பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை
சக்தி சக்திதாசன்
இலண்டன்
கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பதே ஒரு சாதனை எனும்போது வாழ்க்கையில் சதம் அடிப்பவர்களின் சாதனையை என்ன சொல்வது? அப்படியான ஒரு அருமையான சாதனைச் சந்தர்ப்பத்தை ஒரு இரண்டு மாத கால இடைவெளியில் தவற விட்டு விட்டார் எமது இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபெத் அவர்களின் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் (Duke Of Edinbrugh Prince Philip).
ஆமாம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 09.04.2021 அன்று காலை 9 மணிக்கு தனது 99வது வயதில் காலமாகிய கோமகன் பிலிப் அவர்கள் இன்னும் இரண்டு மாத காலம் உயிருடன் இருந்திருப்பாரேயாகில் 100 வயதை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டிருப்பார்.
இந்த 99 வருட பயணத்தினூடாக பயணித்த இந்தப் புதிரான மனிதரின் வாழ்வுப்பயணம் எத்தகையது என்பதைப் புரட்டிப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது. இவருடைய 99 வருடப் பயணத்தில் சுமார் 46 ஆண்டுகள் நான் இவர் பயணித்த இந்த இங்கிலாந்து மண்ணிலே பயணித்திருக்கிறேன் என்று எண்ணும்போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இதுவரை காலமும் ஊடகங்களில் இவரைப் பற்றிய எதிர்மறையான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுச் செய்தியாக வரும்போது அவரைப் பற்றி சிறிதளவு எண்ணத் தலைப்பட்டதைத் தவிர இவரின் வரலாற்றை அறியும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை, இயல்பாகவே இங்கிலாந்து இராஜ குடும்பத்தின் மீது என் மனைவி கொண்டிருந்த ஆர்வத்தினால் அவருடன் இணைந்து தொலைக்காட்சியில் இராஜ பரம்பரை சம்பந்தமான நிகழ்வுகளை பார்ப்பதில் இருந்தே இவரைப் பற்றிய ஓரளவு அறிந்திருந்தேன் என்பதே உண்மை.
ஆனால் ஒரு தம்பதியினர் 73 வருட காலம் மணவாழ்க்கையில் இணைந்திருந்தார்கள் அதுவும் அவர்கள் சமூகத்தில் வகிக்கும் அந்தஸ்தின் நிமித்தம் அவர்கள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் கடந்து இணைந்திருந்தார்கள் என்பதுவே ஒரு சாதனை என்றால் மிகையாகாது.
26 வயது இளைஞரான இளவரசர் பிலிப் அன்றைய 21 வயது இளைவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்களை மணமுடித்தது முதல் கடந்த வெள்ளிக்கிழமை மரணிக்கும் வரை தனது மனைவிக்கு ஒரு கருங்கல்லைப் போன்ற உறுதியான பக்கபலம் அளிப்பவராகத் திகழ்ந்தார் கோமகன் பிலிப் என்பதுவே உண்மை.
அன்றைய இங்கிலாந்தின் மகாராஜாவாக இருந்த ஜார்ஜ் அவர்களின் மறைவையடுத்து தனது 26வது வயதில் மகாராணியாராகப் பொறுப்பேற்ற இரண்டாவது எலிசபெத் அவர்களுக்கு தனது இறுதிநாள்வரை ஒரு ஆதரவு மிக்க கணவராக, மகாரணியாரின் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
இங்கிலாந்து இராஜகுடும்ப வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்தவர் எனும் சாதனையை இங்கிலாந்து மகாராணியாரும், அப்படி ஆட்சி செய்த ஒருவரின் வாழ்க்கைத்துணையாக அதிக காலம் இருந்தவர் எனும் சாதனையை கோமகன் பிலிப்பும் படைத்துள்ளார்கள்.
இந்தச் சாதனைகளின் மத்தியில் இவர்க:ள் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். இளவரசர் சார்ள்ஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வேர்ட் எனும் நான்கு குழந்தைகளின் பெற்றோர் இவர்கள்.
மகாரணியாரின் தங்கையான மார்கிரெட் அவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான போதும், பின்னர் அவரது மணவாழ்க்கையில் முறிவு, அவரின் ஆண்களினுடனான தொடர்பு, போதைப்பழக்கம் என பல சர்ச்சைகள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்ட போது அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளிப்பதில் மகாராணியாருக்கு பிலிப் கோமகன் ஆற்றிய பங்கு அளப்பரியது.
பின்பு இளவரசர் சார்ள்ஸ், டயானா அவர்களின் மணமுறிவும், டயானாவின் மரணமும், இளவரசர் ஆண்ட்ரூ அவர்களின் மணமுறிவு, இளவரசி ஆன் அவர்களின் முதல் மணமுறிவு அதன் பின்னான மறுமணம், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மறுமணம் என தமது வாரிசுகளின் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதில் மகாரணியாருக்கு பக்கபலமாக இருந்த்துடன் தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கியவர் கோமகன் பிலிப் ஆவார்.
தமது பிள்ளைகளின் வாழ்க்கைப் பிரச்சனையைச் சமாளித்து முடித்து விட்டோம் என்றிருக்கையில் இப்போது சமீபத்தில் அவர்களது பேரனான இளவரசர் ஹரியும் அவரது மனைவி மெகன் மார்க்கலும் இராஜ குடும்பத்தினின்றும் பிரிந்து அமேரிக்காவில் நிலை கொண்டது மட்டுமின்றி தொலைக்காட்சி நேர்காணலில் இங்கிலாந்து இராஜ குடும்பத்தைத் தாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட துரதிர்ஸ்ட நிகழ்வை எதிர் கொள்ள வேண்டி வந்தது. அச்சமயத்தில் தான் சுமார் ஒரு மாத காலத்தின் முன் கோமகன் பிலிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் இல்லம் திரும்பினார், அதன் தொடர்ந்தே இந்த மரணமும் நிகழ்ந்துள்ளது.
இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்நோக்கும் வகையில் இங்கிலாந்து மகாராணியாரின் கொள்கையான “விளக்கமும் இல்லை, சர்ச்சைகளில் ஈடுபடுவதும் இல்லை“ என்பதற்கமைய கோமகன் பிலிப் அவர்களும் மனைவியோடு ஒத்துழைத்தார் என்பது வெள்ளிடைமலை.
சரி இத்தகைய சூழல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் திடகாத்திரமாக கோமகன் பிலிப் உருவாகக் காரணமான அவரது பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?
1921 ம் ஆண்டு யூன் மாதம் 10ம் திகதி கிரெக்க நாட்டிலுள்ள கோர்பூ (Corfu) எனும் தீவில் கிரேக்கத்தினதும், டென்மார்க்கினதும் இளவரசரான ஆண்ட்ரூ (Prince Andrew) க்கும், ஜெர்மனிய பட்டன்பேர்க் (Battenburg) நகர இளவரசி அலீஸ் (Alice) என்பவருக்கும் ஜந்தாவது மகவாக நான்கு பெண்களுக்கு பின்னால் ஆண் மகவாக அவதரித்தவர் தான் கோமகன் பிலிப்(Prince Philip).
பிறப்பின் மூலம் கிரேக்க நாட்டினதும், டென்மார்க் நாட்டினதும் பட்டத்துக்குரிய இளவரசர் எனும் உரிமையைப் பெற்றவர் இளவரசர் பிலிப். இப்படி இராஜ பரம்பரையில் இராஜ உரிமை பெற்ரவர் எப்படி இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்?
இவரது தாய்வழிப் பாட்டனாராகிய பட்டன்பேர்க் இளவரசர் லூயிஸ் இங்கிலாந்துப் பிராஜாவுரிமை பெற்று லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்று வாழ்ந்து இங்கிலாந்தில் மடிந்தார். அப்போது இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பின்னால் இங்கிலாந்தில் ஜேர்மனிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருந்தது. பாட்டனாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட பின்பு தனது தாயுடன் அவர் மீண்டும் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார்.
அப்போது கிரேக்க நாட்டிற்கும் துருக்கிக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது அப்போது கிரேக்க நாட்டின் அதிபராக இளவரசர் பிலிப்பின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூவின் அண்ணன் முதலாம் கொன்சடன்டைன் அரசராக இருந்தார். துருக்கியுடனான யுத்தத்தில் படுதோல்வியடைந்த்துக்கான பொறுப்பு பிலிப் அவர்களின் பெரிய தந்தை மீது விழுந்ததினால் அவர் இராஜ பதவியிலிருந்து அகற்றப்பட்டு, இளவரசர் பிலிப்பின் தந்தையும் குடும்பமும் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர், சிறிது காலம் பிரான்ஸில் வசித்து வந்ததன் பின்னால் அவரது தாயார் அலீஸ் மனநோயாளியாக அடையாளைப்படுத்தப்பட்டு மனநோயாளர் மனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மொன்டி கார்லோ வில் வசித்தார்.
இந்நிலையில் தான் இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் தனது தாய்வழிப் பாட்டியான விக்டோரியா மவுண்ட்பேட்டனுடன் வசித்தார். அவரின் பின்னால் அவரது தாய் மாமனான மவுண்ட்பேட்டன் பிரபு அவரைத் தனது மகன் போல வளர்த்தார். ஸ்கொட்லாந்து நாட்டில் கல்விபயின்று பின்னர் தனது கிரேக்க குடியுரிமையை இரத்துச் செய்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து கடற்படையில் இணைந்து அதிவேகமாக பதவிகளில் உயர்ந்த பெருமை பெற்றவராவார். 23 வயது நிரம்பிய அழகிய வலிபரான இவர் மீது 18 வயதே நிரம்பிய அப்போதைய இளவரசி இரண்டாவது எலிசபெத் அவர்கள் காதல் கொண்ட்தாகக் கூறப்படுகிறது. அவரை விட ஐந்து வயது அதிகமான இளவரசர் பிலிப்பை இளவரசி எலிசபெத் அவர்களின் பெற்றோர் மாப்பிள்ளையாக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
21 வயதில் தனது காதலை பகிரங்கப்படுத்திய அப்போதைய இளவரசி எலிசபெத் அவர்களின் விருப்பத்தினை அன்றைய மகாராஜா ஜார்ஜ் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
மிகவும் துடிப்பாற்றல் கொண்டவரும், கடற்படையில் கட்டளையிடும் தளபதித் தகமையில் இருந்தவருமான இளவரசர் பிலிப் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணியாரின் பக்கவாத்தியமாக மாறுவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும் அக்காலகட்டத்தில் அவர் வாலிபர்களுக்குரிய லீலைகளில் ஈடுபட்டதை எலிசபெத் மகாராணியார் கண்டும் காணாதது போல பொறுமை காத்ததுமே அவர்களது ஸ்திரமான உறவுக்கு அத்திவாரமிட்டது என்கிறார்கள் இராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர்கள்.
அவரின் மிகச் சிறந்த சாதனையாக “எடின்பரோ கோமகனின் பரிசில்(Duke of Edinbrugh Award) “ எனும் இளைய தலைமுறைக்கான ஒரு தன்னம்பிக்கை வளர்க்கும் பரிசுத் திட்ட்த்தைக் குறிப்பிடுகிறார்கள். இன, மத, நிற, சமுதாய ஏற்ற தாழ்வுகள் எதுவுமின்றி அனைத்து இளம்பிராயத்தினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதின் மூலம் ஒரு இலக்கையடைவதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கலாம் எனும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்பவர்கள் இதற்குரிய பரிசுப் பத்திரத்தை கோமகன் பிலிப் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதே இதன் சிறப்பம்சமாகும்.
இதுமட்டுமின்றி காலமாற்றத்துக்கு இராஜ குடும்பம் விதிவிலக்கானதல்ல எனும் கோட்பாட்டிற்கமைய சூழலுக்கேற்ப இராஜகுடும்பத்திலும் மாற்றங்கள் நிகழ உந்துகோலாகச் செயற்பட்டவர் கோமகன் பிலிப் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.. இங்கிலாந்து மகாராணியாரும் வரிவிதிப்புக்கு கட்டுப்பட்டவர் எனும் வகையிலேற்பட்ட மாற்றம் உட்பட, இராஜமாளிகையான “பக்கிங்காம் பலஸ்” எனும் மகாராணியாரின் வாசஸ்தலத்தை கோடை விடுமுறை காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையிலான வசதி ஏற்படுவதற்கும் இவர் ஒரு முக்கிய காரணமாகவிருந்தார் என்பது செய்தி.
தன் மனதில் பட்டதை எதுவித தயக்கமுமின்றி பேசிவிடுவது இவரைப் பல சமயங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியிருக்கிறது. பண்ணைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு மனிதராக இருந்தார்.
மிகவும் நகைச்சுவையாக பேசும் இவரிடம் ஒரு நிருபர் உங்களைப் பற்றி எவ்வாறு விவரிப்பீர்கள் என்று கேட்டதற்கு “நானோரு அகதிக் கணவன்” (I am a refugee husband) என்று பதிலளித்தாராம்.
மனநோயாளிகள் மனையிலிருந்து நலமடைந்து திரும்பிய இவரது தாயார் ஒரு கத்தோலிக்க சேவகியாக மாறி வாழ்ந்தார். தனது அந்திம காலங்களில் இங்கிலாந்தில் தன் மகனுடன் வாழ்ந்தார். இவரைத் தன் மகன் போல் வளர்த்த இவரது மாமனாரான மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்து ஐ,ஆர்,ஏ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.
கொரோனா எனும் கொடிய கிருமினியின் கட்டுப்பாட்டினுள் மறைந்த இவருக்காக எட்டுநாட்கள் துக்கதினங்களாக அனுசரிக்கப்படுகிறது. வரும் 17.04.2021 சனிக்கிழமை 3 மணியளவில் வின்சர் மாளிகையில் இவரது இறுதி நிகழ்வுகள் நிகழவிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய முப்பது பேரே கலந்து கொள்ள முடியும். இராஜ குடும்பத்தைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினர்களே நேரடியாகச் சமூகளிப்பார்கள். இங்கிலாந்துப் பிரதமரே உறவினருக்கு வழிவிட்டு தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணியாருடன் 73 வருடங்கள் வாழ்ந்து மறைந்த அவரது அன்புக் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் அவர்களின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் துயர் பகிரும் செய்திகளை பகிர்ந்துள்ளார்கள். இங்கிலாந்து முழுவதும் கொரோனா தக்கத்தோடு யாரோ ஒரு நன்கு தெரிந்த ஒருவரையிழந்த ஒருவகை துயரில் ஆழ்ந்து போயிருக்கிறது. அன்னாரின் ஆத்மசாந்திக்காய் நாமும் பிரார்த்திப்போம்.