படக்கவிதைப் போட்டி (10)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு என்.எஸ். ஹிரிஷிகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
உன் செல்ல சிணுங்கல்…
நூறாவது முறை
அடித்தும் வராத கவிதையில்
உன் கோபம்…
உன் செல்ல சிணுங்கலை
பிடித்துக் கொண்டு போகிறது
முன் வாசல்கடந்து போகும்
மண் வாசனை…
உனைச் சேரும் வரை
உன் தேடல்களும்
தூரம்
சுமக்கின்றன…
வீடெங்கும் சொட்டும்
உன் ஈரப் பாதங்களில்
நீர்க் கோடுகள்…
வளைந்து நெளிந்து
வால் ஆட்டுவதில்,
அழகு கூட்டுகிறது
உன் உடல்…
இதோ அவிழப் போகும்
மொட்டுக்களாகவே
சிறையிருக்கும்
உன் பாஷை…
சிறு குழந்தையென
கன்னம் ஒட்டிக் கிடக்கிறது
இரவில்
கால் பிரண்டும்… உன் பசி……
சூட்சுமக் குறியீடாய்
கூந்தல் தட்டுவதில்
கீழும் மேலும்- நீ
நடந்த பாதை…
ஒவ்வொன்றும் வேவ்வேறாய்,
வெறி பிடித்த புது வேராய்
அணைத்தலின்
உன் விரல்கள்…
சாத்திரங்கள் உடைத்த
வேள்விகளோடு
பதியும் உன் குழைதல் முத்தம் …
கவிஜி
தாயைப் பிரிந்த உனக்கு
நான் அடைக்கலம் அளிப்பேன்
நன்றியுடன் நான் சொல்லும்
கட்டளைக்கு வாலாட்டி சுற்றிவருவாயா !
குழந்தைப் போல் உன்னை வளர்த்திடுவேன்,
கண்ணும், கருத்துமாய் உன்னைக் காத்திடுவேன்,
நன்றி என்ற வார்த்தைக்கு, சிறந்தவனாய் விளங்குபவன்,
என்றும் என் உற்ற தோழனாய் நினைப்பவள் !
உன்னை முத்தமிட்டால் கிடைத்து விடுகிறது
மாற்றாக வாலாட்டல்,சிறு துள்ளல், செல்ல உரசல்,என பாசப்பரிமாற்றம்….
கிடைப்பதில்லை இங்கு பலசமயம் பரிவு கூட…
உன்னிடம் தாழ்வதினால்
தவறில்லை, எனதன்பைப் பொழிய…
அன்பு கொள்ள எது தடை என் கைகளில் உண்னை ஏந்த என்கண்கள் குளமாகிறது நான் முதலில் ஏந்தியது என்குழந்தையை அவனோஇன்று வெளிநாட்டில் நானோஇங்கு உன்அரவணைப்பில்
எனக்கு நீ ! உனக்கு நான் !
தனித்துப் போய்த் தவிக்கும் இந்த
வனிதைக்கு நீ தான் !
அனாதை போல் குலைக்கும்
உனக்கு நான் !
பதி விரட்டி விட்ட என்னை
விதி நசுக்கும் தனிமை !
பரிவுடன் என்னை நோக்க,
உன்னைப் போல்
உரிமையுடன் நெருங்க,
வாலாட்டி
என்னை உரசி நிற்க,
தாலாட்டு செய்வேன் உனக்கு !
அடித்தாலும், உன்னை
உதைத்தாலும்
என்னை அண்டி வருவாய்.
அதோடு நான்
நினைத்த போதும்,
நினைக்காத போதும்,
நீ ஓடி வருவாய் !
காலையில் நான் விழிப்பதுன்
பால் முகத்தில் !
கட்டி அணைத்துக் கொள்வது
உன் வழுப்பான
உடலை !
மெத்தையில் என்னோடு
உறங்குவது நீ.
உண்பது நீ !
முத்த மிடுவது நான்
உன் நெற்றியில் தான் !
நீயே என் துணை !
நீயே என்னுயிர் !
நீயே என் மூச்சு !
சி. ஜெயபாரதன்
தனக்கான தீர்வுகளைத்
தவறவிட்டிருந்தலில்… நிகழ்வுகள்
சேமிக்கத்
தெரியாததாகியிருந்தது… இவன்
பிறந்த கணங்களைப்
போலிருந்த இறந்தகாலம்…..
தனக்கான தீர்வுகளைத்
தேடித் திரிந்ததில்…நிகழ்வுகளை
எடுத்துச் செல்லத்
தவறியிருந்தது…. இவளின்
படர் கற்றைகளைப்
போலிருந்த…. எதிர்காலம்…..
நிகழ்வது…அழகானது….
இப்படியே பிள்ளையாகிவிடு….
என்னும்..இவளின்
முத்தத்தைப் போல……
எதற்காகத் தவறவிட்டாள்
என்னைப் பெற்றவள்… என்னும்
இவனின்… தேடல்களைப்
போல…
நிழந்துகொண்டிருப்பது….
அழகாகிறது….!!
அன்பான அறிமுகம்
என் முகம் காணும் முன்பே
உன் அன்னையின்
முகம் அறிமுகமாம்
எனதன்னை சொல்வாள்
கதை கதையாய் …!
நானும் கதை சொல்வேன்
கேளடி கண்மணி..!
நான் விளையாடிக்
களைத்துப் போய்
உறங்கும் வேளையிலே
மெல்ல எந்தன்
பாத விரல்கள் தீண்டி
நன்றி சொல்லும்
அவள் நேசம்..!
ஒற்றை மகளாய் பிறந்த
எனக்கும் உடன்பிறப்பின்
பந்த பாசத்தை
கண் வழியே பேசி
என் உயிருக்கு உணர்த்திய
அவளின் பாசம் ..!
நடக்க விடாது என்
காலைச் சுற்றிச் சுற்றி
உரசிக் கொண்டு நடந்தவள்
காலங்கள் சுழன்று
ஓடிய வேளை
அவளும் வளர்ந்து
காதல் துணை கண்டு
குஷியில் குரைத்தவள்..!
கல்லூரி வாசல்
நான் மிதித்த பிராயம்
பிரிய மனமின்றி
எனது துப்பட்டாவைத்
துணையாய் இணைத்துக்
கொண்டு என் வருகைக்காக
வாசற்படியில் பழியாய் நின்று
ஊரே கேட்க ஊளையிட்டவள்..!
எனை கண்டதும்
துள்ளலோடு குதித்து
கண்கள் பார்த்துக் கெஞ்சி
கொஞ்சி கோபம் தணித்து
நான் நடக்கும் பாதையெங்கும்
முகர்ந்து முகர்ந்து முத்தமிட்டு
முகம் நிமிர்ந்து எகிறிக்
குதித்து குதூகலித்தவள் ..!
நினைவில்லை எனக்கு
அவளில்லாமல்
ஒரு பொழுதும்
விடிந்ததாய் இன்றுவரை..!
அன்பைச் சொல்ல
ஆயிரம் மொழி எதற்கு?
வாய் பேசாத
வார்த்தையெல்லாம்
அவள் வால் பேசும்போது..!
இதோ..இன்று கூட
அவள் கொடுத்த
அன்புப் பரிசு நீ..!
குழலினிதாய்
உந்தன் குரல்
அவளைத் தேட
பாய்ந்தெடுத்த என்
கரங்களுள் நீ…!
ஊற்றெடுத்த தாய்ப்பாசம்
எனக்குள்ளும் பொங்கிவர
பெண்மையில் பாசத்திற்கு
பேதமில்லையே..!
அமைதியாய் அடங்கிய
உன் மனதுள் கிடைத்ததோ
அவளின் பாதுகாப்பு ..!
உன் முகம் காணும்
முன்பே உனதன்னை
முகம் அறிமுகம் எனக்கு..!
இப்பப் புரியுதா
என் அன்பு உனக்கு?
ஜெயஸ்ரீ ஷங்கர்
கருப்பும் வெள்ளையுமாய்
பிறந்த நீ
எந்தன் வாழ்வில்
சேர்ந்து
பல வண்ணங்கள்
சேர்த்தாய்..!
உன்னோடு மனம்
இணைத்த எனக்கு
நீயே எண்ணங்களின்
பின்புலமாய்
நிறைந்து வளர்கிறாய் ..!
நானெங்கு சென்றாலும்
என்னோடு சுழலும்
உந்தன் செல்ல நினைவும்
நாளை என் செய்வேன்…?
உனக்கு என் சொல்வேன்..?
நம் ஸ்பரிசங்கள்
நமக்குள் உணர்த்திய
பிணைப்புகள்..!
நீயின்றி நான் வாழ
எனக்குள் நிறைய
அவதாரங்கள்..!
நீயோ பாவம்..
நான்கு சுவர்கள்
உனைச் சிறை வைக்க
என் வாசனை உன்னை
அலைக்கழிக்கும்..!
நாளை முதல்
ஓடிவரும் உன்னை
ஆதரவாய் ஏந்தும்
என் கரங்கள் இல்லாது
தனிமையில் குரல்
கொடுக்கும் உன்னை
யார் எடுப்பார்கள்..?
நினைவுகள்
நெஞ்சம் சுமக்க
கண்கள் பாசம்
சுரந்து நிறைக்க
கடல் தாண்டிக்
கொண்டிருப்பேன்
இந்நேரம்…!
உன்னைப் போல்
நானும் பிறந்திருந்தால்
மேற்படிப்பு மில்லை
அமெரிக்க பயண முமில்லை
உன் தொடர்
நம்பிக்கையில் நீயும்…
நிஜம் உணர்த்தும்
சோகத்தில் நானுமாய்..!
சின்னவளே…ஓர்
முத்தமிட்டு உன்னோடு
முகம் புதைக்கிறேன்
என்னை மன்னித்துவிடு..!
தெருவோரத்துக்
குப்பைத் தொட்டியில்
தொட்டில் குழந்தையாகி
நடுங்கிக் கொண்டிருந்தது
வால் உயர்த்தி…!
வாலில் ரிப்பன் கட்டி
நெற்றியில் பொட்டிட்டு
மை தடவி அழகனுக்கு
‘சுப்பிரமணி’ பெயர் சூட்டி
அழைத்துச் சிரிக்க
என் முன்னே
காமெரா கண்களில்லை…!
வீதியோரத்து
மரத்தடி நிழலில்
விதியை நொந்தவள்
அமர்ந்தேன்…!
“அனாதை நாயே”
என அடித்துத் துரத்திய
முகங்கள் கண்முன்னே…!
நொந்த மனம் துவண்டு
துடித்து எழுந்தது..!
கதவுகள்
மூடிக் கொண்டால்
ஜன்னல்கள்
திறக்குமென்பார்..!
இது யாவர்க்கும்
ஒன்றென
இறைவன் ஈந்த
துணையாய்
நடுங்கிய அவனைக்
கரங்களில் அணைத்துக்
கொண்டேன்…!
கொடுப்பதன் இன்பம்
பெறுவதன் சுகம்
மௌனமாய்
நிமிடத்தில் பரிமாற ..!
நெஞ்சை அழுத்திய
பாரம் முழுதும்
இப்போது அந்தக்
குப்பைத் தொட்டியை
நிறைத்தது…!
அன்பு தரும்
பாதுகாப்பில்
உள்ளம் நிறைந்தது..!
உறவு
உன்னோடும்
மலைகளோடும்
பூக்களோடும்
நதிகளோடும்
மனம் கொள்கிற
உறவை
சக மனிதர்களோடு
கொள்ள முடிவதில்லை
நன்றியுள்ள நீ மேல்
மனிதர்களைவிட!
நானிருக்க பயமேன் ……??
““““““““““““““““““““
தன்னந் தனியாய்த் தவித்திட்டக் குட்டியுனை
அன்னையாய் நானும் அரவணைப்பேன் – அன்புடன்
கொஞ்சி மகிழ்வேன் குழந்தையாய்க் காத்திடுவேன்
அஞ்சாதே என்றும் இனி .
செல்லமே மாதம் ஒன்று கடப்பதற்குள் தஞ்சமானாய் என்னிடத்தில் தாயை பிரிந்த ஏக்கத்தில் இரவு முழுதும் உறங்காது அழுதிட்ட நாட்கள் எத்தனை எத்தனை உறவை இழந்த மனிதன் ஒரு நாள் அழுது மறுநாள் மறக்க நீயோ மாதம் முழுதும் அழுதாய் நீயும் தாய் இல்லா பிள்ளையாக அனாதையாக தவித்தாய்
உன்னை பாசம் கொண்டு நான் அணைக்க உன் பட்டு கன்னத்தை என்மீது உரசி நன்றி சொன்ன நாட்கள் எத்தனை எத்தனை
அரை நாள் என் பிரிவில் தேடி கலைப்பாய் என் முகம் கண்டு உன் சந்தோஷ கூக்குரலும் துள்ளலும் விவரிக்க இயலா பாசக்காட்சி
உடைதனை இழுந்து செல்லமாய் கடித்து உடல்தனில் உரசி சுற்றி வந்து அன்பை பொழிவாய்
கவலை மறந்து களிப்புடன் இருந்தேன் உன்னிடம் எங்கு செனறாலும் உன் நினைவுலே நான் கழித்த நாட்கள் எத்தனை எத்தனை
பாசத்தின் தவிப்பூறும் பிஞ்சுநெஞ்சமது
நேசத்தின் தகிப்பில் நெக்குரும் நேரமிது!
பள்ளிவிட்டு வந்தவுடன் சொல்ல
பலப்பல கதைகள் உண்டு என்னிடம்..
பாந்தமாய் பக்கம் அமர்ந்து
கேட்கவொரு செவியில்லை இவ்விடம்!
கதவின் பூட்டுக்கான சாவிமட்டுமே என்னிடம்
இதயப்பூட்டுக்கான சாவிகளின் இருப்பு எவ்விடம்?
முதியவர் இல்லத்தில் கூட்டாய் வாழ்கிறது
என் மூத்த தலைமுறை
முந்தைய வாழ்வை தமக்குள் பகிர்ந்தபடி!
தனித்திருக்கிறது என் தலைமுறை
தாழ்வாரத்தில் ஒற்றையாய் அமர்ந்தபடி!
உட்கார நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்
எந்தையும் தாயும்
என் எதிர்காலத்தை இலக்குவைத்து!
வெதும்பிக்கழியும் என் நிகழ்காலம் குறித்த
பிரக்ஞையற்றவர்களுக்கு
ஒருபோதும் புரியப்போவதில்லை என் பிரியம்!
தெருவில் கிடப்பதோடு என்ன கொஞ்சலென்று
விருட்டென்று என் கைப்பிடித்து
வீட்டுக்குள் இழுத்துப்போக
வெகுநேரம் ஆகப்போவதில்லை.
அதுவரையிலும்…
கொஞ்சிக்களித்து கூடியிருப்போம்.. வா!
தாய் நீதான்
தாய் தவிக்க விட்ட
நாய்க் குட்டி நான் !
கூடப் பிறந்த குட்டிகள்
தேடப் போனேன்.
பேசத் தெரியா தெனக்கு.
ஏசத் தெரியா தெனக்கு.
தாய்ப் பால் குடியேன்
அப்பால்
எப்படி இருக்கும் ?
தாய் அணைப்பு
அறியேன்,
எப்படி இருக்கும் தாய்க் கனல் ?
தாய் முத்தம்
அறியேன்.
நீ எனக்கு
வாய் முத்தம் தா !
வாரி அணைத்துக் கொள்
எருமைப் பால் கொடு
எச்சிலைச் சோறு
போதும்
என் தாயை நான்
உன்னிடம் காண்கிறேன்.
சி. ஜெயபாரதன்
காதல் செய்தால்
தாயும் எதிரி.
தந்தையும் எதிரி.
சற்று திரும்பிப்பார்த்து
ஒரு சடைநாய்க் குட்டியை
ஹாய் சொன்னால்
அவன் அதை சரியாக பார்க்காமல்
யாருக்கோ நாம்
ரகசியமாய் ஒரு ரோஜாவை நீட்டுகிறேன்
என்று
அந்த காதலனே எதிரி.
வகுப்பில்
லெக்சர் கொடுத்துக்கொண்டிருக்கும் போது
அந்த சப்ஜெக்டில்
ஒரு நுட்பம் கவனித்து
அதை என்ன என்று துருவும் வேட்கையில்
சார் என்று கேட்டால்
நூல் பிடித்த அவர் உரை
அறுந்து விடுமோ
என்ற படபடப்பில்
அவர் அப்போது எதிரி.
நானும் ஏதோ சிந்தனையில்
நடக்க
எதிரே வருபவரும்
ஏதோ நினைத்துக்கொண்டு வர
அப்போது
நிகழ்ந்த “டமார்”ல்
அவர் உடனே முந்திக்கொண்டு
“கண்ணு என்ன பொடதியிலா இருக்கு”
என்று முதல் தருணத்தை
தான் பிடித்துக்கொண்டு விட்டதாக
மேலே மேலே
அவர் பேசிக்கொண்டு போக
மனிதருக்கு மனிதர்
முன்பின் தெரியாமல் இருக்கும்போதே
இப்போது
மனிதருக்கு மனிதரே எதிரி.
இப்படி
என்னைச்சுற்றி எப்போதும்
லொள் லொள் கள்
செவியை கிழிக்கும் போது
உன் விழியின்
குறு குறுப்பும்
செவி மடல்களின்
உடுக்கை அடிப்புகளில்
உதிர்ந்து விழும்
அந்த இனிய ஓசைத்துடிப்புகளும்
மட்டுமே போதும்.
இந்த உலகத்தை
விரித்து மடக்கி
நீ உட்காரத்தருகிறேன் வா!
நாம் பேசிக்கொண்டிருப்போம்.
==============================================ருத்ரா
அடடா
அன்பின்
வலியதும்
அவனியில்
உண்டோ?
இதழோடு
அணைக்கையில்
இதயம்
இணைகிறதே!
என்ன யோசனை?
மனிதரில் தெய்வமா
என்று யோசிக்கிறாயா?
விலங்கினில்
மனிதரை மிஞ்சும்
மாநிறைக் குணங்கள்
உனக்கிருக்க;
நான் மட்டும்
தெய்வமாகக்
கூடாதா?
உலகின்
இன்பத்தை
உன் அணைப்பில்
காணும் ஒவ்வொரு
கணமும் நான்
புத்துயிர் பெறுகிறேன்!
இந்த உலகம்
என்றாவது ஒருநாள்
நாம் அனைவரும்
ஒன்றென்று
உன்னையும்
என்னையும்
ஒருசேர
மதித்தால்
மண்ணுலகம் ஒரு
பொன்னுலகம்
ஆகும்!
வரும்
ஒருநாள்
அந்தத்
திருநாள்!!
உயிர்கள்
ஒன்றுதானே
வாழும்
உயிர்க்கு!
மரணம்
உண்டுதானே
வாழ்வில்
எவர்க்கும்!
உன் பார்வை
ஓராயிரம்
எண்ணங்களை
விதைக்கின்றன
என்னுள்!
உன்னைக்
கொஞ்சும்
வேளையில்
இறைவனிடம்
கெஞ்சுகிறேன்;
வாழும் உயிர்கள்
வரவில் அன்பாக;
உறவில் அன்பாக;
வாழ்வில் அன்பாக;
வீழ்விலும் அன்பாக!
மனிதன் மாறட்டும்;
மனங்கள் விரியட்டும்;
புறங்கள் தெளியட்டும்;
கரங்கள் நீளட்டும்!
அன்பே மதம்
அன்பே வேதம்
அன்பே நிதம்
அன்பே நிலை யென!!
மனமும் நாயும் சிலேடை – கலிவெண்பா
அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்
கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி
பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்
கடிக்கும் குலைக்கும் அதட்டி– கடிந்தால்
மனமது சோரும் நினைவை உரைக்கும்
மனதில் நினைத்த விதமாய் – தினமும்
உலவும் பயிற்சி அளித்தால் உதவும்
பலவும் சரியாய் நடத்தும் – விலகும்
மெதுவாய்ப் பயந்து பணித்தால் துணிந்து
எதுவாய் இருந்தாலும் செய்யும் – அதுவாய்
திரும்பும் நிலையொன்றில் நில்லாது ஓடும்
விரும்பும் இடத்தே கிடக்கும் – கருத்தைச்
சிதைக்கும் மிரட்டினால் ஓய்ந்து நடுங்கும்
பதைத்தால் விரட்டும் நிறுத்தி – அதையே
கவனித்தால் (அ)டங்கும் ஒழுங்கில் மிளிரும்
தவத்தால் சிறக்கும் அடக்க – தவிக்கும்
பயத்தைக் கொடுக்கும் பழகிய பின்தை
ரியத்தைக் கொடுக்கும் ஒருவர் – வயமானால்
அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்
தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே
நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்
என்றும் மனமது நாய்
கூண்டில் அடைபட்ட
சிட்டுக் குருவிகளின்
கீச்சுக் கீச்சு சப்தங்களென
மனதுக்குள் பல்வேறு
எண்ணங்களின் போராட்டங்கள் !
மனக் கூண்டை திறந்து
எண்ணங்களை பறக்க விட்டுவிட்டு
இலேசான மனத்துடன்
புன்னகை சுமந்து திரிந்திட
ஆசைதான் ! – ஆனால்
அடைபட்ட எண்ணங்கள்
ஏனோ விடுபட மறுக்கின்றனவே !
அலைமோதி துடித்து
நெஞ்சை பிழிந்தெடுக்கும்
எண்ணங்களுக்கு வடிகால்
ஏதுமில்லையே !
எண்ணங்களை கொட்டித் தீர்க்க
அருகில் யாருமில்லை !
அருகிருப்பவர்களுக்கு ஏனோ
கேட்க மனமுமில்லை !
ஒரு சிறு வருடல் தான்
நான் உனக்கு கொடுத்தது –
வாலாட்டியபடியே என் கைகளில்
தஞ்சமானாய் ! – உந்தன்
அன்பை மழையாய் பொழிந்தாய் !
எனையே உலகமென கொண்டாடினாய் !
நீயே நல்லுறவென
நிதர்சனமாய் நம்புகிறேன் !
தன்னலமிலா உந்தன் அன்பே
உயர்வென்று உரக்க சொல்வேன் !
அடைக்கலம்
தாய்ப்பால் சூப்பாது தள்ளிவிட்ட சாலைதவழ்
நாய்க்குட்டிக் கில்லையா நட்புறவு ? – வாய்முத்தம்
தந்திடும் மங்கை தருவாள் அடைக்கலம்;
சிந்தை தெளிந்த மனம்.
சி. ஜெயபாரதன்
தத்துப் பிள்ளை
வெறிச்சோடிச்
சூனிய மான இல்லத்தை
உயிர்ப்பித்து
சூட்டிகையாய், சுடர் ஒளியாய்,
சுறுசுறுப்பாய் நீ
வலம் வந்து,
வட்ட மிட்டு நோக்குவதே
ஒரு தனி அழகு !
தவழ்ந்த என்
தாலாட்டுப் பிள்ளைகள்
தற்போது
கலைக் கல்லூரியில்
கற்றுவர
என் தனிமை போக்கி
இனிமையுடன் , இன்முகத்துடன்
தவழும் பிள்ளையாய்
உன்னை நான்
தத்தெடுத்தேன் !
முத்தம் ஒன்று தருகிறேன்
அத்தாட்சி யாக
மடிமேல்
தாவிய உனக்கு !
சி. ஜெயபாரதன்
இறுதிவரை நானிருப்பேன்!
********************************
அன்னையைப் பிரிந்து
பால் மனம் மறந்து
என்னிலே தஞ்சமென
வந்த என் செல்லமே……
அன்னையாய் நானுன்னை
அன்பாலே வருடிச்செல்ல
இன்பங்கள் எத்தனை
சொல்லத்தான் தெரியவில்லை….
உன் சின்னக் குறும்பிலும்
செல்லச் சண்டையிலும்
என்னை நான் மறக்கின்றேன்
எங்கோ பறந்து செல்கின்றேன்…….
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
என் சிந்தையில் பறப்பதாய்
எனக்குள்ளே ஆனந்தம்
பாசத்தில் பேரின்பம்…..
நீ பசியாலே துடிக்கையில்
பதறித்தான் போகின்றேன்
தினம் கண் விழிக்கையில்
வழியெங்கும் தேடுகிறேன்….
சின்னவள் உன்னிடம்
நற்பண்பை உணர்கிறேன்
நன்றியின் அர்த்தந்தனை
நன்றே கற்றுக் கொள்கிறேன்….
நீ காட்டும் அன்பிலே
திழைத்துத்தான் போகிறேன்
நித்தம் என் உறவாய்
உன்னை நான் பார்க்கிறேன்….
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னுடன் நீ கலந்திடுவாய்
இணைபிரியா அன்போடு
என்னோடு பயணம் தொடர்வாய்…
அதுவரை,
உயிரொன்று என்னுடலில்
நடமாட இருந்துவிட்டால்
விழகாது உன்னோடு
இறுதிவரை நானிருப்பேன்..!!!
துஷ்யந்தி.
படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்
அன்புக்கும் அணைப்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்
ஆதலால் அணைக்கின்றார் ஆசையுடன் குட்டிதனை !
படக்கவிதைப்போட்டி. எம். ஜெயராமசர்மா …. மெல்பேண்
மனமெல்லாம் நீதானே !
———————————–
வாலாட்டி வாலாட்டி வலம்வந்து நிற்பாயே
வாசல்வந்து நின்றுவெனை வரவேற்றும் நிற்பாயே
நோயென்று நான்படுத்தால் நூறுதரம் நக்கிடுவாய்
வாய்பேசா விட்டிடினும் மனமெல்லாம் நீதானே !
படக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்
சரியான துணையாக !
———————————-
உனையணைக்கும் போதெல்லாம்
உயிரோட்டம் பெற்றிடுவேன்
உன்முகத்தைப் பார்த்துவிடின்
உலகத்தை மறந்திடுவேன்
தனிமைதனை போக்கிவிடும்
சரியான துணையாக
சமயத்தில் இருப்பதனால்
சந்தோஷம் அடைகின்றேன் !
உன் உள்ளங்கை ஸ்பரிசம்
தாயின் கருப்பை பாதுகாப்பு
உனது இதழ்களின் தொடுதல்
தாயின் தாலாட்டு!
உனது மூடிய விழிகளில்
அன்னையைக் கண்டேன்
எனது மிரண்ட விழிகளில்
குப்பைத் தொட்டியில் அன்னையின் வயிற்றுப் பசி
குப்பைக்கூள உணவுத் தேடுதல் வேட்டை!
பிறப்பாலே நன்றி அவதாரமாக நான்!
எங்கோ ஒருவன் என் பிறப்பு
வேண்டாம் என்ற உச்சரிப்புடன்
இறைவனிடம் மண்டியிட
காரணம் புரியாத சோகத்தில் நான்!
தாயாய் தாங்கி நிற்க
தவிப்பாய் காத்திருக்க
மனதிற்குள் என்ன போராட்டம்!
வாய் மூடி
கண்துஞ்சி உதட்டசைவில்
வலியாய் வடிக்கின்றாய்?
புவிதனில் யாருக்கும் பேச
உரிமை உள்ளதடி !
தூரத்துப் பனிப் பச்சைஇலையசைவை
நான் உற்று நோகக உன் மன அசைவை
கவியினிலே கேட்கின்றேன்!
நல்ல விலை கொண்டு என்னை விற்பார்
யாரும் என்னிடம் யோசனை கேட்பதில்லை!
அச்சத்தைத் துரத்திவிடு! ஜெயித்துவிடு!
வாழ்வை ஜெயித்துவிடு!
விடுமுறை நாளில்
உணர்ச்சி கலந்த
கோலாகல வெள்ளைப்பனி
மூடிய உல்லாச மகிழ்ச்சி.
உனது மூடிய கேசத்தின்
இடையே மனதின் வெளிச்சத்தை
உதடுகளில் அளித்தனையோ!
நன்றிதனை நானிலத்தில்
நான் காட்ட என் செய்வேன்!
வாலைத் தவிர!
உணர்ச்சிகளின் ஒப்படைப்பை
பகிர்ந்துண்ணும் பண்புதனை
வளர்த்திட்டால் நாளும் கோலாகலம்தான்!
அன்பு சுரபி
வெளி வேசம் போடாத
வெகுளிப் பிறவி நீ,
விளிக்காமல் விலகினும் ஓடி வந்து
விழி நோக்கும் உறவு நீ,
கொடுக்காமல் போனாலும் மனம்
கோணா குட்டி நீ,
எடுக்காமல் நகர்ந்தாலும்
ஏறித் தாவும் ஜந்து நீ,
படுத்தாலும் பக்கத்தில் வந்து
முடக்கிக் கொள்வதும் நீ,
அன்பு வெள்ளம் கங்கையாய்
குருதியில் ஓடும்
அமுத சுரபி நீ.
சி. ஜெயபாரதன்
நற்றுணை…
நன்றி யுள்ளது நாயென்றுதான்
நல்ல துணையும் அதுவென்றுதான்,
நன்றெனக் கொண்ட நட்பென்றுதான்
நாளும் உதவிடும் கரமென்றுதான்,
என்றும் ஏய்த்திடா உறவென்றுதான்
எதிரியை ஓட்டிடும் பகையென்றுதான்,
ஒன்றிய நட்பில் உயர்வென்றுதான்
உன்னைக் கொண்டேன் நாய்க்குட்டியே…!
-செண்பக ஜெகதீசன்…
ஐம்புலத் துடிப்பு
நாய்க்குட்டி
நங்கை தேடி வந்தால்,
மங்கை மனம் துள்ளும்;
தொட்டுவிடத் துடிக்கும்
உள்ளம்.
தூக்கிக் கொள்ள விரையும்
கரங்கள்.
கட்டி அணைக்க மார்பு
பொங்கி எழும்.
முத்தமிடக் கெஞ்சும்
வாயிதழ்கள்.
வேல்விழிகள் கவ்விடும்
பால்விழிகளை.
கையில் சிக்கி விட்டால்
விட்டு விடுவிக்க
மட்டும் விடுவ தில்லை
பட்டுடலை
தொட்டணைத்த பிறகு.
சி. ஜெயபாரதன்
யாரடா
சொன்னது
அழகுக்கு அடையாளம்
பாரடா
மின்னுது
பேரழகு ஓவியம்.
கூறடா
உன்னத
அன்புக்கு பாத்தியம்
மாறடா
கண்டிதை
பேரண்பு சாத்தியம்.
பாருடா
கருணைக்கு
தாயான இளையவளை
பாடுடா
துயர் நீக்க
தோள்கொடுக்கும் மூத்தவளை
வாழுடா
உயிரனைத்தும்
நேசித்து மண்ணிலே
உறுதியடா
உன்னையே
நேசிப்பாய் உன்னிலே.
உடுத்திய இந்த உடையோடு இங்கே
படுத்திட ஒர்பாயும் இன்றி –நடுத்தெரு
நிற்கும் நிலையில் நிலநடுக்க நாட்டிலென்போல்
உற்றவ ரிலையோ உனக்கு.
நேற்று வரையில் நிலையான டாம்பீக
காற்றடித்த வாழ்க்கை களைந்தின்று –ஊற்றெடுக்கும்
கண்ணீர் நதிமேல் கவலை படகோட்ட
உண்ண உணவற்று நாம்.
கோடி குவித்து குவலயம் ஆண்டவரும்
மாடி மனையிடிந்து மண்ணுக்குள் –மூடி
முடங்கி ஒருநொடியில் மூச்சடக்க வைத்த
இடத்தில் துணைநீ எனக்கு.
எதுவுமில்லா வாழ்வில் எனக்கோர் துணையாய்
புதுஉறவாய் வந்து கிடைத்தாய். –இதுபோதும்
கைத்தடி கொண்ட குருடனினா தாரமாய்
மெய்ப்பொருள் காண்பேன் இனி.
*மெய்யன் நடராஜ் =இலங்கை
என்னை நீ அணைத்த மொழி அன்பு
உருவமற்ற உலக மொழி அன்பு
நெருடல் அற்ற நேரிய மொழி அன்பு
பருவம் கொண்ட காதல் மொழி அன்பு
காருண்யத்தின் உறுதி மொழி அன்பு
ஈர் விழிகள் மெச்சும் மொழி அன்பு
ஈர விழி தொலைத்ததுவும் அன்பு
சேர்த்து விடும் தூது மொழி அன்பு
தாய்மை சொல்லும் சிறப்பு மொழி அன்பு
தந்தை தரும் உறுதி மொழி அன்பு
கல்லையும் உருக்கும் மொழி அன்பு
சொல்லிலெல்லாம் நிறையும் மொழி அன்பு
சுற்றம் பேணும் மொழி அன்பு
குற்றம் நீக்கும் மொழி அன்பு
உன்னில் என்னைக் காணும் மொழி அன்பு
என்னை நீ அணைத்த மொழி அன்பு
அகிலம் நிறைக்கும் மொழி அன்பு
திகிலகற்றும் தீர்க்க மொழி அன்பு
அன்பில் திளைத்ததனால் ….
இன்பமே சூழ்ந்திருக்க …
இவ்வுலகம் மறந்திருந்தோம் !
புனிதா கணேசன்
01.05.2015
வாரி அணைத்துமெல வாஞ்சையுடன் முத்தமிட்டு
நாரியவள் காதலித்தாள் நாளெல்லாம் – யாரவனோ?
‘கோன்?’என்றே தாள்திறந்தாள், கொண்டகையில் நாய்குரைக்க!
நானென்(று) அவள்கரத்து நாய்?