன்(ப. நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியத்தில் இடம்பெறும் முதுபெண்டு, முதுவாய்ப் பெண்டு ஆகிய இரு பாத்திரங்களின் பெயர்க்  காரணத்தையும் தன்மைகளையும் எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். முதுபெண்டை முதுவாய்ப்  பெண்டு எனப் பிறழ உணரும்  இடத்தை எடுத்துக்காட்டித் தெளிவிக்க வேண்டிய தேவை உள்ளது. அகப்பாடல்கள் முதல்நிலைத் தரவாக அமைய; உரையாசிரியர் கூற்றுகளும் பிறவும் இரண்டாம்நிலைத் தரவாக அமைந்து; விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை உருப்பெற்றுள்ளது.

    முதுபெண்டிர்க்குரிய தகுதியும் வயதும்   

    பெண்ணானவள் மணம்புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து  கருவுயிர்த்தவுடன்  முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. திருமணம் என்ற   பந்தம்  அளிக்கும் பொறுப்பு அவளது  கடமை ஆகிறது. ‘முது-‘ என்னும் பெயரடை ‘வயதான’ எனும் பொருளைத் தராது; முழுமை எனும் பொருளைத் தருகிறது.

    சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சூல் உடையளாய்ப் புதல்வனை ஈன்று; பாயலில்  படுத்திருந்தாள் காதல் மனைவி. ‘இதுகாறும் இளம்பருவத்தினளாய் இருந்தவள்; இனித் திதலை அல்குல் உடைய முதுபெண்டு ஆயினள்’ எனத் தலைவன் தன் கையிலிருந்த குவளை மலரால் அவளது வயிற்றைத் தடவிக் கிண்டல் செய்ய அவள் நாணத்தில் கண்களை மூடி மகிழ்ந்தாள்.

    “புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
    திதலை அல்குல் முதுபெண்டாகித்
    துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.-370)

    பாராட்டும் தலைவனின் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி அனைத்தும்; முதுபெண்டு ஆவதற்குரிய தகுதி இல்லறநெறி நின்று மகவைப்பெறுதல் என்று புலப்படுத்துகிறது. ‘முதுபெண்டு’ எனும் தொடரில் உள்ள ‘முது’ எனும் அடை ‘முழுமை’ என்ற பொருளில் வழங்குவது காண்க.

    தலைவன் புறத்தொழுகத் தன்  கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பும் மகப்பேறுற்ற தலைவி தன்னை முதுபெண்டிருள்  ஒருத்தி எனக்  கூறுகிறாள்.

    “இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
    உழவன் யாத்த குழவியின் அகலாது
    பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-181)

    என்ற வருணனை; இரண்டு மருப்போடு  ஈன்றணிமை உடைய எருமைக்  காரானைக்  காட்டுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்லாமல்  தான்  இருக்கும் இடத்திலுள்ள;  பால்பிடித்த கதிர்களை மேய்வது; பல நுட்பமான பொருட்களை உணர்த்தும் உள்ளுறை ஆகிறது.

    இரண்டு மருப்புள்ள எருமை என விதந்து சொல்வது உட்பொருள் கருதியே ஆகும். திருமணத்தால் ஒரு பெண் பிறந்தவீட்டில் இருந்து தன் வீட்டினுள் நுழைகிறாள். அவளது வாழ்க்கை இரண்டு குடும்பங்களின் பெருமையைப் பேசக்கூடியதாக அமைய வேண்டும் என்பதையே ‘இருமருப்பு எருமை’ என்ற தொடர் சுட்டுகிறது.

    அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக் காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள முடியும். அதனால் ஏற்படும்  இழப்பு கருதிக் கடிந்து எருமையை யாரும் விரட்டவில்லை. அவ்வளவு வளமான நன்செய்; இல்லறக் கடமைகளுக்கேற்ற செல்வமிகுந்த மனைவாழ்க்கையைக்  குறிக்கிறது.

    எருமைக்குத் தாய்மைப் பிணைப்பே முதன்மை ஆவது போலத்; தலைவிக்குப் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது. உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பக்  கட்டமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.

    தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தலைவி விரும்பவில்லை. துன்பத்தின்  இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது; மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்கவல்லது எனத் தன்னைத் தேற்ற முயலும்  தோழிக்குத் தடை போடுகிறாள்.

    “திருமனைப் பல கடம் பூண்ட
    பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)

    எனத் தன் தகுதியைத் தானே நிலைநாட்டுகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்குரிய கடமைகள்; குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை மேலாண்மை; உறவுதாங்கல், நட்பு ஓம்பல், சுற்றம் போற்றல்  எனப் பல. அவற்றை ஆற்றவேண்டிய முதுபெண்டு ஆகிவிட்டமை அவள் வாய்மொழியாக   வெளிப்படுகிறது.

    திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர்

    தலைவன் தன் திருமணத்தன்று  முதுபெண்டிர் செய்தவற்றை  நினைவு கூர்கிறான்.

    “உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
    புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
    நீரொடு சொரிந்த…
    வதுவை நன்மணம்” (அகம்.-86)

    புரிந்த ஞான்று நிகழ்ந்த முக்கியச் சடங்காகிய மங்கல நீராட்டை வருணிக்கிறான். தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராய்;  சுடுமண்ணாலான வட்டமான புதிய கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய மங்கலப்  பொருட்கள்  ஏந்தியவராக முதுபெண்டிர் நின்றனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை எனத் தம்முள் பேசியபடியே கொடுத்தனர். அவருள் புதல்வனைப் பெற்றுத்  திதலை பொருந்திய வயிற்றை உடைய நால்வர் அணிகலன்களுடன் தலைவியை நீராட்டினர். ‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும்படி; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என முதுபெண்டிர் வாழ்த்தினர்.

    நோய் நாடும் சடங்கில் முதுபெண்டிர்      

    நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அக்கம்பக்கத்தில் இருந்த முதுபெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை முன்னர் நிறுத்தி; ஏற்பாடுகளைச் செய்கிறாள். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது எனச் சொல்வதை  (நற்றிணை- ப.356-357) ஏற்றுக்  கொள்ள இயலவில்லை. ஏனெனில் கட்டுவிச்சியை அகப்பாடல்கள்   முதுவாய்ப் பெண்டு என்கின்றன.

    முதுவாய்ப்பெண்டின் தொழிலும் வாழ்வும்     

    ஏழ்மை உடைய முதுவாய்ப் பெண்டின் தொழில் தெய்வத்தை வணங்கிக் கட்டுப்பார்த்துக் குறி சொல்வதே.

    வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில்; தலைவனைக் களவில்  கூடிமகிழ்ந்த  தலைவியின்  கூற்றில் முதுவாய்ப்பெண்டு குறி சொன்னமை  இடம் பெறுகிறது.

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
    முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற” (அகம்.-22).
    வேலன் வெறியாட்டு  நிகழ்ந்தது என்கிறாள். மகளின் வளை
    நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகு
    அணங்கியதாக உரைத்த;
    “… முதுவாய்ப்
    பொய்வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ”ச்

    (அகம்.-98) செய்த சடங்கு; தெய்வத்திற்குப் படையல் வைத்து நிகழ்ந்தமை  தெரிகிறது. முதுவாய்ப் பெண்டு ஆநிரை கவரும் மறவர் சீறூரில் குடியிருந்த ஏழ்மை மிகுந்தவள்.

    “கறவை தந்த கடுங்கால் மறவர்
    கல்லென் சீறூர் …
    முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை”

    (அகம்.-63) எனும் பாடலடிகள் வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்குரியது என்கிறது.

    ‘முதுவாய்’ என்ற அடைமொழியின் காரணம்

    கட்டுப்பார்த்துக் குறிசொல்வதை  வாய்விட்டு நெடுங்காலமாகச் செய்து  வந்தவர் ஆதலால்; ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.

    ‘பேசி முதிர்ந்த வாய்’ என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து உரைப்பதும் (அகநானூறு களிற்றியானைநிரை- ப.254, பா.98). ‘முதிய வாய்மையை உடைய’ என்று ஒளவை சு.துரைசாமிப்  பிள்ளை கூறுவதும் இக்கருத்தை அரண் செய்கின்றன (பதிற்றுப்பத்து- ப.311, பா.66).

    ‘முதுமை வாய்த்தலை உடைய’; ‘முதுமை வாய்ந்த’  என்றும் (அகம்.- 63&98); ‘அறிவு வாய்த்தலை உடைய’ என்றும் (அகம்.-22; அகநானூறு மணிமிடை பவளம்- ப.178, பா.195& நற்.200& குறுந்தொகை- ப.151, பா.78) ஒரே தொடருக்கு வேறுவேறு பொருள்கள் சொல்வது தொடக்க காலத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறது. ஆயினும் கட்டுவிச்சி முதுவாய்ப் பெண்டு என்றே குறிப்பிடப்பட்டாள் என்பதில் மட்டும் எந்த  ஐயமுமில்லை.

    ‘முதுவாய்’ எனும் அடைமொழி தொகையிலக்கியத்தில் ‘முதுவாய் வேல’ (அகம்.-195), ‘முதுவாய்க் குயவ’ (நற்.-200), ‘முதுவாய்க் கோடியர்’ (குறு.-78) ‘முதுவாய் இரவல’ (பதிற்.-66) எனப் பிற பெயர்களோடும் இணைந்து   வழங்குகிறது. அவற்றுக்குரிய விளக்கம் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் பொருளை விளக்க உதவும்.

    மட்கலம் வனையும் குயவனும்   வாய்விட்டு விழா அறைகிறான்  (நற்.-293). வழிவழியாக அறிவிக்கும் உரிமை பெற்று இருந்ததால் அவன் முதுவாய்க் குயவன் ஆனான்

    கோடியர் என்னும் கூத்தர் காலங் காலமாக வாய்ப்பாட்டு பாடிக்கொண்டே ஆடும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களை முதுவாய்க் கோடியர் என்று அழைத்தனர் எனப் புரிகிறது. இரவலர் என்பது பாணர், கூத்தர், பொருநர் புலவர் ஆகிய அனைவர்க்கும் உரிய பொதுப்பெயராகும். நெடுங் காலமாகப் பரிசில் வேண்டிப் பாடி ஆடி இசைத்துப் பாடல் இயற்றி இரப்போர் அனைவரும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழிக்கு உரியவர் ஆயினர். தொன்றுதொட்டு முருகு  அணங்கிற்கு வெறியாடி வழிபட்டுப் பாடியவன் ஆதலால்; வேலன் முதுவாய் உடையவன் ஆகிறான்.

    ‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெரிதும்  திணைமாந்தர்க்கே உரியதாகிறது. கோடியர், இரவலர், வேலன் மூவரும் திணைமாந்தராவது போல; முதுவாய்ப்பெண்டும் திணைமாந்தராகிய மறவர் சீறூரைச் சேர்ந்தவள் எனக் கண்டோம்.

    வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை  நெடுங் காலமாகச் செய்து  வந்ததால்; கட்டுவிச்சி  ‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெறுகிறாள்.

    ‘செம்மை’ என்னும் அடைமொழியின் காரணம்

    முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்;  அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற  எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.

    “செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
    கட்டிற் கேட்கும்” (நற்.-288)

    எனும் பாடலடிகட்கு உரை கூறும் போது; பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் கட்டுப்பார்க்கும் முறை பற்றிய விளக்கம் மிகச் சிறப்பாக அமைகிறது. ஆனால் ‘செம்முது பெண்டிர்’ அவர் கூறும் கட்டுவிச்சியாகிய முதுவாய்ப் பெண்டிரினின்றும் வேறானவர்.

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்று ‘முதுசெம்பெண்டிர்’ என அழைக்கப்படுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க: திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர், அகம்.-86). அதுபோன்றே ‘செம்முது பெண்டிர்’ என்ற வழக்கும் அமைந்துள்ளது. கற்பின் அடையாளமாகிய அருந்ததியைச்  சுட்டும் விண்மீன் சிவந்தது ஆதலால்; செம்மீன் எனப் பெயர் பெறுவதை ஒட்டிக் (பதி.-31); கற்பொழுக்கம் தொடர்பாகப் பெண்களுக்கும் ‘செம்மை’ எனும் பெயரடை பயின்று வருகிறது. நல்லொழுக்கத்தின் அடையாளமாகிக்; ‘குறையற்ற’ என்றும் பொருள்படும். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்புநெறி வழுவாது; மகப்பயந்து இல்லறம் நடத்துவோர் என உறுதிப்படுகிறது.

    முடிவுரை

    ‘முது-’ என்னும் பெயரடைக்கும் வயதிற்கும் தொடர்பு  இல்லை. இளம்பெண்ணாயினும் மணம்  புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து  கருவுயிர்த்தவுடன்  முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை மங்கலத்தின் அடையாளம் ஆகும். திருமணம் என்ற   பந்தம்  அளிக்கும் பொறுப்பு அவளது  கடமை ஆகும். ‘முது-‘ என்னும் பெயரடை முழுமை எனும் பொருளைத் தருகிறது. திருமணச்சடங்கையும் நோய்நாடும் சடங்கையும் ஆற்றும் தகுதி முதுபெண்டிர்க்கு உண்டு. திணைமாந்தராகிய கட்டுவிச்சிகள் ஏழ்மை நிலையில் கட்டுப்பார்த்து வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை நெடுங்காலமாகச் செய்தவர் ஆதலால் ‘முதுவாய்ப் பெண்டிர்’ எனப்பட்டனர். முதுவாய்ப் பெண்டையும் அகவன் மகளையும் ஒருசேர வைத்துப் பார்ப்பது அடுத்தகட்ட ஆய்விற்கு உரியது.

    துணைநூற் பட்டியல்

    1. அகநானூறு களிற்றியானைநிரை- 2009- கழக வெளியீடு, சென்னை.
    2. அகநானூறு மணிமிடை பவளம்- 2007- கழகவெளியீடு, சென்னை.
    3. குறுந்தொகை- 2007- கழக வெளியீடு, சென்னை.
    4. நற்றிணை- 2007- கழக வெளியீடு, சென்னை.
    5. பதிற்றுப்பத்து- 2007- கழக வெளியீடு, சென்னை.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு வழங்கும் மதிப்பீடு:

    1.  ஒருவருடைய கபடற்ற உள்ளத்தைப் பாராட்ட வேண்டிய நிலையில் ‘குழநதையுள்ளம்’ கொண்டவர்’ எனச் சொல்வதற்குப் பதிலாகச் ‘சிறுபிள்ளைத்தனமாக’ என்று சொன்னால் என்ன ஆகும்? இத்தகைய சொற்பிறழ்வுகள் பொருட் பிறழ்வுகளுக்குக் காரணமாகி இலக்கியச் சுவையுணர்திறன் பழுதுபட வாய்ப்புண்டு. ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லும் ‘முதுவாய் பெண்டிர்’ என்னும் சொல்லும் அத்தகையன. அவற்றிடை நிலவும் அக்காலப் பொருள் வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் காட்டுவதன் மூலம் இருவேறு பாத்திரங்களின் தனித்தன்மையைக் வலிமையான தரவுகளால் கட்டுரையாளர் காப்பாற்றியிருக்கிறார், காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    2.  மரபுவழி அமைந்த இலக்கியக் கூறுகளை ஆய்ந்து எளிய தமிழில் விளக்க முயலும் ஆய்வுக் கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்!

    3.  ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லில் ‘முது’ என்பது முதுமை என்னும் மூலத்திலிருந்து வந்ததாகக் கொள்ளாமல் முதிர்ச்சியின் வடிவமாகக் கொண்டு ‘முழுமை’ என்னும் பொருள் காண்பது ஏற்புடைத்தே. பெண்மை தாய்மையில் நிறைவடைகிறது என்பது உண்மையே.

    4.  ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்பது ‘தெய்வத்தை வணங்கிக் குறிசொல்லும் கட்டுவிச்சியையே குறிக்கும்’ என்பது கட்டுரையாளரின் ஆய்வுத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.

    5. கேலி, தூரம், வயது, கட்டிப்போட்டு, காதுபட’ முதலிய இக்காலச் சொற்கள். கட்டுரைப் பொருண்மை, வெளிப்பாட்டு உத்தி, ஆய்வு நெறி, சான்றுகள், கையாளப்பெற்றிருக்கும் மொழி நடை இவற்றோடு பொருந்துமாறு இருப்பதாகக் கருதவியலவில்லை. பாதாம்பருப்புப் பாயசத்தில் வேர்க்கடலை எதற்கு?

    Share
  • சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்

    சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்

    சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்
    காஞ்சிவாழ் தயாநிதியே

    என்ற பாடலைக் கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். காஞ்சி மகான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

    பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பதே ஒரு சாதனை எனும்போது வாழ்க்கையில் சதம் அடிப்பவர்களின் சாதனையை என்ன சொல்வது? அப்படியான ஒரு அருமையான சாதனைச் சந்தர்ப்பத்தை ஒரு இரண்டு மாத கால இடைவெளியில் தவற விட்டு விட்டார் எமது இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபெத் அவர்களின் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் (Duke Of Edinbrugh Prince Philip).

    ஆமாம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 09.04.2021 அன்று காலை 9 மணிக்கு தனது 99வது வயதில் காலமாகிய கோமகன் பிலிப் அவர்கள் இன்னும் இரண்டு மாத காலம் உயிருடன் இருந்திருப்பாரேயாகில் 100 வயதை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டிருப்பார்.

    இந்த 99 வருட பயணத்தினூடாக பயணித்த இந்தப் புதிரான மனிதரின் வாழ்வுப்பயணம் எத்தகையது என்பதைப் புரட்டிப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது. இவருடைய 99 வருடப் பயணத்தில் சுமார் 46 ஆண்டுகள் நான் இவர் பயணித்த இந்த இங்கிலாந்து மண்ணிலே பயணித்திருக்கிறேன் என்று எண்ணும்போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    இதுவரை காலமும் ஊடகங்களில் இவரைப் பற்றிய எதிர்மறையான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுச் செய்தியாக வரும்போது அவரைப் பற்றி சிறிதளவு எண்ணத் தலைப்பட்டதைத் தவிர இவரின் வரலாற்றை அறியும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை, இயல்பாகவே இங்கிலாந்து இராஜ குடும்பத்தின் மீது என் மனைவி கொண்டிருந்த ஆர்வத்தினால் அவருடன் இணைந்து தொலைக்காட்சியில் இராஜ பரம்பரை சம்பந்தமான நிகழ்வுகளை பார்ப்பதில் இருந்தே இவரைப் பற்றிய ஓரளவு அறிந்திருந்தேன் என்பதே உண்மை.

    ஆனால் ஒரு தம்பதியினர் 73 வருட காலம் மணவாழ்க்கையில் இணைந்திருந்தார்கள் அதுவும் அவர்கள் சமூகத்தில் வகிக்கும் அந்தஸ்தின் நிமித்தம் அவர்கள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் கடந்து இணைந்திருந்தார்கள் என்பதுவே ஒரு சாதனை என்றால் மிகையாகாது.

    26 வயது இளைஞரான இளவரசர் பிலிப் அன்றைய 21 வயது இளைவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்களை மணமுடித்தது முதல் கடந்த வெள்ளிக்கிழமை மரணிக்கும் வரை தனது மனைவிக்கு ஒரு கருங்கல்லைப் போன்ற உறுதியான பக்கபலம் அளிப்பவராகத் திகழ்ந்தார் கோமகன் பிலிப் என்பதுவே உண்மை.

    அன்றைய இங்கிலாந்தின் மகாராஜாவாக இருந்த ஜார்ஜ் அவர்களின் மறைவையடுத்து தனது 26வது வயதில் மகாராணியாராகப் பொறுப்பேற்ற இரண்டாவது எலிசபெத் அவர்களுக்கு தனது இறுதிநாள்வரை ஒரு ஆதரவு மிக்க கணவராக, மகாரணியாரின் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

    இங்கிலாந்து இராஜகுடும்ப வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்தவர் எனும் சாதனையை இங்கிலாந்து மகாராணியாரும், அப்படி ஆட்சி செய்த ஒருவரின் வாழ்க்கைத்துணையாக அதிக காலம் இருந்தவர் எனும் சாதனையை கோமகன் பிலிப்பும் படைத்துள்ளார்கள்.

    இந்தச் சாதனைகளின் மத்தியில் இவர்க:ள் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். இளவரசர் சார்ள்ஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வேர்ட் எனும் நான்கு குழந்தைகளின் பெற்றோர் இவர்கள்.

    மகாரணியாரின் தங்கையான மார்கிரெட் அவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான போதும், பின்னர் அவரது மணவாழ்க்கையில் முறிவு, அவரின் ஆண்களினுடனான தொடர்பு, போதைப்பழக்கம் என பல சர்ச்சைகள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்ட போது அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளிப்பதில் மகாராணியாருக்கு பிலிப் கோமகன் ஆற்றிய பங்கு அளப்பரியது.

    பின்பு இளவரசர் சார்ள்ஸ், டயானா அவர்களின் மணமுறிவும், டயானாவின் மரணமும், இளவரசர் ஆண்ட்ரூ அவர்களின் மணமுறிவு, இளவரசி ஆன் அவர்களின் முதல் மணமுறிவு அதன் பின்னான மறுமணம், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மறுமணம் என தமது வாரிசுகளின் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதில் மகாரணியாருக்கு பக்கபலமாக இருந்த்துடன் தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கியவர் கோமகன் பிலிப் ஆவார்.

    தமது பிள்ளைகளின் வாழ்க்கைப் பிரச்சனையைச் சமாளித்து முடித்து விட்டோம் என்றிருக்கையில் இப்போது சமீபத்தில் அவர்களது பேரனான இளவரசர் ஹரியும் அவரது மனைவி மெகன் மார்க்கலும் இராஜ குடும்பத்தினின்றும் பிரிந்து அமேரிக்காவில் நிலை கொண்டது மட்டுமின்றி தொலைக்காட்சி நேர்காணலில் இங்கிலாந்து இராஜ குடும்பத்தைத் தாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட துரதிர்ஸ்ட நிகழ்வை எதிர் கொள்ள வேண்டி வந்தது. அச்சமயத்தில் தான் சுமார் ஒரு மாத காலத்தின் முன் கோமகன் பிலிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் இல்லம் திரும்பினார், அதன் தொடர்ந்தே இந்த மரணமும் நிகழ்ந்துள்ளது.

    இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்நோக்கும் வகையில் இங்கிலாந்து மகாராணியாரின் கொள்கையான “விளக்கமும் இல்லை, சர்ச்சைகளில் ஈடுபடுவதும் இல்லை“ என்பதற்கமைய கோமகன் பிலிப் அவர்களும் மனைவியோடு ஒத்துழைத்தார் என்பது வெள்ளிடைமலை.

    சரி இத்தகைய சூழல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் திடகாத்திரமாக கோமகன் பிலிப் உருவாகக் காரணமான அவரது பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?

    1921 ம் ஆண்டு யூன் மாதம் 10ம் திகதி கிரெக்க நாட்டிலுள்ள கோர்பூ (Corfu) எனும் தீவில் கிரேக்கத்தினதும், டென்மார்க்கினதும் இளவரசரான ஆண்ட்ரூ (Prince Andrew) க்கும், ஜெர்மனிய பட்டன்பேர்க் (Battenburg) நகர இளவரசி அலீஸ் (Alice) என்பவருக்கும் ஜந்தாவது மகவாக நான்கு பெண்களுக்கு பின்னால் ஆண் மகவாக அவதரித்தவர் தான் கோமகன் பிலிப்(Prince Philip).

    பிறப்பின் மூலம் கிரேக்க நாட்டினதும், டென்மார்க் நாட்டினதும் பட்டத்துக்குரிய இளவரசர் எனும் உரிமையைப் பெற்றவர் இளவரசர் பிலிப். இப்படி இராஜ பரம்பரையில் இராஜ உரிமை பெற்ரவர் எப்படி இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்?

    இவரது தாய்வழிப் பாட்டனாராகிய பட்டன்பேர்க் இளவரசர் லூயிஸ் இங்கிலாந்துப் பிராஜாவுரிமை பெற்று லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்று வாழ்ந்து இங்கிலாந்தில் மடிந்தார். அப்போது இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பின்னால் இங்கிலாந்தில் ஜேர்மனிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருந்தது. பாட்டனாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட பின்பு தனது தாயுடன் அவர் மீண்டும் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார்.

    அப்போது கிரேக்க நாட்டிற்கும் துருக்கிக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது அப்போது கிரேக்க நாட்டின் அதிபராக இளவரசர் பிலிப்பின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூவின் அண்ணன் முதலாம் கொன்சடன்டைன் அரசராக இருந்தார். துருக்கியுடனான யுத்தத்தில் படுதோல்வியடைந்த்துக்கான பொறுப்பு பிலிப் அவர்களின் பெரிய தந்தை மீது விழுந்ததினால் அவர் இராஜ பதவியிலிருந்து அகற்றப்பட்டு, இளவரசர் பிலிப்பின் தந்தையும் குடும்பமும் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர், சிறிது காலம் பிரான்ஸில் வசித்து வந்ததன் பின்னால் அவரது தாயார் அலீஸ் மனநோயாளியாக அடையாளைப்படுத்தப்பட்டு மனநோயாளர் மனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மொன்டி கார்லோ வில் வசித்தார்.

    இந்நிலையில் தான் இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் தனது தாய்வழிப் பாட்டியான விக்டோரியா மவுண்ட்பேட்டனுடன் வசித்தார். அவரின் பின்னால் அவரது தாய் மாமனான மவுண்ட்பேட்டன் பிரபு அவரைத் தனது மகன் போல வளர்த்தார். ஸ்கொட்லாந்து நாட்டில் கல்விபயின்று பின்னர் தனது கிரேக்க குடியுரிமையை இரத்துச் செய்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றுக் கொண்டார்.

    இங்கிலாந்து கடற்படையில் இணைந்து அதிவேகமாக பதவிகளில் உயர்ந்த பெருமை பெற்றவராவார். 23 வயது நிரம்பிய அழகிய வலிபரான இவர் மீது 18 வயதே நிரம்பிய அப்போதைய இளவரசி இரண்டாவது எலிசபெத் அவர்கள் காதல் கொண்ட்தாகக் கூறப்படுகிறது. அவரை விட ஐந்து வயது அதிகமான இளவரசர் பிலிப்பை இளவரசி எலிசபெத் அவர்களின் பெற்றோர் மாப்பிள்ளையாக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    21 வயதில் தனது காதலை பகிரங்கப்படுத்திய அப்போதைய இளவரசி எலிசபெத் அவர்களின் விருப்பத்தினை அன்றைய மகாராஜா ஜார்ஜ் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

    மிகவும் துடிப்பாற்றல் கொண்டவரும், கடற்படையில் கட்டளையிடும் தளபதித் தகமையில் இருந்தவருமான இளவரசர் பிலிப் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணியாரின் பக்கவாத்தியமாக மாறுவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும் அக்காலகட்டத்தில் அவர் வாலிபர்களுக்குரிய லீலைகளில் ஈடுபட்டதை எலிசபெத் மகாராணியார் கண்டும் காணாதது போல பொறுமை காத்ததுமே அவர்களது ஸ்திரமான உறவுக்கு அத்திவாரமிட்டது என்கிறார்கள் இராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர்கள்.

    அவரின் மிகச் சிறந்த சாதனையாக “எடின்பரோ கோமகனின் பரிசில்(Duke of Edinbrugh Award) “ எனும் இளைய தலைமுறைக்கான ஒரு தன்னம்பிக்கை வளர்க்கும் பரிசுத் திட்ட்த்தைக் குறிப்பிடுகிறார்கள். இன, மத, நிற, சமுதாய ஏற்ற தாழ்வுகள் எதுவுமின்றி அனைத்து இளம்பிராயத்தினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதின் மூலம் ஒரு இலக்கையடைவதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கலாம் எனும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்பவர்கள் இதற்குரிய பரிசுப் பத்திரத்தை கோமகன் பிலிப் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதே இதன் சிறப்பம்சமாகும்.

    இதுமட்டுமின்றி காலமாற்றத்துக்கு இராஜ குடும்பம் விதிவிலக்கானதல்ல எனும் கோட்பாட்டிற்கமைய சூழலுக்கேற்ப இராஜகுடும்பத்திலும் மாற்றங்கள் நிகழ உந்துகோலாகச் செயற்பட்டவர் கோமகன் பிலிப் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.. இங்கிலாந்து மகாராணியாரும் வரிவிதிப்புக்கு கட்டுப்பட்டவர் எனும் வகையிலேற்பட்ட மாற்றம் உட்பட, இராஜமாளிகையான “பக்கிங்காம் பலஸ்” எனும் மகாராணியாரின் வாசஸ்தலத்தை கோடை விடுமுறை காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையிலான வசதி ஏற்படுவதற்கும் இவர் ஒரு முக்கிய காரணமாகவிருந்தார் என்பது செய்தி.

    தன் மனதில் பட்டதை எதுவித தயக்கமுமின்றி பேசிவிடுவது இவரைப் பல சமயங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியிருக்கிறது. பண்ணைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு மனிதராக இருந்தார்.

    மிகவும் நகைச்சுவையாக பேசும் இவரிடம் ஒரு நிருபர் உங்களைப் பற்றி எவ்வாறு விவரிப்பீர்கள் என்று கேட்டதற்கு “நானோரு அகதிக் கணவன்” (I am a refugee husband) என்று பதிலளித்தாராம்.

    மனநோயாளிகள் மனையிலிருந்து நலமடைந்து திரும்பிய இவரது தாயார் ஒரு கத்தோலிக்க சேவகியாக மாறி வாழ்ந்தார். தனது அந்திம காலங்களில் இங்கிலாந்தில் தன் மகனுடன் வாழ்ந்தார். இவரைத் தன் மகன் போல் வளர்த்த இவரது மாமனாரான மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்து ஐ,ஆர்,ஏ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

    கொரோனா எனும் கொடிய கிருமினியின் கட்டுப்பாட்டினுள் மறைந்த இவருக்காக எட்டுநாட்கள் துக்கதினங்களாக அனுசரிக்கப்படுகிறது. வரும் 17.04.2021 சனிக்கிழமை 3 மணியளவில் வின்சர் மாளிகையில் இவரது இறுதி நிகழ்வுகள் நிகழவிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய முப்பது பேரே கலந்து கொள்ள முடியும். இராஜ குடும்பத்தைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினர்களே நேரடியாகச் சமூகளிப்பார்கள். இங்கிலாந்துப் பிரதமரே உறவினருக்கு வழிவிட்டு தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மகாராணியாருடன் 73 வருடங்கள் வாழ்ந்து மறைந்த அவரது அன்புக் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் அவர்களின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் துயர் பகிரும் செய்திகளை பகிர்ந்துள்ளார்கள். இங்கிலாந்து முழுவதும் கொரோனா தக்கத்தோடு யாரோ ஒரு நன்கு தெரிந்த ஒருவரையிழந்த ஒருவகை துயரில் ஆழ்ந்து போயிருக்கிறது. அன்னாரின் ஆத்மசாந்திக்காய் நாமும் பிரார்த்திப்போம்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 3

    (வெட்டுண்ட அட்டையும் வீரனின் கவந்தமும்)

    முன்னுரை

    காஞ்சி, பாடாண் முதலிய வாழ்வியல் திணைகள் பெருமை சேர்த்தாலும் வெட்சி முதலியனவே புறத்திணைகளின் சாரமாகும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அகத்திணைக் களங்களெனின் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவே புறத்திணைக் களங்களாகும். அவற்றுள் தும்பை சூடி நேருக்கு நேர் பகையெதிர்தல் தும்பைத்திணையாகும். தும்பைத் திணையின் போர்ச்சிறப்பினைக் காட்சிப்படுத்தும் தொல்காப்பியர் அட்டையை உவமமாக்குவதை அறியமுடிகிறது. ‘அட்டை போல ஆடுதல்’ என்னும் உவமத்தால் விளக்கப்படும் பொருள் இலக்கியக் காட்சியாயினும் வீரம் செறிந்த தமிழ்மரபின் நடப்பியல் உண்மை என்பதையும் அறியமுடிகிறது. உவம விளக்கத்தில் இது பற்றிய சில கருத்துக்களையும் இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    கொற்றவை வழிபாட்டில் ‘நவகண்டம், அரிகண்டம்?

    ‘அட்டையாடுதல்’ என்னும் உவமம் கற்பனைப் பொருளை விளக்குதற்கானது அன்று. தமிழனுடைய அரசியல் வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த நடைமுறை வழக்கத்தில் காணப்பட்ட ஒரு நிகழ்வைச் சித்திரிப்பதற்குரியதாகும்.  ‘நவகண்டம்’, ‘அரிகண்டம்’ என்னும் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய வீர மரபாகும். ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். ‘நவகண்டம்’  என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வது.  ‘அரிகண்டம்’ என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்துத் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்வது.

    1. மானுட ஆற்றல் பயனற்றுப்போய்விடுமோ என்னும் ஐயவுணர்வு தலையெடுங்குங்கால் ஒரு வேண்டுதலை நிறைவேற்றவோ மாண்புடன் இறக்கவோ இந்தப் பலிக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்வர்.
    2. வலிமிகுந்த மாற்றரசருடன் நிகழும் போர்க்காலங்களில் வெல்வதற்கு வாய்ப்பு அரிதான ‌ தருணங்களிலும்,
    3. தேற்ற இயலாத உடல்நிலையால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் குணமடைய வேண்டுகின்ற பொழுதிலும்
    4. நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரோ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியோ மிகுந்த அவமானத்தினால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவரோ, அவ்வாறு சாகாமல் வீர சொர்க்கம் அடைய விரும்புகிற பொழுதிலும்

    எனப் பல காரணங்களுக்காக ‘நவகண்டம்’ செய்து கொள்வர். இவ்வாறு தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்பவர் அக்காலத்தில் வீரர்களாகப் போற்றப்பட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினர் அவர்கள் உருவங்களை “வீரர் கல்லு” எனப்படும் சிலைகளாக வடித்துத் தொழுது வந்ததும் வழக்கமாக இருந்துள்ளது. நமக்கு இதுவரை கிடைத்த மிகப் பழமையான ‘வீரர் கல்லு’ கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய கற்கள் விரவிக் காணப்படுகின்றன.

    இலக்கியங்களில் கவந்தம்

    வேண்டுதலுக்காகவோ களத்திலோ தானாகவோ எதிரணி வீரர்களாலோ  தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் துடிக்க துடிக்க ஆடுவதற்குப் பெயர்தான் கவந்தம் என்பது. இதனைத்தான் ‘அரிகண்டம்’ என்ற சொல் குறிக்கிறது. இது பற்றிய குறிப்புக்கள் இலக்கியப் பதிவாகவும் வரலாற்றுப் பதிவாகவும் காணக்கிடைக்கின்றன.

    “அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ?
    அரிந்த சிரம் அணங்கின்கை கொடுப்பராலோ?
    கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ?
    குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ?”

    என்னும் கலிங்கத்துப்பரணி கவந்த நிகழ்ச்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது.

    “வெந்திறல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென்
    பலிக்கொடைப் புரிதோர்”

    என்னும் (இந்திரவிழவூர் எடுத்த காதை) வரிகள் மன்னர்க்கு நேர்ந்த துன்பம் தொலைவதற்காக அரிகண்டம் செய்தாரைக் குறிக்கிறது.

    “தோளும் தலையும் துணிந்து வேறாகிய
    சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து
    எறிபிணம் இடறிய குறையுடல் கவந்தம்
    பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட” (கால்கோட்காதை)

    என்னும் வரிகள் கவந்தம் என்ற சொல்லை நேரடியாகவே பதிவு செய்து பேய்க்களக்காட்சியைச் சித்திரித்துள்ளது. இத்தகைய பதிவுகளிலிருந்து கவந்தம் ஆடுதல் அல்லது அரிகண்டம் ஆடுதல் என்னும் வினைகள் உணர்ச்சி காரணமாக அமைந்த தற்காலிகச் செயல்கள் அல்ல என்பதும் அலகு குத்துதல் போலத் திட்டமிட்ட செயலே என்பதும் கருதுதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    தொல்காப்பியத்தில் கவந்தம்

    போர்க்களத்தில் மாற்றாரின் கணையும் வேலும் மெய்யெல்லாம் மொய்த்திருக்குங்கால், உயிர் போய்விடுமாயின் யாக்கை மட்டுமே நிற்கும். நின்ற அந்த யாக்கை வீரம் பொங்கக் குதித்து நிற்கும் நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம்  புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகச் (தும்பை) சுட்டுகிறது.

    “கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
    சென்ற  உயிரின் நின்ற யாக்கை
    இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு
    இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே”

    என்னும் நூற்பாவில் மேற்சுட்டிய நிலை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர்,

    “கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, ‘நீருள் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடையது. (இருநிலம் தீண்டா அரு – நீருட் கிடக்கும் அட்டை)”

    என விளக்கிக் காட்டுவார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தம் கருத்துக்களுக்கேற்பப் பொருளுரையும் விளக்கவுரையும் எழுதிக்காட்டினும் உடம்பாடும் நிலைக்கு அட்டையாடுதல் உவமமாக்கப்பட்டுள்ளது என்னும் தொல்காப்பிய உண்மை உளங்கொளற்குரியதாம். ஊர்ந்து வரும் அட்டை இரு கூறான பின்பும் இரண்டும் தனித்து இயங்குதல் என்பது கருத்து. இருவேறு துண்டங்கள் என்பதையே கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

    வெண்பாமாலையில் வெருவரு நிலை

    தொல்காப்பியத் தும்பைத்திணைப் பொருள் வரையறையில் மனம் பறிகொடுத்த ஐயனாரிதனார்,

    “விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
    நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று”

    எனத் தும்பைத்திணை – வெருவரு நிலைத் துறைக்கான கொளுவை அமைத்திருக்கிறார். ‘நிலந்தீண்டா நெடுந்தகை நிலை’ எனக் கூட்டி நோக்கினால் அவருடைய தொல்காப்பியக் காதல் புரியக்கூடும்.

    “வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
    எங்கும் மருமத்து இடைகுளிப்பச் செங்கண்
    புல்வாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
    கலவாமற் காத்த கணை”

    ‘வெட்டுண்ட யாக்கை இருநிலம் தீண்டாது’ என்ற தொல்காப்பியத்திற்கு  வெண்பாமாலை தலைவி ‘தன் ஆகம் தீண்டிய அவனாகத்தை மண்மகள் புல்லாமல், அவன் மார்பில் தைத்த அம்புகள் காத்தனவாகக் கற்பிக்கிறார். கட்டுரையின் முற்பகுதியில் கூறியவண்ணம் சில குறிப்பிட்ட நேர்வுகளில் தங்களையே பலியிட்டுக் கொள்ளும் வீர மரபு தமிழ் மரபு என்பதை விளங்கிக்கொள்ள ‘அட்டையாடுதலை’ உவமமாக்கித் தொல்காப்பியம் விளக்கப், பின்வந்தோர் அதனை வழிமொழிந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    நிறைவுரை

    திருவள்ளுவர் ‘ஒப்புரவு’ என்னும் அதிகாரத்தில் ‘விற்றுக்கோள் தக்கது’ எனவும் ‘கயமை’‘ என்னும் அதிகாரத்தில் ‘விற்றற்குரியர் விரைந்து’ எனவும் குறிப்பிடுவார். இக்குறிப்புக்களால் மனிதர்கள் தங்களையே விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்குமோ என்னும் ஐயம் அடிமைகளின் வரலாற்றை நோக்குவார்க்கு வருவது இயல்பே. அதுபோலக் கவந்தம் ஆடுதல் என்பது களக்காட்சியாயினும் அது வாழ்வியல் பதிவோ என்னும் ஐயம் வருவது இயல்பு. நிகழ்வுகள் மட்டுமன்று உவமங்களால் விளக்கப்படும் பொருள்களும் வரலாற்றுப் பதிவுகளாகலாம் என்பதற்கு நவகண்டம், அரிகண்டம், கவந்தம் – அட்டையாடுதல் என்னும் சொற்கள் சிந்தனைக் காரணிகளாக நிற்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(345)

    குறளின் கதிர்களாய்…(345)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(345)

    அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.

    – திருக்குறள் -443 (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்...

    அறிவு மற்றும் ஒழுக்கங்களில்
    சிறந்த பெரியவர்களை,
    அவர்கள் விரும்புவனவற்றைத்
    தெரிந்து செய்து
    தமக்கு மிக உயர்ந்த
    துணைவராக்கிக் கொள்ளுதல்,
    அரசர்க்குக்
    கிடைத்தற்கரிய பேறுகளில்
    மிகவும் அரியதான ஒன்றாகும்…!

    குறும்பாவில்...

    பெரியோர்கள் விரும்புவன தெரிந்துசெய்து
    அவர்களைத் தமக்கு உற்ற துணைவராக்கிக்கொள்ளுதல்,
    அரசர்க்குப் பெறற்கரிய பேறுகளில் அரியதாம்…!

    மரபுக் கவிதையில்...

    அறிவுட னொழுக்கம் அனைத்திலுயர்
    ஆற்றல் மிக்கப் பெரியோரை,
    முறையா யவர்கள் மனமறிந்து
    மூத்தோர் தேவை தெரிந்துசெய்தே
    உறவா யவரை உறுதுணையாய்
    உவந்தே கொள்ளும் மன்னவர்க்குச்
    சிறந்த பேறாம் இதனைப்போல்
    சிறப்பில் மேலாய் வேறிலையே…!

    லிமரைக்கூ..

    பெரியோர் துணைபெரும் பேறு,
    அவர்தம் தேவையறிந்து செய்து துணையாக்கும்
    அரசர்க்கிலை அதைவிட வேறு…!

    கிராமிய பாணியில்...

    வச்சிக்கணும் வச்சிக்கணும்
    தொணைக்கி வச்சிக்கணும்,
    தெறமயுள்ள பெரியவங்களத்
    கூடத்
    தொணக்கி வச்சிக்கணும்..

    தெறமயும் கொணமும்
    நெறஞ்ச பெரியவங்கள,
    அவங்க விருப்பம்போலச் செய்து
    கூடத் தொணயா வச்சிருந்தா,
    ராசாவுக்கு
    அதப்போல பெரிய குடுத்துவைப்பு
    வேற எதுவுமில்ல..

    அதால
    வச்சிக்கணும் வச்சிக்கணும்
    தொணைக்கி வச்சிக்கணும்,
    தெறமயுள்ள பெரியவங்களத்
    கூடத்
    தொணக்கி வச்சிக்கணும்…!

    Share
  • ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

    ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாஆஸ்திரேலியா

    [ஏப்ரல் 10ஆம் நாள், உலக ஹோமியோபதி நாள்.  என் தந்தையார்என் தாய்மாமன் ஆகியோர், ஹோமியோபதி வைத்தியர்கள் ஆவர். நானும் ஹோமியோபதி பற்றி என் தந்தையாரிடம் அறிந்திருக்கிறேன். ஓரளவு அதில் பயிற்சியும் இருக்கிறது. என் தாயாரின் அப்பா அதாவது என் தாத்தா, பிரபலமான ஆயுள்வேத வைத்தியர். அந்த வகையில் ஹோமியோபதி நாளினைக் கருத்திருத்தி இக்கட்டுரையினை வழங்குகின்றேன்.]

    பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம். பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம். இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பொன் மொழியும் ஏற்பட்டதோ என எண்ணிடத் தோன்றுகிறது.நோயிலிருந்து விடுபட  மண்ணில் வந்த அருந்துணையே மருத்துவம் எனலாம். அந்த மருத்துவம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய்வேறு வேறு பெயர்களில் தோற்றம் பெற்றாலும் மருத்துவத்தின் தலையாய பணி மண்ணில் வாழுகின்ற மக்களை இயன்றவரை நலமுடன் வாழ்ந்திடச் செய்வதேயாகும். அந்தவகையில் காலத்துக்காலம் பல மருத்துவ வழிகள் உருவாக்கப்பட்டன. அந்த வழியில் இன்று உலகின் இரண்டாவது மருத்துவ வழியாக சிறந்து விளங்குவதுதான் ஹோமியோபதி” மருத்துவம், ஐரோப்பாஅமெரிக்காதென்கிழக்கு ஆசிய நாடுகள்இந்தியாஇலங்கைபாகிஸ்தான் என்று பரந்து விரிந்திருக்கிறது.

    பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி. ஆங்கில மருத்துவம் முழுமை பெறாத காலம். அக்காலப்பகுதியில் பெயர் தெரியாத பல நோய்கள் மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தன. ஆங்கில மருத்துவ முறையினைச் சார்ந்து நின்ற ஒருவருக்கு மக்கள் படுகின்ற வேதனையைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாமல் போய்விட்டது. ஆங்கில மருத்துவமானது நோய்களைக் குணப்படு த்துவதைவிட – நோயாளிகளுக்கு பெருமளவு வேதனையினைத்தான் தருகிறது என்பதை மனமார உணர்ந்த அவர் மருத்துவத்தை விட்டுச் சிறிதுகாலம் ஒதுங்கியே இருந்தார்.

    ஆனாலும் அவரால் ஒதுங்கியபடியே இருந்திட முடியவில்லை. மருத்துவம் சார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும் பணியினைச் செய்யத் தொடங்கினார். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் கல்லென் அவர்களின் நூலினை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நூலில் அவர் ஒரு வாசகத்தைக் கண்டார். “மலேரியாவைக் குணப்படுத்தும் தன்மை சிங்கோனா மரப்பட்டை க்கு இருக்கிறது” என்பதாகும். அதனைப் பரிசோதித்திட  சிங்கோனா மரப்பட்டையினை அவரே சாப்பிட்டார். மலேரியா பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அத்தனையும் அவருக்கும் தென்பட்டது.காய்ச்சலும் குளிரும் அவரையும் பாதித்தது. “எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும்” என்னும் அடிப்படையான முரண்பாட்டினை அவர் தன்னையே மையப்படுத்தி அறிந்து கொண்டார். அவர்தான் ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த “டாக்டர் சாமுவேல் ஹனிமன்” ஆவர். 1796 ஆம் ஆண்டில் இவர்கண்ட தத்துவத்தின் அடிப்படையில் உருவானதுதான் உலகெங்கும் பரந்திருக்கும் “ஹோமியோபதி” ஆகும்.

    அந்த மேதை 1755 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி பிறந்தார். அவர் பிறந்த தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியே “உலக ஹோமியோபதி நாளாகக்” கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் ஆந் திகதி “உலக சுகாதர தினம்” கொண்டாடப்பட்டது.

    ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்” என்பதைத் தன்னை மையப்படுத்தி டாக்டர் சாமுவேல் ஹனிமன் கண்டதே “ஹோமியோபதி” மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு எனலாம். இதனைத்தான் “முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்” என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

    உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் வளர்ந்தும் வருகிறது. மக்களும் பயனினை அடைந்தும் வருகிறார்கள். இம்மருத்துவம் பாதுகாப்பானதாகவும் சிறந்த பல தன்மைகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. ஹோமியோபதி மருத்துவம் என்பது நோயுற்றவருக்கு – மனரீதியாகவும்சிந்தனைரீதியாகவும்ஆன்மீக மற்றும் உடல்ரீதியாகவும்சமநிலையினை உண்டாக்குகிறது என்பதுதான் இம்முறையின் விசேடத்தன்மை எனலாம்.

    ஹோமியோபதி என்பது கிரேக்கச் சொல்லாகும். “ஹோமோ” என்றால் ஒத்த மாதிரியான ‘ என்றும் , “பேத்தே” என்றால் வேதனை‘ என்றும் பொருளாகும். ஹோமியோபதியின் தன்மையே வித்தியாசமானதாகும். அதாவது குறைந்த அளவிலான மருந்துகளைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவதேயாகும். மருந்துகள் பல இன்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இருந்த நோயோடு இன்னும் அவதியை அளித்து நிற்கின்றன. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அற்ற மருந்துகளே கொடுக்கப் படுகின்றன. இயற்கை விதியின் அடிப்படையாக “விருப்பத்தை விருப்பம் மூலம் குணமாக்குதல்” என்னும் அடிப்படையில் அமைந்து நலன் விளைவிக்கும் நிலையில் இருப்பதுதான் இம்மருத்துவம் என்பது நோக்கத் தக்காதாகும்.

    ஹோமியோபதியின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமன்

    ஆர்கனான்” என்னும் அரிய ஹோமியோபதி நூலினை ஆக்கி அளித்திருக்கிறார். ஹோமியோபதி மருத்துவமுறையினை இவர் சீர்படுத்த ஆறு ஆண்டுகள் எடுத்தன. நான்கு ஆண்டுகளின் பின்னர் “மெடிசின் ஒவ் எக்ஸ்பீறியன்ஸ்” என்னும் நூலினை ஆக்கினார். இதில் இருந்துதான் ஆர்கனான்” நூலின் முதற்பதிப்பு 1810 இலும் 1816 இல் இரண்டாம் பதிப்பும் 1824 இல் மூன்றாம் பதிப்பும் 1829 நான்காம் பதிப்பும் ஐந்தாவது பதிப்பாக 1831 இலும் இந்த நூல் வெளியிடப்பட்டது என்பது குறைப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இந்த நூலின் முக்கியத்துவம் இருந்திருக்கிறது என்பதைதான் நாம் மனமிருத்தல் அவசியமாகு.

    டாக்டர் சாமுவேல் ஹனிமனால் படைக்கப்பட்ட இந்த நூல் – ஹோமியோபதியினைப் படிக்க விரும்பும் அனைவருக்குமே பெரும் பயனை அளித்திடும் வகையிலேதான் அமைந்திருக்கிறது. ஹோமியோபதி மருத்துவ முறைக்கு மூலதாரமான இந்தப்படைப்பு  “ஆர்கனான் ஒவ் மெடிசன்” என்றுதான் பெயர். இப்படைப்பானது படைத்தளித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களது காலத்திலேயே ஆறுபதிப்புக்களை கண்டது என்பதுதான் மிகவும் பெதுமைக்குரிய விடயமெனலாம். ஜேர்மன் மொழியில் படைக்கப்பட்ட இவ்வரிய ஆக்கமானது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஹோமியோபதி தொடர்பான பல சந்தேகங்கள் எழுவார்க்கு டாக்டர் ஹனிமன் அவர்களின் இந்தப்படைப்பு சிறந்த விளக்கத்தை அளிக்கும் பெருந்துணையாக அமைகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    நோயாளிகளை அணுகும் முறையில் ஹோமியோபதி மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபடுகிறது எனலாம். “நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து” என்பதே அதன் அணுகுமுறையாய் அமைகிறது எனலாம். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். அதனால் அவர்களுக்கு வருகின்ற வியாதிகளுக்கு ஒரேவிதமான மருந்துகளைக் கொடுப்பது உகந்ததல்ல. என்பது டாக்டர் ஹனிமன் அவர்களது கருத்தாகும். உதாரணமாக காய்ச்சல் வரும்பொழுது எல்லோருக்கும் ஒரேவிதமான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான் டாக்டர் ஹனிமன் அவர்களின் எண்ணமாய் இருந்தது. தனித்துவமாய் இருக்கும் பொழுது மருந்துமட்டும் எப்படி பொதுவாக இருக்கலாம் என்னும் சிந்தனை அவரிடம் எழுந்ததால் அவரின் அணுகுமுறை வேறுபட்டதாக அமைந்தது எனலாம். இதன்படி  டாக்டர் ஹனிமன் அவர்கள் ” உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை  வளர்த்தெடுத்தார்.

    உடல் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றையொன்று சார்ந்துஒன்றையொன்று தீர்மானித்து செயற்படுவதற்கான ஒருங்கிணைப்பு சக்தியாக உடலெங்கும் பரவி ஆளுமை செலுத்தும் ஆற்றலே உயிராற்றல்” என்று டாக்டர் ஹனிமன் உணர்ந்தார்.அதனைத் தன்னுடைய படைப்பான ” ஆர்கனன் ஒவ் மெடிசன் ” என்பதில் சுட்டிக் காட்டுகிறார்.

    இன்று உலகம் முழுவதும் நவீன மருத்துவம் ஆட்சி செலுத்தியே நிற்கிறது. ஆனாலும் ஆயுள்வேதம்சித்தவைத்தியம்யுனானிஅக்குபக்‌ஷர்ஹோமியோபதி மருத்துவ முறைகளும் இல்லாமல் போகவில்லை என்பது கருத்திருத்த வேண்டியதாகவே இருக்கிறது. நவீன மருத்துவத்தில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. என்றாலும் ஆய்வுகூட முடிவுகளை மையப்படுத்தி நவீன மருத்துவம் பயணிக்கிறது எனலாம். ஆய்வுகூட முடிவுகள் நோய் குணமாகிவிட்டது என்று காட்டும். குணமானாருக்கு மீண்டும் அந்தநோய் வந்துவிடும். மீண்டும் ஆய்வூகூடத்தை நவீன மருத்துவம் நாடும். அதற்கிடையில் பல்வகையான மருந்துகள் ஒருபக்கம் குவிந்துவிடும்.நோயைத் தீர்க்கக் கொடுக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளால் வேறுவிதமான வேதனைகள் அங்கே வந்து நிற்கும். இவை எதுவுமே இல்லாமல் மருந்தும் மருத்துவமும்தான் வேண்டும் என்று மக்கள் பலர் எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் உற்ற நண்பனாய். மந்திரியாய். நல்லாசானாய் நல்வெளிச்சமாய் ஹோமியோபதி வந்தமைந்திருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

    கடுமையானமற்றும் நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஹோமியோபதி பலனளிக்கும் என்றும் நம்பிக்கை இன்று மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது என்பதை யதார்த்தமாய் காணமுடிகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து ஹோமியோபதிக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த செலவினை உடையதாகவும் இம்மருத்துவம் விளங்குகிறது.ஹோமியோபதி மருத்துவத்தின் இருநூறாவது ஆண்டுவிழா ஜேர்மனியில் கொண்டாடப்பட்ட வேளை “ஹோமியோபதி என்பது முழுமையான மருத்துவம்நோய் தீர்க்கும் ஆற்றல் நிறைந்தது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று ஜேர்மனியின் மருத்துவத்துறையின் அமைச்சரே கூறியுள்ளார் என்பது முக்கிய கருத்தெனலாம்.

    இருநூறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உலகிலே ஹோமியோபதி மருத்துவத்தையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்று அறிய முடிகிறது. குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.அதுமட்டுமல்ல நிரந்தரத்தீர்வினை நல்கும் சிறப்பும் ஹோமியோபதிக்கு நிறையவே இருக்கிறது என்பது வெளிப்பட்டு நிற்கிறது.இஅலங்கையிலும் ஹோமியோபதிக்கு இடம் கொடுத்து சுதேசிய வைத்தியப் பிரிவினால் “ஹோமியோபதி மருத்துவச் சபை” அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல ஹோமியோபதி வைத்தியசாலையும் நிறுவப்பட்டிருக்கிறது. ஹோமியோபதியினைப் பலரும் கற்கின்றார்கள் என்பது நோக்கத்தக்கத்தாகும்.

    என்னதான் இருந்தாலும் உடல் நலன் மட்டும் இல்லாவிட்டால் எல்லாமே வெறுமைதான். வையத்துள் வாழவே பிறந்தோம். மரணம் வரும்  என்பது யாவருக்கும் தெரியும். மரணத்தை எவருமே விரும்புவதில்லை. வாழும் காலம் வரை ஆனந்தமாய் அகமகிழ்வாய் அகநிறைவாய் வாழவே அனைவருமே ஆசைப்படுகிறோம். அந்த ஆசையும் அவசியமான ஆசையேயாகும். ஆசைப்பட்டால் மட்டுமே போதுமாஆசைப்படி வாழவேண்டு மானால் ஆரோக்கியத்தை அனைவரும் காத்திட  கருத்தினில் எடுத்திட வேண்டும். ஆரோக்கியத்தை அளிப்பதற்காக அவதாரம் எடுத்துதான் மருத்துவம். அந்த மருத்துவத்தில் ஹோமியோபதியும் ஒன்று. அந்த ஹோமியோபதி  எங்கள் ஆரோக்கியத்துக்கு நல்வழிகாட்டியாய் தலைநிமிர்ந்து நிற்கிறது என்னும் செய்தி பெருவெளிச்சமாய் விரிகிறது அல்லவா! அந்த வெளிச்சத்தை அளித்த மாமேதை டாக்டர் சாமுவேல் ஹனிமனை நினைப்போம்! அவரின் நினைவாக ஹோமியோபதி நன்னாளை” யாவரும் கொண்டாடுவோம்!

    Share
  • சின்னான்

    சின்னான்

    என் ஜன்னலுக்கு அருகே சின்னான் (செங்குதக் கொண்டைக் குருவி), சற்றே இளைப்பாறியது. செங்குதம் என அழைப்பதற்கு ஏற்ப, அதன் வாலடி இரத்தச் சிவப்பாக இருப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்றாழை – அப்படியே சாப்பிடலாம்

    கற்றாழை – அப்படியே சாப்பிடலாம்

    கற்றாழை எதற்கு மருந்து? அதை எப்படிச் சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? இதோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

    இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

    -மேகலா இராமமூர்த்தி

    உலக வாழ்க்கை குறித்து மேனாட்டு நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்கள் என்பார். பயணங்களிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவரும், சீர்திருத்தச் சிந்தனையாளரும், இந்தி(ய)ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ’மகா பண்டிதர்’ இராகுல் சாங்கிருத்தியாயனைக் கேட்டால் ”உலக வாழ்க்கையே பயணங்களின் முடிவில்லா நெடுஞ்சாலை; அதில் அனைவருமே பயணிகள்” என்று சொல்லக்கூடும்.

    உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கர் (Azamgarh) மாவட்டத்திலுள்ள பாந்தகா என்ற கிராமத்தில் கோவர்தன் பாண்டே, குலவந்தி தேவி இணையருக்கு மகனாக, கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயரில் 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தார் இராகுல் சாங்கிருத்தியாயன். தம்முடைய பௌத்தமதப் பற்று காரணமாகப் பின்னாளில் தம் பெயரை அவர் இராகுல் சாங்கிருத்தியாயன் என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிகின்றது.

    1898 நவம்பரில் மதர்சா என்றழைக்கப்பட்ட ஓர் ஆரம்பப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார், அங்குதான் உருது எழுத்துக்களுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இராகுலின் தாயும் அவருடைய ஒரே சகோதரியும் துரதிர்ஷ்டவசமாக அவருடை குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோயினர்.

    தம்முடைய பத்தாவது வயதில் ஒருமுறை வீட்டைவிட்டுக் காசிக்குச் சென்று திரும்பினார் இராகுல். மீண்டும் பதினாலாவது வயதில் கொல்கத்தா செல்வதற்காக வீட்டைத் துறந்தார். பரந்த உலகத்தைக் காணவேண்டும்; உலக அறிவு பெறவேண்டும் என்ற ஆசையின் உந்துதலே தம்மை வீட்டைவிட்டு அத்துணைச் சிறிய வயதில் வெளியேற்றியது என்கிறார் அவர். ஆனால் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் அவரால் வெகுநாட்கள் தனியே தாக்குப்பிடிக்க இயலவில்லை. எனவே மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கின்றார்.

    1910 வாக்கில் சாதுக்களுடன் சேரவிரும்பி மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறினார் இராகுல். சாதுக்களின் சகவாசம் அவரைக் குருட்டு மூடநம்பிக்கைகளின் கடும் விமர்சகராக மாற்றியது. முடிவில் அவர் ஒரு தீர்க்கமான உலகாயதவாதியானார். ஆயினும், இந்த விழிப்புணர்வை அடைய அவர் மேற்கொண்ட தத்துவப் பயணம் நெடிதாகவே இருந்தது.
    1915 ஜனவரியில் ஆக்ரா சென்ற இராகுல் சாங்கிருத்தியாயன், ஆர்ய முஸாஃபிர் வித்யாலயாவில் சேர்ந்தார். இரண்டாண்டு காலம் சமஸ்கிருதம், அரபு மொழி, பல்வேறு மத நூல்கள், தேசிய வரலாற்று நூல்கள் ஆகியவற்றைக் கற்றார். ஆக்ராவிலிருந்து வெளிவந்த முஸாஃபிர் பத்திரிகைக்கு உருது மொழியில் கட்டுரைகள் எழுதினார்.

    நாடோடியாகக் காலங்கழித்துவந்த இராகுலை மீண்டும் சொந்த கிராமத்துக்கு அழைத்துவர வேண்டும், நில புலன்களைக் கவனித்துக்கொள்ளச் செய்யவேண்டும் என்று விவசாயியான அவர் தந்தையார் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. ஐம்பது ஆண்டு முடிகின்றவரை சொந்த கிராமமான ஆசம்கருக்குத் திரும்பக்கூடாது என்பதில் இராகுல் உறுதியாகவே இருந்திருக்கின்றார்.

    இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட நாட்டுப்பற்றாளராகவும் விளங்கிய இராகுல், தம்முடைய அரசியல் பணிகளை ’அரசியலில் நுழைவு’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தம்முடைய முதல் அரசியல் பேச்சு, 1921இல் காண்ட்வா (khandwa) என்ற இடத்தில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தாம் பேசியது என்று நினைவுகூருகின்றார் அவர்.

    துறவியாகத் தாம் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் தம் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றையும் இராகுல் பதிவுசெய்திருக்கின்றார். மூடபக்தி கொண்ட பக்தர்கள் சிலர் தெய்வீக மாந்தர் என்று தம்மை அழைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு விலங்குகளைப் பலியிடுவது, கஞ்சா, மதுபானம் ஆகியவற்றை படைப்பது போன்ற பழக்கங்களைக் கைவிடாது பின்பற்றிவந்ததைக் கண்ட இராகுல், ஒருநாள் தம்மீது காந்தி என்ற சாமி வந்திருப்பதாக நடித்தார். மூடபக்தகோடிகளைப் பார்த்து, ”இப்போது எல்லாக் கடவுள்களும் காந்திபாபா கூடத்தான் இருக்கிறார்கள்; அவர்களுக்கு யாரெல்லாம் கஞ்சா மது வைப்பது, மிருக பலி கொடுப்பது போன்றவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் அழிந்துபோவார்கள் என்று நான் சபிக்கிறேன்” எனக் கூச்சலிட்டார். அவ்வளவுதான்…பக்தர்கள் அனைவரும் பயந்துபோனார்கள்; தாம் செய்யக்கருதிய மூடத்தனங்களைச் செய்யாமல் விட்டார்கள் என்கிறார் இராகுல்.

    வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து மக்கள் மத்தியில் போஜ்புரி மொழியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் இராகுல் சாங்கிருத்தியாயன். அதனால் 1922 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் அவர் ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். சிறையில், ட்ராட்ஸ்கியின் ’போல்ஷ்விசமும் உலகப்புரட்சியும்’ என்ற நூலை படிக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியது இராகுலுக்கு. அது அவரின் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

    சிறையில் இருந்தபோது இராகுல் தம் குற்றத்தை வெள்ளையரிடம் ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஆறு மாதச் சாதாரணச் சிறைத் தண்டனையே கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்தபின்பு 1922 அக்டோபர் 29இல் அவர் ஜில்லா காங்கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், சிறிது காலத்திலேயே அவருக்குக் கம்யூனிசச் சித்தாந்தங்களின்மீது பிடிப்பு ஏற்பட்டு அந்தத் தத்துவங்களின்பால் செல்லத் தொடங்கிவிட்டார்.

    இராகுலுடைய வீர சாகசம் மிக்க பயணங்கள் 1926இல் திபெத்திய எல்லையில் தொடங்கின. பயணத்தின்போது அவர் வழியில்கண்டு
    உடன் அழைத்துச் சென்ற செங்-துக் (seng tuk)என்ற திபெத்திய நாய் வழியிலேயே மரணித்தது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
    ”என் அருமைப் பெற்றோரின் மரணத்தின்போதோ, அன்புக்குரிய பாட்டன்மார்களின் மரணத்தின்போதோகூட நீரைச் சுரக்காத என் கண்கள், இந்தச் செல்ல நாயின் சாவினால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குக் கண்ணீர் சிந்துகின்றன” என்று குறிப்பிடும் இராகுல், அந்த நாய்க்கு எட்டுப் பாடல்கள் அடங்கிய இரங்கற்பா ஒன்றையும் ”செங் துக்கே! த்வத் பிரயாணே!” என்று முடியும் வகையில் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கின்றார்.

    1927 மே 16இல் இராகுல் இலங்கைக்குச் சென்றார். பத்தொன்பது மாதங்கள் அங்கே தங்கி புத்தமத நூல்கள் பலவற்றைக் கற்றார். இந்தியக் கலாசாரம், வரலாறு குறித்த தம் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.
    சர் டி.வி. ஜெயதிலகே என்பவர் இராகுலுக்குத் தேவைப்பட்ட புத்தகங்கள் அனைத்தையும் வாங்கித்தந்து உதவினார். இராகுல் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் பரிணமித்ததும் இந்தக் காலக்கட்டத்தில்தான். அலகாபாத்திலிருந்து வெளிவந்த ’சரஸ்வதி’ என்ற இந்தி மாத இதழில் இலங்கை பற்றிய கட்டுரைகளை அவர் எழுதினார்.

    மீண்டும் திபெத்துக்குச் செல்லவேண்டும் எனும் ஆவலோடு இந்தியா திரும்பிய இராகுல், 1929, 1934, 1936, 1938 ஆகிய ஆண்டுகளில் நான்குமுறை திபெத்திற்குச் சென்றார். அங்குள்ள மடங்களிலிருந்து அபூர்வமான பொருட்கள் சிலவற்றைச் சேகரித்து இந்தியாவுக்கு எடுத்துவந்தார்.
    முதல் திபெத்திய இலக்கணத்தையும் மூன்று ஆரம்பப் பாடநூல்களையும் சமஸ்கிருதத்தில் எழுதினார். தர்மகீர்த்தி, சுபந்து, அசங்கா போன்ற பௌத்தத் தர்க்க ஞானிகளின் நூல்களைப் புதுப்பிப்பது, பாதுகாப்பது ஆகிய பணிகளில் முன்னோடி வேலைகளைச் செய்தார் அவர். திபெத்திய இந்தி அகராதி ஒன்றையும் தொகுத்தார்.

    1932-33இல் அவர் ஐரோப்பாவில் ஓராண்டு கழித்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்குச் சென்றார். 1933இல் ஜப்பான், கொரியா, மன்சூரியா நாடுகளில் பல மாதங்கள் தங்கினார். 1935இல் மன்சூரியா வழியாக இரயிலில் சோவியத் ரஷியா சென்றார். அங்குள்ள மாஸ்கோவிலிருந்து இரயிலில் புறப்பட்டு பாக்கூ (Baku) என்ற இடத்திற்குச் சென்று தீக் கோயிலை (Fire temple) கண்டார். அதனை ’ஜ்வாலாமாய்’ என்று அவர் குறிப்பிடுகின்றார். அங்கிருந்து ஈரானுக்குக் கப்பலில் பயணமானார். அங்குப் பல இடங்களைப் பார்வையிட்டபின் இரயிலில் லாகூர் வந்து சேர்ந்தார்; பிறகு மீண்டும் அரசியலில் தீவிரப் பங்கேற்றார்.

    1940 பிப்ரவரி 24, 25 தேதிகளில் நடைபெற்ற உழவர்கள் மாநாட்டிற்குத் தலைமையேற்றதன் விளைவாக வெள்ளை அரசால் கைதுசெய்யப்பட்டார். 29 மாதங்கள் ஹசாரிபாக், தேவாலி சிறைகளில் இருந்தார். 847 பக்கங்களைக் கொண்ட தர்ஷன் -திக்தர்ஷன் (Darshan-Digdarshan) போன்ற மகத்தான நூல்களை எழுதுவதில் இத்தண்டனைக் காலத்தை அவர் செலவழித்தார். கிரேக்க, இஸ்லாமிய, ஐரோப்பிய, இந்தியத் தத்துவமுறைகளை விமர்சன ரீதியில் ஆய்வுசெய்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவற்றிற்கு விளக்கவுரை தரும் முயற்சியை அவர் இந்நூலில் மேற்கொண்டார். மூவாயிரமாண்டு மூத்த தத்துவச் சிந்தனைகளை ஒரு புதிய பகுத்தறிவுவாத மனிதநேயக் கண்ணோட்டத்தில் ஆராயும் மிகப்பெரிய படைப்பு தர்ஷன் -திக்தர்ஷன்.

    சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் தமது சொந்த ஊருக்குச் சென்றார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கே போனதை மிக உணர்ச்சிகரமாக விவரித்திருக்கின்றார். ஊரில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன; சில மாறாமலும் இருந்தன. அவரது குழந்தைப் பருவத்தில் அவருக்கு அறிமுகமானவர்கள் சிலர் அவரை மிகுந்த அன்போடு வரவேற்றார்கள்.

    1942 முதல் 1944 வரை இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார் இராகுல். அவற்றில் சில அரசியல் பயணங்கள்; சில இலக்கியச் சந்திப்புகளுக்காக நிகழ்த்தப்பட்ட பயணங்கள். அவருடைய நாட்குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் பயண விவரங்களைப் படிக்கின்றவர்கள் உண்மையிலேயே ஓர் விசித்தர உணர்வுக்கு ஆட்படுவார்கள். அவற்றில் ஓரிடத்தில் 18 வகையான நேப்பாளி பேய் பிசாசுகளின் பட்டியல் தரப்படுகின்றது. மற்றோர் இடத்தில் பதினொரு வகையான திபெத்தியப் பிசாசுகள் விவரிக்கப்படுகின்றன. பயணங்கள் மேற்கொள்வதிலுள்ள சிரமங்கள், அரசியல் நெருக்கடிகள், தொல்பொருளியல், மத வரலாறு எனப் பல்வேறு தரவுகளை ஒன்றாகத் தருகின்ற தகவல் களஞ்சியங்களாக அவரின் பயண நூல்கள் திகழ்வதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வர். எனினும், சுவையான எளிய மக்கள்மொழியில் அவை அமைந்துள்ளதால் வாசகருக்கு அலுப்புத் தட்டுவதில்லை.

    1944 முதல் 47வரை சோவியத் ரஷ்யாவிலுள்ள லெனின் கிராட் பல்கலைக்கழத்தில் (Leningrad University) பௌத்த மதச் சித்தாந்தங்களைக் கற்பிக்கும் பேராசிரியராக அவர் பணியாற்றினார். அப்போது லோலா என்ற மங்கோலியப் பெண்ணை மணந்தார். இவர்களுக்கு இகோர் என்ற மகன் பிறந்தான். இவ் இணையர் சேர்ந்தவாழ்ந்த காலம் மிகச் சொற்பமே. பின்பு நேபாளத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை மணந்தார். இந்த இணையருக்கு ஜெயா, ஜேடா என்ற குழந்தைகள் இருந்தனர். இவ்விரு திருமணங்களையும் மிகவும் காலதாமதமாகவே புரிந்துகொண்டார் இராகுல்.

    முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை இராகுல் அறிந்திருந்தபோதிலும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும்தான் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர் பயன்படுத்தினார். சாதாரண வாசகனை நினைவில்கொண்டே அவர் தம் படைப்புகளை உருவாக்கியதால் அவை மிகவும் எளிய நடையில் அமைந்திருந்தன.

    1927இல் தம்முடைய முப்பத்து நான்காவது வயதில் எழுதத்தொடங்கியவர் 1961இல் கடுமையாக நோய்வாய்ப்படுகின்ற வரையில் எழுதிக்கொண்டிருந்தார். அந்த 34 ஆண்டுக் காலத்தில் அவர் 50000 பக்கங்கள் பிரசுரித்திருந்தார். எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டிருந்த ஒருவர் இத்தனை பக்கங்கள் எழுதியது மகத்தான சாதனையே!

    இச்சாதனையை அவர் நிகழ்த்தமுடிந்ததற்குக் காரணம், எழுதுவதற்கேற்ற மனநிலை, சூழ்நிலை போன்றவற்றை அவர் எப்போதுமே தேடிக்கொண்டிருந்ததில்லை. வீட்டிலிருக்கும்போதும், இரயிலிலும் கப்பலிலும் பயணிக்கின்றபோதும், சத்திரம் சாவடிகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கின்றபோதும் சிறைவாசத்தின்போதும் அவரால் எழுதமுடிந்தது.

    இராகுல் சாங்கிருத்தியாயனுக்கு நிரந்தப் புகழைத் தேடித்தந்த சிறுகதைத் தொகுதி ’வால்காவிலிருந்து கங்கை வரை’ (வால்கா ஸே கங்கா) என்ற பெயரில் அவரெழுதிய புனைகதைகளே. வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து இன்றைய இந்தியாவின் 1944ஆம் ஆண்டு வரையிலான மாந்தரின் சமூக வாழ்வியலை விளக்கும் 20 கதைகள் இதில் இருக்கின்றன. இவற்றில் 14 கதைகள் பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா பற்றியவை. 15வது கதையிலிருந்து இந்தியாவில் இசுலாமிய ஆட்சி, ஆங்கிலேய ஆட்சி ஆகியவற்றின் பின்னணி ஆரம்பிக்கின்றது. வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான கற்பனைச் சம்பவத்தைப் புதிதாகப் படைத்து அதனை இயங்கியல் பொருள்முதல்வாத (Dialectical materialism) கண்ணோட்டத்துடன் ஆய்வுசெய்ய இதில் இராகுல் முயன்றிருக்கின்றார்.
    இந்தியில் எழுதப்பட்ட இராகுலின் இந்தப் படைப்பை தற்கால இந்தி எழுத்து, இந்திய முற்போக்கு இலக்கியத்துக்கு அளித்துள்ள பெருங்கொடையென்றே கூறலாம்.

    அவரது படைப்பிலக்கியத்தின் மற்றொரு பகுதி பரந்த அளவில் அவர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவ விவரிப்புகள் ஆகும்.
    மேரி லடாக் யாத்ரா, லங்கா, மேரி யூரோப் யாத்ரா, மேரி திபெத் யாத்ரா உள்ளிட்ட பல நூல்களை அவர் இவ்வகையில் இயற்றியுள்ளார். கூமக்கட் ஷாஸ்திரா (ஊர்சுற்றிப் புராணம்/ treatise for roamers) என்ற அவருடைய நூல் எப்போதும் ஊர்சுற்றிக்கொண்டே இருக்க விரும்புவோர்க்குக் கையேடாக உதவும் சுவையான புத்தகமாகும்.

    இலக்கியத் தரம்வாய்ந்த இவருடைய இதர படைப்புக்களில் வரலாறு பற்றி எழுதிய நூல்களும் அடங்கும். மத்திய ஆசியாவின் வரலாறு பற்றி இராகுல் எழுதிய ’மத்திய ஆசியா கா இதிஹாஸ்’ என்ற நூலுக்கு 1958இல் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

    கற்பனைப் படைப்புகள் என்ற வகையில் 13 நூல்களை இராகுல் உருவாக்கியுள்ளார். விஸ்மிரித் யாத்ரி, திவோதாஸ், மாதுர் ஸ்வப்னா எனும் வரலாற்றுப் புதினங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

    அயரா உழைப்பு, ஓய்வற்ற நீண்ட பயணங்கள் அவற்றோடு சொந்தக் கவலைகளும் சேர்ந்து இராகுலை நோய்க்கு இரையாக்கின. கடுமையான நீரழிவு நோயால் அவர் பீடிக்கப்பட்டார். வருந்தத்தக்க வகையில் திசம்பர் 1961இல் அவர் தம்முடைய நினைவாற்றலை இழந்தார். ’மகாபண்டிதர்’ என்று இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டவரான இராகுல் சாங்கிருத்தியாயன் மறதிநோயின் தாக்கத்தல் தம் சொந்தப் பெயரைக் கூட வாசிக்கமுடியாமலும் தொடர்ச்சியாகப் பேச முடியாமலும் போன கொடுமையை விதி செய்த சதி என்பதைத் தவிர வேறெவ்வாறு சொல்வது?

    இவ்வாறு அவர் மறதிநோயால் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு ’பத்ம பூஷன்’ விருதை அரசு அளித்தது. ஆனால் அதை உணர்ந்து மகிழும் நிலையில் அவர் இல்லை.

    1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் தம்முடைய மறதிநோய் குணமாகாமலேயே இறந்தார் இராகுல் சாங்கிருத்தியாயன். முறையான கல்வி என்று எதனையும் பெரிதாகப் பெறாத ஒருவர், தம்முடைய முயற்சியாலேயே பல மொழிகளைக் கற்று பன்மொழி வித்தகரானதும், பல்வேறு சமயங்களின் சித்தாந்தங்களையும், பன்னாட்டுத் தத்துவங்களையும் அறிந்து அவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கும் ஆசிரிய நிலைக்கு உயர்ந்ததும் வியத்தகு செயல்களே!

    அறிவைத் தலையை அழுத்தும் சுமையாகக் கருதாமல் சிறு பயணத்துக்குப் பயன்படும் படகாகக் கருதியவர் இராகுல் சாங்கிருத்தியாயன். உருவத்தால் மட்டுமல்லாது உள்ளத்தாலும் உயர்ந்த மனிதராகத் திகழ்ந்த இராகுல் சாங்கிருத்தியாயனின் நூல்களைக் கற்போர் அவரைப் போலவே விசாலப் பார்வை பெற்று, யாவரும் கேளிர் எனும் எண்ணமுடையோராய் அனைத்துலக மாந்தரையும் நேசிக்கும் உயர்பண்பைப் பெறுவர் என்பது திண்ணம்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. இந்திய இலக்கியச் சிற்பிகள் – ராகுல் சாங்கிருத்யாயன் – ஆங்கில மூலம் – பிரபாகர் மாச்வே; தமிழில் வல்லிக்கண்ணன், சாகித்திய அக்காதெமி வெளியீடு.
    2. https://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan
    3. https://www.thehindu.com/society/a-forgotten-genius/article18162862.ece

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 61

    பழகத் தெரிய வேணும் – 61

    நிர்மலா ராகவன்

    தனிமை விரும்பிகள்

    “ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால், ஆண்களுக்குப் பிடிக்காது”.

    சில குடும்பங்களில் மூத்தவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், தம் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்கிறார்கள் பல பெண்கள்.

    அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தாள் ரேணு.

    `உன்னால் ஏன் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை?’

    `பிறர் என்ன சொல்வார்கள் என்று யோசித்துத்தான் எதையும் செய்ய வேண்டும்’.

    சிறு வயதிலிருந்தே பலவாறாகக் கண்டிக்கப்பட்டிருந்தாள்.

    தவறு அவள்மேல் இல்லை. சராசரி மனிதர்களைவிட அவளுக்குப் புத்திசாலித்தனம் மிக அதிகம் என்பதுதான் உண்மை.

    பிறர் ஏன் தன்னைப்பற்றி அப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து, தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வர் அவளைப் போன்ற சிலர்.

    வேறு சிலரோ, நிறையக் கண்டனத்திற்கு ஆளாகித் தவிப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, என்றாவது தம்மைப்போன்ற ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால்தான் தெளிவு கிடைக்கும்.

    மௌனம் ஏன்?

    மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்களோ, இல்லையோ, `எனக்கு நிறையத் தெரியும்!’ என்று காட்டிக்கொள்வதைப்போல் பேசும் வழக்கம் ரேணுவைப்போன்ற அதிபுத்திசாலிகளுக்குக் கிடையாது. அதனால், நிறைய பேர் இருக்கும் இடத்தில் அதிகம் பேசமாட்டார்கள்.

    எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தாலும், தனக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளியிடாது, பிறர் கேட்டால் மட்டும் பதிலளிப்பார்கள் இத்தகையவர்கள்.

    இவர்கள் பெரும்பாலும் மௌனமாக, ஆனால் தம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம், கவனித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான போக்கு பிடிபடாது, `கர்வி,’ `முட்டாள்’ என்று பிறர் கருதக்கூடும்.

    அது மட்டுமா!

    இவர்களது கருத்துக்களைப் பலராலும் ஏற்க முடியாது. மனம் வெதும்பி, `நீ பிறர் மனத்தை நோகடிக்கிறாய்!’ என்று வீண்விவாதம் செய்வார்கள்.

    அலுப்பு எழ, இப்படிப்பட்டவர்களுடன் பேசுவானேன் என்று தோன்றிப்போகும்.

    `என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்களேன்!’ என்ற எண்ணம் எழ, இவர்கள் தனிமையை நாடுவதில் என்ன ஆச்சரியம்!

    சுயமாகவே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவதால், பிறரது குறுக்கீடு இல்லாமல் விரைவில் ஒரு காரியத்தைச் செம்மையாகச் செய்து முடிப்பார்கள். தனிமையில் செயல்பட இதுவும் ஒரு காரணமாகிறது.

    என்றும் எதிர்நீச்சல்தான்

    பலரும் ஒரு திசையில் போக, தாம் மட்டும் எதிர்த்திசையில் பயணிக்கும் துணிச்சல் இருப்பதாலேயே இவர்கள் தனித்து நிற்கிறார்கள். யோசித்து, நிதானமாகப் பேசுவது இவர்களது குணம்.

    இவ்வளவெல்லாம் இருந்தும், தன்னால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று (அனுமனைப்போல்) தெரிவதில்லை. ஊக்குவிக்க ஓரிரு உறவினரோ, நண்பர்களோ அவசியமாகிறது.

    முதலில் இவர்களைப் பழித்தவர்கள் இவர்கள் முன்னேறியதும் புகழ்வார்கள். இது புரிந்து, புகழ், இகழ் இரண்டும் தம்மை வெகுவாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

    எதற்கு அநாவசியமான பயம்?

    தமக்குத் தெரியாததை `தெரியும்’ என்று சொல்லாமல், அவற்றைப் பிறரிடமிருந்து கற்பது புத்திசாலித்தனத்துக்குச் சான்று.

    பிறர் மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இல்லாவிட்டால் பலவற்றைக் கற்க முடியுமே!

    `எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புரிந்து வைத்திருப்பார்கள். ஆகையால், புதிய இடங்களுக்குப் போகையில், பலவற்றையும் அறியும் ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பார்கள்.

    இத்தன்மையால், `இதென்ன தொந்தரவு!’ என்று பிறரை அலுக்கச் செய்வதும் உண்டு!

    உணர்ச்சிபூர்வமாகவும் புத்திசாலித்தனம் அமைந்திருக்க, புதிய மனிதர்களைக் கண்டு மிரளாமல், அவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    புத்திசாலிகள் தவறே செய்யமாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

    அவ்வாறு செய்யாதிருக்க அவர்கள் என்ன கடவுளா? ஆனால், தவற்றை ஒத்துக்கொள்ளும் நேர்மை உண்டு.

    யார் புத்திசாலி?

    ஒருவர் இரண்டு அல்லது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். அதனால் மட்டுமே அவர் புத்திசாலி என்பதில்லை.

    வெகு சிலரே பெரும்பான்மையானவர்களைவிட புத்திசாலியாக இருப்பார்கள். இது கல்வியால் வருவதல்ல.

    தகுதி இல்லாதவர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே புரிந்து வைத்திருப்பவரே புத்திசாலி.

    அறிவு மட்டும் இருந்தால் போதுமா? கருணையும் சேர்ந்திருந்தால்தான் அதற்கு மதிப்பு.

    கைமேல் பலன்

    கதை

    காவேரி ஒரு வீட்டில் வேலை செய்பவள். பதினைந்து வயதுதான். கிராமத்திலிருந்து அவளை அழைத்து வந்த அத்தை, தான் செய்யும் வேலைகளில் அவளையும் பழக்கினாள்.

    உணவும், தங்க இருப்பிடமும் – அது குடிசையே ஆனாலும் – கிடைத்த திருப்தி காவேரிக்கு. அத்துடன், ஒவ்வொரு முறை சம்பளம் கிடைத்தபோதும் ஒரு திரைப்படம்!

    ஒரு வீட்டு அம்மாள், `இவ்வளவு சின்னப்பெண் இப்படித் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறாளே!’ என்ற கரிசனத்துடன், அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

    மரியாதைக்காக ஓரிரு முறை பொறுத்துப்போன அச்சிறுமி, “வேணாம்மா. போரடிக்குது,” என்று மறுத்துவிட்டாள்.

    எந்த ஒரு காரியம் செய்தாலும் உடனே பலனை எதிர்பார்ப்பவர்கள் வாழ்வில் கீழ்மட்டதிலேயேதான் இருக்க நேரிடும்.

    காவேரியும் ரேணுவும் இரு வெவ்வேறு துருவங்கள்.

    ரேணுவோ, ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னர் திட்டம் போடுவாள். இதை இப்படிச் செய்யலாமா, வேறு எப்படிச் செய்தால் கூடுதலான பலன் கிடைக்கும், இதனால் வேண்டாத விளைவுகள் என்னென்ன எழும் என்று பலவாறாக யோசித்தபின்னர், நிதானமாக செயல்படத் தொடங்குவாள்.

    கதை

    ஒரு நாள் பெரிய மழை கொட்ட, வேலை செய்துகொண்டிருந்த காவேரி பெரிதாக அலறினாள்.

    ஒரேயடியாகப் பயந்து, வீட்டு அம்மாள் ஓடி வந்தாள்.

    பேச நாவெழாது, காவேரி மேலே சுட்டினாள். கூரையில் ஒரு சிறிய ஓட்டை. அதன்வழி மழை வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.

    “இவ்வளவுதானே! இப்போது பாத்திரங்களை அதனடியில் வை. நாளைக்கு ரிப்பேர் செய்யலாம்,” என்று வழி கூறிய அம்மாள் தன்னை அடக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனம் நிறைந்தவள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வாள். சூழ்நிலையையும் மாற்றுவாள்.

    “நல்லாத்தான் அலறினே, போ! பாம்போ, தேளோ ஒன்னைக் கடிச்சிடுச்சாக்கும்னு பயந்தே போயிட்டேன்!” என்று அவள் சிரித்தபோது, காவேரியும் சேர்ந்து சிரித்தாள்.

    நகைச்சுவை உணர்வு

    கதை

    புக்ககத்திலிருந்த சுசி, வெளியூரிலிருந்த தன் இளைய சகோதரியின் உடல்நிலை மிகுந்த சீர்கேடு அடைந்திருப்பதாக அறிந்தாள்.

    அவள் மூச்சு இரு நிமிடங்கள் அடங்கிப்போக, `இறந்துவிட்டாள்!’ என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதன்பின், உயிர் பிழைத்தாள் என்ற தகவல் பின்னர் கிடைத்தது.

    சகோதரிக்குச் உடல்நிலை சற்றே சீரானதும், தங்கையை அழைத்தாள் சுசி.

    “என்ன நீ! செத்துச் செத்துப் பிழைக்கிறாயாமே!” என்று ஆரம்பித்தாள்.

    `கொஞ்சங்கூட பச்சாதாபமே கிடையாதா இவளுக்கு!’ என்று முதலில் அதிர்ந்த தங்கை, கேலி புரிந்து, அவளுடைய சிரிப்பில் கலந்துகொண்டாள்.

    ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, தேறியபின்னரும் கடந்ததைப் பற்றியே பேசுவது எதற்கு?

    அப்படிச் செய்வதுதான் முறை என்றால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்?

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்! பிரபஞ்சம் ஒன்றா? பலவா?

    பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்! பிரபஞ்சம் ஒன்றா? பலவா?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”
    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன்! . . . ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது!”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

    Multi-universe -1

    இணைப் பிரபஞ்சங்கள்

    இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்” (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப்படுகின்றன!  நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் காலவெளியும், மர்மமான, புதிரான பண்டங் களும் கொண்டிருக்கலாம்! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Superstring Universe

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று!

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி! இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம்!

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற “சவ்வியல் குமிழிகளில்” (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

    Multiverse Raising

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

    Multiverse -5
    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சிகரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம்! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம்!

    Multiverse -4

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான்! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

    Parallel Universe

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்” (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

    யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

    Superstring Univers.

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

    கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

    (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

    Multiverse -1
    வகுப்பு : 3

    நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

    (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

    (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    Level IV Universes

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூலை எழுதிய ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

    நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

    Multiverse -2

    இணைப் பிரபஞ்சங்கள்

    +++++++++++++++++++

    1.  http://www.bing.com/videos/search?q=multiverse+parallel+universe&qpvt=Multiverse+parallel+universe&FORM=VDRE
    2.  https://youtu.be/aUW7patpm9s
    3.  https://youtu.be/z4rifLtsrX4
    4.  https://youtu.be/EwQEBWepRlY
    5.  https://youtu.be/Ywn2Lz5zmYg

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.scientificamerican.com/article/multiverse-the-case-for-parallel-universe/

    12.  http://www.bing.com/videos/search?q=multiverse+parallel+universe&qpvt=Multiverse+parallel+universe&FORM=VDRE

    13. http://www.dummies.com/how-to/content/string-theory-parallel-universes-and-the-multivers.html

    14. http://www.npr.org/2011/01/24/132932268/a-physicist-explains-why-parallel-universes-may-exist  [January 24, 2011]

    15.  https://en.wikipedia.org/wiki/Multiverse   [July 12, 2016]

    16.  https://en.wikipedia.org/wiki/Universe [May 2019, ]

    17.  http://www.bbc.com/earth/story/20160318-why-there-might-be-many-more-universes-besides-our-own [2021]

    Share
  • கலைஞர் பற்றி ஜெயகாந்தன் – சுகதேவ் நேர்காணல்

    கலைஞர் பற்றி ஜெயகாந்தன் – சுகதேவ் நேர்காணல்

    முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதினை 2007இல் ஜெயகாந்தன் பெற்றார். அப்போது, இந்த விருது தனிச் சிறப்புக்குரியது எனக் குறிப்பிட்டார். விருதினைப் பெற்றதற்காக, ஜெயகாந்தன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ், ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் உரையாடல், அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபி இணைய இதழில் 2007 மார்ச் 6ஆம் தேதி வெளியானது. ஜெயகாந்தன் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8), ஜெயகாந்தனின் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆய்ந்தே கடந்தவர் அறிவென்னும் அளக்கர்!

    ஆய்ந்தே கடந்தவர் அறிவென்னும் அளக்கர்!

    முனைவர் ஒளவை நடராஜன்

    ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் .

    அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார்.

    திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன்.

    முதுமுனைவர் டி என் ஆர்.  (18.8.1934-6.4.2021) அவர்களை நான் அறுபதாண்டுகளாக அறிவேன் என்றால் பலர் வியப்பார்கள்.

    தஞ்சையில், சரபோசி மன்னர் கல்லூரியில் நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1958. பணியில் சேர்ந்து முடிந்த மறுவருடம் நான் சேக்கிழார் அடிப்பொடி அவர்களின் இல்லத்தில் விருந்துண்டேன்.

    உண்டு முடித்த பிறகு அவரோடு நடத்திய முதல் உரையாடல் திருமுறைகள் ஓதும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்றார்.

    அப்போது அவர் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல – பேருந்து நிறுவன அதிபரும் கூட.

    கண்டாரைக் கவரும் கட்டழகர்!,

    ஜெமினி கணேசன் ஒரு சுற்றுப் பெருத்திருந்தால் டி என் ஆர் ஆகக் காணமுடியும்.

    தஞ்சையிலிருந்து தில்லிக்கு என்னை வழியனுப்பினார்.

    வழக்கறிஞர் நாராயணசாமி ஐயரை அறிமுகம் செய்து இவர் மகனார் தில்லியில் வானொலி – செய்தித்துறையில் பணியாற்றுகிறார் அவர் தான் பின் அமெரிக்கா சென்று வானொலி உரை நிகழ்த்தியவர் திரு நாகரத்தினம் ஆவார்.

    பேராசிரியர் எம் எஸ் நாடாரிடம் ஒரு கடிதம் பெற்றுத் தில்லியில் செய்தி ஒலிபரப்பில் பணியாற்றும் இன் குரல் இராமநாதனைக் கண்டு பேசுங்கள் என்றார்.

    தஞ்சையில் நான் வளர்த்துக்கொண்ட இலக்கிய வட்டத்தைப் பற்றி, முன்னரே 2010 ஆம் ஆண்டில் வெளியான அருளுக்கு ஒளவை சொன்ன நூலில்  கூறியிருக்கிறேன்.

    அறிஞர் இராமச்சந்திரன் பேசும் போது, உலக அறிஞர்கள் பற்றிய பல குறிப்புக்களைச் சொல்வார்.

    இலக்கியப் புலமையை வாழ்வின் நிறைவாகக் கொண்ட பண்பாளர் .

    சித்திரக்கவிகளைப் புனைந்த அப்துல் கபூர் என்ற இசுலாமியப் பெருந்தகைக்கு, தான் வைத்திருந்த இல்லத்தையே அன்பளிப்பாகத் தந்தவர் புரவலர் டி. என். ஆர்.

    எஸ் எம் டி என்ற பேருந்து நிறுவனத்திற்கு அப்போது தலைவராக இருந்தார் டி. என். ஆர். அந்த வட்டாரத்தில், செல்வாக்குப் பெற்ற பேருந்து நிறுவனமாக இருந்தது எஸ். எம். டி.

    அவர்பால் ததும்பிய இலக்கிய ஆர்வமும், புலமையும் எப்படிப்பட்டவை என்பதற்கு ஒரு சான்று சொல்ல வேண்டும். வேலை நிறுத்தம் மற்றும் பல சிக்கல்கள் வந்ததனால், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார் டி. என். ஆர்.

    அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    என்னை எப்போதும் எஸ் எம் டி பேருந்துகளின் உரிமையாளர் என்று அன்போடு அழைப்பீர்கள். இப்போது எஸ் போய்விட்டது. நான் எம் டி யாகி விட்டேன் என்று எழுதியிருந்தார்.

    ஒரு கவலையில்லை, வாழ்க்கையில் எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை, அவரைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இலக்கியம் போல, அனைத்துக் கலைகளிலும் திளைத்து சிவநெறிச் சிகரமாக, சேக்கிழார் அடிப்பொடியாக விளங்கினார். பன்னிரு திருமுறைகளை, சைவ சித்தாந்த சாத்திரங்களை, அழகிய ஆங்கிலத்தில் வழங்கிய, அவரைக் கண்டு பேசுவதே ஒரு நூலகத்தில் நுழைவது போலத்தான்.

    தஞ்சையில் நான் கோயிலுக்குச் செல்வதுண்டோ இல்லையோ, டி. என். ஆரின் இல்லத்தில் பேசி மகிழ்வது, நாள் தவறாமல் நடந்தது.

    பூண்டிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். டாக்டர் தியாகராஜன், நன்றாகப் பாடுவார். கிதார் வாசிப்பார். பிறகு ஆர்மோனியம் இசைப்பார். ஆங்கிலக் கவிதைகளை, அவ்வளவு உணர்ச்சியோடு சொல்வார். நடிப்பார். ஆங்கில இலக்கியத் திறனாய்வில், அளவில்லாத ஆர்வம் கொண்டவர். அருமையான ஆங்கில உரைநடையை எழுதக்கூடிய வன்மை உடையவர், டாக்டர் தியாகராஜனிடத்திலும், எனக்கு நல்ல நட்பு இருந்தது.

    அவரால் பேராசிரியர் இராமன், கே.ஜி. சேஷாதிரி, சங்கர நாரயணன், ஈழத்தில் புலவர்கள் சைவ சித்தாந்தத்தின் ஆழத்தை அளந்தறிந்தவர்கள். ஈழப் பெரும் புலவர் பேரவையில் முப்பொருள் முழுமை – தசகாரிய விளக்கம் – வேதாந்தத் தெளிவு என்ற தலைப்பில் இருமொழியிலும் பேசிப்புகழ் பெற்றார்.

    முதுமுனைவர் பட்டப்பேற்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு (2001) வழங்கிப் பெருமை கொண்டது.

    என்னைவிட ஓராண்டு மூத்தவர். பத்தாண்டுகள் படிப்பில் முதிர்ந்தவர். இருபதாண்டின் எல்லை தாண்டித் தெளிந்தவர். நாற்பாதாண்டுக்கு எழுதியவர். ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அவர் சேர்த்த குறிப்புரைகள் ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.

    அறிஞர் கோபால ஐயர், கவிஞர் திருலோக சீதாராம், பேராசிரியர் எம் எஸ் நாடார், பேராசிரியர் சேசாத்திரி, பேராசிரியர் இராமன், பேராசிரியர் சங்கர நாராயணன், வழக்கறிஞர் இராமலிங்கம், பதிவாளர் சுப்புராயலு முதலியாரிடம் அமர்ந்து பேசி மகிழ்ந்த நாட்களும், டி என் ஆர் தலைமை தாங்கிய மாட்சியும் நினைவைக் கலக்குகின்றன.

    யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
    (திருமந்திரம் 95 …)

    அன்னோனை இழந்த இவ் உலகம்
    என் ஆவதுகொல்? அளியது தானே!
    (புறம் 217 …)

    Share
  • நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம்

    நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம்

    நம் யூடியூப் அலைவரிசையில் இது வரை ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களிலிருந்து காட்சிகளை வழங்கினோம். இப்போது, ஓசியானியா கண்டத்திலிருந்து ஒரு பதிவு.

    சொர்க்கப் பறவை (Bird of Paradise) உள்ளிட்ட அரிய வகைப் பூக்களையும் தாவரங்களையும் வளர்த்து வரும், நியூசிலாந்தில் வாழும் திருமதி துளசி கோபால் அவர்களின் வீட்டுத் தோட்டம் இதோ. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை – இலங்கைச் சைவர்கள் கோரிக்கை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை

    பாம்பையும் வேம்பையும் வழிபட்டோம். கல்லையும் மண்ணயும் போற்றினோம். சூரியனையும் சந்திரனையும் கணக்கு எடுத்தோம்.  நீரையும் வானத்தையும் தொழுதோம். சிவனாகவே யாவும் தெரிந்தன.

    இலங்கை மண் எங்கள் மண். ஒவ்வொரு பரலையும் வழிபட்டோம். இயற்கை எங்கள் ஆசிரியர். பட்டறிவு எங்கள் வளர்ச்சி. தீயன களைந்தோம். நல்லன வளர்த்தோம். செதுக்கினோம் செதுக்கினோம். கூர்மையாக்கினோம். சமூகத்தைச் செதுக்கினோம் பண்பாட்டைச் செதுக்கினோம். சைவத் தமிழர்களாகத் திளைக்கிறோம்.

    இந்தச் செதுக்கலின் பேறே விபுலானந்த அடிகளார். இந்த வளர்ச்சியின் விளைவே விபுலானந்த அடிகளார். இச் சமூகக் கூர்மையாக்கலின் படையலே  விபுலானந்த அடிகளார்.

    இலங்கையின் மனித வரலாறு கற்காலம் முதலானது. இரும்புக் காலம் ஊடானது. பெருங்கற்காலம் தொடரானது. வரலாற்றின் ஊடாகச் செதுக்கினோம். செதுக்கிக் கூர்மையாக்னோம். சைவசமயப் பண்பாடாக்கினோம். இலங்கைத் தொல்லியலார் தோண்டத் தோண்டக் கிடைப்பன யாவும் மனித வாழ்வுக்குச் சைவமும் தமிழும் ஈந்த எச்சங்கள். விபுலானந்த அடிகளாரை உருவாக்கிய கூறுகள்.

    புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். மாணிக்கக் கங்கைக் கரையிலே முருகனைப் போற்றிய தைப்பூச நாளில் கால் வைக்கிறார். முருக வழிபாட்டிற்காக இலங்கை முழுவதும் இருந்து அங்கே மக்கள் திரண்டு இருந்தார்கள். மகாவம்சம் கூறுகிறது. இலங்கையில் புத்தர் சந்தித்த பண்பாடு சைவத் தமிழ்ப் பண்பாடு.

    அசோகனின் தூதர் அநுராதபுர அரண்மனைக்கு வந்தனர். சைவத் தமிழன் மூத்த சிவனின் மகன் ஆட்சிக் காலத்தில் வந்தனர். நாக நாட்டில், அநுராதபுரத்தில், களனியில், உரோகணத்தில் சைவத் தமிழர் அரசுகள் ஆட்சிகள். மகாவம்சமும் இதையே கூறும்.

    இலங்கை மண்ணில் இலங்கை மக்கள் உருவாக்கிய வாழ்வு முறை, சமூக கட்டமைப்பு, பண்பாட்டுக் கோலங்கள், தத்துவ உசாவல்கள், வழிபாட்டுமுறைகள் இந்த மண்ணிற்கே உரித்தானவை,

    புத்த சமயத்தவர் இந்த மண்ணின் மரபுகளை ஏற்றுக்கொண்டனர். புத்த தத்துவம் காயாவில் இருந்து வந்தாலும் மண்ணின் சைவத் தத்துவத்தோடு இணைந்தனர். கடந்த 2500 ஆண்டுகளாகச் சைவ சமயத்தை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். புத்த விகாரைகளில், புத்தர்களின் இல்லங்களில், புத்தர்களின் உள்ளங்களில் போதனைக்குப் புத்த சமயம், சாதனைக்குச் சைவ சமயம்.

    சைவக் கோயில்கள் சாத்தானின் வாழ்விடங்கள். புத்த விகாரங்கள் சாத்தானின் வாழ்விடங்கள். உருவவழிபாடு உடைக்க வேண்டியது நீக்க வேண்டியது. சொல்பவர்கள் இந்த மண்ணில் விளைந்தவர்கள் அல்லர். பாலைவனத்தில் முகிழ்த்த, பாலைவன மக்களுக்காக அமைந்த, கொள்கைகளை கருத்தியலை இந்த மண்ணில் திணித்துப் புகுத்த விரும்புவர்கள். கொட்டாஞ்சேனை 1883, அநுராதபுரம் 1903, கம்பளை கண்டி 1915 எனத் தொடர்ந்தன. இசுபுல்லா சொல்கிறார் (2016) அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஒடட்டமாவடிக் காளி கோயிலை இடித்தேன். திருக்கேதீச்சர வளைவை (2019) இடித்ததாகக் குற்ற உசாவல் கத்தோலிக்கப் பாதிரியர் மாரக்கசு மீது.

    இருக்கின்ற சட்டங்களைப் பயனுனுத்துவர். சமூக கட்டமைப்பைப் பயனுறுத்துவர். சைவர்களை, தமிழர்களை அழித்தொழிக்கப் பயனுறுத்துவர். சைவ வழிபாட்டிடங்களை உடைக்க, இடிக்கத் தொடர்ந்து முனைபவர்.

    பாலைவனத்தின் அரியதான பசுஞ்சோலையின் கருத்தியலே ஆபிரகாமிய சமயங்கள். இலங்கை மண்ணோ பசுஞ்சோலைக்குள் பொட்டலாகப் பாலை நிலங்கள். எதிர் எதிர் புவியியல் நிலை. பாலைவன நாட்டுக் கருத்தியல் பசுஞ்சோலை நாட்டிற்கு வேண்டுமா?

    பசுஞ் சோலைக்குள் முகிழ்த்த சைவ சமயத்தைக் காக்கவேண்டும். இந்த மண்ணின் மரபுகளைப் பேணவேண்டும். இந்த மண்ணுக்கே உரித்தான பண்பாட்டை வளர்க்க வேண்டும். சைவசமயம் இந்த மண்ணில் வாழ வேண்டும்.

    எனவே கோருகிறோம்

    புதிய அரசியலமைப்பில் சைவத்துக்கு முன்னுரிமை கொடுக்க.
    புதிய அரசியலமைப்புள் மதமாற்றத் தடைகளை விதிகளைக்குக.
    புதிய அரசியலமைப்புள் மாடு வெட்டத் தடையை விதிகளாக்குக.

    எந்த நோக்கங்களுக்காக விபுலானந்த அடிகள் வாழ்ந்தாரோ அந்த நோக்கங்களை முன்னெடுக்கும் அவரின் 129ஆவது பிறந்தநாளில் இலங்கையின் 12 மாவட்டங்களில் 17 திருக்கோயில்களில்  இந்த 3 கோரிக்கைகளுக்காகத் தவமிருக்கிறோம். உண்ணாநோன்பு இருக்கிறோம். வழிபடுகிறோம். ஆதரிப்பீர்.

    Share