இந்த வார வல்லமையாளர்!

ஜனவரி 18, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. இ. மயூரநாதன் அவர்கள்

e mayuranathan

 

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” (http://www.tamilliterarygarden.com/) என்ற தமிழை வளர்க்கும் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவது இயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறவிருக்கும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார்.

e mayuranathan1

இந்த வாரம் (ஜனவரி 15, 2016) தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு  தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத்  துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன்.

e mayuranathan2தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிபீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம்,  த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிபீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த வல்லமையாளரைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

__________________________________________________________
வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: rmayooranathan@gmail.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/mayooranathan.ratnavelupillai?ref=br_rs
விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/wiki/பயனர்:Mayooranathan

தகவல் தந்துதவிய இணையதளங்கள்:
http://www.tamilliterarygarden.com/
http://annakannan-interviews.blogspot.in/2009/12/blog-post_4780.html
http://www.thehindu.com/news/cities/chennai/tamil-wikipedia-brings-together-generations/article5183023.ece
http://www.muthukamalam.com/interview/p7.html
https://ta.wikipedia.org/s/4ka9

__________________________________________________________

Share

About the Author

தேமொழி

has written 282 stories on this site.

themozhi@yahoo.com

4 Comments on “இந்த வார வல்லமையாளர்!”

 • செ. இரா. செல்வக்குமார்
  செ.இரா.செல்வக்குமார் wrote on 23 January, 2016, 3:41

  திரு. மயூரநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பெருந்தாக்கம் ஏற்படுத்திய வல்லமையாளர் என்பது விக்கிப்பீடியர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அண்மையில் வெளியான இலக்கியத்தோட்ட விருது அறிவிப்பும், இப்பொழுது வல்லமையாளர் விருது அறிவிப்பும் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது.

  திரு. மயூரநாதன் போல் தன்னலமில்லாமல் அரும்பணியாற்றுப்வர்கள் அதிகம் இல்லை என்பது என் கருத்து. நம் தமிழ்மக்கள் இவருடைய பணியால் உள்ளூக்கம் பெற்று மேலும் ஆக்கங்கள் செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் உள்ளூக்கம் பெற்று நிலையான பயன்பெருகும் பணிகளில் ஆக்கங்கள் செய்ய முன்வரவேண்டும்.  வாழ்க!

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 23 January, 2016, 17:35

  நாள்தோறும் ஒரு கட்டுரையைத் தொடங்கிவைத்து, இதே பணியை 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, மகத்தான செயலே. அர்ப்பணிப்பும் தொண்டுள்ளமும் கொண்ட மயூரநாதன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியா, மேன்மேலும் வளர்க.

 • இன்னம்பூரான்
  Innamburan wrote on 24 January, 2016, 4:43

  அருமையான தேர்வு. வல்லமைக்கு கெளரவம் த்ரும் தேர்வு. திரு, மயூரநாதன் அவர்களுக்கும், விக்கிப்பீடீயாவுகக்கும், தமிழ் இலக்கிஅய்த்த்தோட்டத்துக்கும், வல்லமைக்கும் என் பாராட்டுக்கள்.

Trackbacks

 1. தேமதுரத் தமிழோசை உலகமெலாம்… – Scribble Space- கிறுக்கல் வெளி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.