தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 10

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 3

(வெட்டுண்ட அட்டையும் வீரனின் கவந்தமும்)

முன்னுரை

காஞ்சி, பாடாண் முதலிய வாழ்வியல் திணைகள் பெருமை சேர்த்தாலும் வெட்சி முதலியனவே புறத்திணைகளின் சாரமாகும். அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அகத்திணைக் களங்களெனின் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவே புறத்திணைக் களங்களாகும். அவற்றுள் தும்பை சூடி நேருக்கு நேர் பகையெதிர்தல் தும்பைத்திணையாகும். தும்பைத் திணையின் போர்ச்சிறப்பினைக் காட்சிப்படுத்தும் தொல்காப்பியர் அட்டையை உவமமாக்குவதை அறியமுடிகிறது. ‘அட்டை போல ஆடுதல்’ என்னும் உவமத்தால் விளக்கப்படும் பொருள் இலக்கியக் காட்சியாயினும் வீரம் செறிந்த தமிழ்மரபின் நடப்பியல் உண்மை என்பதையும் அறியமுடிகிறது. உவம விளக்கத்தில் இது பற்றிய சில கருத்துக்களையும் இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

கொற்றவை வழிபாட்டில் ‘நவகண்டம், அரிகண்டம்?

‘அட்டையாடுதல்’ என்னும் உவமம் கற்பனைப் பொருளை விளக்குதற்கானது அன்று. தமிழனுடைய அரசியல் வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த நடைமுறை வழக்கத்தில் காணப்பட்ட ஒரு நிகழ்வைச் சித்திரிப்பதற்குரியதாகும்.  ‘நவகண்டம்’, ‘அரிகண்டம்’ என்னும் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய வீர மரபாகும். ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள். ‘நவகண்டம்’  என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வது.  ‘அரிகண்டம்’ என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்துத் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்வது.

  1. மானுட ஆற்றல் பயனற்றுப்போய்விடுமோ என்னும் ஐயவுணர்வு தலையெடுங்குங்கால் ஒரு வேண்டுதலை நிறைவேற்றவோ மாண்புடன் இறக்கவோ இந்தப் பலிக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்வர்.
  2. வலிமிகுந்த மாற்றரசருடன் நிகழும் போர்க்காலங்களில் வெல்வதற்கு வாய்ப்பு அரிதான ‌ தருணங்களிலும்,
  3. தேற்ற இயலாத உடல்நிலையால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் குணமடைய வேண்டுகின்ற பொழுதிலும்
  4. நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரோ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியோ மிகுந்த அவமானத்தினால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவரோ, அவ்வாறு சாகாமல் வீர சொர்க்கம் அடைய விரும்புகிற பொழுதிலும்

எனப் பல காரணங்களுக்காக ‘நவகண்டம்’ செய்து கொள்வர். இவ்வாறு தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்பவர் அக்காலத்தில் வீரர்களாகப் போற்றப்பட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினர் அவர்கள் உருவங்களை “வீரர் கல்லு” எனப்படும் சிலைகளாக வடித்துத் தொழுது வந்ததும் வழக்கமாக இருந்துள்ளது. நமக்கு இதுவரை கிடைத்த மிகப் பழமையான ‘வீரர் கல்லு’ கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய கற்கள் விரவிக் காணப்படுகின்றன.

இலக்கியங்களில் கவந்தம்

வேண்டுதலுக்காகவோ களத்திலோ தானாகவோ எதிரணி வீரர்களாலோ  தலை துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் துடிக்க துடிக்க ஆடுவதற்குப் பெயர்தான் கவந்தம் என்பது. இதனைத்தான் ‘அரிகண்டம்’ என்ற சொல் குறிக்கிறது. இது பற்றிய குறிப்புக்கள் இலக்கியப் பதிவாகவும் வரலாற்றுப் பதிவாகவும் காணக்கிடைக்கின்றன.

“அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ?
அரிந்த சிரம் அணங்கின்கை கொடுப்பராலோ?
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ?
குறைஉடலம் கும்பிட்டு நிற்குமாலோ?”

என்னும் கலிங்கத்துப்பரணி கவந்த நிகழ்ச்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது.

“வெந்திறல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென்
பலிக்கொடைப் புரிதோர்”

என்னும் (இந்திரவிழவூர் எடுத்த காதை) வரிகள் மன்னர்க்கு நேர்ந்த துன்பம் தொலைவதற்காக அரிகண்டம் செய்தாரைக் குறிக்கிறது.

“தோளும் தலையும் துணிந்து வேறாகிய
சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடல் கவந்தம்
பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட” (கால்கோட்காதை)

என்னும் வரிகள் கவந்தம் என்ற சொல்லை நேரடியாகவே பதிவு செய்து பேய்க்களக்காட்சியைச் சித்திரித்துள்ளது. இத்தகைய பதிவுகளிலிருந்து கவந்தம் ஆடுதல் அல்லது அரிகண்டம் ஆடுதல் என்னும் வினைகள் உணர்ச்சி காரணமாக அமைந்த தற்காலிகச் செயல்கள் அல்ல என்பதும் அலகு குத்துதல் போலத் திட்டமிட்ட செயலே என்பதும் கருதுதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

தொல்காப்பியத்தில் கவந்தம்

போர்க்களத்தில் மாற்றாரின் கணையும் வேலும் மெய்யெல்லாம் மொய்த்திருக்குங்கால், உயிர் போய்விடுமாயின் யாக்கை மட்டுமே நிற்கும். நின்ற அந்த யாக்கை வீரம் பொங்கக் குதித்து நிற்கும் நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம்  புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகச் (தும்பை) சுட்டுகிறது.

“கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற  உயிரின் நின்ற யாக்கை
இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே”

என்னும் நூற்பாவில் மேற்சுட்டிய நிலை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர்,

“கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, ‘நீருள் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடையது. (இருநிலம் தீண்டா அரு – நீருட் கிடக்கும் அட்டை)”

என விளக்கிக் காட்டுவார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தம் கருத்துக்களுக்கேற்பப் பொருளுரையும் விளக்கவுரையும் எழுதிக்காட்டினும் உடம்பாடும் நிலைக்கு அட்டையாடுதல் உவமமாக்கப்பட்டுள்ளது என்னும் தொல்காப்பிய உண்மை உளங்கொளற்குரியதாம். ஊர்ந்து வரும் அட்டை இரு கூறான பின்பும் இரண்டும் தனித்து இயங்குதல் என்பது கருத்து. இருவேறு துண்டங்கள் என்பதையே கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

வெண்பாமாலையில் வெருவரு நிலை

தொல்காப்பியத் தும்பைத்திணைப் பொருள் வரையறையில் மனம் பறிகொடுத்த ஐயனாரிதனார்,

“விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலை உரைத்தன்று”

எனத் தும்பைத்திணை – வெருவரு நிலைத் துறைக்கான கொளுவை அமைத்திருக்கிறார். ‘நிலந்தீண்டா நெடுந்தகை நிலை’ எனக் கூட்டி நோக்கினால் அவருடைய தொல்காப்பியக் காதல் புரியக்கூடும்.

“வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
எங்கும் மருமத்து இடைகுளிப்பச் செங்கண்
புல்வாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
கலவாமற் காத்த கணை”

‘வெட்டுண்ட யாக்கை இருநிலம் தீண்டாது’ என்ற தொல்காப்பியத்திற்கு  வெண்பாமாலை தலைவி ‘தன் ஆகம் தீண்டிய அவனாகத்தை மண்மகள் புல்லாமல், அவன் மார்பில் தைத்த அம்புகள் காத்தனவாகக் கற்பிக்கிறார். கட்டுரையின் முற்பகுதியில் கூறியவண்ணம் சில குறிப்பிட்ட நேர்வுகளில் தங்களையே பலியிட்டுக் கொள்ளும் வீர மரபு தமிழ் மரபு என்பதை விளங்கிக்கொள்ள ‘அட்டையாடுதலை’ உவமமாக்கித் தொல்காப்பியம் விளக்கப், பின்வந்தோர் அதனை வழிமொழிந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நிறைவுரை

திருவள்ளுவர் ‘ஒப்புரவு’ என்னும் அதிகாரத்தில் ‘விற்றுக்கோள் தக்கது’ எனவும் ‘கயமை’‘ என்னும் அதிகாரத்தில் ‘விற்றற்குரியர் விரைந்து’ எனவும் குறிப்பிடுவார். இக்குறிப்புக்களால் மனிதர்கள் தங்களையே விற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்குமோ என்னும் ஐயம் அடிமைகளின் வரலாற்றை நோக்குவார்க்கு வருவது இயல்பே. அதுபோலக் கவந்தம் ஆடுதல் என்பது களக்காட்சியாயினும் அது வாழ்வியல் பதிவோ என்னும் ஐயம் வருவது இயல்பு. நிகழ்வுகள் மட்டுமன்று உவமங்களால் விளக்கப்படும் பொருள்களும் வரலாற்றுப் பதிவுகளாகலாம் என்பதற்கு நவகண்டம், அரிகண்டம், கவந்தம் – அட்டையாடுதல் என்னும் சொற்கள் சிந்தனைக் காரணிகளாக நிற்கின்றன எனலாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *