ஏப்ரல் 27, 2015

இவ்வார வல்லமையாளர்கள்
“குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள்

kuralballoon-Benedict Savio and Selva Saravanah

செம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்குத் “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில்தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் இருவர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரின் புதுமையான குறள் வெப்பவளிக்கூடு திட்டத்தையும், உலகசாதனை செய்வதற்காகத் திருக்குறளைத் தேர்ந்தேடுததற்காகவும் பாராட்டி இவர்களை இவ்வார வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

ஊடக பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி  உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ் ” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை.

angry bird Benedict Savioகடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். இந்த ஆண்டு ஜனவரியிலும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில்  “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்து செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது  நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூட்டில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா.

kuralballoon Selva Saravanahஅடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலாக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தோன்றிய இந்த எண்ணத்தை செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்தபின்னர் சென்ற ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது …
1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.
4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது  கருத்து.

kuralballoon planவரும் ஆண்டு 2016, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது ஒரு சிறப்பான திட்டம் என்பதில் ஐயமில்லை. பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும்  இவர்களது நம்பிக்கை.

திருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியுள்ள இந்த முயற்சிக்குப் பிறர் ஆதரவையும் ஏற்க முன்வந்துள்ளனர் இத்திட்டக் குழுவினர். இந்த சாதனை முயற்சி செய்தியைப் பரப்புவதிலும், பொருளாதார ஆதரவு என்ற வகையில் பங்கேற்க விரும்புபவர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களது திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறலாம் என்ற தகவல்  வல்லமை இதழின் மற்றொரு செய்தியில்   பகிரப்பட்டுள்ளது.

உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் ‘குறள் வெப்பவளிக்கூடு’ பறக்கவிட்டு தமிழிலக்கிய இலக்கிய நூலொன்றை பெருமைப்படுத்தி, அதன் மூலம் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்த விரும்பும்  பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரை இவ்வார வல்லமையாளராகப் வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

kuralballoon FB page

 

 

“திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon)பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துக் காணொளி: https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be
பெனிடிக்ட் சேவியோ: https://www.facebook.com/reachbenny
செல்வா சரவணா: https://www.facebook.com/selva.saravanah

“திருக்குறள் வெப்பவளிக்கூடு” இணையப் பக்கங்கள்:
https://www.facebook.com/kuralballoon
https://www.kuralballoon.com

இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவின் இணையப்பக்கங்கள்:
https://www.facebook.com/tnballoonfestival
http://www.tnibf.com/

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *