நடராஜன் கல்பட்டு

“இதெப் பாருங்கோ.  இருபத்து நாலு மணி நேரமும் அந்தக் கம்ப்யூடரெக் கட்டிண்டு அழாதீங்கோ.”

 

“கம்ப்யூடரெக் கட்டிண்டு எங்கேடீ அழறேன் நான்?  ஒன்னெக் கட்.”

 

“கட் கட்.  என்ன சொல்ல வந்தேள்?  என்னெக் கட்டிண்டூ….. அழறேளா?  இந்த நிமிஷத்துலேந்து காப்பி, டிபன், சாப்பாடு கட்.  எம் பாட்டெ நான் பாத்துக்கறேன்.  ஒங்க பாட்டெ நீங்க பாத்துக் கோங்கோ.”

 

“அய்யையோ நான் அப்பிடி சொல்ல வரலேடீ.  இன்னிக்கி ஒத்தர் சனி தசையோட தாக்கம் இப்போ கன்னி ராசிக்காராளுக்கு இருக்குன்னு எழுதி இருந்தார்.  ஒருக்கால் அந்த சனிதான் என் நாக்குலே வந்து ஒக்காந்து இருக்கணும்.  அதுனாலெ தான் என்னெ அறியாமெ அந்த வார்த்தெ என் வாய்லெ வந்துடுத்துடீ.  நான் இப்போ என்ன பண்ணணுங்கறே?  அதெத் தெளிவா சொல்லு.  நான் பண்ணறேனா இல்லியா பாரு.”

 

“எனக்கு ஒத்தாசைக்கு புதுசா ஒரு பொண்ணெ வேலைக்கு வெச்சிருக்கேன்.  நம்பிக்கெ வரமுட்டும் நீங்க அவ மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோங்கோ.”

 

“ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா?”

 

“ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா, அவொ வீட்டெப் பெறுக்கித் தொடைக்க ஒவ்வொரு உள்ளெயும் போற போது அவொ பின்னாடி எதோ சாமான் எடுக்கப் போறாப்புளெ போங்கோ.  ஸ்டீல் அலமாரிலே என் சங்கிலி, வளெ எல்லாம் வெச்சிருக்கேன்.  அதோட சாவியெ எத்தெனெ தடவெ சொன்னாலும் அது மேலெயே வெச்சூடறேள் நீங்க.  எப்பொவும் ஒங்க சட்டெலெயே காசெ வெச்சு அப்பிடியே தொறெந்த அலமாரிலே தொங்க விடறேள்.  காலம் கெட்டுக் கெடெக்க்குன்னா.  நம்ம சாமானெ நாம தான்னா ஜாக்கிறதையாப் பாத்துக்கணும்.”

“கரெக்டுடீ.  அப்பிடியே பண்ணறேன் நாளேலேந்து.  இப்பொ நான் ஒக்காரலாமோல்யோ கம்ப்யூடர்லே?”

“என்னமாவது பண்ணுங்கோ.”

நான்கு நாட்களுக்குப் பின்:

“அம்மா அய்யா மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோம்மா.”

“என்னடீ சொல்லறே?”

“நான் எந்த அறைக்குள்ளெ போனாலும் எம் பின்னாடியே வறாரு அய்யா.  அது மட்டும் இல்லேம்மா.  அப்பொப்போ அலமாரிலேந்து ஏதோ எடுக்கறாப்புளெ எம் பின்னாடி வந்து குனியுறாரு.  அப்பொ அவரு கையி எம்மேல படுதோன்னும் தோணுதும்மா.”

“சீச்சீ அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுடீ.  அவரு எதுனா அலமாரிலேந்து எடுக்க வந்திருப்பாரு.  நீ போயி அதெத் தப்பாப் புரிஞ்சிண்டு இருக்கேடீ.”

“அம்மா நீ ரொம்பவே வெள்ளந்தியா இருக்கேம்மா.  இப்பிடி இருந்தா பக்கத்து தெரு பங்கஜமாட்டம் ஒம் புருசனெ ஒரு நாளு கோட்டெ உட்டூடுவேம்மா.  பங்கஜத்தோட புருசன் அவுங்க ஊட்டுக்கு வந்த வேலெக்காரியோட ஓடிப் போயிட்டாரு தெரியுமில்லே?”

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *