இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு

0

 
 

First Image

சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

இமயத் தொட்டிலில் ஆட்டமடா

இயற்கை அன்னையின் காட்டமடா  !

எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா !

ஏராள வீடுகள் மட்ட மாயினடா ! 

எங்கெங்கு வாழினும் இன்னலடா!

ஏழு பிறப்பிலும் தொல்லையடா!

அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா!

மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா!

குடற்தட்டில் கோர  ஆட்டமடா!

சூழ்வெளி மட்டும் பாழாக வில்லை யடா!

ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் களடா!

தோலுக்குள் எலும்பு முறிவு களாடா

கால் பந்து  தையல் போல்

கடற் தட்டு முறிவுகளில்

பாலமிட்டு

காலக் குமரி எல்லை போட்ட

வண்ணப் பீடங்கள்

ஞாலத்தில்

கண்டப் பெயர்ச்சியைக் காட்டுமடா !

++++++++++++++

Nepal Earthquake

நேபாள் பூகம்ப விளைவுகள்

http://www.cnn.com/videos/world/2015/04/25/smerconish-vo-nepal-earthquake-mt-everest-avalanche.cnn

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6EdsBabSZ4g

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-HwPR_4mP4

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sf3EEcov1HU

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S_fqTB4kSLk

+++++++++++++++++++

‘பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவு பட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாகப் பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன ‘.

டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர்ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

Location of Earthquake

Plate tectonics

http://www.the-science-site.com/plate-movements.html

எண்பது ஆண்டுகட்குப் பிறகு நேபாளத்தில் நேர்ந்த பயங்கரப் பூகம்பம்

2015 ஏப்ரல் 25 ஆம் தேதி இமயமலைச் சரிவில் உள்ள நேபாளின் தலை நகரம் காட்மண்டுக்கு 50 மைல் [80 கி.மீ.] தூரத்தில் இருக்கும் பொக்காரா என்னும் இரண்டாம் பெரிய நகரில் M7.9 அளவு வீரியமுள்ள ஓர் அசுரப் பூகம்பம் நிலநடுக்கம் உண்டாக்கியது.  இதுவரை [ஏப்ரல் 25] அறிந்த தகவல்படி இறந்தோர் எண்ணிக்கை : 1500.  தோண்டிக் கண்டுபிடிப்போர் தொடர்ந்து  பணி செய்து வருவதால், எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.  பொக்கராவின் ஜனத்தொகை மட்டும் 28 மில்லியன்.  நிலநடுக்க மையம் [Epicenter] பொக்கராவாயினும், பூகம்ப எதிரொலித் தாக்கம், பூதான், சைனா, வட இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேச நாடுகளில் உணரப் பட்டுள்ளது.  சுமார் 300,000 அன்னிய நாட்டு சுற்றுலா நபர்கள் நேபாளில் உலவி வந்துள்ளதாக மதிப்பீடு செய்யப் படுகிறது. அவர்களில் சிலர் இமயத்தின் சிகரத்தில் ஏற வந்திருக்கும் தீரர்கள். அவர்களில் எத்தனை பேர் மாண்டார் என்னும்  எண்ணிக்கை இனிமேல் தான் தெரிய வரும்.  80 ஆண்டுகளுக்கு முன் 1934 இல் நேர்ந்த  8.1 அளவு நேபாள் பூகம்பத்தில் சுமார் 10600 பேர் இறந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  தற்போது நேர்ந்த பூகம்பத்தில் பல வீடுகள் தரை மட்டமான தோடு 1832 இல் கட்டப் பட்ட 100 அடிப் புராதனக் கோபுரம் சாய்ந்து மண்ணாய்ப் போனது குறிப்பிடத் தக்கது.  இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோதி 4 விமானங்களையும், மருத்துவச் சாதனங்களுடன் 40 பேர் அடங்கிய உதவிக் குழுவையும் அனுப்பி வைத்தார்.

2nd Image

இமயமலை அரங்கின் அடியில் இயங்கும் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Plate Movements] & கோர விளைவுகள்

நேபாளத்தில் ஏன் பூகம்பம் நேர்ந்தது ?  இமயமலை அடித்தளத்தில் இருக்கும் கீழ்நழுவும் இந்திய அடித்தட்டு, மேலேறும் யுரேசிய அடித்தட்டு  [Subducting Indian Plate & Overriding Eurasia Plate] ஆகியவற்றுக்கு இடைபே ஏற்படும் நகர்ச்சி முறிவால் எழும்பிடும் அதிர்ச்சிகளே நிலநடுக்கமாய்த் தளமட்டத்தில் நேர்கின்றன. இந்திய அடித்தட்டு ஆண்டுக்கு 45 மில்லி மீடர் [45 mm] குறுகி வருகிறது.  அப்போது இமாலய சிகரம் உயர்ச்சி அடையும். காட்மண்டுக்கு 250 கி.மீ. [150 மைல்] அருகில் இதுவரை M6 அளவுக்கு மேற்பட்ட 4 பூகம்ப நிகழ்ச்சிகள்  100 ஆண்டுகளில் நேர்ந்துள்ளன.  [1988 (M6.9) .நிகழ்ச்சியில் 1500 பேர் இறந்தவனர்.]  1934 இல் மிகப் பெரிய பூகம்பம் M8.1 அளவில் நேர்ந்து 10,600 பேர் உயிரிழந்தார்.  1905 இல் காங்கரா [M7.5], 2005 இல் பயங்கரக் காஷ்மீர் பூகம்பம் [M7.6] நேர்ந்து இரண்டிலும் மொத்தம் சுமார் 100,000 பேர் மாண்டனர்.  காஷ்மீர் பூகம்பம் பின்னால் இக்கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது.  1950 அஸ்ஸாமில் நேர்ந்த [M8.6] பூகம்பம் பேரளவு உயிரிப்பும், சேதாரமும் தந்துள்ளது.

Road Damage -1

நேபாள் பூகம்ப விளைவுகள்

இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நி அதிர்ச்சிகள்

விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது! பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல்ல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது! சென்ற 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப் படுகிறது.

Nepal Earthquake -2

நேபாள் பூகம்ப விளைவுகள்

காஷ்மீர் ஓர் பெரும் மயானப் புதை பூமி யானது!

மலை அடுக்குப் பாதைகள் மற்றும் வீதிகளில் நிலநடுக்கத்தால் சரிவுகள் ஏற்பட்டு இல்லங்களை இழந்த மக்கள் எங்கும் தப்பியோட முடியாமல் முடங்கிப் போனார்கள். அத்துடன் உதவி செய்வதற்கு வாகனங்கள் எவையும் வரமுடியாமல், மருத்துவ வசதிகள் நெருங்க இயலாது மாந்தர்கள் பசியாலும், குளிராலும் தவியாய்த் தவித்துப் போனார்கள். உண்ண உணவும், அருந்த நீரும் உதவி செய்வோர் நடந்தே கொண்டுவர வேண்டிய தாயிற்று. காயமடைந்த மலைப்புற மக்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிக்கவும், உணவு, போர்வை, கூடாரச் சாதனம் போன்றவை சுமக்கவும் ஹெலிகாப்டர்கள் அநேகம் தேவைப் பட்டன. அவையாவும் அன்னிய நாடுகளிலிருந்து வருவதற்குத் தாமதமாகி மக்களின் பொறுமை எல்லை கடந்தது. பாகிஸ்தான் பிடித்த காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத்தில்தான் எண்ணற்ற இல்லங்கள் தகர்ந்து, பல்லாயிரம் பேர் மாண்டதுடன், தங்கிடக் கூடாரங்கள் இல்லாது மக்கள் அவதியுற்றனர். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 40 மைல் தூரத்தில் முஸாஃபராபாத் உள்ளது. மழை பெய்து எல்லா இடங்களும் ஈரமானதுடன், இராணுவப் படையினர் அமைத்த தற்காலியப் பாதைகளும் சகதியாகிப் போக்குவரத்துகள் தாமதப்பட்டன!

House damages -6

நேபாள் பூகம்ப விளைவுகள்

குளிரில் சிரமப்படும் சிறுவர்கள், வயதானோர், காயம் பட்டோர் மற்றும் குடும்பத்தார்கள் தங்குவதற்கு ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தேவைப்பட்டன! குறைந்தது 200,000 கூடங்கள் உடனே வேண்டி யிருந்தன. ஆனால் ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டவை 500,000 கூடாரங்கள். அமெரிக்க அரசாங்கம் அனுப்பிய கூடாரங்கள்: 1500. ஆனால் அவற்றைத் தூக்கிச் செல்லும் போக்குவரத்துச் சாதனங்கள் 500 எண்ணிக்கைக்கு மேலாக முதல் நாள் கொண்டு போக முடியவில்லை. அன்னிய நாடுகள் அனுப்பிக் கைவசம் கிடைத்தவை மொத்தம்: 30,000 மட்டுமே! என்ன உதவிகள் கிடைத்தாலும் காஷ்மீர்ப் பூகம்பம் வரலாற்றில் ஒரு கொடும் பூகம்பமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகிறார். முதலிரண்டு நாட்கள் இடிந்த வீடுகளைப் அப்புறப்படுத்தி உயிர் உள்ளோரைத் தூக்குவதிலும், மாண்டோரைப் புதைப்பதிலும் காலம் சென்றது. ‘காஷ்மீர் ஓர் பெரும் மயானப் புதை பூமியானது, ‘ என்று அரசாங்க அதிகாரி சிகந்தர் ஹயத் கான் கூறினார்!

House damages -5

நேபாள் பூகம்ப விளைவுகள்

நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது! பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது! நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன! தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள் !

House damages -1

நேபாள் பூகம்ப விளைவுகள்

அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது! இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது! அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் ‘தட்டுக் கீழ்நுழைவு ‘ [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டு களுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னி யாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

House damages -3

நேபாள் பூகம்ப விளைவுகள்

இந்திய உபகண்டத்தின் வடகிழக்குப் பகுதியும், வடமேற்குப் பகுதியும் பல நூற்றாண்டுகளாக பூகம்பத் தாக்குதலுக்குப் பலியாகிப் படு சேதாரங்கள் விளைந்துள்ளன. கி.பி.894 இல் நேர்ந்த M:7.5 [Mercalli Scale] நிலநடுக்கத்தில் சுமார் 1,50,000 மக்கள் மாண்டதாக அறியப்படுகிறது. பிறகு 1668 இல் M:7.6 பூகம்பம். 1819 இல் M:7.5 பூகம்பத்தில் 3200 பேர் மரணம். 1935 இல் குவெட்டாவில் நேர்ந்த M:8.1 அளவு பூகம்பத்தில் 30,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது. 1985 இல் M:7.5 அளவு, 1991 இல் M:6.7, 1993 இல் M:7.0 பூகம்பங்கள் ஆஃப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் மலைத்தொடரில் உண்டாகிப் பலர் மரணம். 1997 இல் பலுஜிஸ்தானில் M:7.3, 2001 ஆண்டு குஜராத்தில் M:7.6, மரணம்:11,500 பேர், 2002 இல் கில்ஜித்-ஆஸ்டோர் பகுதியில் M:6.3 அளவு பூகம்பம், 15,000 பேர் வீடிழந்தனர்.

House damages -7

நேபாள் பூகம்ப விளைவுகள்

காஷ்மீர்ப் பூகம்பப் பிரச்சனைகள் எவ்விதம் கையாளப்பட்டன ?

அக்டோபர் 8 ஆம் தேதிப் பூகம்பத்தில் பாகிஸ்தான் இந்தியக் காஷ்மீர்ப் பகுதிகளில் வீடுகள், சாலைகள் பள்ளிக்கூடங்கள் நொறுங்கித் தரை மட்டமாயின! பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறு பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருடன் புதைபட்டனர். கிரேன் அகப்பைக் கரங்களைக் கொண்டு உடைந்த கட்டிடத் துண்டு, துணுக்குகளைப் புரட்டி உயிரோடு உள்ளவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது, துக்கப் பட வேண்டிய நிகழ்ச்சியே! காங்கிரீட் கட்டிடங்கள் துண்டுகளாய் உடைந்தன! கிராமத்து மண் குடில்கள் யாவும் தவிடு பொடியாயின! இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகப் பறைசாற்றினாலும், மெய்யாக உதவிப் படைகள் உடனே அனுப்பப்பட வில்லை! இருபுறத்திலும் துன்புற்ற மக்களுக்குப் பணிபுரியச் செல்லும் உதவிப் படையினர் தம் வாகனங்களை சிதைந்து போன பாதைகளில் செலுத்த முடியவில்லை! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் உள்ள ஸ்கி [Skee] என்னும் ஊர் இராணுவ முகாமிற்கு அருகில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாட்கள் கழித்தும் நீர், உணவு, மருந்து எதுவும் கிடைக்க வில்லை என்று அவ்வூர் மக்கள் புகார் செய்ததாக அறியப்படுகிறது.

Nepal Earthquake -1

நேபாள் பூகம்ப விளைவுகள்

காயம் அடைந்தோர் காயத்தின் தீவிரத்திற்கு ஒப்ப வரிசைப்படி நிற்க வைக்கப்பட்டு சிகிட்சை செய்ய ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்பட்டனர். 20,000 பேர் வசிக்கும் பாகிஸ்தானில் உள்ள பலகாட் என்னும் நகர் முற்றிலும் தகர்ந்து மண்ணாகி மழையில் புழுதியானது! 24 மைல் தூரத்தில் இருக்கும் இராணுவப் படையினர் பலகாட் நகரை வந்தடைய மூன்று நாட்கள் ஆயின! அந்த நகரில் 200 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் நொறுங்கிப் போய் மாணவர்கள் அனைவரும் அடைபட்டுக் கிடந்தனர்! தாமதமாக வந்த இராணுவப் படையினரைக் கண்டு வெகுண்ட பெற்றோர்கள் கல்லடி கொடுத்து வெகுமதி தந்ததாக அறியப் படுகிறது! உதவிப் படையினர் அளித்த பிஸ்கட், போர்வை களுக்குச் சண்டை போட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டோரில் பலர்! ஆனால் யாருக்கும் காத்திருக்காது சாதாரணப் பணியாட்கள் கோடாரி, கடற்பாறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கால்நடையில் மலைச் சரிவுகளில் ஏறி காயம் பட்டோருக்கு முதல் உதவியும், சிக்கிக் கொண்டவரை வெளியில் தூக்கக் கை கொடுத்தும் பலர் முன்வந்து உதவி செய்தது பாராட்டப் படவேண்டியது.

ajay

நேபாள் பூகம்ப விளைவுகள்

தகவல்:

  1. Time Magazine Article, ‘Nightmare in the Mountains, ‘ By: Tim McGrik (Oct 24, 2005)
  2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
  3. Himalayan Tectonic Setting Earthquake Program.
  4. Earthquake History & Scismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/scismic/pakistan.htm]
  5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta (Oct 8, 2005)
  6.  [http://earthquake.usgs.gov/earthquakes/ February 9, 2015]
  7.  http://en.wikipedia.org/wiki/Earthquake  [February 26, 2015]
  8. http://en.wikipedia.org/wiki/Plate_tectonics  [April 13, 2015]
  9. http://www.reuters.com/article/2015/04/25/us-quake-nepal-collapse-idUSKBN0NG07B20150425  [April 25, 2015]
  10. http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us20002926#general_summary [April 25, 2015]
  11. http://en.wikipedia.org/wiki/2015_Nepal_earthquake  [April 25, 2015]
  12. http://blogs.wsj.com/indiarealtime/2015/04/25/nepal-quake-in-maps-tweets-and-pictures/  [April 25, 2015]
  13. http://news.sky.com/story/1471939/massive-earthquake-in-nepal-kills-over-1000 [April 25, 2015]

+++++++++++++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] (April 25, 2015)

 

Attachments area
Preview YouTube video Plate Tectonics — Evidence of plate movement

Plate Tectonics — Evidence of plate movement

Preview YouTube video Plate Tectonics – A Documentary

Plate Tectonics – A Documentary

Preview YouTube video Earthquake strikes Nepal and Tremors felt in India | ABN News (25 – 04 – 2015)

Earthquake strikes Nepal and Tremors felt in India | ABN News (25 – 04 – 2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *