மீனாட்சி பாலகணேஷ்.

 

காதல், காதல், காதல் இன்றேல்
சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இரு பாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும் தான் எனலாம். ஆகவே தான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனை புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வது தான் இதன் நோக்கம்.

********************************************

 

மண்ணுள் இழிந்த விண்மேகம்

rama

கண்ணோடு கண்ணிணை நோக்கி இதயங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்ட நிலை. அன்புடை நெஞ்சங்கள் காதலில் ஒன்றுபட்டு விடுகின்றன. சீதையின் கண்முன் தோன்றி, கருத்தைக் கவர்ந்து, சிந்தையில் புகுந்து எண்ணத்தில் கலந்து நின்று விட்டான் அண்ணல். அவன் யாரென்று தெரியாத நிலையில் அவள் கலக்கம் கொள்கிறாள். உள்ளத்தைப் பறிகொடுத்தாயிற்று. எண்ணத்தில் நிறைந்தவனுடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

‘யாரவர்? அவரை எங்ஙனம் அறிந்து கொள்வேன்?’ எனப் பதைக்கிறாள்.

காரிருள் இரவு; மிதிலாநகரின் கன்னிமாடத்தில் உறக்கமின்றி விழித்திருக்கிறாள் சீதை. உள்ளத்தைக் கொள்ளை கொண்டு சென்றவனின் நினைவு சுட்டெரிக்கிறது. தாபம் மிகுகின்றது.

கீற்று நிலா வானில் பளீரிடுகின்றது; அதன் மெல்லொளியில் தொலைவில் மலை முகடுகள் தெரிகின்றன. ரசிக்க வேண்டிய இந்த அழகு இவளுக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தின் நடுவிலும் இயற்கையின் அழகைத் தன் இன்னுயிரைக் கவர்ந்தவனுக்குப் பொருத்தி நோக்கி இன்பம் காண்கிறாள்.

“அந்த மேருமலையை எடுத்து நாண் பூட்டியது போன்ற ஒரு பெருத்த வில்லுடன், அதனைப் பற்றிய கையும், தூண்கள் போன்ற தோளும் கொண்டு, அம்புகள் செருகப் பெற்ற அம்பறாத் தூணியும், ஒளி மிகுந்த இந்தக் கீற்று நிலாவைப் போன்ற பூணூல் அணிந்த மார்பும் ஆகிய இவற்றைக் கொண்டவனை மீண்டும் காண முடிந்தால் இழந்த எனது உயிரை நான் பெற்றவளாவேன் அல்லவோ,” என மறுகுகிறாள்.

கம்பன் கவிநயம் ஈண்டு நம் கருத்தைக் கொள்ளை கொள்கிறது. காதலை மட்டும் இங்கு அவன் பாடவில்லை; சீதையின் பிரிவுத் துயரை மட்டுமே இங்கு அவன் கூறவில்லை; இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அண்ணலின் அழகு வடிவை இன்னுமொரு முறை சொற்களில் வடித்துச் சுவைக்கிறான். நாமும் சுவைக்கத் தருகின்றான்! அவன் தோளும் கையும் முப்புரி நூல் அணிந்த பரந்த திருமார்பும் சீதை மட்டுமல்ல, கம்பன் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தனவாம்!

நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
தூண் உலாவு தோளும் வாளியூடு உலாவு தூணியும்
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும்
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே கொலாம்.

இத்தகைய உருவ கம்பீரம் கொண்ட அண்ணல் இவள் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். யார் இவன் எனத் திகைக்கிறாள்; காதலில் கசிந்து உருகுகிறாள்; புலம்புகிறாள்; புரியவில்லை; ஒன்றும் விளங்கவில்லை. காதல் நோய் மிகுகின்றது. அத்துணைத் தாபமும் தன்னை இந்தப் பாடு படுத்திச் சென்றவனின் பால் சினமாக மாறுகின்றது. “என்ன ஆண்மகன் இவன்? கொடியவனான மன்மதன் பஞ்சினை அழிக்கும் தீயைப் போல கூரிய அம்புகளைத் தன் வில்லிலிருந்து என் உயிரைப் பற்றி வதைக்குமாறு எய்கிறான். இதனால் நான் படும் பாடு சொல்லவொணாது. இத்தருணத்தில் ஆண்மை நிறைந்த ஒரு ஆண்மகனுக்கு அழகு என்ன? வருந்தும் பெண்களின் வருத்தத்தை நீக்கி அபயம் அளிப்பதே. ஆனால் இந்தப்பிரான் அவ்வண்ணம் செய்திலனே! இவனது ஆண்மை என்ன தன்மையதோ!” என வெறுப்பும் சலிப்பும் மீதூரப் புலம்புகின்றாள் சீதை.

பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில்
வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே.

கம்பன் ஒருவனே காகுத்தனைப் போற்றவும் சீதையின் சார்பில் அவன் ஆண்மையையே பழிக்கவும் உரிமை பெற்றவன். இராமன் பால் கொண்ட பேரன்பே அவனை இவ்வாறு எழுதப் பணித்தது எனலாம். சீதை அண்ணல் பால் கொண்ட அன்பின் உயர்வையும் அதனாலேயே உரிமை கொண்டு அவனைப் பழிப்பதையும் தனது இந்த ஒரு பாட்டில் கவினுற வடித்துள்ளான்.

எப்படிப் புலம்பியும் என்ன செய்தும் சீதை தனது உள்ளத்தாபமும் உடல் வெம்மையும் தணிந்திலள். பார்த்துக் கொண்டிருக்கும் போதிலேயே கருமேகங்கள் வந்து வானில் சூழ்ந்து கொண்டு விட்டன. ஒரு பெரிய மின்னற்கொடி மேகங்களின் குறுக்காக வெட்டியபடி ஓடித் தரையில் இறங்கி இழிந்து மறைகின்றது! இவை சீதைக்குத் திரும்பவும் அந்தக் கார்மேனி அண்ணலையும் அவன் செயலையும் நினைப்பூட்டுகின்றன.

என்ன வியப்பு! ஆச்சரியமான ஒற்றுமை! இந்த மின்னலையும் மேகத்தையும் போல சில கணங்களிலேயே அண்ணலும் அவள் கண்முன் தோன்றி மறைந்து விட்டனே! கம்பன் தன் கதையின் நாயகனுக்காக எடுத்தாளும் ஒவ்வொரு உவமையும் அவனது செயலுடன் வெகு இயல்பாகப் பொருந்துவது என்ன விந்தை? தன் கருத்தை சீதையின் கருத்தாக ஏற்றிக் கூறுகிறான்:

“அந்த விண்ணிலே தோன்றிய கார்மேகம் மின்னலெனும் முப்புரி நூலுடன் இந்த மண்ணில் இழிந்ததைப் போல அவர் வந்து என்முன் தோன்றி சில கணப் பொழுதுகளில் சென்றும் விட்டாரே!

“யாரவர்? சில கணங்களின் நோக்கிலேயே என் உள்ளம் அவர்பாற் சென்று விட்டதே! என் எண்ணத்தில் குடி கொண்டுள்ளார். இருப்பினும் அவரை யார் என அறிய வொண்ணாது தவிக்கின்றேனே!

“என் கண்களுக்கு உள்ளேயே இருக்கின்றார். அவரை நான் வெளியே விடவே இல்லை! அவ்வாறு இருந்தும் என் கண்களால் அந்தத் திருவுருவைக் காண இயலாது இருக்கின்றேனே! ஏன்?” சீதை தவிக்கிறாள்; பரிதவிக்கிறாள்.

அந்த வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்க அவள் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

இராமனின் வடிவழகை இவ்வாறு சீதை வாயிலாகப் போற்றும் கம்பனின் கவிநயத்தைக் கண்டு மகிழ்கிறோம். அவளுடைய காதல் ஏக்கத்தையும், தாபத்தையும், துயரத்தையும் இதைவிட தத்ரூபமாக யாரால் எடுத்தியம்ப இயலும்? எண்ணத்தில் இருந்தும் யாவரென்று அறிய இயலாத தவிப்பும், கண்ணுள் இருந்தும் காண இயலாத கொடுமையும் மிக மிகப் பெரிதல்லவா?

நமது எண்ணங்களும் சீதையுடன் நின்று சுழல்கின்றன!

********************************************

picture source: dollsofindia.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.