பாரதியின் வேத முகம் – 13
-சு.கோதண்டராமன்
கவிவாணர்க்கு நல்லமுது
அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”
அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், “ஆம். உயர்ந்த கவிதையின் நெறி அது. கவியின் இஷ்டதேவதையின் காந்தி அவனுடைய உள்ளத்தில் வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும்.”
இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அவரது மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ள விளக்கமும் பாரதியினுடையதே.
அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.
1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)
2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.
3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)
4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)
5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.
6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.
7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)
8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)
9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.
இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.
நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை – உயிர்
நீளத் தருபவனை – ஒளிர்
நேர்மைப் பெருங் கனலை – நித்தம்
அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்
ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்
ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.
வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி எழும் தழலைக் – கவி
வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்
வண்ணம் தெரிந்தவனை – நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு
தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்
ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.