ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாஆஸ்திரேலியா

[ஏப்ரல் 10ஆம் நாள், உலக ஹோமியோபதி நாள்.  என் தந்தையார்என் தாய்மாமன் ஆகியோர், ஹோமியோபதி வைத்தியர்கள் ஆவர். நானும் ஹோமியோபதி பற்றி என் தந்தையாரிடம் அறிந்திருக்கிறேன். ஓரளவு அதில் பயிற்சியும் இருக்கிறது. என் தாயாரின் அப்பா அதாவது என் தாத்தா, பிரபலமான ஆயுள்வேத வைத்தியர். அந்த வகையில் ஹோமியோபதி நாளினைக் கருத்திருத்தி இக்கட்டுரையினை வழங்குகின்றேன்.]

பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம். பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம். இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பொன் மொழியும் ஏற்பட்டதோ என எண்ணிடத் தோன்றுகிறது.நோயிலிருந்து விடுபட  மண்ணில் வந்த அருந்துணையே மருத்துவம் எனலாம். அந்த மருத்துவம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய்வேறு வேறு பெயர்களில் தோற்றம் பெற்றாலும் மருத்துவத்தின் தலையாய பணி மண்ணில் வாழுகின்ற மக்களை இயன்றவரை நலமுடன் வாழ்ந்திடச் செய்வதேயாகும். அந்தவகையில் காலத்துக்காலம் பல மருத்துவ வழிகள் உருவாக்கப்பட்டன. அந்த வழியில் இன்று உலகின் இரண்டாவது மருத்துவ வழியாக சிறந்து விளங்குவதுதான் ஹோமியோபதி” மருத்துவம், ஐரோப்பாஅமெரிக்காதென்கிழக்கு ஆசிய நாடுகள்இந்தியாஇலங்கைபாகிஸ்தான் என்று பரந்து விரிந்திருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி. ஆங்கில மருத்துவம் முழுமை பெறாத காலம். அக்காலப்பகுதியில் பெயர் தெரியாத பல நோய்கள் மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தன. ஆங்கில மருத்துவ முறையினைச் சார்ந்து நின்ற ஒருவருக்கு மக்கள் படுகின்ற வேதனையைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாமல் போய்விட்டது. ஆங்கில மருத்துவமானது நோய்களைக் குணப்படு த்துவதைவிட – நோயாளிகளுக்கு பெருமளவு வேதனையினைத்தான் தருகிறது என்பதை மனமார உணர்ந்த அவர் மருத்துவத்தை விட்டுச் சிறிதுகாலம் ஒதுங்கியே இருந்தார்.

ஆனாலும் அவரால் ஒதுங்கியபடியே இருந்திட முடியவில்லை. மருத்துவம் சார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும் பணியினைச் செய்யத் தொடங்கினார். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் கல்லென் அவர்களின் நூலினை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நூலில் அவர் ஒரு வாசகத்தைக் கண்டார். “மலேரியாவைக் குணப்படுத்தும் தன்மை சிங்கோனா மரப்பட்டை க்கு இருக்கிறது” என்பதாகும். அதனைப் பரிசோதித்திட  சிங்கோனா மரப்பட்டையினை அவரே சாப்பிட்டார். மலேரியா பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அத்தனையும் அவருக்கும் தென்பட்டது.காய்ச்சலும் குளிரும் அவரையும் பாதித்தது. “எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும்” என்னும் அடிப்படையான முரண்பாட்டினை அவர் தன்னையே மையப்படுத்தி அறிந்து கொண்டார். அவர்தான் ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த “டாக்டர் சாமுவேல் ஹனிமன்” ஆவர். 1796 ஆம் ஆண்டில் இவர்கண்ட தத்துவத்தின் அடிப்படையில் உருவானதுதான் உலகெங்கும் பரந்திருக்கும் “ஹோமியோபதி” ஆகும்.

அந்த மேதை 1755 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி பிறந்தார். அவர் பிறந்த தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியே “உலக ஹோமியோபதி நாளாகக்” கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் ஆந் திகதி “உலக சுகாதர தினம்” கொண்டாடப்பட்டது.

ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்” என்பதைத் தன்னை மையப்படுத்தி டாக்டர் சாமுவேல் ஹனிமன் கண்டதே “ஹோமியோபதி” மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு எனலாம். இதனைத்தான் “முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்” என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் வளர்ந்தும் வருகிறது. மக்களும் பயனினை அடைந்தும் வருகிறார்கள். இம்மருத்துவம் பாதுகாப்பானதாகவும் சிறந்த பல தன்மைகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. ஹோமியோபதி மருத்துவம் என்பது நோயுற்றவருக்கு – மனரீதியாகவும்சிந்தனைரீதியாகவும்ஆன்மீக மற்றும் உடல்ரீதியாகவும்சமநிலையினை உண்டாக்குகிறது என்பதுதான் இம்முறையின் விசேடத்தன்மை எனலாம்.

ஹோமியோபதி என்பது கிரேக்கச் சொல்லாகும். “ஹோமோ” என்றால் ஒத்த மாதிரியான ‘ என்றும் , “பேத்தே” என்றால் வேதனை‘ என்றும் பொருளாகும். ஹோமியோபதியின் தன்மையே வித்தியாசமானதாகும். அதாவது குறைந்த அளவிலான மருந்துகளைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவதேயாகும். மருந்துகள் பல இன்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இருந்த நோயோடு இன்னும் அவதியை அளித்து நிற்கின்றன. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அற்ற மருந்துகளே கொடுக்கப் படுகின்றன. இயற்கை விதியின் அடிப்படையாக “விருப்பத்தை விருப்பம் மூலம் குணமாக்குதல்” என்னும் அடிப்படையில் அமைந்து நலன் விளைவிக்கும் நிலையில் இருப்பதுதான் இம்மருத்துவம் என்பது நோக்கத் தக்காதாகும்.

ஹோமியோபதியின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமன்

ஆர்கனான்” என்னும் அரிய ஹோமியோபதி நூலினை ஆக்கி அளித்திருக்கிறார். ஹோமியோபதி மருத்துவமுறையினை இவர் சீர்படுத்த ஆறு ஆண்டுகள் எடுத்தன. நான்கு ஆண்டுகளின் பின்னர் “மெடிசின் ஒவ் எக்ஸ்பீறியன்ஸ்” என்னும் நூலினை ஆக்கினார். இதில் இருந்துதான் ஆர்கனான்” நூலின் முதற்பதிப்பு 1810 இலும் 1816 இல் இரண்டாம் பதிப்பும் 1824 இல் மூன்றாம் பதிப்பும் 1829 நான்காம் பதிப்பும் ஐந்தாவது பதிப்பாக 1831 இலும் இந்த நூல் வெளியிடப்பட்டது என்பது குறைப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இந்த நூலின் முக்கியத்துவம் இருந்திருக்கிறது என்பதைதான் நாம் மனமிருத்தல் அவசியமாகு.

டாக்டர் சாமுவேல் ஹனிமனால் படைக்கப்பட்ட இந்த நூல் – ஹோமியோபதியினைப் படிக்க விரும்பும் அனைவருக்குமே பெரும் பயனை அளித்திடும் வகையிலேதான் அமைந்திருக்கிறது. ஹோமியோபதி மருத்துவ முறைக்கு மூலதாரமான இந்தப்படைப்பு  “ஆர்கனான் ஒவ் மெடிசன்” என்றுதான் பெயர். இப்படைப்பானது படைத்தளித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களது காலத்திலேயே ஆறுபதிப்புக்களை கண்டது என்பதுதான் மிகவும் பெதுமைக்குரிய விடயமெனலாம். ஜேர்மன் மொழியில் படைக்கப்பட்ட இவ்வரிய ஆக்கமானது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஹோமியோபதி தொடர்பான பல சந்தேகங்கள் எழுவார்க்கு டாக்டர் ஹனிமன் அவர்களின் இந்தப்படைப்பு சிறந்த விளக்கத்தை அளிக்கும் பெருந்துணையாக அமைகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

நோயாளிகளை அணுகும் முறையில் ஹோமியோபதி மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபடுகிறது எனலாம். “நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து” என்பதே அதன் அணுகுமுறையாய் அமைகிறது எனலாம். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். அதனால் அவர்களுக்கு வருகின்ற வியாதிகளுக்கு ஒரேவிதமான மருந்துகளைக் கொடுப்பது உகந்ததல்ல. என்பது டாக்டர் ஹனிமன் அவர்களது கருத்தாகும். உதாரணமாக காய்ச்சல் வரும்பொழுது எல்லோருக்கும் ஒரேவிதமான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான் டாக்டர் ஹனிமன் அவர்களின் எண்ணமாய் இருந்தது. தனித்துவமாய் இருக்கும் பொழுது மருந்துமட்டும் எப்படி பொதுவாக இருக்கலாம் என்னும் சிந்தனை அவரிடம் எழுந்ததால் அவரின் அணுகுமுறை வேறுபட்டதாக அமைந்தது எனலாம். இதன்படி  டாக்டர் ஹனிமன் அவர்கள் ” உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை  வளர்த்தெடுத்தார்.

உடல் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றையொன்று சார்ந்துஒன்றையொன்று தீர்மானித்து செயற்படுவதற்கான ஒருங்கிணைப்பு சக்தியாக உடலெங்கும் பரவி ஆளுமை செலுத்தும் ஆற்றலே உயிராற்றல்” என்று டாக்டர் ஹனிமன் உணர்ந்தார்.அதனைத் தன்னுடைய படைப்பான ” ஆர்கனன் ஒவ் மெடிசன் ” என்பதில் சுட்டிக் காட்டுகிறார்.

இன்று உலகம் முழுவதும் நவீன மருத்துவம் ஆட்சி செலுத்தியே நிற்கிறது. ஆனாலும் ஆயுள்வேதம்சித்தவைத்தியம்யுனானிஅக்குபக்‌ஷர்ஹோமியோபதி மருத்துவ முறைகளும் இல்லாமல் போகவில்லை என்பது கருத்திருத்த வேண்டியதாகவே இருக்கிறது. நவீன மருத்துவத்தில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. என்றாலும் ஆய்வுகூட முடிவுகளை மையப்படுத்தி நவீன மருத்துவம் பயணிக்கிறது எனலாம். ஆய்வுகூட முடிவுகள் நோய் குணமாகிவிட்டது என்று காட்டும். குணமானாருக்கு மீண்டும் அந்தநோய் வந்துவிடும். மீண்டும் ஆய்வூகூடத்தை நவீன மருத்துவம் நாடும். அதற்கிடையில் பல்வகையான மருந்துகள் ஒருபக்கம் குவிந்துவிடும்.நோயைத் தீர்க்கக் கொடுக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளால் வேறுவிதமான வேதனைகள் அங்கே வந்து நிற்கும். இவை எதுவுமே இல்லாமல் மருந்தும் மருத்துவமும்தான் வேண்டும் என்று மக்கள் பலர் எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் உற்ற நண்பனாய். மந்திரியாய். நல்லாசானாய் நல்வெளிச்சமாய் ஹோமியோபதி வந்தமைந்திருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

கடுமையானமற்றும் நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஹோமியோபதி பலனளிக்கும் என்றும் நம்பிக்கை இன்று மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது என்பதை யதார்த்தமாய் காணமுடிகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து ஹோமியோபதிக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த செலவினை உடையதாகவும் இம்மருத்துவம் விளங்குகிறது.ஹோமியோபதி மருத்துவத்தின் இருநூறாவது ஆண்டுவிழா ஜேர்மனியில் கொண்டாடப்பட்ட வேளை “ஹோமியோபதி என்பது முழுமையான மருத்துவம்நோய் தீர்க்கும் ஆற்றல் நிறைந்தது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று ஜேர்மனியின் மருத்துவத்துறையின் அமைச்சரே கூறியுள்ளார் என்பது முக்கிய கருத்தெனலாம்.

இருநூறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உலகிலே ஹோமியோபதி மருத்துவத்தையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்று அறிய முடிகிறது. குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.அதுமட்டுமல்ல நிரந்தரத்தீர்வினை நல்கும் சிறப்பும் ஹோமியோபதிக்கு நிறையவே இருக்கிறது என்பது வெளிப்பட்டு நிற்கிறது.இஅலங்கையிலும் ஹோமியோபதிக்கு இடம் கொடுத்து சுதேசிய வைத்தியப் பிரிவினால் “ஹோமியோபதி மருத்துவச் சபை” அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல ஹோமியோபதி வைத்தியசாலையும் நிறுவப்பட்டிருக்கிறது. ஹோமியோபதியினைப் பலரும் கற்கின்றார்கள் என்பது நோக்கத்தக்கத்தாகும்.

என்னதான் இருந்தாலும் உடல் நலன் மட்டும் இல்லாவிட்டால் எல்லாமே வெறுமைதான். வையத்துள் வாழவே பிறந்தோம். மரணம் வரும்  என்பது யாவருக்கும் தெரியும். மரணத்தை எவருமே விரும்புவதில்லை. வாழும் காலம் வரை ஆனந்தமாய் அகமகிழ்வாய் அகநிறைவாய் வாழவே அனைவருமே ஆசைப்படுகிறோம். அந்த ஆசையும் அவசியமான ஆசையேயாகும். ஆசைப்பட்டால் மட்டுமே போதுமாஆசைப்படி வாழவேண்டு மானால் ஆரோக்கியத்தை அனைவரும் காத்திட  கருத்தினில் எடுத்திட வேண்டும். ஆரோக்கியத்தை அளிப்பதற்காக அவதாரம் எடுத்துதான் மருத்துவம். அந்த மருத்துவத்தில் ஹோமியோபதியும் ஒன்று. அந்த ஹோமியோபதி  எங்கள் ஆரோக்கியத்துக்கு நல்வழிகாட்டியாய் தலைநிமிர்ந்து நிற்கிறது என்னும் செய்தி பெருவெளிச்சமாய் விரிகிறது அல்லவா! அந்த வெளிச்சத்தை அளித்த மாமேதை டாக்டர் சாமுவேல் ஹனிமனை நினைப்போம்! அவரின் நினைவாக ஹோமியோபதி நன்னாளை” யாவரும் கொண்டாடுவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.