க. பாலசுப்பிரமணியன்

கண்ணோடு கண் நோக்கின்…

education11

குழந்தையின் வளர்ச்சியின் படிக்கட்டுக்களில் ஒரு முக்கியமான நிகழ்வு “கண்ணோடு கண் நோக்குதல் “. இதைப் பற்றி நாம் குழந்தை பிறந்த சில வாரங்களில் ஏற்படும் வளர்ச்சியின் போது அறிந்தோம்..ஆனால் ஒரு குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகிய பின் இதே நிகழ்வினால்  வேறு பல தாக்கங்கள்  ஏற்படுகின்றன.

தன் தாயின் கண்களோடு உறவாடும் குழந்தை அந்தத் தாயின் உணர்வு நிலைகளை எளிதாகப் புரிந்துகொள்கின்றது. அதே போல் மற்றவர்கள் நோக்கும் பொழுதும் அவர்களின் கண்பார்வையின் பொருளை அறிந்து கொள்ள முற்படுகின்றது. சில நேரங்களில் மற்றவர்களின் பார்வை பயத்தை தூண்டுவதாகவோ அல்லது ஏதாவது அச்சத்தை எற்படுத்துவதையோ குழந்தை உணர்கின்றது. உடனே அதன் கண் விழிகள் தாமாகவே கீழ்நோக்கிச் செல்கின்றன. அதே போல் மற்றவர்களுடைய பார்வை ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் விழிகள் மேல்நோக்கியோ அல்லது சுழன்றோ தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  “கண்ணோடு கண்” நோக்கும் பொழுது மற்றவர்களிடமிருந்து தமக்கு பாதுகாப்புக்கான உத்திரவாதம் கிடைக்கிறதா என்று உணருகின்றது.  அந்த நேரங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அழுதோ அல்லது மறுப்பைத் தெரிவித்தோ உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

மற்றவர்களுடைய கண்களைப் படிக்கும் குழந்தை – கோபமுள்ள முகங்கள், மலர்ந்த முகங்கள், துயரமான முகங்கள் மற்றும் ஏளனம், வீராப்பு போன்ற உணர்வுகளைக் காட்டும்  முகங்களை அடையாளம் கண்டு கொள்கின்றது. அந்தக் குழந்தைக்கு இந்த உணர்வுகளைப் பற்றி ஏதும் தெரியாமலிருந்தாலும் அந்த உணர்வுகள் தனக்கு ஒரு  சாதகமான சூழ்நிலையை  (Comfort  zone )உருவாக்கவில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்கின்றது.

கண்ணோடு கண் நோக்கும் இந்தச் செயல் மூளையில்  அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகளுக்கு அடிவாரமாக அமைகின்றன. மற்றும் ஒரு குழந்தையின் உணர்வு நிலைகளை (emotional status) பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகள் தங்களோடும் மற்றவர்களோடும் உறவாடும் பொழுது அவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

மேலும் மொழி வளர்ச்சிக்கும், உச்சரிப்புகளின் மேன்மைக்கும், உடல் மொழிகளை பக்குவப்படுத்துவதற்க்கும் இந்த கண்ணோடு-கண் நோக்கும் (eye-eye coordination) செயல் மிக்க பயனுள்ளதாக அமைகின்றது. குழந்தை பருவத்தில் இதை நாம் முகம் படித்தல் (face reading ) என்று சொல்லலாம் .

“கண்ணோடு கண் நோக்குதல்” உளவியல் கருத்துகளின்படி ஒருவருடய கவனம் (attention) மற்றும் ஈடுபாடுகளை (Focus) வளர்க்க உதவுகின்றது., மேலும் மற்றவர்களுடைய  கருத்துக்களை ஊர்ந்து ஆழமமாக கேட்பதற்கும் (Listening Skills ) அறிவதற்கும் (cognition) இந்த நிகழ்வு  முதல் படியாக இருக்கின்றது.

பின் காலங்களில் வளர்ச்சியின் மேல்படிகளில் நிற்கும்பொழுது இந்தக் கற்றல் மற்றவர்களை புரிந்து கொள்ளவும், (understanding behaviours) எடை போடவும், (evaluate) மற்றவர்களோடு தக்க முறையில் உறவாடவும் ( Relationship management ) உதவுகின்றது.

மூளை வளர்ச்சி பற்றி ஆராயும் வல்லுனர்கள் எவ்வாறு இந்த நிகழ்வின் தாக்கம் கண்ணாடி  நியூரான்களின் மேல் (Mirror Neurons ) ஏற்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில் சில குறைபாடுகள்  ஏற்படும் பொழுது இந்த “கண்ணோடு கண் நோக்கும் செயல் ” பாதிக்கப் படுகின்றது, அதன் காரணமாக வளர்ச்சியின் சில வடிவங்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றன.

டேனியல் கோல்மான் என்ற அறிஞர் தன்னுடைய “Social intelligence” என்ற புத்தகத்தில் ஒரு மனிதனுடைய சமூக புத்திகூர்மைக்கு “கண்ணோடு கண் நோக்கும் ” செயலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். ஒரு சமூகத்தில் நாம் வாழும் பொழுதும் மற்றவர்களோடு பேசும் பொழுதும் நாம் அவர்களுடைய கண்களிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கின்றோம். “வாய் பேசாததையெல்லாம் கண் பேசியது ” என்று சொல்கின்றோம். ஆகவே குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில்  “கண்ணோடு கண் நோக்கும்” செயலை நாம் “கண்ணாக” கவனிப்போம்.

தொடரும்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *